2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
அத்தியாயம் 1 அத்தியாயம் 2 அத்தியாயம் 3 அத்தியாயம் 4
அத்தியாயம் 5 அத்தியாயம் 6 அத்தியாயம் 7 அத்தியாயம் 8
அவன் சென்ற பின், “சரசு… நீ பாட்டுக்கு “வாங்கிக்கங்க”ன்னு சொல்லிட்டே… நானும் வாங்கிட்டேன்… எப்படித் தைக்கறது?” சோமண்ணா சொல்ல,
“மத்த துணிகளை ஒதுக்கி வெச்சிட்டு இதை இப்பவே ஆரம்பிச்சிடுங்க…” என்றாள் சரஸ்வதி.
“அது செரி… பங்களா வீட்டம்மாவோட பிளவுஸை இன்னிக்கு சாயந்திரமே குடுக்கணும்!… பாதி முடிச்சிட்டேன்… அது முடிஞ்ச பின்னாடிதான் இதை எடுக்க முடியும்!… அப்படியே எடுத்தாலும் தைச்சு முடிக்க ராத்திரி எட்டாயிடும்!… அதுக்கப்புறம் பட்டன் வைக்கணும்… காஜா எடுக்கணும்” புலம்பினார் சோமண்ணா.
“ரொம்ப புலம்பாதீங்க… நீங்க சட்டையைத் தைச்சு முடிச்சு வீட்டுக்கு எடுத்திட்டு வாங்க… பட்டன்… காஜா…வேலைகளை நான் பண்ணித் தர்றேன்” என்றான் சரஸ்வதி.
“சரி… முயற்சி பண்றேன்”
“அந்த வேலையே ஆகாது… நீங்க சட்டையை முழுசா தெச்சு முடிச்சு எடுத்திட்டு வர்றீங்க அவ்வளவுதான்” சொல்லி விட்டு சாப்பாட்டுக் கூடை வைத்து விட்டு அங்கிருந்து நகர்ந்தாள் சரஸ்வதி.
ஏனோ தெரியவில்லை வீட்டிற்கு வந்த பின்னும் அந்த இளைஞனின் நினைவே திரும்பத் திரும்ப சரஸ்வதியின் மனதிற்குள் வந்து போய்க் கொண்டிருந்தது. “என்னாச்சு எனக்கு?… ஏன் அவனையே மறுபடியும் மறுபடியும் நெனைக்கறேன்?… அவன் யாரு?… எந்த ஊரு?… என்ன பேரு?.. எதுவுமே தெரியாது…. ஆனா அவன் மேலே ஒரு பாசம் வருதே அது ஏன்?”
“அம்மாடி… இதுதான் காதலா?… அட ராமா… இது என்ன வேதமா?… நெஞ்சுக்குள்ளே ஏதோ ராகம் கேட்குது… கண்ணு ரெண்டும் தானா தாளம் போடுது”
பக்கத்து வீட்டுத் தொலைக்காட்சியிலிருந்து அந்தப் பாடல் காற்றில் மிதந்து வந்து சரஸ்வதியின் காதுகளுக்குள் ரீங்காரமிட, “ஒரு வேளை எனக்கே தெரியாம நான் அவனைக் காதலிக்கிறேனா?”
உடம்பெங்கும் அச்சம் படர, நெஞ்சில் கை வைத்து தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டாள்.
ஆனாலும், அவன் நினைவே தொடர்ந்து அவளை அலைக்கழிக்க, “என்ன பண்ணலாம்?… கரெக்ட்… படுத்துத் தூங்கிடலாம்” படுக்கையில் விழுந்தாள்.
காதல் வயப்பட்ட மனது உடனே தாவும் இடம் கனவுலகம்தான். சரஸ்வதியின் மனமும் கனவுலகத்தில் சஞ்சரிக்க ஆரம்பித்தது.
****
“சரஸ்… நில்லு… ஒரு நிமிஷம் என் கூடப் பேசு” அந்த இளைஞன் கெஞ்சலாய்க் கேட்க,
“த பாருங்க… உங்க ஊர்ல எப்படியோ எனக்குத் தெரியாது… ஆனா எங்க ஊர்ல ஒரு வயசுப் பொண்ணு… வாலிபப் பையனோட தெருவுல நின்னு பேசினா… வேற மாதிரி நினைக்கும்” என்றாள் சரஸ்வதி.
“வேற மாதிரின்னா?”
“ம்ம்ம்… நாம ரெண்டு பேரும் காதலிக்கறோம்ன்னு நினைக்கும்” ‘வெடுக்’கென்று சொன்னாள் சரஸ்வதி.
“உண்மைத்தானே நினைக்குது” அவன் சொல்ல,
“என்னது?… உண்மையா?… எது உண்மை?” விழிகளைப் பெரிதாக்கிக் கொண்டு கேட்டாள் சரஸ்வதி.
“நாம ரெண்டு பேரும் காதலிக்கறது” என்றான் அவன் இதழோரம் இழந்தோடும் இளக்காரப் புன்னகையுடன்.
“அம்மாடி… விட்டா தாலி கட்டி புள்ளையைக் கூடப் பெத்துடுவீங்க போலிருக்கு” கோபமானாள் சரஸ்வதி.
“நீ சம்மதிச்சா நான் தயார்” என்றான் அவன்.
“சம்மதிக்கலேன்னா…?” தலையைச் சாய்த்துக் கொண்டு கேட்டாள் சரஸ்வதி.
“செத்திடுவேன்” சற்றும் யோசிக்காமல் சொன்னான் அவன்.
“ஹும்… இந்த டயலாக்கெல்லாம் என் கிட்டே வேண்டாம்” கழுத்தை நொடித்துக் கொண்டு சொன்னாள் சரஸ்வதி.
“நம்பலையா?… என்னை நம்பலையா?… சரி… நீ என்னை விரும்பலேன்னு சொல்லு இப்பவே உயிரை விடறேன்”
அதைக் கேட்டு வாய் விட்டுச் சிரித்த சரஸ்வதி, “விரும்பலே” என்றாள்.
அடுத்த நிமிடமே, மின்னல் வேகத்தில் ஓடி, பக்கத்திலிருந்த செல்போன் டவர் மீது “பர…பர”வென்று ஏறினான் அவன்.
அதைச் சற்றும் எதிர்பார்க்காத சரஸ்வதி விக்கித்து நின்றாள்.
டவரின் உச்சிக்குச் சென்றவன் அங்கிருந்து கத்தினான். “சரஸ்… நான் சாகப் போறேன்!… அடுத்த ஜென்மத்தில் உனக்காக காத்திட்டிருப்பேன்!…அப்போதாவது என்னை ஏத்துக்கோ”
அரண்டு போன சரஸ்வதி. “அய்யோ… வேண்டாம்!… வேண்டாம்” அடிவயிற்றிலிருந்து கத்தினான்.
****
“சரசு…. சரசு” உறக்கத்தில் கத்திக் கொண்டிருந்த மகளைத் தட்டியெழுப்பினார் சோமண்ணா.
சட்டென்று கண் விழித்த சரஸ்வதி, எத்ரே தந்தை நிற்பதையும் அவர் கையில் சட்டை வைத்திருப்பதையும் பார்த்தவுடன் புரிந்து கொண்டாள் தான் கண்டது கனவென்று.
“என்ன சாவித்திரி?… எதுக்கு “வேண்டாம்… வேண்டாம்”ன்னு கத்திக்கிட்டிருந்தே… என்னாச்சு?” சோமண்ணா கேட்க, “அது… ஒண்ணுமில்லை… ஏதோ கனவு” சமாளித்தாள்.
“ஹும்… வயசுப் பொண்ணு இப்படி பகல் நேரத்துல தூங்கிக் கனவு கண்டுக்கிட்டிருந்தா என்னாகும் பொழப்பு?” என்று செல்லமாய்க் கடிந்து கொண்டவர், “இந்தா அந்தப் பையனோட சட்டை… இதுக்கு காஜா எடுத்து பட்டனெல்லாம் வெச்சிடு… என்ன?”
“சரிப்பா”
“இந்தக் கலர்ல நூலும்… சட்டைக்கேத்த பட்டன்களும் இருக்கா?”
“ம்ம்… இருக்குப்பா”
“அப்ப சீக்கிரம் போய் அந்த வேலையை முதல்ல பாரு… அந்தப் பையன் காலைல ஒன்பதரை மணிக்கே வந்திடுவேன்!னு சொல்லியிருக்கான்” என்றபடி சோமண்ணா அந்த அறையை விட்டு வெளியேற, அந்த சட்டையையே வைத்த கண் வாங்காமல் பார்த்த சரஸ்வதிக்கு உடலெங்கும் ஒருவிதக் குறுகுறுப்பு ஏற்பட, சுற்றும்முற்றும் பார்த்து விட்டு அந்தச் சட்டைக்கு முத்தமிட்டாள்.
அதே நேரம், அந்த இளைஞன் தன் அறைத் தோழர்களிடம் பெருமையாய்ச் சொல்லிக் கொண்டிருந்தான். “அந்த டெய்லர் துணியை வாங்கவே மறுத்திட்டான்… அவன் பொண்ணுதான் சிபாரிசு பண்ணி வாங்க வெச்சுது!…”
“ஆஹா…. கோபி… உன் வலையில் இன்னொரு மீன் சிக்கிடுச்சு போலிருக்கு” என்றான் தலை நிறைய முடி வைத்திருந்தவன்.
“அதிலென்ன சந்தேகம்?… அவ பார்த்த பார்வையிலேயே அவளைப் பத்தி நான் படிச்சுப் போட்டேன்!… ஈஸியா மடங்கற கேரக்டர்… ஒரே மாசத்துல சாந்தி முகூர்த்தம் நடத்திடலாம்…” என்றான் கோபி என்னும் அந்த போக்கிரி ராஜா.
“டேய் கோபி… போற ஊரிலெல்லாம்… ஒருத்தியை மயக்கி மாசமாக்கிட்டு… எஸ்கேப் ஆயிடறே… இந்த ஆட்டம் ரொம்ப நாளைக்கு நீடிக்காதுடா… ‘பல நாள் திருடன் ஒரு நாள் சிறையில்’ என்கிற மாதிரி… என்னிக்காவது ஒரு நாள் நீ மாட்டிக்கத்தான் போறே” நண்பன் சொல்ல,
“அடப் போடா.. சூட்சுமம் தெரியாம விளையாடினாத்தான் சிக்கல் உண்டாகும்… சூட்சுமம் புரிஞ்சு விளையாடினா சிக்கல் வராது… மாட்டிக்கவும் மாட்டோம்”
“என்ன சூட்சுமமோ… என்ன எழவோ… அதெல்லாம் எனக்கு தெரியவும் வேண்டாம்… புரியவும் வேண்டாம் ஆளை விடு” கையெடுத்துக் கும்பிட்டுச் சொன்னான் அறைத்தோழன்.
“நீ வேண்டாம்ன்னு சொன்னா நான் விட்டுடுவேனா என்ன?… அந்த சூடுமம் என்ன?ன்னா…. நான் கை வைக்கிற பொண்ணுங்கெல்லாம் கட்டுப்பாடான நடுத்தர வர்க்க குடும்பத்துப் பொண்ணுங்க… அவங்க… “தாங்கள் கெட்டுப் போனதை வெளிய சொன்னா பிரச்சனை பெரிசாகும்… சொந்தக்காரங்க மத்தில மானம் மரியாதையெல்லாம் கெடும்… ஊர் மக்கள் கேவலமாய்ப் பேசுவாங்க… அதன் காரணமாய் பெத்தவங்க தற்கொலை பண்ணினாலும் பண்ணிக்குவாங்க…”ன்னு கற்பனை பண்ணிகிட்டு விஷயத்தை வெளிய சொல்லாம அப்படியே மூடி மறைச்சிடுவாங்க…” சொல்லி விட்டு வில்லத்தனத்தின் மொத்த உருவமாய்ச் சிரித்தான் கோபி.
“சரி… விஷயத்தை மூடி மறைக்கலாம்… வயித்தை?”
“ஏண்டா… இப்படியொரு தப்புப் பண்றவன் முன் ஜாக்கிரதை இல்லாம தப்பு செய்வானா?… அந்த மாதிரிப் பிரச்சினை வரவே வராது” சொல்லி விட்டு கட்டிலில் சாய்ந்து படுத்த கோபி, “ஹும்… அந்த டெய்லர் பொண்ணு கூட நாளைக்கு எப்படிப் பேசறது?…” யோசிக்க ஆரம்பித்தான்.
அவனையே வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்த நண்பன் மனத்தில் தாறுமாறாய் எண்ண ஓட்டங்கள். “இவன் செய்யற தொழில் ஒரு தொழிலே இல்லை!… கட்டப் பஞ்சாயத்து நடத்திட்டிருக்கும் செம்மலைக்கு இவன் கையாள்!… செம்மலை சொல்ற ஊருக்குப் போய்… சொல்ற ஆளை ஃபாலோ பண்ணி…. அவனோட அன்றாட அலுவல்களை அட்சரம் பிசகாம செம்மலைக்குத் தகவல் தர வேண்டும்… அதுதான் இவனோட வேலை!… அதுக்கப்புறம் அவனை எங்கே… எந்த நேரத்தில் வெச்சு வெட்டுறது?… அல்லது எங்கிருந்து கடத்திட்டுப் போறது போன்ற முடிவுகளை அந்த செம்மலை எடுப்பான்!… இந்த தொழில் பண்றவனை என்னவென்று சொல்வது?… இவனையும் நம்பி இவன் பின்னால் பொண்ணுக வந்து நிக்கறாங்களே…. அவங்களைச் சொல்லணும்”
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings