in

கீதாச்சாரம் (சிறுகதை) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

கீதாச்சாரம் (சிறுகதை)

ஆகஸ்ட் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

மையல் அறையில் பாத்திரங்களை உருட்டிக் கொண்டிருந்தாள் மங்களம். பில்டர் காபி வாசனை சமையல் அறையிலிருந்து ஹால் வழியாகத் தவழ்ந்து ராஜாராமனின் மூக்கைத் துளைத்தது.

காலை மணி ஆறு. சென்னை தி.நகரில் ஒரு த்ரீ பெட்ரூம் அபார்ட்மெண்ட்.  ராஜாராமன் ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி, மங்களம் மாமியும் ஓய்வூதியம் பெறும் ஆசிரியை தான்.

இப்போது அவர்கள் தங்கள் இரண்டு பிள்ளைகளின் ஆதரவில் இருக்கிறார்கள். பெரியவன் ராம்குமார் ஒரு ஜட்ஜ். மனைவி ஒரு கட்சியிலும், அவனைப் பெற்ற தாய் ஒரு கட்சியிலும் இருந்தால், அவன் தன் பதவியை சரியாக கையாள்வான்.

யார் வலுவாக வாதாடுகிறார்களோ, யாருடைய சாட்சி பலமாக இருக்கிறதோ அவர்கள் பக்கம் தான் தீர்ப்பு வழங்குவான். அந்த தீர்ப்பு பெரும்பாலும் மனைவிக்கு சாதகமாகவே  இருக்கும். அவன் அம்மாவிற்கு பள்ளியில் பாடம் எடுக்கவும், வீட்டில் பாத்திரம் தேய்க்கவும் தான் தெரியுமே தவிர, பலமாக வாதிடவோ, தன் கட்சிக்கு சாட்சி தயார் செய்யவோ தெரியாது. அதனால் அவளுடைய கேஸ் பெரும்பாலும் தள்ளுபடி செய்யப்படும்.

மருமகள் வர்ஷிணிக்கும் மாமியாருக்கும் பெரும்பாலும் எட்டாம் பொருத்தம் தான். மங்களம் அந்த காலத்து மனுஷி. விடியற்காலை ஐந்து மணிக்கே எழுந்து குளித்து விட்டுத் தான் சமையல் அறைக்குள் நுழைவாள். ஆனால் வர்ஷிணியோ காலை ஒன்பது மணிக்கு மேல் தான் தன் நைட் பேண்ட்டில், வாயில் பிரஷுடன் சமையல் அறைக்குள் நுழைவாள்.

“இதென்ன கோலம்! எச்சிலும் பிரஷுமாக அசிங்கம். குளித்துவிட்டு உள்ளே வா” என்றாள் மங்களம் ஒரு நாள் எரிச்சலுடன்.

அன்று ஒரு மூன்றாம் பானிபட் யுத்தமே நடந்து முடிந்தது. “கோவிட்” தீவிரமானதால்  வேலைக்காரியையும் நிறுத்தி விட்டான் ராம்குமார். ஏற்கனவே சமையல் வேலையில் யார் உதவியும் இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருந்தாள் மங்களம். இப்போது வேலைக்கு ஆளும் இல்லாததால் பாத்திரம் தேய்ப்பது முதல் வீடு துடைப்பது வரை எல்லா வேலையும் அவள் தலையில் விழுந்தது.

காலை ஒன்பது மணிக்கு எழுந்து வரும் வர்ஷிணியோ,  நைட் டிரஸ் மட்டும் மாற்றிக் கொண்டு கையில் காபி கோப்பையுடன் தன் ஒன்பது வயது மகனுடன் கம்ப்யூட்டர் எதிரில் ஆன்லைன் வகுப்பில் உட்கார்ந்து விடுவாள்.

நின்று கொண்டு ஸிங்க்கில் பாத்திரம் தேய்ப்பது முதல் சமையல் மொத்தமும் செய்ததால் மங்களத்திற்கு மூட்டுவலி வந்து விட்டது. வலி தாங்காமல் அன்று கண்கள் கலங்கி விட்டன. அதைப் பார்த்த ராஜாராமனுக்கு மனம் மிகவும் கலங்கியது.

மகனும் மருமகளும் ஒன்றாய் மாடியில் இருந்து இறங்கி வரும் போது ராஜாராமன், “ராம்குமார், உங்கள் அம்மா, வேலைக்காரியையும் நிறுத்திய பிறகு எல்லா வேலைகளையும் செய்தால் முழங்கால் வலிக்கிறது என்று சிரமப்படுகிறாள். கொஞ்சம் வர்ஷிணி அவளுக்கு உதவி செய்தால் உதவியாக இருக்கும் அல்லவா?” என்றார்.

ராம்குமார் மனைவியைப் பார்க்க, “எனக்கு வேலை செய்து பழக்கம் கிடையாது, ஏன் நீங்கள் உங்கள் மனைவிக்கு உதவி செய்யலாமே?” என்றாள் மருமகளாக வந்த மகாலட்சுமி.

“பாத்திரம் தேய்ப்பதிலும், சமையல் செய்வதிலும் ஒரு ஆண் பிள்ளை எப்படியம்மா உதவ முடியும்?” என்றாள் மங்களம்.

“ஏன், இதில் ஆண் என்ன, பெண் என்ன இருவரும் ஒரே சாப்பாடு தானே சாப்பிடுகிறோம். இப்போதெல்லாம் அலுவலகத்தில் ஆணும், பெண்ணும் ஒரே வேலையை செய்வதில்லை?” என்று விவாதம் செய்தாள் வர்ஷிணி.

ராம்குமார் ஒன்றும் பேசத் தோன்றாமல் வாயடைத்து நின்றான். அப்போது மங்களம், “நீ வக்கீலாகவே இருந்திருக்கலாம். ஜட்ஜாகிப் போனதால், எதிர்தரப்பு வக்கீல், சாட்சி எல்லாம் இருந்தால் தான் வாய் திறந்து பேசுவாய் போலிருக்கிறது” என்றாள் மங்களம் எகத்தாளமாக.

“என்னம்மா சொல்கிறாய்?” என்றான் ஜட்ஜ் மகன்.

“பின்னே என்னடா? வேலைக்காரி கூட சம்பளம் வாங்கிக் கொண்டு தான் வேலை செய்கிறாள். நாங்கள் எங்கள் பென்ஷனில்  இருந்து ஒவ்வொரு மாதமும் முப்பதாயிரம் கொடுத்து விட்டுத் தான் இங்கே  இருக்கிறோம். அதனால் கொஞ்சம் மரியாதையோடு நடத்தினால் நன்றாக இருக்கும்” என்றாள் துக்கம் தொண்டையை அடைக்க.

ஒரு வாரம் எந்த சலனமும் இல்லாமல் அமைதியாக ஓடியது. சுவரில் பகவத்கீதையின் கீதோபதேசம் படமாக மாட்டப்பட்டிருந்தது. பேரன் ரிஷி அதை எழுத்துக் கூட்டிப் படித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு தமிழ் மட்டும் கொஞ்சம் தகராறு.

படித்தவன், தன் பாட்டியிடம், “பாட்டி, கீதோபதேசத்தில், ‘எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவனுடையது’ என்று எழுதியிருக்கிறது, அதற்கு என்ன அர்த்தம்?” என்றான் படத்தில் இருந்து கண்களை அகற்றாமல்.

பாட்டி வாயைத் திறந்து அவனுக்கு பதில் சொல்வதற்குள், தெருவில் காய்கறி வண்டிக்காரன், “அம்மா காய்” என்று கத்தும் குரல் கேட்டு, “கண்ணா, ஒரு நிமிடம் இரு வருகிறேன்” என்று ஒரு கூடையை எடுத்துக் கொண்டு தெருவிற்கு ஓடினாள்.

காய்கறி வாங்கி வந்தவள், “அவசரத்தில் காசு எடுத்துப் போக மறந்துவிட்டேன்” என்றவள், பேரன் கம்ப்யூட்டர் எதிரில் ‘ஆன்லைன்’ வகுப்பில் இருக்கவும், சத்தமில்லாமல் தன் ஹேண்ட் பேகில் துழவியவள் அதில் ஒன்றும் இல்லாமல் போக, தன் கணவரைப் பார்த்தாள்.

அவரோ செய்தித்தாள் மார்பில் சரிய ஈஸி சேரில் கண்களை மூடி லேசான குறட்டையுடன் தூங்கிக் கொண்டிருந்தார். வர்ஷிணி மகனுடன் ஆன்லைன் வகுப்பில் இருந்தாள். அதனால் மாடியில் தன் மகனின் மணிபர்ஸில் இருந்து பணம் எடுத்துக் காய்கறி விற்பவனிடம் கொடுத்து விட்டு வந்து தன் வேலையில் மூழ்கினாள். 

சிறிது நேரத்தில் மகனும், மருமகளும் போர்க்கோலத்தில் மங்களம் எதிரில் தோன்றினர். ‘என்ன?’ என்பது போல் அவர்களைப் பார்த்தாள்.

“அம்மா, நீ என் பர்ஸிலிருந்து பணம் எடுத்தாயா?” ராம்குமார்

“ஆமாம், என் ஹேண்ட் பேகில் பணம் இல்லை. உன் அப்பா தூங்கிக் கொண்டிருந்தார். கீழே காய்கறி வண்டிக்காரன் காத்திருந்தான். அதனால் எடுத்தேன். அதற்கென்ன?” என்றாள் அலட்சியமாக.

“உன்னால் எப்போதும் பிரச்சினை தான் அம்மா. எது ஒன்றும் கேட்டு செய்ய வேண்டாமா? ” என்றான்.

“எங்கள் அனுமதி இல்லாமல் எங்கள் அறைக்கே வரக்கூடாது. நீங்கள் எப்படி கேட்காமல் பர்ஸில் கை வைக்கலாம்” என்றாள் வர்ஷிணி கோபமாக.

“காய்கறி வாங்குவதற்குத் தானே நான் பணம் எடுக்க உங்கள் அறைக்கு வந்தேன். அதுவும் என் பிள்ளையின் பர்ஸிலிருந்து தான் நான் பணம் எடுத்தேன். அதில் உனக்கென்ன நஷ்டம்?”

“அவர் உங்கள் பிள்ளை மட்டும் அல்ல, என் கணவரும் கூடத்தான். தாயும் பிள்ளையும் ஆனாலும் வாயும் வயிறும் வேறு தான்” என்று கத்தினாள் வர்ஷிணி.   

“வேண்டும் என்றே சின்ன விஷயத்தை பெரியதாக்கி எவ்வளவு பெரிய சண்டையாக்குகிறாள் பார் உன் மனைவி” என்றாள் மங்களம்.

“அவள் சொல்வதில் என்னம்மா தப்பு? நீங்கள் இன்னும் கொஞ்சம் நாகரீகமாக நடந்திருக்கலாம். நீங்கள் கொஞ்சம் புரிந்து நடந்து கொள்ளுங்கள். உங்கள் லிமிட் தாண்டி உரிமை எடுத்துக் கொள்கிறீர்கள், மிகவும் வெறுப்பாக இருக்கிறது” என்றான் நீதிபதி மகன்.

எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த ரிஷி தன் தாத்தாவிடம், “தாத்தா கீதோபதேசத்தில் நான் கேட்ட சந்தேகத்தின் பொருள் புரிந்து விட்டது” என்றான்.

“என்னடா புரிந்தது?”

“எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவனுடையது என்பது தானே கீதை. பாட்டிக்கு நேற்று வரை அப்பாவிடம் உரிமை, இன்று அப்பா அம்மாவின் உரிமை. கரெக்டா தாத்தா” என்றான்.

று மாதம் பெரிய பிள்ளையிடம் இருந்து விட்டார்கள். அடுத்த ஆறு மாதம் சிறிய மகன் டாக்டர் லட்சுமண குமாரிடம் வந்து விட்டார்கள்.

ராஜாராமனும் மங்களமும்  ஹாலில் உள்ள சோபாவில் அமர்ந்து  பேசிக் கொண்டிருந்தனர்.

“மங்களம் இப்போது எப்படி இருக்கிறது? ” என்றார் ராஜா ராமன்.

“காடாறு மாசம், நாடாறு மாசம் என்று என்ன பொழப்போ? நிலையான ஒரு இடம் இல்லை. பெரியவனிடம் வேலைக்காரியாக இருந்தேன். இளையவனிடம் கொரானா வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டது போல் இருக்கிறேன். இருவரும் டாக்டர்களாக இருக்கிறார்களே தவிர,  நல்ல மனிதர்களாக பிரியமாக இல்லை. யார் வீட்டிலோ சாப்பாட்டிற்காக காத்திருப்பது போல் இருக்கிறது. பேசாமல் நம் கிராமத்திற்குப் போய் விடலாமா?” என்று கேட்டுவிட்டு ஏக்கத்துடன் அவர் முகத்தைப் பார்த்தாள்.

“எனக்கும் அதேபோல் தான் தோன்றுகிறது. ஆனால் நாம் இருவரும் வயதானவர்கள். நமக்கு மருத்துவ வசதியும், நல்ல துணையும் வேண்டும். கொஞ்சம் பொறுத்துக் கொள்” என்றார்.

ராஜாராமன் தன் நெருங்கிய நண்பர்கள் சிலரிடம் ஏதேதோ விசாரித்துக் கொண்டிருந்தார். பிள்ளையும் மருமகளும் மருத்துவமனைக்கு சென்ற பிறகு ராஜாராமன் மங்களத்தை அழைத்தார்.

“மங்களம், ஸ்ரீ ரங்கத்தில் கொள்ளிடம் நதிக்கு அருகில் அமைதியான சூழலில் ஒரு சீனியர் சிட்டிசன் ஹோம் இருக்கிறதாம். என் நண்பன் நாராயணன் தன் மனைவியுடன் அங்கு தான் இருக்கிறான். சாப்பாடு, சுற்றுச்சூழல் எல்லாம் நன்றாக இருக்கிறது என்று சொல்கிறார். நாம் நாளை போய் பார்த்து விட்டு வரலாமா?” என்றார்.

“ஆஹா! தாராளமாகப் போய் வரலாம். நமக்கும் தான் உள்ளேயே அடைஞ்சு போர் அடிக்கிறதே! இப்போது லக்ஷ்மணிடம் ஒன்றும் சொல்ல வேண்டாம். அங்கே எல்லாம் பிடித்திருந்து போவது நிச்சயம் ஆனால் பிறகு சொல்லிக் கொள்ளலாம்” என்றாள் மங்களம்.

அடுத்த நாள் லட்சுமணன் இருவருக்கும் ஒரு லக்ஷுவரி பஸ்ஸில் தூங்கிக்  கொண்டு போக, வர ஒரு ரிட்டன் டிக்கட் ஏற்பாடு செய்தான். எதற்கு என்று அவனும் கேட்கவில்லை. இவர்களும் விளக்கமாக சொல்லவில்லை.

ஸ்ரீரங்கம், இருவருக்கும் மிகவும் பிடித்து விட்டது. காவிரி ஆற்றிற்கும், கொள்ளிடத்திற்கும்  இடையில் அமைந்த அந்த அழகான தீவு அவர்கள் இருவருக்கும் நல்ல மனஅமைதியை கொடுத்தது. அவர்கள் தங்கும் அந்த விடுதியும் மிக வசதியாக இருந்தது.

வெகு அருகில் இருந்த ஸ்ரீ ரங்கநாதர் கோயிலுக்கு தினம் காலாற நடந்து தரிசனம் செய்யலாம். என்ன அருமையான, தெய்வீகமான ஊர். இந்த மண்ணில் வாழ்பவர்கள் மிகவும் புண்ணியம் செய்தவர்கள் என்று நினைத்தாள் மங்களம்.

பிள்ளைகள் இருவருக்கும் தொலைபேசி மூலம் விஷயத்தை தெரிவித்தனர். லட்சுமணிடம் போனில் தாங்கள் விடுதியில் தங்கப் போவதைத் தெரிவித்த ராஜா ராமன் தங்கள் பொருட்களை கொரியர் மூலம் அனுப்பும்படி கேட்டுக் கொண்டார். ஆனால் அவனோ பதறியடித்துக் கொண்டு காரில் தன் மனைவியுடன் நேரில் வந்து அவர்கள் பொருட்களை கொடுத்து விட்டு இரண்டு நாட்கள் அவர்களுடன் தங்கி விட்டும் சென்றான்.

“லட்சுமண் பற்றி என்ன நினைக்கிறாய்?” என்றார் ராஜா ராமன்.

“என்ன நினைப்பது? யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே” என்றாள் கேலியாக சிரித்தபடி.

“புரியவில்லை! ” ராஜா ராமன்.

“உங்களுக்கா  புரியவில்லை. ? தூரத்து பச்சை கண்ணுக்கு அழகு. நாம் அவர்கள் வீட்டில் இருக்கும் போது பேசுவதற்குக் கூட கன்சல்டிங் பீஸ் கேட்பது போல் நடந்து கொண்டார்கள். இப்போது?” என்றாள் எரிச்சலாக

“விடு மங்களம், எதையும் பெரிசு பண்ணினால் வாழ முடியாது”

சில மாதங்கள் கழித்து ராம்குமார் தன் மனைவி மற்றும் மகனுடன் வந்தான். அங்கு விருந்தினர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஒரு அபார்மென்டில் தங்கிக் கொண்டார்கள்.

அப்பா, அம்மாவையும் அழைத்துக் கொண்டு திருவானைக்காவல், திருச்சி மலைக்கோட்டை எல்லாம் சென்று வந்தான்.

ஊரெல்லாம் சுற்றி விட்டு  இரவு விடுதிக்கு வந்தனர். குழந்தை ரிஷி மட்டும் தாத்தா, பாட்டியுடன் தான் படுப்பேன் என்று அடம் பிடித்து இவர்களுடன் வந்து படுத்து களைப்பில் உடனே தூங்கியும் விட்டான்.

பேரனின் முதுகில் லேசாகத் தட்டிக் கொடுத்துக் கொண்டு ராஜா ராமன், “மங்களம், உன் மகன் நிஜமாக நம்மைப் பார்க்கத்தான் வந்திருக்கிறான் என்று நினைக்கிறாயா?” என்றார்.

“அதுதான் எனக்கும் சந்தேகம். அவர்களோடு இருக்கும் போது ஒவ்வொரு பைசாவிற்கும் வர்ஷிணி அப்படி சண்டை போடுவாள். இப்போது பணத்தை தாராளமாக செலவு செய்கிறார்கள்” என்றாள் மங்களம் வியப்புடன்.

அடுத்த நாள் இவர்கள் வியப்பிற்கு விடை கிடைத்தது. ராம்குமார் மெதுவாகப் பேச்சைத் தொடங்கினான்.

“அப்பா, நீங்கள் இங்கே வசதியாக இருக்கிறீர்கள். நம் ஊரில் உள்ள நிலமும், அதில் உள்ள வீடும் எனக்கு கொடுத்து விடுங்கள் அப்பா. நான் அங்கு ஒரு ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் கம்பெனி வைக்கலாமென்று இருக்கிறேன் ” என்றான்.

சிறிது நேரம் மௌனம் காத்த ராஜாராமன், “ஸாரி ராம்குமார், அதை இந்த முதியோர் இல்லத்திற்குத் தானமாக பத்திரம் பதிவு செய்து விட்டேன். அதற்கு பதிலாக அவர்கள் எங்கள் இறுதி காலம் வரை பாதுகாக்க வேண்டும் என்று நிபந்தனை” என்றார்.

“யாரைக் கேட்டு அப்படி செய்தீர்கள்?” என்று கத்தினான் ராம்குமார்.

“தான் தோன்றி செயல்” என்றாள் மருமகள்.

“முதலில் வாயை மூடுங்கள். நான் பணியில் இருந்த போது அலுவலகம் மூலம் கடனில் வாங்கியது. அதை இவ்வளவு நாளும் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. எங்களையும் அன்னியராகத்தான் நடத்தினீர்கள். இப்போது எந்த முகத்தோடு உரிமை கொண்டாடுகிறீர்கள்” என்றார் ராஜாராமன்

இருவரும் அவமானத்தில் தலை குனிந்தனர். அந்த நேரத்தில் சமயோசிதமாக ரிஷி, “எதை நீ கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு, இல்லையா பாட்டி?” என்றவன், “பகவத் கீதையின் எல்லா வரிகளும், எல்லோருக்கும் பொருந்துகிறது” என்று ஆச்சரியப்பட்டான்.

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

2 Comments

சிறந்த படைப்புப் போட்டி முடிவுகள் – ஏப்ரல், மே, ஜூன் & ஜூலை 2022

அழைத்தான் அம்பலத்தான் (அத்தியாயம் 17) – ✍ செந்தமிழ் சுஷ்மிதா, குடியாத்தம்