in ,

இருப்பதை விட்டு (சிறுகதை-முற்பகுதி) – நாமக்கல் எம்.வேலு

எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

வீட்டைப் பெருக்கி துடைத்து, துணிமணிகளை துவைத்து அலசி  கொடியில் போட்டுவிட்டு வந்து டீயை கொதிக்கவைத்து டம்ப்ளரில் ஊற்றியெடுத்துகொண்டு வந்து, ’ ஸ்ஸ்ஸ்…அப்பாடா ‘ என்றபடி பாயில் உட்கார்ந்தாள் மல்லிகா. டி.வி.ரிமோட்டை எடுத்து பட்டனை அழுத்தினாள்.

‘ அடுத்து வருவது …‘ என்று செய்தி தொகுப்பாளர் சொன்னதும் இன்னும் சற்று நிமிர்ந்து உட்கார்ந்தாள். எப்போதாவதுதான் அந்த நிகழ்ச்சியைப் பார்ப்பாள். அவளுக்கும் அது ரொம்பப் பிடிக்கும்.

‘ கணவன்மார்களும் மனைவிமார்களும் அவர்களது எதிர்பார்ப்புகளுடன் ‘ என்ற தலைப்பில் ஆரம்பமானது அந்த நிகழ்ச்சி.  ஒருபுறம் நான்கு வரிசைகளில் கணவன்மார்கள், எதிர்புறம் நான்கு வரிசையில் அவர்களின் மனைவிமார்கள்.

நிகழ்ச்சி தொகுப்பாளர் கையைத் தட்டிக்கொண்டே கொஞ்சம் முன்னால் வந்து நின்று, ’ முதல்ல மனைவிமார்கள் என்ன எதிர்பார்க்கறாங்கன்னு சொல்றதைக் கேட்டுட்டு அப்புறமா கணவன்மார்கள் கிட்டே பேசுவோமா… ‘ என்றார். உடனே மைக்கை வாங்கிக்கொண்டு, ஒரு பெண்மணி சொன்னாள். ‘ ஸார், எனக்கு என்புருஷன் அடிக்கடி இன்ப அதிர்ச்சி கொடுத்துக்கிட்டே இருக்கனும். திடீர்னு வந்து, ஒரு பெட்டியை திறந்து ‘ ஹாய், இது என் இளவரசிக்கு நான் வாங்கிட்டு வந்திருக்கற நெக்லெஸ்… ’னு சொல்லிட்டு அவரே என் கழுத்துல அதை போட்டுவிடணும்.  அப்படியே ஒரு த்ரீஸ்டார் ஹோட்டல் சாப்பிடப் போகணும்…. ’

டம்ளரை டக்கென்று கீழே வைத்த மல்லிகா சிலுப்பிக்கொண்டாள்.  ’ஹூம்…நம்மாளும்தான் இருக்கே… நெக்லஸ் வேண்டாம்… ஒரு தோடு… இல்ல ஒரு ஜிமிக்கி….? ஹூம்… ஆறு மாசமா அழுது இந்த மூக்குத்தியை மாத்திக் குடுத்தார்… ’

மூக்குத்தி மேல் கைவைத்துப் பார்த்துக் கொண்டாள். ஒரு பெருமூச்செறிந்தபடி, அடுத்த பெண்மணி என்ன சொல்லப் போகிறாள் என்ற ஆவல் உந்த, டம்ளரில் இருந்து சிதறிய டீயைக்கூட கவனிக்காமல் நிமிர்ந்து உட்கார்ந்தாள்.

