2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
அத்தியாயம் 1 அத்தியாயம் 2 அத்தியாயம் 3 அத்தியாயம் 4
அத்தியாயம் 5 அத்தியாயம் 6 அத்தியாயம் 7 அத்தியாயம் 8
அத்தியாயம் 9 அத்தியாயம் 10 அத்தியாயம் 11 அத்தியாயம் 12
அத்தியாயம் 13 அத்தியாயம் 14 அத்தியாயம் 15 அத்தியாயம் 16
கோகுல்தாஸ் சொல்லிச் சென்ற அந்த வார்த்தைகளை மனதில் பதித்துக் கொண்டு, அவர்கள் தேர்வு செய்த அந்த ஐந்து மாற்றுத் திறனாளி வீரர்களையும் கண்ணும் கருத்துமாய்ப் பாதுகாத்து, எந்தச் சூழ்நிலையிலும் அவர்கள் தங்கள் ஊக்கம் மற்றும் உறுதியிலிருந்து வழுவி விடாதவாறு கவனித்துக் கொண்டார் ஆறுமுகம்.
அதே போல், தொடர் பயிற்சிகளை அவர்கள் கை விட்டு விடாமல் கண்காணித்துக் கொண்டேயிருந்தார்.
காலை பதினோரு மணியிருக்கும். விலையுயர்ந்த வெளிநாட்டுக் காரொன்று இல்லத்தின் வாசலில் வந்து நிற்க, முகத்தில் கேள்விக் குறியுடன் வாசலுக்குச் சென்றார் ஆறுமுகம்.
அந்தக் காரிலிருந்து இறங்கிய டை கட்டிய இளைஞன், “குட் மார்னிங் சார்!… என் பேர் அரவிந்தன்… நான் தொழிலதிபர் வித்யாகர் சாரோட மேனேஜர்… சார் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசிட்டு வரச் சொன்னார்” என்றான்.
ஆடிப் போனார் ஆறுமுகம். காரணம், தொழிலதிபர் வித்யாகர் என்பவர் நகரில் மிக…மிகப் பெரிய புள்ளி. சுமார் பத்துக்கும் மேற்பட்ட பிசினஸ்களில் ஈடுபட்டு, எல்லாவற்றிலும் லாபத்தை மட்டுமே பார்த்து, தினமும் கோடிகளைக் குவிப்பவர். அவரைச் சந்திப்பதென்பது சாதாரண மனிதர்க்கு சாத்தியமேயில்லை. மாதத்தில் கிட்டத்தட்ட இருபது நாட்கள் வெளிநாடுகளில்தான் இருப்பார். அரசியல்வாதிகள், மந்திரிகள் எல்லோருமே அவரைத் தாள் பணிந்து வணங்குவர்.
சென்ற பிறவியில் அவர் கடவுளுக்கு கடன் கொடுத்திருப்பார் போலும். இந்தப் பிறவியில் அந்தக் கடனையெல்லாம் அவருக்குத் திருப்பிக் கொடுப்பது போல், கடவுள் அவருக்கு லாபங்களை மட்டுமே கொடுத்துக் கொண்டிருந்தார்.
நாடு முழுவதும் பயங்கரமாய் அடிபட்டு, அதல பாதாளத்தில் விழுந்து விட்ட ரியல் எஸ்டேட் தொழில் அவருக்கு மட்டும் என்றுமே லாபத்தையே கொடுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து சக ரியல் எஸ்டேட்காரர்கள் வாயைப் பிளப்பர்.
அரிசி ஆலை, சினிமா தியேட்டர், மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல், டெக்ஸ்டைல் பிசினஸ், கல்லூரிகள் என்று திரும்பிய திசையெல்லாம் “வித்யாகர் குரூப்ஸ்” நிறுவனங்களே கண்ணுக்குத் தென்படுவதை யாராலும் மறுக்க முடியாது.
சிறந்த தொழிலதிபர் அவார்டுகள் அவர் வீட்டு அலமாரிகளில் கேடயங்களாய் வீற்றிருக்க, ஊரில் இயங்கும் பல பணக்காரர்கள் சங்கங்களில் அவர் கோல்டன் மெம்பர்.
‘உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்திருக்கும் அந்த மனிதரின் மேனேஜர்… என்னைப் பார்க்க எதற்கு வந்திருக்கிறார்?’ யோசனையுடன், “சொல்லுங்க சார்” என்றார் ஆறுமுகம்.
“உள்ளார போய்ப் பேசுவோமே?” என்று அந்த மேனேஜர் சிரித்தவாறே சொல்ல, “ஸாரி சார்… நீங்க வந்த பதட்டத்துல மறந்திட்டேன்” என்றபடியே ஆறுமுகம் முன்னே நடக்க, அந்த நபர் பின் தொடர்ந்தார்.
ஆறுமுகத்தின் அறையில் அவருக்கு எதிர் நாற்காலியில் அமர்ந்த அந்த மேனேஜர், “நீங்க… எங்க சேர்மென் வித்யாகர் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்” என்று ஆரம்பிக்க,
“சார்… அவரைத் தெரியாதவர்கள் யாராவது இந்த ஊரில்… ஏன் இந்த நாட்டில் இருக்க முடியுமா சார்?” என்றார் ஆறுமுகம்.
“உங்க இல்லத்திலிருந்து ஐந்து பேர் பாராலிம்பிக்ஸ் போட்டிக்கு பாரீஸ் போகிறார்களாம்?” அந்த மேனேஜர் கேட்க,
“அது… வந்து… இன்னமும் முடிவாகலை சார்!… பெங்களூர்… மும்பை… டெல்லி…ன்னு மூணு இடங்கள்ல செலக்ஷன் போட்டிகள் நடக்குது… அதுல அவங்க பண்ற பர்ஃபாமென்ஸ் பொருத்துத்தான் அவங்க பாரீஸ் போட்டிக்குப் போறாங்களா?… இல்லையா?ன்னு தெரியும்” அடக்கமாய்ச் சொன்னார் ஆறுமுகம்.
“போவாங்க சார்… அவங்க போவாங்க… எப்படிச் சொல்றேன்னா… எங்க சேர்மென் வித்யாகர் அய்யா கண்ணுல அவங்க பட்டுட்டாங்க!… இனி அவங்களுக்கு எல்லாமே வெற்றிதான்” என்றார் அந்த மேனேஜர்.
“சார்… நீங்க சொல்றது எதுவுமே புரியலை சார்!… கொஞ்சம் விபரமாய்ச் சொல்லுங்க சார்”
“அதாவது எங்க சேர்மென் அய்யா… அந்த ஐந்து பேரையும் தத்தெடுத்துக்கறதா முடிவு பண்ணிட்டார்… இந்த நிமிஷம் முதற்கொண்டு அந்த ஐந்து பேருக்குண்டான பயிற்சி செலவுகள், போக்குவரத்து செலவுகள், மற்ற எல்லாச் செலவுகளுமே எங்க அய்யாவினுடையதுதான்!… அந்தத் தகவலைச் சொல்லிட்டு வரச் சொல்லி அவர்தான் என்னை அனுப்பினார்” என்ற அந்த மேனேஜர் தன் மொபைலை எடுத்து எண்களை நசுக்கினார்.
எதிர்முனையில் குரல் வர, “அய்யா… இந்த இல்லத்தோட நிர்வாகி ஆறுமுகம் சார் கூடத் தான் இருக்கேன்… இதோ தர்றேன் சார்” என்ற மேனேஜர் போனை ஆறுமுகத்திடம் நீட்டி, “எங்க சேர்மென் அய்யா பேசறார்” என்றார்.
நடுங்கும் கைகளுடன் அதை வாங்கி, “ஹ…ல்…லோ..”என்றார் ஆறுமுகம்.
“தம்பி… நான் வித்யாகர் பேசறேன்ப்பா… பாராலிம்பிக்ஸ்ல நம்ம இல்லத்துக்குப் பசங்க நிச்சயம் தங்கம் ஜெயிப்பானுக!… அவனுகளுக்கு எல்லா வசதியும் செய்து குடுங்க… எது வேணும்ன்னாலும் எங்க மேனேஜர்கிட்டே கேட்டு வாங்கிக்கங்க!… மாதம் ஒரு தொகையை நான் அனுப்பி வைக்கிறேன்… போக்குவரத்துக்கு வெச்சுக்கங்க!… பணவசதி இல்லாத காரணத்தினால அவங்க சாதனை முடங்கி விடக் கூடாது..என்ன?… நான் சொல்றது சரியா?” கட்டைக் குரல் கனிவோடு பேசியது.
“சரிங்க சார்” என்றார் ஆறுமுகம்.
“இந்தாங்க சார்” போனை அந்த மேனேஜரிடமே திருப்பிக் கொடுத்தார் ஆறுமுகம்.
அதை வாங்கி சில நிமிடங்கள் பேசி விட்டு இணைப்பைத் துண்டித்த அந்த மேனேஜர் தன் கையிலிருந்த சிறிய பேக்கினுள்ளிருந்து ஒரு செக்கை எடுத்து நீட்டினார். “ஐயா… முதல் தவணையா… இதைக் குடுத்திட்டு வரச் சொன்னார்!… இனிமேல் மாதா மாதம் உங்களுக்கு செக் வந்திடும்”
அந்தச் செக்கை வாங்கிப் பார்த்த ஆறுமுகம் சிலையாய்ச் சமைந்து நின்றார். “ஐந்து லட்சம்”
“ஐயாவுக்கு என் நன்றியைச் சொல்லிடுங்க மேனேஜர் சார்”
“நிச்சயமா…”என்று சொல்லி விட்டு அந்த மேனேஜர் காரில் ஏறிப் பறந்ததும், கோபியும் அவன் நண்பர்களும் ஆறுமுகத்திடம் வந்தனர்.
கூடவே வாட்ச்மேன் வடிவேலுவும், வேன் டிரைவர் டேவிட்டும் வந்தனர். “சார்… யாரு சார் அந்தாளு?… இம்போர்ட்டட் கார்ல வந்திட்டுப் போறார்?” கோபி கேட்க,
விபரத்தைச் சொல்லி விட்டு, தன் கையிலிருந்த செக்கைக் காட்டினார் ஆறுமுகம்.
“வெடுக்”கென்று அதை வாங்கிப் பார்த்து வாய் பிளந்தான் கோபி. “அஞ்சு லட்சமா?”
“இது முதல் தவணையாம்… இனி மாசா மாசம் ஒரு தொகை வந்திட்டேயிருக்குமாம்” என்றார் ஆறுமுகம்.
அதைக் கேட்ட கோபியின் முகத்தில் சந்தோஷம் துளியும் இல்லை. மாறாக ஒரு இறுக்கம் தோன்றியது. அதைக் கவனித்து விட்ட ஆறுமுகம் வடிவேலு பக்கம் திரும்ப அவர் முகத்திலும் சந்தோஷம் மைனஸ்.
“என்னது…? ஏன் இவங்க ரெண்டு பேர் மூஞ்சியும் சட்டுன்னு மாறிடிச்சு?” தனக்குள் கேட்டுக் கொண்டே டேவிட் பக்கம் அவன் முகத்திலும் ஒரு விதக் கலக்கம்.
“என்னப்பா?… என்னாச்சு உங்களுக்கெல்லாம்…?… எவ்வளவு பெரிய… சந்தோஷமான விஷயத்தைச் சொல்லியிருக்கேன்… ஒருத்தர் மூஞ்சியிலும் உற்சாகத்தைக் காணோமே… அதுக்கு பதிலா சோகமல்ல தெரியுது?” வாய் விட்டுக் கேட்டே விட்டார் ஆறுமுகம்.
“அது… ஒண்ணுமில்லை சார்… நாங்களும் சந்தோஷமாய்த்தான் இருக்கோம்” போலியாய் சிரித்தான் கோபி.
சற்றுத் தள்ளி நின்று இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த சரஸ்வதி, “ஆறுமுகம் சார்… இவங்கெல்லாம் ஏன் இப்படி இருக்காங்கனு எனக்குத் தெரியாது!… ஆனா எனக்கு… இந்த செக்கையும்… இனி மாதாமாதம் அந்தப் பெரிய மனிதர் அனுப்பப் போற தொகையையும் நெனச்சா…. பயம்தான் வருது” என்றாள்.
“பயமா?… எதுக்கு?… எதுக்கு பயம்?” உரத்த குரலில் கேட்டார் ஆறுமுகம்.
“அது… வந்து… அவர் இவ்வளவு தூரம் தாராளமாய்ப் பணத்தை அள்ளி வீசறார்ன்னா… நம்ம பசங்க நிச்சயம் பாரீஸ் விளையாட்டுப் போட்டிக்கு செலக்ட் ஆயிடுவாங்க!… அதுக்கப்புறம் அங்க போய் இந்த நாட்டுக்குப் பெருமை தேடித் தரும் விதமா தங்கப் பதக்கங்களை அள்ளிட்டு வருவாங்க!… என்கிற எதிர்பார்ப்பில்தான்…. நம்பிக்கையில்தான்” சரஸ்வதி சொல்ல,
“ஆமாம்… நம்பிக்கைதானே எல்லாம்” ஆறுமுகம் இடையில் புகுந்து சொன்னார்.
“வெறும் நம்பிக்கை மட்டுமே வெற்றியைக் குடுத்திடாது சார்”
தன்னுடைய ஊக்க வார்த்தைகளால் தினமும் அந்த ஐந்து பேரையும் மோட்டிவேஷன் செய்து வரும் ஆறுமுகம் சரஸ்வதியின் பேச்சைக் கேட்டு முகம் சுளித்தார்.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings