in ,

இதனை இதனால் (சிறுகதை) – செல்வம். T

எழுத்தாளர் செல்வம் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

விடிந்தால், தான் ஒரு தொழிற்சாலையின் உற்பத்தி பிரிவின் மேலாளர் என்ற புதிய பதவியில் அமர இருக்கும் அந்த நிகழ்வை எண்ணி பூரித்துக்கொண்டே, அடிவயிற்றில் பட்டாம்பூச்சி சிறகடித்துப் பறக்கும் வாழ்வின் அந்த அழகிய அற்புத நொடிகளை அனுபவித்துக் கொண்டு இருந்தான் அழகர்.

எத்தனையோ மனித மனங்கள் எதிர்பார்த்து ஏங்கி கொண்டு இருக்கும் பதவி, தனக்கு கிட்டியது என்று எண்ணி மகிழந்து கொண்டு இருக்கும் அதே வேளையில், “புதிய பதவியுடன் உற்பத்தி திறனில் அடி வாங்கி கொண்டு இருக்கும் அந்த தொழிற்சாலையை எப்படி நிர்வாகம் செய்யப் போகிறோம், எப்படி சரி செய்யப் போகிறோம்” என்ற எண்ண ஓட்டமும் ஒரு ஓரத்தில் ஓடிக்கொண்டு இருந்த நேரத்தில் “ஒரு காட்டுல சிங்க ராசா இருந்தாராம்” என தன் மகளுக்கு கதை சொல்லும் தன் தாயின் குரல் அந்த எண்ண ஓட்டத்தை நிறுத்தியதை உணர்ந்தான் அழகர்.

“அந்த காட்டுல திடீரென உணவுக்கு தட்டுப்பாடு வந்ததாம், அப்ப அந்த மிருகங்களுக்கு என்ன செய்வது என்றே தெரியமால் தவித்துக் கொண்டிருந்தனவாம். அதிலிருந்து தங்களைக் காக்க என்ன செய்ய வேண்டும் என ஆலோசிக்க சிங்க ராசா கூட்டத்தை கூட்டி அங்கே சிங்க ராசா தன் திட்டத்தை சொன்னாராம்.

என் ஒருவனால் இந்த உணவு தட்டுப்பாட்டை தீர்க்க முடியாது. நாம் ஒவ்வொருவரும் அவரவர் திறனுக்கு ஏற்றார் போல், ஒருங்கிணைந்து உழைத்து உணவை சேகரித்து சேமித்து வைக்க வேண்டும், அது நம்மை இந்த உணவு தட்டுப்பாட்டிலிருந்து காப்பாற்றும், இதை நாம் தனித்தனியாக இருந்து செயல்படுத்த முடியாது. நம் ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை இருக்கிறது, அதை பயன்படுத்தி ஒற்றுமையுடன் செயல்பட்டு, அவரவர் பணியை திறம்பட செய்ய வேண்டும்.

இதைக் கவனமுடன் கேட்டுக் கொண்டிருந்த விலங்கு கூட்டத்திடம் தன் திட்டத்தை சொல்ல ஆரம்பித்தார் சிங்க ராசா, “வேகமாக ஓடும் திறன் படைத்த முயல்கள் இந்த காட்டின் எந்த பகுதியில் உணவு எளிதாக கிடைக்கும் என்ற தகவல்களை சேகரிக்கட்டும். மற்ற விலங்குகள் அங்கே சென்று உணவை சேகரிக்கட்டும். பலம் படைத்த யானைகள் அந்த உணவை அங்கிருந்து சுமந்து வரும் பணியை செய்யட்டும், கூரிய கண்களை கொண்ட கழுகுகள் உயரே பறந்து கொண்டு பணிகளை கண்காணிக்கட்டும், தந்திரக்கார நரிகள் இந்த பணிகளை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்ற திட்டத்தை வகுக்கடட்டும்” என்று தன் பேச்சை முடித்தார் சிங்க ராசா.

இது எல்லாம் எப்படி சாத்தியமாகும் என்று சந்தேகம் கொண்ட விலங்கு கூட்டத்திடம், நம்பிக்கையுடன் பணியாற்றுங்கள் என ஊக்கமளித்து தன் குகையை நோக்கிச் சென்றார் சிங்க ராசா.

சில நாட்களிலே விலங்கு கூட்டத்தின் உழைப்பால் உணவு சேகரிப்பின் அளவு அதிகரிக்கத் தொடங்கியது. விலங்கு கூட்டம் மகிழ்ச்சியில் இன்னும் கடினமாய் உழைத்து உணவுத்தட்டுப்பாடு இல்லை என்ற நிலையை அடைந்தது. அனைவரும் இன்பமாய் வாழத் தொடங்கினர் என கதையை நிறைவு செய்து குழந்தையை தூங்க வைத்த தன் அன்னை, தன் பிரச்சனைக்கும் தீர்வு சொன்னதை கேட்ட மகிழ்ச்சியில் “இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்” என்ற குறளை முணுமுணுத்துக்கொண்டே நித்திரை தேவியின் அரவணைப்பில் இன்புறத் தொடங்கினான் அழகர்.

எழுத்தாளர் செல்வம் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    நினைவெல்லாம் நீயே! (கவிதை) – நேத்ரா பாலாஜி

    காதலர் இருவர் கருத்தொருமித்து (சிறுகதை) – உமா.M