இந்த தொடர்கதையின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
சுசிலா என் முகத்தைப் பாத்தா நான் என் வலது காலை நொண்டற மாதிரி ஆக்டிங் பண்ணிக் காட்டினேன் அம்மா பாக்காதப்ப.
“ஆமாம் மாமி இன்னும் வலிதான்”னு இடதுகாலை நொண்டி கொஞ்சம் நடந்தாள்.
“அது சரி வலது கால்ல இல்லையோ அடிபட்டது,இடது காலை நொண்டறே,மாச சாமான் வாங்கதானே சின்னக்கடைத் தெருவுக்கு போவா, நீ ஏன் தனியாப் போறே அங்கேயெல்லாம்.”
ஒரு பொய் சொன்னா, சங்கிலியா பொய்கள் தொடருவதை தவிர்க்கவே முடியாது.
“ஆமாம் வலது கால்தான் அடி பட்டது, ஆனா இப்ப ரெண்டு கால்லயும் வலி,அப்பறம் ஏற்கனவே அண்ணா அங்கே போயிட்டான், சாமான் ஜாஸ்தினு கூட உதவி பண்ணப் போனேன்.
சோதனைன்னு வந்தா அது விடாதாம் எப்பவும், ”ஏண்டி பொண்ணே ஒரு சாமான் கொடுத்துட்டு வரச் சொன்னா இவ்வளவு நேரமா, சரி வா அப்பா காத்துண்டிருக்கார் கடை வீதிக்கு போய் மாச மளிகை சாமான் வாங்கிண்டு வந்துடுங்கோ.”சொல்லிண்டே சுசிலாவோட அம்மா உள்ளே நுழைஞ்சா.
என் அம்மாவைப் பாத்து,”உங்க வடாம் பிழியற நாழி காத்திரமா நன்னா இருக்கு,இந்தக் காலத்துல இப்படி வெங்கலத்துல எங்கே கிடைக்கறது.ரொம்ப தேங்ஸ் மாமி.
“நீ வா”னு சுசிலாவை கூட கூட்டிண்டு போனா. இந்த களேபரத்துல போறப்ப சுசிலா நொண்ட மறந்ததை என் அம்மா கவனிச்சா.
ஒண்ணும் ஒண்ணும் ரெண்டுனு கணக்கு போடறது கஷ்டமா என்ன, “திருட்டுப் பசங்களா எங்கடா போயிட்டு வந்தீங்க,ரெண்டு பேரும்” அம்மா முகத்துல கோவம் தெரியலை எங்க பொய் பித்தலாட்டத்தை ரசிச்ச மாதிரிதான் தெரிஞ்சது.”வா உப்புமா சூடு பண்ணி கொடுக்கறேன்.முதல்ல படிப்பை முடிச்சிட்டு .சொந்தக் கால்ல நிக்கப் பாரு.இந்த லவ்வு கிவ்வுல்லாம் அப்பறம் வச்சிக்கோங்க சரியா” செல்லமா தலைல ஒரு குட்டு வச்சா.
“போம்மா அதெல்லாம் ஒண்ணும் இல்லை,சும்மா தெப்பக்குளம் பாக்கதான்”எனக்கே இதை சொல்லப் படு சங்கோஜம்தான்.
உப்புமாவை புகழ்ந்து தள்ளினேன்,”எப்படிம்மா உன் கையால செய்யற எல்லாப் பண்டங்களும் இவ்வளவு ருசியா இருக்கு, இந்த கத்திரிக்கா கொத்சு செஞ்ச கைகளுக்கு அஞ்சு பவுன்ல தங்கக் காப்பு போடணும்”
“ஏய் போறும்டா ஓவரா காக்கா பிடிக்காதே,இனி அந்த சுசிலாக் குட்டி வரட்டும் பாத்துக்கறேன்”
“அம்மா அவ மேல ஒரு தப்பும் இல்லைம்மா நானேதான் வற்புறுத்தி கூட்டிண்டு போனேன்.”
அம்மா சந்தோஷமா சிரிக்கறா,”நான் பாத்து வளந்த பொடியன் நீ என் கிட்டயே பம்மாத்து வேலையா சரி பரவாயில்லை வீடு வரை இருக்கட்டும்,வெளில எல்லாம் சுத்தி பேரைக் கெடுத்துக்காதீங்க”
இப்படியாக எங்க காதலுக்கு என் வீட்ல பச்சைக் கொடி காட்டியாச்சு.ஒரு பத்து நாள் சுசிலா கண்லயே படல்லை. அம்மாவுக்கு எங்க திருட்டுத் தனம் தெரிஞ்சு போச்சுங்கறது அவளுக்கு தெரிஞ்சு போச்சு. ஒரு நாள் எதேச்சையா ரெண்டு பேரும் எம்ப்ளாய்மென்ட் எக்சேன்ஜ்ல பாத்துண்டோம்.
அப்பதான் அவ சொன்னோ,”நான் உங்க வீட்டுக்குள்ளே இப்ப வரமாட்டேன்பா,உங்க அம்மா முகத்துல எப்படி முளிக்கறது, எவ்வளவு பொய் பித்தலாட்டம் பண்ணியாச்சு.நீ வேணா எங்காத்துக்கு வா,ரமணன் அண்ணா கூட தோஸ்தி பண்ணிக்கோ”
“உன் அண்ணன் இன்ஜினியரிங் படிக்கறான் என் கூட எல்லாம் பழகுவானா”
“ஏய் எங்க ரமணன் பாக்கதான் முரடு பழகினாதான் தெரியும் எவ்வளவு சாஃப்ட் நேச்சர்னு, பேசிப் பாரு நீயே, அந்த சாக்குல எங்காத்துக்கு அடிக்கடி வரலாம்தானே”
“ஆமாம் அதுவும் கரெக்ட்தான்.”
“சரியான ட்யூப்லைட், உன் கூட காலம் பூரா எப்படி குப்பை கொட்டறதுனு தெரியலை” சொல்லிட்டு குறும்புப் புன்னகை பூத்தாள்.
இப்ப நம்ம திண்ணை குரூப்புக்கு கொஞ்சம் போரடிச்சிடுச்சுனு நினைக்கறேன். கோபிநாத், சீனு, வரதன் மூணு பேரும் வேணும்னே கொட்டாவி விட்டது தெரிஞ்சது. வெங்கட் வேறே ஏதோ காகிதத்தை சுருட்டி முகத்தை அஷ்ட கோணல் பண்ணிண்டு காது நோண்டிண்டு உக்காந்திருந்தான். இப்படியே சொல்லிட்டிருந்தா கதை களை கட்டாதுனு புரிஞ்சது.
உள்ளே எழுந்து போனேன் செத்த இருங்கோ எல்லாரும்னு சொல்லிட்டு.
உள்ளே போனவுடனே சுசிலா கேட்டா,”என்ன இன்னைய கதா காலட்சேபம் முடிஞ்சதா”
“இல்லைம்மா எல்லாரும் கொட்டாவி விடறா,அதான் கொஞ்சம் ரெஃப்ரஷ்மென்ட் பிரேக் விடலாம்னு,ஆமாம் 5 நாளா யாரும் தொடாம ஒரு மிக்சர் பாக்கெட் இருந்ததே அதை எடு,அப்படியே இந்த சொம்புல டீத் தண்ணி போட்டுக் கொடு.
“ஏன்தான் இந்தப் பாடு படறேளோ தெரியலை”
“உனக்குதான் தெரியுமே எல்லாம், கஷ்டப் பட்டாதான் லோகத்துல பேர் எடுக்க முடியும்,சரி நீ எல்லாத்தையும் எடுத்துண்டு வா, ஓடிடப் போறா நான் போய் பிடிச்சு வைக்கறேன்.”
இந்த தொடர்கதையின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!

GIPHY App Key not set. Please check settings