sahanamag.com
சிறுகதைகள்

காதல் ❤ (சிறுகதை) – எழுதியவர் : சஹானா கோவிந்த்  

“எனிதிங் எல்ஸ் சார்?” என பேரர் கேட்க, கேள்வியாய் மகனைப் பார்த்தார் சதீஷ் 

“ரெண்டு ஐஸ்கிரீம் சாப்டாச்சு…. அயம் டன் டாடி” என்றான் சித்தார்த் 

“ஒகே… பில் ப்ளீஸ்” என்றார் சதீஷ்

பேரர் நகரவும், “சித்து… மம்மி ஆபீஸ்ல இருந்து வர லேட்டாகும் போலிருக்கு, நாம அப்படியே கொஞ்ச நேரம் பீச்ல சுத்திட்டு அப்புறம் போய் மம்மிய பிக்கப் பண்ணிக்கலாமா?” எனவும்

“ஒகே டாடி” என உற்சாகமாய் தலையசைத்தான் சித்தார்த்

காரில் ஏறியதும், வழக்கம் போல் சித்தார்த் தந்தையிடம் அரட்டை அடித்துக் கொண்டே வந்தான். கடற்கரை வந்து சேர்ந்ததும், காரை பார்க் செய்து விட்டு தந்தையும் மகனும் இறங்கி நடந்தனர் 

சிறிது நேரம் மணலில் கால் புதைய நடந்தபின், “கொஞ்ச நேரம் உக்காரலாம்” என மணல் திட்டில் அமர்ந்தார் சதீஷ் 

அருகே அமர்ந்தவன், “டாடி, இந்த வருஷம் ஜோனல் புட்பால் மேட்சுக்கு வர்றயானு இன்னிக்கி சார் கேட்டாரு. டெய்லி ஈவினிங் ஸ்கூல் முடிஞ்சு ஒன் ஹவர் ப்ராக்டிஸ் இருக்கும், போகட்டுமா டாடி?” என எதிர்ப்பார்ப்புடன் மகன் கேட்க

“இதெல்லாம் ஹோம் மினிஸ்டர் உன் மம்மியோட டிபார்ட்மென்ட், பெட்டிசன் போட்டு பாப்போம்” என சிரித்தார் சதீஷ் 

“ஒருவேள மம்மி வேண்டாம்னு சொன்னா?” என பாவமாய் கேட்க

செல்லமாய் பிள்ளையின் தலையை கலைத்தவர், “நாம ரெண்டு பேரு சேந்து மம்மிய கன்வின்ஸ் பண்ண முடியாதா சித்து? சியர் அப்” என உற்சாகப்படுத்தியவர், “ஆனா, டெர்ம் எக்ஸாம்ல மார்க் கம்மியாகாதுனு நீ ப்ராமிஸ் பண்ணனும்” என்றார் பொறுப்புள்ள தந்தையாய்

“ச்சே ச்சே… அதெல்லாம் ஆகாது டாடி” என்றான் தந்தையின் ஆதரவு கிடைத்த மகிழ்ச்சியில் 

அதன் பின் சற்று நேரம் அமைதியாய் இருந்தான் சித்தார்த். ஏதோ பேச நினைத்து தயங்கிக் கொண்டிருக்கிறான் என புரிந்த போதும், அவனே ஆரம்பிக்கட்டும் என மௌனம் சாதித்தார்  சதீஷ் 

‘சில நாட்களாகவே அவன் ஏதோ யோசனையில் இருப்பது போலவே இருக்கிறான்’ என முன்தின இரவு மனைவி கூறியதும்

‘தானும் அதை கவனித்து கொண்டு தான் இருக்கிறேன்’ என்றவர், மனம் விட்டு பேச வைக்கவே, மகனை வெளியே அழைத்து வந்தார்

அவர் எதிர்பார்த்தது போலவே பேச்சை ஆரம்பித்த சித்தார்த், “டாடி…” என தயக்கமாய் நிறுத்த 

“என்ன சித்து?” என இயல்பாய் கேட்பது போல் கேட்டார் 

“அது…” 

“சித்து கண்ணா, நான் உனக்கு டாடி மட்டுமில்ல, பெஸ்ட் பிரெண்ட்னு உனக்கே தெரியும். என்கிட்ட பேசறதுக்கு ஏன் இவ்ளோ யோசிக்கற?” என சிநேகமாய் புன்னகைக்க 

“அது வந்து டாடி… உங்ககிட்ட ஒண்ணு சொல்லணும், திட்ட மாட்டீங்க தான?” என்றான் இன்னும் தயக்கமாய் 

“நோ ப்ராப்ளம், சொல்லு” என்றார் 

“டாடி, நான் ஒரு பொண்ண லவ் பண்றேன்” எனவும், தலைசுற்றி மயங்கி விழுந்து விடாமல் இருக்க, தன்னை நிதானப்படுத்திக் கொண்டார் சதீஷ்

பள்ளியில் சக மாணவர்களுடன் ஏதேனும் மோதலாய் இருக்கும், சமாதானம் செய்தால் சரியாகி விடுவான் என்ற யோசனையுடன் தன்னை தயார்படுத்தி கொண்டிருந்தவர், இப்போது என்ன செய்வதென புரியாமல் விழித்தார்

மகன் தன் கண்ணுக்கு இன்னும் சிறு பிள்ளையாய் தெரிந்தாலும், பதின்ம வயதின் தொடக்கத்தில் இருக்கிறான் என்பது அப்போது தான் மனதில் உறைத்தது.

பதிமூன்று வயதில் காதலா என மனதில் கோபம் எழுந்த போதும், இதை சரியாய் கையாள வேண்டுமென உள்மனம் எச்சரிக்கை விடுத்தது

“ம்… யாரு அந்த பொண்ணு?” என முடிந்தவரை தன்னை இயல்பாக்கிக் கொண்டு புன்னகையுடன் கேட்டார் 

“அது… என் க்ளாஸ்ல ஸ்வேதானு…” என ஒரு கணம் நிறுத்தியவன்

பின் உற்சாகமாய், “வெரி ஸ்வீட் கேர்ள் டாடி. நான் லாஸ்ட் மன்த் பீவர்னு லீவ் எடுத்தப்ப அவ தான் எனக்கு க்ளாஸ் நோட்ஸ் எல்லாம் குடுத்து ஹெல்ப் பண்ணினா” என்றான், ஏதோ உலகத்தையே வென்று விட்ட மகிழ்ச்சியில் 

“க்ளாஸ் நோட்ஸ் குடுத்தா லவ்வா டா… ஹ்ம்ம்” என மனதிற்குள் பெருமூச்சுவிட்டவர்

“அப்படியா? வெரி நைஸ். அது சரி, அந்த பொண்ணும் உன்னை லவ் பண்றாளா?” என சக தோழனிடம் கேட்பது போல் கேட்டார் 

“ம்…அது தெரில டாடி. அது எப்படி டாடி கண்டுபுடிக்கறது?” என்றான் குழப்பமாய் 

“அடப்பாவி… பெத்தவன்கிட்ட கேக்கற கேள்வியாடா இது? பெரிய பெரிய மேதைகளே பொண்ணுங்க மனசை புரிஞ்சுக்க முடியாம நொந்து போய் இருக்காங்க, பதிமூணு வயசுல இந்த ஆராய்ச்சி உனக்கு தேவையா?” என மனதில் தோன்றிய போதும்

“க்கும்… அது வந்து சித்து கண்ணா…” என பேச்சை முடிப்பதற்குள் 

“அவளும் என்னை லவ் பண்றானு தான் தோணுது டாடி” என்றான் சித்தார்த் உறுதியாய் 

“ஓ… சரி, இப்ப என்ன பண்ணலாம்னு இருக்க” என்றார் அவன் மனதை அறிந்து கொள்ளும் முயற்சியில் 

“ம்… அது… நாளைக்கு வேலண்டைன்ஸ் டே இல்லையா டாடி… அவகிட்ட ப்ரபோஸ் பண்ணலாம்னு இருக்கேன்” 

“ஐயோ” என மனதில் எழுந்த ஓலத்தை அடக்கியவர் “ஓ, சரி… அப்புறம்?” என்றார் கேள்வியாய் 

“அப்புறம்… அ….என்ன டாடி கேக்கறீங்க?” என்றான் கேள்வி புரியாமல் 

“இல்லடா கண்ணா, இப்ப நீ ப்ரபோஸ் பண்ற, அவ ஒகே சொல்றா, லவ் பண்றீங்க, அப்புறம்?” என கூர்மையாய் மகனை பார்த்தபடி கேட்க 

“அ… அப்புறம்…” என விழித்தான் 

“இப்பவே கல்யாணம் பண்ணிக்க முடியுமா?” 

“அதெப்படி டாடி… படிச்சு முடிச்சு… வேலைக்கு போயி அப்புறம் தான… கரெக்ட் தான டாடி?” என்றான் குழப்பமாய்

“ரெம்ப கரெக்ட். அதுக்கு இன்னும் எப்படியும் பத்து பன்னண்டு வருசமாச்சும் ஆகும், கரெக்டா?” எனவும் , ஆமோதிப்பது போல் தலையசைத்தான் 

தோழமையுடன் மகன் தோளில் கை போட்டவர், “சித்து, நான் சொல்றதை நீ கொஞ்சம் பொறுமையா கேப்பியா இப்போ?” என தந்தை கேட்க, மௌனமாய் தலையசைத்தான் சித்தார்த் 

“லவ் பண்றது தப்புனு நான் சொல்லல. ஆனா இப்ப அதுக்கான டைமில்ல….”

“ஆனா டாடி…” என இடைமறிக்க 

“நான் பேசி முடிச்சுடறேன் ப்ளீஸ்” எனவும் 

“ஒகே டாடி” என்றவனின் முகம் குற்றஉணர்வுடன் தாழ்ந்தது 

அது பெற்றவரின் மனதை வருத்த, “சித்து, மொதல்ல நீ ஒண்ணு புரிஞ்சுக்கணும், நீ எந்த தப்பும் செய்யல. இந்த வயசுல இது இயல்பு தான். ஆனா புத்திசாலித்தனமா இந்த கட்டத்தை கடந்து வர்றவங்க லைப்ல சக்சஸ் ஆகறாங்க. தப்பான கைடன்ஸ்னால யோசிக்காம முடிவு எடுக்கறவங்க பின்னாடி பீல் பண்றாங்க, புரியுதா?” என நிறுத்தினார் 

“ம்…” என்றவனின் குரலில் இருந்தே, தான் சொன்னதை அவன் முழுதும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது புரிய, தொடர்ந்தார் சதீஷ் 

“இப்ப நான் ஒண்ணு கேக்கறேன் உண்மையா பதில் சொல்லு. உன் மனசுல இந்த மாதிரி தோண ஆரம்பிச்சபுறம் உனக்கு க்ளாஸ்ல கான்சென்ட்ரேசன் குறைஞ்சுருக்குனு நீ ஒத்துக்கறயா?”

“அது…” என சித்தார்த் மெளனமாக 

“பீ ஹானஸ்ட் கண்ணா, டாடிகிட்ட தான சொல்ற” எனவும் 

“எஸ் டாடி… அயம் டிஸ்டர்ப்ட்” என்றான் மனதை மறைக்காமல்

“தட்ஸ் குட். இந்த அளவுக்கு நீ ரியலைஸ் பண்றதே கிரேட்” என அவன் தோளில் தட்டியவர்

“அப்படி படிப்பு பாதிச்சா உன்னோட எதிர்காலமே வீணாயிடுமில்லையா சித்து. நீ அப்படி சக்சஸ் ஆகாம போய்ட்டா, இப்ப ஒகே சொல்ற ஸ்வேதாவுக்கே கூட அப்புறம் உன்னை பிடிக்காம போய்டலாம். அது ரெம்ப ரிஸ்க் இல்லையா?” என அவன் வீக் பாய்ண்டை பிடிக்க, அதிர்ச்சியாய் பார்த்தான் சித்தார்த்

“சோ, அதுக்குத் தான் சொல்றேன். இப்ப படிப்புல மட்டும் கவனம் செலுத்து. லைப்ல உனக்குனு ஒரு லட்சியம் வேணும் சித்து, டாக்டர் ஆகணும் லாயர் ஆகணும்னு நான் சொல்லல்ல. இப்ப நீ புட்பால் நல்லா விளையாடறேனு தானே உங்க சார் ஜோனல் மேட்சுக்கு கூப்ட்டார், அதுவே கூட உன்னோட எதிர்காலமா இருக்கலாம். இல்ல இன்னும் பெரிய க்ளாஸ் போகும் போது உன்னோட இண்டரெஸ்ட் வேற எதுலயாச்சும் போகலாம், அதுல நீ உனக்குனு ஒரு இடத்த புடிக்கணும். அதான் இப்ப உன்னோட மனசுல இருக்கணும். டூ யு அக்ரீ சித்தார்த்?” என கேள்வியாய் நிறுத்த 

ஒரு கணம் யோசனையுடன் பார்த்தவன், பின் “எஸ் டாடி” என்றவனின் முகத்தில் தெளிவு பிறந்திருந்தது 

“யு நெவர் நோ சித்து… பின்னாடி நீ பெரிய ஆளா ஆனப்புறம் இந்த ஸ்வேதாவே உன்னை தேடி வரலாம்” என சிரிப்புடன் கூற, சித்தார்த்தின் புன்னகை விரிந்தது 

“இப்ப தான் சிரிப்பு வருதா?” என சதீஷ் கேலி செய்ய

உடன் சேர்ந்து சிரித்தவன், பின் சலுகையாய் தந்தையின் தோளில் சாய்ந்து கொண்டு “தேங்க்ஸ் டாடி” என்றான் 

“டாடிக்கே தேங்க்ஸா?” என சிரித்தவர்

கைப்பேசி இசைக்க, “உஷ்…. ஹோம் மினிஸ்டர் காலிங்” என பயந்த பாவனை காட்டி செல்போனை உயர்பித்து, “சொல்லு சரண்” என்றார் 

“எங்க இருக்கீங்க ரெண்டு பேரும்? என்னை பிக்கப் பண்ற ஐடியா இருக்கா இல்லையா?” என்றாள் சதீஷின் மனைவி சரண்யா 

“ம்… கண்டிப்பா பிக்கப் பண்ணனுமா? இரு சித்துகிட்ட கேக்கறேன். சித்து, கண்டிப்பா மம்மிய பிக்கப் பண்ணியே ஆகணுமா?” என கண்ணடித்து சிரிக்க 

“யோசிச்சு சொல்றேன் டாடி, மறுபடி கால் பண்ணச் சொல்லுங்க” என்றான் சித்தார்த் சிரிப்பை அடக்கியபடி 

“உங்க ரெண்டு பேருக்கும் இன்னைக்கி டின்னர் செய்யணுமா வேண்டாமானு நானும் யோசிச்சு சொல்றேன்” என சரண்யா வம்பாய் கூற 

“ஐயையோ… என்ன சரண் இப்படி எல்லாம் ப்ளேக்மெயில் பண்ற. இதோ வந்துட்டோம் பை” என எழுந்தபடி செல்போனை அணைத்தார் 

ன்றிரவு தனிமையில் மனைவியிடம் “சரண் உனக்கு ஒரு மேட்டர் தெரியுமா? நம்ம பையன் ஒரு பொண்ணை லவ் பண்றனாம்” எனவும்

“என்னது?” என அதிர்ச்சியாய் எழுந்து அமர்ந்தாள் சரண்யா

பின் நடந்ததை முழுதும் கூற, பெருமூச்சுடன் கணவனின் தோளில் சாய்ந்தாள். ஆனாலும் முழுதும் அதிலிருந்து மீள இயலாமல் யோசனையுடன் இருந்தாள் 

“அவன் லவ் பண்றேன்னு சொன்னதும் என் மூஞ்சிய நீ பாத்திருக்கணுமே… நம்ம கல்யாணதன்னைக்கி கூட நான் அவ்ளோ அதிர்ச்சியானதில்ல யு நோ” என கேலியாய், மனைவியை இயல்பாக்க முயன்றார் சதீஷ் 

அவரின் எதிர்பார்ப்பை வீணாக்காமல் கணவனை முறைத்தாள் சரண்யா

“சரி நோ டென்சன்” சமாதானமாய் சிரித்த சதீஷ்

“கொடுமையப் பாரேன் சரண், நாமெல்லாம் காலேஜ் வந்தப்புறம் கூட, லவ் அது இதுனு யோசிக்க பயப்படுவோம், அப்படியே இருந்தாலும் அப்பா அம்மாகிட்ட மூச்சு விடுவமா. இவன் எவ்ளோ கூலா சொன்னான் தெரியுமா? ஒரு நிமிஷம் நான் அப்படியே ஆடிப் போயிட்டேன்” என்றார்

“கரெக்ட் தாங்க, ரெம்பவும் மாறி தான் போச்சு. ஆனா, இது ஒரு வகைல நல்லதோனு தோணுது. வேற பிரெண்ட்ஸ் யார்கிட்டயாச்சும் இதை பத்தி அவன் பேசியிருந்தா, கண்டிப்பா தப்பா தான் கைட் பண்ணி இருப்பாங்க, அவங்க வயசு அப்படி. உங்ககிட்ட சொன்னதால நல்லதா போச்சு இல்லையா?” என்றாள் 

“வாஸ்தவம் தான் சரண்… குறிப்பிட்ட வயசுக்கப்புறம் கொழந்தைகள அடிச்சு மெரட்டி நல்வழிபடுத்தறத விட, இந்த பிரெண்ட்லி அப்ரோச் தான் நல்லதுனு தோணுது. அம்மா அப்பாகிட்ட என்ன வேணா பேசலாம்னு சுதந்திரம் இருந்தா, அவங்க ஏன் வேற யார்கிட்டயோ போகப் போறாங்க. நிறைய பேரண்ட்ஸ் இதை புரிஞ்சுக்காம தப்பு செய்யறாங்களோனு தோணுது”

“ஆமாங்க, அதுவும் இந்த ஜெனெரேசனுக்கு சொசைட்டி, மீடியா, பிரெண்ட்ஸ்’னு நிறைய எக்ஸ்போஷர் இருக்கு, அவங்க இன்ப்ளூயன்ஸும் இருக்கு. சோ, நம்ம பெத்தவங்க நம்மள வளத்தினத விட, நம்ம கொழந்தைங்கள வளக்கறது இன்னும் சவாலா தான் இருக்கு. பட் அயம் ரியலி ப்ரௌட் ஆப் யு, எவ்ளோ அழகா இந்த விசயத்த ஹேண்டில் பண்ணியிருக்கீங்க. நான் கூட டென்ஷனாகி இருப்பேன்னு நெனக்கிறேன்” என்றாள் மனதில் தோன்றியதை மறைக்காமல்

“ஹும்… இப்பவாச்சும் என் அருமை பெருமையெல்லாம் புரிஞ்சா சரி தான்” என சதீஷ் கண் சிமிட்டி சிரிக்க

“ரெம்பத்தான்…” என பழித்தாலும், பெருமிதத்துடன் கணவனை பார்த்தபடி தானும் சேர்ந்து சிரித்தாள் சரண்யா ❤

இந்த சிறுகதை, சஹானா கோவிந்த்’ன் “கண் பேசும் வார்த்தைகள்”  என்ற சிறுகதைத் தொகுப்பில் உள்ளது. அந்த புத்தகத்தில் உள்ள அனைத்து சிறுகதைகளையும் வாசிக்க விரும்புவோர், கீழே கொடுத்துள்ள இணைப்பின் (Link) மூலம் பெற்றுக் கொள்ளலாம். நன்றி 

https://amzn.to/376t3eO

(முற்றும்)

#ad

           

        

        

Similar Posts

2 thoughts on “காதல் ❤ (சிறுகதை) – எழுதியவர் : சஹானா கோவிந்த்  
  1. இந்தக்காலத்துக்கு அதுவும் இன்றைய தினத்துக்குத் தேவையான கதை. அழகான நடையில் சிறப்பாக எழுதி இருப்பதற்கு வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!