in ,

மங்களாவின் புதுப்புடவை (சிறுகதை) – பவானி உமாசங்கர்

  எழுத்தாளர் பவானி உமாசங்கர் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்  

“என்னங்க, ஏங்க” மங்களா தன் கணவர் ஸ்ரீதரனை கூப்பிடுவதே அலாதியாய் இருக்கும்.

குறும்பு செய்து விட்டு சத்தமில்லாமல் அமர்ந்திருக்கும் குழந்தையை அதன் அம்மா அதட்டுவது போல் இருக்கும்.

ஸ்ரீதரனிடமிருந்து பதிலேதும் வராததால் எங்கே போனாரு இந்த மனுஷன் என்று கூறிக் கொண்டே தன் புடவை மடிப்பை நீவியபடி பெட்ரூமில் இருந்து எட்டிப் பார்த்தாள். அங்கே ஹாலில் ஸ்ரீதரன் ஊஞ்சலில் அமர்ந்து ஹாயாக அந்த வார வாரமலரை படித்துக் கொண்டிருந்தார். 

    “நான் கூப்பிட்டது காதில் விழுந்ததா இல்லை விழுந்தாலும் விழாத மாதிரி நடிக்கிறீங்களா” என்று இரைந்தவளை நிமிர்ந்து பார்த்த ஸ்ரீதரன்

“அட வெளிய கிளம்பிட்டையா” என்றார் அலட்டிக் கொள்ளாமல்.

“பாரு முழிக்கறதை, என்ன… நீங்க எழுதின கவிதையை படிச்சுட்டு நீங்களே சந்தோஷப் பட்டுக்குறீங்களாக்கும். காக்காசுக்கு பிரயோசனமில்ல, வெட்டி வேலை” என அவரைக் கடிந்து கொண்டாள்.

“நான் வாரமலர் படிக்கிறேன்” என்று ஸ்ரீதரன் கூறியதை சட்டை செய்யாமல்

“இங்கே பாருங்க சமையல் செய்து வைச்சுட்டேன் சின்க்ல பாத்திரம் போட்டு வைச்சிருக்கேன் இன்னும் கொஞ்ச நேரத்தில முனியம்மா வந்துடுவா, கொஞ்சம் பக்கத்தில இருந்து அவகிட்ட வேலை வாங்குங்க. இல்லைன்னா சீமாரை இரண்டு வீசு வீசிட்டு பெருக்கிட்டேன்னுடுவா” என்றாள் கண்டிப்புடன்.

“முனியம்மாவுக்கு காப்பி கலந்து வைச்சுட்டையா” என்றவரிடம்

“இன்னைக்கு நான் வெளிய போறனில்ல அதனால காப்பி வேண்டாம்” என்று கூறி அவரைப் பார்த்தவள்

“நான் லேடீஸ் கிளப்ல ஃபிரண்ட்ஸை மீட் பண்ணிட்டு அங்கிருந்து டவுன் ஹால் வரை போயிட்டு லன்ச்க்கு வந்துடுவேன். அதுவரைக்கும் வீட்டை பத்திரமா பார்த்துக்கங்க யாருக்கு வந்த விருந்தோன்னு உட்கார்ந்துட்டு இருக்காதீங்க” என்று கணவரை அரட்டி விட்டு கிளம்பினாள்.

“என்ன ஒரு அநியாயம், இவ வெளியே போனா முனியம்மாவுக்கு காப்பி கிடையாதாமே, பாவம் ஏழை ஜனங்க வயித்தில அடிக்கிறாளே” என்று பொங்கினார் ஸ்ரீதரன்.

“இவ கொடுக்கலைன்னா என்ன நான் கொடுத்துட்டுப் போறேன்” என்று நினைத்தவர் காலையில் காய்ச்சின பால் கேஸ் ஸ்டவ் அருகில் இருக்கிறதா என சமையல் அறைக்கு வந்து பார்த்தார். ஆனால் ஸ்டவ் துடைத்து அருகில் பாத்திரங்கள் எதுவும் இல்லாமல் க்ளீனாக இருந்தது.

“அடிப்பாவி, பாலை ஃப்ரிட்ஜில் வைச்சுட்டயா” என நினைத்த போது அவரின் செல் போன் அடிக்கவும், ஸ்ரீதரன் போனில் பிஸியானார்.

அவருடைய நெருங்கிய கல்லூரி நண்பர் அவர்களது ரீயூனியனுக்காக கல்லூரியில் எடுத்த குரூப் போட்டோ இருக்கிறதா என்று விசாரித்தார்.

“பத்திரமா இருக்கு, ஆனா எங்க வைச்சுருக்கேன்னு தான் தெரியலை” என்ற ஸ்ரீதரன் “நான் வேணா தேடி எடுத்துட்டு உனக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பி விடறேன்” என்று கூறியவர் வெகு நேரம் அவரோடு போனில் அளவளாவிக் கொண்டு இருந்தார். 

    நண்பருடன் பேசிவிட்டு போனை நிறுத்தியவரிடம் “அய்யா, வேலை முடிஞ்சது நான் வாரேன்” என்று கூறி தனது பிளாஸ்டிக் கூடையை கையில் சுமந்த வண்ணம் விடை பெற்றாள் முனியம்மா.

“இரு, இரு வேலை முடிச்சாச்சா” என்று வியந்த ஸ்ரீதரனிடம்

“பாத்திரம் விளக்கி வீடு கூட்டிட்டு வாஷிங் மிஷினில் இருந்த துணியைக் கூட காயப் போட்டாச்சுங்க அய்யா இன்னும் இரண்டு வீடு பாக்கி இருக்குது எனக்கு” என பரபரத்தாள் முனியம்மா.

“அடக்கடவுளே, முனியம்மா வந்தது கூட தெரியாம இவ்வளவு நேரமாவா போன் பேசியிருக்கோம்” என நினைத்தவர்

“அம்மா வெளியே போயிருக்காங்க காப்பி போட முடியலை” என்றார் சங்கடத்துடன்.

“பரவாயில்லைங்க அய்யா நான் வாரேன் “என்று இயல்பாக கூறி விட்டு நகர்ந்தாள் முனியம்மா.

“இவங்களுக்கு இருக்கும் பெருந்தன்மை நமக்கு இல்லையே”என நொந்து கொண்டார் ஸ்ரீதரன். 

வெகுநேரம் கல்லூரி குரூப் போட்டோவை பரணில் தேடியவர் ஒருவேளை துணி கஃப்போர்ட் மேலே எங்காவது வைச்சு இருப்போம் என முணுமுணுத்தபடி பெட்ரூம் வந்து ஸ்டூலைப் போட்டு ஏறி தேடினார். அங்கும் அது கிடைக்காததால் மனைவியின் மரபீரோவில் கீழ் ரேக்கில் வைத்து இருப்போம் என நினைத்து மங்களாவின் பீரோவைத் திறந்தார்.

உள்ளே அடுக்கி வைத்து இருந்த புடவை அட்டிகளைப் பார்த்து அசந்தே போனார் ஸ்ரீதரன். “அடிப்பாவி புடவையா வாங்கி குவிச்சு இருக்காளே, என்ன இருந்து என்ன ஏழைகளுக்கு தானமா ஒரு புடவையாவது கொடுக்க மனசு வருதா இல்லையே ” என்று புவம்பியபடி கீழ் ரேக்கில் அந்தப் போட்டோவைத் தேடினார்.

தேடி சலித்த போது புடவைகளின் வரிசை ஒன்று சரிந்து ஸ்ரீதரனின் தலை மேல் விழுந்தது. “அய்யய்யோ மங்களா வந்து பார்த்தால் என நினைத்தவர் நடுக்கத்துடன் வேக வேகமாக புடவைகளை அடுக்கி வைத்தார். வாசலில் கார் நிற்கும் சத்தம் கேட்டதும், “போச்சு, என்னை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கப் போறா”என்று பயத்தில் புடவைகளை உள்ளே திணித்து விட்டு மர பீரோவை இழுத்து சாத்தனார்.

கையில் ஜவுளிக் கடை கவருடன் வீட்டுக்குள் நுழைந்த மங்களா ஏக குஷியில் இருந்தாள்.

ஸ்ரீதரனைப் பார்த்து ஒரு மந்தகாசப் புன்னகை செய்துவிட்டு “என்னங்க சாப்பிட்டீங்களா, இல்லைன்னா சேர்ந்து சாப்பிடுவோம்” என அழைத்தாள்.

“அப்பா, மங்களா இன்னைக்கு நல்ல மூடுல இருக்கா பிழைச்சேன்” என நினைத்த ஸ்ரீதரன், “இல்லம்மா இனிமேல் தான், வா சாப்பிடலாம்” என்றார்.

மறுநாள் காலை ஏதோவொரு பாட்டை முணுமுணுத்துக் கொண்டே மங்களா சமையல் செய்து கொண்டிருந்ததைப் பார்த்ததும், “ஏன் மங்களா நம்ம முனியம்மாவுக்கு உன்னோட புடவை ஒண்ணு கொடேன், நீதான் நிறைய வைச்சுருக்கயே” என்றார் ஸ்ரீதரன் நைச்சியமாக.

“என்ன பீரோவை திறந்து பார்த்தீங்களாக்கும், புடவை அட்டி கலைஞ்சு இருந்ததைப் பார்த்ததுமே நினைச்சேன். முனியம்மா உங்ககிட்ட கேட்டாளா, புடவை ஏதாவது கொடுங்கன்னு” என்று கேட்டாள் மங்களா சற்று எரிச்சலுடன்.

“அய்யோ பாவம் அவங்க எதுவும் கேட்கலை, நான்தான் கேட்கிறேன்” என்றார் ஸ்ரீதரன் மெல்லிய குரலில்.

சரி பார்த்து எடுத்து வைக்கிறேன் ஒரு ஸாரி, நாளைக்கு கொடுக்கலாம்” என்றாள் மங்களா அசுவாரசியமாக. 

அன்று வீட்டின் பின்புறம் நின்று கொண்டு பக்கத்து வீட்டு மாமியிடம் பேசிக் கொண்டு இருந்த மங்களாவிடம், “புடவை ஏதாவது எடுத்து வைச்சுருக்கயா முனியம்மாவுக்கு கொடுக்க” என்று கேட்டபடி அங்கு வந்தார் ஸ்ரீதரன்.

“என் பீரோவில ஃபர்ஸ்ட் ரேக்கில வலது பக்கத்தில் ஒரு கவர்ல போட்டு வைச்சுருக்கேன் எடுத்துக் கொடுங்க” என்று அவரைப் பணித்த மங்களா, மாமியிடம் பேச்சைத் தொடர்ந்தாள்.

“பாருங்க மாமி 54 வயசுலேயே வி.ஆர்.எஸ் வாங்கிட்டு என் வீட்டுக்காரர் செய்யும் ரவுசு தாங்கலை” என்றவளிடம்

“புருஷா எல்லாருமே இப்படித்தான், அவா எதுவும் புதுசா வாங்கிக்க மாட்டா ஆனா நாம வாங்கினாலும் பிடிக்காது” என்றார் மாமி ஒரேடியாக.

“அதைச் சொல்லுங்க” என்று மங்களாவும் ஆமோதித்தாள். 

மறுநாள் காலை எழுந்ததிலிருந்தே பரபரப்புடன் இயங்கினாள் மங்களா. “என்ன இன்னும் முனியம்மாவைக் காணோம்” என நினைத்து வீட்டு வாசலைப் பார்த்தவள் அங்கு படியேறி வந்து கொண்டிருந்த முனியம்மாவைப் பார்த்து அதிர்ச்சியில் விக்கித்துப் போனாள்.

போன வாரம் தங்கள் லேடீஸ் கிளப் ஆண்டு விழாவிற்காக தான் பார்த்துப் பார்த்து வாங்கிய புதுப்புடவை இப்போது முனியம்மாவின் மேனியில் இருந்தது.

“கடவுளே இது என்ன கூத்து, அய்யோ புடவையை மாத்தி கொடுத்துட்டார் போலவே இந்த மனுஷன்” மங்களாவின் மனதில் கோபம் கனன்றது.

முனியம்மா அவளருகில் வந்து “அம்மா வேலையை முடிச்சிட்டு கோவிலுக்கு போறேன்ம்மா அதான் அய்யா கொடுத்த உங்க புடவையை கட்டிட்டு வந்தேன், புது பட்டுப் புடவை கணக்கா ரொம்ப நல்லா இருக்குதும்மா” என்று மகிழ்ச்சியுடன் கூறி விட்டு வேலையை ஆரம்பித்தாள்.

“பாவி மனுஷா, நாலைந்து கடை ஏறி இறங்கி பார்த்து பார்த்து டிசைன் யுனிக்கா இருக்கேன்னு நான் வாங்கிட்டு வந்தா அதை தூக்கி முனியம்மாவுக்கு கொடுப்பீங்களா நீங்க” என ஸ்ரீதரனை பிலுபிலுவென பிடித்துக் கொண்டாள் மங்களா. 

“ஸாரி ஸாரிம்மா நீ வலதுன்னு சொன்ன, நான்தான் கவனிக்காம இடது பக்கம் இருந்ததை கொடுத்துட்டேன் ரொம்ப ஸாரி” என்றவரிடம்

“இது ஒரு வார்த்தையை சொல்லுங்க இன்னைக்கு நான் ஃபங்ஷனுக்கு எதை கட்டுறது” என புலம்பினாள் மங்களா.

மாலை தன்னிடம் இருந்த உடுத்தாத பட்டுப் புடவைகளில் ஒன்றை தேர்ந்தெடுத்து கட்டியவள் லேடீஸ் கிளப்பின் ஆண்டு விழாவிற்கு சென்றாள். வாசலில் காரை நிறுத்தி விட்டு ஆடிட்டோரியத்துக்குள் நுழைந்த மங்களாவிற்கு அடக்க முடியாமல் சிரிப்பு வந்தது.

அங்கு லேடீஸ் கிளப்பின் உறுப்பினர்களில் பாதிக்கும் மேல் மங்களாவின் கண்களுக்கு முனியம்மா போலவே காட்சியளித்தனர். எந்தப் புடவை புதிதாக யூனிக்காக இருப்பதாக நினைத்து மங்களா வாங்கியதை ஸ்ரீதரன் முனியம்மாவுக்கு தானம் அளித்தாரோ , அதே போன்ற டிசைன் புடவைகளை அவர்கள் உடுத்தியிருந்தனர்.

“என்ன மங்களா யூனிஃபார்ம் மாதிரி புடவை உடுத்தி இருக்கோம்னு சிரிக்கிறயா, வெவ்வேறு கடையிலதான் புடவை எடுத்தோம். ஆனா இந்த டிசைன் எல்லாருக்கும் பிடிச்சு இருந்துருக்குது” என்று கூறினார் சீனியர் மெம்பர் ஒருவர்.

“வாழ்க நீ புருஷா” என மனதில் ஸ்ரீதரனை வாழ்த்தியவள் , “நானும் இந்த டிசைன் சாரி பார்த்தேன், ஆனா எனக்கு பிடிக்கலை, அதான் இதை எடுக்கலை” என்று அமர்த்தலாக அவர்களிடம் கூறி சமாளித்தாள் மங்களா. 

எழுத்தாளர் பவானி உமாசங்கர் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்) 

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    பூங்காற்று திரும்புமா! (சிறுகதை) – காந்திமதி உலகநாதன்

    கவிதை எழுதுங்கள் !! (மரபுக்கவிதை) – பாவலர் கருமலைத் தமிழாழன்