இந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்
சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 119)
“டீ போடுறேன், குடிச்சிட்டுப் படி” சூரியன் சுட்டெரிக்கும் மதிய வேளையிலிருந்து, ஒரு துளி நீர் கூடப் பருகாமல் இருந்த தனது மகளின் உண்ணாவிரதத்தை முடித்து வைக்க முயன்றார் மாரியம்மாள்
“ஒன்னும் வேண்டா” என்றாள் மயூரி
பதிலின் தொனியை வைத்தே, மயூரிக்குக் கோபம் சற்றும் குறையவில்லை என்பதை புரிந்து கொண்டார் மாரியம்மாள்
‘ஸ்கூல்ல என் மானத்தை வாங்கிட்டு, இப்ப என்னமோ அக்கறை ரொம்பத் தான் பொங்குது. ஹிம்’ மயூரியின் மனத்திரையில் தோன்றிய வார்த்தைகளை, அவளது முகபாவனையே மாரியம்மாளுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது
“அத்தை சொன்ன மாதிரி நீ லீவேய் டீச்சர்கிட்டயும் சீனப்பாடம் கத்துக்க டீயூஷனுக்குப் போ மயூரி. வாரா வாரம் சனிக்கிழமை, சாயங்காலம் ஆறு மணியிலிருந்து எட்டு மணி வரைக்குமாம். சனிக்கிழமை உனக்கு மலாய் டீயூஷன் இருக்குதுல. அதை முடிச்சிட்டு அப்படியே இந்த க்ளாஸ்க்கும் போ. அப்பதான் மார்க் ஒழுங்கா வரும்”
கடும் மழைக்குப் பின்னர் நிலவும் அமைதியைக் கெடுக்கும் தவளையைப் போல, மாரியம்மாள் தனது உபதேசத்தைத் தொடர்ந்தாள்.
“தயவு செஞ்சு என்னை விடுரீங்களா? நான் பாத்துக்குறேன். அதான் ஏற்கனவே மெய் லிங் டீச்சர்கிட்ட படிக்கிறேன்ல. ஒரே பாடத்துக்கு எத்தனை டியூஸன் போகுறது?” சீறினாள் மயூரி.
“திவ்யாவும் தரோனாவும் போகலயா?” வினவினார் மாரியம்மாள்
“ஆமா, அப்டியே போய் A+ வாங்கிருச்சுங்க தான? ஹிம்! என்னை விடப் பத்து மார்க் அதிகமா வாங்கிருக்குங்க. அவ்வளவு தானே”
மயூரி பேசி முடித்தவுடன் சற்றும் இடைவெளி விடாது,“பத்து மார்க் கூட வாங்கி ரெண்டு பேரும் பாஸ் ஆகிட்டாங்க. உன்னை மாதிரி ஃபேய்ல் ஆகிட்டு உக்காரல” என மாரியம்மாள் மறுமொழி பேசினார்
மாரியம்மாளின் அப்பேச்சு தீயாய் எரிந்து கொண்டிருக்கும் மயூரியின் கோபத்தில் மென்மேலும் எரிபொருளை ஊற்றியதற் போலாயிற்று
“ஆமா, அதுங்க ரெண்டு பேரும் வீட்டுல அதுங்களுக்குள்ளே சீனைலெ பேசிக்குதுங்க. இந்த வீட்டுல யாரு என் கூடச் சீன பேசுரீங்க? அக்காவை மட்டும் தமிழ் ஸ்கூல்லெ போட்டுட்டீங்க. அக்காவுக்கு ஏதாவது தெரியலனா சொல்லித்தரதுக்கு இந்த வீட்டுல ஆள் இருந்தீங்க.
அதே மாதிரி என்னையும் தமிழ் ஸ்கூல்லே சேர்த்து விட்ருக்கலாம்ல. நானும் நல்லா மார்க் எடுத்துருப்பேன். உங்க ஆசைக்காக என்னைப் பலி ஆடா சீன ஸ்கூலுக்கு அனுப்பிட்டீங்க” கோபம் கண்ணீராய் பெருக்கெடுத்து மயூரியின் கன்னங்களில் வழிந்தோடியது
“படிக்குற புள்ளை எந்த ஸ்கூல்லெ போட்டாலும் நல்லா படிக்கும். சும்மா சாக்கு சொல்லிக்கிட்டு இருந்தேனா, அப்புறம் வரப் போற PT3 பரிட்சையிலும் ஃபைய்ல் ஆக வேண்டியது தான். அதுவும் இல்லாம இந்தக் காலத்துல ஆனா ஊனானா சீனப் பேசத் தெரிஞ்சா தான் வேலை, வாய்ப்பு, லொட்டு, லொசுக்கு எல்லாம்னு ஆகிப் போச்சு இந்த ஊருல. மாதவியை ஸ்கூலுக்கு அனுப்பும் போது எனக்கு இந்த அளவுக்குப் புத்தி இல்ல. உன்னை ஸ்கூல்லெ சேர்க்கும் போது தான், உன் அத்தை இந்த விவரத்தைலாம் சொன்னா. அதுனால தான் உன் அத்தை பசங்க படிக்கிற அதே ஸ்கூல்ல உன்னையும் சேர்த்தேன். சும்மா வாயடிக்காம சொல்லுறத மட்டும் செய்”
மகளின் தவிப்புக்கு மதிப்புக் கொடுப்பதைக் காட்டிலும், அவள் எதிர்நோக்கவிருக்கும் சோதனையில் சிறந்த மதிப்பெண்களைப் பெற வைப்பதற்கான வழிகளைப் பற்றியே மாரியம்மாளின் சிந்தை பாய்ந்தது.
தன்னுடைய தாயிடம் இவ்விவகாரம் பற்றிக் கலந்துரையாடுவது இது முதல் முறை அல்ல, நிச்சயமாகக் கடைசி முறையாக அமைவதற்கும் வாய்ப்பல்ல என்பதும் மயூரி அறிந்ததே.
ஆகையால், மென்மேலும் தன் தாயிடம் வாய்ச் சண்டை வளர்ப்பது பயனற்றது என்பதை எண்ணியபடியே, இனி வாழ்வில் ஓய்வு எனும் வார்த்தையை மறந்து, பற்பல ப்ரத்தியேக வகுப்புக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலைக்குத் தன் மனதையும் உடலையும் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என நினைத்து வருந்தினாள் மயூரி
ஆயினும், எதாவது செய்தாயினும் அச்சூழலிளிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முடியாதா எனும் எண்ணமும் மயூரியின் மனச்சிந்தையில் அவ்வப்போது தலை தூக்கியது
“நாளைக்கு அக்கா யூனிவெர்சிட்டிலிருந்து இருந்து செமஸ்டர் ப்ரேக்காக வந்துருவால. அக்காகிட்ட சொன்னால், என் நிலமைய புரிஞ்சிப்பா. கண்டிப்பா அம்மா கிட்டயும் இதைப் பத்தி பேசுவா”
அக்காவின் வருகை மயூரிக்கு ஆறுதல் கொடுத்தது. தனது அக்கா மாதவி, இளங்கலைப் பட்டப்படிப்பினை மேற்கொள்ள உப்சி பல்கலைக்கழகத்தில் இணைந்த நாள் முதலே, அவளுக்கு வீட்டில் சற்றே அதிகபடியான உரிமைகளும் மரியாதைகளும் வழங்கப்பட்டு வருவதை மயூரி உணர்ந்திருந்தாள்
தனது விவகாரத்தில் அக்காவின் தலையீடு இருந்தால், தீர்ப்பும் தனக்குச் சாதகமாக மாற்றி எழுதப்படும் எனும் மனக்கணக்கைப் போட்டாள் மயூரி.
மறுநாள் சூரியன் கிழக்கில் உதிப்பதற்கு முன்னரே, மயூரி தனது அறையில் வடகிழக்கு திசையை நோக்கி அமர்ந்து, பள்ளி பாடங்களை மீள்பார்வை செய்துக் கொண்டிருந்தாள்
தம் மகள்களுக்குக் கல்வி மீதான கவனக்குவிப்பையும் நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கு, வாஸ்து பெரும் உதவி புரியுமென மாரியம்மாள் நம்பினார்
கல்விக்கான சிறந்த திசையையும், உறக்கநிலைக்கான சிறந்த திசையையும் வலையொளியில் குவிந்துக் கிடக்கும் வாஸ்து தொடர்பான காணொலியைக் கண்டறிந்த மாரியம்மாள், தம் பிள்ளைகளின் சிறுவயது முதலே அவர்களது படுக்கையையும், கல்வியறையையும் அவ்வப்போது பிரபலமாக இருக்கும் வாஸ்து பயிற்றுநர்களின் அறிவுருத்தலுக்கேற்ப மாற்றிக் கொண்டிருப்பார்
தனது மூத்த மகள் மாதவிக்குச் சீனத் தொடக்கப் பள்ளியில் பயில்வதற்கான பாக்கியம் அமையாவிட்டாலும், இது போன்ற வாஸ்துகளின் பயன்களால் தான் தற்போது ஆசிரியர் பணிக்கான மேற்கல்வியைத் தொடர முடிந்தது என்பதை மாரியம்மாள் முழுமனதோடு நம்புகிறார்.
“மயூரி, ஸ்கூல் வேன் இன்னும் ஒரு மணி நேரத்துல வந்துடும். சீக்கிரம் போய் குளி” வழக்கம் போல மகளுக்கு நேரத்தை நினைவூட்டிக் கொண்டே காலை உணவைத் தயார் செய்துக் கொண்டிருந்தார் மாரியம்மாள்
மயூரி குளித்து முடித்து, பள்ளிச் சீருடையை அணிந்து, இறைவனை வணங்கிய பின்பு காலை உணவினை உண்பதற்காகச் சமயலறைக்குச் சென்றாள்
“சட்டு புட்டுனு உட்கார்ந்து சாப்புடு. பஸ்காரன் வந்துட்டா, ஹாரன் அடிச்சு வீதியையே எழுப்பி விட்ருவான். அப்புறம் மறக்காம ரிசேஸ் டைம்ல, லீவேய் டீச்சர்கிட்ட டீயூஷனுக்குப் போகப் போறதைப் பற்றிப் பேசிடு
இந்த வாரத்துல இருந்தே ஜாய்ன் பண்ண முடியுமானு கேட்டுக்கோ. அம்மா இந்த மாசத்தோட பாதி பீஸ் கட்டிருவேனு சொல்லு. அடுத்த மாசத்துல இருந்து முழுசா கட்டிக்கலாம்”, என்றார் மாரியம்மாள்.
தலைக்கு மேல் போகப் போகும் வெள்ளம், கட்டுக்கடங்காது சுனாமி வேகத்தில் வருமென மயூரி எதிர்ப்பார்க்கவில்லை
“அம்மா! மாசம் முடியுறதுக்கு இன்னும் ரெண்டு வாரம் தான இருக்கு. ப்ளீஸ், நான் அடுத்த மாசத்துல இருந்தே போறேனே. இன்னைக்கு அக்கா வேற வருகுறா. அடுத்த மாசம் அவ திரும்ப உப்சி போகுறதுக்கும் நான் லீவேய் டீச்சர் கிட்ட டீயூஷனுக்குச் சேருதற்கும் சரியா இருக்கும்” என்றாள் மயூரி
‘கடவுளே! தயவு செஞ்சு இதுக்காவது அவுங்கள ஒகே சொல்ல வெய்’ என வேண்டினாள்.
மனமுருகி வேண்டிய மயூரியின் வேண்டுதல் இறைவனின் செவிக்கு எட்டியது போலும். “ம்ச்! சரி. ஆனால், அடுத்த மாசம் வருவேனு அவுங்ககிட்ட இன்னைக்கே மறக்காம சொல்லிடு. புரிதா?”அதட்டினார் மாரியம்மாள்
தலையாட்டியபடி தனது காலையுணவை உண்ணத் தொடங்கினாள் மயூரி
‘இதுக்கு ஒகே சொல்ல வைச்ச மாதிரியே, நேற்று சாயங்காளுமும் அம்மாவை எனக்கு ஒகே சொல்ல வைச்சிருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும். இன்னைக்குப் போய் லீ வேய் டீச்சர்கிட்ட டியூஷன் பத்தி பேச வேண்டிய தேவையே இருந்திருக்காது”, இறைவனைப் பழித்தாள் மயூரி.
தனது தாயின் கட்டளைக்கிணங்கி பள்ளியில் லீ வேய் ஆசிரியரிடம் சீனப் பாடத்திற்கான பிரத்தியேக வகுப்பைப் பற்றிப் பேசிவிட்டு, தனது வகுப்பை நோக்கி நடையைக் கட்டினாள் மயூரி
“ஹேய் மயூரி” அது மயூரியின் அத்தை மகள் திவ்யாவின் குரல் தான்.
‘போச்சுடா… வீட்டுல அவுங்க தொல்லைனா, ஸ்கூல்ல இதுங்க தொல்லை’, என நினைத்தவள் திரும்பிப் பார்த்து இலேசாகப் புன்னகைத்தாள்.
“அம்மா சொன்னாங்க. நீ இந்தத் தடவையும் சீனப் பேப்பர்ல ஃபைய்ல் ஆகிட்டேனு. நீ ஏதும் கவலைப் படாத மயூ, நீ லீ வேய் டீச்சர்கிட்ட படிக்க ஆரம்பிசிட்டேனா அதுக்கு அப்புறம் பிரச்சனை இருக்காது” ஆதரவாகத் தான் பேசினாள் திவ்யா
ஆனால், அதைக் கேட்கும் மயூரிக்கு ஏனோ தன்னைக் கிண்டல் செய்வதற்கெனவே திவ்யா தன் முன் தோன்றி போதனை வழங்குவது போலிருந்தது.
அதற்குக் காரணம் திவ்யாவை தனது அம்மா எப்பொழுதும் தன்னோடு ஒப்பிடுவதால் எழும் கோபமா? திவ்யா தேர்வில் ஓரளவு தேர்ச்சி பெற்றுவிட்டதால் எழுந்த பொறாமையா?
திவ்யாவை விட அதிக மதிப்பெண் பெற முடியாததால் எழுந்த தாழ்வு மனப்பான்மையா? அனைத்தும் கலந்த கலவையாகவும் இருக்கலாம்.
இது போல மனிதர்களிடையே எழும் இயல்பான உணர்ச்சிகள் யாவும் பெரும்பாலான சூழ்நிலைகளில், சுற்றாரின் உண்மையான அன்பையும் அக்கறையையும் போலியாகவே விம்பப்படுத்துகிறது.
‘க்க்க்க்ரிரிரிரிரிங்ங்ங்ங்’
சரியாக மதிய வேளை, மணி 02:15க்குப் பள்ளியின் மணியோசை கேட்டது. இந்நேரம் தனது அக்கா பல்கலைக்கழகத்திலிருந்து வீடு வந்து சேர்ந்திருப்பாள்.
அவளுக்காக அம்மா வகை வகையாய் சமைத்திருப்பாள். அன்றைய நாள் முழுவதும் அக்காவின் வருகையைக் கொண்டாடுவதிலே கழிந்துவிடும் போன்ற எண்ணங்களே மயூரியின் சிந்தை முழுதும் படர்ந்திருந்தது.
“ஹேய் மயூ, அம்மா என்னையும் தரோனாவையும் உங்க வீட்டுக்கு தான் கூட்டிட்டு வராங்களாம். மாதவி அக்கா வந்துருக்காங்களாமே. நீயும் எங்க கூடக் காடில வா. முதெல்ல போய் பஸ்கார அங்கிள்கிட்ட நீ எங்க கூட வரேனு சொல்லிட்டு வா” என்றாள் திவ்யா
‘போச்சுடா, அக்காகிட்ட பேசுறாங்களோ இல்லையோ, கண்டிப்பா என் ரிசல்ட் பத்தி குருப் டிஸ்கஸ்யன் நடக்குமே! என் தலை எழுத்து’ அடுத்தச் சில மணி நேரங்களுக்குத் தன்னைச் சுற்றி நிகழவிருக்கும் காட்சிகளை எண்ணிப் பார்த்தவாறே, திவ்யாவோடு தனது அத்தையின் மகிழுந்தில் ஏறினாள் மயூரி
“மயூரி, நல்லா இருக்கியா?”வினவினார் வசந்தா.
“ஆம், நல்லா இருக்கேன் அத்தை”
“உன்னைப் பார்த்து ரொம்ப நாள் ஆகுனாப்புல இருக்கு. க்ளாஸ்லாம் எப்படிப் போகுது?”
“ஏதோ போகுது அத்தை” புன்னகையோடு தலையைக் இலேசாகக் குனிந்தவாறு பதிலளித்தாள் மயூரி
“ஏதோ போகுதா? ஹீம்… நேத்து அம்மாவை ஸ்கூல்ல பார்த்தேன். உன் ரிசல்ட் எடுத்துட்டு வீட்டுக்குப் போகும் போது பேசுனாங்க. ஏன்மா? சீன பாடத்துல ஃபைய்ல் ஆகிட்ட? உனக்கு அந்தப் பாடம் கஷ்டமா இருக்கா?” அன்பான தொனியோடு விசாரிக்கத் தொடங்கினார் வசந்தா
“எனக்கு ஆரம்பத்துல இருந்தே சீன வரல அத்தை, ஏதோ பாஸ் பண்ணிகிட்டு இருந்தேன். மெனெங்கா ஸ்கூல் வந்ததுல இருந்து அந்தப் பாடம் இன்னும் கஷ்டமா இருக்கு. அதான் பாடத்தை ட்ரோப் பண்றேனு போன வருஷத்துல இருந்து
அம்மாகிட்ட சொல்லிக்கிட்டு தான் இருக்கேன். நேத்து என் க்ளாஸ் டீச்சர் கூட அதான் பெட்டர்னு அம்மாகிட்ட சொன்னாங்க. ஆனால், அம்மா தேவையே இல்லாம க்ளாஸ்-ல அத்தனை பேருக்கு முன்னாடியும் வைச்சு திட்டிட்டாங்க”
முந்தைய தினம் வகுப்பில் நடந்தவை யாவும் அவளது மனக்கண்களில் தோன்றியது
“அம்மா அப்படி நடந்துக்கிட்டது சரி இல்லை தான். ஏதோ கோவத்துல திட்டிருப்பாங்க. ஆனால், அவுங்க சொல்றது எல்லாமே உன் நல்லதுக்குத் தானம்மா. இந்தக் காலத்துல சீன மொழி அவ்வளவு முக்கியமா போய்ருச்சு. அத்தையோட கம்பனில கூட இப்பல்லாம் சீன தெரிஞ்சவங்களுக்குதான் வேலை கொடுக்குறானுங்க என்னை விட நாளு வருஷம் ஜுனியருக்குச் சீன பேசத் தெரிஞ்ச ஒரே காரணத்துனால ப்ரோமோஷன் கொடுத்துட்டாங்க.
அத்தைக்குச் சீன தெரிஞ்சிருந்தா கண்டிப்பா எனக்குத் தான் கிடச்சிருக்கும். என்ன பண்ணுறது? இப்போ உங்களுக்கு எடுத்துச் சொல்ல நாங்க இருக்கோம். எங்க காலத்துல எங்களுக்கு இதையெல்லாம் சொல்ல யாரும் இல்ல. இவங்க ரெண்டு பேர் மாதிரி நீயும் லீ வேய் டீச்சர்கிட்ட டீயூஷனுக்குப் போமா”, என்றார் வசந்தா
“நான் ஏற்கனவே மெய் லிங் டீச்சர்கிட்ட சீனப் பாடத்துக்காக டீயூஷன் போகுறேன் அத்தை. ஒரே பாடத்துக்கு எத்தனை டியூஷன் போகுறது?” சலித்துக் கொண்டாள் மயூரி
“அப்படி நினைக்காதே மா, நமக்கு ஒரு விஷயம் வேணும்னா நம்ம தான முயற்சி எடுக்கனும்”
‘நான் தான் எனக்கு வேணாம்னு சொல்றேனே’ வசந்தாவின் அறிவுரைக்கு மனதுக்குள்ளேயே பதில் பேசினாள் மயூரி
மயூரி யூகித்தவாறே வீட்டிற்கு வந்த அத்தை மாதவியிடம் ஐந்து நிமிட நலவிசாரணைக்குப் பின்பு, அரை மணி நேரம் மாரியம்மாளோடு மயூரியின் கல்வி நிலையைப் பற்றி பேசிவிட்டு கிளம்பினார்.
தன்னை நலம் விசாரிக்க வந்த அத்தை தன்னிடம் அதிகமாகப் பேச்சு வார்த்தை நிகழ்த்தாமல், அம்மாவிடம் தனது தங்கையின் கல்விப் போக்கைப் பற்றி கலந்துரையாடி சென்றதை கவனித்தாள் மயூரியின் அக்கா மாதவி
“ஏன்மா, மயூரி தான் கஷ்டமா இருக்குனு சொல்றாளே. அந்தப் பாடத்தை மட்டும் ட்ரோப் பண்ணிகிட்டும்”, தங்கையின் வாதத்திற்கு வழிமொழிந்தாள் மாதவி.
“பேசாம இரு மாதவி. அதெல்லாம் கொஞ்சம் முயற்சி போட்டா நல்லா வந்துடுவா”.
“இத்தனை நாள் முயற்சி செய்யாம இருந்திருந்தால் நீங்க சொல்றதுல நியாயமிருக்கும். கடிகாரத்துல நிக்காம ஓடுற முள்ளு மாதிரி ஏன் அவள தினமும் ஏதாவது எக்ஸ்ட்ரா க்ளாஸ்க்கு அனுப்புறீங்க? இப்பக் கூட ஸ்கூல்லெ இருந்து வந்தவுடனே என்னமோ காலுல சுட தண்ணி ஊத்துண மாதிரி டியூஷனுக்குக் கிளம்பிக்கிட்டு இருக்கா”
வீட்டிற்கு வந்த சில மணி நேரங்களிலே தனது தங்கையின் சூழ்நிலையை நன்கு புரிந்து பேசினாள் மாதவி
“நல்ல மார்க் எடுக்கனும்னா, எக்ஸ்ட்ரா க்ளாஸ் போக தான் ஆகனும் மாதவி. இல்லனா ஒவ்வொரு முறையும் ப்பேய்ல் ஆக வேண்டியது தான்”, என்றார் மாரியம்மாள்.
“யாரும்மா சொன்னது? அப்புறம் எதுக்கு ஸ்கூல் இருக்கு? அத்தை என்னமோ தமிழ் பிள்ளைகங்க கூட பழகாத, சீனப்பிள்ளைங்க பக்கத்துல உக்காரு, சீனப்பிள்ளைங்க கூட க்லோஸ்-ஆ இருனு மயூரிக்கு உபதேசம் பண்றாங்க.
ஸ்கூலுக்கு வர சக தமிழ் பிள்ளைங்களோட சேர்ந்தால் கெட்டுப் போய்டுவோம்னு தமிழங்களே பிள்ளைங்களுக்குத் தவறா சொல்லி கொடுக்குறீங்க. சுய சமூகத்தினர், மொழி மேல இல்லாத நம்பிக்கை, எப்படி அந்நியர்களோடும், அவங்களோட மொழி மீதும் வருது?
நான் தமிழ் ஸ்கூல்லெ, தமிழ் பிள்ளைங்களோடு இயல்பா பேசி, பழகி, வளர்ந்தவள் தான். நான் நல்லா படிக்கலயா? யூனிவர்சிட்டி போகலயா? இவங்கள போல இருக்கும் பல தமிழங்கனாலயே எனக்கு வாத்தியார் வேலை கிடைக்காது போல” தனது ஆதங்கத்தைக் கொட்டினாள் மாதவி
“என்ன மாதவி சொல்ற? அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்? உனக்கு வேலை கிடைக்காதா?” அதிர்ந்தார் மாரியம்மாள்
“ஆமா மா. இந்த காலத்துல நிறைய அம்மா அப்பா அவுங்க பிள்ளைங்கள மலாய், சீனப் பள்ளிகல்ல சேர்க்குறாங்க. மலேசிய புள்ளி விவரப்படி 20% இந்திய மாணவர்கள் சீனப் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்றாங்க. 2018-ல் தமிழ் பள்ளிலெ முதலாம் ஆண்டுக்கு 13,771 மாணவர்கள் பதிஞ்சிக்கிட்டாங்க
2021-ல் 12,489 மாணவர்கள் தான் பதிஞ்சிருக்காங்க. இப்படியே போனா, கஷ்டப்பட்டு நாலு வருசம் படிச்சு, பட்டம் வாங்கிட்டு, ஆசிரியர் ஆகப் போகும் கனவை சுமந்து வெளில வர எங்களை மாதிரி பட்டதாரிகளுக்கு எப்படி வேலை கிடைக்கும்
ஆனால், பழிய தூக்கி அப்டியே கவர்ன்மென்ட் மேல போட்டுருவிங்க. தமிழ் பள்ளிகளை நம்பி, தமிழர்களே அவுங்க பிள்ளைங்களைப் படிக்க வைக்கலனா, கவர்ன்மென்ட் எப்படி நம்பி தமிழ்பள்ளிக்காகவும் தமிழ்க்கல்விக்காகவும் நற்திட்டங்கள் ஒதுக்குவாங்க? இருக்குற தமிழ் பள்ளிகளையும் இழுத்து மூடதான் வேலை நடக்கும்.
மயூரியை தமிழ் தான் படிக்க வைக்கல. அவளுக்குப் புரியாத மொழியைப் படிக்கச் சொல்லி வர்புறுத்தாதிங்க மா. சீன மொழி தான் எல்லாம்னு நாமளே தலையிலெ தூக்கி வைச்சிக்கிட்டா அப்புறம் நம்மள சுலபமா மிதிச்சிடுவாங்க”
மாதவியின் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாத மாரியம்மாள், “இதையெல்லாம் உன் அப்பாகிட்ட பேச முடியாது மாதவி” ஒரு வரியில் வெள்ளைக் கொடி காட்டினார்
“நான் பேசிக்கிறேன்”, மாதவியின் பேச்சில் தெளிவும், மனதில் தைரியமும், சிந்தையில் தமிழ் மீதான பற்றும் இத்துணை அளவுக்குப் பெருக்கெடுத்திருப்பதை மாரியம்மாள் உணர்ந்தாள்.
அது தமிழ்த்தாய் கொடுத்த வலிமையாலா? பிற மொழி மோகத்தால் தாய் மொழியைப் பழிப்போர் மீதான காழ்ப்புணர்ச்சியினாலா?
“தமிழ் மொழி சோறு போடுமா”, எனும் கேள்வியை எழுப்பும் ‘பிறந்தோம், உண்டோம், இறந்தோம்’ எனும் தாரக மந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு வாழ்வோரின் மீதான வெறுப்புனாலா?
பண்டிகைகளுக்கும் திருநாட்களுக்கும் மாத்திரம் ‘தமிழன்டா’ எனும் போர்வையில் ஒழிந்து கொள்ளும் பச்சொந்திகளின் மீதான அருவருப்புனாலா?
காரணங்கள் பலவாக இருக்கலாம். ஆனால், தமிழ்ப் பள்ளிகளுக்கும், தமிழ் கல்விக்குமான விடியலைத் தேடும் போராட்டகரமான எண்ணமே அவற்றுக்கு விதையானது.
(முற்றும்)
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
GIPHY App Key not set. Please check settings