2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7
இதுவரை:
நடிகை வந்தனாவுடன் தகாததொடர்பில் இருக்கும் ராம்குமார், மனைவி மகாவை தலைமுழுக நேரம் எதிர்பார்த்து காத்திருக்கிறான்.
இனி:
ராம் குமார் கம்பெனிக்கு கிளம்பிக் கொண்டிருந்தான். சுந்தரம் காரை துடைத்துக் கொண்டிருந்தார்.
“ஏங்க… இன்னிக்கு வெள்ளிக்கிழமை. கருமாரி அம்மன் கோயிலுக்கு போகனும். நீங்க இறங்கிட்டு சுந்தரம் அண்ணனை அனுப்பிடுங்க. உங்களுக்கு அக்ஸிடெண்ட் ஆனதுக்கு, ஏதோ லேசாவாவது போச்சு பெரிய பிரச்சனை இல்லாம… அதனால கடவுளுக்கு நன்றி சொல்ல பாலபிஷேகம் வேண்டியிருக்கேன். 5 லிட்டர் பால் வாங்கி கோயில்ல குடுக்கச் சொல்லியிருக்கேன். நான் போயி அபிஷேகத்தப் பாத்துட்டு உங்க பேர்ல அர்ச்சனை பண்ணிட்டு வந்துடறேன். உங்களுக்கு லஞ்ச் சுந்தரம் அண்ணன்கிட்ட கொடுத்து விடுகிறேன்.”
“சரி மகா நான் இறங்கிட்டு கார் அனுப்புறேன்.”
“நீங்க அனுப்புங்க.. ஆனா நான் என்னோட சின்ன கார்லதான் போகப் போறேன். கோயிலுக்கு சின்ன தெரு வழியே போறதுக்கு, பார்க் பண்ணுறதெல்லாம் சின்ன கார் தான் சரி” என்றாள்.
ராம்குமாரை ஆபீஸில் கொண்டுபோய் விட்டுவிட்டு மகாவை கோயிலுக்கு அழைத்துப் போக சுந்தரம் திரும்ப வந்தார்.
ரொம்ப நாளைக்கு பிறகு தெளிவான முகத்தோடு மகாவை பார்த்த சுந்தரத்திற்கு மனம் நிறைவாக இருந்தது. ஏதோ ஒரு காரணத்தால் அவள் மகிழ்ச்சியாக இருக்கிறாள் என்பது புரிந்தது.
அதற்குக் காரணம் ராம்குமார் தான் ஆர்டர் பண்ணி பரிசளித்த நெக்லஸ். வந்தனாவிற்கு அவன் வைர நெக்லஸ் வாங்கும் போது எதற்கும் இருக்கட்டும் என்று அவன் வாங்கிய இன்னொரு நெக்லஸ் அது.
கொஞ்ச நாட்களாக மகாவின் மனதில் கணவன் தன்னை விட்டு விலகி போகிறானோ என்ற எண்ணம் வர ஆரம்பித்தது. அதை புரிந்து கொண்ட ராம்குமார் அவள் சந்தேகப்படுவதற்கு இடம் கொடுத்தால் தன் காரியம் நிறைவேறுவது கடினம் என்று யோசித்தவன்… அவளை திருப்திபடுத்த அவளுக்கு ரொம்ப பிடித்த, பல நாட்களாக வாங்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்த நவரத்தின நெக்லஸை ஆர்டர் பண்ணி பரிசளித்தான்.
தன் மனதிற்கு பிடித்தது என்பதை தெரிந்துகொண்டு பரிசளித்த கணவன் மேல் மகாவிற்கு அளப்பரிய அன்பு கூடியது. இயல்பாகவே வெகுளியான குணம் கொண்ட மகாவிற்கு மனதில் இருந்த மற்ற சந்தேகங்கள் எல்லாம் மறைந்து கணவன் தன் மேல் பிரியமாக இருக்கிறான் தான்தான் புரிந்து கொள்ளவில்லை என்று எண்ணம் ஓங்கியது.
“சுந்தரம் அண்ணே! நான் அனாவசியமா குழம்பி, உங்களயும் குழப்பிட்டேன். சாருக்கு பெங்களூர்ல நிறைய வேலை… கிளையண்ட் இருக்காங்க போல. அதான் அடிக்கடி போறாரு. பாவம் இந்த தடவ ஆக்சிடெண்ட்ல மாட்டிகிட்டு கஷ்டப்பட்டிருக்காரு. நல்லவேளை லேசா போயிடுச்சு.. வந்ததிலிருந்து ஒரே வேலைதான். எப்ப பாரு போன்ல பேசிட்டே தான் இருக்காரு. நான் கும்பிடுற கருமாரியம்மன் தான் அவரை காப்பாத்தியிருக்கா. அவ மனசு குளிர்ற மாதிரி பால் அபிஷேகம் பண்ணி, அர்ச்சனை வச்சுட்டா எனக்கு மனசு நிறைஞ்சிடும்”
பழையபடி கலகலப்பாக பேசும் மகாவை பார்க்க சுந்தரத்துக்கு என்ன நினைப்பது என்று தெரியவில்லை. ஏதோ அவள் சந்தோஷமாக இருந்தால் சரி தான் என்று நினைத்துக் கொண்டார்.
“சுந்தரம் அண்ணன்… உங்க மகளுக்கு குழந்தை பிறந்து உங்க வீட்ல தானே இருக்கா. பாவம் தாயில்லாத பொண்ணு. அவளையும் அவள் புள்ளையையும் பார்க்கனும்னு நினைச்சிட்டிருந்தேன். அதுக்குள்ள ஏதேதோ மனசஞ்சலம், தள்ளிப் போயிருச்சு. இன்னைக்கு போகும்போது எட்டிப் பார்த்துட்டு போயிடுவோம்”
“அவசரம் ஒன்னும் இல்லம்மா, எப்படியும் இன்னும் கொஞ்ச நாள் இங்க தான் இருப்பா… நிதானமா நீங்க பாத்துக்கலாம். இல்லைன்னா நானே அவளையும் புள்ளையும் வீட்டுக்கு கூட்டிட்டு வரேன். நீங்க எங்க வீடு வரைக்கும் அலைய வேண்டாம்” என்றார்.
“அதெல்லாம் ஒன்னும் சிரமம் இல்ல.. திரும்ப வீட்டுக்குப் போற வழியில ஒரு அஞ்சு நிமிஷம் பார்த்துட்டு போயிடுவோம்” என்றாள். அதற்கு மேல் அவளை தடுக்க முடியாது என்று சுந்தரம் ஒன்றும் பேசவில்லை.
கோயிலுக்கு போயி அபிஷேகம், அர்ச்சனை எல்லாவற்றையும் முடித்து விட்டுத் திரும்பும் போது, சுந்தரத்தை ஒரு கடையில் நிறுத்தச் சொல்லி, பிள்ளைக்கு துணிமணிகள், விளையாட்டு சாமான்கள்… எல்லாம் வாங்கியதோடு.. பழங்கள், தின்பண்டங்கள், இனிப்பு எல்லாம் வாங்கிக் கொண்டாள்.
சுந்தரம் போன் பண்ணி சொல்லியதால் சுந்தரத்தின் மகள் செல்வி ரெடியாக அவளை வரவேற்க காத்திருந்தாள். குழந்தையை ஆசையோடு வாங்கி கொஞ்சிய மகா, “செல்வி! நான் உன்ன பார்க்க வர ரொம்ப லேட் ஆயிடுச்சு… இதுக்குள்ள பாத்திருக்கனும்.”
“இல்லம்மா… அப்பாவே என்னையும், குழந்தையையும் கூட்டிட்டு வந்து உங்ககிட்ட ஆசீர்வாதம் வாங்கனும்னு சொல்லிகிட்டு இருந்தார். அதுக்கு நடுவுல கொஞ்சம் பிரச்சனை ஆயிடுச்சு” என்றாள்.
“செல்வி சும்மா இரு”
“அண்ணே அவளை எதுக்கு தடுக்குறீங்க. செல்வி! நீ சொல்லு என்ன பிரச்சனை?”
“இல்லம்மா… என்னுடைய கல்யாணத்துல அப்பா போட்ட நகை பத்தலைன்னு இன்னொரு 5 பவுன் அதிகமா கேட்டாங்க என் புருஷன் வீட்டார். அதை பின்னாடி அப்பா செஞ்சு போடுறேன்னு சொல்லியும் அவங்க ஏத்துக்கல. இப்ப குழந்தை பிறந்ததும் குழந்தையை வந்து பார்க்கல… என்னை வீட்டுக்கு கூட்டிட்டு போகனும்னா அந்த 5 பவுனை போட்டாதான் குழந்தை எடுத்துட்டு வீட்டுக்கு வரலாம்ன்னு சொல்லிட்டாங்க”
இந்த சொன்ன செல்வி கண்களில் பொல பொலவென கண்ணீர் வடிந்தது.
“ஏன் அண்ணே என்கிட்ட இத சொல்லல. அப்ப நான்தான் வாய் நிறைய உங்கள் அண்ணன்னு கூப்பிடுறேன், நீங்க என்ன தங்கச்சியா நினைக்கல”
“இல்ல மகாம்மா, உங்களுக்கே ஆயிரத்தெட்டு கவலைகள் பிரச்சனைகள்… இதுல என்னுடைய பிரச்சனையும் நான் எப்படிம்மா சொல்றது.”
“என்னுடைய பிரச்சனையை தீர்க்க முடியாறதா முடியாததா, அது வேற. உங்களுடைய பிரச்சினை தீர்க்கக் கூடியதானே” என்றவள், சற்றும் யோசிக்காமல் தன் கழுத்தில் போட்டிருந்த சங்கிலியை கழட்டி செல்வியின் கழுத்தில் போட்டாள்.
“செல்வி இந்த செயின் 8 பவுன் இருக்கும். இப்ப இந்த பிரச்சனை தீர்ந்துடும் நீ சந்தோஷமா உன் புருஷன் வீட்டுக்குப் போயிட்டு வா! இனி எதிர்காலத்தில் அவங்க ஏதாவது பிரச்சனை பண்ணா நீ நேரா உங்க அப்பாகிட்ட சொல்லக் கூடாது. என்கிட்ட வந்து சொல்லு.. நான் அவங்க கிட்ட எப்படி பேசனுமோ அப்படி பேசுறேன்” என்றாள்.
செல்வி கையெடுத்துக் கும்பிட்டாள்.
“அம்மா நீங்க எங்க குடும்பத்துக்கு நிறைய செஞ்சிருக்கீங்க! இப்ப இது வேற எதுக்குமா வேண்டாம்” என்றார் சுந்தரம்.
“நீங்க என்ன வேத்து மனுசியா நினைச்சா இதை உடனே வாங்கிக்கிறேன். இல்ல சொந்த தங்கையா நெனச்சா எடுத்துக்கங்க” என்றாள் மகா.
சுந்தரத்திற்கு என்ன பேசுவது என்றே புரியவில்லை இப்படி ஒரு நல்ல மனம் கொண்டவளுக்கு எந்த கஷ்டமும் வந்துவிடக் கூடாது என்று கடவுளை வேண்டிக் கொண்டார்.
“சரி அண்ணே! நம்ம கிளம்புவோம். தங்கம் சமையல் பண்ணிக்கிட்டிருப்பா. முடிச்சு நான் சாப்பாடு தரேன், நீங்க எடுத்துட்டு போயிடுங்க ஆபீஸ்க்கு. செல்வி நான் போயிட்டு வரேன். குழந்தை பத்திரமா பாத்துக்கோ. சீக்கிரம் நல்ல நாள் பார்த்து உன் புருஷன் வீட்டுக்கு கிளம்பு. உங்க அப்பாவைப் பத்தி கவலைபடாதே, நான் பார்த்துகிறேன்” என்றவள் குழந்தையை வாங்கி ஆசைதீர கொஞ்சிவிட்டு செல்வி கையில் கொடுத்தாள்.
சுந்தரம் சாப்பாட்டை எடுத்துக்கொண்டு திரும்ப ஆபீஸ் போனபோது ராம்குமார் வந்தனாவுடன் பேசிக் கொண்டிருந்தான்.
“சொன்னா புரிஞ்சுக்கோ வந்தனா.. இந்த வாரம் என்னால பெங்களூர் வர முடியாது. போன வாரம் உன்னை பார்க்க வந்ததுக்கு அத்தனை பொய் சொல்லி இருக்கேன் அவகிட்ட. ஒவ்வொரு தடவையும் அவளை நம்ப வைக்கிறதுக்கு பிரம்ம பிரயத்தனம் பண்ண வேண்டியதாயிருக்கு. இந்த ஒரு வாரம் மட்டும் பொறுத்துக்கோ. அடுத்த வாரம் நான் வரேன் கண்டிப்பா… இல்லைனா நீயும், அம்மாவும் இங்க வாங்க. அதுக்குள்ள ஈ.சி.ஆர் பங்களா வேலைகள் முடிஞ்சிடும். நீங்க ரெண்டு பேரும் இங்க வர்ற ப்ளான் பண்ணுங்க”
கதவு தட்டப்பட, சத்தம் கேட்டு… “வந்தனா நான் அப்புறம் பேசுறேன்” என்று போனை வைத்தான்.
சுந்தரம் சாப்பாட்டை எடுத்துக்கொண்டு உள்ளே வர, சுந்தரத்தைப் பார்த்ததும் தான் பேசியது அவர் காதில் விழுந்திருக்குமோ. அவன் முகம் மாறியது. சுந்தரத்தின் முகம் சலனமற்றிருந்தது.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings