in

சாதிகள் இல்லையடி பாப்பா (சிறுகதை) – ✍ பானுமதி பார்த்தசாரதி

மலம் கத்திய  கத்தலாலும், அவள் தன் கணவனைப் பேசிய அவமரியாதையான அவதூறு வார்த்தைகளாலும், அவள் மாமியார் நாராயணிக்கு உயிரே போய்விடும் போல் இருந்தது

கமலத்தின் கணவன் ராமேஸ்வரன், காலையில் செருப்பை மாட்டிக் கொண்டு வீட்டை விட்டு கிளம்பியவன் தான். மதியம் சாப்பாட்டிற்குக் கூட வீட்டிற்கு வரவில்லை

இந்த கத்தல் இன்று, நேற்று தொடங்கியதல்ல. பதினைந்து வருடமாக தொடர்கிறது. தவறு செய்தவன் ராமேஸ்வரன் தான்

திருமணம் முடிந்த ஒரு வருடம் இருவருக்குள்ளும் எந்த மனஸ்தாபமும் இல்லை. அப்போதெல்லாம் கமலத்தின் சொல்லம்புகள் மாமியார் நாராயணியைத் தான் தாக்கும்

“உங்கள் அம்மா ஏன் நம்மோடு மட்டுமே இருக்கிறாள்? நாம் தான் ஏமாந்த இளிச்சவாயர்களா? என் தலையில் தான் சம்பளம் இல்லாத வேலைக்காரி என்று எழுதியிருக்கிறதா?” என்று எரிச்சலுடன் கத்துவாள் மலம். மகனுக்கு தாயின் மேல் கொஞ்சம் பாசம் அதிகம் 

“நான் ஒரே பிள்ளை, அண்ணன், தம்பி யாருமில்லை. என் அப்பாவிற்குப் பிறகு என் அம்மாவை நான் தான பார்த்துக் கொள்ள வேண்டும்” என்பான்

“ஏன் உங்கள் அக்கா, தஙகை  இருவரும் இருக்கிறார்கள் அல்லவா? அவர்களும் உங்கள் அம்மாவின் பிள்ளைகள் தானே” என வாதம் செய்வாள்

“ஆனால் அவர்கள் இருவரும் திருமணமாகி அவரவர் வீட்டில் இருக்கிறார்கள்.  என் அம்மா அவள் வேலைகளை அவளே செய்து கொள்கிறாள். இது அவள் வீடு, நீ வேண்டுமென்றே வம்பு வளர்க்கிறாய். உனக்குத் தெரியுமா? இந்த வீடே என் அம்மா பேரில் தான் இருக்கிறது. நீ ரொம்ப கலாட்டா செய்தால் அம்மா சொத்து பெண்களுக்குப் போய்விடும், ஜாக்கிரதை” என எச்சரித்தான் 

ஆனால் அதன் பிறகு அவனோடு வேறு ஏதாவது காரணம் கண்டுபிடித்து சண்டை பிடிப்பாள். அவள் வாய்க்கும், சண்டைக்குப் பயந்து கொண்டு ஆபீசிலேயே பெரும் நேரத்தை செலவிட ஆரம்பித்தான் ராமேஸ்வரன்

அப்போது தான் அவனுக்கு அலுவலகத்தில் வேலை செய்யும் ஸ்டெனோ ஷீலாவுடன் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. கமலம் ஒரு நாள் கோயிலில் ராமேஸ்வரனுடன் அவளை சேர்ந்து பார்த்து விட்டாள். அதற்குள் ஒரு பெண் குழந்தை அவர்கள் கையில்

சும்மாவே ஆடுவாள் கமலம். அதன் பிறகு கமலம் காலில் சலங்கைக் கட்டிக் கொண்டு நினைக்கும் போதெல்லாம் ஆடத் தொடங்கி விட்டாள்.  

நாராயணியும் அவர்கள் இருவரையும் ஒரு நாள் சேர்ந்து பார்த்து விட்டாள். கமலம் நல்ல அழகு, ஆனால் ஷீலா ரொம்ப சுமார் தான். எப்படி இவளோடு வாழ்கிறான் என்று நாராயணிக்கு சந்தேகம். தன் சந்தேகத்தை மகனிடம் கேட்டாள்

“பேய் அழகாக இருக்கிறது என்று அதனோடு வாழ முடியாது அம்மா. தினமும் ஒரு சண்டை. எப்போது பார்த்தாலும் உன்னை மட்டமாக பேசிக் கொண்டு, என் சொந்த சகோதரிகளை அசிங்கமாக திட்டிக் கொண்டு, திமிர் பிடித்து அலைகிறாள் கமலம்.

அவளுக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என்று தான் முதலில் ஷீலாவுடன் பழகினேன். ஆனால் ஷீலாவுடன் வாழ்ந்த பிறகு தான் சொர்க்கம் வீட்டில் இருக்கிறது என்று புரிந்து கொண்டேன். நரகத்தில் உழன்ற எனக்கு, ஷீலாவுடனான வாழ்க்கை ஆனந்தத்தையும், மன நிறைவையும் தருகிறது. இந்த வாழ்க்கையை என்னால் இழக்க முடியாது அம்மா. ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருக்கிறாள் என்று சொல்கிறார்கள் இல்லையா? அவன் பாதை மாறாமல் நடப்பதற்கும் அதே பெண் தான் காரணம்” என்றான்        

மிக வேகமாக பின்னால் சென்ற நாராயணியின் மனக்  குதிரை, சமையல் அறையில் பாத்திரங்கள் வேகமாக விழும் சப்தம் கேட்டு, வழுக்கிக் கொண்டு நின்றது

நாராயணிக்குக் கூட மகன் பாதை தவறியதில் மனதிற்குள் வருத்தமே. ஜாதி, குலம் என்று ஆசாரங்களை அனுஷ்டிப்பவள் அவள். நல்ல ஜாதியில் பிறந்த கமலமே இப்படி வம்பிற்கு இழுத்து சண்டை போடுகிறாள்

ஜாதி, மதம் என்று எதுவும் பார்க்காமல் அந்தப் பெண்ணோடு மட்டும் மகன் எப்படி சுமுகமாக வாழ முடியும்? எல்லாம் தலைவிதி என்று மனதிற்குள் நொந்து கொண்டாள்

இன்றைய யுத்தத்தின் காரணம், ராமேஸ்வரன் தன் சேமிப்பு கணக்கில் இருந்து பதினைந்து லட்சம் ரூபாயை எடுத்து ஷீலாவின் மகளான ராஜிக்கு மருத்துவ கல்லூரிக்கு கட்டியது தான்

ராஜியை நாராயணியும் பார்த்திருக்கிறாள். தங்க விக்ரகம் போல் கொள்ளை அழகு தான். எல்லோரும் பாட்டியைப் போலவே இருக்கிறாள் என்பார்கள். ராமேஸ்வரனுக்கும் அதில் பெருமை தான்

அந்தக் குழந்தையும் வழியில்  எங்காவது பார்த்தால், ‘பாட்டி’ என்று ஆசையுடன் பேசும். ஆனால் நாராயணி, கமலத்தின் வாய்க்கு பயந்து அதிகம் பேச மாட்டாள்.  

‘காலையில் வீட்டை விட்டுப் போன பிள்ளை சாப்பிட்டானோ இல்லையோ?’ என  பெற்ற உள்ளம் தவித்தது  

“ராமேஸ்வரன் சாப்பிட்டானோ என்னவோ? போன் செய்தாயா?” என்றாள் மருமகளிடம் 

மாமியாரை ஒரு முறை முறைத்த கமலம், “எல்லோருக்கும் ஒரு வீடு, உங்கள் பிள்ளைக்கு எத்தனையோ வீடு. பதினைந்து லட்சம் கொடுத்திருக்கிறார் அல்லவா! வடை, பாயசத்துடன் சாப்பிட்டு இருப்பார். ரொம்ப கவலையாக இருந்தால் ஒரு ஆட்டோ வைத்துப் போய் பார்த்து விட்டு வாருங்கள்” என்றாள் கழுத்தை ஒரு வெட்டு வெட்டி

அதுவரை அமைதியாக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த கமலத்தின் மகள் ஸ்வர்ணலதா, “நீ பாட்டியோடு ஏன் அம்மா சண்டை போடுகிறாய்? ராஜியும் அப்பாவின் மகள் தானே. அவள் நன்றாகப் படித்து மெடிக்கல் காலேஜில் ஸீட் வாங்கியிருக்கிறாள், அதற்கு சந்தோஷப்படுங்கள். எல்லாவற்றிற்கும் எப்போதும் சண்டை தானா?” என அலுத்துக் கொண்டாள் 

‘நல்ல வேளை. ஸ்வர்ணாவாவது புரிந்து கொள்கிறாளே’ என்று  மனதிற்குள் சந்தோஷப்பட்டாள் நாராயணி  

கொஞ்சம் தூரத்தில் இருக்கும் பெருமாள் கோயிலுக்காவது போய் வரலாம் என்று நினைத்த நாராயணி, காலாற நடந்தால் மனதில் இருக்கும் குழப்பம் கொஞ்சம் குறையும் என்று எண்ணி, பேத்தி ஸ்வர்ணாவை அழைத்து தெருக்கதவை தாழ் போட்டுக் கொள்ளச் சொன்னாள்   

“அருகில் இருக்கும் பிள்ளையார் கோயிலிற்கு போகாமல், ஏன் பாட்டி தூரத்தில் இருக்கும் பெருமாள் கோயில்?” என்றாள் ஸ்வர்ணா 

“வீட்டிலேயே அடைபட்டாற் போல் இருக்கிறது. கொஞ்சம் காலாற நடந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்” எனக் கிளம்பினார் நாராயணி பாட்டி  

வெளியில் வந்து இயற்கையான காற்றில் நடந்தால் மனதிற்கு அமைதியாக நன்றாகத் தான் இருக்கிறது. கொஞ்சம் தூரம் என்றால் கூட இப்போதெல்லாம் ஒரு ஆட்டோவைப் பிடிப்பதால் நடப்பதன் அருமை புரியவில்லை என்று நினைத்துக் கொண்டாள்

போகும் வழியில் அவளுக்குத் தெரிந்த சிலரோடு பேசி விட்டுப் போக, மனம் கொஞ்சம் லேசானது

கோயிலின் ராஜகோபுரத்தை வழிபட்டு, பலிபீடத்தில் தன் கோபதாபங்களை பலி கொடுத்து விட்டு, துவஜஸ்தம்பத்தையும் வழிபட்டு,  பிறகு பெருமாளையும் சேவித்தாள் 

துளசி தீர்த்தம், சடாரி சேவை பெற்றுக் கொண்டு கோவிலை சுற்றி வந்தாள், கொடி மரத்தின் கீழ் விழுந்து வணங்கி வீட்டிற்கு கிளம்பினாள்.  

பெருமாளை சேவித்து விட்டு வெளியே வந்த நாராயணி மனதில் உள்ள அச்சம்,கோபம், ஆற்றாமை எல்லாம் தொலைந்து உள்ளம் குளிர்ந்தாற் போல் உணர்ந்தாள். 

அவள் உள்ளம் குளிர்ந்திருந்ததைப் போலவே வெளியே பூமியும் குளிர்ந்திருந்தது. வெயில் மறைந்து லேசான மேகமூட்டத்துடன், பன்னீர் துளியாய் சிறு தூறல்களும் சிதறின.  

ஆட்டோவெல்லாம் எதிர்பார்த்தால் மிகவும்  நேரமாகிவிடுமென்று வேகமாக நடக்கலானாள். ஆனால் அதற்குள் பலத்த இடியுடன் மழை வேகமாக கொட்டியது.  

வயதான அவளால் பலத்த மழையுடன் போட்டி போட முடியவில்லை. அருகில் உள்ள ஒரு பழைய கால ஓட்டு வீட்டின் தெருத் திண்ணையில் ஒதுங்கினாள்

காவி பூசிய திண்ணை. வழுவழுவென்று சுத்தமாக இருந்தது. தெருக்கதவும் திறந்து தான் இருந்தது. உள்ளிருந்து சில பேச்சுக் குரல்கள் கேட்டன.  

“முன்னதாகவே அக்காவிற்கு சொல்லாமல் நீங்கள் பணம் எடுத்தது தவறு” என்றது ஒரு பெண் குரல்.  

“போடி பைத்தியம்! அவள் என்ன அந்த காலத்து நளாயினியா? இந்த காலத்து மாடர்ன் பத்ரகாளி. பணமே எடுக்க விடாமல் என்னை பைத்தியமாக அடித்திருப்பாள். எனக்கு என் மகளுக்கு கல்லூரிக்கு பணம் கட்டுவது முக்கியம். இது வரை நான் ஒன்றும் என் மகளுக்கு  பெரியதாக எதுவும் செய்யவில்லை. ஆகவேண்டிய வேலையைப் பார். தத்துவம் பேசாதே” என்றது ஆண் குரல்.

அந்த குரலைக் கேட்டு திடுக்கிட்டாள் நாராயணி. ஆம், அது அவள் மகன் ராமேஸ்வரன் குரல் தான்

‘ஓ! அப்படியானால் ஷீலா இங்கு தான் இருக்கிறாளா?’ மேற்கொண்டு அவர்கள் பேச்சுக் குரல் கேட்கவும் தன் மன ஓட்டத்தை நிறுத்திக் கொண்டாள்.  

“இங்கே பாருங்கள், முதலில் இந்த பணத்தைக் கொண்டு போய் வங்கியில் உங்கள் கணக்கில் கட்டுங்கள். வீட்டில் பிரச்சினை இல்லாமல் நிம்மதியாக இருங்கள். அந்த வீட்டில் நீங்கள் மட்டும் இல்லை. உங்கள் ஆதரவை எதிர்பார்த்து இன்னொரு ஜீவனும் இருக்கிறது. எப்போது பார்த்தாலும் உங்களை திட்டிக் கொண்டும், குறை சொல்லிக் கொண்டும் இருந்தால் அந்த வயதான தாயின் மனம் என்ன பாடு படும்.? உங்கள் மகள் ஸ்வர்ணாவும் உங்களைப் பற்றித் தவறாக நினைக்கக் கூடாது. அப்பா நமக்காக இருக்கிறார் என்ற நம்பிக்கை வேண்டும்” என்றாள் உறுதியாக

“நம் ராஜிக்கு மருத்துவக் கல்லூரிக்கு பணம்?” என ராமேஸ்வரன் கேட்க

“என் சேமிப்புக் கணக்கிலிருந்து கொஞ்சம், லாக்கரில் யாருக்கும் உபயோகம் இல்லாமல் தூங்கும் ஐம்பது பவுன் நகைகளை விற்றால் கல்லூரிக்கு பணம் கட்டி விடலாம். மேலும்… ” என்று இழுத்தவள், வாயை மூடிக் கொண்டாள்

“சொல்! ஏன் பாதியில் நிறுத்திவிட்டாய்?” என ராமேஸ்வரன் கேள்வியாய் பார்க்க

“அவர்களுக்கு எவ்வளவு கோபம் வந்திருக்கும்? மற்றவர் கோபத்திலும் சாபத்திலும் நம் மகளின் நல்ல வாழ்க்கை தொடங்க வேண்டாம். தயவு செய்து என்னை தப்பாக நினைக்காதீர்கள்” என்றாள் ஷீலா குரல் கம்ம 

இவ்வளவும் கேட்டுக் கொண்டிருந்த நாராயணிக்கு, உணர்ச்சிப் பெருக்கில் கண்கள் குளமாயின. பேசிக் கொண்டே தெரு விளக்கைப் போடுவதற்காக வெளியே வந்த ஷீலா நாராயணியைப் பார்த்து பிரமித்தாள்.  

“அம்மா நீங்களா? உள்ளே வாருங்கள். ஏன் வெளியே நிற்கிறார்கள்?” என்று அவள் கையைப் பிடித்து உள்ளே அழைத்து சென்றாள்.  

தன் அம்மாவைப் பார்த்து ராமேஸ்வரனும் திடுக்கிட்டான்

“ஷீலா, என்னை மன்னித்து விடம்மா? நீ எங்கள் ஜாதி இல்லை. பணத்திற்காகத் தான் அவனோடு சேர்ந்து இருக்கிறாய் என்று கூட நினைத்தேன்.  என் மருமகள் கமலம் போல அழகாக, பால் போல வெள்ளையாக இல்லையே என்று கூட வெறுத்தேன்.  பால் மட்டும் இல்லை, கள்ளும் வெள்ளையாகத் தான் இருக்கும் என்று அந்த நாராயணன் எனக்கு உணர்த்தி விட்டான். ஒரு குடும்பம் சந்தோஷமாக இருப்பது ஜாதியிலும், அழகிலும் இல்லை என்று புரிந்து கொண்டேன்” என்றாள் கண்களைத் துடைத்துக் கொண்டு

ஷீலாவை இழுத்து தன் அருகில் அமர்த்திக் கொண்ட நாராயணி, தன் மகனைப் பார்த்து, “ராமு, ராஜிக்கு காலேஜ் பீஸ் நீ கட்டவேண்டாம்” என்றாள்.  

“என்னம்மா சொல்கிறாய் ?” என்றான் மகன் திகைப்புடன்.  

“ஆமாண்டா, அவள் தாத்தா கட்டுவார்” எனவும்

“அம்மா, என்ன சொல்கிறீர்கள்?”  ஷீலா திகைப்புடன் கேட்டாள்.  

ராமேஸ்வரனும் புரியாமல் அம்மாவைப் பார்த்தான்

“உன் அப்பாவின் பென்ஷன் டெபாசிட்டிலிருந்து வரும் வட்டியும், என் குடும்ப நல ஓய்வூதியமும் இருக்கிறது. அதில் தான் என் பேத்தி ராஜிக்கு பணம் கட்ட வேண்டும்” என்றாள் பாட்டி.  

உடனே ஷீலா, “அம்மா, என் நகைகள் லாக்கரில் தான் இருக்கிறது. உங்கள் பென்ஷனும், வட்டியும் உங்கள் அவசரத் தேவைக்குத் தான். அதில் கை வைக்க வேண்டாம்” என்றாள்

“இத்தனை நாள் கழித்து அந்தப் பெருமாள் கோயிலிற்கு வந்ததே 

உங்களைப் புரிந்து கொள்ளத் தான் போல் இருக்கிறது. எல்லோரையும் காக்கும் கடவுள்  என்னையும் காப்பாற்றுவான். ராமு, உன் பணத்தை உன் கணக்கில் போட்டு விடு. நாளை நான் சொல்வது போல் செய்து விடு” என்றாள் நாராயணி கண்டிப்புடன்

#ad

      

        

#ad 

              

          

             
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

One Comment

மோதக ப்ரியரின் மேதகு ஓவியம் By சந்தனா (ஏழாம் வகுப்பு)

குதிரை வண்டித் தாத்தா…! (குழந்தைகளுக்கான கதைப் பாடல்) – ✍வளர்கவி