எழுத்தாளர் இரஜகை நிலவன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
வயல்காட்டில் அறுவடை வரச்சொல்லி தலையாரி சொல்லி அனுப்பியிருந்தார். மருக்கொழுத்து “சரி, நான் காலையிலே நேரே வயலுக்கு வந்துடறேன். வயக்காடு ஆற்றங்கரையிலேயிருந்து எவ்வளவு தூரம்” என்று கேட்டாள் வந்திருந்த பெண்ணிடம்.
“ஆத்துக்கு அடுத்தாப்பலதான் வயக்காடு. அதனால சொமக்கறதுக்கு அவ்வளவு தூரமிருக்காது. அறுத்து வயலிலேயிருந்து வண்டிக்கு ஏற்றிவிட்டு மத்தியானம் கஞ்சிக் குடிக்க வீட்டுக்கு வந்துடலாம்” என்றாள், வந்தவள்.
“சரி. காலையில வந்துடுறேன்” என்று சொல்லி, வந்த பெண்ணை அனுப்பி விட்டு, உள்ளே வந்தாள், மருக்கொழுந்து.
மண் அடுப்பில் பொங்கிய சோற்றுப் பானை மூடியைத் திறந்து கீழே வைத்து விட்டு மர அகப்பையில் சோற்றைக் கோரி வெந்துவிட்டதா எனப் பார்த்தாள்.
“அம்மா… நான்தான் ஸ்கூலிலே பர்ஸ்ட் ராங்க், பாரு கப் வாங்கிட்டு வந்திருக்கேன்” என்றவாறு மகள் கனிமொழி புத்தகப் பையோடு உள்ளே வந்தாள்.
“என் ராசாத்தி!” மகளை அணைத் கொண்டாள். “நெறையப் படிச்சு நீ கலெக்டராகணும்! அதுக்குத்தானே இப்படி வேகாத வெயிலே வேலைக்குப் போறேன். சரி சரி. போய் இஸ்கூல் துணியை மாத்திட்டு வா. கஞ்சி குடி, என் பொண்ணுக்குச் சுத்திப்போடணும்”.
மகளை அனுப்பிவிட்டு அடுப்பில் இருந்த சோற்றில் தண்ணீர் வடித்தாள்.
திரும்பிக் கனிமொழியைப் பார்த்த போது ‘எட்டாங்கிளாஸ் படிக்கிற புள்ளையவிட உடம்பு வளந்தாச்சு. இவள் எப்ப சமைஞ்சு இன்னும் செலவை இழுத்து வைக்கப் போறாளோ?’ என்று மருக்கொழுந்து பெருமூச்சுவிட்டாள்.
துணி மாற்றிவிட்டு வந்த களிமொழி “எல்லாப் பிள்ளைகளும் இன்னைக்கு அப்பா அம்மாவோட ஸ்கூலுக்கு வந்திருந்தாங்க. நான் பரிசு வாங்கறதைப் பார்க்க நீயும் வரலே. எனக்கு அப்பாவும் இல்லே” என்று கையை விரித்தாள்.
ஆவேசம் வந்தவளாக “கனி, அப்பாவைப் பத்திப் பேசக்கூடாதுன்னு எத்தனை தடவை உனக்குச் சொல்லியிருக்கேன்” என்று அதட்டினாள். “போய்க் கஞ்சி குடி” என்றவாறு செம்பை எடுத்து தண்ணீர் குடித்துவிட்டு படபடப்பு வந்தவளாக கயித்துக் கட்டிலில் வந்தமர்ந்தாள். அவள் மனதில் டி.வி. ஓடியது.
‘நான் இவளை வயிற்றில் சுமந்து கொண்டிருக்கும்போது எவளையோ இழுத்துக் கொண்டு போனவன், என் புருசன்..சே… இவனையெல்லாம் என் புருசன் என்றே சொல்லக் கூடாது.
ஆனாலும் எனக்கு திருமணம் முடித்து இரண்டு ஆண்டு என்னோடு எத்தனை பாசமாக இருந்தான். என்னை எப்படித் தாங்கினான். கனிமொழியைத் தரித்தபோதுகூட எத்தனை குதூகலத்தில் எனக்குப் பட்டுச்சேலை வாங்கிக் கொடுத்தான், காதலிச்சா கூட அவ்வளவு பேசியிருப்பமோ, என்னவோ, தெரியாது. என்னோடு எத்தனை அன்பாகப் பேசி பழகியிருந்தான்.
அப்படிப்பட்டவன் எவளோ ஒருத்திகிட்ட மயங்கிப்போனான். எவளோ என்ன… எதிர்த்த வீட்டு தாலியறுத்த முண்டைதான். அவளோட ஊரைவிட்டே ஓடிட்டான். எவ்வளவோ தேடியும் கிடைக்காமல், நான் கனிமொழியைப் பெற்று வளர்த்து… எப்பப்பா எத்தனை கஷ்டம்? இப்பப் போய் அப்பனை கேட்டா, நான் எங்க போய் தேடுவேன்?
அவன் என்கூடவே இருந்திருந்தா இன்னும் நல்ல வீட்டிலே இருந்திருக்கலாம். நெல்லுச்சோறு போட்டு மகளை செல்லமா வளர்க்கலாம். இப்பகூட தலையாரி என்னை ஒரு மாதிரி பார்க்கிற பார்வையை தடுத்திருக்கலாம். பாவி மனுசன், எதிர்த்த வீட்டுக்காரி முந்தானையைப் புடிச்சிகிட்டுப் போனவன் திரும்பி வராமலே போய் விட்டான்.
மருக்கொழுந்தின் மலரும் நினைவுகளை எண்ணியபோது… “யம்மா! நான் பக்கத்து வீட்டு முத்து அக்காகிட்ட இங்கிலீஷ் படிச்சிகிட்டு வரேம்மா” என்ற குரல் கலைத்தது.
அவள் திரும்பிப் பார்ப்பதற்குள் கனிமொழி சிட்டாகப் பறந்து போய்விட்டாள்.
‘மெதுவாக படுத்து தலை சாய்க்கலாம். இவ படிக்கப்போனா வரதுக்கு ரெண்டு மணி நேரமாகும்’ என்று எண்ணி எழுந்து கதவைச் சாத்த வந்தவள், வாசலில் நிழலாடியதைப் பார்த்து “யாரு?” என்றாள்.
“மருக்கொழுந்து” என்றான் அந்த கோரமான உடையில் தாடியும் பரட்டையுமாக நின்றவன்.
முதலில் புரிய மறுத்தாலும், குரல் கேட்டு அடையாளம் தெரிந்துகொண்ட மருக்கொழுந்து சிலிர்த்துப் போனாள். ‘என் புருஷன்… என்னை விட்டுவிட்டுப் போன கணவன் திரும்பி வந்துவிட்டான்’ என்று மனம் குளிர்ந்தது. இருந்தாலும் “ஆரது?” என்றாள்.
“மருக்கொழுந்து, என்னைத் தெரியல்லையா? நான்தான் உன் புருசன் கணேசன். திரும்பி உங்கிட்டே அடைக்கலம் தேடி வந்திருக்கேன். மருக்கொழுந்து” என்றான் உள்ளே வர எத்தனித்தவாறு.
கொஞ்சம் கோபமாக “எங்க வந்தீக?” என்றாள், மருக்கொழுந்து.
‘என்னை வாயும் வயிறுமாக விட்டுவிட்டுப்போன இவன் பன்னிரண்டு வருசத்திற்குப் பொறவு தேடி வந்திருக்கான். அதுவும் வேற வழியில்லாமல். இவனில்லாமல் இத்தனை நாள் வாழ்ந்தாச்சு. இனி இவன் எனக்குத் தேவையா?’
உடம்பின் இளமை கொஞ்சம் கெஞ்சியபோதும் அதை அதட்டிவிட்டு “இங்க எதுக்கு வந்தீக?” என்றாள்.
“நான் உனக்கு செஞ்ச பாவத்துக்கு பிராயச்சித்தம் தேடி வந்திருக்கேன், மருக்கொழுந்து” என்றவாறு உள்ளே நுழைய கணேசன் மீண்டும் முயற்சித்தான்.
“உள்ளே வராதீக!” அவள் தடுத்தாள்.
“உங்களுக்கும் எனக்கும் இருந்த உறவெல்லாம் அறுந்துபோச்சு. என்னை பிள்ளைத்தாச்சியா உட்டுப் போட்டு உங்கள் உடம்பு சொகத்துக்கு இன்னொருத்தியை இழுத்துட்டுப் போனியளே… அன்னைக்கே நம்ம உறவு முறிஞ்சிபோயாச்சு. நீங்க இல்லாமலே பத்துப் பதினைஞ்சு வருசத்தை ஓட்டிட்டேன். இனி நீங்க எனக்கு வேண்டியதில்லே. வெளியே போங்கோ” என்று கத்தினாள் மருக்கொழுந்து.
“நான் நொந்து போய் வந்திருக்கேன் மருக்கொழுந்து. நாம வாழ்ந்த ரெண்டு வருச வாழ்க்கையை நெனைச்சு எத்தனை நாள் கண்ணீர் விட்டிருக்கேன் தெரியுமா? அந்த வாழ்க்கையை திரும்ப வாழணும்னு தான் உன்னைத் தேடி வந்திருக்கேன், மருக்கொழுந்து” ஏக்கமாக அவளைப் பார்த்தான், கணேசன்.
“நான் எத்தனையோ கஷ்டப்பட்டு நீ இல்லாமலே நாளைக் கடத்தியாச்சு. நீ போ. இனியும் நான் இப்படியே தனியே வாழ்ந்துக்கிறேன். நீ போய்யா” என்று கத்தினாள், அவள்.
“ஏன் மருக்கொழுந்து இப்படி கத்தறே? நாலு பேரு பார்த்தா தப்பா நினைப்பாங்க.”
“எதிர்த்த வீட்டுக்காரியை இழுத்துக்கிட்டு ஓடினியே, அப்ப உனக்கு இது தெரிஞ்சிருக்கணும். அன்னைக்கு இந்த மாதிரி கவலைப்பட்டிருந்தா, என்னை அம்போன்னு உட்டுட்டுப் போயிருப்பியா? போ… போயிடு” திரும்பவும் மார்பு ஏறி இறங்க வேகமாகக் கூச்சலிட்டாள், மருக்கொழுந்து.
கணேசன் ஏதோ சொல்ல வாயெடுக்க, அவன் முகத்திலடித்தது போல ‘படார்’ என்று கதவை சாத்திவிட்டு, வீட்டுக்குள்ளே வந்த மருக்கொழுந்து, முந்தானையை எடுத்து வாயை மூடிக்கொண்டு விம்மினாள்.
எழுத்தாளர் இரஜகை நிலவன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings