ஏப்ரல் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
ஆடைக் கடைகளும்
ஆபரணக் கடைகளும்
அள்ளி இறைத்த விளம்பரங்களில்
அடைபட்ட தொலைக்காட்சியில்
புதர் நடுவே எழுந்த
பூச்செடி ஒன்று போல
பூத்தது விளம்பரம் ஒன்று!
அனாதை இல்லமாம் அது –
பண்டிகைக்குப் பரிவோடு உதவிட
பிஞ்சுக்கைகள் கும்பிட்டுக் கோரின!
கருணை காட்டுங்கள் என்று
கடவுளின் குழந்தைகள்
கரம் கூப்பிய காட்சியில்
கசிந்தது இதயம் கொஞ்சம்!
அனாதை இல்லங்கள் –
செடிகளே மறுதலித்த பூக்களுக்கு
மடிகளற்ற மழலைகளுக்கு
இறைவனே அனுப்பிவைத்த
இரவல் மடிகள்!
மூலமும் முகவரியும் அறியாது
அலைந்த பிஞ்சு மேகங்களை
அபயமாய் அணைத்தெடுத்த
அன்பு வானங்கள்!
தாயும் தந்தையுமாய்
கடவுளையே
தத்தெடுத்த தளிர்கள்
தவழுகின்ற தாயகங்கள்!
திசையறியா இந்தத் தளிர்களை
வேர்கொண்ட பயிராக்க – கருணை
நீர் வார்க்கும் கழனிகள்!
உயிர்தந்த கரங்கள்
உதறித்தள்ளிய போதும்
அகல்விளக்குகள் இவை
அணைந்துவிடாமல் காக்கும்
அன்புக்கரங்கள்!
கண்ணீரில் கரைந்திருக்கும்
மென்மனதின் உணர்வுகளை
தொடுவானம் தேடும் அவர்கள்
விழிதாண்டி விரியும் ஏக்கத்தை
மொழிபெயர்க்கக் கூடுமோ!
யாரோ செய்த தவறுக்கு
யாரோ பெறும் தண்டனை!
இறைவனின் நீதிமன்றத்தில்
இரக்கமற்ற தீர்ப்புகள்!
இந்தப் பூச்செடிகள் புன்னகைக்க
கசியும் கண்ணீர் துடைப்பது
கடமையாகட்டும் இந்தச் சமூகத்துக்கு!
நமது ஒரு கவளம் உணவு
ஓராயிரம் எறும்புக்கு விருந்து!
மழைபோல மனம் நனைத்து
மகிழச்செய்து மகிழ்ந்திருப்போம்!
டிசம்பர் 2021, ஜனவரி 2022 மற்றும் பிப்ரவரி 2022 மாதங்களின் சிறந்த படைப்புப் போட்டி முடிவுகள் காண இங்கு கிளிக் செய்யவும்
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇
GIPHY App Key not set. Please check settings