இந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்
சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 133)
“அம்மா ப்ளீஸ் மா… இது ஒண்ணு மட்டும் தான்”
“அசோக் இன்னும் எவ்வளவு?”
“இது ஒண்ணு மட்டும் தான், இதுக்கு மேல இல்ல. ஓகேவா ?”
“சரி போ, ட்ராலியில போடு”
“தேங்க்ஸ் மா” என்ற அசோக், தனது விளையாட்டுப் பொருட்களை ட்ராலியில் சேகரித்தான்.
பொருட்களையெல்லாம் வாங்கிய அசோக்கின் அம்மா திவ்யா, எல்லாவற்றையும் பத்திரப்படுத்தி வண்டியை செலுத்தினாள்
“அம்மா நெக்ஸ்ட் டைம், நான் உட்கார்ந்து ஓட்ற மாதிரி பேட்டரி கார் வாங்கி தரியா?”
“நீ முதல்ல படி அசோக், உன்னோட மார்க்க ரொம்ப லோவா இருக்குன்னு டீச்சர் கூப்பிட்டு திட்டுறாங்க. நெக்ஸ்ட் டைம் நல்லா ஸ்கோர் பண்ணு, நானே உனக்கு வாங்கித் தர்றேன்”
“அதுக்கு நீங்க வாங்கி தர மாட்டேன்னே சொல்லி இருக்கலாம்” என முனங்கினான் அசோக்
“அப்ப கூட படிக்கிறேன்னு சொல்ல மாட்டியே” என நக்கலாக கேட்டாள் திவ்யா.
அப்போது க்ரீச் என்ற சத்தத்துடன் வண்டி நின்றது
“அவுச்…..அசோக் உனக்கு அடி ஏதும் படலேல”
“நோ மாம், என்னாச்சு? ஏன் இப்படி ஃபாஸ்டா ப்ரேக் போட்டீங்க?”
“வண்டி பஞ்சர் ஆயிடுச்சு டா”
“அச்சோ இப்ப எப்படி வீட்டுக்கு போறது? டாடிக்கு கால் பண்ணுங்க, அவங்க வேற வண்டி எடுத்துட்டு வந்துடுவாங்க”
“டாடிக்கு இன்னைக்கு மீட்டிங் இருக்கு, டிஸ்டர்ப் பண்ண வேணாம். இங்க பக்கத்துல பஞ்சர் கடை இருக்கும், அங்க பஞ்சர் பாத்துட்டு அப்படியே வீட்டுக்கு போயிடலாம். அஞ்சு நிமிஷத்துல பார்த்துருவாங்க.”
“மாம் அந்த பிளேஸ் நாஸ்டியா இருக்கும்”
“ஃபைவ் மினிட்ஸ் தாம்பா, வா” என அசோக்கை வண்டியில் உட்கார வைத்து ஸ்கூட்டியை தள்ளிக் கொண்டு சென்றாள் திவ்யா
“தம்பி இந்த வண்டி பஞ்சர் ஆயிடுச்சு. கொஞ்சம் சீக்கிரம் பார்த்து தர முடியுமா ?”
குரல் கேட்ட திசையில், கையிலிருந்த ஸ்பேனர் உடன் திரும்பிப் பார்த்தான், ஓட்டை விழுந்த பனியனும், கிரீஸ் கரையை முழுவதுமாக தன்னில் ஆக்கிரமித்துக் கொண்ட உடலையும், காக்கி டவுசரையும் அணிந்திருந்த அந்தப் பையன்
தன் கிரீஸ் கைகளால் நெற்றியில் இருந்து வழிந்த வியர்வை துளியை துடைத்தவாறு திரும்பினான்
“ரெண்டு நிமிஷத்துல பார்க்கிறேன்” என்றவன், தன் வேலையைத் தொடர
“தம்பி கொஞ்சம் சீக்கிரம் பார்த்து தாயேன்”
“இரண்டே நிமிசம் தான்ங்கா, இதோ வந்துட்டேன். நீங்க அந்த சேர்ல உக்காருங்க” என கூறியதும், அங்கிருந்த மர ஸ்டூல் ஒன்றில் அமர்ந்தாள் திவ்யா
அந்த புதுமையான இடத்தை சுற்றிக் கொண்டு வந்தான் அசோக்
“அசோக், டோன்ட் டச் எனிதிங், ஸோ டர்டி” அசோக்கை அதட்டினாள் திவ்யா.
ஆனால் அசோக்கிற்கோ அது புது உலகமாக தெரிந்தது. தூய்மையான வீடு, ஆடம்பரமான கல்வி (ஆம், கல்வியும் இப்போது ஆடம்பரத்தில் சேர்க்கப்பட்டு விட்டது) என்றே பார்த்தவனுக்கு, அந்த இருண்ட தூசி படிந்த டயர்களாலும் டூலஸூகளாலும், உடைந்த பழுது பார்க்க வேண்டிய வண்டிகளுடன் இருந்த அந்த ஷெட் புது வித உலகமாக தோன்றியது
அவனை அதட்டி அதட்டி சோர்ந்த திவ்யா, அவனை கண்காணித்துக் கொண்டே இருந்தாள்.
அப்போது அவன் கால் அங்கிருந்த கருவிகளில் தடுக்க, சுதாரித்து நின்றவனால், தன் கையில் இருந்த உருண்டை வடிவ வெளிநாட்டுச் சாக்லேட்டை காப்பாற்ற முடியவில்லை.
அது உருண்டு டயரின் அடியில் செல்ல, பாவமாக அன்னையைப் பார்த்தான்
அவர் எழுந்து வந்து எடுக்க பார்த்தார். அவராலும் முடியவில்லை. லேசாக டயரை நகர்த்த முயற்சிக்க அதுவும் அவளால் முடியவில்லை
“எக்கோவ், பெரிய பாகுபலி நீ. நவருங்கா” என்றான் அந்த சிறுவன்
‘ஆமா, இவன் பெரிய பாகுபலி, நம்மள சொல்றான்’ என ஒரு வேலைக்கார சிறுவன் தன்னை கலாய்த்ததில் வருந்தினாள்.
அந்த சிறுவனோ, திவ்யா நகர்ந்ததும் டயரை தூக்கி நகர்த்த, “ஹய்…. தேங்க்ஸ் ண்ணா..” என்றான் அசோக்
அதற்கு ஒரு புன்னகை மட்டும் புரிந்தவன், திவ்யாவின் வண்டியை சரி செய்ய சென்றான். அவனை ஆச்சரியமாக பார்த்தாள் திவ்யா
“எப்படி தம்பி, இவ்வளோ வெயிட்ட அசால்ட்டா தூக்குன?” என்றாள் அதே பிரம்மிப்புடன்
“எல்லா பழக்கம் தான்ங்க”
“உன் வயச விட, அந்த டயர் வெயிட் அதிகமா இருக்குமேப்பா”
“ஆமாங்க, ஆனா ரொம்ப இல்ல ஒரு ஒரு கிலோ தான் கூட. பதினாலு கிலோ” என அந்த சிறுவன் கூற, அவளுக்கு அது சாதனையாக தெரிந்தது
“அக்கா வேலை முடிஞ்சது, நூறுவா குடுங்க” என திவ்யாவின் வண்டியிலிருந்து கை எடுத்து பக்கத்திலிருந்த துணியில் கை துடைத்தான்
“அதுக்குள்ள யா?” என்றாள் ஆச்சரியமாக
“ஆமாக்கா” என அவன் கூற, அவள் இரண்டாயிரம் நோட்டை எடுத்து நீட்டினாள்
“என்னக்கா நூறுக்கு இரண்டாயிரம் தர்றீங்க, சில்ற இல்லக்கா”
“சரி இரு, நான் பக்கத்துல மாத்திட்டு வந்து தர்றேன்” என வெளியே சென்றவள் சில்லறை எங்கும் இல்லாமல் மீண்டும் அவனிடமே வந்தாள்
“ஏய் என்ன பண்ற?” என அவன் கையில் இருந்த அசோக்கின் விளையாட்டுப் பொருட்களை பிடுங்கினாள் கோவமாக
“சாரிக்கா” என அவன் மன்னிப்பு வேண்டும் போதே இடை புகுந்தான் அசோக்.
“ஏன் மாம் புடுங்குனீங்க? நான் தான் அவங்ககிட்ட குடுத்து டாக்டர் செட்ட ஓபன் பண்ணி கொடுக்க சொன்னேன்” அசோக் கூறியதும் தான் அவசரப்பட்டு விட்டோமோ என தோன்றியது திவ்யாவிற்கு
“வீட்ல போய் மம்மி ஓபன் பண்ணி குடுக்குறேன் அசோக்” என சமாளித்தவள்
சிறுவனிடம் திரும்பி. “தம்பி , எங்கயும் சேன்ஜ் இல்லன்னு சொல்லிட்டாங்க, இப்ப என்ன பண்ண?”
“முதலாளி இப்ப தான்க்கா போன் பண்ணாங்க. வந்துட்டு இருக்காங்களாம், ஒரு இரண்டு நிமிசம் வெயிட் பண்ணா அவர்கிட்ட சில்லறை வாங்கி கொடுத்துருவேன்” என கூற, வேற வழி இன்றி அவள் அங்கிருந்த கதிரையில் அமர்ந்தாள்
அந்த சிறுவன் மற்ற வேலைகளை பார்க்க சென்று விட, அசோக் அவனருகே சென்றான்
“அண்ணா சாக்லேட் சாப்பிடுறியா?” என தன் கையில் இருந்த சாக்லேட்டை காட்டி கேட்க
அவனோ திவ்யாவை ஒரு பார்வை பார்த்து விட்டு “இல்ல தம்பி வேணாம்.”என தன் வேலையை தொடர்ந்தான்
திவ்யாவிற்கோ குற்ற உணர்வாக இருந்தது. தன் தவறை திருத்தும் பொருட்டு, ” சும்மா வாங்கிக்கோ பா” என்றாள்.
“இல்லக்கா, இதெல்லாம் எனக்கு சாப்பிட்டு பழக்கமில்லை. மிட்டாய்னா சவ்வு மிட்டாய், கமரகட்டு தான் சாப்பிடுவேன்க்கா”
அவன் ஏழ்மையை உணர்த்துக்கிறானோ என திவ்யாவிற்கு தோன்றியது. அசோக் அந்த சிறுவனை வேடிக்கை பார்க்க திவ்யா தன் அலைபேசியில் வந்த குறுஞ்செய்திகளை நோட்டமிட்டாள்
“அண்ணே.. ஸ்கூல் இல்லாம பிரண்ட்ஸ் கூட விளையாடாம எனக்கு போர் அடிக்குது. உங்களுக்கு போர் அடிக்கலயா? வர்றீங்களா நாம இரண்டு பேரும் விளையாடலாம்?”
“எனக்கு போர் அடிக்காதுப்பா. இது தான் எனக்கு விளையாட்டு, பள்ளிக்கூடம் எல்லாமே. இதோ இந்த ஸ்பேனர், நட்டு, போல்ட் தான் என்னோட ப்ரண்ட்ஸ். இவங்க கூட இருந்தாலே எனக்கு நேரம் போயிரும்” என அசோக்கிற்கு புரியுமாறு கூறினான், அந்த சிறுவன்
“அப்போ நீங்க ஸ்கூலுக்கு போக மாட்டிங்களா?” என குழப்பமாக கேட்டவனுக்கு ‘இல்லை’ என்ற தலை அசைப்பை மட்டும் அளித்தான்
தன் அம்மாவிடம் ஓடிய அசோக், “மாம், நானும் இனிமே ஸ்கூல் போகல. என்னையும் இங்கேயே சேர்த்து விட்டுருங்க. இந்த நட்டு, போல்ட், ஸ்பேனர்லாம் வச்சு இந்த வண்டியை பார்த்துக்குட்டே நானும் டைம் பாஸ் பண்ணிடுவேன்” எனவும், திவ்யாவிற்கு ஒரு மாதிரி ஆகி விட்டது
தன் ஒரே மகனுக்கு எல்லாம் சிறப்பாய் தர வேண்டும் என்று அந்த ஊரிலேயே இருக்கும் சிறந்த பள்ளியில் படிக்க வைத்து, அத்தனை நாட்டு சாக்லேட்டுகளையும் இறக்குமதி செய்து, கேட்கும் அனைத்து விளையாட்டு பொருட்களையும் குவித்து பார்த்துக் கொண்டிருக்கும் மகன், கொஞ்சமும் சுத்தம் இல்லாமல் கருப்பு கறையை வண்ணமாய் எங்கும் கொண்டிருக்கும் ஒரு ஷெட்டில் வேலை செய்ய வேண்டும் என சொன்னால், அதை கேட்கும் அந்த தாயின் வலி எப்படி இருக்கும்
திவ்யாவிற்கும் அவ்வாறே இருந்தது. படித்து ஒரு மருத்துவனாகவோ, இன்சீனியராகவோ ஒரு நல்ல பதவியில் இருக்க வேண்டும் என எல்லா பொற்றோரைப் போல் எண்ணியவள், ‘ஒரு ஷெட்டில் இருப்பேன்’ என கூறியதை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை
அவள் எதுவும் பேச ஆரம்பிக்கும் முன் அந்த சிறுவன் பேசினான்
“சாரிக்கா, அவனுக்கு புரியனும்னு தான் அப்படி சொன்னேன்” என்று திவ்யாவிற்கு பதில் கூறியவன்
அசோக்கிடம் திரும்பி, “தம்பி, நீ இப்போ ரொம்ப சின்ன பையன். உனக்கு நான் பண்றது பிடிச்சுருந்தா நீயும் இதையே பண்ணு. ஆனா இப்போ இல்ல.பெரிய பையனாகி நல்லா படிச்சு என்னை மாதிரி ரிப்பேர் பண்ணாம புதுசா உருவாக்க கத்துக்கோ. படிப்புங்குறது ஒரு வரம். அதை பயன்படுத்திக்கணும். பணம், சொத்து,அழகு இதெல்லாம் எப்ப வேணாலும் நம்ம கைய விட்டு போகலாம். ஆனா படிப்பு நமக்கு எப்பவும் கை கொடுக்கும். அதனால நல்லா படி” என அறிவுரை கூற
அசோக்கும் “சரி அண்ணா” என தலையை ஆட்ட, தன் வேலையை தொடர்ந்தான் அந்த சிறுவன்
திவ்யாவிற்கு தான் ஏதோ உறுத்தலாகவே இருந்தது
“தம்பி, நீ ஏன் ஸ்கூல்க்கு போறது இல்ல”
“நானும் போய்ட்டு தான் இருந்தேன்கா, நல்லா படிப்பேன். நல்லா வசதியா தான் இருந்தோம், இந்த ஷெட் என் அப்பாவோடது தான். மூனு வருசத்துக்கு முன்னாடி என் அப்பாக்கு ஆக்ஸிடென்ட் ஆயிருச்சு, ஆஸ்பத்திரிக்கு செலவு பண்ண பணம் இல்ல. அதான் இந்த ஷெட்ட வித்துட்டோம்.
ஆனா எவ்ளோ முயற்சி பண்ணியும் அப்பாவ காப்பாத்த முடியல. அம்மா அப்பாவ நினைச்சும் எங்க எதிர்காலத்த நினைச்சும் கவலைபட்டாங்க. அதுலயே அவங்களுக்கு நரம்புத்தளர்ச்சி வந்துருச்சு. வேற வழியில்லாம நானும் என் தம்பியும் வேலைக்கு போய் அம்மாவ பார்த்துக்குறோம்” என்றான்
திவ்யாவின் கண்கள் கலங்கியது. சிறிது நேரத்திற்கு முன் அசோக்கின் விளையாட்டுப் பொருளை ஏக்கத்துடன் அவன் பார்த்தது நியாபகம் வர, மனம் கனத்தது. தன்னை நினைத்தே கோபம் வந்தது.
மான்குட்டியை போல துள்ளி விளையாடும் வயதில் இருக்கும் சிறு பையன் அவன். படிப்பை பாதியில் விட்டு விட்டு குடும்ப பாரத்தை தாங்கும் தோள்களா இவை. அவனின் அழுக்கு சட்டையும் கறை படிந்த உடலும் மனதை பிசைந்தது
தன் மகன் இங்கே இருப்பேன் என கூறியதையே நம்மால் தாங்க முடியவில்லையே. இவனின் இந்த நிலைமையை எப்படி இவன் தாய் தாங்கியிருப்பாள். அதனால் தான் நோய்க்கு உள்ளானாள் போல.
வளர்ந்து படித்த ஜென்மங்களே தன் தாய் தந்தையை மதிக்காமல் கழட்டி விடும் போது, விளையாட வேண்டிய வயதில் தன் தாய்க்காக தன் வாழ்க்கையையே அர்பணித்தவனை எண்ணி கர்வம் வந்தது.
“தம்பி, நான் உன்னை படிக்க வைக்கவா?”
“ஏன்க்கா உங்க வீட்டு வேலை செய்ய ஆள் கிடைக்கலயா?” என அவன் கேட்டதும் திவ்யாவிற்கு கோபம் வந்தது
“வழிய வந்து உதவுறேன்னு சொன்னதுக்கு இப்படி அசிங்கப்படுத்துறியா?” என உதடு சுழித்து கேட்டாள்
“மன்னிசுருங்க கா, இப்டி தான் ஒரு ஆள் வந்து என் தம்பியை படிக்க வைக்கிறேன்னு கூட்டிட்டு போனாரு. இது அந்த ஆளு பொண்டாட்டிக்கு பிடிக்கல போல, என் தம்பியை அவங்க வீட்டு வேலை எல்லாத்தையும் செய்ய விட்டாங்க.
அது தெரியாம நான் தம்பி படிக்கிறான்னு அவனுக்கு பிடிச்ச பால் பண் வாங்கிட்டு போனேன். அப்ப அவன் அவங்க வீட்டு கக்கூஸ் கழுவிட்டு இருந்தான். எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது, அவனை திட்டி நீ படிக்கவே வேணாம் வான்னு கூட்டிட்டு வந்துட்டேன்”
“சாரி தம்பி, நான் ஏதோ தெரியாம…. சரி விடு. நான் அவங்களை மாதிரி இல்ல, நிஜமாவே உன்னையும் உன் தம்பியையும் படிக்க வைக்கிறேன். என்னை நம்பு”
“இல்லக்கா பரவாயில்லை இருக்கட்டும்”
“என் மேல நம்பிக்கை இல்லையா?”
“அய்யோ அப்படி இல்லக்கா”
“உன் தம்பியும் நீயும் உங்க அம்மா கூடவே இருங்க. அங்க இருந்தே படிங்க. நான் உங்களுக்கு வேண்டிய செலவு எல்லாத்தையும் பார்த்துக்குறேன்”
“நீங்க வேணா என் தம்பியை மட்டும் படிக்க வைங்க கா, எனக்கு படிப்பு வேணா”
“ஏன்னப்பா?”
“நாங்க இரண்டு பேரும் படிக்க வந்துட்டா, என் அம்மா மருந்து செலவுக்கு நான் என்னக்கா பண்ண முடியும். மருந்துக்கு இரண்டாயிரம், எங்களுக்கு சாப்பாடு செலவு ஒரு மூவாயிரம் ஆகும். எனக்கு மூவாயிரம் சம்பளம். அது போக காலையில் பேப்பர் போடுறது, தண்ணி கேன் போடுறதுன்னு அந்த வேலையும் பார்ப்பேன் அதுல ஒரு ஆயிரம் வரும்.
அது போக தம்பி எதிர்த்தாப்ல இருக்குற ஹோட்டல்ல வேலை பார்க்குறான் அவனுக்கு ஒரு ஆயிரம் ரூபாய் வரும்.இத வச்சு தான் நாங்க எங்கள பார்த்துப்போம். என் தம்பி வேலைக்கி போகலேனா கூட சமாளிச்சுக்கலாம். ஆனா நான் போகாட்டி கஷ்டம். என் தம்பி இங்க தான் இருக்கான், வர்றீங்களா காட்டுறேன். அவனும் நல்லா படிப்பான்” என கூற, அவன் தலை முடியை கோதி விட்டு பெருமையாக பார்த்தாள் திவ்யா
தான் படிக்காவிட்டாலும் தன் தம்பியாவது படிக்கட்டும் என நினைத்த மனதை மெச்சாமல் இருக்க முடியவில்லை. இதற்காகவாவது இவனை படிக்க வைக்க வேண்டும் என தோன்றியது திவ்யாவுக்கு
“நான் கண்டிப்பா பார்க்குறேன், உன்னை நினைச்சா….” என அவள் பேச ஆரம்பிக்கும் போதே அவன் முதலாளி வந்து விட்டான்
“டேய், இதை முடிக்க சொல்லிட்டு தானே போனேன். என்ன கதை அளந்துட்டு இருக்க?”
“முடுஞ்சுருச்சுன்னே… வயர் மட்டும் மாட்டனும்ணே. இந்த அக்காக்கு மீதி சில்லறை கொடுக்கணும்” என கூறி தன் வேலையை பார்க்க, அவன் முதலாளி திவ்யாவின் பாக்கி பணத்தை கொடுத்தான்.
திவ்யா பணத்தை பெற்றுக் கொண்டு அந்த சிறுவனை பார்க்க, “எயித்த ஹோட்டல்ல தான்க்கா என் தம்பி ஜீவா வேலை பார்க்குறான். நீங்க அங்க இருங்க, இதை மட்டும் முடிச்சுட்டு வரேன். அவனும் என்னை மாதிரி காக்கி ட்ரவுஸர் தான் போட்ருப்பான்”
சரி என தலையசைத்த திவ்யா, அசோக்கை அழைத்துக் கொண்டு எதிரில் இருந்த சிறிய ஹோட்டலுக்கு சென்றாள்
ஹோட்டலின் வாசலிலே ஒரு சிறுவன் வேடிக்கை பார்த்துக் கொண்டே நின்றிருக்க அவனை பார்த்ததும் தெரிந்து விட்டது இவன் அந்த சிறுவனின் தம்பி ஜீவா என்று
அவனின் பார்வை வட்டத்தை திவ்யா பார்க்க, அங்கே சில சிறுவர்கள் கோலி குண்டு விளையாடிக் கொண்டிருந்தனர்
“டேய் லூசுப் பயலே நீ பராக்கு பார்க்க தான் நான் சம்பளம் தர்றேன்னா. பாத்திரத்தை கழுவுடா. சனியன்.” என ஜீவானின் தலையில் அடித்தார், அந்த ஹோட்டலின் உரிமையாளர்
கோபமாய் அவரிடம் சென்ற திவ்யா, “சார், ஒரு சின்ன பையனை கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம அடிக்குறீங்க”
“வாம்மா மகாராணி. வாங்குற சம்பளத்துக்கு வேலை பார்க்காம பராக்கு பார்க்குறவன கொஞ்சுவாங்களா?”
“அவன் சின்ன பையன் சார். பத்து வயசு தான் இருக்கும், படிக்க வேண்டியவனை வேலை வாங்குறதே தப்பு. இதுல நீங்க பிஞ்சு கையால் இவ்வளோ பாத்திரத்தை கழுவ சொல்றீங்களே?”
“ம்ஹூம்… படிக்க வக்கு இருந்தா இவன் ஏன் என்கிட்ட வேலைக்கு வர போறான். சோத்துக்கு வழி இல்லாம கெஞ்சுனான்னு தான் பாவம் பார்த்து இவன சேர்த்தேன்”
“முப்பது ரூபா சம்பளம் கொடுத்துட்டு காலேல இருந்து நைட் பன்னிரண்டு மணி வரை வேலை வாங்குறது தான் உங்க பாவம் பார்க்குறதா சார்” என அவள் கேள்வி கேட்க, ஈ ஆடவில்லை, அந்த ஹோட்டலின் உரிமையாளருக்கு
இவர்களின் சம்பாசனையை கேட்டுக் கொண்டிருந்த அந்த பிஞ்சு, தன் கையில் இருந்த பாத்திரத்தை தவற விட திவ்யாவின் மேல் இருந்த எரிச்சலை, ஜீவாவின் மேல் காட்டினார் அவர்
“சனியன்… சனியன்…. பாத்திரத்தை பிடிக்க கூட துப்பில்லை. இவனுக்கு வக்காலத்து வேற. ஏன்டா தட்ட கீழ போட்ட…” என அவர் தோளின் மேல் இருந்த துண்டால் அவனை அடிக்க, அழுது கரைய ஆரம்பித்தான் சிறுவன்
அவரை தடுத்த திவ்யா, “இன்னோரு அடி அந்த பையன் மேல விழுந்தா நான் போலீஸ கூப்பிடுவேன்” என்றாள்
“ஓஓஓஓ… இவ்வளவு நாள் உனக்கு வேலை கொடுத்ததுக்கு ஆள் கூட்டிட்டு வர்றீயா? இனிமே உனக்கு இங்க வேலை இல்ல போடா வெளிய” என அவனை தள்ளி விட, கீழே விழப் போனவனை தாங்கிப் பிடித்தாள் திவ்யா
“நீ சொன்னாலும் அவன் இனி இங்க வேலை பார்க்க மாட்டான்” என கூறியவள், ஜீவாவின் கையையும் அசோக்கின் கையையும் பற்றிக் கொண்டு நடந்தாள்
“ஏன் என்னை அப்படி பார்க்குற?”
“நீங்க ஏன் அவர் கூட சண்டை போட்டிங்க, பாருங்க எனக்கு வேலை போச்சு”
“இனிமே நீ அங்க வேலை பார்க்க வேண்டாம், நான் உன்னை படிக்க வைக்கிறேன்”
அவன் தன் நடையை நிறுத்தி, அவள் முகத்தை ஆராய்ந்தான்
“உங்க வீட்டுலயும் நான் கக்கூஸ் கழுவனுமா?” என கேட்டான். அந்த பிஞ்சின் மனதில் ஆழமாக இருந்த வடு திவ்யாவின் மனதை நெருஞ்சி முள்ளாய் குத்தியது
அவள் கையில் இருந்த தன் கையை விடுவித்தவன், “வேணாம்… நான் கக்கூஸ் கழுவுனா என் அண்ணன் திட்டுவான்” என திரும்பியவன், தன் அண்ணன் வருவதை பார்த்து நின்றான்
“அண்ணே இவங்க என்னை படிக்க வைக்கிறேன்னு சொன்னாங்க, நான் தான் நீ திட்டுவன்னு வேணான்னு சொல்லிட்டேன்”
“இல்ல ஜீவா… இவங்க ரொம்ப நல்லவங்க. நீ நம்ம வீட்ல இருந்தே படிக்கலாம்னு சொல்லிட்டாங்க”
“அப்போ நீ?”
“நீ மட்டும் படி போதும்.”
“முடியாது தம்பி, உன் தம்பி படிக்கணும்னா நீயும் படிச்சு தான் ஆகணும். உன் வீட்டு செலவு அம்மா மருந்து செலவ பத்தி கவலைபடாதே. அதெல்லாம் நான் பார்த்துக்குறேன்”
“அய்யோ வேண்டாங்க, உங்களுக்கு ஏன் அவ்ளோ சிரமம்”
“சிரமம்லா ஒன்னும் இல்ல. என் பையனோட பிறந்த நாள் விழாக்கே நான் மூனு லட்சம் நாலு லட்சம் செலவு பண்ணுவேன். வருசம் முழுக்க உங்களுக்கு செலவு பண்ணுனா கூட இரண்டு லட்சம் தான் ஆகும். இது எனக்கு பெரிய கஷ்டம்’லாம் இல்ல. நீயும் உன் தம்பியும் நல்லா படிங்க. நான் உன் அம்மாகிட்ட பேசுறேன். ஆமா உன் பேரு என்ன?”
“காமராசு”
“ஓஓஓ…. அதான் மத்தவங்களை படிக்க வச்சு அத பார்த்து சந்தோசப்படுறியோ” என அவன் தலை முடியை கலைக்க, அழகாக வெட்கத்துடன் சிரித்தான் காமராசு.
நம்ம வாழ்கையில தினமும் நிறைய குழந்தை தொழிலாளர்களை பார்க்கிறோம். ஆனா யாரும் அவங்கள பத்தி கவலைப்படுறதில்ல.
திவ்யா மாதிரி அந்த குழந்தைகளோட முழு செலவையும் ஏத்துக்காட்டியும், 1098 தொடர்பு கொண்டு அவங்ககிட்டயாவது ஒப்படைக்கலாம்
(முற்றும்)
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
GIPHY App Key not set. Please check settings