in ,

அழைப்பு (சிறுகதை) – ✍ கவி மாரியப்பன், திருவண்ணாமலை

அழைப்பு (சிறுகதை)

ந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்

சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 129)

லர்களின் வாசனைகள் அன்றைய காலையின் புதிய பரிமாணத்தை தெரிவித்துக் கொண்டிருந்தது 

பள்ளி துவங்கும் முதல் நாள் என்பதால், சைக்கிள் மணிகளும், கை ரிக்க்ஷாக்களின் ஒலிப்பான்களும் தொடர்ந்து ஒலிக்க, வீதி முழுதும் ஒரு உற்சாகம் தொற்றிக் கொண்டது

வெள்ளை நிற சட்டையும், பச்சைப் பாவாடையும் அணிந்துக் கொண்டு, புத்தகப்பையை சுமந்து அவளும் புறப்பட்டு விட்டாள். பத்து நிமிடங்கள் நடந்தால் புதிய பள்ளி

வீட்டின் அருகில் இருக்கும் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே இருந்ததால், மேல்வகுப்புக்கு இந்த பள்ளிக்கு மாற்றலாகி இருக்கிறாள்

பள்ளி முழுதும் புதிய முகங்கள். ஒவ்வொருவரையும் பார்க்கும் போது அனைவரின் முகங்களிலும் சிரிப்பு மாறாமல் சிறுக சிறுக பூத்துக் கொண்டே இருந்தது.  

இவளுக்கு நேரம் ஆக ஆக சிரிப்பு உதட்டின் அடியில் போய் புதைந்துக் கொண்டது. யாரிடம் வகுப்புக்கு வழி கேட்பது எனப் பார்க்கும் போதே அங்கு சாய்த்து அமைக்கப்பட்டு இருந்த தட்டியில் வகுப்பின் விவரங்கள் இருந்தன

தனக்கு ஒதுக்கப்பட்ட சிவப்பு நிறக் கட்டிடத்திற்குள் நுழைந்தாள். நூற்றாண்டு காலப் பள்ளி. மரப் படிக்கட்டுகள் வழி ஏறும்போதே ரப்பர் செருப்புகளின் சத்தம் தடதடவென்று கேட்டன

அதனோடு அவளின் இதயத்துடிப்பும் சேர்ந்துக் கொண்டது. ஆறாம் வகுப்பு ‘அ’ பிரிவு. வெளிர் நீல கதவின் மேல் சாக்கு கட்டிகளால் எழுதப்பட்டு இருந்ததை பார்த்து விட்டாள்

வகுப்புக்குள் செல்லவே வெறுப்பாக இருந்தது. ஆனால் தனக்கு இருக்கும் ஒரே பிடிப்பு, படிப்பதற்காக பள்ளிக்கு வருவது மட்டுமே என்பதால் தயங்கி தயங்கி வகுப்பினுள் கால் எடுத்து வைத்தாள்

அவள் வரும்போதே வகுப்பு ஆசிரியையும் உள்ளே நுழைந்தார்.  அவருக்கு வணக்கத்தை தெரிவித்து விட்டு கடைசியில் உள்ள  இடத்தில் அமர்ந்தவளுக்கு படபடப்பாகவே இருந்தது

நடக்கப் போகும் விஷயம் பழைய பள்ளியில் வாடிக்கையானது தான். ஆனால் இன்று முற்றிலும் புதிய சூழல். சந்தித்து தான் ஆக வேண்டும். எனவே மனதை தயார்ப்படுத்த ஆரம்பித்தாள்

ஆயிற்று ‘யு’ வந்து விட்டது. அடுத்து எத்தனையாவது பெயரோ, கண்களை இறுக்க மூடிக் கொண்டாள், காதுகளை மூட முடியாததால்

“வேண்டா வரம்”

ஆசிரியையின் குரலே என்னவோ நிறுத்தி ஒவ்வொரு எழுத்தாக ஒலித்ததை போல இருந்தது. 

ஆசிரியை இவள் பெயரை அழைத்த அடுத்த நொடி, அலையென எழுந்த சிரிப்பு சத்தம் வகுப்பில் எதிரொலிக்க, ‘ப்ரசண்ட் மிஸ்’ தனக்கு கேட்கும் அளவுக்கு சொல்லிக் கொண்டு கைகளை மட்டும் உயர்த்தினாள்

அடுத்த பெயருக்கு போய் விட்டார் ஆசிரியை. ஆனால் வேண்டாவோ அதே இடத்தில் உறைந்து நின்றாள்

“அம்மா, உங்களுக்கு வேற பேரே கிடைக்கலையா, இது வேண்டாம்மா” 

மூன்றாம் வகுப்பில் விவரமும், பெயருக்கு அர்த்தமும் தெரிய ஆரம்பித்து சக மாணவர்களின் ‘கொல்லென்ற’ சத்தத்தில் அவமானப்பட்டு வீட்டிற்குள் வந்து, பையை தூக்கிப் போட்டு, அம்மாவை தேடி போய் கேட்டாள்

“என்னடி வந்தது இந்த பேருக்கு. ஆறும் பொண்ணா பொறந்து உனக்கு இந்த பேரை வச்சப்பின்னாடி தான் உன் தம்பி பொறந்தான். இந்த பேரை இப்ப மாத்தினா தம்பிக்கு எதாவது ஆயிரும்டி”  

அம்மா எந்த சமாதானத்தை சொன்னாலும் ஏற்றிருக்க மாட்டாள். தம்பியின் பெயரை சொன்னதும் அவளுக்குள் பாசக்கிளி ஒன்று பறந்து வந்து அமர்ந்தது

அழகாக, சிவந்த சின்னஞ்சிறு கைகளையும், கால்களையும் ஆட்டிக் கொண்டு, பொக்கை வாய் திறந்து முதன்முதலில் சிரித்த தம்பியை தொட்டிலில் பார்த்ததும், ஒரு ரோஜா மலரின் இளம் மொட்டு விரிந்ததை போன்று அவளுக்கு தெரிந்தது

பிரசவ வேதனையில் இருக்கும் அம்மாவை கூட அவளுக்கு பெரிதாக பார்த்துக் கொள்ளத் தெரியவில்லை. ஆனால் பள்ளி விட்டு வந்து தூங்கப் போகும் வரை, தம்பி மீதே அவளின் கவனம் முழுதும் இருக்கும்

“அக்கா சொல்லு, அக்கா சொல்லு” என்று பிறந்த முதல் நாளில் இருந்து அவள் கொஞ்சுவதை சுற்றிலும் இருக்கும் அத்தனை பேரும் கிண்டல் செய்வார்கள்.  

“உங்கப்பனும், ஆத்தாவும் கெடந்து தவம் இருந்து பெத்ததுக்கு அவங்களை அம்மா அப்பானு கூப்பிடாம உன்னைத் தான் நேரா அக்கானு கூப்பிடுவானாக்கும்” ஆயா திண்ணையில் படுக்கையில் இருந்து கழுத்தை ஒடித்து, அவளை பழிப்புக் காண்பித்து சொல்லியும் அவள் கண்டுக் கொள்ளவே இல்லை

ஆனால் அத்தனை பேரும் அதிசயப்படும்படி  இவளைத் தான் முதன் முதலில் ‘க்கா’ என்று நடைபழகும் போது அழைத்தான். ஆயாவின் முகத்தைப் பார்க்க அப்போது வேண்டாவுக்கு அவ்வளவு சந்தோஷமாக இருந்தது

இப்பொழுதும் மற்ற அக்காக்களை விட இவளிடம் தான் அதிகமாக ஒட்டிக் கொள்வான். பள்ளியில் பிள்ளைகளின் கேலி அடுத்தடுத்த வகுப்புக்கு செல்கையில் அதிகரித்ததே ஒழிய குறையவே இல்லை

வேண்டாவின் தம்பி பாசமும் அதே அளவுக்கு அதிகரித்தது. வீட்டை சுற்றிலும் அவள் பிரகாஷின் அக்காவானாள். அதுவே அவளுக்கு எல்லாவற்றையும் மறக்க போதுமானதாக இருந்தது

இப்படியே மூன்று வருடங்களை கடத்தி விட்டாலும், இன்று முற்றிலும் புதிய பள்ளியில், இனிமேல் தான் தினமும் அத்தனை பேரின் கிண்டலுக்கு காரணமாய் இருக்கப் போகிறோம் என்பதே அவளுக்கு பயமாய் இருந்தது

சுற்றிலும் மாணவர்களின் விதவிதமான குரல்கள் அவளை தற்சயத்துக்கு மீட்டுக் கொண்டு வந்தது. முதல் நாள் என்பதால் பாடங்கள் எதுவும் நடைபெறவும் இல்லை. அரை நாளில் பள்ளி விட்டு விட்டார்கள்

வேக வேகமாக வீடு வந்து சேர்ந்தவளை எதிர்ப்பார்த்து காத்திருந்தான் பிரகாஷ். கையை நீட்டி வருபவனை தூக்கிக் கொண்டவள், பக்கத்து வீட்டு அத்தையின் அருகில் போய் அமர்ந்துக் கொண்டாள்

“ஏன் மூஞ்ச தூக்கி வச்சினு இருக்க. மொத நாள் தான? யாரும் திட்டிருக்க மாட்டாங்களே. ஏன்டி.. பசிக்குதா. சோறு போடவா?” 

அத்தை கேட்டதும் “ப்ச்” என்று சலித்துக் கொண்டாள்

“ம்க்கும். பெரிய மனுஷிக்கு சலிப்புத் தான்” அத்தை சொல்லிவிட்டு அவள்  பாட்டிற்கு பாத்திரம் கழுவ ஆரம்பித்தாள்.  

வேண்டா, தம்பியின் சிறு விரல்களை ஒவ்வொன்றாக நீவி விட்டாள்.  அவன் அவளை அண்ணாந்து பார்த்து சிரிக்க, அவன் கன்னத்தில் மெதுவாக முத்தமிட்டாள்.  

மனம் பள்ளியில் மாணவர்கள் சிரித்த சிரிப்பினையே சுற்றி வந்தது.

‘ஏன் தனக்கு மட்டும் இப்படியெல்லாம் நடக்கிறது?’  அவளின் சிறிய மனதில் கேள்வி மட்டும்  விஸ்வரூபமாக நின்றது

அப்பாவின் தகரங்களைத் தட்டி வாளிகளாகவும், பாத்திரங்களாகவும் மாற்றும் தொழிலில் கிடைக்கும் வருமானம், அம்மாவின் விவசாய தினக்கூலியில் வரும் வருமானம் மட்டுமே தான் அந்த குடும்பத்துக்கு சாப்பாடையும், இவளுக்கு படிப்பையும் தந்துக் கொண்டிருந்தது

இடையில் திருமணம் செய்துக் கொடுத்த மூத்த அக்காவினை பணம் வாங்கி வரும்படி அவளின் அத்தையும், மாமாவும் அடித்து அனுப்ப, அவளை சமாதானப்படுத்தி புகுந்த வீட்டிற்கு அனுப்பியதால் அடுத்த அக்காவின் பள்ளி படிப்பு பத்தாவதோடு நின்றது

அடுத்த வருடமே அவளும் புதுப்பெண்ணாய் புகுந்த வீடு சென்றாள்

மூன்றாம் அக்காவை அம்மையும், காலராவும் ஒரே நேரத்தில் தாக்க, மூன்று மாதங்களில் படுத்த படுக்கையாக கிடந்து போய் சேர்ந்தாள். அடுத்த வருடம் அவளைத் தான் புதுப்படவை வைத்து பூவாத்தம்மனாய் வணங்க ஆரம்பித்தார் அம்மா

நான்காம் அக்கா பிறந்ததில் இருந்தே போலியோவினால் பாதிக்கப்பட்டவள். அவளால் இருந்த இடத்தில் இருந்தே சமையல் செய்யவும், தம்பியை பார்த்துக் கொள்ளவும் தான் முடியும்

ஐந்தாமவளும், வேண்டாவும் தான் பள்ளி சென்று வந்துக் கொண்டிருந்தனர். அதனாலேயே என்னவோ வேண்டாவுக்கு தம்பிக்கு பின் படிப்பு மட்டுமே தன் வாழ்க்கையில் கிடைத்த வரம் என்றானது

தான் நன்றாக படித்து, வேலை ஒன்றை வாங்கி விட்டால் வீட்டில் உள்ள அனைவரையும் தானே பார்த்துக் கொள்ளலாம், தம்பியை எப்படியாவது ஒரு மருத்துவராக ஆக்கி விட முடியும் என்று நம்பினாள். 

அவளின் மனக்குரல் வெளியில் கேட்டதைப் போல,“உன் தம்பியை டாக்டராக்கனும்னு சொல்றியாமே எதுக்காம். அவன் காசை கொண்டாந்து உங்கப்பன் குடிக்கு கொட்டவா?” பக்கத்து வீட்டு அத்தை அவளை சீண்ட கிண்டலாக சொன்னதும்

“அத்த, எங்க வீட்லயே இத்தனை பேரு கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரிக்கு அலையறோம். கைகால் விழுந்து கெடக்கற ஆயாக்கு வைத்தியம் பாக்க இந்த கல்லுக்குட்டைக்கு யாரும் வரமாட்டறாங்க. 

அவங்களுக்கும், குடிச்சிட்டு வயித்து வலியில் துடிக்கற அப்பாவுக்கும், இடுப்பு வலில அவஸ்தைப்படற அம்மாவுக்கும், செல்வி அக்கா காலு நடக்கற மாதிரி கட்டைக்கால் வைக்கறதுக்கும் பிரகாசு டாக்டராயிட்டா போதும் இல்ல. அதான் நான் படிச்சு வேலைக்கு போயி அவனை டாக்டாராக்குவேன்னு சொல்றேன்” பதட்டப்படாமல் நிதானமாக சொல்லும் வேண்டாவை அருகில் இருப்பவர்கள் வைத்த கண் வாங்காமல் பார்த்தனர்

“உன் தம்பி டாக்டராவற வரை நான் இந்த பாழாப்போன உசிரை இழுத்துப்பிடிச்சிட்டு இருக்கனுமாம். போடி இவளே. காடு வாவான்னுது, இவ வேலைக்கு போய் கிழிக்கறவரை நான் ச்சீப்பட்டு கெடக்கனுமாம்.” சொல்லும் ஆயாவை, கடிந்துக் கொண்டே அம்மா வீட்டிற்குள் நுழைந்தார்

“இத்தனை பெத்ததுல இவ ஒருத்தி தான், படிச்சு வேலைக்கு போய் தம்பியையும் நம்ம எல்லாரையும் பார்த்துப்பேன்னு வாய் நிறைய சொல்றா. அது உனக்கு பொறுக்கலையா?  என் தங்க பிள்ளைக்கு வேண்டாவரம்னு பேர் வச்சிட்டேனே. அந்த ஆண்டவனா பாத்து தந்த வரம் தான் இவ” 

இப்பொழுதெல்லாம் அம்மா மாமியாரை திட்ட ஆரம்பித்து மகளை உச்சி முகர்ந்து தான் முடிக்கிறார்

இதற்காகவாவது படித்து தான் பெரிய வேலைக்கு செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள் வேண்டா.  

மனதில் உறுதி வந்தபின் அடுத்தடுத்த நாட்களிலேயே, பள்ளியில் வரும் சலசலப்புகளை எல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல், புத்தகத்தினுள் மூழ்கிக் கொண்டாள்.  

ருடங்கள் உருண்டோட ஆரம்பித்தன.

அன்று அந்த வருட ஆண்டு விழா. ஒன்பதாம் வகுப்பில் நாள் தவறாமல் வருகை தந்தது, விளையாட்டு, கவிதை, கட்டுரை என அடுத்தடுத்து “வேண்டா வரம்” என அவள் பெயர் பரிசுகளுக்காக உச்சரிக்கப்பட்டது

முதலில் சொல்லும் போது பள்ளி முழுதும் சிரிப்பொலி எதிரொலிக்க, அடுத்தடுத்த பெயராக அவளுடையதே வரும் போது வெறும் கைத்தட்டல்கள் மட்டுமே பெரிதானது

சிறப்பழைப்பாளராக வந்திருந்த மாவட்ட ஆட்சியர் ரேவதி, “முதல் முறையாக  இப்படி ஒரு பெயர் ‘வேண்டா வரம்’ என்று கேள்விப்படுகிறேன். அந்த பெயரை கேட்டதும் முதலில் கேலித்தொனியில் சிரித்தவர்கள், அடுத்தடுத்த வெற்றி பெற்றவராக அவர் பெயர் உச்சரிக்கப்படும் போது கைத்தட்டினார்கள். இது தான் நிதர்சனம். 

எந்த ஒரு அவமானமும் நம் விடாமுயற்சியால் வெற்றி பெறும்போது அது நமக்கு பெருமையாக மாறும். இதை ஞாபகத்தில் வைத்து உன் பெயரை எல்லாரும் பெருமையாக உச்சரிக்கப்படும் படி செய்ய வேண்டும் மா.  வாழ்த்துகள் வேண்டா வரம்” என்றார்

முதல் முறையாக ஆட்சியரின் குரலில் தன் பெயரை ஒலிப்பெருக்கியில் கேட்கும் போது அத்தனை பெருமிதமாக இருந்தது. ஆட்சியரின் கைகளில் இருந்து அத்தனை பதக்கங்களையும் வாங்கிக் கொண்டு தன் கைகளை உயர்த்தி காண்பித்தாள்

பள்ளி அமைதியாக அதை பார்த்து கைத்தட்டியதுடன் அதற்கு பின் எப்பொழுதும் அவளை கேலிப் பேசவில்லை. 

வீட்டின் அருகில் யாராவது பிரகாஷூ அக்கா என்று அழைத்தால் உடனே “என் பேர் வேண்டா வரம், அப்படியே இனிமே கூப்பிடுங்க” என்று நிமிர்ந்து கூறினாள். 

மனதுக்குள் ஒரு பெரிய சாம்ராஜ்யத்தின் ராணியாக அவளை கற்பிதம் செய்துக் கொண்டாள்

அதே உத்வேகத்துடன் எல்லாவற்றிலும் முதலாவதாக வந்தாள். ஒவ்வொரு முறையும் வீட்டின் பணப்பற்றாக்குறைக்கு அரசுப் பள்ளியில் கட்டும் தொகைக் கூட பெரிதாக தெரிய, அப்பா, வேண்டாவை பள்ளியில் இருந்து நிறுத்தி விடலாம் என்ற போதெல்லாம் அம்மா இவளுக்கு பரிந்து வந்தார். 

அதனாலேயே  வேண்டாவும், பிரகாஷும் மட்டும் பள்ளிச் சென்று வந்தனர். அதற்கு பதில் வீட்டில் இருந்த இரண்டு அக்காக்களும் இவர்களை விட வருமானம் குறைவாய் வரும் வீட்டிற்கு மருமகள்கள் ஆயினர்

வீட்டின் கஷ்டம் தெரிந்து, நன்றாக படிப்பதால், ஆசிரியர்கள் அரசு உதவித் தொகைக்கு அவளின் பெயரை சேர்த்தனர். அதனால் அப்பாவுக்கும் இவளை பள்ளியில் இருந்து நிறுத்த காரணம் கிடைக்கவில்லை

பனிரெண்டாம் வகுப்பில் முதல் இடத்தை பிடித்தவளை பாராட்டிய ஆசிரியர்கள் தான்,  பொறியியல் படிப்பில் சேர்த்து விட்டார்கள்

அங்கும் முதலாவதாக வந்து, நேர்காணலில் மிகப் பெரிய நிறுவனத்திற்கு தேர்வும் பெற்றாள். 

நான்காண்டுகள் பெங்களூரில் வேலை செய்யும் போதே அப்பா இறந்ததால், அம்மாவும், பிரகாஷூம் இவளின் பொறுப்பாயினர்

மற்ற அக்காக்களுக்கு தேவைப்படும் போது பண உதவியை செய்தவள்  பிரகாஷை சொன்னது போலவே மருத்துவப் படிப்பில் சேர்த்து விட்டாள்

போலியோ பாதித்த அக்காவுக்கு அரசாங்க உதவித் தொகைக்கும், வேலைக்கும் வேண்டா எழுதிப் போட்டாள்

தம்பி படிப்பை முடிக்கும் வரை தன் திருமணத்தை தள்ளிப் போட்டவள், அவனுக்காகவே வெளிநாட்டில் தனக்கு கிடைத்த வேலைக்காய் அம்மாவுடன் பறக்கத் தயாரானாள்

அந்த வேலை, அவளின் அத்தனை போராட்டங்களுக்கும் முடிவு கட்ட சட்டென கையில் கிடைத்த பரிசு போல்  இருந்தது அவளுக்கு

புதிய சூழல் தான் இங்கும். ஆனால் தயக்கமோ, பயமோ இப்போது இல்லை. ஏனெனில், தன் பெயரின் ஒவ்வொரு எழுத்தையும் வார்த்தைகளால் குறிப்பிட்டால் தான் அங்கிருப்பவர்களால் அவள் பெயரை உச்சரிக்கவே முடியும்

‘வி’ என்று ஆரம்பிக்கும் போதே, ‘வி ஃபார் விக்டரி’ என்ற வாக்கியத்துடன் தான் ஆரம்பிப்பாள். தொடங்கும் போதே அவளின் உதடுகள் சிரிப்பை சிந்த ஆரம்பிக்கும்

இப்போது இங்கு யாரும் தன் பெயருக்கு அர்த்தம் தெரிந்து சிரிக்கப் போவதில்லை என்றாலும் கூட, தமிழ் தெரிந்தவர்கள், “இன்னும் ஏன் இந்த பெயரை சுமந்திட்டு இருக்க. இப்பக்கூட கெசட்ல மாத்திக்கிடலாம் இல்ல” என்று கேட்பார்கள்

தன்னை வாழ்க்கை எனும் ஓட்டப்பந்தயத்தில் வேகவேகமாக ஓட வைத்து இந்த இடத்தில் கொண்டு வந்து நிறுத்தியது இந்த பெயர் தான் என்பதால் அதன் மேல் அலாதி பிரியம் வந்தது அவளுக்கு

தன்னை ஒவ்வொரு படியாக முன்னேற்றிக் கொண்டிருந்தவளின் உழைப்பு அவளின் கனவை நனவாக்கியிருந்தது

தம்பி படித்து முடித்து, ஆரம்ப சுகாதார துறையின் கிராமப்புற பிரிவில் வேலைக்கு சேர்ந்தான் என்று தகவல் வந்ததும், நிம்மதி பெருமூச்சு விட்டாள்

அக்காக்களும் இவள் வெளிநாட்டிற்கு சென்றதும் பணத்தை பெறுவதில் மட்டுமே குறியாக நிற்க, அம்மாவுக்கு இனிமேலாவது வேண்டாவின் தோள்களுக்கு விடுதலை கொடுக்க தோன்றியது. வேண்டாவை திருமணத்துக்கு வற்புறுத்த ஆரம்பித்தாள். 

அப்பொழுது தான் கதிர் அங்கு அறிமுகமானான்‌. அவளுடன் வேலைப் பார்ப்பவன். அப்பா இல்லாது அம்மாவின் உழைப்பில் உயர்ந்தவனுக்கு, வேண்டாவின் குடும்ப நிலவரம் புரிந்திருந்தது.  

அதனை விட வேண்டாவின் அழகும், ஆளுமையும் அவனுக்குள் காதலையும் வளர்த்திருந்தது. வேண்டாவின் அம்மாவுக்கு அவனையும், அவன் அம்மாவுக்கு வேண்டாவையும் பிடித்தது.  

திருமண நாள் குறித்தனர்

ஆனால் நிச்சயமானவுடன் அம்மாவின் உடல்நிலை மோசமாக, வேண்டாவும் அம்மாவும் இந்தியாவிற்கு திரும்பினர். அம்மாவை கூட இருந்து பார்த்துக் கொள்ள, வேலையை விட்டு விடலாமா என்று கூட வேண்டாவுக்கு தோன்றியது

கதிருக்கு அதில் விருப்பம் இல்லை. அவள் அம்மாவை தம்பியின் பொறுப்பில் ஒப்படைத்து விட்டு, திருமணம் செய்ததும் மீண்டும் வேலைக்கு திரும்ப வேண்டும் என்று கண்டிப்பாக சொல்லி விட்டான். 

வேண்டா, பிடிவாதம் பிடித்தாலும் அம்மா அவளை திருமணம் செய்துக் கொண்டு கதிருடன் செல்லும்படி கூறிவிட்டார்

வேறு வழியின்றி கதிருடன் மீண்டும் அமெரிக்காவிற்கு திரும்பியவளுக்கு, திருமணத்திற்கு பின் தான் கதிரின் உண்மையான மனநிலை கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பித்தது

சிறு வயதில் இருந்து அம்மாவின் சொற்ப சம்பளத்தில் வளர்ந்தவனுக்கு, தன் சம்பாத்தியம் ஒரு பக்கம் குடும்ப செலவுக்கு, வேண்டாவின் சம்பளம் உறவினர்கள் முன் தன் வசதியை காண்பித்துக் கொள்ள என்றத் திட்டத்தோடு தான் அவளை திருமணம் செய்திருந்தான் என்று புரிந்தது

இருவரின் சம்பளத்தில் கணக்கு பார்த்து தவணையில் பெரிய வீடும், காருமாக வாழத் துவங்கினர். பின் இன்னுமின்னும் பொருட்கள் சேர சேர, இவள் விடுமுறை கூட எடுக்காமல் ஓடியோடி உழைக்க வேண்டியதாகியது

பிரசவத்தை கூட கணக்குப் பார்த்து இரு வருடங்கள் இடைவெளியில் இரு குழந்தைகள் என முடிவு செய்து பெற்றுக் கொண்ட அவனின் செயல்கள் அவளுக்கு ஆச்சர்யமாகவே இருந்தது

ஒரு ரூபாய் என்றாலும் அவனின் பட்ஜெட்டில் இல்லாமல் அவள் குழந்தைகளுக்கு கூட செலவழித்து விட முடியாது. ஆனாலும் அதை தவிர அவளுக்கு, அவனிடத்தில் ஆரம்பத்தில் பெரிய குறைகள் தெரியவில்லை.  

ஆனால் வருடங்கள் செல்ல செல்ல, ஏதோ ஒன்றை தான் தவறு விடுகிறோம் என்று பட்டது. ஆனால் என்னவென்று தான் அவளால் சரியாக அடையாளப்படுத்திக் கொள்ள முடியவில்லை

இவளை விட சற்று உயர்ந்த சம்பளத்தில் அவன் மாறுதலாகி வேறு வேலைக்கு செல்ல ஆரம்பித்தவுடன், அவனின் பேச்சுக்கள் கூட கொஞ்சம் வேறு மாதிரியாகத் தான் இருந்தது

பிறந்ததில் இருந்து எத்தனையோ பார்த்து விட்ட அவளுக்கு, அவனின் குத்தல் கிண்டல் பேச்சுக்கள் பெரிதாக தெரியவில்லை. இயல்பிலேயே பொறுமையை கடைப்பிடிப்பவளுக்கு இப்போது இருக்கும் சூழல்கள், நிரந்தரமாக அவளை மௌளனியாகவே இருக்க வைத்தது

மேலும் பிள்ளைகள் பெரியவர்களாகையில், அவர்களின் முன் தேவையில்லாத சண்டைகளை உருவாக்கிக் கொள்ள அவள் விரும்பவில்லை. வாழ்க்கை மட்டும் காற்றடிக்கும் திசையில் இலகுவாக பறக்கும் பட்டத்தை போல இருந்தது

ன்று பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு நேர்காணலுக்கு சென்றிருந்தாள். தமிழ் மூதாதையர்களை கொண்ட ஒருவர் தான், இவளை நேர்காணல் செய்ய காத்திருந்தார்

“மிஸஸ்.நாதன்‌” அவர் அழைக்க, ஒரு தானியங்கி பொம்மையை போல் அவர் முன் சென்று அமர்ந்தாள்.  

பாஸ்போர்ட்டின் முதல் பெயரை பார்த்ததும் இவளை நிமிர்ந்து, ஒரு அர்த்தப் பார்வை பார்த்தார்‌ அவர்.  இவளின் விழிகள் அவரை கேள்விக் குறியுடன் நோக்கியது.  

“வேண்டா வரம்” ஒவ்வொரு எழுத்தாக அவர் உச்சரித்ததும், வேண்டாவின் மனதினுள் எங்கோ மணியடித்ததை போல் உணர்ந்தாள்

“வேண்டாவரம் – அழகான தமிழ் பெயர். ஆனால் அர்த்தத்தை யோசித்து தான் எனக்கு அதிசயமாக இருக்கிறது”

அவர் தமிழில் பேசியதும் வேண்டாவிற்கு ஒரு மகிழ்ச்சி வந்தது. சுருக்கமாக தன் பெயருக்கான அர்த்தத்தை அவரிடம் தெரிவித்தாள்.  

ஏறக்குறைய பதினைந்து வருடங்களுக்கு பின் ஒருவரிடம் தன் பெயரை பற்றி சொல்லியவுடன் அவளுக்குள் பழைய நினைவுகள் நிழலாடியது

வீட்டிற்கு வரும் வழியில் எல்லாம் மனதுக்குள் ஆயிரம் யோசனைகள் தலைவிரித்தாடின.  ஏனோ அம்மாவிற்கு பேச வேண்டும் என்பது போல தோன்றியது

தம்பிக்கு அழைக்கலாம் என்று எண்களை அழுத்தினாள். எதிர்முனை பதிலளிக்காத பொம்மையை போல் அமைதியாக இருந்தது.  இந்நேரம் எந்த அறுவை சிகிச்சையில் இருக்கிறானோ என்ற எண்ணம் வர, பின்னர் பேசிக் கொள்ளலாம் என்று  அலைபேசியை அணைத்து வைத்தாள்

வழக்கமாக பிள்ளைகளை அழைத்து வரும் நேரம் என்பதால் கைகள் பழக்கமான பாதையில் வண்டியை செலுத்த தொடங்கியிருந்தன.  வாசலில் சரியாக பிள்ளைகள் நிற்க, அவர்கள் அருகில் இன்னொரு குழந்தையின் தாய் நின்றிருந்தாள்.  

அவளிடம் ஒரு சினேக புன்னகை வீச, அவளும் இவளுடன் அறிமுகமாகி பிள்ளைகளின் பெயர்களை அழகாக உச்சரித்து கையசைத்து விடைக் கொடுத்தாள்‌.   

இரு குழந்தைகள் ரித்வி, அகிலேஷ் என படு நாகரீகமான பெயர் குழந்தைகளுக்கு.கண்ணா என மாமியார் இவளின் கணவனையும், அம்மு, அப்பு என பேரக்குழந்தைகளையும், கதிர் குழந்தைகளை டார்லி, பப்பு என செல்ல பெயர் வைத்து கூப்பிடுவார்கள்

இவளுக்கு பிள்ளைகளை அழகாக தமிழ்ப்பெயர்கள் வைத்து அழைக்க வேண்டும் என்று தான் ஆசை. ஆனால் கதிரும், அத்தையும் அதற்கெல்லாம் இவளிடம் எந்த கருத்தையும் கேட்கவில்லை

வீட்டிற்குள் நுழைந்த போதே, பேரப்பிள்ளைகளை இழுத்துக் கொஞ்சிய அத்தை,   “கதிர் சாப்பிட்டு வருவானாம், கால் பண்ணான்.  நீ நமக்கு மட்டும் எதாவது டிஃபன் செஞ்சிடு” அவளிடம் ஏதோ ஒரு எந்திரத்திடம் வேலை சொல்வது போல் சொல்லி விட்டு சென்று விட்டார் அவர்

எரிச்சலாக இருந்தது வேண்டாவுக்கு. தனித்த காட்டின் விலங்கு போல, தான் மட்டும் அந்த வீட்டில் தனிமையினை அனுபவிப்பது போல பிடிப்பற்று இருந்தது

ஆனாலும் யாரிடமும் எதுவும் கேட்காமல், முகம் கழுவி தன் வழக்கமான வேலைகளுக்குள் மூழ்கிக் கொண்டாள். அம்மாவை அழைக்க வேண்டும் என்பதையும் மறந்து விட்டிருந்தாள்

காலை வேளையின் மூடுபனியில் வெளியில் ஆள் ஆரவமற்று இருக்க,  அடுப்படியில் நிற்பது சிறிது இதமாக இருந்தது

“இந்த சட்டையை அயர்ன் பண்ணலையா? இன்னிக்கு எனக்கு மீட்டிங் இருக்குன்னு சொன்னேன் இல்ல” இவளை நோக்கிய கதிரின் இரைச்சல் அடங்குவதற்குள்

“பசங்களுக்கு நேரம் ஆகுது. அதுங்களை எழுப்பு. டிபன் பாக்ஸ் ரெடி பண்ணிட்ட இல்ல” மாமியாரின் மிரட்டல் தொணி சமையலைறையின் சுவர்களில் எதிரொலித்தது

யாருக்கும் பதில் கொடுக்க வேண்டும் என்று தோன்றவில்லை. அமைதியாக கதிரின் சட்டையைத் தேய்த்து தந்தவள், பிள்ளைகளுக்கு சிரித்த முகத்துடன் எல்லாவற்றையும் செய்துக் கொடுத்தாள்

காலையில் பிள்ளைகளை பள்ளியில் விடுவது கதிரின் வேலை என்பதால், அலட்டிக் கொள்ளாது தன் வேலைகளைப் பார்த்து விட்டு அலுவலகம் கிளம்பினாள்

மனம் மட்டும் கூப்பாடு போடும் பறவையினைப் போல் இருந்தது. தன்னை அரித்து தின்னும் கவலை எதுவென்று அவளுக்குள் ஒரு விவாத மன்றமே ஓடிக் கொண்டு இருந்தது

வழக்கமான பாதையின் ஓரத்தில், கைகள் தானாக வாகனத்தை நிறுத்தியது. அலுவலகம் செல்ல வேண்டும் என்ற முனைப்பு இல்லை.  அமைதியாக ஸ்டியரிங்கின் மேல் முகம் புதைத்தாள்

வெறுமையான ஒரு வீட்டின் வாயிலுக்கும், தோரணங்கள் கட்டிய வாயிலுக்கும் இடையில் இருக்கும் அழகை ரசிப்பவர்களுக்கு கூட, வீட்டில் இருக்கும் அத்தனை பொருட்களை போல தானும் ஒரு பொருளாக இருப்பது யார் கண்ணுக்கும் பெரிதாக தெரிவதில்ல

ஏன் தனக்குமே  இத்தனை நாட்களாக தான் எதை தவற விட்டோம் என்பதுவும் தெரியாமல் தானே பழக்கமான பாதையில் ஓடும் கண் தெரியாத நாய் போல் இருந்திருக்கிறோம் என்று உரைத்தது. 

ஆறுதல் சொல்லக்கூட ஒரு நெருக்கமான நட்பை பெற்றிருக்கவில்லையே என்று தன் மேலேயே ஒரு கழிவிரக்கம் சுரந்தது

என்றுமில்லாமல் என்ன இது புது பழக்கம்? யாரோடாவது தோள் சாய ஏன் இப்போது இத்தனை குழப்பங்கள்? அந்த அளவுக்கு தனக்கு என்ன பிரச்சினை என்று புத்தி தடுமாறியது. மனம் மிழற்றியது

சமீபத்தில் ஒவ்வொரு நிகழ்வாக நடந்தவற்றை எல்லாம் ஒரு சங்கிலி போல கோர்த்து பார்த்தாள். வெள்ளைப்படல மேகங்கள் கலைந்து வெளிறிய வானம் போல் அவளுக்கு சில உண்மைகள் புரிந்தன. 

தன் ஆதங்கமும், ஏக்கமும் இன்னது தான் என ஒரு வழியாக புரிந்தது. கண்களின் வழி நீர் அவளின் கைகளைத் தொட்டது. 

அவளின் அந்த நிமிட ஆசுவாசத்தையும், குழப்பத்தையும் ஒரு சேர துரத்துவதை போல, மெல்லிய ரீங்காரம் அவளின் கைப்பையை லேசாக அதிர வைத்தது

அலைபேசியில் பெயரை பார்த்து, அழைப்பை அவசரம் அவசரமாக ஏற்றவள், “அம்மா” விம்மலுடன் அழைத்தாள். 

ஆயிரக்கணக்கான மைல்களை தாண்டி அம்மாவின் கரங்களுக்குள் முகத்தை புதைத்துக் கொள்வதைப் போல் இருந்தது

எதிர்முனையில் பதில் வருவதற்கு முன்பே,  “அம்மா, உனக்கு ஒன்னு தெரியுமா. கொஞ்ச நாளா எதையோ இழந்திட்டேன்னு தேடிட்டு இருந்த எனக்கு, இப்பத்தான் மா புரிஞ்சுது. நான் இழந்தது எது தெரியுமா?  என்னைத் தான் நான் இழந்திட்டேன். நான் ஒரு பெயரிலி மா. 

என்ன புரியலையா? என்னை யாரும் நீ வச்ச பேரை சொல்லி கூப்பிடறதே இல்லம்மா. அஃபிஷியலா மிஸஸ். நாதன், வீட்ல பசங்களுக்கு அம்மா, மத்தவங்களுக்கு ஒரு பேரில்லாத வேலைக்காரி, பிரகாஷூக்கு அக்காம்மா. அதை தவிர நான் யாரும்மா?

நான் இப்ப, யாருக்கும் சொந்தமில்லாத, அனாமத்தா இருக்க ஒரு பொருள்.  எந்த பெயர் வேண்டாம்னு நினைச்சு அழுதேனோ, அதே தான் எனக்கு வாழ்க்கையை கொடுத்துச்சு. இப்ப அதை நினைச்சு ஏங்கற அளவுக்கும் கொண்டு வந்து விட்டுடுச்சு.

அதை  நான்  நிரந்தரமா தொலைச்சிட்டேன் மா. பிறந்ததில் இருந்து சுமந்த ஒரு அடையாளத்தை இழக்கிறது எவ்ளோ பெரிய வலி தெரியுமா? ஒருத்தரோட அடையாளமே அவங்க பேர் தானேம்மா. 

செத்துப் போன பின்னாடி தானே எல்லாம் பிணம். அதுவரைக்கும் இவ உயிரோட இருக்கான்னு உணர்த்தறதே யாராவது அவளை பேர் சொல்லி அழைக்கிறது தானேம்மா?

ஆனா இங்க யாரும் என்னை அப்படி ஒரு மனுஷியா அடையாளப்படுத்த விரும்பலைம்மா. நிஜமாவே வேண்டாத வரம் ஆகிட்டேன் நான்” விசும்பத் தொடங்கினாள்

“நீயாச்சும் வேண்டாவரம்னு கூப்பிடுவியாம்மா? ஹ்ம்ம்…  அப்படி கேட்க கூட என்னால முடியாதே. அதுக்கு கூட வழியில்லாத துரதிருஷ்டசாலி இல்ல நான்” அவளின் அழுகை வாகனம் முழுதும் எதிரொலித்தது. 

 ஊரில் பேச முடியாத பக்கவாதம் வந்த  அம்மாவின் காதில் இருந்து அலைபேசியை எடுத்தான் பிரகாஷ். அம்மாவின் கண்களில் தாரை தாரையாக நீர் வழிந்தது.   

 “வேண்டா அக்கா” பிரகாஷின் குரல் கமறலாய் அலைபேசியில் ஒலித்தது. சட்டென அவளின் அழுகை நின்று பின் மீண்டும் கூடியது. அவள் வாய் விட்டு அழட்டும் என்று பிரகாஷ் அமைதியாக இருந்தான்

அலை ஓய்ந்த கடலைப் போல மீண்டாள் வேண்டா.  அச்சமயத்தில் தம்பி அழைத்த அவளின் பெயர் போன்று ஆறுதல் அளிக்கும் வேறு எதுவும் பெரிதாய் அவளுக்கு தெரியவில்லை.

அலைபேசி வழி காதுகளில், வானொலியில் எதிர்பாராமல் வரும் மிகப் பிடித்த பாடலொன்றின் வரி ஒலித்ததைப் போல இருந்தது அவளுக்கு. உதட்டில் அவளின் வழக்கமான புன்னகை நீண்ட நாட்களுக்கு பின் நிரந்தரமாக ஆனது

மகிழ்ச்சியாக அவளின் வாகனத்தை உயிர்ப்பித்தாள். வானமெங்கும் தன் பெயரை தானே கூவிச் செல்லும் பறவையானாள் அவள்

ஓரிடத்தில் பிறந்து, வளர்ந்து, நட்புகளை, உறவுகளை பிரிந்து எங்கோ வெளி தேசத்தில் வாழும் போது, வீட்டில் இருப்பவர்களால் பெயர் சொல்லி அழைக்கப்படாத பெரும்பான்மை பெண்கள் ஒரு கட்டத்திற்கு பிறகு யாராவது ஒருவராவது தன் பெயரை அழைப்பார்களா என்ற ஏங்குவார்கள். 

அந்த அத்தனை அனாமிகாக்களுக்கும் இந்த கதை சமர்ப்பணம்

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

(முற்றும்)

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ சிறுகதைப் போட்டியில் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இணைப்பு இதோ – https://sahanamag.com/short-story-contest-2021-entries/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

3 Comments

  1. என் பெயர் லோகவள்ளி. பல கிண்டலுக்கு ஆழ்ப்படுத்த பட்டேன். இந்த கதை என்னை உத்வேகப்படுத்துக்கிறது. என் பெயரும் நிச்சயமாக சாதனை செய்யும் என்று நம்புகிறேன். நன்றி . 🙏

  2. அருமை. எதையாவது இழந்ததால் தான் மற்றொன்று கிடைக்கும் என்றாலும் இழப்பு வேதனை தான்.

அழகு ❤ (சிறுகதை) – ✍ ஞா.கலையரசி, புதுச்சேரி

யாதுமாகி ❤ (சிறுகதை) – ✍ கருணா, கோவை