sahanamag.com
Short Story Contest 2021 Entries சிறுகதைகள்

அன்புக்கு நான் அடிமை (சிறுகதை) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

இந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்

சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 29)

ன்று மாலை அலுவலகத்தில் இருந்து திரும்பிய ஷியாம் “அம்மா” என்று கூவிக் கொண்டு சமையல் அறையில் வேகமாக உள்ளே நுழைந்தான்

“என்ன ஷியாம், இவ்வளவு வேகமாக வருகிறாய்?” என்றாள் மீனாட்சி, பாத்திரங்களைக் அலசிக் கொண்டு         

“அம்மா, என் நண்பன் கதிர் இன்று மாலை ஆறு மணிக்கு மேல் தன் அம்மாவை அழைத்துக் கொண்டு இங்கு வருவான்”           

“ஏன் அண்ணா, ஏதாவது விசேஷமா?” என்றாள் அவன் சிறிய தங்கை கவிதா, அம்மாவிற்கு உதவியாக பாத்திரங்களை அலமாரியில் அடுக்கிக் கொண்டு            

“விசேஷமெல்லாம் ஒன்றுமில்லை. கதிர் இத்தனை நாள் தன் நண்பர்களுடன் ஒரு அறையில் தங்கியிருந்தான். இப்போது ஒரு வீடு பார்த்துத் தன் அம்மாவை அழைத்துக் கொண்டு வந்து விட்டான். அவன் அம்மாவிற்கும் வயதாகி விட்டது. இப்போது அந்த வாடகை வீட்டில் சும்மா சம்பிரதாயத்திற்கு பால் காய்ச்சப் போகிறார்கள். அதற்கு அழைக்கத் தான் வருகிறார்கள். அவர்கள் வெளியூர், ஆதலால் ஆபீஸ் நண்பர்கள் தான் இங்கு எல்லாம்” என்று தங்கைக்கு விளக்கம் கொடுத்தான்

பிறகு, “ஆமாம், உன் ஸீனியர் எங்கே? வந்ததிலிருந்து பார்க்கவேயில்லை! எதற்காவது கோபித்துக் கொண்டு மாடியில் போய் உட்கார்ந்து கொண்டாளா?” என்று தன் பெரிய தங்கை ஆஷாவைப் பற்றி விசாரித்தான்             

“எப்போது பார்த்தாலும் கோபித்துக் கொள்வது, எதற்கெடுத்தாலும் இவளோடு போட்டி போடுவது. அதையே சாக்காக வைத்துக் கொண்டு, வீட்டில் உள்ள வேலைகளுக்கு டிமிக்கு கொடுத்து விட்டு, அந்த சனியன் பிடித்த செல்போனைத் தூக்கிக் கொண்டு கட்டிலில் உட்கார்ந்து கொள்வது, இது தானே உன் அருமைத் தங்கையின் வேலை” என்று குறைபட்டுக் கொண்டாள் மீனாட்சி

“விடுங்கள் அம்மா, இப்போதெல்லாம் பெண் பிள்ளைகள் கொஞ்சம் அப்படியும் இப்படித் தான் இருக்கிறார்கள். பெரும்பாலும் கனவில் மிதந்து கொண்டு இருக்கிறார்கள். போதும் போதாதற்கு இந்த கொரானாவால் எல்லோரும் அலுவலகம் போய் வேலை செய்யாமல் வீட்டிலேயே இருந்து ஆன்லைனில் வேலை செய்வதால் வந்த வினை இது” என்றான் ஷியாம்           

“தேவையில்லாமல் உன் தங்கைக்கு சிபாரிசுக்கு வராதே. கடவுள் கொஞ்சம் வெள்ளைத் தோல் கொடுத்து இருப்பதால் எவனோ ஒரு ராஜகுமாரன் பறக்கும் குதிரையில் வந்து கல்யாணம் செய்து கொண்டு போவான் என்று எதிர்பார்த்து கனவு காண்கிறாள். அவள் மூட நம்பிக்கையை வளர விடாதே, கொஞ்சம் கண்டித்து வை” என்றாள் கடுப்பாக

“அம்மா, அண்ணா இப்போது தான் ஆபீஸிலிருந்து வந்திருக்கிறார், கொஞ்சம் ஓய்வெடுக்கட்டுமே. இருங்கள் அண்ணா, நான் போய் உங்களுக்கு காபி எடுத்து வருகிறேன்” என்ற கவிதா உள்ளே ஓடிச் சென்று, சூடான ஸ்ட்ராங்கான பில்டர் காபி எடுத்து வந்தாள்

ஆஷா அப்போது தான் மாடியிலிருந்து செல்போனும் கையுமாக இறங்கி வந்தாள்.

“என்ன அண்ணா, அம்மா என்னைப் பற்றி நீளமான புகார் பட்டியல் கொடுத்து விட்டாளா?” என்றாள்

“அதெல்லாம் எந்தப் பட்டியலும் தரவில்லை. நீயும் கொஞ்சம் அம்மா சொல்வது போல் கேளேன்” என்றான்

“ஏன் இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?” கவிதா

“என் நண்பன் கதிரும், அவன் அம்மாவும் இன்னும் சிறிது நேரத்தில் இங்கு வருவார்கள். அவர்களுக்கு சாப்பிட வெறும் பிஸ்கட்டும், டீயும் போதும். வீட்டை மட்டும் கொஞ்சம் நீட்டாக வைத்துக் கொள். நான் போய் கொஞ்சம் குளித்து விட்டு வேறு டிரஸ் மாற்றிக் கொண்டு வருகிறேன்” என்று கூறிக் கொண்டு குளியலறைக்குச் சென்று விட்டான்

சிறிது நேரத்தில் கதிரும், அவன் அம்மாவும் வந்து விட்டார்கள். கதிரின் உயரத்தைப் பார்த்து பிரமித்தாள் கவிதா. கதிரின் அம்மாவும் நல்ல உயரம். பார்த்தவுடன் மரியாதை கொடுக்க வேண்டும் என்று தோன்றியது

அவர்களுக்குக் கொஞ்சம் வெங்காயம் பகோடாவும், ஏலக்காய் டீயும் தயாரித்தாள் கவிதா. அவள் எப்போதுமே அப்படித் தான், செய்வதை சிறப்பாக மற்றவர்கள் மெச்சும்படி செய்ய வேண்டும் என்று நினைப்பாள்

கதிரும் அவன் அம்மாவும் நன்றாக ருசித்து, விரும்பி சாப்பிட்டனர். கதிரின் அம்மா பகோடாவின் ருசியை வாய் விட்டே புகழ்ந்து விட்டார்

சிறிது நேரம் பேசிவிட்டு, வாடகை வீட்டில் பால் காய்ச்சுவதற்கு அழைத்து விட்டுச் சென்றனர்

அவர்கள் சென்ற பிறகு ஆஷாவும் கவிதாவும் வந்தவர்களைப் பற்றிய கருத்துகளை அலசி தள்ளி விட்டார்கள்.

“அந்த அம்மாவைப் பார்த்தால் மிகவும் கௌரவமான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போல் இருக்கிறது. எந்த குற்றம் குறையும் கூறாமல் வெங்காயப் பகோடாவும், ஏலக்காய் டீயும் எடுத்துக் கொண்டனர்” என்று புகழ்ந்து கொண்டிருந்தாள் கவிதா

ஆஷாவோ, “எனக்கொன்றும் அப்படியொன்றும் கௌரவமான குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகத் தோன்றவில்லை. அவர்கள் வீட்டு நிகழ்ச்சிக்கு அழைக்க வந்த அந்த அம்மா,  ஒரு பட்டுப் புடவை கூட கட்டவில்லை. சாதாரண காட்டன் புடவை. கழுத்தில் ஒரேயொரு இரட்டை வடச் சங்கிலி, ஒவ்வொரு கையிலும் வளைந்து நெளிந்து போன இரண்டு மெல்லிய தங்க வளையல்கள். வந்ததோ ஆட்டோவில், இதில் என்ன கௌரவமான குடும்பம்” என்று நொடித்தாள் ஆஷா

“நீ பேசுவது ஆச்சரியம் தான். பட்டுப் புடவையிலும் தங்க நகையிலுமா கௌரவம் இருக்கிறது? அவரவர் நடத்தையில் தான் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும்” என்றாள் கவிதா திட்டவட்டமாக

இருவர் பேச்சையும் கேட்டுக் கொண்டிருந்த ஷியாம், இருவரின் வேறுபட்ட மனோநிலையைப் பார்த்து ஆச்சரியப்பட்டான். ஒன்று எல்லாவற்றையும் பாஸிடிவ்வாக எடுத்துக் கொள்கிறது, மற்றொன்று எல்லாவற்றையும் நெகட்டிவ்வாக எடுத்துக் கொள்கிறது. உடன் பிறந்த சகோதரிகளுக்குள் எவ்வளவு வேறுபாடு என்று வியந்தான்

டுத்த நாள் ஷியாமின் வீடு ஒரே ஆரவாரமாக இருந்தது. அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆஷா எம்.சி.எ. முடித்து ஒரு ஸாப்ட்வேர் கம்பெனியில் என்ட்ரி லெவல் சாப்ட்வேர் டெவலப்பராகத் தான் பணிபுரிகிறாள்

நன்றாகப் படித்திருக்கிறாளே தவிர நன்மை தீமை பகுத்தறியும் பண்பு இல்லை. எதுவும் உடனே நடந்து விட வேண்டும், அதுவும் தனக்கு மட்டுமே நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பாள்

கம்ப்யூட்டர் படித்ததினால் உலகமே தன் கையில் என்று கொஞ்சம் கர்வம். நீச்சல் குளத்துடன் பெரிய பங்களா, நான்கு அல்லது ஐந்து கார்கள் வாசலில் நிற்க வேண்டும் என்று கனவு கண்டு கொண்டிருக்கிறாள்.

சந்தோஷம் பணத்திலும் பகட்டான வாழ்க்கையிலும் தான் என்று உறுதியாக நம்பினாள் ஆஷா. அத்துடன் கவிதாவை விட அவள் தான் எல்லாவற்றிலும் முதலாக இருக்க வேண்டும் என்று விரும்பினாள்

ஆனால் கவிதா நேர் எதிர். “பணத்தை விட படிப்பு தான் முக்கியம்” என்பாள்

“மனம் பெரியதாக, விசாலமாக, அன்பு நிறைந்ததாக இருந்தாலே போதும், கார் பங்களா எல்லாம் ஒரு பொருட்டே இல்லை” என்று வாதிடுவாள் சட்டம் படிக்கும் கவிதா

அம்மாவிற்கு தான் தாங்காது

“நீங்க இரண்டு பேரும் எப்போதும் ஒரே கருத்தை சொல்ல மாட்டீர்கள், ஒன்று நார்த் போல் ஒன்று சௌத் போல்” என்று பொருமுவாள்

இரண்டு தங்கைகளும் அழகாக டிரஸ் பண்ணிக் கொண்டு எதிரில் வந்து நின்றனர். ஆஷா ஜீன்ஸ் பேண்ட் டீ ஷர்ட்டிலும், கவிதா சல்வார் கமீஸிலும், அம்மா வழக்கம் போல் ஒரு ஜரிகையில்லாத எளிமையானப் பட்டுப்புடவையில்

எல்லோரும் ஒரு வாடகைக் காரில் கதிர் வீட்டில் பால் காய்ச்சும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்றனர். கதிரின் அம்மா லட்சுமி இருவரையும் பார்த்து பிரமித்து நின்றாள்

“என்ன ஆன்ட்டி அப்படி பிரமித்துப் பார்க்கிறீர்கள்? எங்கள் இரண்டு பேரில் யார் அழகு என்றா?” என்றாள் ஆஷா கர்வமாக. அவள் கேள்வியால் தடுமாறி நின்றாள் லட்சுமி

“ஏய் ஆஷா, ஆன்ட்டியிடம் போய் என்ன கேள்வி கேட்கிறாய்? பிள்ளைகள் அழகாக இருந்தால் அந்தப் பெருமை அம்மா அப்பாவைப் சேரும். பெற்றோர் அழகாக இருந்தால் தான் நாமும் நன்றாக இருக்க முடியும். இதில் நம் பெருமை எங்கிருந்து வந்தது?” என்றாள் கவிதா

கதிரும், லட்சுமியும் அவளை வியந்து பார்த்தனர். அவர்கள் வீட்டில் கூட கவிதா சமையல் அறையில் போய் நின்று கொண்டாள்

மீனாட்சியையும், லட்சுமியையும் வெங்காயம், காய்கறிகள் நறுக்கிக் கொடுக்க உபயோகப்படுத்திக் கொண்டாள். சிறிது நேரத்தில் பால் பாயசம், மெதுவடை, ப்ரைட் ரைஸ், எலுமிச்சை சாதம், சேமியா பகளாபாத் எல்லாம் மூவருமே தயாரித்து விட்டனர்.

கதிரின் நண்பர்கள் மட்டும் இருவர் தங்கள் குடும்பத்துடன் வந்திருந்தனர். ஆஷா சமையல் முடியும் வரை அங்கிருந்த சில புத்தகங்களைப் படித்துக் கொண்டும், வந்த விருந்தினர்களுடன் பேசிக் கொண்டும் பொழுதைக் கழித்தாள்

ஷியாம் மட்டும் போக வர ஆஷாவை சமையல் அறையில் பெண்களுக்கு உதவியாக இருக்கும்படி ரகசியமாக சொல்லிக் கொண்டிருந்தான். ஆனால் அது செவிடன் காதில் ஊதிய சங்கானது

ஒரு வாரத்தில் லட்சுமியும், மீனாட்சியும் நெருங்கிய சிநேகிதிகளையும் ஆகி விட்டனர். இவர்கள் வீட்டு சாப்பாட்டில் பாதி அவர்கள் வீட்டிலும், அவர்கள் வீட்டு சாப்பாடு இவர்கள் வீட்டிலும் இருக்கும்.

ரு நாள் லட்சுமி, மீனாட்சி வீட்டில் ஓய்வாக அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தாள்

அப்போது லட்சுமி  “மீனாட்சி, நான் ஒன்று கேட்டால் தப்பாக நினைக்க மாட்டாயே?” என்றாள்

“சொல்லு லட்சுமி, தப்பாக நினைக்க என்ன இருக்கிறது.?” மீனாட்சி.

மெதுவாகத் தயங்கிய லட்சுமி, “என் மகன் கதிரைப் பற்றி என்ன நினைக்கிறாய்?” என்றாள்.

“கதிர் என் மகன் ஷியாமின் நண்பன். ஷியாம் நல்லவர்களுடன் மட்டுமே சேருவான். கதிரை விட்டுப் பிரியாமல் நகமும் சதையுமாகப் பழகுகிறான். இதை விட கதிருக்கு வேறு என்ன சான்றிதழ் வேண்டும்?” என்றாள் மீனாட்சி

“நல்லது தான். நான் ஒன்று கேட்டால் நீ தப்பாக நினைக்க மாட்டாயே? உனக்குப் பிடித்தால் நீ சரியென்று ஒத்துக் கொள். இல்லையென்றால் என் மேல் கோபப்பட்டு நம் நட்பைத் துண்டித்து விடாதே” என்றாள் லட்சுமி

“சுற்றி வளைத்து ஏன் மூக்கைத் தொடுகிறாய்? என்னிடம் என்ன தயக்கம்? சொல்ல வந்த விஷயத்தை நேரிடையாகச் சொல்” என்று சொல்லிச் சிரித்தாள் மீனாட்சி.

“மீனாட்சி, உங்கள் குடும்பமும், நீங்கள் பெண்களை வளர்ந்திருக்கும் விதமும் எங்களுக்கு உங்கள் பெண்களை மிகவும் பிடித்திருக்கிறது. எங்கள் மகன் கதிருக்கு உங்கள் பெண்களில் ஒருத்தியை முறைப்படி திருமணம் செய்துத் தர முடியுமா?” என்றாள் லட்சுமி ஆவலுடன்.

“இதற்கா இவ்வளவு தயக்கம்? நான் என்னவோ, ஏதோ என்று பயந்து விட்டேன். நானே என் மனதில் கதிர் மாதிரி ஒரு பிள்ளை, நமக்கு மாப்பிள்ளையாக வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தது உண்டு” என்றாள் மீனாட்சி            

“எங்களுக்குப் பெரிய அளவில் சொத்து என்று எதுவும் இல்லை. ஊரில் எதுவும் விளையாத காய்ந்து போன நிலம் ஒரு ஐந்து ஏக்கர் வேலி கட்டி வைத்திருக்கிறோம். என் மகனின் வேலை மட்டும் தான் எங்கள் சொத்து”

“அதெல்லாம் விடு, உன் மகனுக்கு எங்கள் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள சம்மதமா? கதிரின் விருப்பத்தைக் கேட்டு சொல்லு” என்றாள் மீனாட்சி

“உன் விருப்பம் கேட்டு விட்டுப் பிறகு என் மகனிடம் பேசலாம் என்று நினைத்தேன். சுபஸ்ப சீக்கிரம் என்பார்கள், நீ உன் பிள்ளைகளிடமும், நான் என் மகனிடமும் கேட்டு சம்மதம் வாங்கி விடுவோம்” என்று உற்சாகமாகக் கிளம்பினாள் லட்சுமி

மீனாட்சி விஷயத்தை கூறியதும் திகைத்தான் ஷியாம்

“அம்மா, கதிர் மாதிரி ஒரு எளிமையான ஆளிற்கு நீ பெற்று வைத்திருக்கும் ஆடம்பரப் பிரியையான ஆஷா கொஞ்சமும் பொருத்தம் கிடையாது. முதலில் ஆஷாவின் சம்மதம் வாங்கி விடு, மற்றதெல்லாம் பிறகு” என்றான்

“அவளுக்கு என்ன தெரியும், சின்ன பெண். நிலாவைப் பிடித்துக் கொண்டு வா   என்பாள். நாலு கார், பெரிய பங்களா, பத்து வேலையாட்கள் வேண்டும் என்று ஆசைப்படுவாள். நம் சக்திக்கு என்ன செய்ய முடியுமோ அதற்குத் தான் ஆசைப்பட வேண்டும். அவள் சம்மதம் எல்லாம் கேட்க வேண்டாம். கோழியைக் கேட்டா பிரியாணி செய்வார்கள்?” என்று கத்தினாள் அம்மா

“நீ பேசுவது  போன ஜென்மத்துப் பேச்சு. இந்த காலத்தில் போய் நீ அப்படி செய்தால் நம் மானம், மரியாதை போய் விடும். திருமணத்தில் விருப்பம் இல்லாமல் எத்தனை பெண்கள் வீட்டை விட்டு ஓடி விடுகிறார்கள். எத்தனை டி.வி நாடகம் பார்க்கிறீர்கள்? எத்தனை நாவல்கள் படிக்கிறீர்கள்? நாமும் கொஞ்சம் காலத்தை அனுசரித்துப் போக வேண்டும் அம்மா”

“அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். இன்னும் எத்தனை நாள் இந்த குடும்ப பாரத்தை நீ சுமப்பாய்? ஒவ்வொருத்தியாக கரையேற்றினால் தான் உன் திருமணம் பற்றி முடிவெடுக்க முடியும்” என்றாள் மீனாட்சி

தன் சுயநலத்திற்காக தங்கையின் விருப்பத்திற்கு மாறாக திருமணம் நடத்த முடியுமா? அவள் ஏதாவது விபரீத முடிவு எடுத்தால் என்ன செய்வது? அம்மாவின் அவசரத்திற்கு தான் பலியாகக் கூடாதென்று முடிவு செய்தான் ஷ்யாம் 

எதற்கும் ஆஷாவிடம் ஒரு வார்த்தை கேட்டு விட முடிவு செய்தான். ஆனால் அவளோ அன்று கம்ப்யூட்டரில் இரவு ஒரு மணி வரை வேலை செய்ததால், ஷியாமினால் அவளிடம் எதுவும் பேச முடியவில்லை

னால் அடுத்த நாள் காலையில், தன் மகன் கதிருடன் பட்டுப் புடவையில் ஆஜராகி விட்டாள் லட்சுமி

“மீனாட்சி இன்று நாள் நன்றாக இருப்பதால் நாம் இன்றே போய் நிச்சயதார்த்த புடவை வாங்கி வந்து விடலாம். ஆஷாவையும் தயாராகச் சொல்” என்றாள்.

அப்போது தான் தூங்கி எழுந்து வாயில் பிரஷுடன் வந்த ஆஷா கேட்டுக் கொண்டே பாத்ரூம் போய் முகம் கழுவிக் கொண்டு டவலுடன்  வந்தவள், “என்ன ஆன்ட்டி, யாருக்கு நிச்சயதார்த்தம்? நான் ஏன் புடவை எடுக்க வர வேண்டும்?” என்றாள்

“ஏன், உன் அம்மா உன்னிடம் ஒன்றும் சொல்லவில்லையா? உனக்கும் என் மகன் கதிருக்கும் தான் திருமணம் பேசி இருக்கிறோம். அதற்குத் தான் நிச்சயதார்த்த சேலை வாங்கப் போகிறோம்”

ஒன்றும் சொல்லாமல் உள்ளே போய் ஒரேயடியாக கத்தி கலாட்டா செய்து அவள் அம்மாவுடன் சண்டை போட்டாள் ஆஷா

“மாதச் சம்பளம் வாங்கிக் கொண்டு வரவு எட்டணா செலவு பத்தணா என்று கணக்குப் போடும் அன்றாடம் காய்ச்சிகளை நான் திருமணம் செய்து கொள்ள முடியாது. யாராவது பெரிய தொழில் அதிபரைத் தான் நான் திருமணம் செய்து கொள்வேன். உன்னால் முடிந்தால் பார், இல்லையென்றால் உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போ” என்று கத்தினாள்.

அவள் கத்திய கத்தலில், கதிர் அவன் அம்மாவை இழுத்துக் கொண்டு ஓடியே போய் விட்டான். ஷியாமும் அதிர்ந்து நின்றான்

அவள் கத்திய கத்தல் அதிகம் தான் என்றாலும், அவள் மேல் எந்தத் தப்பும் இல்லையென்றே தோன்றியது ஷியாமிற்கு. அம்மாவின் மேல் தான் தப்பு. ஆஷாவின் சம்மதம் இல்லாமல் திருமண ஏற்பாடு செய்தது தான் தவறு என்று புரிந்து கொண்டான்.

டுத்த நாள் அலுவலகத்தில் கதிரைப் பார்க்கவே அஞ்சி ஷியாம் ஓடி ஓடி ஒளிந்தான். ஆனால் கதிர் தான் அவனைத் தேடி வந்து சமாதானப்படுத்தினான்.

“ஆஷாவின் சம்மதம் கேட்காமல் இரண்டு அம்மாக்களும் திருமண ஏற்பாடுகள் செய்தது தவறு. இதனால் நம் நட்பிற்கு எந்த இடையூறும் வரக் கூடாது, நானாவது அவளுடன் பேசி மனதைப் புரிந்து கொண்டிருக்க வேண்டும்” என்றான்

இவ்வளவு நல்ல மனிதனைக் கணவனாக அடைய தன் தங்கைக்குத் தான் அதிர்ஷ்டம் இல்லை என்று நினைத்துக் கொண்டான் ஷியாம்

அன்று மாலை வீட்டிற்கு வந்து தன் நண்பனைப் பற்றிச் சொல்லி சொல்லி வியந்து போனான் ஷியாம். ஆனால் ஆஷா எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. லட்சுமி மட்டும் சில நாட்கள் மீனாட்சியுடன் சரியாகப் பேசவில்லை

ப்படியே ஒரு வருடம் ஓடிப் போனது.

ஆஷா திடீரென ஒரு நாள், “நான் என் கம்பெனி முதலாளியை விரும்புகிறேன், அவரும் என்னை உயிரினும் மேலாக நேசிக்கிறார். பெரிய பணக்காரர், இங்கு ஓர் ஸாப்ட்வேர் கம்பெனி, கோவையில் இரண்டு காட்டன் மில்கள் என்று மிகப் பெரிய இடம். அவர்கள் வீட்டில் இருந்து பெரியவர்கள் இன்று வந்து பேசுவார்கள்” என்றாள்

ஷியாமும் அவன் அம்மாவும்  இந்த மாதிரி ஏதாவது ஒரு ஏடாகூடம் நடக்கும் என்று எதிர்பார்த்துத் தான் இருந்தார்கள். வெறும் பணம் என்னும் புதைகுழியை நம்பி காலை வைக்கும் இந்த முட்டாள் பெண்ணை திருத்த முடியாது என்று ஆஷாவின் விருப்பப்படி திருமணம் முடித்து வைத்தனர்

நாளடைவில் லட்சுமியும் மீனாட்சியுடன் பழைய நட்புடன் பழகத் தொடங்கினாள்

ஷியாமின் அலுவலகத்தில் ஒரு மாதம் ட்ரைனிங் ஏதோ பயிற்சிக்காக கதிரையும் ஷியாமையும் கொல்கத்தா அனுப்பி வைத்தார்கள்

கதிர், தன் அம்மா லட்சுமியை தனியே விட்டுப் போகத் தயங்கினான். மீனாட்சியும் கவிதாவும் கொடுத்த தைரியத்தில் ஒரு வழியாக் கிளம்பிப் போனான்

அவன் பயந்தது நிஜமாயிற்று. கவிதாவும் மீனாட்சியும் எப்போதும் லட்சுமியைத் தனியே விடுவதில்லை. அன்று கவிதா ஏதோவொரு கேஸ் விஷயமாகத் தன் ஸீனியரைப் பார்க்க என்று வெளியே சென்றிருந்தாள். மீனாட்சி மூவருக்கும் சமைத்துக் கொண்டிருந்தாள்.

குளித்து விட்டு வருவதாகத் தன் வீட்டிற்கு சென்ற லட்சுமி வெகு நேரமாகியும் திரும்பாததால், கலவரத்துடன் மீனாட்சி அவளைத் தேடிக் கொண்டு அவள் வீட்டிற்கு சென்றாள்.

அங்கே அவள் கண்ட காட்சி தூக்கி வாரிப் போட்டது. குளிப்பதற்காக குளியலறை சென்ற லட்சுமி வழுக்கி விழுந்து மயங்கிக் கிடந்தாள். மீனாட்சி உடனே கவிதாவிற்குப்  போன் செய்தாள், ஆம்புலன்ஸை வரவழைத்து லட்சுமியை அருகில் உள்ள பெரிய மருத்துவ மனையில் சேர்த்து விட்டனர்

மீனாட்சியையும் அதிக அலையவிடாமல், கவிதாவே மருத்துவமனையில் லட்சுமியின் அருகில் இருந்து கவனித்துக் கொண்டாள். கதிர் பயப்படா வண்ணம்  விஷயத்தைப் பக்குவமாகத் தன் அண்ணன் மூலமாகத் தெரியப்படுத்தினாள்

லட்சுமியுடன் கூடவே இருந்து மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்து தங்கள் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டாள்

கவிதாவைப் பற்றி லட்சுமியின் உள்ளத்தில் ஏற்கெனவே உள்ள உயர்ந்த அபிப்பிராயம் மேலும் உயர்ந்தது. இந்தப் பெண் மட்டும் எப்போதும் தன்னுடனே இருந்தால் போதும் என்ற எண்ணம் ஓடியது.

உடனே தன் தலையில் மானசீகமாக தட்டிக் கொண்டாள். ஏற்கனவே இவள் அக்காவை நம்பி ஏமாந்தது போதும் என்று தன்னைத் தேற்றிக் கொண்டாள்

இதற்குள் கதிரும் ஷியாமும் கொல்கத்தாவிலிருந்து அலறிக் கொண்டு வந்து விட்டனர். மூச்சுக்கு முன்னூறு முறை கவிதாவின் புகழ் பாடிக் கொண்டிருந்தாள் லட்சுமி. கதிர் அவளை வினோதமாகப் பார்த்தான், கவிதாவிற்கு கண்கள் பனிக்க நன்றி கூறினான்

ஷியாம் தன் தங்கை கவிதாவை வாக்கிங் சொல்ல அழைக்க, மறுப்பின்றி அவனுடன் கிளம்பினாள்

சிறிது தூரம் சென்றதும், “என்ன பேசப் போகிறாய் அண்ணா?” எனக் கேட்டாள் கவிதா

“கவிதா நீ மிகவும் புத்திசாலி. நான் ஏதோ பேசுவதற்குத் தான் அழைத்து வந்திருக்கிறேன் என்று புரிந்து கொண்டாய். என் நண்பன் கதிர் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?” என்றான்

அவனை நிமிர்ந்து பார்த்தாள், “எதற்காகக் கேட்கிறாய்?” என்றாள் கவிதா

“கதிர் என் உயிர் நண்பன், உறவினன் ஆகவும் இருந்தால் நன்றாக இருக்கும். நீ அவனைத் திருமணம் செய்து கொண்டால் சந்தோஷமாக இருப்பாய் என்று நினைக்கிறேன், உன் எண்ணம் என்ன? உனக்கு விருப்பம் இல்லையென்றால் மனம் திறந்து சொல்லி விடு” என்றான்

“அண்ணா, அவர்கள் ஏற்கெனவே ஆஷாவினால் ஏமாந்தவர்கள், என்னை ஏற்றுக் கொள்வார்களா?”           

“ஆஷாவின் விருப்பம் கேட்காமல் செய்தது தான் தவறு, அதில் வேறு குழப்பம் எதுவும் இல்லை. அதை விடு, இப்போது உன் விருப்பம் சொல், அவனை இழக்க நான் விரும்பவில்லை” என்றான்

கன்னம் சிவக்க, கண்கள் படபடக்க, ‘நானும் தான்’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள், ஆனால் வெளியே சொல்ல வில்லை.

டுத்த நாள் லட்சுமி வீட்டிற்கு காலை டிபன் எடுத்துக் கொண்டு சென்றாள் கவிதா. கதிர் ஹாலில் உட்கார்ந்து ஏதோ படித்துக் கொண்டிருந்தான். லட்சுமி உள்ளே மருந்து சாப்பிட்ட மயக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்தாள்

“வாங்க கவிதா” என மிகுந்த சந்தோஷத்துடன் வரவேற்றான். அவளைப் பார்த்தவுடன் அவன் முகத்தில் ஏற்பட்ட வெளிச்சத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டாள்

“உங்களுக்கு எங்கள் மேல் உள்ள கோபம் சரியாகி விட்டதா?” என்றவள் கேட்க

“ஆஷாவின் விருப்பம் கேட்காமல் திருமண ஏற்பாடு செய்தது எங்கள் தவறு தான். நாங்கள் தவறு செய்து விட்டு உங்கள் மேல் கோபப்படுவது தவறில்லையா?” என்றான் கதிர்

“அவளுக்கு எது உண்மையான வாழ்க்கை என்று புரியவில்லை. மனித நேயமில்லாமல் வெறும் பணத்தை மட்டுமே வாழ்க்கையாகக் கொள்வது கடைக்கால் இல்லாமல் கட்டிடம் கட்டுவது போல் தான் என்று அவளுக்குத் தெரியவில்லை” என்றாள் கவிதா பெருமூச்சுடன்.

“நீங்கள் என்னை புரிந்து கொண்டீர்களா கவிதா? ” என்றான் கதிர் ஆவலுடன்.

‘ஆம்’ என்று கன்னம் சிவக்க தலையசைத்தாள்.

“கவிதா, என் அம்மாவிற்கு என்ன மந்திரம் போட்டீர்கள்? எப்போதும் உங்கள் புராணமே பாடிக் கொண்டு இருக்கிறார்களே” என்றவன் சிரித்துக் கொண்டு அருகில் வந்தான்.

“ஏன் உங்களுக்கும் அந்த மந்திரம் போடவேண்டுமா?” என்றாள் குறும்புச் சிரிப்புடன்

“நான் ஏற்கனவே மந்திரித்து விட்ட கோழி மாதிரி தான் இருக்கிறேன்” என்றான் மயங்குவது போல் நடித்துக் கொண்டு

“இந்த மயக்கம் தீர மாங்கல்ய தாரணம் ஒன்று தான் வழி” என்று சிரித்தாள், அங்கு வந்த கதிரின் அம்மா             

கவிதாவின் முகம் வெட்கத்தால் சிவந்தது. கதிர் ஆவலுடன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

(முற்றும்)

#ads – Best Deals in Amazon 👇


 

#ads  தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

 சஹானா சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

 

             

                         

  

Similar Posts

One thought on “அன்புக்கு நான் அடிமை (சிறுகதை) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!