“டேய், அங்க போகக் கூடாதுனு எத்தன வாட்டி சொன்னாலும் புரியாதா?” என நிலா குழந்தை கோபியை அடிக்க
அடி தாங்காமல், “இனிமே போக மாட்டேம்மா… போக மாட்டேம்மா… போக மாட்டேன்” என குழந்தை கதறுவதும் கேட்க, பத்மாவுக்கு அடிவயிறு கலங்கியது
ஓடிப் போய் அவளை நாலு அரை விட்டு குழந்தையை இழுத்து அணைத்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது. இயலாமையால் கண்ணீரே மிஞ்சியது.
பத்மாவும் நிலாவும் ஓரகத்திகள். பத்மா மூத்தாள். நிலா இளையாள்.
பத்மாவின் கணவன் மூர்த்தி ஒரு மில் தொழிலாளி. நிலாவின் கணவன் முருகன் எலக்ட்ரீசியன்.
பத்மா மூர்த்தியின் அக்காள் மகள். தாய் மாமனையே மணம்புரிந்து கொண்டதாலோ என்னவோ, மணமாகி பதிமூன்று வருடங்கள் கடந்தும், பத்மாவுக்கு குழந்தைக் பாக்கியமில்லை.
போகாதக் கோயிலில்லை, செய்யாத வைத்தியமும் இல்லை. விதியோ? யார் செய்த பிழையோ? தண்டனை பத்மாவுக்கு!
பத்மாவின் வீடும் நிலாவின் வீடும் முற்றம் மட்டும் ஒன்றாக அமையப்பெற்று, இரண்டாக பகுக்கப்பட்ட வீடு.
அன்று மதிய உணவுவேளையில் தன்னிடம் வந்து சிறிது நேரம் விளையாடியதற்காகத் தான் குழந்தைக்கு அடி உதை
குழந்தை அழுகுரலில் பத்மாவின் இதயம் வலித்தது. சாவியை எடுத்துக் கதவைச் சற்றுச் சத்தமாக சாத்திப் பூட்டினாள். அடுத்த தெருவிலிருக்கும் தன் தோழி அலமு வீட்டை நோக்கி நடந்தாள்.
இப்போதெல்லாம் பத்மாவுக்கு ஆறுதல் தரும் இடம் அலமு வீடு தான்
பத்மாவின் மனதில் பழைய நினைவுகள் மேலெழும்பியது. நிலா தாயற்றவள். மாற்றாந்தாயிடம் வளர்ந்தவள். அவள் வளர்ந்த சூழல் பத்மாவுக்கு நன்குத் தெரியும். ஏனெனில் இருவரும் ஒரே ஊர்க்காரர்கள். தூரத்துச்சொந்தமும் கூட.
தன் கொழுந்தனுக்கு அவளை மணம் செய்துவிட்டால் அவளுக்கும் உதவினாற் போல் இருக்கும். தன் கொழுந்தனுக்கும் நல்வாழ்க்கை அமையப் பெற்று தன் கடனும் முடித்தாற் போலிருக்கும் என்று மனதில் எண்ணிய எண்ணங்களுக்கு விரைவில் செயல் வடிவம் கொடுத்தாள் பத்மா
நிலா நல்ல நிறமும் அழகும் உடையவள். முருகனுக்கு நிலாவைப் பார்த்த உடனே பிடித்துப் போக, அவள் வீட்டிற்கு அதிகம் சிரமம் வைக்காமல் இவர்களே மணத்தை முடித்தனர்.
மணமான மறுமாதமே உண்டானாள் நிலா. தன் குடும்பத்திற்கு வாரிசு உண்டான மகிழ்ச்சியில் துள்ளினாள் பத்மா. மசக்கையின் போது நிலாவுக்கு அவளதுத் தாய் செய்ய வேண்டிய கடமைகள் அனைத்தையும் பார்த்துப் பார்த்துச் செய்தாள்.
பிரசவத்தின் போதும் உடனிருந்து தாயையும் சேயையும் கவனித்ததிலிருந்து, குழந்தையைக் குளிப்பாட்டுவது, அழகூட்டுவது, பக்குவமாக மருந்திடுவது, திருஷ்டிகழிப்பது என பார்த்துக் கொண்டாள் பத்மா
குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்டுவதுடன் நிலாவின் வேலை முடிந்து விடும். மற்றவற்றிற்கெல்லாம் பத்மா தான். இப்படியாகத் தான் நாட்கள் கடந்தன.
குழந்தையும் வளர ஆரம்பித்தான். அம்மா அம்மாவென சர்வகாலமும் பத்மாவிடம் தான் ஒட்டிக் கொண்டிருப்பான் குழந்தை. கோபிக்கு மூன்று வயதாய் இருந்த போது, அடுத்த குழந்தை கவி பிறந்தாள். இவளுக்கான பராமரிப்பு பாதுகாப்புப் பணிகளையும் மிக அன்போடும் ஆர்வத்தோடும் மகிழ்ச்சியோடும் செய்தாள் பத்மா.
பிறந்தநாள், தீபாவளி, பொங்கல் விசேஷ நாட்களுக்கெல்லாம் அன்றைய லேட்டஸ்ட் டிசைன் ஆடைகளிலிருந்து அலங்காரம் வரைக்கும் இரு குழந்தைகளுக்கும் அந்தத் தெருவே வியக்கும்படி அமர்க்களப்படுத்தி விடுவாள்.
கவிதாவின் நான்காவதுப் பிறந்தநாளுக்கு வந்த நிலாவின் சிற்றன்னை பங்கஜம், ஒரு மாதம் கடந்தும் என்ன காரணத்தாலோ இங்கேயே தங்கி விட்டாள்.
சில நாட்களில் நிலாவின் நடத்தையிலும் மாறுதல் ஏற்பட்டது. குழந்தைகள் இருவரையும் பத்மாவிடம் செல்ல விடாமல் அடக்கினாள். அவர்கள் கட்டுப்படாமல் பத்மாவிடமே ஒட்டிக் கொள்ள, பங்கஜத்தம்மாள் நிலாவைச் சீண்டி விட்டாள்
வெகுண்ட நிலா, குழந்தைகளை அடித்து அடக்க முயன்றாள். குழந்தைகள் இருவரும் வீல் என்று அலற, பத்மாவின் மனம் பதைத்தது
தன்னிடம் வரும் குழந்தைகளிடம் “என் செல்லங்களா என் செல்வங்களா, நிலா அம்மா சொல்றபடி நடந்துக்கோங்கடா, நிலா அம்மாவிடம் குளிங்க, நிலா அம்மாவிடம் டிரஸ் மாட்டிக்குங்க, நிலா அம்மாவிடம் சாப்பிடுங்க, படிங்க, தூங்குங்க என்ன? பத்மா அம்மா சொன்னா கேட்பீங்க தான?” என்று எவ்வளவோ அறிவுரைகள் செய்தும், எட்டு / ஐந்து வயது குழந்தைகளுக்குப் பாவம் அந்தத் திடீர் மாற்றத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை.
தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு குழந்தைகளைத் தவிர்க்க முயன்றாள் பத்மா. ஆனால் குழந்தைகள்…..!
விளைவு வசைமொழிகளாக வந்தது. விஷத்தில் தோய்த்த வார்த்தைகள்
“மலட்டுச் சிறுக்கி, இந்தப் பச்ச புள்ளைகள வளைச்சுப் போட்டு எங்கிட்ட வர விடாம பண்ணிட்டாளே….!.இவளுக்கு புள்ள வேணும்னா பெத்துக்க வேண்டியது தான. எனக்கும் என் பிள்ளைகளுக்கும் இடையே வேலியாயிட்டாளே?” நிலா வாயம்புகளை வீசத் தொடங்கி நாட்களாகின்றன
இளமையிலேயே தாய் தந்தையை இழந்து கடுமையான உழைப்பை மூலதனமாக்கி முன்னேறியவர்கள் தன் கணவனும் கொழுந்தனும். அவர்களுக்கு வீட்டின் விஷயங்கள் தெரிய வந்தால் மனம் பாதிக்கப்படுமென்று மௌனத்தையே மொழியாக்கிக் கொண்டாள் பத்மா
நிலா தன் மேல் வீசும் வசவுகளும் பிள்ளைகள் மேல் செலுத்தும் பலாத்காரமும் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்தாலும், மனதுக்குள்ளேயே தான் மருகுகிறாள் பத்மா.
அலமு வீட்டிற்கு வந்து சேர்ந்து விட்டாள் பத்மா. பக்கத்து வீட்டுப் பார்வதி அத்தையின் ஊர்க்கார பெண் தான் அலமு. இங்கே வாழ்க்கைப்பட்டு மூன்று வருடங்கள் ஆகிறது. பழகுவதற்கு இனியவள். அன்பும் பண்பும் நிறைந்தவள். கணவன் அன்புராசு மளிகைக் கடை வைத்துள்ளான். கண்ணன் எனும் ஒன்றரை வயது குழந்தைக்குத் தாய்.
கண்ணன் – ரோஜா இதழ்களைக் குவித்தாற் போன்றதொரு மேனி, பட்டுகன்னம், உதட்டைக் குவித்து முகத்தைச் சுழித்து பாட்டிக்கு அழகு காட்டும் ஒய்யாரம்.
கைபேசி கிடைத்தால், எண்களை அழுத்தி விட்டு காதில் வைத்து ‘ஹலோ’ சொல்லும் அழகு, மேலும் கீழும் வளர்ந்துவிட்ட இரட்டை ஜோடி பற்களோடு பொக்கை வாய் விரித்துச் சிரிக்கும் சிரிப்பு.
தப்பும் தவறுமாக பேசினாலும் அமிர்தத்தை அருந்தினாற் போல மகிழ்ச்சி தரும் அந்த மழலைச் சொற்கள், உலக இன்பமனைத்தையும் தனக்குள் அடக்கி வைத்திருக்கும் அதன் மேனி தொட்டு தூக்கி மகிழ ஆரம்பித்து விட்டால், ஒவ்வொரு முறையும் சிறகு விரிந்து விடும், உலகு மறந்து விடும் ஆனந்த அனுபவம் பத்மாவுக்கு
குழந்தை ஈரமான உதட்டைக் குவித்து முத்தம் வைத்து விட்டாலோ, “ஆஹா! இது தான் சொர்க்கானுபவமோ?”
பிள்ளையின் வாரப்படாதக் கேசத்தின் அசைவும், தத்தக்கா பித்தக்காவென்ற நடையும் பார்த்து ரசிக்கத் தொடங்கிவிட்டால், எவ்வளவு பெரிய மனவேதனையும் நொடியில் மரணமடைந்துவிடாதா! இறைவா! இங்கு வளர்ச்சி என்ற ஒன்றை மனிதர்களுக்கு வழங்காமல் இருந்திருக்கலாம் நீ! கள்ளம், கபடம், பொய், புரட்டு, சூது,வாது, வஞ்சம்,வினை,பழி, துரோகம்…. இவைகளெல்லாம் பூமியைச் சிதைத்திருக்காது! என்று நினைத்தாள் பத்மா
பத்மாவின் மனதை நன்குப் அறிவாள் அழகு
வாய் நிறைய, மனம் நிறைய, பத்மாவை உபசரிப்பளித்து அமர வைத்தாள். குழந்தை கண்ணன் பத்மாவிடம் தாவிக் கொண்டது.
மழலையின்பத்தில் மகிழட்டும் என்று ஏதும் பேசவில்லை அலமு. நிமிடங்கள் விரைவாகக் கரைந்தது. மெதுவாக….“அக்கா! சொன்னேனே….! அதைப்பற்றி யோசிச்சீங்களா?” என்று கேட்டாள் அலமு.
சிறிது நேரம் பத்மா பதில் பேசவில்லை. அன்று வீட்டில் நடந்த நிகழ்வுகள் அவள் இதயத்தில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியிருந்தது
“என் குழந்தை பாக்கியசாலிக்கா! அதான் உங்க அன்பு அவன் மேல படர்ந்திருக்கு. அவனைப் பாத்தாலே நீங்களும் குழந்தையாகிடுறிங்க’ க்கா. உங்க இருவரின் அன்புப் பரிமாற்றத்தையும் பார்க்க, எனக்கு மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்குக்கா” என்றுத் தன் உணர்வுகளை வெளிப்படுத்தினாள் அலமு
பிறகு, காபி கலந்து கொடுத்துக் கொண்டே தொடர்ந்தாள்
“அக்கா நீங்க எப்படிப் பிள்ளைப் பாசத்துக்குத் தவிக்கிறீர்ங்களோ, அதுபோல பல குழந்தைகள் தாயன்பே தெரியாம, அனாதைகளாய் தாய்ப்பாசத்துக்காக ஏங்கித் தவிக்கறாங்கனு உங்களுக்குத் தெரியுமா? நீங்க மனசு வெச்சா, தாயன்புக்கு ஏங்கற ஒரு குழந்தைக்கு அன்பானத் தாய் கிடைப்பாங்க. என்புருஷன் அடிக்கடிச் சொல்வாரு. அன்னை தெரேசா அனாதை இல்லத்தைப் பத்தி. நாம ஒருநாள் அங்க போலாம்’க்கா. உங்களுக்கோ மாமாவுக்கோ ஒரு குறையுமில்ல. போதுமான வருமானமிருக்குது. உங்க தவிக்கும் தாய்மனசப் புரிஞ்சுகிட்டு தான் நான் இதைச் சொல்றேன். நீங்க ஒரு தீர்க்கமான நல்லமுடிவு எடுக்கணும்னு ஆசைப்படறேன். மாமாகிட்ட பேசுங்க. அவர் நிச்சயம் புரிஞ்சுக்குவார்” என்று ஏற்கனவே பல முறை கூறிய விஷயத்தை இம்முறை இன்னும் அழுத்தமாகக் கூறினாள் அலமு.
கணவன் பணிக்குச் சென்ற பிறகு வீட்டில் நிலவும் நரகசூழல் பத்மாவை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்திருந்தது.
“அலமு… மாமாகிட்ட பேசிட்டு சீக்கரம் அந்த நல்ல நாளை குறிக்கறேன். என் வாழ்நாள் தவத்துக்கான வரம் கிடைக்கும் அந்த நல்ல நாள் சீக்கரம் வரும்” என்ற பத்மா, மீண்டும் குழந்தை கண்ணனை கொஞ்ச ஆரம்பித்தாள்.
(முற்றும்)
விமர்சனம் அனுப்ப கடைசி நாள் : மார்ச் 30, 2021 👇
Exclusive வாசிப்புப் போட்டி – சி.நா.உதயசூரியனின் ‘கல்யாண சந்தை’ நூல்
“சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு, இணைப்புகள் 👇
GIPHY App Key not set. Please check settings