in ,

கறுப்புத் தங்கம் (சிறுகதை) – இரஜகை நிலவன்

எழுத்தாளர் இரஜகை நிலவன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

அவனுக்கு நெய்வேலி நிலக்கரிச் சுரங்க வேலையிலிருந்து ஜெய்ப்பூருக்கு மாற்றலாகி இருந்தது கொஞ்சம் வருத்தமாக இருந்தது.

நெய்வேலியில் தங்கியிருக்கும்போது எந்த ஒரு விஷயமானாலும் ரெட்டையார்பட்டிக்கு பத்து மணி நேர பஸ் பயணத்தில் போய்ச் சேர்ந்து விட முடியும். அம்மா, அப்பாவிற்கு உடம்பிற்குச் சரியில்லை என்றால் கூட உடனடியாக பஸ் பிடித்துப் போய் பார்த்து விட்டு வர முடியும்.

இனி ஜெய்ப்பூர் பாலைவனத்தில் ஒரு எண்ணெய்க் கிணற்றுக்கு சீனியர் டெக்னீஷியனாக மாற்றலாகியதில் முதலில் மொழிப் பிரச்சினை பூதாகரமாகத் தெரிந்தது. எப்படி இந்தி மொழி பேசப் போகிறோம் என்று பயம் வந்தது.

மற்றபடி தமிழக உணவு அரிசி சாப்பாடு எல்லாம் பழகிப்போன பிறகு இனி அங்கே போய் சப்பாத்தியும். கோதுமை ரொட்டியும் சாப்பிடக் கிடைக்கும் என்று நினைக்கும் போது கொஞ்சம் அதிரச்சியாகத்தான் இருந்தது.

மற்றபடி கேசவனுக்கு அம்மா, அப்பா, தம்பி, தங்கையரை இங்கேயும் பிரித்திருப்பது போல ஜெய்ப்பூருகுப் போனாலும் பிரிந்திருக்க வேண்டியதுதான்.

கொடியில் தொங்கிய துணிகளை எடுத்து சூட்கேசில் வைக்கத் துவங்கியபோது மத்தியானம் தம்பி போன் பண்ணிய ஞாபகம் வந்தது. அவன் ஸ்கூலில் பிக்னிக் போகிறார்கள். அதற்கு பணம் அனுப்ப வேண்டும். கண்டிப்பாகச் செய்ய வேண்டும்

நான் கல்லூரியில் படிக்கும்போது இருக்கின்ற சின்ன நிலத்திலுள்ள வருவாயை வைத்துக் கொண்டு அம்மா பட்டினி கிடந்து என்னை படிக்க வைத்தாள். அப்பா நோயாளியாக இருந்த பிறகும் எனக்கு எப்போதும் புத்தாடை, நல்ல உணவு என என்னைப் பேணி பாதுகாத்தார். அவர்களுக்கு திரும்ப நன்றி கடன் செய்ய வேண்டும்.

இருந்த நிலமும் இந்த வேலை கிடைப்பதற்காக விற்று விட குடும்பம் முழுவதும் என் வருமானத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறது. இரண்டு தங்கைகளும் கல்யாணத்திற்கு தயாராகி விட்டார்கள்.

இந்த நெய்வேலிச் சுரங்கத்தில் வேலை பார்க்கும் வரை பகுதி நேர வேலை செய்ததில் தங்கைக்கு கொஞ்சம் கொஞ்சமாக தங்கம் சேர்க்க முடிந்தது. இங்கே கொஞ்சம் பைனான்ஸ் செய்து தினப்படி வசூலுக்கு போய் வர முடிந்தது.

இனி ஜெய்ப்பூரில் அதெல்லாம். முடியாது. இந்த எக்ஸ்ட்ரா வருமானம் போனால் என்ன செய்ய முடியும்?

மூத்த தங்கை பிரபாவிற்கு இந்த மே லீவில் திருமணம் செய்து விட வேண்டும் என்று முழு மூச்சில் பணம் பெருக்கும் சூழ்நிலையில் இருந்தபோது இப்படி ட்ரான்ஸபார் ஆர்டரைக் கொண்டு நீட்டுகிறார்கள்.

மானேஜரையும் சேர்மனைவும் கெஞ்சி கூத்தாடி பார்த்தாகி விட்டது. “யாரும் ஜெயப்பூருக்கு போக மறுக்கிறார்கள். சீனியாரிட்டி பிரகாரம் நீதான் போக வேண்டும். உனக்குப் பதவி உயர்வு தந்து தானே அனுப்புகிறோம்” என்கிறார்கள் என்று எண்ணிக்க கொண்டிருந்தவனை அறைக்குள் ஏதோ நிழலாட எண்ணங்களை கலந்து எட்டிப் பார்த்தான் கேசவன்.

“என்ன, கறுப்புத் தங்கம் ஊருக்கா?” என்றாள் பத்மா கொலுசு ஜிலு ஜிலுக்க.

பெருமூச்சு விட்டவாறு, “பத்மா எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன். நான் கறுப்பாக இருந்தாலும், தங்கம்தான் என்று என்னை அம்மாதான் இப்படி கூப்பிடுவார்கள். நீயுமா?” என்றான் கேசவன்.

“கேசவன்… எனக்கும் நீங்கள் தங்கம்தானே. அதனாலே கறுப்பாக இருக்கிற உங்களை கறுப்புத் தங்கம்னு கூப்புடுகிறதிலே என்ன தப்பு?”

“வீண் ஆசைகளை வளர்த்துக் கொண்டிருக்கிறாய் என்று உன்னிடம் எத்தனையோ தடவை சொல்லி விட்டேன். எத்தனையோ தடவை இது தவறு என்றும் சொல்லிவிட்டேன். இனி உன் விருப்பம்.”

“கேசவன், உங்களுக்கு உணர்ச்சியே கிடையாதா? ஜடமா… இல்லை மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியாதவரா?”

“…”

“ஏன் பதில் சொல்ல மறுக்கிறீர்கள். என் மேல் கோபமா?”

திரும்பவும் பெரிதாக பெருமூச்சி விட்ட கேசவன், “பத்மா என்னைப் பற்றி, என் குழ்நிலைகளைப் பற்றி, என் குடும்ப நிலையைப் பற்றி உனக்கு ஆயிரம் முறை விளக்கம் சொல்லியாகி வீட்டது. இன்னமும் புரிந்து கொள்ள மறுப்பது நீ தான்” என்றான்.

“என்ன சொல்ல வருகிறீர்கள்? உங்கள் குடும்ப குழ்நிலைக்காக நீங்கள் திருமணமே செய்யப் போவதில்லையா? திருமணம் என்ற கட்டம் வரும் போது என்னை உங்கள் துணையாக நினைவு படுத்திக் கொள்ளுங்கள் என்றுதானே சொல்கிறேன்.”

“வீண் விதண்டாவாதம் பத்மா.. மெழுகுவர்த்தி எரிந்தால் தான் ஒளி கொடுக்க முடியும். ஒரு சிலர் தங்கள் வாழ்க்கையைத் தியாகம் செய்தால்தான் மற்றவருடைய வாழ்க்கைக்கு ஒளி கிடைக்கும்.”

“நீங்கள் திருமணமே செய்து கொள்ளப் போவதில்லையா?”.

“இன்னும் அதைப் பற்றி யோசிக்கவே இல்லை. பார்… நீ அடுத்த வீட்டுப் பெண். அம்மா ஏதாவது தப்பா நினைக்கப் போகிறார்கள்..போய் விடு”

“அவர்கள் தப்பாக நினைக்க வேண்டும் என்பதற்காகத்தானே நான் இங்கே வருகிறேன்” என்றாள் பத்மா கோபத்துடன்.

சப்தமாகத் சிரித்த கேசவன், “இந்தப் பிரச்சினைக்கெல்லாம் சேர்த்து முடிவு காட்டத்தான் என்னை ஜெய்ப்பூருக்குப் சொன்னார்களோ என்னவோ” என்றான்..

“என்னது… ஜெய்பூருக்கா?”

“ஆமாம் நான் சாயங்காலம் ஜெய்ப்பூருக்கு கிளம்புகிறேன். எனக்கு மாற்றல் வந்திருக்கிறது. ஆறு வருடங்களுக்கு முன் கறுப்புத் தங்கம் வெட்டி எடுக்க நெய்வேலி வந்தபோது எனக்கென்று ஒதுக்கிய வீடு இது. இன்றைக்கு சாயங்காலத்திற்குள் காலி செய்யச் சொல்லி விட்டார்கள்” என்று டிராசன்ஸ்பர் ஆர்டரை எடுத்து அவள் கையில் கொடுத்தான்.

கொஞ்சம் அதிர்ச்சியுடனே கடிதத்தை வாங்கி வாசித்துப் பார்த்தவள் “ஏன் கேசவன் முன்னாலேயே என்னிடம் சொல்லவில்லை” என்று கேட்டாள்.

“வீணாகக் கோபப்படாதே பத்மா. நான் ஒற்றைக் குதிரை வண்டியாகவே பயணப்பட விரும்புகிறேன். என் குடும்பப் பாரத்தை என்னால் தனியாகத்தான் இழுக்க முடியும். உன்னையும் அதிலே இணைத்து வீணாக சுமையைச் சுமக்க வைப்பதில் எனக்குச் சம்மதமில்லை.”

இடுப்பிலே தையை வைத்துக் கொண்டு “இன்னும் திரும்பத் திரும்ப நீங்கள் என்னைப் பிரித்து பார்க்கிறீர்கள் கேசவன். அதுதான் மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது. நான் இந்த ஆறு வருட பழக்கத்திலே வந்த எத்தனையோ மாப்பிள்ளைகளை வேண்டாம் என்று வெறுத்து விட்டு உங்களுக்காக காத்திருக்கும் போது என்னை அம்போ என்று விட்டு விட்டுப் போகிறீர்களே…என்னையும் ஜெய்ப்பூருக்கு கூட்டிக் கொண்டு போகிறீர்களா?”

“எமோஷனலாகவே எப்போதும் பேசுகிறாயே! ப்ராக்டிக்கலாக உலகத்தை பார்க்கக் கற்றுக்கொள்” என்று பெட்டியை மூடிவிட்டு ‘கமான் கிளம்பு’ என்று வெளியே வந்து கதவையும் மூடி விட்டு சாவியை பத்மாவிடம் கொடுத்து, “எங்கள் சூப்பர்வைசர் வருவார். அவரிடம் சாவியைக் கொடுத்து விடச் சொல்” என்று கூறி விட்டு வழியில் வந்த ஆட்டோவைக் கூப்பிட்டான்.

கேசவன் பெட்டியை ரிக்ஷாவில் வைத்து விட்டு நிமிர்ந்த போது, எதிரில் நின்ற பத்மா கேட்டாள், “எனக்கு நீங்கள் இன்னும் பதில் சொல்லவில்லை கேசவன்” என்று விம்மலோடு

“சே! அழாதே. டிரைவர் தப்பாக நினைக்கப் போகிறான். என்ன பதில் எதிர்பார்க்கிறாய்?”

“உங்கள் குடும்பச்சுமையை நானும் பகிர்ந்து கொள்கிறேன். என்னை உங்கள் துணையாக ஏற்றுக்கொள்ளுங்கள் என்று.”

“பத்மா நான் இன்னும் திருமணத்தை பற்றி யோசிக்கவே இல்லை. எனக்கு கல்யாணம் ஆனால், என் மனைவிக்கு பூ வாங்க வேண்டும். சேலை வாங்க வேண்டும். தங்க நகை வாங்க வேண்டும். குழந்தை பிறந்தால் அதிக செலவு… நான் முதலில் என் குடும்ப பாரத்தைக் குறைக்க வேண்டும்…”

“வேண்டாம் என்று சொல்லவில்லை. என் கறுப்புத் தங்கம் கேசவனுக்குத் திருமணம் என்று இருந்தால் இந்த பத்மாவோடு தான் என்று மட்டும் பிராமிஸ் பண்ணினால் போதும்.”

“வீணாக நீ ஏன் காத்திருக்க வேண்டும். உன் இளமையை ஏன் வீணடிக்க வேண்டும்?”

“என் கனவுகள் என்னோடு, திருமணம் என்றால் என்னோடுதான் என்று மட்டும் எனக்கு உறுதி கொடுங்கள்.”

“பத்மா என்னிடம் என்ன கண்….”

அவன் முடிப்பதற்குள் அவன் வாயைப் பொத்தியவள் அவன் வலக்கையை எடுத்து தலை மேல் வைத்து “ம்…ம்….” என்றாள் அழுத்தமாக.

“ஓ.கே. எனக்கு திருமணம் என்று ஒன்று இருந்தால் அது உன்னோடுதான்” என்றவாறு ஆட்டோவில் ஏறி அமர்ந்தான் கேசவன்.

“காத்திருக்கிறேன்” என்றவாறு டாடா காட்டினாள் பத்மா.

எழுத்தாளர் இரஜகை நிலவன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    வீடு! (சிறுகதை) – இரஜகை நிலவன்

    காதலாகிக் கசிந்துருகி… (சிறுகதை) – இரஜகை நிலவன்