செப்டம்பர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9
மேகமெனும் திரை விலக்கி, மின்னலெனும் படியிறங்கி, சண்டமாருதத் தேரில் சுழன்று வந்து, சமுத்திரக் கம்பளத்தில் தரையிறங்கி, தாவ் கிரகத்தின் இருபெரும் ஆளுமைகள் யுவா கிரகத்திற்கு வரவும்.., கொதிக்கும் சமுத்திரமும் பயந்து நடுங்கி ஒரு கணம் அடங்கிப் போனது. வீசும் புயல் காற்றும் சத்தமின்றிச் சாந்தமானது. மின்னல் வெட்டி, இடி எனக் கொட்டிய கார் மேகமும், கரைந்து காணாமல் போனது.
அவர்களது வரவை கண்ட அதிரூபனின் மனதிற்குள்ளும் இன்பத்தின் சாரல் ஊற்றெடுக்க, உள்ளுக்குள் பெருமகிழ்வு. என்னதான் அவர்கள் இருவரும் பார்ப்பதற்கும், பழகுவதற்கும் கடுகடுவென இருந்தாலும், அந்தக் கடுகடுவெல்லாம் தாவ் கிரகத்தின் நன்மைக்காகவே தான்.
‘கண்டிப்புடன் வளர்க்கப்படும் குழந்தைகள், வாழ்க்கையில் என்றுமே முறை தவறிப் போய் விடுவதில்லை’ என்ற வாசகத்திற்கு இணங்க, அவர்களின் கண்டிப்பும் ஒரு வகையில் தாவ் கிரகத்தின் இத்தகைய மகோன்னத நிலைக்குக் காரணமாக இருக்கிறது.
அப்படிப்பட்ட பெருமை மிகுந்த சேத்தும், அரிமாவும் தாவ் கிரகத்தில் இருந்து யுவாவிற்கு வந்தது, இந்தக் கிரகத்தைக் காப்பதற்காக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் அவர்களது இந்த வரவு, அதிரூபனுக்கு மனதோரம் பெருத்த மனநிறைவை கொண்டு வரத்தான் செய்கிறது.
‘ஏதோ நீ செய்த தவறை நீயே சரிசெய்துவிடு’ என்று தண்ணீர் தெளித்து விட்டது போலல்லாது, தனக்குத் துணையாய் தன்னவர் ஒருவர், தன் தாய் வீட்டை சேர்ந்த ஒருவர் உடன் நிற்கும் பொழுது மனதில் தோன்றும் தைரியத்திற்கு அளவே இல்லை தானே?
என்ன தான் அதிரூபன் மிகுந்த சதக்தி வாய்ந்தவனாக இருந்தாலும்.. யாருடைய உதவியையும் என்றுமே எதிர்பார்க்காதவனாக இருந்தாலும்… அதே நேரத்தில் எவரொருவரின் மனம் என்பதும், இலகிய பஞ்சினால் செய்யப்பட்டது போல் தானே.
கம்பீரத்தை மொத்த உருவாக அப்படி வந்து கொண்டிருந்தவர்களும் என்ன நினைத்தார்களோ, யுவாவில் தரை இறங்கியதும் ஓடோடி வந்து அதிரூபனை கட்டிக் கொண்டனர். அவர்கள் மூவரிடம், அதுவரையில் இருந்த அந்தக் குழப்பமெல்லாம் வடிய, முகத்தில் பாசம் ஒன்றே வழிந்து ஓடியது.
இதில் சேத்தின் கண்ணோரம் சிறுது கண்ணீர் பளபளத்ததோ என்னவோ? அதை அறிந்து அதிரூபன் அவரைப் பார்த்துக் கொஞ்சம் கேலியாகச் சிரிக்க முயலுகையில், மீண்டும் அதே பழைய கடுகடு முகம் மீண்டும் திரும்பியது. அவரைப் பற்றித் தெரியாதா அதிரூபனுக்கு?
மேலும் வந்திருந்த இருவரும், இப்போதைய யுவாவின் நிலைமை பற்றி அதிரூபனிடம் கேட்டிருந்தனர். அதற்கு அவன், தான் யுவாவிற்கு வந்ததிலிருந்து, முதலில் வ்ரித்ராவை சந்தித்து அதிர்ச்சியடைந்தது… அதன் பின் வாசுவின் நட்பின் மூலம், அவனது அந்தத் தனிப்பயிற்சி மையத்தில் பயிற்சி எடுத்துக் கொண்டது பற்றியும், அவர்கள் அங்கு அவனுக்குக் கொடுத்த பானத்தைப் பற்றியும் கூறிக் கொண்டிருக்க… உடனே சேத்தும், அரிமாவும் ஒருவரையொருவர் திகைப்புடன் பார்த்துக் கொண்டனர்.
“நீங்க ரெண்டு பேரும் அந்தப் பானத்தைக் குடிக்கல இல்லையா?” என்று இருவரும் ஒருசேரக் கேட்க
அவர்கள் இருவரும், “இல்லல்ல… நாங்க அங்க கொடுக்கப்பட்ட எந்தவொரு உணவையும் கூடச் சாப்பிடல” வாசுவும், அதிரூபனும் ஒன்றாய் கூறினர். அதில் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டனர் அவர்கள் இருவரும்.
“நல்லவேளை நீங்க அதைக் குடிக்கல. அதைக் குடிக்காமலேயே சுற்றியிருந்த சூழ்நிலையாலேயே உன்னுடைய கட்டுப்பாடு உன்னை விட்டுப் போயிருக்கு அதிரூபா… உனக்குப் புரியுதா?” என்று அரிமா கேட்க
சற்று யோசித்த அதிரூபனும், “இருக்கலாம்… ஆனா நான் அப்போ இருந்த சூழ்நிலை அப்படி. எனக்குன்னு ஒரு ஆபத்து வந்திருந்தா கூட நான் பொறுமையா இருந்திருக்கலாம். ஏன்னா, என்னால எல்லாவற்றையும் எதிர்க்க முடியும், தாங்கிக்க முடியும். ஆனா அந்தச் சூழ்நிலையில வந்த அந்த ஆபத்து வாசுவுக்கு. அப்போ எனக்கு வேற எதைப் பத்தியும் யோசிக்கத் தோணல” என்று கூற, அதுவும் சரிதான் என்பதாய் தலையசைத்தார் அவர்.
ஆனால் மேலும், “அது எல்லாமே சரிதான் அதிருபா… ஆனா எனக்கு நீ அந்தப் பானத்தைப் பற்றியும் அதைக் குடிச்ச அங்கிருந்த பயிற்சி பெற்ற ஆட்களோட திடீர் மாற்றத்தை பற்றியும் செல்லும்போது சந்தேகமா இருக்கு. ஒருவேளை இது தான் வாசு சொன்ன அந்த இனக்கீற்று அமில மாற்றமா (D.N.A MUTATION) மக்களோட இனக்கீற்று அமிலத்தை மாற்றியமைத்து, அந்த வரித்ரா அவனுக்குத் தகுந்த அடியாட்களாய் மாற்றுகிறான்.
உனக்குப் புரியுதா? இப்போ இங்க இருக்கிற அபரமேயர்களையே எடுத்துக்கோ, இவங்க எல்லாம் அவனால முழுசா இப்படிச் செயற்கையா உருவாக்கப்பட்ட இந்த உடல்களுக்கு எப்படி உயர் வந்துருச்சு? அப்படி முழுசா உருவாக்கப்பட்ட உடல்கள், அதுவும் இவன் வடிவமைத்தது போல, அதே மனநிலையிலும், அதே உடல் பலமும் கொண்டு அதுக்கு உயிர் கொடுக்கறது என்பது சாதாரணமான விஷயம் இல்லை” என்று கூறிக் கொண்டு சென்ற அவரின் பார்வை சிருஷ்டியின் மீது பட்டது.
உடனே வந்திருக்கும் இருவருக்குமே பயங்கர மின்சார அதிர்வு தான். “சிருஷ்டியோட உயிர்சக்தி குறைஞ்சுருக்கறதா சில்வானஸ் சொன்னான் தான். ஆனால் சிருஷ்டியை இப்போ இந்த நிலைமையில பார்ப்பேன்னு நான் நினைக்கல” என்று அரிமா கவலையுடன் கூற, அவர்கள் அருகே வந்த சேத், சிருஷ்டியை பாதுகாப்பான இடத்தில் கொண்டு போய் விட்டு விட்டு வர சொன்னார்.
பின்பு அதிரூபன் திரும்பியதும், “இங்க உனக்கு உதவிக்காக நாங்க ரெண்டு பேரும் வந்திருக்கிறோம் அதிருபா. எனக்குத் தெரியும், உனக்கு எந்தவித உதவியும் தேவையில்லைன்னு. ஆனா சில நேரங்களில் உன்னுடைய சக்திய கட்டுப்பாட்டோடு வச்சுருக்க, உனக்குப் பக்கத்துல ஆட்கள் இருக்கணும். அதுக்காக நாங்க இருக்கணும்ல?” என்று கொஞ்சம் கேலி பேசி நிலைமையைச் சாதாரணமாக முயன்றார்.
மேலும் உன் அப்பாவும், அம்மாவும் சேர்ந்து தான் சிருஷ்டியோட உயிர்சத்திய மீட்க அங்க போராடிக் கொண்டிருக்கிறாங்க. சிருஷ்டியோட அப்பா, அவர் நம்ம கிரகத்தோடு பாதுகாப்புகளைக் கவனிச்சுட்டு இருக்கார். அதுமட்டுமில்லாம, இங்க யுவாவ சரிசெய்ய நமக்கு நம்ம கிரகத்துல இருந்து உதவி தேவைபட்டுச்சுன்னா, அதைச் செய்து தரவும் அவர் அங்க இருக்கார்.
இந்த நிலைமையில நாங்க ரெண்டு பேரும் உன்கூட இருந்தா நல்லதுன்னு தோணுச்சு. அதனால தான் நாங்க வந்தோம். அதுல உனக்கு எதுவும் பிரச்சனை இல்லையே?” என்று கேட்க, அதிரூபனோ அமைதியாய் அவரைக் கட்டிக் கொண்டான்.
இந்த ஒரு செய்கையே அவருக்கு உணர்த்தியது, அவனது மனம் எந்த அளவிற்கு உடைந்து போய் இருக்கிறது என்பதை. என்னதான் வெளிப்பார்வைக்கு அவ்வளவு கடினமானதாக அனைவரின் மனமும் ரத்தமும் சதையும் ஓடக்கூடிய ஒரு மென்மையான பொருள் தானே.
மேலும் சேத்தும், அரிமாவும் தனியாகச் சென்று இரண்டு நிமிடம் பேசிவிட்டு திரும்பி வந்ததும் அதிரூபனிடம், “ரூபா… நாங்க இதுவரைக்கும் ஆராய்ந்து பார்த்ததில, கண்டிப்பா இது மனுஷங்களுக்கு இனக்கீற்று அமலமாற்றம் செய்து தான் இப்படியான மனிதர்களை உருவாக்கி இருக்கான்னு தெளிவா தெரியுது. நமக்கு இப்போ இருக்கற முதல் கடமை, வ்ரித்ராவையும் அந்தப் பிரக்ட்டானையும் அழிக்கறது மட்டுமில்ல. இந்த இனக்கீற்று அமில மாற்றத்துக்கு உள்ளாக்கப்பட்ட மனிதர்களையும் திரும்பப் பழைய நிலைக்குக் கொண்டு வரதும் தான்.
அதுக்காக நான் நம்ம தாவ் கிரகத்துடைய உதவிய இதுக்குக் கேட்க போறேன். இதையெல்லாம் நான் ஏன் உன்கிட்ட சொல்றேன்னா, இங்க யுவா கிரகத்துல நடக்கிற விஷயங்களெல்லாம் சரி பண்றதுக்காக நீ தான் தலைமை ஏத்துக்கிட்ட. இன்னமும் அதே தலைமை உன்கிட்ட தான் இருக்கு. அதனால உன்கிட்ட அனுமதி கேட்கலைன்னாலும் தகவலாவது சொல்லணும், இது எங்க கடமை: என்று கூறிவிட்டு, யுவா கிரகத்தில் நடைபெறும் பிரச்சனைகளைப் பற்றி விவரங்களை இவர்களது தாவ் கிரகத்திற்கு அனுப்பினார்.
பிறகு அவர்கள் நால்வரும் இப்போது கண்முன் இருக்கும் பிரச்சனையைத் தீர்க்கச் சென்றனர். கண்முன்னே பல நூறு யாளிகள் இருக்கவும், அரிமாவும், சேத்தும் கொஞ்சம் குழம்பத் தான் செய்தனர்.
“இதை அடக்கறதெல்லாம் நமக்குப் பெரிய விஷயம் இல்ல. ஆனா யுவா கிரகத்துல தான் இந்த மாதிரி உயிரினங்கள் எல்லாம் முழுசா அழிஞ்சு போயிடுச்சுல்ல? இப்படி எப்படி அது திரும்பவும் வர முடியும்? இவைகளுக்கு யார் உயிர் கொடுத்தது? இந்தக் கிரகத்து சாதாரண மனிதர்களால இந்த யாளிகள் கூட ஆனா வாழ முடியாது. அவங்க இருக்கிற இந்த நாகரீக வாழ்க்கையில் யாளிகள பற்றிய அடிப்படை விவரங்கள் கூடத் தெரியாது. ஆனால் இது எல்லாத்துக்கும் காரணம் வ்ரித்ராவா தான் இருக்கும்னு நினைக்கிறேன்.” என்று கூற
“என்ன நீங்க நினைக்கறீங்களா? சந்தேகமே வேண்டாம்.. எல்லாம் அந்த வ்ரித்ராவோட வேலை தான். அவன் தான் ஏதோ ஒரு மாயாஜாலம் செய்திருக்கான்” என்று வாசு கூற, திடுக்கிடலோடு மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
அவர்கள் பார்த்த அந்தப் பார்வையில் பல நூறு அர்த்தங்கள் பொதிந்து இருந்தன. பிறகு அவர்கள் ஒவ்வொரு யாளியையும் கட்டுப்படுத்த முயன்றார் அரிமா. ஆம் விலங்குகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் அவரிடம் இருக்கிறது. அவர் மருத நிலத்திற்குத் தலைவனானாலும்… அரிமாவல்லவா? காட்டின் அரசன் அல்லவா? எனவே அனைத்து விலங்குகளும் அவருக்கு அடிபணிந்து தானே போகும்?
மற்றபடி அவர்களைச் சுற்றிலும் இருக்கும் அந்த எந்திர போராளிகளையும், அபரமேயர்களையும், அழிக்கவும்.. அடக்கவும்.. அதிரூபனாலேயே முடியும் தானே? ஆனால் அவன் எவ்வளவு தான் போராடியும் கூடச் சலிப்பின்றிப் புற்றிலிருந்து கிளம்பும் ஈசல் போல, அடுத்தடுத்து.. அடுத்தடுத்து.. அடுத்தடுத்து.. என, போர் வீரர்களும் நிறைய.. நிறைய.. என, எந்திரன் போராளிகளும் இன்னும் என்னும் ஆயுதங்களும் வந்த வண்ணமே இருந்தன.
அவை அத்தனையையும் அடித்து நொறுக்கி நூறு சுக்கல்களாய் உடைத்தெறியும் தருணம், கடலில் ஏதோ மாற்றம் தெரிந்தது. வானின் கால நிலையிலும் கூடச் சட்டென ஒரு மாறுதல். இதை அறிந்து அனைவரும் தாழ் நிமிர்ந்து பார்க்க, வானில் உயரத்தில் வ்ரித்ரா தனியாளாகப் பறந்து கொண்டிருந்தான். ஆனால் அவனுக்குத் தான் பறக்கின்ற சக்தி எல்லாம் உண்மையாகவே கிடையாதே.. ஆனால் தொழில்நுட்பத்தால் தான் எதையும் சாதிக்க முடியுமே?
அப்படி அவனுக்கு அவனாகவே தயாரித்துக் கொண்ட உடை தான் இப்படி அவனைப் பறக்கச் செய்தது, ஆனால் அது விஷயம் அல்ல. இந்த வானிலையும், அதில் திடீரெனத் தென்படும் மாற்றமே அதிரூபன், சேத், மற்றும் அரிமா ஆகிய மூவரையும் கவலை கொள்ளச் செய்தது.
“நாம நல்லா சிக்கிக் கொண்டோம் ரூபா. இன்னும் கொஞ்ச நேரத்துல இங்க ஆழிப்பேரலை வரப் போகுது. இந்த வ்ரித்ரா பஞ்ச பூதங்களைக் கூடக் கட்டுப்படுத்த ஆரம்பிச்சுட்டான். செயற்கை முறையில் உருவாக்கியிருக்கும் ஆழிப்பேரலை இந்தக் கிரகத்துக்கு எவ்வளவு பெரிய ஆபத்துன்னு இவனுக்குப் புரியல. இவனுக்குள்ள இப்போ இருக்கறது முழுக்க முழுக்க உன்ன தோற்கடிக்கனும், உன்ன சாகடிக்கும்ன்ற வெறி மட்டும்தான். இப்போ முதல் வேலையா நாம அஞ்சு பேரும் இங்க இருந்து எப்படித் தப்பிக்கிறதுன்னு பார்க்கலாம்” என்று சேத் கூறி வாயை மூடும் அந்தத் தருணம், ஒட்டுமொத்த கடல் நீரும் வானோக்கி உயர்ந்து.. அதன் பெரும் நாக்கை சுழற்றி.. தீராபசியுடன், அவர்களை நோக்கி அதி விரைவாக வந்து கொண்டிருந்தது.
அது கண்ட சேத், “இந்த வ்ரித்ரா நாம நினைச்சதை விட ரொம்பப் பயங்கர சக்திவாய்ந்தவனாக, தொழில்நுட்பத்தில் அதி பயங்கரத் திறமை உள்ளவனாகவும் இருக்கிறான். ஏன்னா, இப்போ இங்க நான் கணித்ததை விட ரொம்ப வேகமா ஆழிப்பேரலைய வர வச்சுட்டான். என்ன எல்லாரும் மன்னிச்சிடுங்க, நான் நாம இருந்து இருந்து தப்பிக்க இன்னும் கொஞ்சம் நேரம் இருக்கும்னு நினைச்சேன். ஆனா ஆழிப்பேரலைக்கான அறிகுறி வந்து இவ்வளவு சீக்கிரமா அது தன்னை வெளிப்படுத்துகிற இயற்கையான நிகழ்வு இல்லை இது. இருந்தாலும் நான் கொஞ்சம் ரொம்பவே கவனமா இருந்திருக்கணும்” என்று அவர் மிகவும் வருத்தத்துடன், இது என்னவோ அவர் செய்த போல இன்னும் இன்னும் அவர்களை நோக்கி அருகே விரைந்து கொண்டு வந்த ஆழிப்பேரலை பார்த்துக்கொண்டு உயிரை வெறுத்த உணர்வுடன், மனமெல்லாம் குற்ற உணர்வு மேலோங்க கூறிக்கொண்டிருக்க… அரிமாவும், அதிரூபனுமாய் அவரருகே சென்று அவரைக் கட்டி அணைத்துக் கொண்டனர்.
மேலும், “இது உங்க தப்பு இல்ல சேத். எனக்கு நல்லாவே தெரியுது. நாம நல்லது செய்வதற்காக இங்கு வந்தோம். கண்டிப்பா அந்த இயற்கை நல்லத தான் ஜெயிக்க வைக்கும் நெனச்சோம். ஆனா அந்த இயற்கையாலேயே நாம அழிவோம்ன்னு நினைக்கல” என்று அதிரூபன் கூறிக் கொண்டிருக்கும் பொழுது, அந்த ஆழிப்பேரலை அவர்களை விழுங்க அவர்களுக்கு மிக அருகில் வந்து விட்டிருந்தது.
ஆனால் சரியாக அப்பொழுது வானிலிருந்து ஒரு பேரிடி. இவர்கள் நின்றிருந்த இந்த மகாசய போராளி ஒருகணம் மிகவும் நடுநடுங்கி, நிலமெல்லாம் மிகப்பெரும் பூகம்பம் வந்தது போல் கிடுகிடுத்தது. வானில் தோன்றிய மின்னலில் இருந்து அதிவிரைவாக வந்து கொண்டிருந்தார் அவர்.
தனது கையை நீட்டி தன்னிடம் உள்ள ஆற்றல் முழுவதையும் அந்த ஆழிப்பேரலையின் செலுத்த, அது அவரது கைக்கு அடங்கும் சிறு குழந்தையாய் மெல்ல மெல்ல அதன் வேகம் குறைந்து, தாகம் தணிந்து, இறுதியில் தரை தொட்ட அவர் பாதத்தை வணங்கிவிட்டு பின்னே சென்றது அந்தக் கடல். இப்படியாய் அந்த அழிப்பெருங்கடலையே அடிபணியும்படி அதனைப் பேராற்றலுடன் வந்தது, நெய்தல் நிலத்தலைவி அம்பாரி.
அவர் பெருங்கடலின் பேரரசி அல்லவா. அம்பரத்தின் அதிபதியான அந்த அம்பாரி தேவி வந்ததும், அம்பரமே அவர் பாதம் பணிந்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை தானே? ஆனால் இதெல்லாம் நிஜமாகவே அதிரூபனுக்கு ஆச்சரியமாகத் தான் இருந்தது.
தாவ் கிரகத்திலிருந்து இங்கே வந்த போது அவனுக்கு இங்கே நிலைமை இவ்வளவு மோசமாக இருக்கும் என்று எண்ணவில்லை தான். ஆனால், இங்கு ஏதோ ஒரு ஆபத்து என்ற எண்ணத்தில் மட்டுமே அவன் வந்தது. ஆனால் இங்கே அவன் வந்த பின்னோ, அவனுக்கு எத்தனை எத்தனை பேரதிர்ச்சிகள்.
வ்ரித்ரா யுவா கிரகத்தை மறைமுகமாகத் தனது கட்டுப்பாட்டில் வைத்தது.. தலைவனாய் வீற்றிருந்தது மறைமுகமாய் ஆட்சி செய்தது.. மேலும் வாசுவின் நட்பின் மூலம் யுவா கிரக மனிதர்களின் இனக்கீற்று அமிலத்தை மாற்றி அமைத்து அவர்களுக்குள் இருக்கும் மிருகத்தன்மையை வெளிக்கொணர வைத்து, அதற்கு அவன் தரும் அத்தனை கடுமையான பயிற்சிகள். அப்பப்பா..
சரி இவை மட்டும் தான் என்று பார்த்தால், இறுதியாக அந்தக் கொடிய வ்ரித்ராவின் மகளாகவே சிருஷ்டி இருக்க, “அதற்கு மேலும் அதிர்ச்சி வேண்டுமா?” என்று அதிரூபன் மனமுடைந்து போய் இருந்த அவனுக்கு, “இன்னும் இன்னும் உனக்கு அதிர்ச்சி தந்து கொண்டே இருப்பேன்” என வ்ரித்ரா கூறும் விதமாகப் பிரக்யான், ப்ரக்ட்டான் போன்ற வெடிபொருட்களை ஆயுதமாகப் பயன்படுத்தும் அளவிற்குக் கொண்டு அவன் வளர்ந்திருப்பதும்.. “இவை எல்லாவற்றையும் பார்த்து அதனாலேயே வ்ரித்ராவை அழிக்க முடியுமா?” என்று ஐயப்படும் நிலைமைக்குச் சென்றிருந்தான் அவன்.
அந்த நிலைமையில் வ்ரித்ராவுடனான உடனான இந்தப் போரில் கை கிட்டிய சிருஷ்டியும், சிதறிய பாலாக, இப்படி உணர்வற்று கீழே விழுந்து இருக்க, அவனுடன் என்ன தான் வாசுவும் துணை இருந்தாலும், என்ன தான் அதிரூபன் அழிவின் பேராற்றலாக இருந்தாலும், மொத்தமாய் அனைத்தையும் அழித்து விடும் ஆற்றல் இருந்தாலும், அவன் அப்பொழுது மனதளவில் மிகவும் சோர்வுற்று இருந்தான்.
அதற்கு முக்கியமான இன்னொரு காரணமும் இருந்தது. சிருஷ்டியின் பிரிவினால் அதிரூபன் நிலை தடுமாறிய பொழுது தானே அவளின் உயிர்சக்திக்கு இத்தனை பாதிப்பு வந்து, இன்று அவள் அனுபவித்துக் கொண்டிருக்கும் அனைத்து துன்பங்களுக்கும் தான் தானே காரணம் என்று… இப்படி இப்படியாய் அவன் உள்ளுக்குள் வேதனையுற்று கொண்டும், வெளியில் அதன் வெளிப்பாடாகப் பெரும் கோபமாக, இத்தனை உயிர்களை அழித்துக் கொண்டும் இருந்திருக்க, இப்பொழுது அவன் தேசத்துத் தலைவர்கள்.. அவனுக்குத் துணை என இங்கே வரவும்.. மிகவும் நன்றாகவே உணர்ந்தான் அவன்.
அதுவும் இப்பொழுது இந்த ஆழிப் பேரலையில் சிக்கி அனைவரும் உயிர் துறக்க போகிறோம் என்று எண்ணி இருந்த வேளையில், அங்கு அதிரூபனின் அம்மாவே வந்து அவனைக் காக்கவும், தாய்மடி தேடும் சிறுகன்றாய் ஓடிச்சென்று அவர் பாதம் பணிந்து விட்டான் அதிரூபன். அவன் பிறந்ததிலிருந்து அவன் கண்ணில் இருந்து ஒரு துளி நீரும் கண்டிராத அவன் தாய் அம்பரியோ, இன்று மகனின் கண்களில் நீரைக் காணவும் உடைந்து விட்டார்.
பிறகு ஆறுதலாக இரண்டு நிமிடம் அவன் தலையில் தடவிக் கொடுத்து இருந்த அவர், “என்ன அதிரூபா அவ்வளவு வீறாப்பா இங்க வந்தவன், இப்போ இப்படிக் கலங்கலாமா? முதல்ல உன்னுடைய கடமையைச் செய், அப்புறம் பார்த்துக்கலாம் மத்ததெல்லாம்” என்று இறுகிய குரலில் கூற, அவனுக்கு அம்பரியை புரிந்தது தான்.
இது தான் அவன் தாய். என்னதான் உள்ளுக்குள் அத்தனை பாசம் இருந்தாலும், கடமையைச் செய்யும் நேரத்தில் அதற்கே முதலிடம். அதே நேரத்தில் அவர் தன் மகனையும் அவ்வாறே அற்புதமாய்ப் பழக்கவும் தவறவில்லை. அதனாலேயே தான் அதிரூபன் இவ்வளவு திறமையானவனாக, தாவ் கிரகத்தின் இப்படிப்பட்ட அதிமுக்கியப் பொறுப்புக்கு வந்தான் என்பதையும் சொல்ல வேண்டியதில்லை.
இப்படியே ஒவ்வொருவராய் வந்து யுவா கிரகத்தைக் காப்பாற்றிக் கொண்டிருக்க, அதையெல்லாம் பார்க்கும் வ்ரித்ராவின் கண்களில் வெறி ஏறும் அல்லவா? அந்த உச்சபட்ச வெறியுடன், அவன் அவர்கள் அனைவரையும் தாக்க முனைந்தான். அந்தக் கொடூர தாக்குதலில், அதிரூபனுக்கு வைக்கப்பட்ட குறி, தவறுதலாக வாசுவைத் தாக்கிவிட, அவனை வேறிடத்திற்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க முயன்று கொண்டு இருந்தனர்.
இப்பொழுது தாவ் கிரகத்தின் தலைவர்கள் ஒரு புறமும், தாவ் கிரா துரோகி மற்றும் அவனது வெறிகொண்ட மனத்தின் மனித வடிவான அபரமேயர்கள் மறுபுறமும் காலத்தில் இருந்தனர். அத்தனை பெரும் சக்திகள் தனக்கு எதிராக நின்றிருக்கக் கண்ட எவரும், ஒரு கணம் திகைக்கத்தான் செய்வார்கள். திகைத்து பயக்கத் தான் செய்வார்கள்.
ஆனால் வ்ரித்ராவோ, ஆணவச் செருக்குடன் கொக்கரித்தான். அவனது கொக்கரிப்பைப் பார்த்த மற்ற நால்வரின் கண்களிலும் ஆகப்பெரும் எரிச்சல் கொப்பளித்தது. அவர்களது இந்த எரிச்சலை பார்த்தவன் பார்த்தவனுக்கு மேலும் ஆனந்தமாய் இருந்ததோ என்னவோ.
அதே ஆனந்தத்துடன் தன் முன் நின்றிருந்தவர்களைப் பார்த்து, “தாவ் கிரகத்தோடு முதன்மை தலைவர்களும், அதுக்கும் மேல, அழிவு மொத்த ரூபமாக அதிரூபனும் சேர்ந்து எதிர்க்கறது இந்த வ்ரித்ராவை. ஆனா அப்படியிருந்தும் இந்தத் தனிஒருவனை உங்களால அழிக்க முடியல. என்னென்னைக்கும் அழிக்க முடியாது” என்று எக்காளமாக கூற
அதனைக் கேட்டஅதிரூபனோ, தன் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாது அவனை நோக்கி ஒரு எட்டு முன்னேறி விட்டான். அதே நேரம் அவன் கைகளைப் பற்றிய அரிமா, வேண்டாமெனத் தடுத்து விட்டார். இல்லாவிட்டால் என்ன நடந்திருக்குமோ? இதைத் தான் அவர் முன்னரே கூறினார். அவனது அந்தமில்லா அழிவாற்றலை கட்டுப்படுத்தவும் அவனுக்கு அருகில் யாரவது இருக்க வேண்டும்.
ஆனால் அதை எதையும் உணராத வ்ரித்ரா, மேலும் மேலும் செருக்குடன் அதிரூபனை நோக்கி, “என்ன மாதிரி ஒருவனை அழிக்கறதுக்கு, அதிரூபனுக்கே இத்தனை பேருடைய துணை தேவைப்படுது” என்று கூற, அதிரூபன் மற்றவர்களிடம் திரும்பி ஒரு பார்வை மட்டுமே பார்த்தான்.
அவன் பார்வையின் பொருள் புரிந்த மற்றவர்களும் அங்கிருந்து சென்று யுவா கிரகத்தைச் சீர்திருத்தும் முயற்சியில் இறங்கினர்.
அதர்மத்தை அழிக்கும் பெரும்சக்தியான ரூபன் ஒருபுறமும், அவனுக்கு எதிராக அதர்மத்தின் மொத்த பிறப்பிடமான ஒருவன் மற்றொரு புறமும் நின்றிருக்க, சுற்றிலும் இருந்த மற்ற ஜீவராசிகள் அனைத்தும், எதையும் உணர இயலாத ஒரு அதிர்ச்சி நிலையில் ஆழ்ந்திருந்தனர்.
இதை எல்லாமே அந்த மகாசய போராளி, அதி தீவிர கொதிநிலையில் அவர்களுக்கிடையே நடக்கும் போரை பார்த்துக் கொண்டிருந்தது.
அதிரூபனைப் போலவே, வ்ரித்ராவும் இப்பொழுது பல்வேறு அழிவு சக்திகளைச் செயற்கை முறையில் அதிபயங்கர ஆயுதமாக மாற்றி அதை அதிரூபனுக்கு எதிராகவே பிரயோகித்துக் கொண்டு இருந்தான்.
அவனது இதனைப் பழிவெறியையும், ஆக்ரோஷத்தையும் பார்த்து அதிரூபனும், உள்ளுக்குள் அந்த மகாசய போராளியின் நிலையிலேயே இருந்தான். ஆனாலும் அவனது இப்போதைய முதல் கடமை ப்ரக்ட்டான் மற்றும் ப்ரக்யான் கொண்டு தயாரிக்கப்பட்ட அந்த ஆயுதம் மறைக்கப்பட்டு வைத்திருக்கும் அந்த இடம் தான். அதனாலேயே முதலில் அதிரூபன், வ்ரித்ராவிடம் அமைதியுடனே பேச்சை தொடங்கினான்.
“இங்க பாரு வ்ரித்ரா, நீ இதுவரைக்கும் செய்த நாசவேலைகளைக் கூட என்னால சரி செய்துட முடியும். ஆனா இப்ப நீ கண்டுபிடுச்சுருக்கற ஆயுதம், என்ன மட்டுமில்லாம, உன்னையும்… நீ ஆளணும்னு நினைச்சுட்டு இருக்கற இந்த மொத்த பிரபஞ்சத்தையும் அழிச்சுடும். அதனால அது எங்க இருக்குன்னு நீயே சொல்லிடு” என்று நிருபன் கேட்க
“ஹோ… அப்போ அந்த ப்ரக்ட்டானால ஏற்படப் போற சேதங்களை உன்னால சரிசெய்ய முடியாதா? அப்போ நீ தோற்க போற. என் சக்திக்கு முன்னாடி நீ தோற்க போற” என்று கூறிவிட்டு மீண்டும் ஆனந்தமாய் நகைத்தான் வ்ரித்ரா.
“இப்போ எனக்கு எவ்வளவு ஆனந்தமா இருக்கு தெரியுமா? தாவ் கிரகத்தை விட்டு என்ன வெளியேற்றினீர்களே, அப்போ எனக்கிருந்த ஒரே எண்ணம், உன்ன வெற்றிக் கொள்ளணும்ன்றது தான். உனக்கும் மேலான ஒரு அழிவு சக்தியா, உன்னையே அழிக்கற சக்தியா நான் இருக்கணும்னு முடிவு செஞ்சேன். அதுக்காகவே தான் என்னோட ஒவ்வொரு நகர்வையும் வடிவமைச்சேன். இதோ… இப்போ நீயே பயப்படுற அளவுக்கு ஒரு பயங்கர அழிவு சக்தியை நான் உருவாக்கியிருக்கேன். நீ என்கிட்ட வந்து கெஞ்சிட்டு இருக்க, ரொம்ப மனநிறைவான இருக்கு எனக்கு” என்ற அவனது ஒவ்வொரு வார்த்தைக்கும், அதிரூபனின் கண்களில் வெறி ஏறிக்கொண்டே போனது.
உடனே தனது கண்களை ஒரு கணம் மூடியவன்.. பின் விழி திறக்கையில்.. அவன் விழிகளிருந்து கிளர்க்கதிர்கள் (லேசர்) அதன் உச்சபட்ச வீரியத்துடன் வரித்ராவை ஊடுருவ, அவனது கரங்களோ அணுக்கதிர்வீச்சினை வெளியேற்ற, வ்ரித்ரா அவனிடமுள்ள சக்திகளைக் கொண்டு எவ்வளவோ முயன்றும் அதிரூபனின் இந்த ரௌத்திரத்தை தங்கவியலாது போய்விட, அந்தத் தாக்குதலில் வ்ரித்ராவின் ஒரு பக்க முகமே வெந்து பொசுங்கிப் போனது.
அதுகண்டு இன்னும் உடலெங்கும் ஆத்திரம், முட்டாள்தனமான ஆவேசமாய் மாற, என்ன செய்கிறோம் என்ற நிலைமறந்து தன் ஆற்றலின் அறிவை இழந்து ஆவேசத்துடன் கத்திக் கொண்டே அதிரூபனைத் தாக்க அவனை நோக்கி பாய்ந்தான் அவன்.
இந்த நேரடியான தாக்குதலுக்காகவே காத்திருந்த அதிரூபன், தனது வெறும் கைகளாலேயே அவனை அடித்துத் துவைத்து எடுத்தான். அதிரூபனின் இந்தத் தாக்குதலிலேயே வ்ரித்ராவின் ஒவ்வொரு ஆயுதமும் அதிரூபன் கைகளில் நசுங்கி, சிதறி, தூள் தூளாகின. அப்படிச் சிதறிய துகள்கள் ஒவ்வொன்றும் மண்ணில் விழுந்து பெரும் சத்தத்துடன் வெடித்துத் தீப்பிழம்பை கக்கின.
அதிரூபனின் அந்தத் தாக்குதலின் முடிவில், வ்ரித்ரா முகம் எல்லாம் கிழிந்து.. உடலெங்கும் குருதி வழிந்தோட நின்றிருந்தான். அவனது அந்நிலையில், தன்னை இப்பொழுது மீண்டும் கட்டுப்படுத்திக் கொண்ட அதிரூபன், “இப்போ என்ன சொல்ற வ்ரித்ரா? இப்போவாது அந்த ஆயுதம் எங்க இருக்குன்னு சொல்லிடு. உன்ன இப்படிய விட்டுடறேன்” என்று கேட்க, அந்த நிலையிலும் வ்ரித்ராவின் கண்களில் அந்தத் திமிர் குறையவில்லை.
“என்னோட உயிர் போகப் போற இந்த நிலைமையிலயும், அதிரூபன் என்கிட்ட வந்து கெஞ்சிட்டு இருக்கான். எவ்வளவு பெருமையா இருக்கு தெரியுமா?” என்று வ்ரித்ரா கூற
தனக்குள்ள வலிமையெல்லாம் ஒன்றெனத் திரட்டி, இடக்கையால் வரித்ராவின் கழுத்தினைப் பற்றி, அவனை அந்தரத்தில் தூக்கி, தனது வலக்கையைத் திறந்து அவனது அணுக்கதிர் வீச்சினை வ்ரித்ராவின் இதயத்தை நோக்கி அதிரூபன் செலுத்தமுனையும் சமயத்தில், பின்னாலிருந்து “அதிரூபா.. நிறுத்து” என்றொரு சத்தம் கேட்க, அப்படியே அவனைப் பொத்தென்று தரையில் விட்டான் அவன்.
அவனை அழைத்தது சேத் தான். அவர் ஏன் தன்னைத் தடுத்தார் என்று அதிரூபன் கேட்டதற்கு அவர் பதிலேதும் பேசவில்லை. அமைதியாகத் தரையில் வீழ்ந்து கிடந்த வ்ரித்ராவின் அருகே வந்து, அவன் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியை பறித்து எடுத்தார்.
அதைப் பார்த்த அதிரூபன் புருவத்தைச் சுருக்கி கேள்வியாய் பார்க்க, “இதுல இணைக்கப்பட்டு இருக்கிற இந்த இரண்டு கற்களைப் பாத்தியா?” என்று அவர் கேட்க, அதை உற்றுப் பார்த்தவன் விழிகள் விரிந்தது.
“ஆமாம்… இதுல ஒன்னு ப்ரக்ட்டான், இன்னொன்னு பிரக்யான். நீ உன்னோட அணுசக்தி கொண்டு இவனை அழிச்சிருந்தா, இவனோட இருக்கற இந்த இரண்டும் சேர்ந்து வெளிப்பட்டு இந்தப் பிரபஞ்சத்தையே முழுசா அழிச்சிருக்கும்”
அப்பொழுது அதிரூபன் அடக்கவியலா ஆத்திரத்துடன் வ்ரித்ராவை பார்க்க, வ்ரித்ராவின் கண்களில் தெரிந்த ஒளியைக் கண்டு திகைத்துக் குழம்பினான்.
அப்படி அதிரூபன், வ்ரித்ராவையே பார்த்துக்கொண்டிருக்க, அதைக் கண்டா சேத்தோ, “இப்போ இவன் முக்கியமில்லை. இந்த ப்ரக்ட்டானும், ப்ரக்யானும் செயலிழக்கறது தான் முக்கியம். அதை நான் பார்த்துக்கறேன், நீ கொஞ்சம் பொறுமையாவே இரு” என்று கூறிவிட்டு சென்றார்.
இப்பொழுதும் வ்ரித்ராவின் கண்களில் அந்தத் தோற்றுப் போன பாவம் வரவில்லை. அவன் கண்களில் ஒளிரும் பாவனையை வரையறுக்கவியலாமல் சேத் கூறியபடி வெறுமனே நின்றுகொண்டு, தனது பார்வை கொண்டு அவனது நெஞ்சத்தைத் துளைத்துக் கொண்டிருந்தான் அவன்.
அவன் அப்படிப் பார்த்துக்கொண்டிருக்க, அந்த வ்ரித்ராவோ தரையில் இருந்து தவழ்ந்து மெதுவே ஊர்ந்து சென்று அங்கு அருகில் இருந்த பாறையில் சாய்ந்தபடி அமர்ந்தான்.
மறுபுறமோ, சிருஷ்டிக்கும், வாசுவிற்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. சிருஷ்டியின் உயிர்சக்தி எந்தளவிற்கு மீண்டு கொண்டிருக்கிறது, அல்லது சிதைந்து கொண்டிருக்கிறது. அதை இன்னும் எப்படி மீட்பது என்றெல்லாம் தாவ் கிரகத்திலிருந்து சில்வானஸ் கூறிக் கொண்டிருந்தார்.
இதையெல்லாம் தானும் கேட்டறிந்தபடி, வ்ரித்ராவின் அருகிலேயே நின்றிருந்த அதிரூபனைப் பார்த்து சேத் வந்து கொண்டிருந்தார்.
வந்தவர், “அதிரூபா, முதல்ல உனக்கு ஒரு சந்தோசமான செய்தி..” என்கவும், என்னவென்று அதிரூபன் கேட்க, “வ்ரித்ரா கழுத்துல அணிந்திருந்த அந்த ப்ரக்ட்டானயும், ப்ரக்யானையும் செயலிழக்கச் செய்தாச்சு” என்று கூற
மிகுந்த மகிழ்வுடன், “நிஜமாவா சேத்? எல்லாப் பிரச்சனையும் தீர்ந்துடுச்சா?” என்று கேட்க, இறுகிய முகத்துடன் இல்லை என்பதாய் தலையசைத்தார் அவர்.
(தொடரும் – புதன்தோறும்)
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9
GIPHY App Key not set. Please check settings