sahanamag.com
தொடர்கதைகள்

ஆழியின் காதலி ❤ (பகுதி 8) -✍ விபா விஷா

இந்த தொடரின் அனைத்து பகுதிகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

 

Click the Picture below, to set reminder in YouTube for Sahanamag Anniversary Event on Aug 2, 2021 @ 5pm

ஞானப் பாதம், யோக பாதம், கிரியா பாதம், சரியா பாதம் என்னும் நான்கு வகையான சிவகாமங்கள் கொண்டு கட்டி முடிக்கப்பட்ட ஈசனது உறைவிடம், இன்று அவனாலேயே வெறுத்து ஒதுக்கப்பட்ட இடமாக மாறிப் போனது என்று மூப்பர் கூறியதும், அர்னவும் விக்ரமும் அதிர்ந்தனர்.

“ஒவ்வொரு விடயமும் பார்த்துப் பார்த்து உருவாக்கினோம் ஐயா… எம் இறைக்கு யான் செய்யும் தொண்டு இது. இதற்கு ஒரு கல் சுமப்பினும் கூட அது எமக்கு ஏழ் பிறப்பின் பாக்கியம் என நினைத்தோம்.

சிறுகச் சிறுக கோவிலின் கடை நிலை வரை கட்டி முடித்த பின்பு, எண் திசை பாலகர்களை ஓம்கார வனத்தின் எண் திசையிலும் பதிப்பித்து விட்டோம்.

இறுதியாகப் பதினெண் சித்தர்களும் இவ்விடம் வந்து சேர, பெருஞ்சுணையின் நீர்கொண்டு ஈசனுக்கு அபிடேகம் செய்து, அவனை இங்கு நிறுத்தி அனைவரும் வணங்கினோம்.

அன்றுடன் நாங்களனைவரும் மீண்டும் எம் தேயம் சென்றிட வேண்டுமென்றும், இனி இவ்விடம் சிவனுக்கும் அவனடிமைச் சித்தர்களுக்குமே உரியது என்றும் கூறிட, நாங்கள் பார்த்துப் பார்த்து அமைத்த கோவிலினை இனி காணவியலாது என்ற ஏக்கத்துடன் கிளம்பினோம்.

இறுதியாக வெளியேற எத்தனிக்கையில், எங்கள் மயன் இக்கோவிலனைப் பார்த்துப் பெருமூச்சினை வெளியேற்றியவாறு, “யான் கற்ற கலைகள் அனைத்தையும், இக்கோவிலினை எடுப்பித்த பெருமையனைத்தையும் எந்தையின் திருப்பதங்களுக்கே உரித்தாக்குகிறேன்…” எனக் கூறியவாறு, நொடியில் தன்னைப் போல ஒரு சிலை ஈசன் காலடியில் சமைத்து அதன் கையில் தனது உண்மையான ரத்ன மணி மகுடத்தினை இருக்கும்படி வடிவமைத்து, அதன் கரங்களில் தன் உண்மை மகுடத்தையே வைத்துவிட்டுக் கண்ணீருடன் வெளியேறினார்.

எம் மக்கள் யாவரும் வேறு ஏதும் பேசத் தோன்றாமல் அவரைத் தொடர்ந்து மிகுந்த துக்கத்துடன் எமது தேயம் சென்றோம்” எனக் கூறி நிறுத்தினார் மூப்பர் 

“அப்ப நீங்க எல்லாரும் இந்தப் பூமியில தான் இருந்தீங்களா?” என அதிசயத்துடன் கேட்டான் விக்ரம் 

“ஆம் மகனே, இருப்பினும் எம் மக்கள் யாவரும் தேவர்களுக்கு ஒப்பானவர்களாகத் தான் விளங்கினோம். அந்த அகந்தையின் விளைவாகத் தான், இப்படிப்பட்ட சாபமே எம் குலத்திற்கு ஏற்பட்டது” என்று கூறினார் மூப்பர் 

“அப்படி என்ன சாபம் மூப்பரே உங்க குலத்துக்கு வந்துச்சு? எதனால அந்தச் சாபம் வந்துச்சு?” என வினவினான் அர்னவ் 

“சாபம்… ஆம் அது பெரும் சாபம் தான். நாங்கள் செய்த பாவத்திற்கு விடையாக வந்த சாபம் தான். மயனே எல்லாம் முடிந்து விட்டது, இனியும் எங்களுக்கும் இந்தத் தீவிற்கும் எவ்வித உறவுமில்லை எனக் கூறி வெளியேறி விட்டார்.

ஆனால் நாங்களோ, இந்தப் பேரெழில் பொழியும் இடத்தினை விட்டு அகல மனமில்லாமல் அடிக்கடி எவரும் அறியாது இவ்விடம் வந்தோம்.

ஒவ்வொரு முறையும், எங்களது வருகை இங்கிருக்கும் சித்தர்களுக்குத் தெரிந்துவிடக் கூடாதென அஞ்சியே வருவோம். ஆனால் இவ்விடம் அடைந்ததும் எங்கள் அச்சமனைத்தும் நீங்கி, சுனையில் நீராடி, ஆண் பெண் என அனைவரும் எம் ஈசனைத் தரிசித்து மகிழ்வோம்.

அப்படிப்பட்ட ஒரு நாளில் தான் ஒரு மிகப் பெரிய தவறு நிகழ்ந்தது. அதைத் தவறு எனக் கூறுவதை விட, பெரும் பாவம் என்று கூறினால் தகும். ஏனெனில் எம் இறையின் இருப்பிடம் கலங்கமடைந்த நாள் அன்று.

எப்பொழுதும் வழமை போல எங்கள் மன்னர் மயனுக்கும் இந்தச் சித்தர் பெருமக்களுக்கும் தெரியாது நாங்கள் அனைவரும் இங்கு வந்திருக்கையில், அன்று ஒரு சித்தரின் தலைமையில் ஆழியினைச் சாந்தப்படுத்த, மிகப் பெரும் வேள்வி ஒன்று நடத்த திட்டமிடப்பட்டு, அதற்கான காரியங்கள் நிகழ்ந்து கொண்டிருந்த வேளை…

நாங்கள் கள்ளத்தனமாக வந்து அந்த வேள்வியில் கலந்து கொள்ளத் துடித்தோம். ஏனெனில் அந்த வேள்வியில் கலந்து கொண்டால், இனி பிறப்பில்லாத நிலை தொட்டு முக்தி அடைந்து விடலாம். அதன் பொருட்டே நாங்கள் குறிப்பிட்டு அந்த நாளன்று வந்தோம்

ஆனால் நாங்கள் அன்று வந்தது தான் பெரும் பிழையாகிப் போயிற்று. அந்த வேள்வியில் கலந்து கொள்ளக் காம, குரோத, லோப, மோஹ, மத, மாச்சர்யங்கள் களைந்த துறவியாயிருக்க வேண்டும். ஆனால் எம்முள் பலர் மணமானவர்கள். 

இருப்பினும் முக்தி அடைய வேண்டுமெனப் பேராசை கொண்டு வேள்வியில் மற்ற எவரும் அறியாது கலந்து கொள்ள எத்தனித்தோம். மற்றவர் கண்களுக்குத் தெரியாமல் நாங்கள் செய்த வினை, ஈசனின் பார்வையில் பட்டுவிட்டது. அது சரி, அவன் பார்வை படாத இடமேது?

ஆனால் அப்பொழுதெல்லாம் இந்த விடயங்கள் உரைக்கவில்லை. ஆசையைத் துறந்தால் ஒழிய முக்தி கிட்டாது என்பதையும் மறந்து, எப்படியாவது முக்தி கிடைத்திட வேண்டுமெனப் பேராசைப் பட்டோம் யாம். அதன் விளைவாக, யாகத் தீ எரியவில்லை

என்ன பாபம் செய்தோம், என்ன பாபம் செய்தோம் என, ஒவ்வொரு சித்தரும் நிலை கொள்ளாது தவித்த தவிப்பினைக் கண்ணுற்ற எங்களுக்கு, அப்பொழுது தான் மனதில் ஐயம் ஏற்பட்டது. ஒருவேளை யாம் இந்த யாகத்திற்கு வந்ததன் விளைவே இப்படி ஆகிற்றோ என்று.

இவ்வாறு எண்ணிக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த ஈசன், அங்கிருந்த முனிவர்களிடம் நாங்கள் இருக்கும் இடத்தினைச் சுட்டி, “இன்று இந்த வேள்வி மாசடைந்து விட்டது, அனைத்தும் உமது அலட்சியத்தினால். இப்புவியில் மக்கள் அனைவரும் நரை, திரை, மூப்புக் கொண்டு, பிஞ்சும் விழ, காயும் விழ, கனியும் விழ ஒழுங்கின்றிப் பிறப்பும் இறப்பும் நிகழ்ந்திடக் கடவுவதாக. இனி இவ்விடம் தழைக்க வாய்ப்பே இல்லை. நீர் மனம் கொண்ட காரியமும் என்றும் கைகூடாது..” எனவும், வானம் கிடுகிடுக்க, பூமி நடுநடுங்க, கடல் கொண்ட நீலம் அச்சத்தில் வெளிறிப் போக, அனைவரும் அஞ்சி நடுங்கினோம்.

நாங்கள் அனைவரும் மிகுந்த குற்ற உணர்வுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்க, அங்கு வந்தார் அன்று அந்த வேள்விக்குத் தலைமையேற்றிருந்த சித்தர்.

தன் கண்களின் கோபக் கனலால் எங்களை எரித்துவிடத் துணிந்தார். நாங்கள் உள்ளூர பயந்து கொண்டே, மரணிப்பதற்குத் தயாராக நின்றிருக்க, சற்று நிதானித்த அவர், “மரணத்தையும் ஏற்றிட தாங்கள் தயாரோ? அப்படி இலகுவாக உம்மை மரணம் நெருங்கிவிடுமா என்ன? ஒவ்வொரு சித்தனும் சாதாரணமாகச் சிறுகுழவி எனப் பிறந்து, 64 கலைகள் கற்று, முறையான யோகம் பெற்று, இறுதியில் யானும் உயர்ந்து இப்புவியில் மாந்தர் அனைவரையும் உய்விக்க எத்துணை முயற்சிகள் மேற்கொள்ள வேண்டி செய்திருக்கும் காரியங்கள் என்னென்ன என்று தெரியுமா?

ஆனால் நீரோ? மயனின் இனம் என்னும் அகந்தையினாலும், சிவனுக்குக் கோவில் எடுப்பித்த செருக்கினாலும் முக்தி அடைய விழைந்தீரோ? எவ்வளவு யுகம் கழித்து இந்த ஆழியில் சரியான இருப்பிடம் அமைத்து எம் ஈசனின் மனம் குளிர்வித்து இவ்வுலக உயிர்களின் மேன்மைக்கென யாம் மேற்கொண்ட வேள்வி, உங்கள் அலட்சியத்தினால் கலைந்ததே

யாம் கூறுகிறோம்… இந்த மச்சமுனியாகிய யாம் இதுவரை கைக்கொண்ட சித்தத்தின் பலனாய், இக்கொடுமையான பாவம் இழைத்த துரோகிகளுக்கு அளிக்கும் சாபம் யாதெனில், இவ்விடம் பாழ்படக் காரணமாய் இருந்த மயனின் வாரிசுகளான நீங்கள், இன்று முதலே மச்ச மாந்தர்களாகக் கடவது

அதுமட்டுமின்றிப் பகலில் மனிதர்களாகவும், நிலவு எழும் வேளையில் கடல் அலைகளினால் ஈர்க்கப்பட்டு மச்ச மனிதர்களாகி, மனித இனத்திலும் சேராது, முழுதாக மச்சமாயும் மாறாது இருக்கக் கடவது

அதுகாறும் உங்களின் மரணம் வேறு எவ்வகையிலும் ஏற்படாது, இயற்கையாகவே நிகழ வேண்டும், மரணித்த பின்பும் கூட, உங்களது மறுபிறப்பும் பழைய நியாபகங்கள் கொண்டே, மீண்டும் மீண்டும் அதே மச்ச மாந்தராகவே பிறக்கக் கடவது

என இடி முழக்கம் போன்றதொரு குரலில் சாபமிட, நாங்கள் அனைவரும் அவர் தாள் பற்றி யாம் செய்த பெரும் பிழைக்கு மன்னிப்பு வேண்டினோம். ஆனால் நாங்கள் எவ்வளவு கதறியும் அவர் மனமிறங்கவில்லை” என பெருமூச்சுடன் உரைத்தார் மூப்பர் 

“அப்படினா நீங்க எல்லாருமே மச்ச மாந்தர்கள் தானா?” என விக்ரம் கேட்டிட, ஆழ் மனதின் வருத்தம் மேலோங்க ‘ஆமாம்’ என்பது போல் தலையசைத்தார் அவர்.

விக்கித்துப் போய் விக்ரம் அமைதியாகி விட, “அது ஏன் மூப்பரே இப்படி இயற்கையா தான் மரணம் நிகழணும், அதுவும் முன் ஜென்ம நியாபகத்தோட மறுபடி, மறுபடி இதே மாதிரி நீங்க பிறக்கணும்னு சாபம் கொடுத்தார்” எனக் கேட்டான் அர்னவ் 

அதற்குக் கைந்த முறுவலுடன் பதிலுரைக்க ஆரம்பித்தார் மூப்பர்..

“முற்பிறப்பின் நியாபகங்கள் இல்லையெனில், நாங்கள் எங்களையே வேறொருவராக எண்ணி எங்களையே வசைபாடிக் கொண்டு சற்று மன அமைதி பெறுவோம். அவ்வாறன்றி முற்பிறப்பு நியாபகம் இருந்தால், ஐயோ இப்படிப் பிழை புரிந்தோமே.. கொஞ்சமும் யோசித்திருக்கவில்லையே என எண்ணி எண்ணி நித்தம் நித்தம் மறுகி மறுகிச் சாவோம் அல்லவா?

அதுமட்டுமின்றி இந்தச் சுய வருத்தத்தில் தன்னைத் தானே வருத்திக் கொண்டு, அனைவரும் ஒரே நேரத்தில் மரணமடைந்து விட்டால்? எங்கள் சாபம் அன்றோடு முடிந்து விடுமல்லவா? ஆகவே தான் மரணம் மூலமாகக் கூட எங்களுக்கு விடுதலை வரக் கூடாதென அவ்வாறு சாபமிட்டார்” என விழிகளில் சிறுதுளி நீர் வழிய, மானசீகமாய் தனது தவறினை எண்ணி வருந்துகிறாரோ என ஐயுறும் விதமாகத் தலை குனிந்தவாறு கூறினார் மூப்பர் 

“ச்சே.. எப்படிப்பட்ட சாபம்.. எல்லாப் பக்கமும் கேட் போட்டுட்டாரு. இப்படிப்பட்ட ஆளுங்க தான் நம்ப ஊருல ஜட்ஜா வரணும்” என விக்ரம் சத்தமாக கூற, மூப்பரின் தலை இன்னும் தாழ்ந்தது

“டேய் உனக்கு எல்லாம் விவஸ்தையே இல்ல டா… எங்க எத பேசணும்னு தெரியவே மாட்டிங்குது” என விக்ரமைக் கடிந்தான் அர்னவ்

சட்டென நிமிர்ந்த மூப்பர், “வேண்டாம் அப்பா.. அவரை எதுவும் கூறாதே. எவ்வாறாயினும் நீர் இவ்விடம் வந்ததே அவரினால் தான். நீங்களிருவரும் சேர்ந்தால் தான் எங்க சாபமும் தீரும்” என்று அவர் மேலும் புதிர் போட்டார்.

அதைப் பற்றி என்னவென்று விசாரிக்க விக்ரம் வாயைத் திறக்க முயலும் போதே குறுக்கிட்ட அர்னவ், “இப்போதைக்கு வேற எதுவும் சொல்லி குழப்பாதீங்க ஐயா, முதல்ல சொல்லிக்கிட்டு இருந்த கதையை முடிங்க. அப்பறம் மத்த கதையைப் பார்க்கலாம்” என்றான் 

“அதான… இது என் கதை தான அப்பறம் எப்படி உங்களுக்கு இன்டெரெஸ்ட்டா இருக்கும். கேளுங்க கேளுங்க உங்க கதையவே கேளுங்க” எனத் தெளிவாகவே முணுமுணுத்த விக்ரமை,  முறைத்தான் அர்னவ் 

“ஹ்ம்ம் கூறுகிறேன். பிறகு இறுதியாக எங்கள் மன்னர் மயனுக்கு விடயம் தெரிந்து பதறியபடி ஓடோடி வந்தவர், எங்களுக்காக மச்சமுனியிடம் மன்றாடினார். ஆனால் அப்பொழுதும் கூட அவர் மனமிறங்காது, ‘கொடுத்த சாபத்தினை என்னால் திரும்பப் பெறவியலாது. வழமை போல விமோச்சனம் மட்டுமே கூறவியலும்’ என்றார் 

திரும்பத் திரும்ப மறுபிறப்பெடுக்கும் உங்கள் இனத்தில், உங்களவர் அல்லாது ஒரு புதிய உயிர் உம்மில் தோன்றும். அவள் மாசி மாத மகா சிவராத்திரி அன்று, ஒன்பது கோளும் ஒரே நேர்கோட்டில் வீற்றிருக்க, உம் குலத்தில் ஒரு பெண் குழந்தை பிறக்கும்.

அவளுக்கு அடையாளம் யாதெனில், இங்கு இருக்கும் பறக்கும் வன்னி (வெண் குதிரை) அவள் பிறந்த கணம் முதலே அவளைப் பாதுகாக்க, அவளுக்குச் சேவை செய்திட அவளருகே வந்து இருக்கும்.

அதே வேளையில் பாரதத்தின் மணி மகுடத்தில் வீற்றிருக்கும் மரகத்தினைப் போன்ற தமிழகத்தில் ஒரு ஆண் குழந்தை பிறக்கும், மணிக்கட்டில் மச்ச அகழெலியுடன்

இவ்விரு குழந்தைகளும் வளர்ந்து வாலிபப் பருவம் எய்த பின்பு, இந்த ஓம்கார வனத்தினுள் வந்து இந்தச் சுனையில் நீராடி, இருவரும் சேர்ந்து சுனை நீர் கொண்டு எம்பெருமானின் பாதத்தில் ஊற்றி அபிடேகம் செய்திட, நீவிர் மானிடர் என்னும் நிலையினை அடைவீர். அதன் பின்பு தகுந்த யோகங்கள் மூலமே முக்தி நிலையை அடைவீர். அதுவரை மீண்டும் மீண்டும் மனிதப்பிறப்பே’ எனக் கூறிவிட்டார் என பழைய கதையை கூறி முடித்தார்  மூப்பர்

“ஐயா நான் ஒண்ணு சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க. வெறும் மச்சம் மூலமா மட்டுமே நான் தான் உங்கள காப்பாத்த போறேன்னு எப்படி உறுதியா சொல்றது?” என அர்னவ் வினவ

“அதைக் காட்டிலும் வேறொன்று கூறவா?” என்றவர், அவன் பிறந்த நாள் நட்சத்திரம் மட்டுமின்றி, அவன் தாய் தந்தையர் உயிருடன் இல்லை என்பது வரையிலும் கூட விடாமல் கூறினார் மூப்பர் 

அர்னவ் அதிர்ந்து போய் நின்றான். அது தான் சமயமென, தனக்கிருந்த சந்தேகத்தினை நிவர்த்திச் செய்து கொள்ள விழைந்தான் விக்ரம் 

“ஐயா, அப்ப அந்தப் பறக்கும் வன்னி சாமினி கிட்ட தான இருக்கு? அப்போ அவ தான் அந்த உண்மையான தேவாம்சம் கொண்ட பெண்ணா?” எனக் கேட்டான் விக்ரம் 

அதற்கு “ஆம்” எனப் பதிலளித்த மூப்பர், “எங்கள் சாபம் தீர்ந்திட அர்னவும், சாமினியும் இணைந்து தான் உதவிட வேண்டும்” என்று கூறினார்

அதற்குள் உடனே தனது அடுத்தக் கேள்வியைக் கேட்க நினைத்தான் விக்ரம். (இவனுக்கு விக்ரம்னு பேர் வச்சதுக்குப் பதிலா, வினான்னு பேர் வச்சுருக்கலாம்)

“ச்சே நீங்க இப்படிப் பல ஆயிரம் வருஷமா காத்துட்டு இருக்கீங்க… ஆனா மனசாட்சியே இல்லாத அந்த முனிவர் உங்களுக்கு இவ்வளவு வருஷம் கழிச்சா சாப விமோசனத்துக்கு வழி செய்யணும்? இவ தான் உங்களோட இனமில்லாத முதல் அன்னியக் குழந்தையா?” எனக் கேட்டான்.

அதைக் கேட்டதும் மூப்பரின் விழிகளில், கோபமும், நிராசையும் ஒருங்கே அமைந்து ஜாலம் காட்டியது.

“அவளுக்கு முன்பாகவே ஒருத்தி இருந்தாள்” என வார்த்தைகளைக் கடித்துத் துப்புவது போலக் கூறினார்.

இதைக் கேட்டதும் ஆச்சர்யத்தின் உச்சிக்கே சென்றவர்கள், “யாரு.. யாரு… யார் அந்தப் பெண்?” என ஆர்வம் தாங்காமல் வினவினார்கள்.

“அவள் தான் சமுத்திரா” என மூப்பர் கூறிய வினாடி, கடலின் ஆழத்திலிருந்து தலையில் அந்த ரத்தின மணி மகுடத்துடன் மேலே வந்த சமுத்திரா, ஒரே உந்துதலில் வான் நோக்கிப் பறந்து ஒரு சுழற்சி அடித்து, கோரமாகச் சிரித்தவாறு கடலினுள் விழுந்தாள்

Click the Picture below, to set reminder in YouTube for Sahanamag Anniversary Event on Aug 2, 2021 @ 5pm

#ad

      

        

#ad 

              

          

     

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!