இந்தத் தொடரின் மற்ற அத்தியாயங்களை வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்
இந்த நான்கு நாட்களும் முகமறிந்து எதிர்த்துப் பேச நா எழவில்லை அன்னம்மாவிற்கு. தங்கள் குடும்பத்தைத் தாங்கிப் பிடித்த மனிதர், இன்று பிள்ளைகள் படித்து வேலையில் இருப்பதற்கு உதவியவர் , பிழைப்பில்லாமல் இருந்த கணவருக்கு செக்யூரிட்டி வேலை வாங்கித் தந்தவர், ஊரும்,உறவும் கொண்டாடும் நல்ல மனிதர் எப்படி பெண்பித்தனாக மாறினார், கணவனே உலகம் என்று இருக்கும் கோகிலாவிற்கு துரோகம் செய்ய எப்படி முடிந்தது? என்று குமைந்து கொண்டிருந்தாள்.
அறையிலிருந்துவரும் சிணுங்கல்களைக் கேட்கும் போது இந்த நம்பிக்கைத் துரோகிகளுக்கு சாப்பாட்டில் விஷம் வைத்துக் கொன்று விட்டு ஜெயிலுக்குப் போய் விடலாம் என்றும் நினைத்தாள். பின் கோகிலாவின் வாழ்க்கையைத் தானே பாழடிக்கக் கூடாது என்று பொறுத்திருந்தாள்.
விவாதம் இல்லாத இல்லறம் ஏது? இவர்களுக்குள் சின்னச்சின்ன சண்டைகள் வருவதுண்டு உடனே சமாதானம் ஆகிவிடுவார்கள். இதுவரையில் கைநீட்டி மனைவியை அடித்ததில்லை, கண்டபடி பேசியதும் இல்லை, இவர்களைப் பொருத்தமான ஜோடி என்று எல்லோரும் பாராட்டும்படி வாழ்கிறார்கள்.
எப்போது ஒருமனிதன் தவறு என்று தெரிந்தும் அதைச் செய்கிறானோ அப்போதே அவனிடமிருந்து நல்லகுணம் சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறுகிறது.
முனிவர் ஒருவர் ஒருமுறை நதிக்கரையில் தவம் செய்து எழுந்தபோது வேடன் அம்பு பட்டுப் பெண்பன்றி இறந்துபோகிறது.அதன் குட்டிகள் ஐந்து தாயைச் சுற்றி சற்றி வந்து பசியில் தீனமாக முனகின. அதைப் பார்த்து இரக்கப்பட்ட முனிவர் மகனிடம் ,’நான் இந்தக் குட்டிகளுக்காகப் பன்றியாகிறேன்.சரியாக ஒருவருடம் கழித்து வந்து என்மீது அம்பெய்து கொன்று விடு’ என்று இறந்த பெண்பன்றியின் உடலில் தவ ஆற்றலால் புகுகிறார்.
குட்டிகள் சந்தோஷத்தில் துள்ளி விளையாடுகின்றன. ஒரு வருடம் பொறுத்து மகன் முனிவர் சொன்னபடி வந்து பன்றியாக இருந்த தந்தையின் மீது அம்பு எய்ய முற்படும் போது பன்றியின் உடலில் இருந்த மகா முனிவர்’, “மகனே, பொறு ,நான் மறுபடியும் துறவியாக மாற விருமபவில்லை,”
“ஏன் சேற்றில் புரளும் இந்த வாழ்க்கைப் பிடித்திருக்கிறதா”
“ஆமாம் மகனே, மிகவும் விரும்புகிறேன், என்னை விட்டுவிடு” என்றாராம், அப்படிதான் கோபாலனும் ஆனார்.
அன்று திடீரெனக் கோகிலா வந்ததும், நடந்ததும் ஒருவகையில் நல்லதுதான், இனி இவளோடு குதூகலமாக வாழலாம் என்று நினைத்தார். வீட்டிலிருந்து தனது காரை எடுத்துக் கொண்டு நீலு என்னும் நீலிமா முன் இருக்கையில் அமர்ந்ததும், “எங்கே போகலாம் சொல்லு”
“மொதல்ல சாப்பிடணும்” என்றாள். பெரிய உணவகம் ஒன்றின் ஏ.சி அறையில் உணவருந்திவிட்டு கொடைக்கானல் புறப்பட்டனர்.
அங்கு நான்கு நாட்கள் தங்கியிருந்தபோது ‘திண்டுக்கல்’ மாற்றல் வந்தது.
அவளோடு சென்று அரசு தந்திருந்த இல்லத்தில் தங்கினார். காரை ஒரு டிரைவர் போட்டு வீட்டிற்கு அனுப்பிவிட்டார். தனக்கு வேண்டியவற்றை ஆட்களை அனுப்பி வீட்டிலிருந்து வாங்கிக் கொண்டார். இதெல்லாம் ஒரு வாரத்தில் முடிந்தது. அதுவும் உணர்வுகள் சமநிலைப்பட வேண்டிய ,பக்குவப்பட வேண்டிய முதுமையை வரவேற்க வேண்டிய வயதில் சேற்றில் விழுந்த முனிவரைப்போல் ஆனார்.
இதுவரை சேர்த்து வைத்திருந்த மானம்,மரியாதை எல்லாவற்றையும் தானே கெடுத்துக் கொண்டார், சொல்லபோனால் இதற்கெல்லாம் அவர் கவலைப்படவும் இல்லை, அவர் மயங்கிக் கிடந்த மாது ஒன்றும் இளவயது மங்கையும் இல்லை, ஐம்பதைத் தொட்டுக் கொண்டிருந்தாள் நல்ல நிறமும் இல்லை, இவளிடம் கள் குடித்தவண்டாக இந்த மனிதர் வீழ்ந்ததுதான் ஏனென்று தெரியவில்லை.
கருப்பு நிறம். காந்தக் கண்கள், உருண்டு திரண்ட உடல்வாகு. பெண்மையின் மென்மை அங்கு இல்லை, ஒரு முரட்டுத்தனம் குடிகொண்டிருந்தது. எப்போதும் தங்கு தடையில்லாமல் விருந்து வைக்கக் காத்திருக்கும் குணம். கண்ணியம் என்றால் என்ன விலை என்றே கேட்பாள். இத்தனையும் ஒரு மயக்கத்தைக் கொடுத்திருந்தது கோபாலனுக்கு.
நேர்மையான காதலுக்கு இருக்கும் ஈர்ப்பை விடவும், முறையற்ற காமத்திற்கு மோகம் காட்டாற்று வெள்ளம்போல் இருக்கும் போலும்.,
கோகிலாவின் தோழி சகுந்தலாவும், அவளது கணவரும் உறவினராகி விட்டதற்கு சந்தோஷப்படும் நேரத்தில் இப்படி கோபாலுக்குப் புத்தி கெட்டுப் போனதே என்று வருத்தப்பட்டார்கள்.
கோபாலனின் தங்கை அல்லியும், அவளது கணவர் சந்திரனும் ஒருநாள் திண்டுக்கல் அலுவலகம் வந்து இவரைப் பார்த்தனர்.
”எங்கே வந்தீங்க, ஏதாவது பண உதவி தேவையா?”
”அண்ணா நீ இப்படிச் செய்யலாமா?”
“ஊர் உலகத்தில நடக்கறதுதான் அல்லி”
”மைத்துனரே, ஏதாவது ஒரு தொகையைக் கொடுத்து செட்டில் பண்ணிடலாம்,”
”சந்திரன் இது என்னோட விருப்பம், இதப் பத்திப் பேசாதீங்க”.
”அண்ணா இதுக்கெல்லாம் நல்ல பாடம் கெடைக்கும் ,”
”வாங்க, கெளம்பலாம், புதுமோகத்துல இருக்காரு அண்ணன், எதுவும் காதுல ஏறாது” என்று சந்திரனை அழைத்துக்கொண்டு வெறுப்போடு வெளியேறினாள் அல்லி. இதைப்பற்றி கோகிலாவிடம் சொல்லவும் இல்லை.
அதன்பின் கோபாலன் உறவுகள் அனைவரின் அலைபேசி எண்களையும் தடைசெய்து வைத்திருந்தார். சித்தார்த்தன் திண்டுக்கல் சென்று அவரது அலுவலகத்தில் சந்தித்தார். பார்த்த போதே புரிந்தது இவர் பழையபடி இல்லை என்று. இருப்பினும் கேட்க முற்பட்டபோது, “சித்தார்த் இது என் விருப்பம்.”
‘”கோகிலாவின் நிலைக்கு என்ன பதில்?”
“டைவர்ஸ் அப்ளை பண்றேன்”
“அடப்பாவி,இத்தன நாள் நல்லவனப் போல நடிச்சே” என்று சினந்து திரும்பினார் அவர்.
திருமண நாள் நெருங்கிக் கொண்டிருந்தது.குமரன் முதலில் வந்தான்.விமான நிலையத்திற்குச் சென்று சித்தார்த் அழைத்துவந்தார்.
“மாமா அப்பா ஏன் வரலை?”
“வீட்டுக்குப் போய் பேசலாம் குமரா.”
வீட்டிற்கு வந்த குமரன் அன்னையின் நெற்றியிலிருந்த காயத்தைக் கண்டு வினவ அத்தனையும் தெரிந்தது.
‘என்ன பைத்தியக்காரத்தனம் இது? என்று வேதனைப்பட்டான்.
இரண்டு நாட்களில் கயல் கணவனோடும் மகளோடும் வந்து சேர்ந்தாள்.’எப்படி நடக்க வேண்டிய திருமணம்,!’
குமரனும்,கயலும் பாட்டியின் ஊருக்குச் சென்று அழைப்பு தருவதாகச் சொல்லிவிட்டு திண்டுக்கல் வந்து தந்தையை அலுவலகத்தில் பார்த்தனர்.
உண்மையில் ஒரு நல்ல தந்தை அவமானப்படுவார், வெட்கப்படுவார், பிள்ளைகள் வந்து ஒழுக்கக்கேட்டைப் பற்றிக் கேட்க நேர்ந்ததே என்று. ஆனால் கோபாலன் சிறிதும் வெட்கம் இல்லாமல், “இனி உங்க அம்மாவை நீங்கப் பார்த்துக்குங்க.”
“அப்பா ஏன் இப்படிப் பேசறீங்க, அம்மா பாவம்பா,உங்களையே நம்பினவங்க”
“அதனால் என்ன,?”
“அண்ணா இரு. நான் கொஞ்சம் பேசணும்.”
“அப்பா மகனுக்கு கல்யாணம் நடக்கற நேரத்தில வேற ஒரு பொம்பளையோடஓடி வந்துட்டீங்களே வெக்கமா இல்லே?”
“இல்லேம்மா, இனிஎனக்காக நான் வாழப்போறேன், நீங்க கெளம்புங்க,” என்றாரே பார்க்கலாம்
மதம் பிடித்த மனிதனிடம் பேசி ஆவது என்ன,,?
காரில் திரும்பும்போது கயல் அழுது அழுதுமுகமே வீங்கிப்போனது. தங்கையைத் தேற்றினாலும் மனம் சுக்கு நூறாக உடைந்திருந்தது குமரனுக்கு.
நெல்லையில் திருமணத்திற்கு முதல்நாள் வரவேற்பு,. உறவம்,நட்புமாக மண்டபம் நிறைந்திருந்தது. ஒப்புக்கு முகம் மலர மணமக்கள் மேடையில் அமர்ந்தனர்.
சகுந்தலா கோகிலாவை விட்டு நகரவே இல்லை. வந்தவர்கள் கோபாலன் எங்கே என்று கேட்க மாட்டார்களா என்ன!? முக்கியமான அலுவலகப் பணிக்காக வெளியூர் சென்றுள்ளதாகச் சொல்லி்ச் சமாளித்தார்கள். இதை நம்பாத, ஓரளவு விஷயம் தெரிந்த உறவினர் ஒருவர் மேடையில் வந்து மணமக்களை வாழ்த்தி விட்டு் இறங்கி, ” நல்ல குடும்பத்தைக் கலங்க வெச்ச பாவிக்கு சரியான கூலி கெடைக்கும்’ என்று சொல்லிச் சென்றார்..
மறுநாள் காலையில் மணவிழா குறித்த நல்ல நேரத்தில் நடந்தது, கோபாலன் வராததால் குமரன் சித்தார்த்தன், தங்கம் இணையருக்குப் பாதபூஜை செய்தான். நல்லபடியாக மணமகன்கள் மணப்பெண்களுக்கு மங்கலநாண் சூட்டிய வேளையில் கோபாலன் நீலுவோடு நேபாளத்தைக் கண்டு களித்துக் கொண்டிருந்தார்.
திருமணம் முடிந்த ஒருவாரத்தில் குமரன் நார்வே புறப்பட்டான், கயலும் கனடா புறப்பட்டாள்.
“அம்மா போதும் வேலை செய்தது, விருப்ப ஓய்வு வாங்கிட்டு எங்களோட வந்துடுங்க”
“இல்ல குமரா,நான் சமாளிச்சிக்குவேன் பாட்டி,மாமா,மாமி இங்கதான் இருப்பாங்க”
“தைரியமா போயிட்.டு வாங்க” என்று பிள்ளைகளை அனுப்பி வைத்தாள்.
அண்ணன் சித்தார்த்தனும்,அண்ணி தங்கமும், தாயார் சொர்ணமும் கோகிலாவுடன் தங்கி விட்டனர். கீழ்தளத்தில் இத்தனை ஆண்டுகாலமும் அன்றில்களாக இருந்து கதை பேசிய இவர்களின் படுக்கையறை எப்போது களங்கப்பட்டது தெரிந்ததோ அன்றே பூட்டி வைக்கப்பட்டு விட்டது.
இந்தத் தொடரின் மற்ற அத்தியாயங்களை வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!




GIPHY App Key not set. Please check settings