கணம் தோறும் வியப்புகள் விழியிலே
கண்டெடுத்தேன் மயங்கும் இரசவாத
கனாவான மாலைப் பொழுதின் அந்திய
கலவர வானின் கவிதைக் கோலங்களிலே…
தவிப்பா… விரிப்பா…இயற்கையின் முகிழ்ப்பா..
கடலின் அலைகள் பாய்ந்து வந்து முத்தமிட்டு
தாண்ட முடியாத கரையின் தாளைத் தொட்டு
கவிழ்ந்து திரும்பும் நுரையின் முகிழ்வில்…
கடலோடு வானும் சங்கமிக்கும் காவியத்திலே..
கடல் கொள்ளும் மேகங்களின் ஓவியங்களிலே..
கவின் மிகு கதிரவனின் மஞ்சள் கதிர்கள்
கவிழ்ந்து சிதறி மனதில் கவி சொல்லுகையிலே…
மீனவரின் படகின் வேகத்தின் காற்றின் சிலிர்ப்பினிலே…
மீண்டு வரும் போர் வீரனாய் வலையில் சிக்கா
மீன்களினம் துள்ளிக் குதித்து வாலாட்டி நீந்துகையிலே…
மீள் படலம் சொல்லிச் செல்லும் தென்றலின் கிசிகிசுப்பினிலே..
ஓவியனின் தீட்டப் படாத கலையாத கவின் மிகு
ஓவியங்களாக கண்காட்சி தரும் வான் முகில்களின்
ஓவென்றே மலைக்க வைக்கும் இயற்கை தந்த
ஓவிய வண்ண வடிவங்களாய் படிந்து நிற்கும் மேகங்களின் நவீன வரை படங்களில்…
கவின் மிகு காட்சியாய் கவிழ்ந்து வரும் இரவின்
கலைமகள் கொண்டு வந்த மயக்கங்களில்…
பகலும் இரவும் உரசத்தொடங்கும் சின்ன சின்ன
பாக்கள் தரும் அந்திப் பொழுதின் உச்சங்களில்…
பஞ்சுப் பொதி மேகத்தோழிகளுடன் வான் வெளியின்
பால்வெளியில் உலா வரும் வட்ட வெண்ணிலாவில்…
பல்லவ மன்னனின் சிற்பங்களைப் பழிக்கும் விதமான
பலவித பாடம் சொல்லும் உருவ முகில்களின் தோரணங்களில்…
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் இதோ விரிந்தாடும்
எங்கள் கடலன்னையின் மடியிலே தானே..என்றே
மகிழ்ந்து கூத்தாடும் மீனவனின் விழிகளில்
எக்காள ஒலியில் விரியும் புன்னகையின் சிதறலிலே…
காலைத்தழுவிச்செல்லும் கடலின் அலையின் நுரைகள்…
காலின் கீழடியிலிருந்து பிடுங்கிச்செல்லும் மணலின் கவிழ்ப்பில் கவலை தோய்ந்த இதயம் தொடும் சின்ன பயத்தின் சரிவில்
காலின் ஆழ ஊன்றலில் திரும்பும் சுவாச சலனத்திலே..
களிப்புற்று கவியும் மயங்கும் மாலை கவிழும் வேளை
கடற்கரை முற்றத்திலே தவிக்கும் மனித மனமதிலே
கணம் தோறும் வியப்புகள் விழியிலே விரிந்திடுதே…
கவலை எல்லாம் பறந்திடுதே கலையின் காட்சி தனிலே…
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings