2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11
“அங்கே தங்கியிருந்தது பாப் பாடகிதான், நீங்க ரிஸார்ட் ரெகார்ட்ஸை செக் பண்ணிப் பார்த்துக்கலாம்” என்றார் பாண்டுரங்கன்.
“ரெகார்ட்ஸில் ஒருத்தர் பெயர்தான் சார் இருக்கும். அது அனிதா ரமேஷ் என்ற பெயர். அவங்க பாப் பாடகிதான். அவங்க கூடத் தங்கியிருந்தவரைப் பற்றித்தான் இப்போ கேள்வி. அவர் சுமார் 35 வயது மதிக்கத்தக்கவர் என்றும் அவரை அனிதா செல்லமாக ‘ஸாம்’ என்று அழைத்ததாகவும் ரிஸார்ட்டில் கிடைத்த தகவல். ஃபோட்டோக்கள் காட்டினால் அடையாளம் காட்ட முடியும் என்றும் சொன்னாங்க. அவ்வளவு கஷ்டப்படுவானேன்? அவரை உங்களுக்குத் தெரியும்னா, நீங்க சொல்லிடுங்களேன் சம்பத் சார்” என்றாள் தன்யா, குறுஞ்சிரிப்புடன்.
சம்பத் நீண்ட பெருமூச்சுவிட்டான். “அந்த ஸாம் நான் தான்” என்றான்.
“அப்பா…டி! ஒரு நாலு வார்த்தை உண்மையை ஒத்துக்க வைக்க நாங்க நானூறு வார்த்தை பேச வேண்டியிருக்கு! இனி அந்த பாப் பாடகி யாரு, அவளோட உங்க பேர் ஏன் பாப் ஆகுதுங்கறதும் சொல்லிட்டீங்கன்னா…”
சம்பத் தன்யாவை முறைத்தான். கஷ்டப்பட்டுக் கோபத்தை அடக்கினான். மெதுவாகச் சொல்ல ஆரம்பித்தான். “கடற்கரையில் ஒரு வில்லா வாங்கிக்கிட்டு, ஹாலிடேஸையாவது அங்கே கழிக்கணுங்கறது, சின்ன வயதிலிருந்து என்னுடைய கனவு. எங்க வீட்டுக் குழந்தைகளுக்கு முடியிறக்கறதுக்காக நாங்க திருச்செந்தூர் போவோம். அப்போது கடற்கரையில் அமைந்துள்ள விடுதிகளில்தான் தங்குவோம். அப்போதிருந்து என் மனதில் ஆசை, கனவு, ஏக்கம்…
“என் அப்பாகிட்ட ஒருமுறை மெதுவாகச் சொல்லிப் பார்த்தேன். அவர் ‘வேற வேலை இல்லை’ என்ற ஒரே வாக்கியத்தில் நிராகரிச்சுட்டார். எங்களோட பிஸினஸ் விஷயமா நான் கடற்கரைப் பகுதிகளுக்கு அடிக்கடி போக வேண்டியிருந்தது. அப்போ இந்த ஆசை மறுபடி கிளர்ந்தது. அப்போதான் மகாபலிபுரத்தில் வில்லா ப்ராஜக்ட்ஸ் ஆரம்பித்தார், என்னுடைய நண்பர். என்னையும் வாங்க வைக்கறதுக்காகவும், இந்த ப்ராஜக்டில் நானும் இன்வெஸ்ட் பண்ண முடியுமான்னும் கேட்டார். நான் என் அப்பா சம்மதிக்க மாட்டார்னு சொல்லிட்டேன். இருந்தாலும் என்னை கன்வின்ஸ் பண்ண பலமுறை என்னைச் சந்தித்தார்.
“அப்போதான் எனக்கு அனிதா ரமேஷை அறிமுகம் செய்தார். இந்த வில்லா ப்ராஜக்ட்ல அவங்களும் ஒரு பங்குதாரர்… பிஸினஸ் விஷயமா தான் முதலில் சந்திச்சோம்… அப்புறம்…”
சம்பத் வெட்கப்பட்டவனைப் போன்று பேச்சை நிறுத்தினான்.
“ம்… சொல்லுங்க சார்” என்று ஊக்கினார் சிவசரண்.
“வ… வந்து… எங்களுக்குள் பழக்கம் உண்டானது…”
“அது புரிஞ்சுபோச்சு. அப்புறம் என்ன நடந்தது? அந்த வில்லா ப்ராஜக்டுக்காக கம்பெனிலருந்து பணம் எடுத்தீங்களா?” என்று கேட்டார் சிவசரண்.
“எனக்கு வேற வழி தெரியல சார்! நானும் அவங்களும் இருக்கற ஃபோட்டோஸ் சிலது அவங்க கிட்ட…”
“ஐ ஸீ! ப்ளாக்மெயில்!” என்றார் சிவசரண். “உங்க அப்பாவுக்குத் தெரியாம பணத்தை எடுத்திருக்கீங்க! இதை மிஸ்டர் ஜெயக்குமார் தெரிஞ்சுக்கிட்டார்! அதை அவர் வெளியே சொல்லிடக் கூடாதுங்கறதுக்காக…”
“இன்ஸ்பெக்டர்!” பெரிதாகக் கத்தினான் சம்பத். “நீங்கபாட்டுக்கு ஏதாவது பேசிட்டே போகாதீங்க! என் தம்பியைப் பாண்டுரங்கன் அங்கிள் மூலமா இங்கே வரவழைச்சதே நான் தான்! நான் எதுக்கு அவனைக் கொல்லப் போறேன்?”
அதிர்ச்சி. அதனைத் தொடர்ந்த மௌனம்.
‘என்னைக் கேட்டுக் கொண்டு எதையும் சொன்னால் என்ன? என்னத்தையாவது உளற வேண்டியது! இப்போது இவன்மேல் சந்தேகம் இன்னும் ஸ்ட்ராங் ஆகிடுச்சு! இதில் என்னை வேற இழுத்து விட்டுட்டான்!’ என்று மனதிற்குள் அலையலையாய் எரிச்சல் எழுந்தாலும் பாண்டுரங்கன் முகத்தில் எந்த பாவமும் காட்டாமல் இறுக்கமாக அமர்ந்திருந்தார்.
சம்பத்குமாருக்கும் தான் ஏதோ உளறிவிட்டோம் என்று உறைத்திருக்க வேண்டும். பொறியில் அகப்பட்ட எலிபோல அங்குமிங்கும் பார்த்துத் திருதிருவென்று விழித்தான்.
“எதுக்காக வரவழைச்சீங்க?” என்று சிவசரண் சாதாரணமான குரலில் கேட்டார்.
“வந்து… அவன் வந்தா, அவன் மேல அப்பாவுக்குக் கோபம் வரும், அதையே அட்வாண்டேஜா எடுத்துக்கிட்டு, அப்பாகிட்ட நான் பணம் எடுத்த விஷயத்தைச் சொல்லி, இன்னும் கொஞ்சம் பணம் கேட்டு…”
“அவன்பேரிலும் உங்க அப்பா சொத்து எழுதியிருக்கார்னு உங்களுக்குத் தெரியுமா? பொய் சொல்லிடாதீங்க” என்றாள் தர்ஷினி.
“தெரியும். அதுவும் காரணம் அவனை இங்கே வரவழைச்சதுக்கு! நானும் அங்கிளும் கலந்து பேசித்தான் இதைச் செய்தோம்.”
“இங்கே வரவழைச்சீங்க, ஆனா நீங்க நினைத்த மாதிரி எதுவும் நடக்கலை, இல்லையா?”
“என்ன நடக்கலை? என் அப்பாவுக்கு அவன்மேல் கோபம் வந்தது உண்மைதானே? அவர் எழுதிய உயிலை மாற்றி எழுதறதா இருந்தார், தெரியுமா? என்னை நம்பலேன்னா, எங்க அம்மாகிட்ட கேட்டுப் பாருங்க” என்று கோபத்துடன் கத்தினான் சம்பத்.
“பொறுங்க, மிஸ்டர் சம்பத்! நான் கேட்டது, உங்க அப்பாவைப் பற்றி இல்லை, மிஸ்டர் ஜெயக்குமாரைப் பற்றி! அவருக்கு உங்க விவகாரங்கள் எல்லாம் தெரிஞ்சிருந்தது! அவர் உங்க அப்பாகிட்ட இந்த விஷயங்களப் பற்றி கோடி காட்டினாலும் நீங்க மாட்டிப்பீங்க! சொத்து எழுதறது இருக்கட்டும், நீங்க வீட்டிலிருந்து வெளியே அனுப்பப்படுவீங்க, அனாதையா, வெறுங்கையோட! அதனால…”
“அதனால நான் அவனை மொட்டை மாடிலேர்ந்து கீழே தள்ளிவிட்டுட்டேன்னு சொல்றீங்களா?” என்றான் சம்பத், அமைதியான குரலில்.
எல்லோரும் அவனையே பார்த்தார்கள். வக்கீல் பாண்டுரங்கன் நடுங்கினார். ‘இந்தப் பைத்தியம் நான் தான் தள்ளிவிட்டேன் என்று ஒப்புக்கொண்டு விடுமோ?’
சம்பத் எழுந்தான். உலாவிக் கொண்டே பேசலானான். “எப்படி உங்களுக்கெல்லாம் புரிய வைக்கறதுன்னு தெரியலை. என் தம்பிக்குச் சொத்து போய்ச் சேரக் கூடாது, அதுக்காக அவனைக் கொல்லலாம்னு நான் நினைச்சிருந்தா, அவனை இங்கே வரவழைச்சிருக்கவே மாட்டேன்! எனக்கும் அவனுக்கும் எந்தப் பகையும் கிடையாது! உண்மையில் அவன் வந்ததில், அவனோட பழக முடிஞ்சதில் எனக்குச் சந்தோஷம்தான்! அவன்மேலும் அவன் மனைவி மேலும் எங்க எல்லாருக்குமே ஒரு பாசம் வந்தது உண்மை.
“இங்கே வந்தப்புறம், என்னைப் பற்றிய ரகசியங்கள் அவனுக்குத் தெரிஞ்சிருக்குன்னு தெரிஞ்சதும்னான் அவனைக் கொல்ல நினைச்சிருக்கேன்னு நீங்க சொல்லலாம். இதுக்கு என்ன சொல்றதுன்னு எனக்குத் தெரியல. ஆனா ஒண்ணு சொல்வேன் – எங்க அப்பாவுக்கு என் மேல் இருக்கற நல்ல அபிப்ராயத்தைக் காப்பாற்றிக்கறதுக்காகத்தான் நான் ஜெய்யைக் கொன்னுட்டதா சொல்றீங்க!
ஆக்சுவலா, ஜெய் என்னிடம் பேசியதுக்கு அப்புறம் அவன் என் நிலைமையைப் சொன்ன வார்த்தைகளில் இருந்த உண்மை எனக்குப் புலப்பட்டுச்சு! என் அப்பாவோட எனக்கு அதனால சின்னச் சின்ன மனஸ்தாபம் உண்டாக ஆரம்பிச்சுடுச்சு. எனக்குக் கல்யாணம் ஆனவுடனேயே நான் தனிக்குடித்தனம் போயிடுவேன்னு சொல்ல, தீபாவளி அன்றைக்கே எனக்கும் என் அப்பாவுக்கும் பெரிய சண்டை! அப்போ நான் ஏன் சார் அவனைக் கொல்லணும்?
அவன் என் அப்பாகிட்ட சொல்லக் கூடிய உண்மைகளை நானே அவர்கிட்ட சொல்றதா தான் இருந்தேன். அவன் கிட்டயும் அதைச் சொல்லியிருந்தேன், நீ சொல்லிடாதடா, நானே சொல்றேன்னு. அதுக்குக் கூட அவன், ‘சொல்ல மாட்டேன், நீ தலைநிமிர்ந்த மனுஷனா, மீசைவெச்ச ஆம்பளையா நடந்துக்கற வரைக்கும்! மறுபடி இந்த வீட்டில் ஒரு அடிமையா நீ நடந்துக்க ஆரம்பிச்சா, என் சாட்டை சுழலும்! இது உனக்கு மட்டுமில்ல, எல்லாருக்குமே சொல்றேன்’னு சொன்னான்.”
“இதெல்லாம் கோர்ட்டில் எடுபடாது சார்!” என்றார் சிவசரண்.
பாண்டுரங்கன் குறுக்கிட்டார். “தாராளமா எடுபடும்! உங்க குற்றச்சாட்டுதான் எடுபடாது! ஜெயக்குமாரைக் கீழே தள்ளிவிட்டது சம்பத் தான்னு நீங்கதான் நிரூபிக்கணும்! என்ன சாட்சி இருக்கு உங்ககிட்ட? அவங்களுக்குள் ஏதாவது பிரச்சனை இருந்ததுக்கு ஆதாரம் இருக்கா? கண்ணால பார்த்த சாட்சி இருக்கா? சம்பத்தை மிரட்டுகிற வேலை எல்லாம் வேண்டாம்!” என்று கடுமையாகச் சொல்லிவிட்டு “வா, சம்பத்! இவங்களுக்குப் பதில் சொன்னதெல்லாம் போதும்!” என்று சொல்லி வெளியேறினார். சம்பத்தும் அவருடன் போய்விட்டான்.
சிவசரண் தன்யா, தர்ஷினி பக்கம் திரும்பினார். “சம்பத் தான் இதைப் பண்ணியிருக்கணும்ங்கறதுக்கான சான்ஸ் இப்போ அதிகரிக்குது, இல்லை? ஆனா நேரடியான சாட்சி இல்லாம இதை நிரூபிக்கறது…”
“இப்போ, மிக முக்கியமான ஒருத்தரை விசாரிக்கணும் சார்” – இடைமறித்தாள் தன்யா.
“நாம விசாரிக்கலாம், அவங்க பதில் சொல்லணுமே” என்றார் சிவசரண்.
“அந்தப் பதிலை வாங்கத்தானே நாம எல்லோரும் இருக்கோம்” என்றாள் தன்யா.
“ரைட்” என்றார் சிவசரண். என்றாலும் அவரிடம் ஒரு தயக்கம் காணப்பட்டது. கான்ஸ்டபிளை அழைத்தார். சிறிதுநேரம் தயங்கிவிட்டு “மிஸஸ் விஷ்ணுகுமாரை வரச் சொல்லு” என்றார்.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings