in ,

நகல் (சிறுகதை) -✍ நாகராஜ் சுந்தரமகாலிங்கம், சென்னை

நகல் (சிறுகதை)

இந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்

சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 87) 

கோவிந்தா கோ விந்தா, கோவிந்தா கோ விந்தா…

“ச் ச்ச்.. ஜருகண்டி சார். நிக்காதீங்க. ஹூம் ஹூம், ஜருகண்டி ஜருகண்டி சார். உண்டில காசு போட்டாச்சுனா கெளம்புங்க”

கோவிலில் வேலை பார்த்தாலும் எரிச்சல் கலந்த அதட்டலில் சொன்னார்.

“என்னங்க காச கைல வச்சுருக்கீங்க, உண்டியல்ல போடுங்க. இதாங்க திருப்பதி உண்டியல், பாருங்க இங்க தான் எல்லாரும் காசு போடுறாங்க. இங்க தான் போடணும், எங்கங்க போறீங்க. நேத்திக்கடன் பண்ண இவ்வளவு தூரம் வந்துட்டு உண்டியல்ல காசு போடாம எங்க போறீங்க?”

இதுவரை தன் கணவனின் கை பிடித்து பின் தொடர்ந்தவள், முதல் முறையாக கை பிடித்து நிறுத்தினாள் குழந்தைக்காக

ரண்டு மணி நேரத்திற்கு முன்பு

“மொபைல சைலன்ட்ல போட்டு பேக்லயே வச்சுடுங்க. ஆன்லைன் டிக்கெட் பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க, ஆதார் கார்டும். செருப்ப கார்லயே போட்ருங்க. அப்புறம் இந்தாங்க, தரிசனம் முடிச்சுட்டு ஆஞ்சநேயர் கோவில் ஆப்போசிட்ல கார் பார்க்கிங்.

நான் அங்க இருப்பேன், நேரா அங்க வந்துருங்க. இதெல்லாம் இந்த பேப்பர்ல எழுதிருக்கேன். என்னோட போன் நம்பரும் எழுதிருக்கேன். வழி தெரியலேனா யார்கிட்டயாவது போன் வாங்கி கால் பண்ணுங்க.” ஒரு துடுப்பு சீட்டை குடுத்தார் மகிழுந்து ஓட்டுநர்.

“சரி” அதை படிக்காமல் பத்திரமாக சட்டை உள் பாக்கெட்டில் வைத்து விட்டு, தினேஷ் தனது மனைவியை பார்த்து, “போலாமா?” எனக் கேட்க

“ம் போலாங்க, காசுப்பை எடுத்துட்டீங்களா?”, அதை அவன் மறக்க மாட்டான் என்று தெரிந்தும், கேட்டாள் திவ்யா

“இதான் தரிசனத்துக்கான வழி, முடிச்சுட்டு ஆஞ்சநேயர் கோவில் வந்துருங்க. ஒன்னா சேந்தே போங்க” கணிசமான நேரம் ஓய்வெடுக்கலாமென்ற மகிழ்ச்சியில் மகிழுந்தில் அமர்ந்தார் ஓட்டுநர்

தினேஷ், திவ்யா இருவரின் கண்களில் மெல்ல மெல்ல சிறிதாகியது அந்த வெள்ளை நிற ஃபியட் மகிழுந்து.

“ம்… இந்த பணத்த வச்சுரு திவ்யா“

“எனக்கெதுக்கு பணம், நீங்களே உங்க பர்ஸ்ல வச்சுருங்க”

“உன்கிட்ட கொஞ்சம் இருக்கட்டும். இந்த கூட்டத்துல உன்ன விட்டு நான் தனியா எங்கயும் போய்ட்டேன்னா… எதுக்கும் ஒரு சேஃப்ட்டிக்கு இருக்கட்டும்.”

அவன் தோளில் கன்னம் பதித்து, “என்ன விட்டுட்டு எங்கங்க போகப் போறீங்க? கல்யாணத்தன்னைக்கு என் கைய பிடிச்சீங்க. அன்னேல இருந்து இன்னைக்கு வர ஜலதோஷமோ, காய்ச்சலோ நமக்கு ஒன்னா தான் வந்துருக்கு. நானே உங்க கைய விட்டாலும் நீங்க என் கைய விட மாட்டீங்க.”

“ஸ்ஸ்ஷ்… சட்ட பாக்கெட்ல பேப்பர் இருக்கு, ஈரமாய்டும்.”

“சீ… போடா”

 “எதுக்கும் இருக்கட்டும் திவ்யா, இத வச்சுரு.”

“இத எங்க வைக்குறது, என்கிட்டே தான் பர்ஸ் இல்லையே. கார்லயே வச்சுட்டேன்”

“சரி, உள்ள வச்சுக்கோ, இத புடி”

“அதெல்லாம் எனக்கு பழக்கம் இல்ல. எனக்கென்ன அத்த மாதிரி வயசா ஆகுது, ஜாக்கெட்டுக்குள்ள காச வைக்க”

“ஏன் உங்க அம்மாவ சொல்றது, எங்க அம்மாக்கு மட்டும் தான் வயசாச்சா? நான் தான் சொல்றேன்ல, இத வச்சுரு”

“நீ ஒரு முடிவு எடுத்துட்டா கிராவிட்டி மாதிரி மாற மாட்ட, என்னையும் உன்னோட இழுத்துருவ”

இருவரும் தடை அரணை தாண்டி, தரிசனத்திற்காக தடுப்பு கம்பிகள் எழுப்பப்பட்ட பாதையில் செல்லத் தொடங்கினர்.

என்ன தான் இருவருக்கும் நான்கு வருடத்திற்கு முன்பே திருமணம் ஆகி, ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தாலும், கழுத்தில் மாலை மட்டும் இருந்தால் திருப்பதியில் திருமணம் செய்து கொள்ள வந்த மணமக்கள் என்றே எல்லோரும் நம்புவர்.

நீண்ட நாட்கள் கழித்து வேட்டி கட்டி இருந்தாலும், அவன் நடையில் வித்தியாசமில்லை.

நல்ல அடர்த்தியான சுருளை முடி, பல நீண்ட இரவுகள் கணினியில் வேலை பார்த்து கண்களை சுற்றி கருங்குளமே இருந்தாலும், அவன் பார்வை தெளிந்தே இருந்தது.

பெரிய மூக்கு, மேலுதட்டை மறைக்கும் மீசை, கீழ் உதட்டில் ஆரம்பித்து தாடையை சுற்றும் குறுந்தாடி, நல்ல உயரம், கறுத்த தோல், ஒல்லியான தேகம் ஆனாலும், வேட்டி சட்டையில் தினேஷ் சற்று சதை வைத்தாற் போல் தெரிந்தான்.

திவ்யா – தோள்பட்டைக்கு சற்று கீழ் வரை தொங்கும் முடி, பொட்டா தூசியா மச்சமாயென சந்தேகத்தை வரவழைக்கும் ஒரு பொட்டு, கண்ணுக்கு கீழே மட்டும் இட்டிய மெல்லிய கண்மை (உனக்கு ரொம்ப அழகான கண்ணு, நீ ஏன் கண்மை போட்டுகிற என்று பல தடவை தினேஷ் கேட்டும் பயனில்லை) வேறு எங்கேயும் பார்க்க விடாமல் கண்ணை மட்டுமே நீண்ட நேரம் பார்க்க தூண்டும்.

சற்றே தூக்கிய மூக்கு. பேச்சிற்கும் வாய்க்கும் சம்மந்தமே இல்லையென உண்மையாக நக்கலடிக்க உதவியாய் சிறிய உதடுகள். கல்லூரி முதலாம் ஆண்டு மாணவியின் தேகம் தான் திவ்யாவிற்கு

“ஏங்க, நான் வாஷ் ரூம் போயிட்டு வரேன். காசுப்பை பத்தரம்”

தினேஷ் பொதுவாக சுற்றி நடப்பதை வேடிக்கை பார்ப்பவனில்லை, இருந்தாலும் பூஜை சாமான், தோஷ பரிகார பொருள் விற்கும் கடையை சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தான்.

“வாங்க போலாம்” என்பதற்கு அசைவில்லாததால்

திவ்யா தினேஷின் தோளை தட்டி “போலாமா?” என்றாள் 

அங்கே நடந்த விஷயம் அவனை ஆழமாக பாதித்தது. அந்த பாதிப்பு ஒரு பெரிய முடிவை எடுக்க வைக்கும் மாற்றத்திற்கான தருணம் என்று அவன் அப்போது உணரவில்லை.

மனது பிசைய, மெதுவாக திரும்பி அவளுடன் சேர்ந்து நடந்தான் யோசித்துக் கொண்டே

“எப்படிங்க இங்க மட்டும் எல்லா வாஷ் ரூமும் எப்பயுமே கிளீனா இருக்கு?”

ஆழ்ந்த வலியில் பிறந்த அவனது சிந்தனை, அவளின் கேள்வியை புறந்தள்ளியது. திடீரென்று கையிலிருந்த காசுப்பை கனத்ததால், இறுக்கிப் பிடித்தான்.

கையிலிருந்து விழக்கூடாது என்பதற்காக அல்ல, மாறாக கையில் இப்போது இருக்கிறது இன்னும் சற்று நேரத்தில் திருப்பதி உண்டியலுக்குள் விழப்போகிறது என்ற எண்ணத்தால்.

“சொல்லுங்க, எப்படி கிளீனா இருக்கு?” செயல் இழந்த அவனை செயல்பட வைக்கும் அவளது அடுத்த செயல் உலுக்கல்.

அன்னிச்சையாக அவனது இன்னொரு கையும் காசு பையை பிடித்தது. ஆழ் கடலின் அடியில் உருவாகிய நீர் குமிழி உருண்டு பிறண்டு மேலே வந்து மேற்பரப்பில் வெடிப்பது போல், அந்த உலுக்கல் அவனது சிந்தனையை வெடிக்கச் செய்தது.

அச்சிறு நீர் குமிழியின் வெடிப்பு ஆழ் கடலின் அமைதியை கலைக்கவில்லை.

அவன் அவளைப் பார்த்து,”ம் … அது ரொம்ப சிம்பிள். ரெண்டே விஷயம் தான். கிட்டத்தட்ட ஐநூறு மீட்டருக்கு ஒரு டாய்லெட். அத்தனையும் அடிக்கடி சுத்தம் பண்றாங்க. ஒரு விஷயம் சுத்தமா இருக்கணும்னா, அது ஒரு இடமா இருக்கலாம், ஒரு ஊர், இல்ல பெரிய நாடா கூட இருக்கலாம். ஏன் நம்ம உடம்பா இருந்தாலும் இதே பார்முலா தான். அசுத்தத்த வெளியேத்துற இடம் அதிகமா இருக்கணும். அடிக்கடி சுத்தம் செய்யணும்”

இதைப் போல அடிக்கடி வரும் பொதுக்கருத்து விவாதத்தில், அவனை சீண்டுவதில் தனி அலாதி அவளுக்கு

“அப்படி பாத்தா நம்ம உடம்புல வெளியேத்துற இடம் அதிகமா இல்லயே. அப்போ நம்ம உடம்போட சுத்தப்படுத்துற முறை சரியானது இல்லையா?”

அவளது கேள்விற்கு முற்பாதியை சிரிப்பால் நிரப்பி, “நீ சாப்டுற சாப்பாட்டோட சக்கைய வெளியேத்துறது மட்டும் சுத்தம் பண்றது இல்ல. உன் இரத்ததுல இருக்குற நச்சுக்கழிவ தோல் மூலமா வெளியேத்துறதும் தான்”

தொடர் கேள்வி எழுப்ப முடியாததால், சிறிது நேரம் அமைதியே உரையாடிக் கொண்டிருந்தது. சிறந்த அமைதி ஒரு மனிதனின் தற்போதைய நிலையை உணர்த்தும்.

“நம்ம பாப்பாக்கு சரியாய்டும்லபா?” சம்பிரதாயமும் மூடநம்பிக்கையும் தவிர, மற்றவற்றை உடைப்பதில் முதன்மையான திவ்யாவிற்கு அமைதியே முதல் உடை பொருள்.

“சரியாய்டும், அதுக்கு தான நேத்திக்கடன் செலுத்த வந்துருக்கோம். என்ன இன்னும் கொஞ்சம் முன்னாடியே பிளான் பண்ணிருக்கலாம், பாப்பா வெயிட்டுக்கு இன்னும் ஒன்றரை கிலோ மட்டும் காயின் கம்மியா இருக்கு”

பாப்பாவை பற்றி பேசியவுடன், அவன் மனம் மீண்டும் பூஜை சாமான் விற்கும் கடைக்கு சென்றது.

“துலாபாரம் குடுக்குற இடத்துலயே காசு குடுத்தா சில்லறை கொடுப்பாங்கன்னு என் ஃப்ரண்டு சொன்னா. டிக்கெட் செக் பண்ணும் போது துலாபாரம்க்கு காசு எங்க தருவாங்கனு கேளுங்க”

வழக்கமான பதில் கிடைக்காத காரணத்தால், “என்ன யோசிச்சுட்டு இருக்கீங்க?” எனக் கேட்டாள்

“ஒன்னுமில்ல” இது வழக்கமான பதில் தான், ஆனால் எதிர்பார்க்காத பதில்.

டிக்கெட் பரிசோதனை வரிசையில் காத்திருந்து, ஆதாரை காண்பித்த பின், “துலாபாரம் எங்க இருக்கு?” பொறுமையாக கேள்வியை ஆரம்பித்தான் தினேஷ்.

ஏதோ பல மொழி கலந்த பதில் வந்தது

“சாமிக்கு வெயிட், வெயிட் எங்க குடுக்கணும்? துலாபாரம்?” சைகையில், எடையை அழுத்தி கேட்டான்.

“கோவிலுக்குள்ள” விசைப்பலகையை தட்டிக் கொண்டே பதில் வந்தது.

“காயின் எடை கம்மியா இருக்கு. காசு குடுத்தா அதுக்கு பதிலா காயின் எங்க தருவாங்க?”

“கோவிலுக்குள்ள”

“உன் பேர் என்னன்னு கேட்டா கூட, கோவிலுக்குள்ளனு சொல்லுவான் போல”

“நீங்க ஒரே கேள்விலயே எல்லா விவரத்தையும் கேக்கனும்”

“சரி தான். அடுத்த தடவ வரும் போது, ஒரே கேள்வில எல்லா விவரத்தையும் கேக்குறேன். இப்ப மன்னிச்சுக்கோ”

இரும்பு கம்பிகள் அமைத்து படிக்கட்டால் நிறைந்த அறையில், ராமாராவ் படம் பார்த்து, இலவச சாம்பார் சாதம் சாப்பிட்டு, சிறிது நேரம் படுத்திருந்து, சில மணி நேரம் காத்திருந்து, பின் நீண்ட வரிசையில் சிறிது சிறிதாக நகர்ந்து, கோவிந்தா கோ விந்தா முழக்கமிட்டு அனைவரும் ஒருவர் பின் ஒருவராய் கோவில் கதவை தொடுகையில், தினேஷின் கையும் அன்னிச்சையாக கதவை தொட சென்றது.

தொடுவதற்கு முன், ஏன் இந்த கதவை தொடுகிறோம்? எப்படி நம் கை அன்னிச்சையாக தொட சென்றது? அனைவரும் தொட்டுவிட்டு செல்வதாலா?

அந்த பூஜை சாமான் விற்கும் கடைக்கு வந்த பெண்ணிற்கு தான் எவ்வளவு வலி, எவ்வளவு துக்கம்? அந்த கடைக்காரரின் முடிவுக்கு என்ன காரணம்?

கடவுள் இரக்க குணமுள்ளவர் என்கின்றனர். அப்படியெனில் அவருக்கு வலி, துக்கம் போன்ற உணர்வுகள் இருக்குமா? அவரின் பிள்ளைகளாகிய நாம் சில சமயங்களில் வேதனை அடையும்படி ஆகி விடுகிறது.

அப்படி அவருக்கு வலி இருக்குமென்றால், பிள்ளைகள் வேதனையடைவதை பார்த்து அவர் எவ்வளவு வலியுடன் இருப்பார்? அந்த வலியெல்லாம் எப்படி தாங்குகிறார்?

ஒருவேளை அப்படி வலியை தாங்குவதால் தான் அவர் கடவுளோ? மக்களின் பொதுவான வேண்டுதல் கஷ்டங்களை தாங்கும் சக்தியும், அதை கடந்து செல்ல மன தைரியமும் தான்.

அப்படி வேதனையை தாங்கும் சக்தி பெற்றால் நான் கடவுள் நிலையை அடைந்து விடுவேனோ? அப்படி நான் கடவுளானால் மற்றவர்களின் வேதனையை குறைப்பேனா?

அல்லது அவர்களும் வேதனைகளை கடந்து கடவுளாக வேண்டும் என முற்படுவேனா? இப்படி எத்தனையோ கேள்விகள் அவனுள்ளே.

தூக்கத்தில் நடப்பதை போல, பதில் தெரியாத பல கேள்விகளுடன் தினேஷ் அந்த நீண்ட வரிசையை அன்னிச்சையாக பின் தொடர்ந்தான்.

“ஏங்க, இங்க இருக்கு பாருங்க துலாபாரம். வாங்க”

கோவிலுக்குள்ளே இடதுபுறத்தில் ஒரு மண்டபத்தின் வாசல் நடுவே பெரிய துலாபாரம். ஒவ்வொரு தட்டிலும் மூன்று, நான்கு கைக்குழந்தைகளை வைக்கலாம். சுற்றி பல வடிவங்களில் பல அளவுகளில் எடை இயந்திரங்கள்.

எதிர்புறத்தில் பிளாஸ்டிக் நாற்காலி முழுவதையும் ஆக்கிரமித்து தான் தான் குபேரன் என்பதை போல ஒருவர் அமர்ந்திருந்தார். அவர் பக்கத்தில் ஒருவர் கம்பும், இன்னொருவர் விசிறியும் வைத்துக் கொண்டு நின்று கொண்டிருந்தனர்.

ஏன் திருப்பதியில் ஆங்காங்கே ஒரு சிலர் கையில் கம்பு வைத்துக் கொண்டிருக்கிறார்கள்? கோவில் குரங்குகளை அடக்கவா இருக்குமென தனக்குள்ளே நினைத்துக் கொண்டு சிரித்தான் தினேஷ்.

“சாமிக்கு நேத்திக்கடன், எடைக்கு எடை காசு குடுக்கணும்”

விசிறி ஆசாமி, “என்னி கிலோ?”

“செவன் தவ்ஷண்ட் பைஃவ் ஹன்ட்ரட் கிராம் சில்லறையா குடுக்கணும். ஆனா சில்லறை கொஞ்சம் கம்மியா இருக்கு.”

“அலாக்கி, வெயிட்ல பெட்டு சார்.”

“இங்கயா… சிக்ஸ் தவ்ஷண்ட் டூ ஹன்ட்ரட் இருக்கு. செவன் பாய்ண்ட் பைவ் கேஜி குடுக்கணும். மீதிக்கு சில்லறை வேணும்.”

“சார், காயின்ஸ்ல லேதுந்ட. ஹண்ட்ரேட் ரூபாயிக்கு த்ரீ பிப்டி கிராம்ஸ். அதே காசுக்கு ரூபாயி நோட்கா பெட்டுகோண்ட. வேங்கடாசலபதி கோவிச்சுக்கோதண்ட”

“புரியலைங்க. ஹண்ட்ரட் ருபீஸ்க்கு த்ரீ ஃபிஃப்டி கிராம்ஸ்ஸா. அப்படினா இந்தாங்க ஃபைவ் ஹண்ட்ரட் இதுக்கு காயின் குடுங்க”

“காயின்ஸ்லா லேது சார். தான்கி பதில் அதே காசுக்கி ரூபாயி நோட்கா பெட்டுகோண்ட சார்… அ… அதே காசுக்கி ரூபாயி நோட்டு போட்டுக்கோ சார். எல்லாம் ஒன்னு தான்.”

திவ்யா இரண்டு அடி முன்னால் வந்து கேட்டாள், “ஏன் இங்க காயின் இல்ல? அதான் பணம் தர்றோம்ல. நேத்திக்கடன் பண்ண வந்துருக்கோம், சாமிக்கு போட தான கேக்குறோம்” 

“காயின்ஸ் லேது மேடம், அதே வேற டிபார்ட்மெண்ட். வெயிட்க்கு ஈகுவல்லா ரூபா நோட்டு போட்டுக்கோங்க, அல்லாம் ஒரே கணக்கு தான்”

இதையெல்லாம் இவ்வளவு நேரம் அமைதியாக பார்த்த குபேரன், சத்தமே வராமல் சிரித்தார்.

தினேஷ் மேற்கொண்டு எதுவும் பேசாமல், காசுப்பையை எடுத்து அதனுள்ளே ஐநூறு ரூபாயை வைத்ததும், அது அவனுக்கு கனக்கவே இல்லை. அவன் பணத்தை வைக்க உபயோகிக்கும் சிறு தோல்பையை விட லேசாகவே தெரிந்தது.

தினேஷ் ஏதாவது சொல்லுவான் என்று அவன் கண்ணையும் உதட்டையும் பார்த்துக் கொண்டிருந்தாள் திவ்யா.

று மாதத்திற்கு பின்

மருத்துவ கல்லூரியில் சீமைக்காரை இருக்கையில் தினேஷ் நாகராஜிற்காக காத்திருக்கும் போது, சீமைக்காரை பூசாத வலுவான உடற்கட்டை காட்டி நிற்கும் பழைய காலத்து கட்டிடத்தை பார்த்துக் கொண்டிருந்தான்

அங்கே யாரோ தவறவிட்ட ஒரு A4 பேப்பரில், தடுப்பு கம்பி வேலியை வரைந்து, அதன் ஒவ்வொரு சாய் சதுர வடிவிலும், ஒரு இதயத்துடிப்பு மானியை வரைந்தான்.

நாகராஜ் தினேஷை பார்க்க, பெருமிதத்தோடு ஓடி வந்து, “என்னணா, வந்து ரொம்ப நேரம் ஆச்சா?”

“இல்ல நாகராஜ், இப்ப தான் வந்தேன். உக்காரு.”

“என்னணா வரையுறீங்க?”

“இந்த காலேஜ் பில்டிங் பாத்து இன்ஸ்பியர் ஆகி, ஒரு ஸ்கெட்ச் பண்ணேன். நீ வந்துட்ட? உன்னோட ஃபியூச்சர் பிளான் என்ன நாகராஜ்?”

“சின்ன வயசுல என்னவா ஆக போறன்னு என்கிட்ட கேட்டா கொஞ்சம் கூட யோசிக்காம டாக்டர்னு சொல்லுவேன்ணா. அப்போ தெரியாது, டாக்டர் ஆகணும்னா நெறைய செலவாகும்னு. நீங்க மட்டும் ஸ்பான்ஸர் பண்ணலேனா காலேஜ் வாசல் கூட மிதிச்சுருக்கமாட்டேன்ணா.

டாக்டர் ஆகி எல்லாத்துக்கும் இலவசமா வைத்தியம் பாக்கணும்னு சின்ன வயசுல இருந்து லட்சியம்ணா. இன்னும் நம்ம நாட்ல பணவசதி இல்லாம எவ்வளவோ பேர் வைத்தியம் பாக்க முடியாம நோயோட வாழ்ந்துட்டு இருக்காங்க. என்னால முடிஞ்ச அளவுக்கு அவங்க எல்லாத்துக்கும் இலவசமா மருத்துவம் பாக்க போறேன்ணா” ஆத்மாத்தமாக சொன்னான்

கண்டிப்பாக இதை செய்து முடிப்பேன் என்ற வெறி கண்ணிலும், குரலில் உறுதியும் இருந்தது.

சற்று சிரித்து,“ம்… இலவச மருத்துவம்“

“ஏன்ணா? சிரிக்குறீங்க?”

“நம்ம நாட்ல கஷ்டபடுற எத்தனையோ பேரு இருக்காங்க. எத்தன பேருக்கு உன்னால இலவசமா மருத்துவம் பாக்க முடியும்?”

“எத்தன பேருன்னு சொல்ல தெரியலணா. ஆனா நான் பெரிய எலைட் ஏரியால கிளினிக் வச்சு பெருசா சம்பாதிக்க போறதில்லண்ணா. அடித்தட்டு மக்கள் இருக்குற இடத்துக்கு போய் இலவசமா சேவை செய்றதுல உறுதியா இருக்கேன்ணா. ஏழையோட நாடிய (பொருளாதாரம் – இதயத்துடிப்பு அல்ல) புடிச்சு வைத்தியம் பாக்க போறேண்ணா.”

“அதுனால என்ன யூஸ்? யாருக்கு நல்லவனா இருக்க பாக்குற?”

“ஐயம் நாட் கோயிங் டு பிகம் எ சோ கால்டு டாக்டர். ஐ டை டு ஸர்வ்.”

“உன் பேச்சுல வேகம் இருக்கு, ஆனா அது பத்தாது. ஐ டை டு ஸர்வ்னு சொன்னேல, அதான் இங்க பிரச்சனை. நீ உன் லைப்ல ஒரு கிராமம் இல்ல, உன்னோட ஆர்வத்துக்கு ரெண்டு கிராமம் கூட சேவை பண்ணுவ? அதுக்கப்புறம்… அங்க இருக்குறவங்களோட கதி? அங்க இருக்குறவங்க எல்லாரும் உன்ன கடவுளா பாப்பான். உனக்கு அப்புறம்?”

இதுவரை மருத்துவராகி சேவை செய்வதையே இறுதி லட்சியமாக நினைத்த நாகராஜுக்கு, உனக்கு அப்புறம் என்ற கேள்வி, மயக்க மருந்து குடுக்காமல் இதய அறுவை சிகிச்சை செய்தது போல் இருந்தது.

மக்களுக்கு சேவை செய்யும் பொது நல குணம் நாகராஜுக்கு இருந்தாலும், தன்னை தாண்டி யோசித்ததில்லை. ஆச்சர்யத்துடன் தினேஷின் கண்ணை பார்த்துக் கொண்டிருந்தான்.

இவ்வளவு நாள் வாழ்க்கையின் லட்சியமாக நினைத்த ஒன்றை, ஒரே கேள்வியில் தலைகீழாக மாற்றிய தினேஷ், அடுத்து என்ன சொல்ல போகிறான் என்று நடுக்கத்துடன் காத்திருந்தான் நாகராஜ்.

சாமி அலங்காரத்திற்கு முன் போடப்படும் திரை போல, தினேஷின் மௌனம் நாகராஜின் வாழ்க்கை லட்சியத்தை சிறிது நேரம் மறைத்திருந்தது.

“நம்மளோட இலக்கு ரொம்ப தூரத்துல இருக்கு நாகராஜ். தினேஷாலயோ, நாகராஜாலயோ இத அடைய முடியாது. மக்களுக்கு நீ கடவுள் ஆகுறது முக்கியம் இல்ல. நம்ம மக்களுக்கு நெறைய கடவுள் தேவை.

நீ கடவுள் ஆனதும் உன்ன மாதிரி நெறைய கடவுள உருவாக்கணும். நான் உன்ன உருவாக்கி இருக்கேன், அத விட முக்கியம் உனக்குள்ள என்னோட தாயனை (D.N.A) யை கடத்திருக்கேன்.  இந்த ஐடியா தான் என்னோட தாயனை.

நீ சாகுறதுக்குள்ள உன்ன மாதிரி பல பேரை (பல கடவுள) உருவாக்கணும், முக்கியமா தாயனை கடத்தணும். ஒரு தெருவுக்கு ஒரு டாக்டர் இருக்கணும், அவன் மருத்துவத்த ஒரு சேவையா செய்யணும். அது வர இந்த ரிப்ளிகா ஸ்டாப் ஆக கூடாது”

நகல், அதீத வெற்றிகரமான மேலும் ஆற்றல் மிக்க சூத்திரம். எனக்கு ஏன் இந்த யோசனை வரவேயில்லை.

இந்த ஒரு சிந்தனை இவருக்கு எப்படி வந்தது, மனதில் ஆச்சர்ய கேள்வி ஆனால் கண்ணில் தெளிவோடு தினேஷை பார்த்தான்.

ந்த சிந்தனை உதித்த இடத்திற்கு சென்றது தினேஷின் சிந்தனை

“என்னங்க காச கைல வச்சுருக்கீங்க, உண்டியல்ல போடுங்க. இதாங்க திருப்பதி உண்டியல், பாருங்க இங்க தான் எல்லாரும் காசு போடுறாங்க. இங்க தான் போடணும், எங்கங்க போறீங்க. நேத்திக்கடன் பண்ண இவ்வளவு தூரம் வந்துட்டு உண்டியல்ல காசு போடாம எங்க போறீங்க?”

இதுவரை தன் கணவனின் கை பிடித்து பின் தொடர்ந்தவள், முதல் முறையாக கை பிடித்து நிறுத்தினாள் குழந்தைக்காக.

“நீ பேசாம வா” சொந்தகாரர்களால் அவமானப்படுத்தப்பட்டதை போல, தினேஷ் அவள் கையை உதறிவிட்டு விறு விறுவென்று நடந்தான்.

அம்மா, அப்பா, மனைவி, குழந்தைகள் என அனைவரின் முன்னிலையில், “என்ன மாப்ள, அறிவே இல்லையா. இப்டி எவனாவது பண்ணுவானா? மடத்தனமான இருக்கு. நாம எதுக்கு இங்க வந்துருக்கோம், என்ன பண்றோம்னு கூடவா தெரியாம இருக்குறது” என யாரோ ஒருவர், தன் மாப்பிள்ளையை திட்டும் இடத்தை கடந்து செல்கிறான் தினேஷ்.

‘என்ன நடக்கிறது? ஏன் இவர் உண்டியலில் காசு போடவில்லை? வீட்டிலிருந்து இவ்வளவு தூரம் வந்து, இங்கே காத்திருந்து உண்டியல்கிட்ட வந்ததும் ஏன் இப்படி வினோதமாக நடந்து கொள்கிறார்? மகளுக்கான நேர்த்திக் கடனை செலுத்தாமல் என்ன கோபம் இவருக்கு?

ஒன்றுமே புரியாமல் ஜாக்கெட்டுக்குள் இருந்த பணத்தை அப்படியே எடுத்து, “குறைய இருந்தா மன்னிச்சிரு ஏழுமலையானே, வெங்கடாசலபதி, ஸ்ரீனிவாசா, பெருமாளே கோவிந்தா. என் குழந்தை நல்லா தேறி வரணும். என் காணிக்கைய ஏத்துக்கோ” என தன்னிடமிருந்த 750 ரூபாயை உண்டியலில் போட்டாள் திவ்யா

போட்டு விட்டு தொட்டு வணங்கும் போது, “என் கணவர மன்னிச்சுரு. அவருக்கு என்ன ஆச்சுன்னு தெரியல? நீ தான் கூட இருந்து காப்பாத்தணும்”

அவளுடைய கோபமும், ஏமாற்றமும் கண்ணீராய் மாறி மூடிய கண்ணிற்குள் தேங்கியது.

தினேஷ் கோவிலுக்கு வெளியே செல்கையில், நுழைவாயில் கதவை ஒரு வினாடி பார்த்து ஆள்காட்டி விரலால் கதவை தொட்டு சிறிது பரிசோதனை செய்து விட்டு, காசுப்பையை இறுக்க பிடித்துக் கொண்டே வேகமாக வெளியேறினான்.

திவ்யா ஒன்றும் புரியாமல் அழுகையை அடக்கிக் கொண்டு, கோபத்தையும் ஏமாற்றத்தையும் பதற்றம் முந்திக் கொள்ள, தினேஷ் பின்னால் ஓடினாள்.

“ஏங்க, ஏங்   க, ஏ   ங்க, என்னங்க ஆச்சு, ஏன் நேத்திக்கடன் செலுத்தாம வந்தீங்க? இதுக்காக தான இங்க வந்தோம்”

அந்த முன்னூறு அடி அவன் அவளை விட்டு சென்ற துயரத்தில் கோவிலே சுடுகாடாய் மாறியது.

இவ்வளவு நேரம் மலை உச்சியில் வீசிய குளிர் காற்றும் சந்தன வாசமும், சுடும் புகையாகவும் நாற்றமாகவும் வீசியது.

அவள் கத்துவது வேறு உலகத்தில் இருக்கும் தினேஷிற்கு கேட்கவில்லை. ஒரு ஓரமாய் அமர்ந்தான்.

“ஏன் என்ன விட்டுட்டு வந்தீங்க? என்ன ஆச்சு உங்களுக்கு? இப்ப எதுக்கு இங்க வந்து உக்காந்திருக்கீங்க? ஏன் உண்டியல்ல காசு போடல?”

சிறிது நேரம் அவள் கால் அடுத்து வயிறு அதையடுத்து கண். இதுவரை அவளது கண்ணில் அழகை மட்டுமே பார்த்தவன், முதல் முறையாக கவலையும் ஏமாற்றத்தையும் பார்த்தான்.

கீழே அமர்ந்தவளின் கண்ணை நீண்ட நேரம் பார்க்க முடியாதவனாய், “நான். ம். ர்ர்ஹூ.. ம்க்க்கர்ர்ம். நான் வேல கெடைக்காம பெங்களூர்ல கஷ்டப்பட்டது தெரியும்ல?”

நாலு வருடத்தில் ஒரு நாள் கூட தினேஷின் குரலில் தடுமாற்றத்தை கண்டிராத திவ்யா, “சொல்லிருக்கீங்க. என்ன பா? அத ஏன் இப்போ சொல்றீங்க?”

இத சொல்லிருக்கேனா இல்லையானு தெரியல” சிறிது நேர அமைதியில் எங்கிருந்து ஆரம்பிப்பது என தெரியாமல்

“ஃப்ரண்ட்ஸ் எல்லாரும் திருவிழாவுக்கு ஊருக்கு போய் 2 நாள் இருக்கும். வேல கெடைக்காம ஊருக்கு போக கூடாதுன்னு குறிக்கோளோட பெங்களூர்லயே இருந்தேன்”

எங்கு திரும்பினாலும் மொட்டையும் நாமமும் இருக்க, திவ்யா தங்களை யாரேனும் பார்க்கிறார்களாயென சுற்றி இருக்கும் கூட்டத்தை ஒருமுறை சுற்றி பார்த்தாள். ஆனால், தினேஷோ மன ஓட்டத்தில் நேராக பெங்களூர் சென்றிருந்தான்.

தினேஷ் தான் பட்ட கஷ்டத்தை, கடந்து வந்த பாதையை திவ்யாவிடம் சொன்னதில்லை.

ஒருநாள் மேலாளர் தன் வேலையை குறை சொல்லி விட்டார் என மனதின் ஆழத்தில் இருந்து அழுது, தன் பெங்களூர் வாழ்க்கைப் பற்றி கூறினான். அதற்கு பின் அதைப் பற்றி இப்போது வரை அவன் பேசியதில்லை.

திவ்யாவிற்கு என்ன நடந்ததென்று புரியவில்லையென்றாலும், தன் கணவர் மனதளவில் சோகமாக இருக்கிறார் என்பதை உணர்ந்து, அவன் வலியை கடந்து செல்லட்டுமென காத்திருந்தாள்.

“கைல சுத்தமா காசு இல்ல, தனியா ரூம்ல இருந்தேன். பசி, புண்ணியத்துக்கு அரிசி மூட்டை இருந்தது, குக்கர்ல சாதம் வச்சுட்டேன். ஆனா காய்கறி இல்ல, பருப்பு இல்ல, எதுவுமே இல்ல. ரசம் வைக்கலாம்னா புளி கூட இல்ல. ஃப்ரெண்ட்ஸ்கிட்ட போன் பண்ணி காசு கேக்க மனசு வரல. வெறும் சோத்துல தண்ணி ஊத்தி கரைச்சு குடிச்சுறலாம்ன்னு தோணுச்சு. அப்பறம் கொஞ்ச நாளைக்கு முன்னாடி வாங்குன பருப்புப்பொடி இருந்தது”

சொல்லும் போது அவனின் தொண்டை அடைத்தது

“சரியான பசி, தட்ல சோத்த போட்டு, பொடியை கொட்டி இருக்குற எண்ணெய ஊத்தி பெசஞ்சு 2 வாய் வச்சதும் தான் தெரிஞ்சது, பருப்பு பொடி ஃபுல்லா பூச்சி. சின்ன சின்னதா நெறைய இருந்துச்சு. அதுலயும் மோசம் என்னனா எல்லாமே செத்து போய் காஞ்சு கருவாடா வெறும் கூடு

பசிக்குது, சோத்த கொட்ட மனசு வரல. என்ன பண்றது. கண்ண மூடிட்டு சாப்டுறேன். வாய்க்குள்ள நாத்தம் அடிக்குது. அந்த சாப்பாட மெள்ள மெள்ள என் கண்ணுல இருந்து தண்ணி ஊத்துது. அத சாப்ட்டு 2 நாள்  எனக்கு ஒடம்பு சரி இல்ல.

பயங்கரமா பசிக்கும். சாப்ட்டா ஒன்னு வாந்தி வரும், இல்லேன்னா வயித்தாலயா போகும். ஒண்ணுமே பண்ண முடியாம ரொம்ப கஷ்டப்பட்டேன். என் ஃப்ரெண்ட்ஸ்லா ஒரு வாரம் கழிச்சு தான் வந்தாங்க. அந்த… ஒரு வாரம்… அந்த ஒரு வாரம் நான் எதையெல்லாமோ சாப்ட்டு எவ்ளவோ கஷ்டப்பட்டேன்”

அந்த காய்ந்து போன பூச்சிகளை இப்போதும் தன் வாய்க்குள் விழுங்குகிறான் தினேஷ்

திவ்யா அவன் அருகே சென்று, இறுக பிடித்திருந்த காசு பையை வாங்கி தன் மடியில் வைத்து விட்டு, அவனை தன் தோளில் சாய்த்தாள்.

தோளில் சாய்ந்த தினேஷின் கண்ணீர் அவள் தோள்பட்டை எலும்புக்குழியில் நிரம்பி வழிந்து, ஜாக்கெட்டிற்குள் சென்று நெஞ்சை ஈரமாக்கியது

“என்னப்பா… ஒன்னும் இல்ல. நான் கூட இருக்கேன். இப்ப தான் நாம நல்லா இருக்கோம்ல. இனிமே நீ ஒரு வேல கூட பசியோட இருக்கக் கூடாது. நான் இருக்கேன் தினேஷ் உனக்காக”

அவனை தோளோடு அணைத்து, தாடையை பிடித்து தூக்கி, உள்ளங்கையால் அவன் கண்ணீரைத் துடைத்தாள்.

“என்னமோ தெரியல திவ்யா. இன்னைக்கு காலைல அந்த அம்மாவ பாத்ததுல இருந்து ஒரு மாதிரியா இருக்கு? காலைல நீ வாஷ்ரூம் போய்ட்ட, அப்போ பக்கத்துல ஒரு கடைல ஒரு அம்மா எதோ வாங்க வந்தாங்க.”

‘ம் சரிப்பா’ என்று சொல்ல முடியாமல் தொண்டை அடைத்து, அவனே தொடரட்டும் என அமைதியாக காத்திருந்தாள்.

“கொழந்த பொறக்குறதுக்கான பரிகார பொருள் வாங்க வந்திருக்காங்க. கடக்காரன்கிட்ட கேக்கும் போது அழுக ஆரம்பிச்சவங்க தான், அழுது அழுது அவங்களுக்கு கண்ணீரே வத்திப் போயிருக்கு திவ்யா.

கண்ல ஒரு சொட்டு கண்ணீர் வரல. அவங்க கீழ் உதடும் தாடையும் அப்டி துடிக்குது. குளிர் நடுக்கம் இல்ல அது. தேம்பி தேம்பி அழுதாங்க கொழந்த மாதிரி. சீக்கிரம் வாங்கிட்டு வாடி பரிகாரம் பண்ணனும்னு அந்த அம்மாவோட மாமியார் பின்னாடி இருந்து கத்துனாங்க.

 அங்க சுத்தி இருக்குற எல்லாரும் கேட்டு அந்த அம்மாவ பாத்தாங்க. இவங்க கூனி குறுகிப் போய் நின்னாங்க. அழுகைய அடக்க பாத்தாங்க, ஆனா அவங்கனால முடியல. ஆட்டோமேட்டிக்கா அவங்க கை வயித்த தொடுது. சாதாரண வலி இல்ல திவ்யா அது. நான்… நான் பெங்களூர்ல ப… பசி… பசில துடிச்சுருக்கேன். எதோ சாப்ட்டா என் பசி ஆறிடும். அந்த அம்மாவோட துடிப்பு  எப்படி ஆறும்?” அவன் கண்களில் இருந்து கண்ணீர் ஊற்றியது.

தினேஷின் கண்ணீரால் ஈரமான திவ்யாவின் நெஞ்சு, மலை உச்சியின் குளிர் காற்றால் உறைந்தது.

மீண்டும் அவன் கண்ணீரை துடைத்து, “சரிப்பா. நீங்க அழாதீங்க? அவங்கள அதுக்கு அப்புறம் பாத்தீங்களா?”

“இல்ல, பாக்கல. அந்த கடக்காரன் என்ன பண்ணானு தெரியுமா?”

அவன் கன்னத்தை தடவி, “சொல்லுப்பா”

“சொன்னா நம்பமாட்ட. ஒரு டாக்டரோட கார்டு குடுத்தான். உண்ம, இந்த கோவில்ல டெய்லி ஆயிரம் பேருக்கு மேல வந்துட்டு போறாங்க. இங்க கட வச்சுருக்குறவன், அதுவும் இந்த மாதிரி பூஜை சாமான், பரிகாரத்துக்குன்னே கட வச்சுருக்குறவன், அவனே டாக்டர் கார்டு குடுக்குறான். இதெல்லாம் என் கண்ணு முன்னாடி நடக்குது திவ்யா”

கன்னத்தை தடவிய கை உதட்டை மூட துடித்தது

“சரிப்பா… இதுனால நீங்க ஏன் டிஸ்டர்ப் ஆறீங்க? அதான் அந்த கடக்காரன் டாக்டர்கிட்ட போக சொல்லிருக்கான்ல. அவங்களுக்கு எல்லாம் சரி ஆய்டும். அந்த லேடி யாருன்னு உங்களுக்கு தெரியுமா? பேர் கூட தெரியாது. அவங்களுக்காக நீங்க ஏன் இவ்ளோ ஃபீல் பண்றீங்க?

 நாம எதுக்கு இங்க வந்துருக்கோம்? நம்ம பாப்பா சத்தே இல்லாம வெயிட் கம்மியா இருக்கா. அதுக்கு தான், நேர்த்திக்கடன் செலுத்த வந்துருக்கோம். அதை விட்டுட்டு யாரோ ஒரு லேடிக்காக உண்டியல்ல காசு போடாம வந்துடீங்களே”

“அத பாத்ததுல இருந்து என் மனசே சரியில்ல, என்னமோ இந்த காச உண்டியல்ல போட வேண்டாம்னு தோணுச்சு”

“அதான் கேக்குறேன், அதுக்கும் இதுக்கும் என்னங்க சம்மந்தம். யாரோ ஒரு லேடி கொழந்த இல்லாம அழுததை பாத்து நம்ம பாப்பாக்கு நேத்திக்கடன் பண்ணாம வந்துடீங்க?”

“அவங்களுக்கு கொழந்த இல்லனு தெரிஞ்சும், நான் பேசும் போது, அவங்கள அம்மானு தான் சொன்னேன். ஆனா நீ ஒரு லேடினு சொல்ற. நம்ம பாப்பாக்கான தீர்வு இங்க இல்ல திவ்யா”

“யாருக்கோ நடந்த ஒரு சின்ன விஷயம் அதுக்காக இப்டி ஒரு முடிவா? அதுவும் இன்னைக்கே, இப்போவே”

“ஒரு பிச்சைக்காரன் பாக்கவே ரொம்ப பரிதாபமா இருக்கான். அவன் உன்கிட்ட பிச்சை கேக்குறான், பாவமா இருக்குனு அப்பவே பிச்சை போடுறது இல்லையா?  இத பாத்ததுமே காசு போட வேணாம்னு தோணுச்சு. துலாபாரம்ல முடிவே பண்ணிட்டேன். வலில பிறக்குற முடிவு உடனடியா தான் இருக்கும், அதுக்கான தீர்வ அடையறதுக்கு தான் ரொம்ப நாள் ஆகும்”

“இப்போ என்ன பண்ண போறீங்க?”

சற்று பெருமூச்சுடன்,”இதுக்கு நிரந்தரமான ஒரு தீர்வு காண போறேன்”

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

(முற்றும்)

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ சிறுகதைப் போட்டியில் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இணைப்பு இதோ – https://sahanamag.com/short-story-contest-2021-entries/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

One Comment

  1. ம்ம்ம்ம் புரியலை. கதாநாயகன் குழப்பமா இருக்கிறாப்போல் நம்மையும் குழப்பி விட்டாரே!

பரிகாரம் (சிறுகதை) -✍ B.ராஜா, சென்னை

செல்வபிரபுவும்  ஐந்து ரூபாயும் (சிறுகதை) -✍ ரமா கவிதா, சென்னை