 ‘ ஸார், அந்த கிரீன் ஸாரி மேடம் சொன்னது மாதிரிதான் எனக்கும். திடீர்னு ஒருநாள், ஃப்ளைட் டிக்கட்டை கொண்டுவந்து கையில கொடுத்துட்டு, ‘ டார்லிங், நாம சிம்லா போகப்போறோம் ’ னு சொல்லணும். நான் அப்படியே சிலிர்த்துப் போகணும்… ‘ என்றாள். எல்லோரும் சிரித்தார்கள், அவளது கணவன் உட்பட. நிகழ்ச்சித் தொகுப்பாளர் சொன்னார், ‘ கவலைப் படாதீங்க, உங்க கணவரும் இந்கேதானே இருக்கார்…. ‘ என்று அவளது கணவரைப் பார்த்து கண்சிமிட்டினார்.

உடனே சிலுப்பிக்கொண்டாள் மல்லிகா. ’ ஹூம்…நம்மாளுந்தான்  இருக்கே. இதோ பக்கத்துல இருக்க ஊட்டிக்கே ஒரு தடவைத்தான் கூட்டிட்டு போனாரு மனுஷன். ஹூம்… எதெதுக்கு என்னென்ன வாய்க்குமோ அததுக்கு அததுதான் வாய்க்கும்… ‘ என்றபடி பெருமூச்செறிந்துவிட்டு, நிமிர்ந்தாள்.

அடுத்த பெண்மணி சொன்னாள்,  ‘ ஸார், எனக்கு வேறமாதிரி ஆசை. இந்த மாமனார், மாமியார், கொழுந்தனார்னு கூட்டுக்குடும்பம்லாம் ஒத்துவராது. ஒரு பெரிய பங்களா கட்டி நானும் அவரும் மட்டும் உள்ளே ஓடியாடணும்… ‘

நடுவர் அவளது கணவரை ஜாடையாகப் பார்த்தார்.

’ ஹூம்…பங்களாவாம்….’ பெருமூச்சு விட்ட மல்லிகா, நிமிர்ந்து மேலே பார்த்தாள். ‘ இந்த ஓட்டு வீடு ஆறுமாசமா ஒழுகுது. ஓடு வாங்கிட்டு வந்து மாட்ட வக்கில்லை. இந்த லட்சணத்துல பங்களாவா…  நெனப்புதான்…’ என்றபடி டி.வி. சத்தத்தை குறைத்துவிட்டு ரிமோட்டை வீசினாள்.  

‘ இந்த மனுஷன் வரட்டும். இன்னிக்கு உண்டு இல்லைன்னு ஆக்கிடறேன்… தீவாளிக்கு தீவாளித்தான் புது புடவையே. என்னிக்காவது, சொல்லாம கொள்ளாம வாங்கிட்டு வந்து, ‘இந்தாடி கட்டிக்கோ ‘னு குடுத்திருக்காரு இந்த மனுஷன்…? எப்போ பாரு… ஆட்டோ, கூத்து… ஆட்டோ, கூத்து…  இதுல டிராமா முடிஞ்சு கவுன்சிலர் கையால பொன்னாடை போர்த்திவிட்டார்னு பீத்தல் வேற… வா நீ இன்னிக்கு… ’

ராத்திரி எட்டுமணிக்கு வந்து சேர்ந்தான் மணிகண்டன். ஆட்டோவை நிறுத்திவிட்டு உள்ளே வரும்போது கையில் ஒரு பொட்டலம்.

‘ ஹூம்… இந்த மனுஷன் என்ன மல்லிப்பூவா வாங்கிட்டு வந்திருக்கும். மிஞ்சி மிஞ்சிப் போனா ரெண்டு ஆறிப் போன போண்டா, இல்லே ரெண்டு வடை. ‘ என்று இவள் சிலுப்பிக்கொண்டிருக்கும்போதே அவளது மகனும் மகளும் ஓடிப்போய் அப்பாவின் கையிலிருந்த பொட்டலத்தைப் பிடுங்கி கொண்டு ஓடினார்கள்.

‘ தலைய வலிக்கற மாதிரி இருக்கு.  கொஞ்சம் டீ இருந்தா கொடேன் ‘ என்றான் மணிகண்டன்.  சமையற்கட்டில் பாத்திரங்கள் உருண்டன. 

‘ கொண்டாற சம்பாத்தியத்துக்கு இது ஒண்ணுதான் குறைச்சல் ’ என்று சிலுப்பிக்கொண்டவள், ‘ டீயெல்லாம் கெடயாது. சோறுதான்… ‘ என்று முணுமுணுத்தாள்.

‘ இவளுக்கு இன்றைக்கு என்ன ஆனது… ‘ என்று யோசித்தபடியே போய் கை கால் முகம் அலம்பிக்கொண்டு வந்து உட்கார்ந்தவன்,  ‘ சரி சரி… சோத்தையாவது போட்டுக் கொண்டா…’ என்றான்.

சோற்றுத் தட்டைக் கொண்டுவந்து ‘ லொட் ‘ டென வைத்துவிட்டு நிற்காமல் நகர்ந்தாள். அவள் வைத்த வேகத்தில் சோறு சிதறியது. நிமிர்ந்து அவளைப் பார்த்து முறைத்தான்.

‘ ஒரு நல்ல வீடு உண்டா… துணிமணி நகைநட்டு உண்டா.  இந்த கிழிஞ்சதையே தினம் கட்டிக்கிட்டு அழ வேண்டியிருக்கு. வெளியே எங்கேயாவது போனா எடுத்துப் போட்டுக்க நல்லதா ஒரு நகைநட்டு  கிடையாது. எட்டு வருஷமா வாடகை வீடு…அவங்கவங்க பிளாட்டு, பங்களான்னு கட்டிக்கிட்டு குடி போறாங்க… மழை பெஞ்சா ஒழுவுதுன்னு சொல்லி சொல்லி ஓய்ஞ்சே போயாச்சு… இந்த ஓட்டைக்கூட மாத்த வக்கில்லை நமக்கு…ஹூம்… ’

சமயற்கட்டுக்குள் இருந்து அவளது புலம்பல் மட்டும் வெளிப்பட்டது. எரிச்சலுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தான் இவன்.

‘ இந்தத் தோடுல எண்ணெய் இறங்கிடுச்சு. எவளாவது எட்டு வருஷமா ஒரு தோட்டை மாத்தாம இருப்பாளா. என் தலையெழுத்து நான் இருக்கேன், மாத்தாம…’ இப்போது மூக்குச்சிந்தலுடன்  புலம்பல்.

ஒன்றும் பேசாமல் கையை கழுவிக்கொண்டு எழுந்து போய் பாயைவிரித்து போட்டு சுவரோடு சாய்ந்து உட்கார்ந்தான்.

‘ அவங்கவங்க சிம்லா, ஊட்டினு டூர் போறாங்க. நமக்கு, இதோ பக்கத்துல இருக்கற கொடைக்கானல்கூட எப்படி இருக்கும்னு தெரியாது. படிக்கற காலத்துல புஸ்தகத்துல பார்த்தது… படிச்சது… இந்த லட்சனத்துல நாம சிம்லாவுக்கு ஆசைப்படலாமா…எங்கப்பனை சொல்லணும். சொந்தமா ஆட்டோ வச்சிருக்காருமா… உன்னை உட்காரவைச்சி சோறு போடுவார்னு என் தலையில மண்ணை வாரி போட்டுட்டாரு… சோறு மட்டும் துன்னுட்டா போதுமா… மனுசருக்கு ஒரு சந்தோஷம்… அதென்னா…அது… ஹூம். ஒரு இன்பஅதிர்ச்சி…. திடீர்னு ஒரு பட்டுப்புடவை… ஒரு சங்கிலி… ஒன்னும் கிடையாது… எல்லாம் என் தலையெழுத்து… இந்த லட்சணத்துல ரெண்டு புள்ளங்களை மட்டும் பெத்துக்கிட்டாச்சு… ’

திடீரென்று எழுந்தோடினான். ‘ ஏய்…ஏதாவது வேணும்னா என்னை நேரா கேளு… அதை உட்டுட்டு புலம்பறது, முனகறது, மூக்கை சிந்தறதுனு வெச்சுக்கிட்டே… நான் மனுஷனாவே இருக்கமாட்டேன்… ’ என்றபடி அவளது தலையைப் பிடித்து லேசாய் ஆட்டிவிட்டு திரும்பினான்.

 ‘ சொல்லுவேயா சொல்லுவே… ஏன் சொல்ல மாட்டே,,, நீ போடற சோத்தையும் குடுக்கற துணியையும் கட்டிக்கிட்டு பேசாம உன்கூட குடித்தனம் நடத்தறேனில்ல… ஏன் பேசமாட்டே. மனுஷருக்கு இதுமட்டும் போதுமா.. ஊர் உலகத்துல  எப்படி எப்படியெல்லாம் புருஷன் பொண்டாட்டிங்க ஜாலியா ஊர் சுத்துறாங்க, புதுசு புதுசா நகைநட்டு வாங்கிப் போட்டுக்கறாங்க, புடவை கட்டறாங்க… ஹூம்… ’

‘ ஏய்…நானும் பார்த்துக்கிட்டே இருக்கேன். நீ பாட்டுக்கு பேசிக்கிட்டே போறே… நீ நினைக்கறமாதிரி எல்லாம் என்னால ஆடமுடியாது.    உன் கற்பனை அப்படியே விரிஞ்சிக்கிட்டே போகுதே…! நீ நினைக்கறமாதிரியெல்லாம் நகைநட்டு பட்டுப்புடவைனு  கொண்டுவந்து உனக்கு இன்ப அதிர்ச்சிலாம் கொடுக்கணும்னு கற்பனைல மிதக்காதே… எவ உன்னை உசுப்பி விட்டாள்னு தெரியலை. அவ மட்டும் கையில கிடைச்சா துண்டு துண்டா வெட்டி கழிச்சுப் போட்டுடுவேன்…. தினம் கிடைக்கற முன்னூறு நானூறுல என்ன முடியுமோ அதான் கிடைக்கும்… ‘ என்று சத்தம் போட்டான்.

அடுத்து  அவள் ஒன்று சொல்ல, அவன் ஒன்று சொல்ல, ‘ சீ…சீ…மனுஷன் இருப்பானா இந்த வீட்டுல…. வீட்டுக்கு வந்தா ஒரு நிம்மதி இருக்கா…ஒரே ரோதனையா போச்சே… ‘ கத்திக்கொண்டே வெளியே போய்விட்டான். குழந்தைகள் இரண்டும் மிரண்டுபோய் உட்கார்ந்தன. கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு, தாங்களாகவே சாப்பாட்டைப்போட்டு சாப்பிட்டுவிட்டு போய் படுத்துக்கொண்டார்கள். இவளோ சாப்பிடாமலேயே முடங்கிக்கொண்டாள். 

இரவு மணிகண்டன் வீடு திரும்பவில்லை.  சவாரிக்கு போகாமல், அனாதையாய் வெளியே நின்றுகொண்டிருந்தது, ஆட்டோ.

விடிய விடிய அழுது முகம் சிவந்து வீங்கி, காலையில் எழுந்து முனகிக்கொண்டே பிள்ளைகளுக்கு சோற்றை ஆக்கிகொண்டிருக்க, பிள்ளைகள் தாங்களாகவே குளித்து, உடுத்தி, சோற்றை அள்ளிப்போட்டு சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கூடம் போக, இவள் மறுபடியும் சாப்பிடாமல் அப்படியே மீண்டும் படுத்துக் கொண்டாள்.  

எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

தொடரும்

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

One Comment

தொடுவானம் மிக அருகில் ❤ (பகுதி 4) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

சகுனம் (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு