in ,

காணாமல் போனவன் (சிறுகதை) – மலர் மைந்தன், கல்பாக்கம்

எழுத்தாளர்  மலர் மைந்தன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

அதிகாலை அலைப்பேசி ஒலித்தாலே அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது “யாருக்கு என்னவோ?” என்ற பதற்றம் தொற்றிக்கொள்கிறது.

ஆழ்ந்து  உறங்கிக் கொண்டிருந்த ‘வேல்முருகன்’ தூக்கத்தைக் களைத்தது அலைப்பேசி அழைப்பு. விழிகளைத் திறந்தால் மங்கலாகத் தெரிகிறது .கண்களைக் கசக்கிக் கொண்டு பார்க்க அலைப்பேசி திரையில் ‘செல்வம்’ என்ற பெயர் தெரிந்தது.

“இவன் ஏன் இந்நேரத்துக்குக் கூப்பிடறான்?” என்ற யோசனையுடன் அழைப்பை ஏற்று “சொல்லுப்பா செல்வம் …என்ன இவ்வளவு காலையில போன் பண்ணியிருக்க?”

“சார் …ஒரு அசம்பாவிதம் நடந்து போச்சு”

“என்னப்பா சொல்ற …செல்வம்…செல்வம் …”

மறுமுனையில் பதில் ஏதுமில்லை …விசும்பல் சத்தம் மட்டுமே கேட்டது

“செல்வம் ..தெளிவா சொல்லுப்பா …இப்படி அழுதா … வீட்டுல யாருக்காவது உடம்பு சரியில்லையா ? என்ன பிரச்சினை ?”

“சார் …நேத்து காலையில இருந்து பையனைக் காணோம் சார்”

“உன் பையன் பே…ரு …என்னமோ சொன்னியே அவனா?”

“ரோஷன் சார் …அவனே தான்”

“என்னப்பா சொல்ற?”

“ஆமா சார்…நான் வேலைக்கு வந்துட்ட பின்னாடி வீட்ட விட்டுப் போயிருக்கான் …எங்க போனானே தெரியல”

“பணம் ஏதாவது காணாம போயிருக்கா?”

“பீரோல இருந்த பணம் 500 மட்டும் காணோம் சார் …அப்புறம் அவனோட துணிங்க கொஞ்சம் இல்ல…”

“ஏன் இப்படித் திடீர்ன்னு?”

“நாளைக்கு ஒன்பதாம் வகுப்பு வரைக்கும் ரிசல்ட் வருது சார் …இவன் எப்படியும் பாஸ் பண்ண மாட்டான் …அதான் எங்கேயோ போய் மறைஞ்சி இருக்கான்”

“நீ ஏதாவது திட்டுனீயா?”

“இல்ல சார்…எப்ப…என்ன அவன் முறைக்க ஆரம்பிச்சானோ அப்பவே அவனைத் தண்ணி தெளிச்சு விட்டுட்டேன்”

“சரி சரி …அவன் பிரண்ட்ஸ் யார் யாருன்னு பாத்து விசாரிங்க”

“விசாரிச்சிட்டேன் சார் ….ஒருத்தன் சொன்னான் …ரோஷனுக்குப் படிக்கப் பிடிக்கலையாம் ..எங்கயாச்சும் வேலைக்குப் போறேன்னு ரெண்டு நாளைக்கு முன்னாடி சொன்னானாம்…இன்னொருத்தன் நேத்து காலையில பாத்து இருக்கான் …இவன் ஒரு பையோடு பஸ் ஸ்டாப்புல நின்னுட்டு இருந்திருக்கான் …எங்க போற ரோஷன்னு கேட்டதுக்குப் பங்ஸன் போறேன்னு சொல்லியிருக்கான்”

“ஒண்ணும் பயப்பட வேண்டாம் …ரிசல்ட் வரத நினைச்சி பயந்து இருப்பான் …அக்கம் பக்கம் தெரிஞ்சவங்க …சொந்தக்காரங்க வீடுகள் எல்லாம் விசாரிச்சுப் பாருங்க …அப்படி எங்கேயும் கிடைக்கலன்னா போலீஸ் ஸ்டேஷன்ல ஒரு கம்பளைண்ட் கொடுத்திடுங்க”

“சரிங்க சார்”

“இதுக்கு இடையில் ஏதாவது செய்தி தெரிஞ்ச உடனே எனக்குச் சொல்லுங்க”

“சரிங்க சார்”

அலைப்பேசி அழைப்பை துண்டித்து விட்டுச் செல்வத்தைப் பற்றிச் சிந்தித்துப் பார்த்தார் ‘வேல்முருகன்’

செல்வம் ஒரு அப்பிராணி . மூன்று தங்கைகள் மற்றும் ஒரு தம்பி.செல்வம் பத்தாவது படிக்கும் போது தந்தையை இழக்க நேர்ந்தது …அதன் பின் படிப்புக்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டு…வேல்முருகன் வேலை பார்க்கும் அலுவலத்தில் ஆபீஸ்பாய் வேலைக்குச் சேர்த்தான்.

சுமார் 25 வருடங்களாக அங்கேயே தான் வேலை. தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருப்பான் .இருக்கும் இடம் தெரியாது. யார் என்ன வேலை சொன்னாலும் எதிர் கேள்வி இல்லாமல் செய்து கொடுத்துவிட்டுதான் மறு வேலை பார்ப்பான் .அதனாலேயே அலுவலக்தில் இத்தனை ஆண்டுகள் யாரிடம் ஏச்சு பேச்சு இல்லாமல் வேலை செய்ய முடிந்தது .

அலுவலத்தில் உள்ளவர்களும் அவன் மீது அன்பும் கருணையும் கொண்டு இருந்தனர் .அவ்வப்பொழூது அவனுக்கு உதவிகள் செய்தனர் . விடுமுறை நாள்களில் வீடு மாற்றிக் கொடுக்கும் வேலைகள் செய்வான்.

தம்பிக்காரன் வளர்ந்ததும் தன் வழியைப் பார்த்துக்கொண்டு போய்விட்டான் .அகப்பட்டவனுக்கு அஷ்டமத்துல சனி என்பது போல எல்லாப் பொறுப்புகளும் செல்வத்தின் தலையிலேயே விழுந்தது …அப்படி இப்படி உழைத்துக் கடனவுடன வாங்கித் தங்கச்சிகளைக் கரையேற்றினான்.

வெளியில வாங்கியிருந்த கடன்களைக் கட்டி முடிக்க… அலுவலகத்திலும் கொஞ்சம் கூடுதல் சம்பளம் கிடைத்தது .தனக்கு ஒரு வாழ்க்கையை ஏற்படுத்திக் கொண்டான் …கல்யாணம் முடித்து …இரண்டு பெண் குழந்தைகள் …இரண்டு பேர் வேலைக்குப் போகும் இந்தக் காலத்துல ஒரு பிள்ளைய வளர்க்க பணம் பத்தமாட்டேங்கிறது என்று ஓடும் அதிகாரிகள் வேலை செய்யும் அலுவலத்தில்…கடைநிலை ஊழியானா இருந்துட்டு வாரிசு வேணும்ன்னு பெத்துக்கிட்டது தான் இந்த ‘ரோஷன்’ …

பெயருக்கு ஏற்ற குணம்தான் போல .அப்பவே அலுவலத்தில் இருந்தவங்க “மூணாவது குழந்தை தேவையா?” அப்படின்னு கேட்டாங்க …ஆனா அவன் எதுக்கும் பதில் சொல்லல …மகன் பொறந்த சந்தோஷத்துல எல்லோருக்கும் ஸ்வீட் வாங்கி வந்துக்  கொடுத்தான் .

இரண்டு பெண் பிள்ளைகளைக் காட்டிலும் மகன்…மகன் என்று செல்லமாக வளர்த்து விட்டான் . ஒரு மாசத்துக்கு முன்னாடிதான் ஒரு நாள் வருத்தப்பட்டு அழுதான் …மகனுக்குப் படிப்பு மேல ஆர்வம் இல்ல …சேர்க்கை சரியில்ல …பள்ளிக்கூடத்துல ரௌடி மாதிரி நடந்துக்கிறான்  என்று ஆசிரியர்கள் புகார் செஞ்சி இருக்காங்க …

செல்வமும் …இந்த வருஷம் மட்டும் முடிச்சிட்டட்டும் அப்புறம் நிறுத்திடறேன்னு சொல்லி கெஞ்சி கூத்தாடி வந்திருக்கான் …ம் இன்னிக்கு அந்தப் பையன் இப்படி பண்ணி இருக்கான் …பாவம் அந்த செல்வம்…என்று பொருமிவிட்டு அலுவலகம் கிளம்பத் தயாரானார் வேல்முருகன்.

மாலைவரை அலுவலத்திற்குச் செல்வத்திடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை … “இன்னும் பையன் கிடைக்கவில்லை போல” என்று யோசித்துக்கொண்டு வீடு திரும்பினார் வேல்முருகன்.

செல்வத்தைக் கூப்பிட நினைத்த பொழுது வீட்டிற்கே வந்துவிட்டான் செல்வம்

“வாப்பா செல்வம்…என்ன ஆச்சு ஒரு தகவலும் இல்ல?”

“சார் பையன் கிடைச்சிட்டான் சார்”

“எங்க இருந்தான்?”

“கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட்ல இருத்திருக்கான் சார்”

“கொஞ்சம் விலாவாரியா சொல்லு”

“சார் … நான் வேலைக்குக் கிளம்பி வந்ததுமே …வீட்டுல யாருக்கும் தெரியமா கிளம்பி கோயம்பேடு போற பஸ்ல ஏறி போய்ட்டு இருக்கான் .அங்கே போய் என்ன பண்றது ஏது பண்றதுன்னு தெரியல …அங்கேயே சுத்தி இருக்கான் …இராத்திரி அங்கேயே படுத்திருந்து விட்டு திரும்பவும் அங்கேயே சுத்திட்டு இருந்திருக்கான் …அங்கே சிசிடிவி கேமராவுல பார்த்த இரெண்டு போலீஸ்காரங்க இவனைப் புடிச்சி சந்தேகப்பட்டு விசாரிச்சு இருங்காங்க

“டேய் தம்பி …எந்த ஊரு நீ?”

“சார் …செய்யூர்”

“நேத்து இருந்து இங்கேயே சுத்திட்டு இருக்கியே என்ன விஷயம்…இங்க எதுக்கு வந்த ? எங்க போகப் போற ?”

“சார் நான் வீட்டவிட்டு ஓடிவந்துட்டேன் …எங்க மாமா ஒருத்தர் இருக்கார் …அவர் அட்ரஸ் மறந்து போச்சு ..எங்க போறதுன்னு தெரியல”

“ஏன்டா…வீட்டவிட்டு ஓடிவர வயசா? அந்தப் பையில என்ன வச்சிருக்க? தொறந்து காட்டு …கஞ்சா கிஞ்சா வச்சியிருக்கியா…முழியே சரியில்லையே”

“சார்…துணிதான் இருக்கு”

“உங்க அப்பா அம்மா போன் நம்பர் சொல்லு”

இப்படி எல்லாம் விசாரிச்சு பின்னால என்ன கூப்பிடாங்க

“இது செல்வம் நம்பரா?”

“ஆமாங்க …நீங்க”

“உன் பையன் எங்க இருக்கான்?”

“அவனைக் காணாம தேடிட்டு இருக்கோம்”

“அவன் கோயம்பேடு போலீஸ் ஸ்டேஷனல் இருக்கான் வந்து கூட்டிட்டுப் போ” என்று சொன்னாங்க.

“உடனே கிளம்பிப்போய்க் கூட்டிட்டு வந்தேன் …அந்த ரெண்டு போலீஸும் அறிவுரை சொன்னாங்க …”

“நல்லவேளை எங்க கண்ணுல பட்டன் …இதுவே சமூக விரோதிக கண்ணுல பட்டிருந்தான் ..அவனை நைசா கூட்டிட்டுபோய்ப் பிரியாணி வாங்கிக் கொடுத்து அவன் பார்க்காத பணம் கொடுத்து இருப்பாங்க …கொஞ்சநாள் அவனை நல்லா கவனிச்சு …அவுங்க வலையில சிக்க வச்சி அப்புறமா கஞ்சா, போதை மருந்து கடத்தல், கொலை, கொள்ளை போன்ற செயல்களுக்குப் பயன்படுத்திக்குவாங்க”

அவுங்க சொல்ல சொல்ல எனக்கு ஈரக்கொலையை நடுங்கிடுச்சி …சினிமாவுல பார்க்கிற மாதிரி இருந்துச்சு .

“ஒண்ணும் வருத்தப்படாத செல்வம் …எனக்கு தெரிஞ்ச உளவியல் மருத்துவர் இருக்கார் …எல்லாம் சரி பண்ணிக்கலாம்”

“எனக்கு அவன் திரும்பவும் ஓடிப் போய் தப்பான வழியில போயிடுவானோன்னு பயமா இருக்கு சார்… பட்டு திருந்தாதவங்க கெட்டுத்தான் திருந்துவாங்க அப்படின்னு சொல்லுங்களே அது உண்மையாயிடுமோ? பயமா இருக்கு சார்”

“வீணா மனச போட்டு குழப்பிக்காத …எல்லாம் சரி பண்ணிக்கலாம் போ”

“நன்றி” என்று சொல்லி தளர்ந்து நடந்து போகிறான் செல்வம் …அவனக்கு இன்னும் நம்பிக்கை வரலபோலத் தான் தெரிகிறது.

எழுத்தாளர்  மலர் மைந்தன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    உழைப்புச் சுரண்டல் (மரபுக்கவிதை) – பாவலர் கருமலைத் தமிழாழன்

    திருத்தெள்ளேணம் (நாவல் பகுதி 6) – பாலாஜி ராம்