in ,

கடவுள் என்றோர் சிநேகிதனுண்டு (அத்தியாயம் 21) – முகில் தினகரன், கோவை

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

அத்தியாயம் 1     அத்தியாயம் 2     அத்தியாயம் 3     அத்தியாயம் 4

அத்தியாயம் 5    அத்தியாயம் 6     அத்தியாயம் 7     அத்தியாயம் 8

அத்தியாயம் 9   அத்தியாயம் 10    அத்தியாயம் 11    அத்தியாயம் 12

அத்தியாயம் 13   அத்தியாயம் 14   அத்தியாயம் 15   அத்தியாயம் 16

அத்தியாயம் 17   அத்தியாயம் 18   அத்தியாயம் 19   அத்தியாயம் 20

முந்தைய நாளின் தாக்கமாய், மறுநாள் யாருமே பெங்களூரு போட்டிகளைக் காண, தொலைக்காட்சி இருக்கும் ஹாலுக்கு வரவில்லை.

ஆறுமுகமே சென்று எல்லோரையும் வலிய அழைத்தார்.  “பசங்களா… இன்னிக்கு நம்ம இல்லத்துப் பசங்க நாலு பேரோட ஈவெண்ட் இருக்குடா… நிச்சயமா இந்த நாலு பேருமே ஜெயிச்சுக் காட்டுவானுகடா” வலுக்கட்டாயமாய் முகத்தில் ஒரு சிரிப்பைப் பொருத்திக் கொண்டு சொன்னார்.

யாருமே பதில் பேசாது அமைதியாயிருக்க, கோபி சொன்னான்.  “சார்… எங்கே நேத்திக்கு மாதிரியே இன்னிக்கும் நெகடிவ் ரிசல்ட் வந்திடுமோ?ன்னு பசக பயந்துக்குறாங்க சார்”

“அப்படியா?” என்று பொதுவாய்க் கேட்ட ஆறுமுகம், “இங்க பாருங்கப்பா… நேற்றைய தோல்வி எப்படி நாம் விரும்பாமலேயே நம்மைத் தேடி வந்திச்சோ… அதே மாதிரி இன்னிக்கு நாம் விரும்பிய வெற்றி நிச்சயம் நம்மை வந்து சேரும்… அதாவது நாம நம்பிக்கையோட இருந்தா… நான் நம்பிக்கையோட இருக்கேன்… அதனால நான் போய் டி.வி.பார்க்கறேன்… என்னை மாதிரியே நம்பிக்கை உள்ளவங்க யாராச்சும் இருந்தா நீங்களும் வாங்க… பார்க்கலாம்” என்றபடி ஆறுமுகம் ஹாலை நோக்கிச் செல்ல, கோபி பின் தொடர்ந்தான்.

வேன் டிரைவர், “இருங்க நானும் வர்றேன்… எனக்கு நம்பிக்கை இருக்கு… இன்னிக்கு நம்ம பசங்க நாலு பேருமே ஜெயிப்பாங்க… அடுத்து மும்பைக்குப் போவாங்க” சொல்லிக் கொண்டே ஹாலுக்குச் சென்றான்.

சரியாக மாலை மூன்று மணி வாக்கில் போட்டிகள் துவக்கப்பட, முதல் ஈவெண்டாக வீல் சேரில் அமர்ந்தபடி தட்டு எறியும் போட்டி துவங்கியது.

முன்னதாக வந்த பிற மாநிலத்து வீரர்கள் சுமாராகவே வீசிச் செல்ல, அடுத்ததாய் கால்கள் சூம்பிப் போன முருகன், தனது வீல் சேரில் அமர்ந்தபடி வேகமாய் வந்தான்.

அவன் வந்த தோரணையே வெற்றிக்கு கட்டியங் கூற, ஹாலுக்கு வர மறுத்து ஒதுங்கி நின்ற இல்லத்துவாசிகள் ஒவ்வொருவராய் வந்தமர்ந்தனர்.

வானத்தைப் பார்த்துக் கும்பிட்டு விட்டு, தன் கையில் கொடுக்கப்பட்ட தட்டை, தன் மொத்த பலத்தையும் திரட்டி கைகளில் கொண்டு வந்து நிறுத்தி, பின்னர் எறிந்தான் முருகன்.

ஓடிச் சென்று அந்தத் தொலைவை அளந்தவர்கள் மூக்கில் விரலை வைத்தனர்.

அவர்களனைவருமே ஒரு சேர கட்டை விரலை உயர்த்திக் காட்ட, “முருகன் செலக்ட் ஆயிட்டான்!… நம்ம முருகன் செலக்ட் ஆயிட்டான்” ஆறுமுகம் கூவினார்.

“ஹேய்ய்ய்ய்ய்ய்ய்” ஹாலில் எழுந்த கூச்சல் அடங்க, சுத்தமாய் பத்து நிமிடங்கள் ஆயின.

“பார்த்தீங்களா?… நான் என்ன சொன்னேன்?… விரும்பாத தோல்வி அதுவா வருதுன்னா… விரும்பும் வெற்றியும் அதுவா வரும்”ன்னு சொன்னேன் அல்ல?… வந்திடுச்சு பாத்தீங்களா?… இப்பவாது புரிஞ்சுக்கங்க… வாழ்க்கையில் எதுவும் சொல்லிக் கொண்டு வருவதில்லை!… ஆனால்… வந்தவையெல்லாம் எதையும் சொல்லிக் கொடுக்காமல் போனதில்லை!… தோல்வி என்பது ஒரு சந்தர்ப்பம்… அந்தச் சந்தர்ப்பத்தைச் சாதனையாக்குவதுதான் சாமார்த்தியம்” உற்சாகமாய்ச் சொன்னார் ஆறுமுகம்.

அடுத்த போட்டியாக சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே ஓடும் ஓட்டப் பந்தயம் துவங்க, “இதுல நம்ம பசங்க யாரும் இல்லை” என்று ஆறுமுகம் சொல்லி முடிக்கவில்லை, போட்டிக்காக வந்து நின்ற சக்கர நாற்காலி வீரர்களில் முருகனும் இருந்தான்.

குழப்பமானார் ஆறுமுகம்.  “இதென்னா இங்கேயும் முருகன் இருக்கான்!… அவனை இந்தப் போட்டியில் நான் சேர்க்கவேயில்லையே?… அவன் எப்படி?”

உடனே தன் மொபைலை எடுத்து கோகுல்தாஸிக்குப் போன் செய்து கேட்டார்.

“அதுவா?… நம்ம முருகன் வாலண்டரியா அங்கே போய்… அவங்ககிட்டே கேட்டிருக்கான்… “நான் சக்கர நாற்காலி ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொள்கிறேன்”னு… அவங்க லிஸ்ட்டை வெரிஃபை பண்ணிப் பார்த்திட்டு, “உன் பேர் லிஸ்ட்டுல இல்லியேப்பா”ன்னு சொல்லியிருக்காங்க!.,.. இவன் விடாமல் கேட்க, அவங்க எனக்குப் போன் பண்ணிக் கேட்டாங்க, நானும் பையனோட ஆர்வத்தைப் பார்த்திட்டு, “பை மிஸ்டேக் அவன் பேர் விட்டுப் போச்சு… அவன் பேரையும் சேர்த்துக்கங்க”ன்னு சொல்லிட்டேன்!… பார்ப்போம்… அவன் என்னதான் பண்ணறன்?னு” என்றார்.

அவர் இணைப்பிலிருந்து வெளியேறியதும், ”இவனுக்கெதுக்கு இந்த வேண்டாத வேலை… துளிக்கூட பயிற்சியே எடுக்காத போட்டில போய் நிற்கிறானே?… கேவலமான தோல்வியல்லவா ஏற்படும்?” உள்ளுக்குள் தர்ம சங்கடமாய் உணர்ந்தார்.

ஆனால் அவரது தர்மசங்கடத்தை மாற்றும் விதமாய் முருகன் போட்டியின் ஆரம்பத்திலிருந்தே முன்னிலையில் வந்தான்.

ஆறுமுகத்திற்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை.  “இதெப்படி சாத்தியம்?…”

அவன் பின்னால் வந்த, பயிற்சி பெற்ற வீரர்களில் ஒருவர் கூட அவனை நெருங்கவே முடியவில்லை.

ஹாலில் அமர்ந்திருந்த மாற்றுத்திறனாளிகள் இங்கிருந்தே முருகனை ஊக்கப்படுத்தும் விதமாய், “கமான் முருகா…. கமான் முருகா” என்று தொண்டை கிழியக் கத்தினர்.

இதோ… இதோ… முருகன் வெற்றிக் கோட்டை எட்டி முதலாமிடத்தைப் பெற்றான்.

“சார்… என்ன சார் இது?… திடீர்னு போய் உள்ளார புகுந்து…. பட்டையைக் கிளப்பிட்டான் நம்மாளு?” வேன் டிரைவர் டேவிட் கேட்க, ”அதான் டேவிட் எனக்கும் புரியலை… நாம முருகனுக்கு இந்தப் போட்டிக்கான பயிற்சியே குடுக்கலை… ஆனா அவன் முதலாவதாய் வந்திருக்கான்…” ஆறுமுகம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவரது மொபைல் ஒலிக்க, எடுத்துப் பார்த்தார்.

எதிர்முனையில் கோகுல் தாஸ். “என்ன ஆறுமுகம் சார்?… எப்படி நம்மாளு?” கேட்டார்.

“சார்… எனக்கு என்ன நடக்குதுனே புரியலை சார்” என்றார் ஆறுமுகம்.

“சொல்றேன் கேளுங்கோ… இந்த முருகன் அங்க போய் அந்த சக்கர நாற்காலி ஆளுங்க பிராக்டீஸ் பண்றதை நோட் பண்ணியிருக்கான்… அப்ப அவனுக்குத் தோணியிருக்கு… நாமும் இந்தப் போட்டில சேர்ந்திருக்கலாமோ?ன்னு… உடனே அங்க போய் தன்னைச் சேர்த்துக்கச் சொல்லிக் கேட்டிருக்கான்… எப்படியோ சேர்ந்திட்டான்!… அவனுக்குக் குடுக்கப்பட்ட வீல் சேர் வேற… அது வந்து தட்டு எறிவதற்காக குடுக்கப்படும் வீல் சேர்… அதைக் கொண்டு வந்து சக்கர நாற்காலிப் போட்டில கலந்துக்க முடியாது… ஆனாலும் அதுல உட்கார்ந்தே ஜெயிச்சிருக்கான் நம்மாளு…” என்ற கோகுல் தாஸ், “சரி… சரி… அடுத்தது… வில் வித்தை… நம்ம சுந்தரம் கலந்துக்கப் போறான்… போய்ப் பாருங்க!… அப்புறமா பேசுவோம்” இணைப்பிலிருந்து கோகுல்தாஸ் வெளியேறியதும் தொலைக்காட்சி முன் வந்தமர்ந்தார் ஆறுமுகம்.

வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பத்துக்கும் மேற்பட்ட வீல் சேர்களில் கையில் வில்லுடன் மாற்றுத் திறனாளி வீரர்கள் அமர்ந்திருந்தனர்.

ஐந்தாவதாக அம்ர்ந்திருந்தான் சுந்தரம்.

சற்றுத் தொலைவில் அமைக்கப்பட்டிருந்த வட்ட வடிவ போஸ்டரில் அம்புகள் பாய வேண்டிய இலக்குகள் வண்ணங்கள் மூலம் பிரிக்கப்பட்டிருக்க, வீரர்கள் அனைவரின் பார்வையும் அந்த வட்டப் போஸ்டரின் மத்தியிலேயே இருந்தன.

முதல் மூன்று அம்புகளிலேயே இலக்கைத் தொட்டு விட்டால் முதலிடமும், ஐந்து அம்புகளில் இலக்கைத் தொட்டு விட்டால் இரண்டாம் இடமும், ஏழு அம்புகளில் இலக்கைத் தொட்டு விட்டால் மூன்றாம் இடமும் என நிர்ணயிக்கப்பட்டிருக்க, சுந்தரம் வெகு எளிதாக முதல் அம்பையே இலக்கைத் தொட வைத்தான். அடுத்த இரண்டு அம்புகளையும் அதே இலக்கில் நிறுத்தி, பயிற்சியாளர்களே வியக்கும் வண்ணம் முதலிடத்தில் நின்றான்.

“ஹேய்ய்ய்ய்ய்ய்ய்” சக நண்பனின் வெற்றியை ஹாலில் அமர்ந்திருந்த மாற்றுத் திறனாளிகள் ஓசையெழுப்பிக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

“நேத்திக்கு ஒரு போட்டில கோட்டை விட்டோம்…. இன்னிக்கு மூணு போட்டிகள்ல முதலிடத்தில் நிற்கிறோம்… இதிலிருந்து என்ன தெரியுது?… போதிக்கும் போது கற்றுக் கொள்ளாத பாடத்தை மனிதன் பாதிக்கும் போதுதான் கற்றுக் கொள்கிறான்”… என்ன டேவிட் நான் சொல்றது சரிதானே?” ஆறுமுகம் கேட்டார்.

“நூத்துக்கு நூறு சரிங்க சார்” என்றான் டேவிட்.

“அடுத்து லாங் ஜம்ப்!…” என்கிற அறிவிப்பு வந்ததும், “அம்மா சரஸ்வதி!… கோபி!….வாங்க… வந்து முன்னாடி உட்காருங்க!… அடுத்தது.. உங்க மகன் ராஜா கலந்து கொள்ளும் நீளம் தாண்டும் போட்டி” என்றார் ஆறுமுகம்.

கோபியும், சரஸ்வதியும் சந்தோஷமாய் வந்து அமர்ந்தனர்.

முன்னதாக வந்த பஞ்சாபைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி ஏதோ மேஜிக் செய்வது போல் தாண்டிச் செல்ல, அடுத்து வந்த கேரள வீரன் பஞ்சாப்காரனையே மிஞ்சும் அளவிற்கான தூரத்தைத் தொட்டுக் காட்ட, அடுத்ததாய் வந்தான் ராஜா.

ஹாலில் அமர்ந்திருந்த மாற்றுத்திறனாளிகள் கைதட்டி உற்சாகப்படுத்த, மெய்சீலிர்த்துப் போனாள் சரஸ்வதி. கோபியோ மகிழ்ச்சியின் உச்சத்தில் அமர்ந்திருந்தான்.

பாவம், இன்னும் சிறிது நேரத்தில் அங்கு ஒரு அமங்கல நிகழ்வு அரங்கேறப் போகின்றதென்று அவர்களுக்கு எப்படித் தெரியும்?

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    குமார் என்றொரு குருடன் (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

    வைசாக் விஜயம் (பகுதி 3) – சுஶ்ரீ