சஹானா
தீபாவளி

மறக்க முடியாத தீபாவளி (‘பரிவை’ சே.குமார்) – Deepawali Ninaivugal Contest Entry 4

றக்க முடியாத தீபாவாளிங்கிறது சின்ன வயதில் அனுபவித்த தீபாவளி தான். வெளிநாட்டு வாழ்க்கை என்றான பின், தீபாவளி கூட வேலை நாள் தான். இங்கு தீபாவளியை நினைத்துப் பார்ப்பதென்பது ஊருக்குப் பேசி, அவர்களின் புத்தாடைகளைப் பார்த்து மகிழ்வதுடன் முடிந்து விடுகிறது.

இங்கு விடுமுறை என்றால் கூட, அறை நண்பர்கள் உறக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் போது, நாமும் அதைக் கடந்தே பயணிக்க வேண்டியிருக்கிறது.

சின்ன வயது தீபாவளி

கிராமங்களில் பண்டிகை தினம் என்பது மிகவும் மகிழ்வான ஒரு தினமாக இருக்கும். சின்ன வயதில் தீபாவளி என்பது மிகப் பெரும் நிகழ்வாகத் தெரியும். பள்ளியில் தீபாவளி வந்திருச்சு எனப் பேசுவதில் ஆகட்டும். தீபாவளிக்கு ஓரிரு மாதங்களுக்கு முன்னரே பெட்டிக் கடைகளில் விற்கும் வெடிகளை வாங்கி வெடித்து மகிழ்வதில் ஆகட்டும். அந்த நாளில் கொண்டாடித் தீர்த்த தீபாவளி தான் வாழ்நாளெல்லாம் மறக்க இயலாத தீபாவளி இல்லையா.

இன்று வெடிகளை வேண்டுமானால் வெடித்துத் தீர்க்கலாம். ஊரே கூடிக் கொண்டாடிக் களித்த தீபாவளி இப்போது எங்கும் இல்லை என்பது தானே உண்மை.

உடன்பிறப்புகளின் ஒன்றுகூடல் 

எங்கள் குடும்பம் பெரியது, பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது பெரியண்ணன் கரூர்ப் பக்கம் வேலைக்குப் போய்விட்டார். அவரின் வரவு என்பது கூடுதல் எதிர்பார்ப்பாய் இருக்கும். காரணம் ஊரில் அம்மா புத்தாடை எடுத்தாலும் அண்ணன் தைத்துக் கொண்டு வரும் டவுசர், சட்டைகளுக்காகவே அண்ணனின் வரவு மிகப் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி வைத்திருக்கும்

அதேப் போல் தீபாவளி அன்று மதியம் வீட்டுக்கு வரும் பெரியக்கா குடும்பத்தையும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருப்போம். ஐத்தான் வெடிகள் மொத்தமாக சிவகாசியில் வாங்கிக் கொண்டு வருவார்.

தீபாவளிப் பலகாரம்

தீபாவளிக்கு ஒரு வாரம் முன்னாலிருந்தே பலகாரங்களுக்கான வேலைகள் ஆரம்பித்து விடும். முறுக்குக்கு மாவு அரைத்தல், அதிரசத்துக்கு மாவு அரைத்துச் சேர்த்தல் என எல்லாம் அம்மா செய்து வைப்பார். தீபாவளிக்கு இரு தினம் முன்பே இவையெல்லாம் தயாராகி விடும். கூடவே அம்மாவின் ஸ்பெஷலான சுருள் போளி.

மாதக் கணக்கில் குளிர்சாதனப் பெட்டி இல்லாமல் சாமி அறைக்குள் வைத்து, ஆளுக்கு ஒன்றென எடுத்துக் கொடுத்து சாப்பிடச் சொல்வார். பொட்டுக்கடலை, சீனியெல்லாம் அரைத்துச் சேர்க்கும் இதன் சுவையே தனி தான்.

முறுக்குச் சுடும் அம்மாவுக்கு, முறுக்கைத் திருப்புதல், எடுத்து முறுக்குச் சட்டிக்குள் அடுக்குதல் என சில்லுண்டி வேலை செய்வது பெரும்பாலும் நானாகத் தான் இருக்கும்.

முறுக்குப் பாதிப்பதத்தில் இருக்கும் போது, எடுத்துக் கொடுத்துச் சாப்பிடச் சொல்வார். எதாயிருந்தாலும் முதலில் சாமிக்கு வைத்துத் தீபம் பார்த்த பின் தான் நாம் சாப்பிட வேண்டும்.

சாமி கும்பிட்ட பின் தான் பாதிப் பதத்தில் வெந்த முறுக்கெல்லாம். அதுக்கு அடிதடியே நடக்கும். அதிரசம், முறுக்கு, சுருள்போளி என எல்லாமும் முதல் நாள் மாலைக்குள் தயாராகி விடும்.

அம்மாவுக்கு மகிழ்வுடன் உதவிய நாட்கள் 

மறுநாள் இட்லி, கேசரி, வடை, வெள்ளைப் பனியாரம், சீயம் என வைத்துச் சாப்பிட முடியாத, அன்றே சாப்பிட்டு முடிக்க வேண்டிய பலகாரங்கள் செய்வார் அம்மா

அதிகாலை மூணு மணிக்கெல்லாம் அம்மாவுடன் உட்கார்ந்து, சின்னச் சின்ன வேலைகள் செய்து கொடுப்பது என்பது, எனக்கு எப்பவும் பிடித்தமான ஒன்று. அது திருமணமாகி முதல் வருடம் வரை தொடர்ந்தது. அதன் பின் வெளியூர், வெளிநாடென வாழ்க்கை பயணிக்க, அப்படியான ஒரு தினம் வாய்க்கவேயில்லை.

பெரியப்பா செய்த கேசரி

ஒருமுறை பெரியப்பா ஒருவரை கேசரி செய்து தாருங்கள் என அம்மா கேட்க, “அம்மா நீனே செஞ்சா என்ன… அவரெதுக்குனு கேட்டோம்”

அதற்கு அம்மா, “நல்லாச் செய்வாருடா… செட்டிய வீட்டுச் சமையக்காரருனு சொன்னார்”

ஆனால் அவரோ, சீனியை அதிகம் போட்டு பாயாசம் போல வைத்து விட்டார். அந்த வருசம் கெட்டியான கேசரி இல்லவே இல்லை. அதன்பின் பெரியப்பா கேசரி செய்ய வீட்டுப் பக்கம் வரவேயில்ல

தீபாவளி நாள்

காலையில் அப்பா சூலம் பார்த்து நிற்க வைத்து எண்ணெய் தேய்த்து விட, டம்ளரிலோ அல்லது சிறிய டப்பாவிலோ சீயக்காயைக் கொட்டிக் கொண்டு கண்மாய்க்குப் போவோம்

நிறைந்து கிடக்கும் தண்ணீரில் நீந்திக் குளித்து வீட்டுக்கு வந்து, சாமி கும்பிட்டு புத்தாடை அணிந்து கொண்டு கோயிலுக்குப் போய் விடுவோம்

அங்கு தான் ஊரே சங்கமம். வெடிப் போடுதல், அணுகுண்டை மாட்டுச் சாணத்தில் வைத்தல், கொட்டாச்சிக்குள் வைத்தல் என அமர்களமாய் இருக்கும். இரவு ராக்கெட் வைக்கும் போது ஊரே அங்கு நிற்கும்

உறவினர் வீடு செல்லல்

காலைப் பலகாரம் சாப்பிட்டதும், சித்தப்பா வீடு, அத்தை வீடு, பெரியம்மா வீடு, சின்னம்மா வீடு, மாமா வீடுனு ஊருக்குள்ளும் ஊருக்கு வெளியேயும் பலகாரம் கொண்டு போய்க் கொடுக்க வேண்டும். அவர்களும் கொடுத்து விடுவார்கள். பல வீட்டுப் பலகாரம், சுவையே சுவைதான் இல்லையா?

தீபாவளிக்கு மறுநாள்

தீபாவளி முடிந்த மறுநாள் வெடித்த வெடிகளின் பேப்பர்களை எல்லாம் ஒன்றாக அள்ளிப் போட்டு பத்த வைத்து, வெடிக்காத வெடிகளை வெடிக்க வைத்து மகிழ்வதில் முடியும் அந்த வருடத் தீபாவளி. கொஞ்சம் கார்த்திகைக்கு என வெடியும் பாதுகாக்கப்படும்.

இனி வருமா அந்த நாட்கள்

பத்தாவது படிக்கும் போது மாமாவின் தையற்கடையில் தீபாவளிக்கு இரு தினங்கள் முன்னிருந்து நிற்க ஆரம்பிப்பேன். இரவு பகலென இரண்டு நாளும் அங்கு தான். திருமணம் முடிந்த வருடம் கடைக்குப் போய் நின்று விட்டு வர, வீட்டில் கத்த ஆரம்பித்து விட்டார்கள். அதன் பின் அங்கு செல்வதில்லை

அதிகாலை மூன்று, நான்கு மணிக்கு லேசான தூறல் போட, சைக்கிளை மிதித்துக் கொண்டு வீட்டுக்குப் போய், “இப்பத்தானேடா வந்தே கொஞ்ச நேரம் தூங்கு” என அம்மா சொன்னாலும், தூங்காமல் அவருக்கு உதவி செய்து கொண்டு அமர்ந்திருந்த தீபாவளி இனி வருமா என்ன..?

மறக்க முடியாத அந்த நாட்கள்

தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகள் போட ஆரம்பித்த பின், அதுவும் குறிப்பாக வீட்டில் டிஷ் ஆண்டெனா வைத்த பின், தீபாவளி தினத்தின் ஆட்டபாட்டமெல்லாம் தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன் சுருண்டு கிடக்க ஆரம்பித்தது

கிராமத்துத் தீபாவளியும் கொஞ்சம் கொஞ்சமாக தன் மகிழ்வு நிலையை இழக்க ஆரம்பித்தது. இப்போதெல்லாம் ஊரில் தீபாவளி என்பது கலைஞர் தொலைக்காட்சியில் சொல்வது போல், ஒரு விடுமுறை தினமாகக் கழிகிறது என்பதே உண்மை. அந்த விடுமுறை தினம் கூட, நான் இருக்கும் இந்த நாட்டில் இல்லை

சின்ன வயதில் கொண்டாடிய தீபாவளியின் தித்திப்பு இன்னும் மனசுக்குள் இருந்து கொண்டே தான் இருக்கிறது. காலங்கள் ஆனாலும் மறக்க முடியாத தீபாவளி, சின்ன வயதில் நாம் மகிழ்ந்து கொண்டாடிய அந்தத் தீபாவளி தினங்களே

சஹானா இணைய இதழின் முந்தைய மாத பதிப்புகள். இது இந்திய Amazon தளத்தின் பதிப்பு👇

ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, பிரேசில், டென்மார்க், பிரான்ஸ், மெக்ஸிகோ, யு.கே, இத்தாலி, நியூஸிலாந்து, ஜப்பான் இன்னும் பல நாடுகளின் Amazon தளத்திலும் இது கிடைக்கிறது. Sahana Govind என உங்கள் நாட்டின் Amazon தளத்தில் Type செய்தால், புத்தகங்களை நீங்கள் காணலாம். நன்றி

சஹானா கோவிந்தின் நாவல் மற்றும் சிறுகதைத் தொகுப்புகள் சில 👇

Click here to subscribe to sahanamag’s upcoming articles for FREE

என்றும் நட்புடன்,

சஹானா கோவிந்த்

Similar Posts

5 thoughts on “மறக்க முடியாத தீபாவளி (‘பரிவை’ சே.குமார்) – Deepawali Ninaivugal Contest Entry 4
  1. கிராமத்து தீபாவளி நினைவுகள், அம்மாவின் அருகாமை, வெளிநாட்டு வாழ்வின் நிதர்சனம் என அனைத்தும் பசுமையான நினைவுகள்..அருமை சகோ.

  2. உண்மை தான், அந்தக் காலத்து தீபாவளி போல் வராது என்பதே உண்மை. எங்கள் குழந்தைகளும் அதை நினைத்து ஏங்குவார்கள். என்ன செய்ய முடியும்?

  3. குமார் நீங்கள் சொல்லுவது போன்று தான் . எனக்கும் சிறு வயது நினைவுகள் பல வந்தன. உங்கள் உணர்வுகள் புரிந்து கொள்ள முடிகிறது. நல்லா சொல்லிருக்கீங்க. வாழ்த்துகள்

    கீதா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: