in , ,

கடவுள் என்றோர் சிநேகிதனுண்டு (அத்தியாயம் 12) – முகில் தினகரன், கோவை

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

அத்தியாயம் 1     அத்தியாயம் 2     அத்தியாயம் 3     அத்தியாயம் 4

அத்தியாயம் 5    அத்தியாயம் 6     அத்தியாயம் 7     அத்தியாயம் 8

அத்தியாயம் 9   அத்தியாயம் 10    அத்தியாயம் 11

இரவு நீண்ட நேரம் கண் விழித்திருந்து அந்த சட்டைக்கு பட்டன் வைத்து, காஜா எடுத்து முடித்த சரஸ்வதி, அதைத் தன் படுக்கையில் தலையணைக்கு அருகிலேயே மடித்து வைத்துக் கொண்டு உறங்கினாள். அவன் அருகிலேயே படுத்துறங்குவது போன்றொரு சுகத்தை கண்களை மூடி அனுபவித்தாள். “ச்சீய்… பிளஸ் டூ படிக்கற பொண்ணுக்கு இப்பவே ஆண் சுகம் கேட்குதா?… வெட்கமாயில்லை” மனதிற்குள்ளிருந்து ஒரு குரல் அவளைக் கண்டிக்க,

“அந்தந்த வயசுல அந்தந்த உணர்ச்சிகள் வருவது… ஆண்டவன் அமைத்து வைத்த அமைப்பு!… அதை யாராலும் அடக்க முடியாது” அதே மனதின் இன்னொரு பக்கமிருந்து அவளுக்கு ஆதரவாய் மற்றொரு குரல் ஒலித்தது.

மறுநாள் அதிகாலையிலேயே எழுந்து தந்தையை உசுப்பினாள்.

“என்ன சரசு… எதுக்கு இப்படி காலங்காத்தால எழுப்பறே?… எப்படியும் நான் ஒன்பது மணிக்குத்தானே கிளம்புவேன்… இப்பவே என்ன அவசரம்?” கோபத்தோடு கேட்டார் சோமண்ணா.

 “அது… வந்து… நீங்க குடுத்த சட்டைக்கு பட்டனெல்லாம் வெச்சு… காஜாவும் எடுத்திட்டேன்… சட்டை கொஞ்சம் “கச…கச”ன்னு கசங்கிப் போச்சு… அதான் இஸ்திரி போட்டுடலாமா?ன்னு கேட்கத்தான் எழுப்பினேன்!” சமாளித்தான்.

“போட்டுத் தொலை” என்று எரிச்சலாய்ச் சொல்லி விட்டு மறுபுறம் திரும்பிப் படுத்துக் கொண்டார் சோமண்ணா.

அயர்ன் பாக்ஸ் இருக்கும் மேஜையருகே வந்து, அந்த சட்டையை அதன் மீது கிடத்தியவள், “அவன் சட்டையும் அவனை மாதிரியே அம்சமா இருக்கு” என்று நினைத்தவாறே அயர்ன் பாக்ஸின் பிளக்கை எடுத்து பாயிண்ட்டில் செருகியவள், “அய்யய்யோ ரொம்ப சூடாயிடுச்சுன்னா… அவனுக்கு சுடுமே…” என்றபடி மிதமான சூட்டோடு ஸ்விட்சை ஆஃப் செய்து விட்டு சட்டையை அயர்ன் செய்தாள்.

 “அந்த ஆண்டவன் மட்டும் எனக்கு இவனையே புருஷனாய்க் குடுத்தா இதே மாதிரி தெனமும் நானே அவன் சட்டையை அயர்ன் செய்து கொடுப்பேன்” கற்பனையில் மிதந்தாள்.

அம்மாவின் அறையிலிருந்து இருமல் சத்தம் கேட்க, சட்டை மடித்து ஓரமாய் வைத்து விட்டு, அயர்ன் பாக்ஸையும் தள்ளி வைத்து விட்டு அம்மாவின் அறைக்குள் சென்றாள்.

வழக்கத்தை விட அதிகமாய் அம்மா மூச்சு விடத் திணறிக் கொண்டிருப்பதைக் கண்டு லேசாய் அச்சமுற்றாள். அருகில் சென்று, “அம்மா… அம்மா” என்று சன்னக் குரலில் அழைத்தாள்.

மெல்லக் கண் விழித்த தாயின் விழிகள் நாலாப்பக்கமும் அலைந்து எதையோ தேட, “என்னம்மா… என்ன வேணும்?… சுடு தண்ணி தரவா?” சரஸ்வதி கேட்டாள்.

தாயின் உதடுகள் “அ…. ப்… பா” என்று ஹீனக் குரலில் சொல்லுவதைப் புரிந்து கொண்டவள், வேக வேகமாய் அப்பாவின் அறைக்குச் சென்று அவரை எழுப்பினாள்.

“அய்யய்ய… ஏண்டி என்னை இப்படித் தொந்தரவு பண்றே?… அதான் “அயர்ன் பண்ணித் தொலை”ன்னு சொல்லிட்டேனே அப்புறமென்ன உனக்கு?” படுத்த நிலையிலேயே திட்டினார்.

 “ப்பா… அம்மாவுக்கு ரொம்ப முடியலை… ஒரு மாதிரி இருக்காங்க…. எனக்கு ரொம்ப பயமாயிருக்கு…  “அ…ப்…பா!… அ…ப்…பா”ன்னு உங்களைத்தான் கூப்பிடறாங்க… வாங்க… வாங்க” பதட்டமாய்ச் சொன்னாள்.

“விருட்”டென்று படுக்கையை விட்டு எழுந்து மனைவி படுத்திருக்கும் அறையை நோக்கி ஓடினார் சோமண்ணா.

ஆனால், விதி அவரை முந்திக் கொண்டது.

அவர் சென்று மனைவியைத் தொட்ட போது, அவள் விதி முடிந்திருந்தது.

“அய்யோ” என்று கத்திக் கொண்டு அவர் சுவரோரம் சென்று அமர, தந்தையின் அந்த செய்கையிலேயே தாயார் மரணித்து விட்ட விபரத்தைப் புரிந்து கொண்ட சரஸ்வதி, நப்பாசையோடு தாயின் முகத்தைத் தொட்டுத் தொட்டு ஆட்டினாள்.  “ம்மா… எந்திரிம்மா… கண்ணைத் திறம்மா… உனக்கு ஒண்ணும் ஆகலை…” கெஞ்சினாள்.

 “சரசு… நீ என்ன உசுப்பினாலும் உங்கம்மா எந்திரிக்க மாட்டாள்ம்மா… அவ… அவ… நம்மையெல்லாம் விட்டுட்டு அந்த ஆண்டவன் கிட்டே போயிட்டாள்ம்மா” சொல்லி விட்டு முகத்திலடித்துக் கொண்டு அழுதார் சோமண்ணா.

“அய்யோ… அம்மா என்னைத் தனியா விட்டுட்டுப் போக உனக்கு எப்படிம்மா மனசு வந்தது?” தாயின் கட்டிலருகே தரையில் அமர்ந்து கதறினாள் சரஸ்வதி.

நீண்ட நேரம் அழுது முடித்த சோமண்ணா, கண்களைத் துடைத்துக் கொண்டு “விருட்”டென்று எழுந்தார்.

“அம்மாடி… இனி ஆக வேண்டிய காரியங்களைப் பார்ப்போம்… நான் போய் உறவுக்காரங்களுக்கும்… ஊர்காரங்களுக்கும் தகவல் சொல்லி வரவழைக்கறேன்!… நீ என்ன பண்ணு… முன்னாடி ஹால்ல இருக்கற பொருட்களையெல்லாம் எடுத்து உள் அறையில் போட்டுட்டு அந்த  ஹாலை சுத்தம் பண்ணி வையி!… அங்கதான் அம்மாவோட சவத்தைப் போடணும்…” சொல்லி விட்டு சோமண்ணா வெளியேற, சரஸ்வதியும் கண்களைத் துடைத்துக் கொண்டு முன் ஹாலுக்கு வந்தாள்.

தந்தை சொல்லி விட்டுப் போன வேலைகளை அவசரகதியில் செய்த போதிலும் அவ்வப்போது தாயின் நினைவு வந்து விட, கண்ணீரோடு அம்மாவின் அறைக்கு வந்து அவளைப் பார்த்து சில நிமிடங்கள் அழுது விட்டுச் சென்றாள் சரஸ்வதி.

அடுத்த அரை மணி நேரத்தில் சடலம் முன் ஹாலில் கொண்டு வந்து கிடத்தப்பட, உறவுக்காரப் பெண்கள் கும்பலாய்க் கூடி ஒப்பாரி பாட ஆரம்பித்தனர்.

உள்ளூர் மனிதர்கள் ஒவ்வொருவராய் வந்து சவத்திற்கு மாலை அணிவித்து வணங்கிச் செல்ல, பஞ்சாயத்து போர்டு சேர்மென் பெரிய ரோஜா மாலையோடு வந்து தனது மரியதையைச் செய்தார்.

“த பாரு சோமண்ணா…. வயசுப் பொண்ணை உன் கைல தந்திட்டு உன்ர சம்சாரம் போயிட்டா… இனிமே அவளுக்குத் தாயா… தகப்பனா இருந்து அவ கல்யாணத்தை நடத்தறது உன் வேலை!…தைரியமா இரு நாங்க இருக்கோம்…” பஞ்சாயத்து தலைவர் சொல்லி விட்டு, போகிற போக்கில் சவத்தின் தலைமாட்டில் அமர்ந்து கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கும் சரஸ்வதியை ஓரப் பார்வை பார்த்தபடி சென்றார்.

தலை குனிந்து அழுது கொண்டிருந்த சரஸ்வதி தலையைத் தூக்கி சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தாள்.

மணி 9.10.

“அடப்பாவமே… பிறந்த நாள் கொண்டாட புதுச்சட்டை வாங்க அந்த இளைஞன் அப்பாவோட டெய்லர் கடைக்கு வருவாமே?… வந்து கடை பூட்டியிருப்பதைப் பார்த்து ஏமாற்றமடைவானே?… பிறந்த நாள் கொண்டாட்ட மகிழ்ச்சியெல்லாம் ஒரு நொடில காணாமப் போயிடுமே!… அய்யோ… என்ன பண்ணலாம்?… எப்படியாவது அந்தச் சட்டையை அவன் கையில் சேர்த்திட்டப் போதுமே!” யோசித்தாள்.

சட்டென்று எழுந்தவள் நேரே தன் அறைக்குச் சென்று படுக்கையின் தலைமாட்டில் தான் வைத்திருந்த அந்தச் சட்டையை எடுத்து ஒரு கவரில் போட்டு, அதைத் தன் புடவைக்குள் மறைத்துக் கொண்டு, பாத்ரூம் செல்பவள் போல் வீட்டின் பின் பக்கமாய்ச் சென்றாள்.

அந்த நேரப் பரபரப்பில் தன்னை யாரும் கவனிக்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு, வீடின் புழற்கடைப்பக்க வழியாக அந்தச் சின்ன சந்தில் இறங்கி, வேக வேகமாய் சோமண்ணாவின் டெய்லர் கடையை நோக்கி நடந்தாள் சரஸ்வதி.

அவள் மனம் முழுவதும் எப்படியாவது அந்தச் சட்டையை அந்த இளைஞன் கையில் சேர்த்து அவன் முகம் சந்தோஷத்தில் மலர்வதைக் கண்டு ரசிக்க வேண்டுமென்பதிலேயே குறியாயிருந்தது.

காலை எட்டி வைத்து வேக வேகமாய் நடந்தாள்.

“கடவுளே… அவன் வந்து பார்த்து விட்டுத் திரும்பிப் போயிருக்கக் கூடாது”

அவள் கடையை நெருங்கும் போது, தூரத்திலிருந்தே கவனித்தாள்.

அங்கே… அந்த இளைஞன் காத்திருந்தான்.

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஐம்பது ரூபாய் தண்டனை…! (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

    யானையாய் அவர் இருந்தார் (சிறுகதை) – சுஶ்ரீ