2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
அத்தியாயம் 1 அத்தியாயம் 2 அத்தியாயம் 3 அத்தியாயம் 4
அத்தியாயம் 5 அத்தியாயம் 6 அத்தியாயம் 7 அத்தியாயம் 8
தங்களை நோக்கி சூம்பிய கால்களை இழுத்துக் கொண்டு முருகனும், அவன் தோளைப் பற்றிக் கொண்டு பார்வையில்லாத சத்தியவேந்தனும் வருவதைப் பார்த்த கோபியின் நண்பன், “தல… அங்க பாருங்க… அந்த ரெண்டும் நம்மை நோக்கித்தான் வருதுக” என்றான்.
நிதானமாய் தலையைத் திருப்பிப் பார்த்த கோபி, “வரட்டும்… வரட்டும் அன்னிக்குக் குடுத்த அடியும் உதையும் போதலை போலிருக்கு அதான் மீதியை வாங்கிட்டுப் போக வர்றானுக” என்றான்.
இருவரும் அருகில் வந்ததும், “டேய்… என்னடா?… என்ன வேணும் உங்களுக்கு?” ஒருவன் அதட்டலாய்க் கேட்க,
“எங்களுக்கு ஒண்ணும் வேண்டாம்ண்ணா… உங்களை சாப்பிடக் கூப்பிடத்தான் வந்தோம்” என்றான் முருகன் அண்ணாந்து கோபியைப் பார்த்தபடி.
அவன் கண்களில் வீசிய அன்பு வெளிச்சம் கோபியின் மனதிற்குள் ஏதோவொரு மாற்றத்தை உருவாக்க, “இதென்ன இந்தப் பசங்க எங்களை சாப்பிடக் கூப்பிடறானுக?… ஒருவேளை அன்னிக்கு இவனுகளை உதைச்சு… பணத்தையெல்லாம் பிடுங்கிட்டுப் போனது நான்தான்னு தெரியலையோ?”. யோசித்தான்.
அதுவரையில் லேசாய்த் தூறிக் கொண்டிருந்த வானம் திடீரென்று அதீத வேகத்தில் “பட…பட”வென்று பொழியத் துவங்க, “அண்ணே வாங்கண்ணே உள்ளார போயிடலாம்…” சொல்லியவாறே முருகன் கோபியின் கையைப் பற்ற, அந்தத் தொடுதல் கோபியின் நரம்புகளில் இதுவரையில் அனுபவித்திராத ஒரு புத்துணர்ச்சியை அறிமுகப்படுத்தி விட, நெகிழ்ந்து போய், தன் சகாக்களைப் பார்த்து, “ம்… வாங்கடா உள்ளார போகலாம்” என்றான்.
முருகனுடன் இழுத்த இழுப்பிற்கு சற்றும் முரண்டு செய்யாமல் மெல்ல நடந்தான் கோபி.
மற்றவர்களும் அவனைப் பின் தொடர, பார்வையில்லாத சத்தியவேந்தன் வேறொரு திசையில் தட்டுத் தடுமாறி நடக்க, “டேய்… தங்கா… அந்தப் பையனைக் கையைப் பிடிச்சுக் கூட்டிட்டு வாடா” என்றான் கோபி.
மழை வேகமாய்ப் பெய்ய, ஈர மண்ணில் தன் சூம்பிய கால்களை இழுத்தபடி நடக்க முருகன் மிகவும் சிரமப்பட, சற்றும் யோசிக்காமல் குனிந்து அவனைத் தூக்கிக் கொண்டு அலட்சியமாய் நடந்தான் கோபி.
ஒரு தந்தையின் தோள் மீதி பயணிக்கும் சுகத்தை அந்தச் சிறு உள்ளம் அந்தக் கணம் அனுபவித்தது.
ஆறுமுகம் சன்னக் குரலில், “பார்த்தீங்களா?… இதுதான் அன்போட மகிமை” என்று சொல்ல, வாட்ச்மேன் வடிவேலுவும், டிரைவர் டேவிட்டும் அதை ஆமோதிப்பது போல் சன்னமாய்த் தலையாட்டினர்.
அவர்கள் அருகில் வந்ததும், “வாங்க கோபி சார்” என்று ஆறுமுகம் புன்னகை முகத்தோடு வரவேற்க,
“கோபி சாரா?… நான் சாரா?…”இதுவரையில் அவனை யாருமே “சார்” என்று அழைத்திராத காரணத்தால் கோபி மிரண்டு போனான்.
“கோபி சார்… இப்போதைக்கு இந்த இல்லத்துல கிட்டத்தட்ட நூறு பேர் வந்து இறங்கியிருக்காங்க!… இருநூறு பேர் வந்தாலும் அவங்களுக்கும் சாப்பாடு கொடுக்க போதுமான அளவுக்கு எல்லாப் பொருட்களையும் ஹெட் ஆபீஸிலிருந்து ஹெலிகாப்டர் மூலமா கொண்டு வந்திட்டேன்!… ஊருக்குள்ளார எங்கெங்கே ஜனங்க வெள்ளத்துல சிக்கி சாப்பாடு இல்லாம… தண்ணி இல்லாமத் தவிக்கறாங்க!ன்னு சொல்லுங்க… படகு மூலமா அவங்களையும் இங்கே மீட்டுட்டு வந்திடலாம்” அவனையும் தங்களோடு சேர்த்துக் கொள்ளும் சிநேகித தொணியில் ஆறுமுகம் பேச,
கோபி பெரும் வியப்பிற்குள்ளானான். “என்னது… நான் இந்த இல்லத்திற்கும்… இங்கிருக்கற ஊனமுற்றவர்களுக்கும் எத்தனையோ கெடுதல்கள் செய்திருக்கேன்… ஆனா இவங்க எல்லோருமே அதைச் சுத்தமா மறந்திட்டு என் கூட தோழமையோடு பேசறாங்களே… எப்படி?”
“அது… வந்து…” உடனே பதில் சொல்ல முடியாமல் கோபி திணற,
“ஆறுமுகம் சார்… மொதல்ல அவங்களுக்கு வயித்துக்கு ஏதாச்சும் குடுப்போம்… அப்புறமா இதைப் பத்தியெல்லாம் பேசுவோம்” என்றான் முருகன் கோபியின் தோள்களிலிருந்து இறங்கியபடி.
“ஆமாம்… ஆமாம்… பாவம் இவங்க சாப்பிட்டு எத்தனை நாளாச்சோ?” என்று வாட்ச்மேன் வடிவேலுவும் சொல்ல,
அவன் முகத்தை உற்றுப் பார்த்தான் கோபி. அன்றொரு நாள் அம்மனுக்குக் கூழ் ஊத்துவதற்காக வசூலுக்கு வந்த போது, தான் அவரை உதைத்துக் கீழே தள்ளிய காட்சி கோபியின் கண்களுக்கு விரிய, வெட்கித் தலை குனிந்தான் அவன்.
அவர்கள் அனைவரையும் உணவு பரிமாறப்படும் இடத்திற்கு அழைத்துச் சென்றார் ஆறுமுகம்.
அந்தப் பெரிய ஹாலில் அடைக்கலமாக வந்திருந்த மக்கள் தரையில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருப்பதை வைத்த கண் வாங்காமல் பார்த்த கோபிக்கு மனம் வலித்தது.
அந்த மக்களுக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்த இல்லத்தின் சமையல்காரி சரஸ்வதி, எதேச்சையாய்த் திரும்பும் போது ஆறுமுகத்துடன் நின்றிருந்த ரவுடி கோபியைப் பார்த்ததும் முகம் மாறினாள்.
அவள் முகத்தில் கோப அலைகள் சுனாமி அலைகளாய் எழும்பின. அவள் கண்களில் அக்கினிக் குழம்பு எரிமலைக் குழம்பாய்த் தகித்தது.
தன் கையிலிருந்த பாத்திரத்தை தரையில் “ணங்”கென்று வைத்து விட்டு, அங்கிருந்து நகர்ந்து, சமையல்கட்டை நோக்கிச் சென்றாள்.
சென்றவள் அடுத்த இரண்டாம் நிமிடமே புயலாய்த் திரும்பி வந்து, உணவருந்திக் கொண்டிருந்த மக்களுக்கு குடிநீர் பரிமாறிக் கொண்டிருந்த அந்தப் பத்து வயதுச் சிறுவனைத் தூக்கிக் கொண்டு, அதே வேகத்தில் மீண்டும் சமையல்கட்டிற்கே சென்று விட,
ஆறுமுகம் குழப்பமானார். “ஏன்… என்னாச்சு இந்த சாவித்திரிக்கு?… அவள் முகம் ஏன் கோபியைப் பார்த்ததும் அப்படி மாறியது?”
தன்னுடைய சந்தேகத்தை அவர் வாட்ச்மேன் வடிவேலுவிடம் சன்னக் குரலில் கேட்க, “நானும் கவனிச்சேன் சார்!… எனக்கென்னமோ அவளும் இந்த ரவுடிப்பயலால் ஏதோவொரு விதத்தில் பாதிக்கப்பட்டிருக்காள்!னு தோணுது!… அதனாலதான் இவனைப் பார்த்ததும் வெறுப்பாகித் தன் மகனைத் தூக்கிக்கிட்டு இங்கிருந்து போயிட்டா!… சார்.. அதைப் பத்தி இப்ப பேச வேண்டாம்… முதல்ல இவங்களை கவனிப்போம்… அப்புறமா அதை விசாரிப்போம்” என்றார் அவர்.
அதற்குள் சூப்பைக்கால் முருகன் கோபியையும், அவனுடன் வந்தவர்களையும் அமர வைத்து இலை போட்டிருந்தான்.
“அடேய்… முருகா… அவங்களை ஏண்டா தரையில் உட்கார வெச்சே?… இங்கே டேபிள்ல உட்கார வெச்சிருக்கலாமல்ல?” என்று ஆறுமுகம் முருகனை லேசாய்க் கடிந்து கொள்ள,
“பரவாயில்லைங்க… அதனாலென்ன?” என்றான் கோபி கூச்சத்தோடு. அடிதடி, வெட்டுக்குத்து, கட்டப்பஞ்சாயத்து, சாராயம், போதை, போலீஸ் ஸ்டேஷன், லாக்கப் என்று எதிர்மறை அனுபவங்களை மட்டுமே பார்த்துப் பழகியிருந்த கோபிக்கு இப்படியொரு அன்பு உலகம், பாசப் பறவைகள், நேச மனங்கள், தோழமை உள்ளங்கள், சிநேகித இதயங்கள் இருப்பதை இதுநாள் வரையில் தெரிந்து கொள்ளாமல் வாழ்ந்தமைக்காக தன்னைத் தானே நொந்து கொண்டான் அவன்.
தொடர்ந்து ஆறுமுகம், வாட்ச்மேன் வடிவேலு, வேன் டிரைவர் டேவிட், சிறுவன் முருகன் எல்லோருமாய்ச் சேர்ந்து அன்பான உபசரிப்போடு அவர்களுக்கு மாறி மாறி உணவு பரிமாற, கோபி மட்டுமல்லாது அவன் சகாக்களுமே மனம் நொந்து போயினர். “ச்சே… இப்பேர்ப்பட்ட மனிதர்களையா நாம துன்புறுத்தினோம்?”
உணவருந்தி முடித்த பின் அங்கிருந்து நகர்ந்து வெளியே வந்து நின்ற கோபியிடம் வந்த ஆறுமுகம், “இப்பச் சொல்லுங்க… இந்த ஏரியாவுல எங்கெல்லாம் தாழ்வான இடங்கள் இருக்கு?… எங்கெல்லாம் ஜனங்க தண்ணில மாட்டி கஷ்டப்பட்டுக்கிட்டிருப்பாங்க?” கேட்டார்.
கோபியின் சகா ஒருவன் சொன்னான். “சார்… ரயில்வே லைனுக்குப் பக்கத்துல் ஒரு ஸ்லம் ஏரியா இருக்கு சார்… அங்க குடிசைகளெல்லாம் பள்ளத்துலதான் இருக்கு!… நிச்சயமா அதெல்லாம் தண்ணீல மூழ்கியிருக்கும் சார்!… அங்கிருக்கற மக்களெல்லாம் கண்டிப்பா மேடாயிருக்கற ரயில்வே தண்டவாளத்துலதான் உட்கார்ந்திட்டிருப்பாங்க!”
அதற்குள் இன்னொருவன் இடையில் புகுந்து, “சார்… மேம்பாலத்துக்குக் கீழே கிட்டத்தட்ட அறுபது எழுபது நடைபாதைவாசிகள் இருந்தாங்க சார்!… அவங்கெல்லாம் இப்ப மேம்பாலத்துக்கு மேலே நின்னுட்டிருப்பதா நேத்திக்கு எனக்கு தகவல் வந்திச்சு சார்” என்றான்.
“அப்ப… முதல்ல அவங்களை மீட்போம்!… ஹெட் ஆபீஸ்ல இருந்து ரெண்டு படகுக வந்திட்டிருக்கு… நாமே அதுல போய் அவங்களை மீட்டு இங்க கொண்டு வருவோம்” என்றார் ஆறுமுகம் கோபியைப் பார்த்து.
அவன் அமைதியாய்த் தலையாட்டினான்.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings