in ,

ஆலம் விழுதுகள் (சிறுகதை) – சின்னுசாமி சந்திரசேகரன், ஈரோடு.

எழுத்தாளர் சின்னுசாமி சந்திரசேகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்   

சமையல‌றையில் காய்கறி தாளிக்கப்படும் வாசமும், சாமான்கள் கையாளப்படும் சப்தமும் கேட்பதிலிருந்தே மனைவி கமலா சமையல் செய்து கொண்டு இருக்கிறாள் என்று சாமிநாதனுக்குத் தெரிந்தது.  

இந்தக் களேபரமான நேரத்தில் காபி கேட்டால், அது காதில் விழுந்தாலும், விழாதது போல் கமலா இருப்பாள் என்பதும் அவ‌னுக்கு நன்கு தெரியும்.  காபி கேட்டு விட்டு ஏன் மூக்கை உடைத்துக் கொள்ள வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே அவனின் கைபேசி ஒலித்தது.  

‘அம்மா’ என்ற பெயர் கைபேசித் திரையில் ஒளிர்ந்தது அவனுக்கு லேசான மகிழ்ச்சியையும்,  பயம் கலந்த உணர்வைவையும் கொடுத்தது.  தேவையில்லாமல் அம்மா அவனைக் கூப்பிட்டுத் தொந்தரவு செய்ய மாட்டாள் என்பதும் அவனுக்குத் தெரியும்.  

தனிமையில் கிராமத்தில் இருக்கும் வயதானவர்கள் அழைத்தாலே, எல்லா மகன்களுக்கும் தோன்றும் எச்சரிக்கை உணர்வு அது.  அப்பா இறந்த பிறகு அம்மா யாரையும் சார்ந்திருக்காமல் தனிமையில் கிராமத்தில் இருக்கப் பழகிக்கொண்டு விட்டாள்.  

ஆனால்  கைபேசியில் பேசும்போது அவன் பயந்தது போல‌ உடல்நிலை பற்றி எதுவும் அம்மா சொல்லவில்லை. கொஞ்சம் சளித்தொந்தரவும், இருமலும் இருப்பதாகவும் மற்றபடி சுகமே என்றும் கூறிவிட்டு, பள்ளி லீவு விட்டால் குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு குடும்பத்தோடு ஒருமுறை ஊருக்கு வந்து விட்டுப் போகும்படி கூறினாள்.  

சிறுவயதிலிருந்தே அம்மாவின் குரல் எப்போதும் சாமிநாதனுக்குத் தெம்பையும், புத்துணர்ச்சியையும் கொடுக்கும். மனம் சோர்ந்திருக்கும் சமயத்தில் அம்மாவிடம் பேசினால், பேச்சு முடியும்போது அவன் சோர்வு அவனிடமிருந்து விடைபெற்றிருக்கும். 

‘என்ன உங்க அம்மாகிட்ட இருந்து போன் வந்தது போல இருக்கு?’ என்றவாறே ஈரக்கையை முந்தானையில் துடைத்துக் கொண்டு சமையலறையில் இருந்து வெளியே வந்தாள் கமலா.

‘காபி கேட்டால் மட்டும் உனக்குக் காது கேட்காது… ஆனால், இது மாத்திரம் சமையலறை வரை தெளிவாகக் கேட்டிருக்கும் போல் இருக்கு?’ என்றான் சாமிநாதன் நக்கலாக.

‘என்ன பேசியிருப்பீர்கள் என்று கூட என்னால் சொல்ல முடியும்’  என்றாள் கமலா விட்டுக்கொடுக்காமல் .

‘சொல் பார்க்கலாம்’ என்று அவளை உசுப்பேத்தினான் சாமிநாதன்.

‘ம்.. உடம்பு சரியில்லை… வந்து டாக்டர்கிட்ட கூட்டிக்கிட்டுப் போ… இல்லைன்னா பணம் அனுப்பிக் கொடு, அப்படின்னு சொல்லியிருப்பாங்க உங்க அம்மா… என்ன சரியா?’ என்றாள்.

‘உன்னுடைய ஊகம் தவறு.  பசங்களுக்கு லீவு விட்டா நம்ம எல்லோரையும் ஊருக்கு வந்துட்டுப் போகச் சொன்னாங்க’

குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல, ‘இப்ப இல்லா விட்டாலும் இதற்கு முன்பு உங்க அம்மாகிட்ட இருந்து வந்த போன் எல்லாம் இதைப் பற்றித் தானே? ஏன் உள்ளூரிலியே உங்க தம்பி விவசாயம் பார்த்துக் கொண்டு இருக்கிறார். அவரிடம் இந்த உதவிகளையெல்லாம் கேட்கலாம். உங்க தங்கை உஷா அமெரிக்காவில வசதியா இருக்கிறா… அவகிட்ட பணஉதவி கேட்கலாம்.  எல்லாத்தையும் விட்டு விட்டு எதற்கெடுத்தாலும் உங்களையே ஏன் கூப்பிட வேண்டும்?’ என்று விவாதத்தைத் தொடங்கினாள்.

‘இதைப் பற்றி நாம நிறையப் பேசி இருக்கிறோம்.  இருந்தாலும் மறுபடியும் சொல்கிறேன். என்னைப் படிக்க வைப்பதற்காக தம்பியின் படிப்பை நிறுத்தி அவனை விவசாயத்தில் இறக்கி விட்டுவிட்டார் அப்பா. இருக்கிற இரண்டு ஏக்கரில் ஏதோ விவசாயம் செய்து கஷ்டப்பட்டு குடும்பத்தை நடத்திக் கொண்டிருக்கும் அவனிடம் கேட்க அம்மாவுக்கு விருப்பம் இல்லை.

அதேபோல் கட்டிக்கொடுத்த பெண்ணிடம் உதவி கேட்பதுவும் சரியல்ல என்பது அம்மாவின் கொள்கை.  குடும்பத்திற்கு மூத்த பிள்ளை நான். என்னிடம் மாத்திரம் அம்மா தயங்காமல் உரிமையாகக் கேட்பார்.  காரணம் அப்பாவின் மரணத்திற்குப் பிறகு,  நானும் அம்மாவும் மாத்திரமே குடும்ப பாரத்தைச் சுமந்ததால் அம்மாவுக்கு அந்த உரிமை வந்திருக்கும்’.

‘எதைக் கேட்டாலும் அதற்கொரு பதில் தயாராய் வைத்திருக்கிறீங்க… உங்க வீட்டுக்காரங்களை என்னைக்கு விட்டுக் கொடுத்திருக்கிறீங்க… என்னமோ பண்ணுங்க. இந்தக் காலத்தில பணம் வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியம். நமக்கும் ரெண்டு குழந்தைங்க இருக்காங்க.. அதை ஞாபகம் வெச்சுக்குங்க’ என்று கூறிவிட்டு விருட்டென சமையலறைக்குள் புகுந்தாள் கமலா.                                                                                            

அவளின் இந்தப்பேச்சு சாமிநாதனுக்கு எரிச்சலைக் கொடுக்கவில்லை. இதுபோல, எல்லாத் தாய்களும் தங்கள் பிள்ளைகள் மேல் கொண்ட கரிசனத்தால் செய்யும் எச்சரிக்கை ஒன்றைச் செய்வாளே தவிர, கமலா அவன் தன் உறவுகளுக்குச் செய்யும் உதவிகளுக்கு எப்போதும் மறுப்பு சொல்வதோ அல்லது அதற்காக சண்டை வளர்த்துவதோ இல்லை. 

ஊரிலிருந்து தம்பி நல்லசிவன் அவசரமாகப் போனில் அழைத்திருந்தான்.

‘அண்ணா, அண்ணியின் அம்மாவுக்கு கொஞ்சம் உடம்பு சரி இல்லை. நான் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிச் சென்று டெஸ்ட் எல்லாம் எடுத்துப் பார்த்துவிட்டு வீட்டிற்குக் கூட்டி வந்து விட்டேன். நீங்களும் அண்ணியும் உடனே கிளம்பி வரமுடியுமா?  நீங்கள் வரும் அதே நாளில் மும்பையில் இருக்கும் சின்ன அண்ணியையும் வரச் சொல்லிக் கூட்டி வந்தால் நல்லா இருக்கும்’ என்றான் கொஞ்சம் பதட்டமான குரலில்.

கமலாவின் அம்மா, தம்பி நல்லசிவன் இருக்கும் ஊரில் இருந்து ஒரு இருபது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தில் தனியாக வசித்து வந்தார்கள். அவருக்கு சென்னையில் இருக்கும் மூத்த பெண் கமலாவும், மும்பையில் இருக்கும் இளைய மகள் கல்யாணியும் மட்டுமே வாரிசுகள். 

அவன் குரலில் இருந்த பதட்டத்தைப் பார்த்து சாமிநாதன் கேட்டான், ‘என்ன சிவா, ஏன் பதட்டமா பேசுறே?’ என்றான்.

‘அண்ணா,  ரெண்டு அண்ணியிடமும் முழுவதும் சொல்ல வேண்டாம். அதிர்ச்சி ஆயிடுவாங்க.  உடலில் உள்ள அறிகுறியை வைத்து, அண்ணியின் அம்மாவுக்கு உணவுக் குழாயில் கான்சர் இருக்கலாம் என்று டாக்டர் சந்தேகப்படுகிறார். சென்னையிலிருந்து மற்றொரு டெஸ்ட் ரிசல்ட் வந்ததும் உறுதியாகிவிடும். டாக்டர் இங்கு எடுத்த லோகல் டெஸ்ட் எல்லாம் பார்த்துவிட்டு நோய் முற்றியிருக்கலாம் என்றும் கூறுகிறார்.  அதனால் ரெண்டு அண்ணியும் ஒரு முறை வந்து அவங்க அம்மாவைப் பார்த்துவிட்டுப் போனால் கொஞ்சம் சமாதானமாக இருக்கும்’ என்றான்.

அடுத்த இரண்டு நாட்களில் கமலாவும், கல்யாணியும் அவர்களின் அம்மாவின் அருகில் இருந்தனர். மெலிந்திருந்த அம்மாவின் கையை தன் கையால் எடுத்துப் பிடித்துக் கொண்டே கமலா கேட்டாள்,  ‘இப்ப‌ உடம்பு எப்படிம்மா இருக்கு?’.

மெல்லிய குரலில் பதில் வந்தது, ‘பசி எடுப்பதில்லம்மா… அடிக்கடி மயக்கம் வருது’

‘எத்தனை தடவை சொல்லியிருப்போம்? வெற்றிலை போடும்போது புகையிலையையும் சேர்த்துப் போடாதே என்று? இப்ப பார்.. உடம்புக்கு முடியாம போயிடுச்சு’  என்று படபடத்தாள் கல்யாணி.                                  

‘நீ சும்மா இருடி… கிராமத்தில அம்மாவுக்கு வேற என்னதான் பொழுதுபோக்கு? எல்லாம் சரியாகிவிடும்.  அம்மா,  உங்களைப் பார்த்துக் கொள்ளவும், சமைக்கவும், மாத்திரை கொடுக்கவும் ஒரு அம்மாவை ஏற்பாடு செய்துள்ளோம்.  நாங்களும் அடிக்கடி வந்து பார்த்துக் கொள்கிறோம், கவலைப்படாதீங்க‌’ என்று ஆறுதல் கூறிவிட்டு, குழந்தைகளுக்குப் பள்ளியும், கணவன்களுக்கு அலுவலகமும் செல்ல வேண்டி இருந்ததால் சகோதரிகள் உடனே கிளம்பினர்.

சாமிநாதனும், கல்யாணியின் கணவன் கணேசனும் நல்லசிவம் பேசுவதையே கவனித்துக் கொண்டிருந்தனர்.

‘அண்ணா, நேற்று ராத்திரி அத்தைக்கு ட்ரீட்மெண்ட் கொடுத்துக் கொண்டிருக்கிற டாக்டர் கூப்பிட்டிருந்தார். சென்னையிலிருந்து டெஸ்ட் ரிசல்ட் வந்துவிட்டதாம். அவர் சந்தேகப்பட்டது சரிதானாம். இன்னும் ஆறுமாதம்தான் அத்தை இருக்க முடியுமாம். வயதாகிவிட்டதால் ஆப்பரேசனைத் தாங்கும் வலிமையும் அவர் உடம்பில் இல்லையாம். இந்த விசயத்தை ரெண்டு அண்ணிகளிடமும் இப்போதைக்குச் சொல்ல வேண்டாம். பின்னால் சொல்லிக் கொள்ளலாம். ஒரு நாள் விட்டு ஒரு நாள், நான் வந்து பார்த்துப் கொள்கிறேன்.  நீங்க போய்ட்டு வாங்க. நான் போன் செய்கிறேன்’  என்றான்.

டாக்டர் கூறியிருந்த கெடுவுக்கு முன்பாகவே போன் வந்துவிட்டது சாமிநாதனுக்கு.

‘அண்ணா இன்று அதிகாலை நான்கு மணிக்கு யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அத்தை இறந்து விட்டாங்க. வந்து பார்த்த டாக்டர் கடுமையான ஹார்ட் அட்டாக் வந்ததால்தான் இந்த திடீர் மரணம் என்கிறார்.  நீங்க குடும்பத்தோடு உடனே கிளம்பி வாங்க. சின்ன அண்ணிக்கும் சொல்லி உடனே கிளம்பச் சொல்லுங்க.  இங்கு நான் மற்ற எல்லா ஏற்பாடும் செய்து வைக்கிறேன்.  நீங்க ரெண்டு குடும்பமும் லேட் பண்ணாம வந்தா போதும். அப்பப்ப போனில் கூப்பிட்டு எங்கே வந்துக்கிட்டு இருக்கறீங்க என்பதை மட்டும் சொன்னால், இங்கே மற்ற ஏற்பாடுகள் செய்ய வசதியாய் இருக்கும்..’ என்றான் நல்லசிவன்.                      

மதியம் இரண்டு மணி அளவில் இரண்டு குடும்பமும் ஒரு அரை மணி நேர வித்தியாசத்தில் வந்து சேர்ந்துவிட்டனர்.  ஏற்பாடுகள் நேர்த்தியாகவும், குறையில்லாமலும் செய்யப்பட்டு அவர்களின் வரவுக்காகக் காத்துக் கொண்டிருந்தன.  

பந்தல் போடப்பட்டு, வந்திருந்த உறவினர்கள் மற்றும் உள்ளூர்க்காரர்கள் வசதியாக உட்காரும் பொருட்டு நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. ஒருபுறம் சமையல் ஆட்கள் டீ, காபி போட்டுக் கொடுத்துக் கொண்டும், அடுத்த வேளை உணவைத் தயார் செய்து கொண்டும் இருந்தனர்.  

உடல் கெட்டுப் போகாமல் இருக்க ஐஸ் பெட்டியில் வைக்கப்பட்டு மாலைகள் போடப்பட்டிருந்தன.  கிராமத்துக்கே உரித்தான சாவுக்கொட்டும் ஒருபுறம் சப்தமாக நடந்து கொண்டிருந்தது. கமலாவையும், கல்யாணியையும் கண்ட உறவுப் பெண்கள் கட்டிப் பிடித்து பெரும் குரலெடுத்து அழத் தொடங்கினர். காத்திருந்த ஆண்கள் கூட்டம் சாமிநாதனையும், கணேசனையும் சூழ்ந்து கொண்டு துக்கம் விசாரிக்கத் தொடங்கினர். 

பரபரப்பாக அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டிருந்த நல்லசிவன் அண்ணன் சாமிநாதன் அருகில் வந்தான்.

‘அண்ணா இறுதிச் சடங்குகள் அனைத்தும் முடித்து, இன்னும் அரை மணி நேரத்தில் உடம்பை எடுத்து விடலாம்.  நோய்வாய்ப்பட்ட உடம்பு, அதிக நேரம் வைத்திருக்க வேண்டாம்.  உங்களில் யார் கொள்ளி வைக்கிறீர்கள் என்பதைச் சொன்னால் போதும், மற்ற காரியங்களைத் தொடங்கி விடலாம் என்றான்.

‘நானே வைக்கிறேன்’ என்றான் சாமிநாதன்.  தலை அசைப்பின் மூலம் தன் சம்மதத்தைத் தெரிவித்தான் கணேசன்.

இரு பெண்களும் வெளியூர்க்காரர்கள் என்பதாலும், வேலைக்கும், பள்ளிக்கும் அதிக நாட்கள் விடுப்பு எடுக்க முடியாது என்பதாலும் உள்ளூர் உறவுக்காரர்கள் எல்லோரும் சேர்ந்து முடிவெடுத்து மூன்றாம் நாளே எல்லாக் காரியங்களும் செய்து முடித்து விடலாம் என்று தீர்மானித்தனர்.

அதன்படி மூன்றாம் நாள் காரியங்கள் அனைத்தும் முடிந்து எல்லோரும் சென்ற பிறகு, சாமிநாதன் தன் தம்பி நல்லசிவனை அருகில் அழைத்தான்.  கமலாவும், கல்யாணியும் தூக்கத்துடனும், துக்கத்துடனும் சோர்வாய் அருகில் அமர்ந்திருந்தனர். எந்தக் கவலையும் இன்றி குழந்தைகள் தம்போக்கில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

‘சிவா.. எல்லாக் காரியங்களையும் நீ ஒருவனே இழுத்துப் போட்டுக்கொண்டு செய்து எங்களுக்கு வேலை இல்லாமல் சிறப்பாகச் செய்து விட்டாய்.  அது சரி.. செலவு நிறைய ஆகியிருக்கும். திடீரென்று வந்த செலவு, எப்படி சமாளித்தாய்? எவ்வளவு என்று சொல்கிறாயா… கொடுத்து விடுகிறோம்’

‘அண்ணா, அத்தை இறந்த விசயத்தை உங்களுக்கு போன் செய்து சொல்லிவிட்டு, உடனே தங்கச்சி உஷாவுக்கும் போன் செய்தேன். உஷாவின் மாப்பிள்ளை ஒரு வாரம் பக்கத்து நாட்டுக்கு ட்ரெயினிங் போய் விட்டாராம்.  குழந்தைகளுக்கு பரீட்சை வேறு நடந்து கொண்டிருக்குதாம். உடனே அண்ணிகளைப் பார்க்க வர முடியவில்லை என்று ரொம்ப வருத்தப்பட்டாள்.

அவள் அக்கவுண்டிலிருந்து என் அக்கவுண்ட்டுக்கு உடனே ஒரு பெரும் தொகையை அனுப்பிக் கொடுத்து விட்டு, எந்தக் காரணம் கொண்டும் உங்களிடம் இருந்தோ அல்லது அண்ணிகளிடம் இருந்தோ செலவுக்கான பணத்தை வாங்கக் கூடாது என்றும் கண்டித்துச் சொல்லி விட்டாள்.

மாப்பிள்ளை ட்ரெயினிங் முடிந்து வந்தவுடன், குடும்பத்துடன் நேரில் வந்து இரண்டு அண்ணிகளையும் பார்ப்பதாகவும் கூறிவிட்டாள். அண்ணிகளுக்கு போன் செய்து பேசிக் கொள்வதாகவும் கூறினாள். வர முடியாததற்கு ரொம்ப வருத்தப்பட்டுப் பேசினாள்’

‘சரி… அவள் பிடிவாதக்காரி.. அவளுக்கு பணத்தைத் திருப்பிக் கொடுக்கப் போனால் சண்டைக்கு வருவாள். விடு..’ என்றான் சுவாமிநாதன்.

‘அவள் அனுப்பிக் கொடுத்த பணமே செலவு போக மீதம் இருக்கிறது. அதைக் கொடுக்கப் போனாலும் என்னிடம் கோபிப்பாள். அவள் கோபம்தான் உங்களுக்குத் தெரியுமே?’ என்றான் நல்லசிவன்.

அடுத்த நாள் காலையில் எல்லோரும் பெட்டி படுக்கையுடன் கிளம்பத் தயாராக இருக்கையில் சாமிநாதன், நல்லசிவனிடம் தனிமையில் பேசிக்கொண்டிருக்கும் போது அவர்களிடம் சென்றாள் கமலா. 

‘என்ன சிவா.. அண்ணனிடம் ரகசியம் பேசறே?  என்கிட்ட சொல்லக் கூடாதா’ என்றாள் வேடிக்கையாக.

‘ரகசியம் ஒண்ணும் இல்லைங்க அண்ணி.. என்னோட பெரிய பெண் செல்வி இந்த வருசம் பிளஸ் டூ முடிக்கப் போறா.  நல்லா படிக்கற பொண்ணு.. அடுத்து என்ன படிக்க வைக்கலாம்னு அண்ணன்கிட்ட யோசனை கேட்டேங்க’  என்றான்.

‘அவ என்ன வேணா படிக்கட்டும். ஆனா அவ படிக்கப்போறது சென்னைலதான், அதுவும் எங்க வீட்ல தங்கித்தான். அவள் படிப்பு செலவு முழுதும் உங்க அண்ணா ஏற்றுக் கொள்வார்.  சரியா?’ என்றாள்.

அந்த காலை வேளையில், இளம்காற்றில் எங்கிருந்தோ மிதந்து வந்தது டி.எம்.எஸ். ஸின் பாசக் குரல், ‘ஆலமரத்தின் விழுதினைப் போலே, அணைத்து நிற்கும் உறவு தந்தாயே…’.

எழுத்தாளர் சின்னுசாமி சந்திரசேகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    தொடுவானம் மிக அருகில் ❤ (பகுதி 16) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

    மருதமும் நெய்தலும் (சிறுகதை) – மதுரபாண்டியன்