in ,

கறிக்குழம்பும் கற்பனைகளும் (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

விடியற்காலையில் படுக்கையிலிருந்து எழும்போதே முடிவு செய்துகொண்டாள் ராசாத்தி, இன்றைக்கு மட்டன் குழம்பு வைத்தே ஆகவேண்டுமென்று.  கடைசியாக தீபாவளிக்கு மட்டன் எடுத்தது.  உடனே விரல் விட்டு எண்ண ஆரம்பித்தாள், ‘ஐப்பசி… கார்த்திகை…’

‘ ஆறு மாசம் ஓடிப்போச்சோ ’  தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டாள். அப்போது பார்த்து ஒரு பல்லி அவளது வலதுகாலில் விழுந்து தரையில் தெறித்து ஓடியது.

சட்டென நிமிர்ந்தாள்.  விட்டத்தில் அதை துரத்திக்கொண்டு வந்த இன்னொரு பல்லி கீழ்நோக்கி இவளை பார்த்துக்கொண்டிருந்தது. அது இவளை பார்த்ததா அல்லது அதன் இணையை தேடியதா என்று புரியவில்லை.

கேள்விபட்டிருக்கிறாள் வலது பாதத்தில் பள்ளி விழுந்தால் நோய் உண்டாகும் என்று.

‘ ச்சே… இதுகளை முதல்லே ஒழிச்சுக் கட்டனும்… ‘

கருப்பன் முன்பே எழுந்து வெளியே போய்விட்டான். கடைக்குப் போய் டீ குடித்து, பேப்பர் படித்துமுடித்து அப்புறம்தான் வீடு திரும்புவான்.  வந்தவுடன் ஆட்டோ எடுத்துக் கொண்டு சவாரிக்கு கிளம்பிவிடுவான். ஒன்பது மணி சுமாருக்கு திரும்பி வந்து சாப்பிட்டுவிட்டு மறுபடியும் சவாரிக்கு போய்விடுவான்.

இன்னும் கொஞ்சநேரத்தில் வந்துவிடுவான். அரை கிலோ மட்டன் வாங்கி கொடுத்துவிட்டுத்தான் சவாரிக்குப் போகவேண்டுமென்று இப்போதே சொல்லிவிடவேண்டும்.  கடுகு டப்பாவிலிருந்து நானூறு ரூபாயை எடுத்து தனியாக வைத்தும் கொண்டாள்.

xxxxxxxxxx

ருப்பன் வீட்டுக்குள் நுழையும்போதே சொல்லிவிட்டாள் மல்லிகா.

‘ இந்தா… சவாரிக்குப் போறதுக்கு முன்னாடி எனக்கு ஒரு அரைகிலோ மட்டன் வாங்கி கொடுத்துட்டுப் போ… ‘

கருப்பன் ஆச்சரியத்துடன் பார்த்தான்.  ‘ என்ன திடீர்னு மட்டன். உங்கப்பா அம்மா யாராவது ஊர்லேர்ந்து வர்றாங்களா, என்ன… ’ என்றான்.

‘ வந்துட்டாலும்…! போன தீவாளிக்கு மட்டன் செஞ்சு சாப்பிட்டது.. மூணு நாளைக்கு முன்னால பக்கத்து வீட்டுலேர்ந்து கறிக்குழம்பு வாசனை வந்ததிலேர்ந்து பசங்க நச்சுப் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க… நானும் நாளைக்கு நாளைக்குன்னு இழுக்கடிச்சிக்கிட்டே இருந்தேன். இன்னிக்கி  செஞ்சு கொத்துடலாம்னு முடிவு பண்ணிட்டேன். நானூறு ரூபாதானே போகுது விடு.  போய்ட்டு அரை கிலோ  மட்டன் வாங்கி கொடுத்துட்டு போ… ’ என்றாள்.

‘ ஏன் அவசரம்  காலையில டிப்பனுக்கே செய்யப் போறீயா என்ன…  ‘ என்றான். 

‘ இல்லே, மத்தியானம் சாப்பாட்டுக்குத்தான் செய்வேன்… ‘ என்றாள்.

‘ அப்போ சரி, சவாரி போயிட்டு திரும்பி இட்லி சாப்பிட வருவேனில்லே, அப்போ வாங்கிட்டு வந்து கொடுத்திடறேன் ’ என்றுவிட்டு அவளைப் பார்த்தான்.

‘ என்னை என்ன பார்க்கறே, இப்போவே கிளம்பு… ‘ என்றாள்.

‘ வெறும் கையி முழம் போடுமா… ‘ என்று கைநீட்டினான்.  பையையும் பணத்தையும்  கொண்டுவந்து அவனிடம் நீட்டினாள்.

பணத்தில் எப்போதுமே அவள் கறார்பேர்வழி.  சவாரிக்குப் போய்விட்டு  வந்தவுடனேயே அவனது சட்டைப்பையைத் துலாவி இருப்பதையெல்லாம் எடுத்துக்கொண்டு விடுவாள் அவள். அவன் முறைத்தால், ‘ தோ… என்கிட்டத்தான் இருக்கு. உனக்கு எப்போ வேணுமோ கேளு குடுக்கறேன் ‘ என்பாள் நமட்டுச் சிரிப்புடன். ஆனாலும் அவ்வளவு சுலபமில்லை அவளிடம் பணத்தைக் கறப்பது.. அவனும் சிரித்துக் கொண்டே விட்டுவிடுவான்.

xxxxxxxxxx

மணியரசுக்கும் கலையரசுக்கும் ரொம்பவும் குஷி.  அம்மாவும் அப்பாவும் பேசிக்கொண்டிருந்ததைக் தூங்குவது பாவனை செய்துகொண்டே கேட்டுவிட்டார்களே.

’ ஹை.. இன்னிக்கு நம்ம வீட்டில மட்டன் குழம்பு…’ என்று இருவரும் ஒருசேரக் கூவினார்கள். வழக்கத்தை விட இன்றைக்கு அவர்களுக்கு ரொம்பவும் சந்தோசம். அதே சந்தோசத்துடன் குளித்து, உடுத்தி, இட்லி தோசை  சாப்பிட்டுவிட்டு பைகளை எடுத்துக் கொண்டு பள்ளிக்கூடமும் கிளம்பி விட்டார்கள். 

எப்படியும் ஒரு மணிக்கெல்லாம் பள்ளிக் கூடம் விட்டுவிடும். வந்தவுடன் கறிக்குழம்புச் சோற்றை ஒரு பிடி பிடிக்கவேண்டியதுதான் என்று அப்போதே நினைத்துக் கொண்டார்கள் இருவரும்.  நாக்கில் எச்சில் சுரந்ததும் உண்மைதான்.   

சாபிடும்போதே, அண்ணிடம் ‘ அண்ணா டேய், வயித்துல கொஞ்சம் இடம் வை… அப்போத்தான்  மத்தியானம் நிறைய சாப்பிடலாம் ‘ என்றான் தம்பி.  அவ்வளவு பாசம் அவன் மேல். 

இரண்டு பேரும் ரெட்டையர்கள். மணியரசு பிறந்த மூன்று நிமிடங்கள் கழித்து பிறந்தவன் கலையரசு. அதனால் மனியரசுதான் அண்ணன்.  ஒரே கிளாஸ்தான் படிக்கிறார்கள். ஆசிரியர்களுக்கே சிலசமயம் யார் மணியரசு, யார் கலையரசு என்ற சந்தேகம் வந்துவிடும், அவ்வளவு அச்சு அசல் இருவரும்.

பள்ளிக்கூடத்தில் உட்கார்ந்திருந்தாலும் எண்ணம் பூராவும் வீட்தைத்தான் சுற்றி சுற்றி வந்தது அவர்களுக்கு.  ஆசிரியர் நடத்திய பாடம் எதுவும் முழுதாய் மனதில் ஏறவில்லை.  எப்போது பள்ளிக்கூடம் விடும் என்ற கவனத்திலேயே ஒரு மணியும் ஆகிவிட்டது. பெல் அடித்ததோ இல்லையோ என்று வீட்டுக்கு பறந்தோடி வந்துவிட்டார்கள்.

வீட்டில் அம்மாவைக் காணவில்லை. எங்கேயாவது போயிருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டே,  அம்மா எப்போதும் சாவியை வைத்துவிட்டுப் போகுமிடத்தில் தேடி எடுத்து வீட்டைத் திறந்தார்கள்.

‘ சீக்கிரம் ‘ என்று அவசரப் படுத்தினான் தம்பி.  அவனுக்கு ஏற்கனவே கறிக்குழம்பு வாசனை நாசியில் ஏறி பசியை கிளப்பிவிட்டிருந்தது.

வீட்டைத் திறந்தார்கள். கறிக் குழம்பு வாசனை வீடு முழுதும் அடித்தது.  ஆஹா….ஆஹா…என்றான் கலையரசு. 

பைகளைப் போட்டுவிட்டு இரண்டு பேரும் சோப்புப் போட்டு கைகால் கழுவிக் கொண்டு  போய் உட்கார்ந்தார்கள். தம்பிக்கும் சேர்த்து தட்டை எடுத்து சோற்றை அள்ளிப் போட்டான் மணியரசு. ஆவல் கட்டுக்கடங்கமல் போகவே குழம்புச் சட்டியை திறந்து பார்த்துவிட்டு திடுக்கிட்டான் கலையரசு.

‘ டேய். அம்மா நம்மளை நல்லா ஏமாத்திட்டாங்கடா… கத்திரிக்கா குழம்பு வைச்சிருக்காங்கடா… ’ என்றான்.

‘ டேய்…டேய்… வீட்டுக்குள்ளேதான் கறிக்குழம்பு வாசனை வருதேடா… வேறே எங்கேயாவது மறைச்சு வைத்திருக்காங்க போலயிருக்கு, நல்லா தேடுவோம் வா  ‘ என்றான் மணியரசு.

எங்கு தேடியும் கறிக்குழம்பு பாத்திரத்தைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. ஆனாலும் கறிக்குழம்பு வாசனை வீட்டுக்குள் வளைய வந்துகொண்டுதான் இருந்தது.

‘ டேய்… அம்மா நம்மளை நல்ல ஏமாத்திட்டாங்கடா…’ என்றான் கலையரசு.

‘ இல்லையில்லை… அம்மா பையும் பணமும் எடுத்துக்கொடுத்ததையும் அப்பா வாங்கிட்டுப் போனதையும் நான் பார்த்தேனே ‘ என்றான் மணியரசு.

xxxxxxxxxx

தேநேரம் ராசாத்தி அரக்கபரக்க ஓடிவந்து வீட்டுக்குள் நுழைந்தாள். அவளது கையில் ஒரு மஞ்சப்பை. பையன்களை பார்த்து கண் கலங்கியது அவளுக்கு.

பிள்ளைகள் இருவரும் கத்திரிக்காய் குழம்பையும் அவளையும் மாறிமாறி பார்த்தார்கள்.  அவர்கள் மனது எப்படி கஷ்டப்பட்டிருக்கும் என்று நினைத்தபோது அவளுக்குத் தாங்கமுடியவில்லை.

‘ எங்கேம்மா கறிக்குழம்பு….’

‘ கண்ணுகளா, கவலைப் படாதீங்க… உங்களுக்காக ஹோட்டல்லே போய் கறிக் குழம்பு வாங்கி வந்திட்டேன்… இதை ஒரு கிண்ணத்துலே கொட்டித தர்றேன், வந்து சாப்பிட உட்காருங்க…’ 

அவர்களைப் பார்க்க பரிதாபமாக இருந்தது.

‘ தப்பு நடந்து போச்சுடா. மட்டன் குழம்புதான் அம்மா வச்சேன்.  ஆனால் கவனப் பிசகுல குழம்புச் சட்டியை மூடாம விட்டுட்டேன் போல.  இங்கேதான் வீடுபூரா பல்லியா அலையிதுங்களே. குழம்புச் சட்டிக்குள்ளே எப்படியே ஒரு பல்லி விழுந்திடுச்சு,.. அப்படியே கொண்டுபோய் குப்பைத் தொட்டியிலே கொட்டிட்டேன் ‘ என்றாள். இரண்டு பேரும் உடனே ஓடிப் போய் புழக்கடையில் வைத்திருந்த குப்பைத் தொட்டியைப் பார்த்தனர்.  அம்மா சொன்னது சரிதான் என்று புரிந்தது அவர்களுக்கு.

இருவருக்கும் ஏற்கனவே தட்டில் போட்டிருந்த சோற்றில் தான் கடையிலிருந்து வாங்கிவந்திருந்த கறிக்குழம்பை ஊற்றினாள்.

ஒரு பெருமூச்செறிந்துவிட்டு பையன்களைப் பார்த்தாள். அவர்கள் அவசர அவசரமாய் குழம்புச் சோற்றை சாப்பிட ஆரம்பித்தாலும் முகத்தில் உண்மையான சந்தோசம் இல்லை என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.

‘ கண்ணாத்தா வீட்டுல ஒரு கோழி இருக்காம். வர்ற வழீல சொல்லிவச்சிட்டு வந்தேன். நாளைக்கு விடிகார்த்தாலே அதுகளை திறந்துவிடுறதுக்கு முன்னாலேயே போயி பிடிச்சிக்கிட்டு வந்துடுறேன். நாளைக்கு கோழிக்குழம்பு நிச்சயமா வச்சுத் தர்றேன்… இப்போ இதை சாப்பிடுங்க…. ‘

அப்போதிலிருந்தே இருவரும் கற்பனையில் மிதக்க ஆரம்பித்தனர்.

எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

முற்றும்

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    சகுனம் (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

    காணாமல் போன மொபைல் (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு