இந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்
சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 117)
அந்த பேருந்தில் நான் ஏறி அமர்ந்த போது மிக மென்மையான தூறல் தொடங்கி இருந்தது, எந்த ஒரு அவசரமும் இல்லாததால் என்னால் அந்த சாரலை ரசிக்க முடிந்தது.
எவ்வளவோ நாட்கள் ஆகி விட்டது இப்படி டவுன் பஸ்சில் தனியாய் அமர்ந்து, பளபளப்பான சில்வர் வண்ணத்தில் பச்சையோ, சிகப்போ, நீலமோ எதோ ஒரு நிறத்தில் ஜரிகை கட்டியது போன்ற வெளிப்புறமும், நிறைய இடம் விட்டு சின்ன சின்ன சீட்டுகள் அமைந்த உள்புறமும் கொண்ட இந்த பேருந்துகள் மேல் சின்ன வயதிலிருந்தே எனக்கு நிறைய பிடித்தம் உண்டு.
சீட் கிடைத்து உட்கார்ந்தால் நன்றாக இருக்கும் அப்படி உட்கார வழி இல்லாமல் நின்று கொண்டே வந்தால் கூட ஏனோ அலுப்பே தெரியாது, வேடிக்கை பார்த்து கொண்டே நிற்கும் கொஞ்ச நேரத்தில் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்து விடும்.
இந்த டவுன் பஸ்ஸுகள் பெரும்பாலும் ஊருக்குள்ளே தான் சுற்றும் திருநெல்வேலி ஒன்றும் அவ்வளவு பெரியது இல்லையே.
பேருந்து நகரத் தொடங்கியது.. அடுத்த நிறுத்ததில் கைக்குழந்தையுடனும், ஐந்து வயது பையனுடனும் ஒரு இளம் தாய் ஏறினாள். எனக்கு எதிர்த்த இருக்கையில் ஒரு இடம் காலியாக இருந்தது
அவள் அதில் அமர்ந்து கொண்டு என்னருகில் மகனை உட்காரவைத்தாள்.அவள் கையில் வைத்திருந்த குழந்தையின் கண்கள் அழகிய கருப்பு திராட்சையை போல மின்னியது சிலுசிலுவென்ற காத்திற்கு சிலிர்த்து மகிழ்ச்சியில் சிரித்தது அந்த குழந்தை
இந்த குழந்தைகளால் எப்படித் தான் புன்னகையை பரப்ப முடிகிறதோ ? அது சிரிப்பதை பார்த்துக் கொண்டே இருந்த குழந்தையுடைய அண்ணன் கொஞ்சம் சோகையாக சிரித்தான்.
என் அருகில் தயக்கத்துடன் அமர்ந்திருந்த அந்த சிறுவனின் கண்ணில் லேசான பயம் மிச்சமிருந்தது. நான் அவனை பார்த்து மென் புன்னகை சிந்தவும் பதிலுக்கு சிரிக்கலாமா வேண்டாமா என்ற யோசனையுடன் என்னைப் பார்த்தான்.
எனக்குள் என்னையும் அறியாமல் ஒரு பதட்டம் வந்து அமர்ந்து கொண்டது அந்த சிறுவனின் முகம் எனக்குள் வேறு ஒரு முகத்தை என் நினைவு படிமங்களில் இருந்து இழுத்து வந்தது.
அது கிட்டதட்ட முப்பதாண்டு காலமாய் மறக்கவே முடியாத முகம். மழை வலுக்கத் தொடங்கியது.
அப்போது நான் திருநெல்வேலி டவுனில் இருக்கும் குஞ்சரம் தாத்தா வீட்டில் தங்கி இருந்தேன். எனக்கு அரையாண்டு பரிட்சைகள் முடிந்து விடுமுறை விட்டிருந்தார்கள்.
அந்த முறை எங்கள் வீட்டிற்கு வந்திருந்த தாத்தா தன் வீட்டிற்கு என்னை அழைத்து போக என் அப்பாவிடம் அனுமதி கேட்டார். தாத்தா வஞ்சகமில்லா தேகம் படைத்தவர், நல்ல பூசினார் போன்ற நீள் வாகு முகம் நிறைய எப்போதுமே சிரிப்புடன் பவனி வருவார், என் அம்மா வழியில் தூரத்துச் சொந்தம்.
அவர் இருக்கும் இடங்களில் கலகலப்புக்கு பஞ்சமிருக்காது. கொலுவுக்கு எங்கள் குடும்பத்தை அழைக்க வந்தார், எனக்கு கொலுவென்றால் கொள்ளை பிரியம்
தாத்தா வீட்டின் நீண்ட பட்டாசலில் நான்கு வரிசையில் பெரிய கொலுவாய் வைப்பார்கள், சீரியல் லைட் எல்லாம் போட்டு வெகு ஜோராய் கொண்டாடுவார்கள்.நாளெல்லாம் அந்த கொலுவின் முன்பு அமர்ந்து பொம்மைகளை ரசித்து பார்த்துகொண்டே இருக்கச் சொன்னாலும் நான் தயார் தான்.
குஞ்சரம் தாத்தாவை ஏதோ ஒரு விதத்தில் என் அப்பாவிற்கு பிடிக்கும் என்பதால் என்னை அவர்கள் வீட்டிற்கு அனுப்பச் சம்மதித்தார்.
எங்கள் ஊரான வீரவநல்லூரில் இருந்து திருநெல்வேலி டவுன் ஒன்றும் பெரிய தூரம் இல்லை என்றாலும், எனக்கு புதிதாய் வேறு ஒரு வீட்டில் பெற்றோர் இல்லாமல் சித்தி, சித்தப்பா என்று நெருங்கிய உறவுகளும் இல்லாத ஒரு தூரத்து உறவினர் வீட்டில் தங்குவது விசித்திரமான விதத்தில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
தாத்தாவின் வீட்டிற்கு நான் போன போதே கொலு பொம்மைகளை அடுக்கி இருந்தார்கள் அப்போது எனக்கு ஒரு பத்து பதினோரு வயதிருக்கும். நான் மிகவும் ரசிக்கும் விதத்தில் பிளாஸ்டிக் மிருகங்களின் பொம்மைகளை வைத்து பார்க் எல்லாம் செய்திருந்தார் சிவகாமி அச்சி
அந்த பார்க்கில் சின்ன சின்னதாய் முளைவிட்டிருந்த பயிர்களை கொண்டு புல்வெளியை போல அமைத்திருந்ததை நான் மிகவும் ரசித்தேன். அஷ்டலெட்சுமி சிலைகள், தசாவதார சிலைகள் எல்லாம் பழையதாய் இருந்தாலும் அந்த சிலைகளின் முகங்கள்அவ்வளவு திருத்தமாய் இருக்கும்.
இரண்டாவது வரிசையில் ஒரு சிவன் சிலையும் எதிரில் நந்தியுமாய் இருப்பார்கள் அவர்களை வேண்டி நிற்கும் ஒரு அடியாரின் சிலை இருக்கும், அந்த முகத்தில் இருக்கும் அப்பட்டமான பக்தியின் பாவத்தை இன்றும் என்னால் நினைவுகூர முடிகிறது.
மிக பெரிய ராஜராஜேஸ்வரியின் சிலை ஒன்று இருக்கும் அதன் கண்களில் காருண்யம் நிறைந்து வழியும் சரியாய் அம்மனின் முகத்திற்கு மேல் ஒரு சீரியல் லைட் எரியுமாறு தாத்தா ஏற்பாடு செய்திருப்பார்.
மூன்றாவது வரிசையில் விவேகானந்தர், திருவள்ளுவர், காந்தி, நேரு போன்ற தலைவர்களின் சிலைகள் இருக்கும், எனக்கென்னமோ விவேகானந்தரின் சிலையில் உள்ள அந்த தலைப்பாகையும் முகத்தில் தெரியும் பெருமிதமும் பார்த்து கொண்டே இருக்கத் தோன்றும்
அப்படியே பாரதியின் மீசையும் புருவமும் கூட. கீழே செட்டியார் அம்மாவும் ஐயாவுமாக ஜோடியாய் கூடைகளுக்கு மத்தியில் அமர்ந்திருக்கும் விதம் அலாதியாய் இருக்கும். ஒவ்வொன்றையும் எப்படி செய்கிறார் அந்த ஆச்சி என்று பார்க்க தோதாய் அவர் பின்னோடே அலைவேன்.
இந்த கொலு பொம்மைகள் மேல் உள்ள ஆர்வம் ஒரு புறமிருக்க, இன்னொரு புறம் குஞ்சரம் தாத்தாவுக்கு சென்ட்ரல் டாக்கீஸில் இருந்த செல்வாக்கும் நான் அவர் வீட்டிற்கு போக மற்றொரு காரணம்
திருநெல்வேலிக்கு பொதுவாய் சினிமா பார்ப்பதற்கும் பொருள்காட்சிக்கும் தான் அப்பா அழைத்துப் போவார். சித்தி வீட்டில் கூட போய் அதிகம் தங்கியதில்லை.
குஞ்சரம் தாத்தா திரைப்படத் துறையில் டிஸ்ட்ரிபியூட்டராக இருந்தார் என்பதெல்லாம் அப்போது எனக்கு தெரியாது
ஆனால் தன் வீட்டு கொலுவிற்கு அவர் திரைத்துறையில் உள்ள பலரை அழைத்து வருவாராம். ஒரு வேளை நமக்கு பிடித்த திரை பிரபலங்கள் யாரும் வருவார்களோ என்ற நப்பாசை ஒருபுறம் இருந்தது.
அப்போதெல்லாம் விடுமுறை நாட்களில் மட்டுமே சினிமா பார்க்க முடியும், தாத்தா வீட்டிற்கு போனால் அடிக்கடி தியேட்டர் கூட்டிக்கொண்டு போவார்.
டவுனில் இருந்த சித்தி வீட்டிற்கு அருகில் மூன்று தியேட்டர்கள் உண்டு. ரத்னா, பார்வதி மற்றும் சென்ட்ரல். ஆனால் குஞ்சரம் தாத்தா வீடு சற்றே தொலைவில் இருந்தாலும் சென்ட்ரலுக்கு தான் அழைத்துப் போவார்
சென்ட்ரல் டாக்கீஸை வெறும் தியேட்டர் என்று சொல்லிவிட முடியாது ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும் சிற்பங்களும், பிரமாண்டமான அந்த திரையரங்கும் எனக்கு எப்போதுமே பிரமிப்பை ஏற்படுத்தி விடும்
படம் போடுவதற்கு முன்பு ஸ்க்ரீனை உயர்த்துவதற்கு போடப்படும் இசையே என்னை குஷி படுத்தும். தாத்தா வீட்டில் இருந்தால் பெரும்பாலும் சாயங்கால ஷோக்களுக்கு எங்களை அழைத்துச் செல்வார்
பாக்ஸில் அமர வைத்து விட்டு போய் விடுவார். அவருடைய பேரன், பேத்திகள், நான் என்று பெரிய பட்டாளமே இருப்போம். எங்களுக்கு துணைக்கு அவர்கள் வீட்டுச் சத்யா சித்தி இருப்பார்
இடைவேளைகளில் அங்கு வேலை செய்யும் அண்ணன்கள் எங்களுக்கு முறுக்கு, கோனைஸ், பாப்கார்ன் முதலிய பண்டங்களை கொடுத்துவிட்டு போவார்கள். ஒரே ராஜ உபச்சாரமாய் தான் இருக்கும்.
அந்த மாலை ஆச்சி நைவேத்தியம் செய்து கொடுத்த பூம்பருப்பு சுண்டலை சாப்பிட்டு விட்டு, நாங்கள் தாத்தாவுடன் சென்ட்ரல் டாக்கீஸுக்கு கிளம்பினோம்
அப்போதே வானம் லேசாய் இருட்டிக் கொண்டு வந்தது. சிவகாமி ஆச்சி எதுக்கும் கொடை எடுத்து போக சொன்னாள்
“அதெல்லாம் வேணாம், மழை பெஞ்சா நாங்க ஆட்டோல வந்துகிடுதோம்” என்று சொல்லி விட்டார் தாத்தா
ஏன் அவர் குடைகளை வேண்டாம் என்று சொன்னார் என எனக்கு பிடிபடவே இல்லை. ஒருவேளை குடையை நாம் தொலைத்து விட்டால் என்ன செய்வது என்று நினைத்திருப்பாரோ ?
சென்ட்ரல் டாக்கீஸுக்கு டிக்கெட் எடுத்து விட்டு அமர்ந்திருந்தோம். மழை தூவானமாய் தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாய் பெரிதாகி கொண்டே வந்தது
நான் ஜன்னல் இருக்கையில் அமர்ந்து கொண்டு ஜன்னல் கம்பி வழி வழியும் நீரில் விரலை வைத்து விளையாடிக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு நிறுத்தம் வரும் போதும் எனக்குள் ஒரு ஜாக்கிரதை உணர்வு எழ, தாத்தாவையும் சத்யா சித்தியையும் பார்த்துக் கொண்டேன்
அன்று நாங்கள் கிளம்பி இருந்தது கமலஹாசனின் ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்திற்கு. எனக்கு கமல் படங்கள் என்றால் கொள்ளை பிரியம் என்பதால் நான் உற்சாகமாய் இருந்தேன்
ஒருவேளை ஆச்சி போக வேண்டாம் என்று சொல்லி விடுவாரோ என்று நான் கவலைபட்ட மாதிரி இல்லாமல் ஆச்சி போக அனுமதித்ததே எனக்கு பெரிய விஷயமாய் பட்டது
சத்யா சித்தியும் எங்களுடன் அன்று படம் பார்க்க வந்தாள். சத்யா சித்தி ஆள் கொஞ்சம் குட்டையாக தான் இருப்பாள் என்றாலும், நல்ல நிறம், திருத்தமான முகம்
நான் அவர்கள் வீட்டிற்கு போகும் போதெல்லாம், அநேகமாய் திண்ணையில் அமர்ந்து ரேடியோவில் பாட்டுக் கேட்டுக் கொண்டு இருப்பாள்
அவளுக்கு நேயர் விருப்ப நிகழ்ச்சி ரொம்ப பிடிக்கும். பல நாட்கள் போஸ்ட் கார்டில் “ஒரு ராஜா ராணியிடம் வெகு நாளாக ஆசை கொண்டான்” பாடலை கேட்டு எழுதிபோடுவாள்
நான் போயிருந்த ஒரு நாளில், நெல்லை டவுன் சத்யா என்று அந்த பாடலுக்கு முன்பு அறிவிப்பாளர் அறிவித்த போது, தானே அந்த பாடலுக்கு இசை அமைத்து பாடியது போல புளங்காகிதம் அடைந்தாள்
சிவகாமி ஆச்சி கூட “எடி வேற ஏதும் பாட்டைக் கேக்க வேண்டி தானே, அதையே தான் கேக்கணுமாக்கும்” என்பாள்
ஒரு ரகசிய புன்னகையுடன் கையில் உள்ள துணியில் எம்பிராய்டரி போடுவதை தொடர்வாள் சித்தி. இரண்டு கிளிகள் மூக்குடன் மூக்கு உரசுவதை போன்ற அந்த எம்பிராய்டரியில், பென்சிலால் அவள் வரைந்திருந்த கிளிகளின் அலகுகள் அவ்வளவு நேர்த்தியாய் இருந்தது.
சித்தி தையல் படிப்பதற்காய் சிறியதாய் தைத்து பழகிய ஓரூ சின்ன கவுனை, என்னுடைய பொம்மைக்கு போட நான் கேட்ட போது தயக்கமில்லாமல் தந்து விட்ட சித்தியை, அந்த தருணத்தில் இருந்து ரொம்ப பிடிக்கும் எனக்கு.
நாங்கள் அனைவரும் தியேட்டர் போயிருந்த போது தான், சத்யா சித்தியின் ரகசிய புன்னகைக்கு அர்த்தம் விளங்கியது. சென்ட்ரல் டாக்கீஸ் மேனேஜர் சோமு தாத்தாவின் மகன் ராஜா, பெல்பாட்டம் பளபளக்க வந்து எங்களை கர்ம சிரத்தையுடன் கவனித்தார்
எங்களுக்கெல்லாம் கோனைஸை கையில் கொடுக்கும் போதும், அவர் கண்கள் சத்யா சித்தியின் முகத்திலேயே நிலைத்திருக்கும். லேசான வெட்கத்துடன் தலை குனித்திருக்கும் சத்யா சித்திக்கு, எங்கே ராஜா எங்களுக்கு தின்பண்டங்களை கொடுத்து முடித்து விட்டு போய்விடுவாரோ என்கிற தவிப்பு இருக்கும்
எங்களிடம் பேசுவதை போல ராஜா மாமா சித்தியிடம் கேட்கும் கேள்விகளுக்கு, புன்னகையை தவிர அவள் வேறு எந்த பதிலையும் சொன்னதில்லை
ஒருவேளை நாங்கள் எல்லாம் இல்லாமல், அவள் மட்டும் போன நாட்களில் ராஜா மாமாவுடன் பேசி இருப்பாளாயிருக்கும்.
மொத்தம் ஆறு நிறுத்தங்கள் கடந்தால் சென்ட்ரல் டாக்கீஸ் வந்து விடும், இன்னும் இரண்டு நிறுத்தங்கள் மிச்சமிருந்தது. அப்போது எங்களுடன் வந்த சத்யா சித்தி அமர்ந்திருந்த இருக்கைகையில் அவர் அருகில் அமர்ந்து தூங்கிக் கொண்டிருந்த சிறுவன் முழித்து எழுந்து அழத் தொடங்கினான்
எதற்காக அழுகிறான் என்று விவரம் புரியாமல் தடுமாறிய சித்தி, சற்று நேரத்தில் அவன் பெற்றோர் அவனை தவற விட்டு விட்டு இறங்கி விட்டதை உணர்ந்து கொண்டாள்.
மாநிறத்திற்கு சற்றே குறைவான நிறத்தில் இருந்தாலும், நல்ல களையான முகம் அவனுக்கு. அவன் அணிந்திருந்த உடைகளை பார்க்கும் போது அவை கொஞ்சம் தரமானவைகளாகத் தான் தெரிந்தன.
வேண்டுமென தவற விட்டதாய் தெரியவில்லை, ஆனாலும் இப்படி குழந்தையை எழுப்பாமல் விட்டு விட்டார்களே என்று அந்த பெற்றோர் மீது பழியாய் கோபம் வந்தது.
இரண்டு நிமிட இடைவெளியில் அந்த சிறுவனின் நிலையை அந்த முழு பேருந்தும் உணர்ந்து கொண்டது. சித்தியிடமிருந்து விஷயமறிந்த குஞ்சரம் தாத்தா நடத்துனரையும் ஓட்டுனரையும் அழைத்து விவரம் சொன்னார்
பேருந்து சற்று நேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. என்ன செய்வது என்ற குழப்பம்
ஆனால் எல்லா பயணிகளையும் அவரவர் போக வேண்டிய இடத்தில் இறஙகிவிட்ட பிறகு தான் திரும்பி ஜங்க்ஷன் போக முடியும், அது வரை அந்த சிறுவனின் பெற்றோர் அவனுக்காக காத்திருப்பார்களா? அவனை தேடி இருப்பார்களா என்று ஒன்றுமே புரியவில்லை
சத்யா சித்தி ‘’உன் பேர் என்ன?” என்று கேட்டதற்கு கூட, பதிலே சொல்லாமல் தான் அழுது கொண்டிருந்தான்
முதலில் அவனுக்கு பேச்சு வராதோ என்று நினைத்த சித்தி, பின்பு அவன் கொஞ்ச நேரத்தில் “அம்மாட்ட..” என்று மீண்டும் மீண்டும் கூறவும், அவன் அதிர்ச்சியில் தான் அழுகிறான் என்பதை அறிந்து கொண்டாள்
ஜங்ஷன் பஸ் ஸ்டான்டில் அவனது பெற்றோரை தேடித் பார்க்கலாம் என்று சொன்னார்கள். அப்போதெல்லாம் செல்போன்கள் வழக்கில் இல்லாத காலம், அந்த பையனுக்கு அவன் அப்பா அம்மா பெயரை தவிர வேறு எதுவுமே சொல்லத் தெரியவில்லை
நாங்கள் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்து விட்டது, மழை சற்றே வலுத்திருந்தது. தியேட்டர் வாசலிலேயே பஸ் நிற்கும் என்ற போதும், நனையாமல் உள்ளே நுழைந்து விட முடியாது.
தவிப்புடன் அழுது கொண்டிருந்த அந்த சிறுவனின் முகம் என் மனதில் அழுத்தமாய் பதிந்து போனது, சைடு வகுடெடுத்து படிய வாரிய தலையுடனும் தவிப்புடனும் அழுது கொண்டிருந்த அந்த சிறுவனை என்னால் மறக்கவே முடியவில்லை
அவனை அவன் வீட்டில் தேடி இருப்பார்களா? திரும்ப அழைத்து போயிருப்பார்களா? அவனுக்கு என்ன நடந்திருக்கும்? என்று ஒரே கவலையாய் இருந்தது
கூடவே நாமும் இப்படி தொலைந்து விடுவோமோ என்கிற கவலையும் துணை வந்து, சித்தியின் கரங்களை நான் விடவே இல்லை. எனக்கு மிகவும் பிடித்த கமல் அன்று அந்நியப்பட்டு போனார், என்னால் படத்தில் ஒன்றவே முடியவில்லை
தாத்தா ஏன் அந்த பையனை எங்களுடன் கூட்டி வந்திருக்க கூடாது என்று தோன்றியது. சத்யா சித்தியும் அன்று சோகமாய் தான் இருந்தாள், இடைவேளையில் முறுக்குடன் வந்து எங்களை பார்த்த ராஜா மாமாவை அவள் ஒரு முறை கூட நிமிர்ந்து பார்க்கவில்லை
பொதுவாய் அவர் வந்தாலே தலையை குனிவதும் பின்பு ஒர பார்வையால் அவரை பார்ப்பதுமாக இருக்கும் சித்தி, அன்று திரையை வெறித்தபடி அமர்ந்திருந்தாள். எதிர்பார்த்த பதில் இல்லாததால், முகம் சுருங்கி வெளியில் போனார் ராஜா.
தியேட்டருக்குள் நுழையும் முன்பு கிட்டத்தட்ட முழுவதுமாய் நனைந்துவிட்ட உடைகளின் ஈரம் உலராமல் அப்படியே இருந்தது. அந்த ஈர உடைகளின் சுமையை காட்டிலும் மனம் கனத்துக் கிடந்தது
அன்று தாத்தாவும் எங்களுடன் அமர்ந்து படம் பார்த்தார். நிறைய காட்சிகளை அவர் சிரித்து சிரித்து ரசித்து பார்த்தது எனக்கு எரிச்சலையே ஏற்படுத்தியது
அந்த சிறுவன் அவன் பெற்றோருடன் சேர்ந்திருப்பானா என்று என் மனதின் மூலையில் அரித்துக் கொண்டே இருந்தது
கொலு பொம்மைகளும், சென்ட்ரல் டாக்கீஸும், எம்பிராய்ட்டரி கிளிகளும் பொலிவிழந்து போனதாய் உணர்ந்தேன்.
மறுநாள் என் அப்பா என்னை பார்க்க வந்த போது அவருடனேயே கிளம்பி விட்டேன்
“பேத்திக்கு அம்மையை தேடுது போல..” என்று சொல்லிக் கொண்டார் குஞ்சரம் தாத்தா
நான் மிகவும் ரசித்த பேருந்து பயணங்களையே, சில நாட்கள் வெறுத்தேன்.
பழைய நினைவுகளில் இருந்து மீண்டு நிகழ்காலத்துக்கு வந்தேன்
மழை விட்டிருந்தது. என் அருகில் அமர்ந்திருந்த சிறுவனிடம் பேசிக் கொண்டே வந்தேன்
முதலில் ஒவ்வொரு கேள்விக்கும் அவன் அம்மாவின் ஒப்புதலுக்காய் திரும்பி பார்த்தவன், பின்பு கொஞ்சம் கொஞ்சமாய் என்னுடன் பேசத் தொடங்கினான்
அடுத்த நிறுத்தத்தில் நான் இறங்க வேண்டும், ஆனால் அப்படி இறங்கினால் என்னால் நிம்மதியாய் இன்று தூங்க முடியாது.
அதற்கடுத்து வந்த மூன்றாவது நிறுத்தத்தில் அந்த இளம் தாய் இறங்கினாள். அவளுக்கு முன்பே இறங்கி, அந்தச் சிறுவனை தூக்கி இறக்கி விட்டேன்
ஒரு நன்றியுடன் என்னை கடந்து போன அந்த பெண்ணின் குரலில், என் முப்பது வருட ஈரச் சுமையின் கனம் சற்றே குறைந்திருந்ததாய் தோன்றியது
(முற்றும்)
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
மனதைத் தொட்ட கதை.