in

வைராக்கியம் ❤ (பகுதி 8) – ✍ சுபாஷினி பாலகிருஷ்ணன், கோவை

வைராக்கியம் ❤ (பகுதி 8)

பிப்ரவரி 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

பகுதி 1   பகுதி 2    பகுதி 3  பகுதி 4  பகுதி 5  பகுதி 6  பகுதி 7

“அப்ப கூட இருக்கற வரைக்கும் தான் எல்லாம்” என்று மனதுக்குள் ஏதோ சங்கடப்பட்டவனாய் கார்த்திக் தன் அறைக்குச் செல்ல, அர்ஜுன் உட்கார்ந்து கொண்டு தன் வீட்டுப் பாடங்களை எழுதிக் கொண்டிருந்தான். பிறகு கார்த்திக், சந்தியாவந்தனம் செய்துவிட்டு தில்லை நடராஜரைப் பார்க்கக் கிளம்பினான்.

சரியாக அப்பா எதிரில் வர, “கோயில் வரைக்கும் போய்ட்டு வந்துடறேம்ப்பா” என்றான்.

திரும்ப வந்தவன் ஊருக்கு வேண்டிய துணிகளை அடுக்கி வைத்துக் கொள்ள, உப்பில் ஊறவைத்த நார்த்தங்காய் ஊறுகாயையும், பொடி வகைகளையும் கட்டிக் கொடுத்தாள் அம்மா.

“எப்படியிருக்கு உன் பேங்க் வேலை? ஒன்னும் பிரச்சினை இல்லையே” என்ற அப்பாவிடம்

“நன்னா போறதுப்பா, நீங்க ரெண்டு பேரும் உங்க உடம்பை பாத்துங்கோங்கோ” என்று சொல்லும் போதே கார்த்திக்கின் கண்களில் கண்ணீர் வந்தது.

“கவலைப்படாத. எதுக்கு படிக்க வக்கறோம், நல்லா படிச்சு ஒரு உத்தியோகத்துக்கு வரத்தான. என்னால முடிஞ்ச அளவுக்கு உழைச்சாச்சு. ஒரு குழந்தைய ஓரளவு தான் மரமேற கத்துத்தர முடியும். அதுக்கு மேல அவா அவா தான் ஏறிக்கணும். என்னால முடிஞ்சத உங்க எல்லாருக்கும் பண்ணீட்டேன்” என்றார் சுந்தரேசன்.

அப்பா சொல்லாமல் சொன்ன அத்தனை விஷயங்களும் கார்த்திக்கிற்குப் புரிந்தது. ஒரு அப்பாவாக மூன்று மகன்களையும், மகளையும் வித்தியாசம் பாராட்டாமல் படிக்க வைத்தார் அப்பா.

விளையாட்டுத்தனமாய் இருந்தாலும் கார்த்திக் டிகிரி முடித்ததால் வங்கிப்பணி சாத்தியமாயிற்று. மற்ற இருவரும் பள்ளிப்படிப்புடன் நிறுத்திக் கொண்டு ஹோட்டல் தொழிலுக்கு வந்தார்கள்.

இந்துவும் கல்லூரிப் படிப்பை முடிக்க, அரசாங்கப்பணியிலுள்ள மாப்பிள்ளை வரன் அமைந்து வந்ததால் திருமணத்தை முடித்து வைத்தனர்.

“எந்த ஊர்ல வேலைக்குப் பொழைக்கப் போனாலும், சொந்த ஊருக்கு வந்து போற பழக்கத்தை வச்சுக்கோ. போய் வந்தா தான் எல்லாம்” என்று தோளைத் தட்டிக் கொடுத்துவிட்டு தன் ஈஸிசேரில் போய் படுத்துக் கொண்டார்.

நந்தினியை நடுவில் ஒரு முறை போய் பார்த்துவிட்டு வந்தான் கார்த்திக். சிறிது நாட்களில் அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள் நந்தினி.

பதினோராம் நாள் நாமகரண புண்யாஜன விசேஷத்திற்கு சுந்தரேசன், சீதாலட்சுமி தம்பதியினரும், நாத்தனார் இந்துவும், மாப்பிள்ளையும் வீட்டிற்கு வந்தனர்.

சுந்தரேசனின் தந்தையான பாலகிருஷ்ணனின் பெயரைக் குழந்தைக்குச் சூட்டியவர்கள், மூன்று முறை குழந்தையின் காதில் அப்பெயரை அழைத்துவிட்டு, “நீ எங்க வீட்டுச் செல்ல குட்டி கிருஷ்ணா” என்று செல்லமாக அழைத்தனர்.

மூன்று மாதம் கழித்து தாளவாடிக்கு நந்தினியையும் பேரன் கிருஷ்ணாவையும் கொண்டு வந்து விட்டனர் ரகு தம்பதியினர்.

அத்தனை நாட்கள் தனிமையில் இருந்தவனுக்கு நந்தினியும், கிருஷ்ணாவும் வீட்டுக்கு வந்தது சந்தோஷமாக இருந்தது. குழந்தையை கார்த்திக் பார்த்துக் கொள்ள, அந்த நேரத்தில் சமையல் வேலைகளை முடித்துக் கொள்வாள் நந்தினி.

டி.வி, கட்டில், டைனிங் டேபிள், இரண்டு சக்கர வாகனம் என வீட்டிற்கு வேண்டிய ஒவ்வொரு பொருளாக வாங்கினான் கார்த்திக்.  பிறகு வங்கியில் ஆஃபீஸர் ப்ரமோஷன் கிடைத்ததால் பெங்களூருக்குப் பணியிடமாற்றம் கிடைத்து குடும்பத்துடன் பெங்களூர் சென்றான்.

பெங்களூர் நகரவாழ்க்கை தாளவாடி கிராம வாழ்க்கைக்கு முற்றிலும் வேறாக இருந்தது. பெங்களூரில் பசவனகுடிக்கு அருகில் வீடு பார்த்து குடும்பத்துடன் குடியேறினான் கார்த்திக்.

கார்த்திக்கை வேலைக்கு அனுப்பி விட்டு, தொட்ட(பெரிய)கணபதி கோவிலுக்கும், சாயிபாபா கோவிலுக்கும் சென்று விட்டு, வரும் வழியில் காந்தி பஜாரில் வீட்டுக்கு வேண்டியதை ‌வாங்கிக் கொண்டு வருவாள் நந்தினி.

இதற்கு நடுவே நந்தினியின் அண்ணா கணேஷ் சொந்த வீடு வாங்கி கிரஹப்ரவேசத்திற்கு அழைக்க, கார்த்திக் குடும்பத்துடன் போய்விட்டு வேலையிருந்ததால் மறுநாளே திரும்ப வந்து விட்டார்கள்.

தன் மகன் கணேஷ் சொந்த வீடு வாங்கியதில் ரகு, மைதிலி அளவில்லா மகிழ்ச்சியடைந்தனர். குடும்பத்துடன் புது வீட்டில் குடியேறினார்கள்.

தாங்கள் பட்ட கஷ்டத்திற்குப் பலனாக தங்கள் மகன் கடைசி காலத்தில் நன்றாக வைத்திருக்கிறான் என்ற நிறைவு அவர்களுக்கு எப்போதுமே இருந்தது.

கணேஷின் மனைவி வித்யாவும், தங்கை புவனாவும் ஒரே மாத இடைவெளியில் கருத்தரித்தார்கள். கணேஷின் மனைவி வித்யா ஒரு மகன், மகள் என இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள். அகமதாபாத்தில் அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள் புவனா.

வித்யாவிற்கும், புவனாவிற்கும் ஒரே நேரத்தில் பிரசவநேரம் வந்ததால் புவனாவின் மாமியாரே அகமதாபாத்தில் புவனாவின் பிரசவத்தைப் பார்த்துக் கொண்டாள்.

கார்த்திக்குடன் சென்று கணேஷின் குழந்தையை ஒருமுறை பார்த்துவிட்டு வந்தாள் நந்தினி. புவனாவோடு தொலைபேசியில் பேசியவள், குழந்தை சிறிது பெரியவனாவுடன் குடும்பத்துடன் ஊருக்கு வந்து பார்ப்பதாகச் சொன்னாள். இருவரும் தூரமாக‌ இருந்தாலும் அடிக்கடி தொடர்பில் இருந்தனர்.

வயதான காரணத்தாலும் ஹோட்டல் தொழிலில் ஓட்டம் சிறிது குறைந்திருந்ததினாலும், அதை நினைத்து கவலைப்பட்ட கார்த்திக்கின் அப்பா சுந்தரேசனின் உடல்நலம் பாதிக்கப்பட்டது.

சிறிது காலம் தானுண்டு தன் வேலையுண்டு என்று வீட்டுக்குள் நடமாடிக் கொண்டிருந்தவருக்கு, ஒருநாள் காலை கொஞ்சம் முடியாமல் போனது.

சீதாலட்சுமி மாமியை எழுப்பியவர், “நெஞ்சு என்னவோ பண்றது சீதா. யாரோ நெஞ்சைப் பிடிச்சு அழுத்தறது மாதிரி இருக்கு, கொஞ்சம் வெந்நீர் குடேன்” என்று கேட்க, எழுந்த சீதாலட்சுமி மாமி சமையற்கட்டுக்குள் சென்று அவசரமாய் வெந்நீர் கலந்து எடுத்து வந்தாள்.

வெந்நீரை வாங்கி குடிக்கக் குடிக்க, நாற்காலியிலேயே நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சாய்ந்தார் சுந்தரேசன்.

“பாலு, இங்க வாடா. அப்பா என்னவோ போல பண்றா, பயமா இருக்குடா” என்று சொல்ல, வந்து பார்த்தவன் உடனே டாக்டருக்கு ஃபோன் அடிக்க, சிறிது நேரத்தில் வந்த டாக்டர் மாரடைப்பால் சுந்தரேசன் இறந்து விட்டார் என்பதை உறுதிப்படுத்தினார். வீட்டின் ஆணிவேரே விழுந்ததில் குடும்பமே ஆடிப்போனது.

பெரியவன் பாலுவும், சீனுவும், கார்த்திக்கிற்கும், இந்து மற்றும் பிற சொந்தங்களுக்கும் ஃபோன் செய்து அப்பா இறந்துவிட்ட தகவலைச் சொன்னார்கள்.

எல்லோரும் சேர்ந்து பதிமூன்று நாட்கள் சிதம்பரத்தில் தங்கி எல்லா காரியங்களையும் முடித்துக் கொண்டு கிளம்பினார்கள்.

ஊருக்குக் கிளம்பும் போது, “என்னோடு வாயேம்மா. கொஞ்ச நாள் இருந்துட்டு தான் வருவயாம்” என்ற கார்த்திக்கிடம்

“உங்க அப்பா வாழ்ந்த இந்த வீட்டுலயே என்னோட உயிரும் போகணும்’ங்கறது தான் என்னோட ஆசை. வரக்கூடாதுன்னுல்லாம் இல்ல. எங்க குழந்தைங்க தான் எங்க உலகம்னு வாழ்ந்தவங்கடா நாங்க. நீ ஊருக்கு கிளம்பு, அப்பப்போ வந்துட்டு போ” என்றாள் அம்மா.

மதுவும், ஆர்த்தியும் வீட்டின் மொத்த வேலைகளையும் பார்த்துக் கொள்ள, மேல் வேலைகளை மட்டும் அவ்வப்போது செய்தவள்,  முடியாதபோது படுத்துக் கொண்டாள்.

சுந்தரேசன் இறந்த பிறகு, அதிகம் பேசாமல் இருந்த சீதாலட்சுமி மாமி, ஒரே வருடத்திற்குள் தவறியும் போனாள்.

“மாமாவுக்கு சீதா மாமி இல்லாம முடியாது, அது தான் ஒரு வருஷத்துக்குள்ளயே கூட்டீண்டு போய்ட்டா” என்று அக்ரஹாரமே பேசிக் கொண்டது.

அம்மா அப்பாவிற்கும் பிறகு வீட்டை என்ன செய்வது என்ற கேள்வி வந்தபோது, ‘அம்மா அப்பா ஞாபகமா இந்த வீட்டை வச்சுக்கலாம். இப்போதைக்கு விற்கும் பேச்சே வேண்டாம்’ எல்லோருமாக முடிவு எடுத்தனர்.

காரியங்களை முடித்து விட்டு வந்த பிறகு, பெங்களூர் திரும்பிய கார்த்திக்கிற்கு பெற்றவர்களின் நினைவாகவே இருந்தது.

தனியாக உட்கார்ந்து வருத்தப்படுபவனை சமாதானப்படுத்திய நந்தினி, “நம்ம கிருஷ்ணனோட நடை உடை எல்லாமே உங்க அப்பாவை தான் ஞாபகப்படுத்தறது. உங்க அப்பா எங்கேயும் போகல, நம்மளோட கூடவே தான் இருக்கார். ரெண்டு பேரோட ஆசீர்வாதம் என்னைக்கும் உங்களுக்கு இருக்கும்” என்றாள் நந்தினி.

பிறகு ஆஃபீஸ் விடுமுறை நாட்களில் லால்பார்க், விஸ்வேஸ்வரய்யா அருங்காட்சியகம், தமிழ்ச்சங்க விழாக்கள் என்று அடிக்கடி குடும்பத்துடன் வெளியே சென்று மனதை லேசாக்கிக் கொண்டான் கார்த்திக்.

நாட்களும் அழகாக நகர்ந்து கொண்டிருந்தது. பொதுவாகவே அதிகம் பயணத்தை விரும்பும் கார்த்திக், இரண்டு மூன்று நாட்கள் விடுமுறை கிடைத்தால் பேளூர், ஹலபேடு, தர்மஸ்தசலா, கொல்லூர் என குடும்பத்துடன் வெளியே கிளம்பி விடுவான்.

அப்படி ஒருதரம் குலதெய்வமான திருப்பதிக்குச் சென்று விட்டு தரிசனத்தை முடித்துக் கொண்டு வரும் வழியில் மகன் கிருஷ்ணா ஒரு விளையாட்டு பொம்மையைக் கேட்க, நந்தினி இப்போது வேண்டாம் என மறுத்துக் கொண்டிருந்தாள்.

“நீ இரு, பையனத் திட்டாத. நான் போய் வாங்கீண்டு வரேன்” என்று சொல்லிவிட்டுக் கடைக்குச் சென்றவன், பொம்மையை வாங்கிவிட்டுத் திரும்பும்போது

“அப்பா” என அழைத்த கிருஷ்ணாவைப் பார்த்து விட்டு கவனிக்காமல் ஒரு நிமிடம் சாலையைக் கடக்க முயற்சிக்க, அந்த வழியே வந்த பேருந்து கார்த்திக்கை இடித்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்தவனின் கால்களில் பேருந்தின் பின்னாலிருந்த டயர் ஏறி இறங்கியது.

ஒரு வினாடியில் எல்லாமே நடந்து முடிந்து விட்டது. கண்ணெதிரே நடந்த விபத்தை நேரில் பார்த்த நந்தினிக்கு மயக்கம் வர, கையைப் பிடித்துக் கொண்டிருக்கும் மகனை நினைத்தவள், மனதை திடப்படுத்திக் கொண்டாள்.

உடனே ஓடிச் சென்று பார்க்க நிறைய ரத்தம் போய்க் கொண்டிருந்தது.

வலியில் துடித்தவன் நந்தினியிடம், “பக்கத்துல… ஹாஸ்பிடல்ல…” என சொல்லிக் கொண்டே மூர்ச்சையானான். புரிந்து கொண்டவள் இருகைகளையும் கூப்பி அங்கிருந்த எல்லோரிடமும் உதவி கேட்டாள்.

சிலர் வேடிக்கை பார்த்து விட்டு நகர்ந்து சென்றனர். உடனே யாரோ ஒரு நல்ல மனிதர் அதற்குள் ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவிக்க, அரைமணி நேரத்தில் வந்த ஆம்புலன்சில் கார்த்திக்கை ஏற்றி அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கிருந்தவர்களில் நந்தினியின் நிலையைப் பார்த்த இருவர் மருத்துவமனைக்கும் கூடவே வந்தனர்.

வேறு மாநிலம். “எப்படி ஆச்சு? எந்த ஊர்லருந்து வரீங்க?” என்று மருத்துவமனையில் தெலுங்கில் கேட்க, நந்தினிக்கு அழுகை வந்தது.

“ஐ நோ தமிழ் ஒன்லி… பெங்களூர்” என அழுதுகொண்டே சொல்ல, கூட வந்தவர்கள் நந்தினியின் விவரத்தைக் கேட்டுக்கொண்டு மருத்துவமனை ஊழியர்களிடம் தெரிவித்தார்கள்.

சேலத்திலிருந்து திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வந்ததாகச் சொன்னவர்கள் தாய்மொழி தெலுங்கென்றும், சேலத்தில் வெள்ளிக்கடை வைத்திருப்பதாகவும் சொன்னார்கள்.

நந்தினியின் பிறந்த வீட்டிலும், புகுந்த வீட்டிலும் விபத்து நடந்த விவரத்தையும், மருத்துவமனையின் விவரத்தையும் அவர்களின் உதவியுடன் தெரிவித்தாள் நந்தினி.

கார்த்திக்கை உடனே அவசரபிரிவு சிகிச்சை அறைக்குக் கொண்டு சென்றவர்கள், ஒருமணி நேரமாகியும் வெளியே வரவில்லை.

பிறகு வெளியே வந்த டாக்டர், “பேருந்து ஏறி இறங்கினதுல ரெண்டு கால்களிலிருந்த எலும்புகளெல்லாம் சுக்குநூறா போயிடுச்சு. அதனால கால எடுக்கறது தான் நல்லது. இருந்தாலும் இன்னொரு டாக்டரைமும் வரச் சொல்லியிருக்கோம். அவரோட ஆலோசனையையும் கேட்டுட்டு ஒரு முடிவைச் சொல்றோம்” என்றார்.

பரிசோதித்த மற்ற டாக்டர்களும் கால்களை எடுக்க வேண்டும் என்றே பரிந்துரைக்க, கதறி அழுதாள் நந்தினி.

(தொடரும் – ஞாயிறு தோறும்) 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    உன் வாழ்க்கை உன் கையில் – நாவல் (பகுதி 3) – ✍ ஸ்ரீவித்யா பசுபதி, சென்னை

    நீ எனதின்னுயிர் கண்ணம்மா ❤ (பகுதி 8) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை