இந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்
சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 76)
திருமண வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும், அந்தத் திருமண மண்டபத்தில் இருந்து புறப்பட்ட பொற்செல்வி (சென்னை ‘பொற்செல்வி டவர்’ஸின் உரிமையாளர் மோகனரங்கத்தின் ஒரே மகள்), தன் தோழிகளுக்கு குட்நைட் சொல்லி விட்டுக் காரில் ஏறினாள்
அதை உயிர்ப்பித்த போது, அந்தக் கப்பல் கார் சீக்கிரமே தன்னை ஒரு பெரிய இக்கட்டில் மாட்டி விடப் போகிறது என்பதை அவள் அறியவில்லை
சரியாகக் குறளகம் தாண்டி சிறிது தூரம் சென்றதும் வண்டி ஒரு குலுங்கு குலுங்கி, பின் நின்று விட்டது. அப்போது தான் கவனித்தாள், வண்டியில் பெட்ரோல் சிவப்பு முள்ளைக் காட்டியதை.
விழாவிற்குப் போகும் போதே பெட்ரோல் போட வேண்டும் என்று நினைத்திருந்தாள். ஆனால், அந்தக் கடன்காரி ஷீலா செல்லில் அழைத்துப் பேச ஆரம்பித்தவள், மண்டபம் வரும் வரை பேச்சை நிறுத்தவேயில்லை.
மணி இரவு ஒன்பதரை ஆகி விட்டது. பக்கத்தில் பெட்ரோல் பங்க் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. காரில் இருந்து இறங்கிய பொற்செல்வி, தன் செல்போனை எடுத்து முதலில் தந்தையையும், பின்பு தாயையும் அழைத்தாள்
சொல்லி வைத்தது போல இரண்டுமே எங்கேஜ்டாக இருந்தன. ‘வயசான காலத்தில இவங்களுக்கு என்ன இப்படி ஒரு பேச்சு’ என்று பொருமினாள்.
ஆள் நடமாட்டம் குறைந்த அந்த நிழலான இடத்தில் மறைந்திருந்த ஆபத்து அவளுக்குத் தெரியவில்லை.
பிளாட்பாரத்தில், தெருவிளக்கின் ஒளிபடாத சற்று இருளான இடத்தில் உட்கார்ந்து, நாளைக்கு எங்க போய்த் திருடலாம் என்று பேசிக் கொண்டிருந்த அந்தப் பகுதியைச் சேர்ந்த பெண்கள் நால்வர், திடீரென்று ஒரு கார் ரோட்டில் வந்து நிற்பதையும், அதில் இருந்து ஓர் அழகான இளம்பெண் இறங்கி போன் பேசுவதையும் பார்த்ததும், அவளைக் கவனிக்க ஆரம்பித்தார்கள்
அதன் தலைவியாக இருந்த சொர்ணா தாழ்ந்த குரலில், “ஏய், இங்க பாருங்கடி, ஒரு பொண்ணு கார் நின்னு போனதால சரியா நம்மட்ட வந்து மாட்டியிருக்கா. அவ கழுத்துல இருக்குற நெக்லஸ் மட்டுமே பல இலட்சம் பெறும்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவ்வழியே சென்ற மற்றொரு கார் அப்பெண்ணின் அருகே ‘கிறீச்’சென்று பிரேக் போட்டு நின்றது.
அதிலிருந்து இறங்கிய வாலிபன் ஒருவன், “என்ன மிஸ், வண்டி ப்ராப்ளமா?” என்றான்.
அவனிடமிருந்து வீசிய மது வாடையையும், தன் மேனியில் அலை பாயும் அவன் கண்களையும் பார்த்த அவள், “மைன்ட் யுவர் பிசினஸ்” என்றாள் கோபமாக
சொர்ணா, ‘என்னடா இது ஊடால வேறொருத்தன் வர்றானே’ என்று சற்றுத் தயங்க, அப்போது அவன் திடீரென அந்தப் பெண்ணின் கையைப் பிடித்து அவனது காரை நோக்கி அவளை இழுக்கத் தொடங்கவே, அவளையறியாமலே “டேய் சோமாறி,” என்ற கூவியவாறே அவனை நோக்கி ஓடினாள்
மற்ற பெண்கள் பின் தொடர, பிளாட்பார இருளில் இருந்து இப்படி ஒரு லோக்கல் பெண்கள் கூட்டம் திடீரென வருமென எதிர்பாராத அந்த இளைஞன், பொற்செல்வியை விட்டுவிட்டு, தன் காருக்குள் சட்டென்று ஏறி அமர்ந்து சீறிக் கொண்டு புறப்பட்டு விட்டான்.
அந்தப் பெண்களை அப்போது தான் கவனித்த பொற்செல்வி, “நல்லவேளை, சரியான நேரத்துல நீங்கள் மட்டும் வராமல் இருந்திருந்தா இந்நேரம் அவன்கிட்ட நான் மாட்டியிருப்பேன்” என்றாள் கண்களில் நீர் மல்க
‘சரி தான், சட்டியில் இருந்து தப்பி அடுப்புக்குள்ள விழுந்த மாதிரி, அவன்ட்ட இருந்து தப்பி எங்ககிட்ட மாட்டிக்கிட்ட’ என்று மனதில் நினைத்தவாறே, சொர்ணா அவளை நெருங்க, அந்நேரம் பார்த்துத் தானா அந்த இரவு நேரக் காவல் ரோந்து வாகனம் வர வேண்டும்.
இவர்கள் அருகே வந்து நின்ற அந்த வாகனத்தில் இருந்து ஒரு நடுத்தர வயதுக் காவல் துணை ஆய்வாளர் இறங்கி, “இங்க என்ன பிரச்னை?” என்றவாறே வந்தவர், அந்த இளம்பெண்ணிடம் “எனி ப்ராப்ளம் மேடம்” என்று ஆங்கிலத்தில் வினவினார்.
“நோ ப்ராப்ளம் சார்…” என்று ஆரம்பித்து அவள் நீளமாக ஆங்கிலத்தில் பதில் சொல்ல, ‘அப்படியே ஓடிவிடலாமா?’ என்று ஒருநொடி யோசித்த சொர்ணா, அவளின் ஆங்கிலப் பேச்சுப் புரியவில்லை என்றாலும், அவள் தங்களைப் பற்றி ஏதோ நல்ல விதமாகத் தான் இன்ஸ்பெக்டரிடம் சொல்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டு, அப்பாவி போல நின்றாள்
அடுத்து, அந்த இளம்பெண்ணின் கார் சாவியை அவளிடமிருந்து வாங்கி, ஒரு காவலரிடம் கொடுத்த அதிகாரி, அவளைத் தன் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டார்.
அந்த இளம்பெண் புறப்படும் போது, அவர்களிடம் தன் கைப்பையில் இருந்து ஒரு இரண்டாயிரம் ரூபாய் தாளை எடுத்துக் கொடுத்து விட்டு ‘ரொம்பத் தேங்க்ஸ்மா, உங்க உதவியை எப்போதும் நான் மறக்க மாட்டேன்’ என்று சொல்லியவாறே விடைபெற்றாள்
ரோந்து வாகனம் போன பின்பு திரும்பிய காவலர், “என்னம்மா, யானையைப் பிடிக்கலாம்னு பாத்தது பூனையாப் போச்சா?” என்று கேலியாகச் சிரித்தவாறே கேட்டார்.
அந்த நாலு பெண்களின் முகத்திலும் இருந்த ஏமாற்றம் அந்த லேசான இருளிலும் அவரது அனுபவக் கண்களுக்கு அப்பட்டமாகத் தெரிந்தது.
சென்னையின் மிகப் பிரமாண்டமான ‘பொற்செல்வி டவர்ஸ்’ அந்த மாலை வேளையில் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.
ஆறு மாடிக் கட்டிடத்தில் தரைத்தளத்தில் ஜவுளிக் கடையையும், முதல் தளத்தில் நகைக் கடையையும் அமைத்திருந்தார்கள். இரண்டுமே கடை என்பதை விட, கடல் என்று சொல்வதற்கே பொருத்தமாக பரந்து விரிந்து இருந்ததுடன், எண்ணற்ற ரகங்கள், டிசைன்கள் என்று குவித்து வைத்திருந்தார்கள்.
சிறப்புத் தள்ளுபடி அளித்தும், புத்தம் புதிய விளம்பரங்கள் முன்னணி நடிகையரை வைத்துப் படமெடுத்து, அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் வெளியிட்டும், இலவசப் பரிசுகள் அறிவித்தும், அந்தக் கடல்களின் உரிமையாளர் மோகனரங்கம் பயன்படுத்திய வியாபார உத்திகள் ஒவ்வொன்றும் அங்கே வெற்றிகரமாக அறுவடையைக் குவித்துக் கொண்டிருந்தன.
அதே சென்னையில் தான் ஒருபுறத்தில் குடிசைகளும், அதில் ஏழைகளும் இருக்கிறார்கள் என்று யாராவது சத்தியம் செய்து சொன்னால் கூட யாரும் நம்ப மாட்டார்கள்.
அந்த அளவிற்கு அங்கு வியாபாரம் அமோகமாக நடந்து கொண்டிருந்தது. பஞ்சுமிட்டாய் வண்ணத்தில் உள்ள இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அங்கே வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம் செலுத்துமிடத்திற்கு இறக்கை இல்லாமலே பறந்து கொண்டிருந்தன.
கடன் அட்டைகள் ‘சரக்’ ‘சரக்’ என்று கையடக்க எந்திரங்களில் தேய்க்கப்பட்டு, பொருள் வாங்குவோரின் மனம் நோகாமல் லட்சக்கணக்கில் பணம் இடம் மாறிக் கொண்டிருந்தது
அந்தக் கடைகளின் பாதுகாவலர்கள் பிரிவின் துடிப்பான தலைமை அதிகாரி – சூர்யா
ஐந்தாவது மாடியின் பெரும் பகுதியை அடைத்துக் கொண்டிருந்த கட்டுப்பாட்டு அறையில் அமர்ந்து கொண்டு, தனது அடர்நீல கோட் பையிலிருந்து கைக்குட்டையை எடுத்து, அந்த குளிரூட்டப்பட்ட அறையிலும் லேசாக வியர்த்திருந்த தனது நெற்றியை நாசூக்காகத் துடைத்துக் கொண்டே, தனக்கு முன்பு விரிந்திருந்த கண்காணிப்பு படக்கருவிகளின் (CCTVகாமிராக்) மொத்தத் தொகுப்பையும் தன் கூரிய கண்களால் மேய்ந்து கொண்டேயிருந்தான்.
திருவிழா நேரம் என்பதால் அதிகப்படியான கூட்டம், அதிகப்படியான வியாபாரம், அதிகப்படியான பிரச்னைகள் என்று ஒரே பரபரப்பாக இருந்தது.
தனது தலையில் மாட்டியிருந்த ஹெட்செட்டின் மைக்கில் அவ்வப்போது ஒவ்வொரு மாடியிலும் இருந்த சிறப்புக் காவலர்களுக்குக் கட்டளைகள் பிறப்பித்துக் கொண்டிருந்தான்
அப்போது, நல்ல விலையுயர்ந்த சேலை, ரவிக்கை அணிந்து கைப் பைகளுடன் சொர்ணாவும் அவளுடன் வந்த ஐவரும், பொற்செல்வி டவர்ஸின் ஜவுளிப் பிரிவுக்குள் நுழைந்தனர்.
அவர்கள் அறுவரையும் பார்ப்பவர்கள் திருட வந்தவர்கள் என்று எண்ணவே முடியாது. அவ்வளவு அழகாக உடுத்தி, நேர்த்தியாகத் தலையலங்காரம் செய்து, முகத்தில் கொஞ்சம் கூடப் பதட்டமின்றி, சிரித்துப் பேசிக் கொண்டே உள்ளே நுழைந்தார்கள்.
ஏதோ அலுவலகத்தில் பணிபுரியும் பெண்கள் போலத் தோற்றமளித்த அவர்கள் எல்லோருமே சொர்ணாவிடம் சிறப்புப் பயிற்சி எடுத்தவர்கள். இருப்பதிலேயே சற்றுக் குள்ளமாக இருந்த ரமணி என்பவள் மட்டும், அந்தக் குழுவில் புதிதாக வந்து சேர்ந்தவள்
“நீ எதுவுமே செய்ய வேண்டாம், நாங்கள் என்னென்ன செய்கிறோம் என்பதை மட்டும் கவனமாகப் பார்த்துக் கொள்” என்று சொல்லியே அழைத்து வரப்பட்டவள்
“என்ன சொர்ணாக்கா, எந்தக் கௌண்டர் பக்கம் போவோம்?” என்றாள் அதில் ஒருத்தி.
அவளது கேள்விக்கு தேவையில்லாமல் முகத்தில் ஒரு புன்சிரிப்பைக் காட்டிய சொர்ணா, இருப்பதிலேயே கூட்டம் அதிகமாக உள்ள ஒரு கௌண்டரை நோக்கி நடந்தவாறே, அங்கு சற்றுத் தள்ளி மேலே இருந்த கண்காணிப்புக் கருவியின் கோணத்தையும் பார்த்து வைத்துக் கொண்டாள்.
மற்றவர்கள் அவளைப் பின்தொடர்ந்தவாறே தங்களுக்குள் ஏதோ சிரித்துப் பேசிக் கொண்டார்கள்
அந்தக் கூட்டமான இடத்தில், கண்காணிப்புக் கருவியின் ‘ப்ளைண்ட் ஸ்பாட்’ எனப்படும் சிறிய இடத்தில் சரியாகப் போய் நின்று கொண்டு, “லேட்டஸ்ட் மாடல் ஸாரீஸ் எடுத்துப் போடும்மா” என்றாள் சொர்ணா.
“என்ன ரேஞ்சில் பாக்கறீங்க மேடம்” என்று அந்தப் பெண் கேட்க
“ஆயிரம், ஆயிரத்து ஐநூறு ரேஞ்சில காட்டுங்க” என்றாள்
அந்த சொற்களை அவள் சொல்லி முடித்ததும், அவளுடன் வந்தவர்களில் நல்ல உயரமாக இருந்த இரண்டு பெண்கள் அவளின் இருபுறமும் அவளை ஒட்டி நின்று கொண்டனர்.
சொர்ணாவின் பின்னால் இரண்டு வளர்த்தியானவர்களும், அவர்களின் பின்னால் ரமணியும் நின்று கொண்டனர்.
ரமணியின் மனதில் வியப்பும், லேசான படபடப்பும் ஏற்பட்டது. மற்ற நால்வரும் எப்படி சொல்லிக் கொடுத்தபடி சரியாக இடம் பார்த்து நிற்கின்றார்கள் என்பதைப் பார்க்கும்போது, அவர்களின் இயல்பான பேச்சும், சிரிப்பும் தனக்குக் கைவர இன்னும் எவ்வளவு நாளாகுமோ என்றதொரு கவலை அவளைத் தொற்றிக் கொண்டது.
இந்தப் பாழாய்ப் போன காமிரா வேறு தலைக்கு மேலே இருக்கிறது. அதப் பத்தி அக்கா ஏற்கனவே சொல்லியிருக்கிறாள் என்றாலும், அது தலைக்கு மேலே இருப்பது ரமணிக்கு சற்று உறுத்தலாகவே இருந்தது
பல சேலைகளை அவர்கள் பிரித்துப் பிரித்துப் பார்த்துக் கொண்டிருக்க, ஒரு சிக்கலான நொடியில் ரமணிக்கு முன்னால் நின்று கொண்டிருந்தவள் சட்டென்று மேஜையில் கிடந்த பிரிக்காத சேலைகளுள் ஒன்றை உருவி எடுத்து, அதை அப்படியே குனிந்து தன் புடவையின் கால் பகுதி வழியே நுழைத்து, இடுப்புக்கு உயர்த்தி அங்கு சொருகிக் கொண்டாள்.
அடுத்த வினாடி, ஒன்றுமே தெரியாதது போல முகத்தை வைத்துக் கொண்டு மற்ற சேலைகளை வேடிக்கை பார்த்தாள்.
ரமணிக்குத் தான் படபடப்பாக இருந்தது. அவள் கண்கள் அவளையறியாமல் மேலே இருந்த காமிராவைப் பார்த்து மீண்டன. அடுத்து சிறிது நேரத்தில் அவளுக்கு முன்னால் நின்ற மற்றொருத்தியும் அதே போல, தானும் ஒரு சேலையை உள்ளே சொருகி விட்டாள்
கட்டுப்பாட்டு அறையில் இருந்து தன் முன் தெரிந்த காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்த சூர்யா, தரைத்தளத்தில், கௌண்டர் எண் ஏழில் ஏதோ வித்தியாசமான அசைவுகளைக் கவனித்தான்.
குறிப்பாக, மஞ்சள் சேலை கட்டி சற்றுக் குள்ளமாக இருந்த ஒரு பெண், மீண்டும் மீண்டும் கேமரா இருந்த பக்கமே பதட்டத்துடன் பார்ப்பதை கவனித்தான் சூர்யா
உடனே தரைத்தளத்தில் இருந்த பாதுகாவலரை அழைத்து, ஏழாம் எண் கௌண்டரில் மஞ்சள் சேலை கட்டிய சற்றுக் குள்ளமான பெண்ணைக் கண்காணிக்கச் சொல்லிவிட்டு, மின்தூக்கி வழியே வேகமாகக் கீழிறங்கினான்.
அதற்குள் அங்கிருந்து புறப்பட்ட ரமணியையும், அவளுடன் இருந்த மற்றவர்களையும் அந்தக் காவலர் நிறுத்தி விசாரிக்க, சூர்யா அங்கிருந்த இரண்டு பெண் பாதுகாவலர்களை அழைத்து, அவர்களைத் தரைத்தளத்தில் இருந்த தனி விசாரணை அறைக்கு அழைத்து வரச் செய்தான். இவையெல்லாமே மிகச் சில விநாடிகளில், ஓசையில்லாமல் நடந்து விட்டன.
தனியறை வரும் வரை அமைதியாக வந்த அந்தப் பெண் பாதுகாவலர்கள், அறைக்குள் வந்ததும் அவர்களைச் சோதனை போடத் துவங்கினர். சற்று நேரத்திலேயே உள்ளே சொருகப்பட்டிருந்த இரண்டு சேலைகளும் வெளியே வந்துவிட்டன.
அதன் பின் சொர்ணாவுக்கும், மற்றவர்களுக்கும் சரமாரியாக அடிகள் விழுந்தன. சூர்யா அவர்கள் அடிப்பதை நிறுத்தச் சொல்லிவிட்டு, காவல்துறைக்கு போன் செய்தான்.
அந்த அறையின் உள்ளே, அடி வாங்கியதால் தங்கள் அலங்காரம் எல்லாம் கலைந்து, தலையைக் கவிழ்ந்து தரையில் அமர்ந்திருந்தார்கள் சொர்ணாவும் மற்றவர்களும்.
சற்றுத் தள்ளி அந்தப் பெண் பாதுகாவலர்கள் இருந்ததால் அவர்கள் எதுவுமே பேசிக்கொள்ளவில்லை. சொர்ணா மட்டும் அவ்வப்போது தலையை நிமிர்ந்து ரமணியை முறைத்துப் பார்த்தாள்.
இவளுக்குப் பயிற்சி அளிக்கக் கூட்டி வந்தது தப்பாகி விட்டது. எவ்வளவு அனுபவம் இருந்தும் என்ன, இந்தக் கத்துக்குட்டியால் மாட்டிக் கொண்டோமே என்று தனக்குள் நொந்து கொண்டாள். அவளும் மற்றவர்களும் வாயடைத்து இருக்க, ரமணி மட்டும் இடைவிடாமல் அழுது கொண்டே இருந்தாள்.
சற்று நேரத்தில் காவல்துறையைச் சேர்ந்த இரு பெண் காவலர்கள் மட்டும் உள்ளே வர, அவர்களுடன் கடையின் பெண் பாதுகாவலர்கள் இருவரும் இவர்களை வெளியே கூட்டி வந்து காவல்துறை வாகனத்தில் ஏற்றினர்.
அங்கே உதவி ஆய்வாளரிடம் பேசிக் கொண்டிருந்த சூர்யா, அவரிடம் கைகுலுக்கி விட்டுக் கடைக்குள் சென்றான்.
அந்தக் காவல்துறை வாகனம் புறப்படும் முன்பாக, அங்கு வந்து நின்ற புத்தம் புது ஸ்கார்ப்பியோ காரில் தன் தோழிகளுடன் அமர்ந்திருந்த பொற்செல்வி, கடைவாசலில் இருந்து சில பெண்களைக் காவல்துறை வாகனத்தில் ஏற்றிச் செல்வதைக் கண்டவுடன், ஒரு நொடி யோசித்து உடனே பிரகாசமாகி, “ப்ரியா, நம்ம ப்ராஜக்ட் ஒர்க்கிற்கு யாரைப் பேட்டி காணலாம்னு பேசிக் கொண்டிருந்தோம்ல, ஆள் கிடைச்சாச்சு” என்று சொல்லியவாறே, அந்த வாகனத்தின் பின்னே தன் காரைச் செலுத்தினாள்.
“என்னடி சொல்ற, யாருப்பா ஆளு?” என்று அவர்கள் கேட்க
“அது சஸ்பென்ஸ், கொஞ்ச நேரம் பேசாமல் வாங்க” என்றவாறு காரை விரட்டினாள்.
காவல் நிலையத்தை அடைந்ததும் சொர்ணாவையும், மற்றவர்களையும் பெண் காவலர்கள் வண்டியில் இருந்து இறக்கி, உள்ளே அழைத்துச் செல்ல, காவல் நிலையத்துள் தன் காரைச் செலுத்தி, நிறுத்திவிட்டு, தன் தோழிகள் புடைசூழ, பொற்செல்வியும் உள்ளே சென்றாள்.
அவர்களின் தோரணையைப் பார்த்த காவலர்கள் அவர்களை உள்ளே அனுமதிக்க, நேரே ஆய்வாளரின் மேஜைக்கு எதிரே இருந்த நாற்காலியில் சென்று அமர்ந்த பொற்செல்வி, “வணக்கம் சார்” என்றாள்.
நிமிர்ந்து அவர்களைப் பார்த்த ஆய்வாளர், “வணக்கம். சொல்லுங்க” என்றார்.
“சார், நான் பொற்செல்வி. பொற்செல்வி டவர்ஸ் மோகனரங்கத்தின் மகள். நீங்க இப்போது சில பெண்களை எங்கள் கடையிலிருந்து கூட்டி வந்தீர்கள் அல்லவா, அவர்களிடம் நாங்கள் கொஞ்சம் பேச வேண்டும்” என்றாள்.
“என்ன விசயமாக?”
“வேற ஒண்ணுமில்ல சார். எங்க காலேஜ் ப்ராஜக்ட்காக சில வித்தியாசமானவர்களைப் பேட்டி எடுக்கணும்னு நினைச்சிருந்தோம். நீங்கள் இவர்களை அழைத்துப் போவதைப் பார்த்ததும் அவர்களையே பேட்டி எடுக்கலாமே என்ற எண்ணத்தோடு பின்னாலேயே வந்து விட்டோம்” என்றாள்.
இலேசாகச் சிரித்துக் கொண்ட ஆய்வாளர், “உங்கள் அப்பாவை எனக்கு நல்லாத் தெரியும். இம்மாதிரி விசயங்களை எல்லாம் அவர் என்கரேஜ் செய்ய மாட்டாரே” என்றார்.
பொற்செல்வி தானும் சிரித்தவாறே, “சார், எனக்கும் எங்க அப்பாவை நல்லாத் தெரியும். அதனால் தான் அவரிடம் எதுவும் சொல்லாமல் நேரே உங்களிடம் வந்துவிட்டேன்” என்றாள்.
அவர்கள் அனைவருக்கும் குளிர்பானம் வரவழைத்து அளித்த பின்பு, “சரிம்மா, நீங்கள் அவர்களிடம் பேட்டி காணலாம். சீக்கிரமா முடித்து விடுங்கள். ஓகேயா..?” என்றார்.
“ரொம்ப நன்றி சார்” என்றார்கள் எல்லோரும் ஒரே குரலில்.
ஆய்வாளர் சொன்னதும், சொர்ணாவும் மற்றவர்களும் லாக் அப்பில் இருந்து அழைத்து வரப்பட்டு, பொற்செல்விக்கு முன்பு தரையில் அமர வைக்கப்பட்டார்கள்.
அவர்கள் சற்று விரோதமாக, பொற்செல்வியையும், அவள் தோழிகளையும் லேசாக நிமிர்ந்து பார்க்க, பொற்செல்வி அவர்களிடம், “இங்க பாருங்க, நாங்க உங்ககிட்ட சில கேள்விகள் கேட்போம், அதுக்கு உண்மையான பதிலச் சொன்னாப் போதும். இது எங்க கல்லூரி ப்ராஜக்ட்க்காகத் தான். நீங்க பயப்படுவதற்கு எதுவுமில்ல” என்றாள்.
அவள் கேள்வியைக் கேட்கும் முன்பே பொற்செல்வியைச் சற்றுக் கூர்ந்து பார்த்த சொர்ணா, சற்று பரபரப்புடன், “ஏம்மா, கொஞ்ச நாளுக்கு முன்னால, நீங்க எங்க பேட்டை பக்கம், ஒருநா ராத்திரி கார் நின்னு போனதால தனியா நின்னிங்களா?” என்று கேட்டாள்.
இந்தக் கேள்வியை சற்றும் எதிர்பாராத பொற்செல்வி சற்றுக் குழம்பியவாறே, “ஆமா, அது உங்களுக்கு எப்படித்…” என்று ஆரம்பித்தவள், சட்டென்று மலர்ச்சியுடன், “அட, அன்னைக்கு என்ன அந்தப் பொறுக்கிக்கிட்ட இருந்து காப்பாத்துனது நீங்க தான..?” என்று ஆர்வமாகக் கேட்டாள்.
“ஆமாம்மா, தாயி நல்லா இருக்கிங்களா..?” என்றாள் சொர்ணா.
தன் தோழிகளிடம், “கேர்ள்ஸ், நான் அன்னைக்கு சொன்னேனே, யாரோ நாலு பேரு அந்நேரத்துல வந்து என்னக் காப்பத்தலன்னா, ரொம்ப பெரிய ஆபத்துல மாட்டியிருப்பேன்னு… அவங்க இவங்க தான்..” என்றாள் பொற்செல்வி மகிழ்ச்சியாக.
“அப்படியா…” என்று அதிசயித்த அவளது தோழிகள், “ஆமா, இப்ப இந்த மாதிரி சூழ்நிலைல இவங்களப் பாக்குறோமே, என்னடி செய்றது..?” என்று வினவ
“என்ன பெரிய சூழ்நிலை..? அன்னிக்கு நான் இருந்த படபடப்புல இவங்களுக்கு சரியாத் தேங்க் பண்ணக் கூட இல்ல..” என்றவள்
இவற்றையெல்லாம் சற்றுக் குழப்பத்துடன் பார்த்துக் கொண்டிருந்த ஆய்வாளர் பக்கம் திரும்பி, “சார், இவங்க மேல இன்னும் கேஸ் எதுவும் பதிவு செய்திருக்க மாட்டீங்க தானே, இவங்கள மன்னிச்சு என் கூட அனுப்பி வைங்க சார்..ப்ளீஸ்..” என்று கேட்டாள்.
அவர் லேசாகப் புன்னகைத்தவாறே, “கொஞ்சம் இரும்மா” என்றவர், தன் செல்போனை எடுத்து மோகனரங்கத்தின் எண்களை அழுத்தினார். சிறிது நேரம் கழித்து லைனில் வந்தவரிடம், அங்கு நடந்த விசயங்களைச் சொன்னார்.
மறுமுனையில் ஒரு வினாடி யோசித்த மோகனரங்கம், “ஓகே. இன்ஸ்பெக்டர்.. என் மகள் கேட்டது போலச் செய்து விடுங்கள். தேங்க் யூ..” என்று சொல்லி விட்டு வைத்து விட்டார்.
ஆய்வாளர் பொற்செல்வியிடம் திரும்பி, “சரிம்மா, நீங்க இவங்கள அழைச்சுட்டுப் போகலாம்” என்றவர்
சொர்ணாவிடம், “என்ன சொர்ணா, நீ கூட ஏதோ ஒரு நல்ல காரியம் உன்னோட வாழ்க்கைல செஞ்சிருக்க போலத் தெரியுது. பாத்தியா, அதனால நீ இன்னிக்கு ஒரு தெஃப்ட் கேஸில் இருந்தே தப்பிச்சுட்ட. முழுக்க நல்லவளா மாறிட்டா எவ்வளவு நல்லாயிரும்னு பாத்துக்க” என்றார்
அந்தப் பெரிய உணவகத்தில் தன் தோழிகள் மற்றும் சொர்ணா வகையறாவுடன் அமர்ந்து சாப்பிட்டவாறே கேட்டாள் பொற்செல்வி
“சொர்ணாக்கா, சொல்லுங்க, நீங்க ஏன் இப்படித் திருடிப் பிழைக்கிறீங்க..? உங்களப் பத்திச் சொல்லுங்க?”
“அம்மா, நீங்க இவ்வளவு நல்லவங்களா இருக்கீங்க. உங்க கடைல திருட வந்தோம்னு தெரிஞ்சும் எங்கட்ட இவ்வளவு அன்பா பேசுறீங்க. அதனால, உங்கட்ட ஒரு உண்மைய நான் சொல்லீர்றேன் தாயீ… அப்பத் தான் நான் சாப்புடுற இந்த நல்ல சாப்பாடு என் உடம்புல ஒட்டும். அன்னிக்குக் கார் நின்னு நீங்க தனியா நின்னப்ப, இருட்டுல இருந்து உங்களப் பாத்த நாங்க உண்மையிலேயே உங்க கழுத்துல இருந்த நகையத் திருடத்தான் திட்டம் போட்டோம்.
ஆனா, அங்க அப்பத் திடீர்னு கார்ல வந்த பொறுக்கி உங்கள இழுத்துக்கிட்டுப் போகப் பாத்ததும் என்னையறியாம ஒரு வேகத்துல அவன் மேல பாஞ்சு அவன அடிக்கப் போனேன். ஆனா, அவன் ஓடினதுக்கு அப்புறம் கூட, அந்நேரம் பாத்து அங்க ரோந்து வண்டி வரலேன்னா, உங்கட்ட இருந்த நகைய நாங்கள்லாம் சேந்து கொள்ளை யடிச்சிருப்போம்.
எங்களை மன்னிச்சிரும்மா… விவரம் தெரிஞ்ச வயசில இருந்து வறுமைல அடிபட்டு அடிபட்டு, எப்படியாவது உசிரு வாழணும்னு தான் இந்த ஈனத் தொழிலச் செய்றோம்மா. அதனால ஏற்கனவே எங்க மேல திருட்டு முத்திரை விழுந்து போச்சு.. நாங்க திருந்தணும்னு நினைச்சாக் கூட எங்களுக்கு யாராச்சும் வேலை குடுப்பாங்களாம்மா..?” என்றாள் சொர்ணா கலங்கியவாறே.
அவள் சொன்னவற்றைக் கேட்டு சில நொடிகள் திகைத்துப் போன பொற்செல்வி, பிறகு தன்னை சமாளித்துக் கொண்டு, “சொர்ணாக்கா, நீங்க இந்த உண்மைய இப்ப என்னிடம் சொல்லாமக் கூட இருந்திருக்கலாம்; எனக்குத் தெரியாமலே போயிருக்கும். அல்லது அன்னிக்கு என்னைக் கடத்த ஒருத்தன் திடீர்னு வந்து முயற்சி செஞ்ச போது, ‘எதுக்கு வம்புன்னு’ இருட்டுல நின்ன இடத்திலிருந்தே பேசாம வேடிக்கை பாத்துருக்கலாம்.
ஆனா, நீங்க அப்படிலாம் செய்யல. அடிப்படைல நீங்களும் நல்லவங்க தான்; சந்தர்ப்ப சூழ்நிலைனால தான் இந்தத் திருட்டுத் தொழில செய்றிங்கன்னு எனக்குப் புரியறதுக்கு இது போதும். நான் உங்கள நம்புறேன்.
நான் புத்தகத்துல, ‘இந்தச் சமுதாயம் குற்றங்கள உருவாக்குது, சமுதாயத்தால நசுக்கப்பட்டவங்க வேறு வழியில்லாம அந்தக் குற்றங்களச் செய்றாங்க’ அப்படின்னு படிச்சிருக்கேன். அதுக்கு உங்க வாழ்க்கை ஒரு சரியான எடுத்துக்காட்டு.
எனக்கு ஒரு ஆபத்தான நேரத்துல உதவி செஞ்ச உங்களுக்கு உதவ வேண்டியது என்னோட கடமை. நா உங்க சூழ்நிலைய மாத்துறேன்.
என் அப்பா ஒரு அறக்கட்டளை நடத்திக்கிட்டு இருக்காரு. அதுல ஏழ்மைல சிரமப்படுற எத்தனையோ ஏழைக் குழந்தைகளக் காப்பாத்தி, எங்க ஆசிரமத்துல வச்சி, சாப்பாடு, படிப்பு, துணிமணி எல்லாமே தர்றோம்.
அடிப்படைல நல்லவங்களான நீங்க எல்லாருமே இனிமே அங்க வந்து அந்தக் குழந்தைகளுக்கு உதவியா இருங்க.. அது போதும்..உங்களை மாதிரி இருக்குறவங்க எல்லோரையும் ஒட்டு மொத்தமா எங்களால மாத்த முடியலை என்றாலும், கொஞ்சம் கொஞ்சமாக இந்த நிலமைய மாத்துவோம். ஒரு நீண்ட பயணத்துல எடுத்து வைக்குற முதல் அடியா இது இருக்கட்டுமே” என்றாள்.
பொற்செல்வியின் நல்ல மனதைப் பாராட்டுவதைப் போல, அந்தக் கோடையிலும் வானம் லேசாக இருண்டு மழை பெய்யத் தொடங்கியது.
(முற்றும்)
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
Basically everyone is good , is true . If given chance , they will change to be a good person .
அருமையான பதிவு. வாழ்த்துக்கள். மேலும் தங்கள் பணி சிறக்க…,
துரை தனபாலனின் ‘ கோடைமழை’ சிறுகதை அருமை. நேர்மறையான சிந்தனையை ஊக்குவிக்கும் சிறுகதை. சமுதாயத்தில் உள்ள குற்றங்களின் மூலம் நாடி, குற்றங்களில் ஈடுபடுபவர்களை நல்வழிப்படுத்த முயலும் முயற்சிகளுக்கு ஆதரவு தரும் சிறுகதை.
இத்தகைய கதைகள் இன்று நம் சமுதாயத்திற்கு மிகவும் தேவை.
Super.Arumai Kodai Mazhai continue ah poliattum.The evil will be changed by the drops of the kodai mazhai.Congratulations…
அருமையான பதிவு
காலத்தால் செய்த உதவி… நேரத்தில் காத்தது… மிக நேர்மறை முடிவு. வாழ்த்துகள்!