in ,

மாப்பிள்ளை (சிறுகதை) – நாமக்கல் எம். வேலு

எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

டாரென கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் கணேஷ்.  ரிஷப்ஸனில் இருந்த பெண், கொஞ்சம் அதிர்ந்து, ‘ என்ன சார் வேணும் ‘ என்றாள்.

‘ கல்யாண மேடை ஆபீஸ்தானே இது… ? ‘ என்றான் அவன்.

‘ ஆமா சார்…’ என்றுவிட்டு, ‘ உட்காருங்க ஸார்… ‘ என்றாள் அவள்.

‘ நான் உங்க மேனேஜரைப் பார்க்கணும்…’ என்றபடி திரும்பி கேபினைப் பார்த்தான்.  

‘ வரன் பத்தின எல்லா விவரம் நானே கொடுக்கறேன் சார்… அவரைப் பார்க்க வேணாம்… நின்னுக்கிட்டே இருக்கீங்களே, உட்காருங்க… ‘  என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே திடுதிடுவென கேபின் கதவைத் திறந்துகொண்டு உள்ளே போய் விட்டான்.  அவள் கூப்பிட்டுக்கொண்டே பின்னாலேயே ஓடினாள்.

மொபைலில் மூழ்கியிருந்த மேனேஜரும் அதிர்ந்து பின் நிமிர்ந்து… அவனைப் பார்த்தார்.  உடனே அவளிடம்  ‘ நீ போ… ‘ என்பது போல சைகை காட்டினார்..  

கையில் வைத்திருந்த மொபைலை எடுத்து மேஜை மேல் வைத்துவிட்டு உட்கார்ந்து விட்டான் அவன்.

மேஜை மேல் இருந்த கண்ணாடி டம்ளரில் இருந்த தண்ணீரை எடுத்து குடித்துவிட்டு டம்ளரை திருப்பி வைத்தபடியே, ‘ சொல்லுங்க ‘ என்றார், மேனேஜர்  கூடவே,  ‘ வெளியே என்னென்ன ஸ்கீம் இருக்கு, எவ்வளவு டிஸ்கவுன்ட் இருக்குனு எல்லாம் சொல்லியிருப்பாங்களே… ’ என்றார் அவர்.

‘ சார் அதெல்லாம் அப்புறம்…முதல்லே……..’ இழுத்தான் அவன்.

‘ சரி முதல்லே இந்த பாரத்தை பூர்த்தி பண்ணி கையெழுத்து போட்டுக் கொடுங்க  ‘ என்றார் மேனேஜர்.

அவனோ, ‘ அதுக்கு முன்னால… ’ என்று  இழுத்தான்.

‘ சரி சொல்லுங்க…உங்களுக்கு பையன் வேணுமா, பொண்ணு வேணுமா…’ என்றார்.

‘ பையனைக் கட்டிக்கிட்டு நான் என்ன சார் பண்ணப் போறேன்…  எனக்கு பொண்ணுதான் வேணும்…’ என்றான், அவன்.

கடகடவென சிரித்துவிட்டு, ‘ உங்க சென்ஸ் ஆஃப் ஹ்யூமர் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு… பையன்களுக்கு பொண்ணுதான் வேணும்… ’ என்றபடியே புன்னகைத்தார்.

‘ ஆமா சார், நான்தான் வருங்கால மாப்பிள்ளை… ‘ என்று சிரித்தான்.

‘ ஆக உங்களுக்கு பொண்ணு வேணும்… ‘

‘ அதே தான்… ’ என்றவன், ‘பொண்ணு இருக்கில்லே… ‘ என்று இழுத்தான்.

 ‘ ஆமாமா, கம்ப்யூட்டர்ல எட்டாயிரம் பொண்ணுங்க இருக்கு. என்னமாதிரி பொண்ணுங்க வேணும்னு சொன்னீங்கன்னா, கம்ப்யூட்டர்லே பார்த்துட்டு சொல்லிடறேன்… முதல்லே உங்க இனத்துலேயே வேணுமா… எந்த ஜாதியா இருந்தாலும் பரவாயில்லையானு…  ’ அவரும் இழுத்தார்.

இவன், உடனே ‘ மனித ஜாதியா இருந்தா போதும் சார்… ‘ என்றான் கொஞ்சம் சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு.

ஹஹஹஹாவென சிரித்தபடி, ‘ ஐயோ… திரும்பவும் நெஞ்சைத் தொட்டுட்டீங்க…  ‘ என்றவர், ‘ சரி படிப்பு… மத்த விவரம்…. ‘ என்று மறுபடியும் இழுத்தார்.

மொபைலை திறந்து பார்த்துவிட்டு சொன்னான்… ‘ பி.காம். படிச்சிருக்கணும்…. ’

சிரித்தபடி,  ‘ என்ன சார் இது… எல்லாரும் பி.இ. படிச்ச பொண்ணோ, பி.டெக். படிச்ச பொண்ணோ வேணும்னு கேட்பாங்க. நீங்க என்னடான்னா குறிப்பா பி.காம் படிச்ச பொண்ணா கேட்கறீங்க…’ என்றார் அவர்.

 ‘ பாவம் சார், அவங்களுக்கும் மாப்பிள்ளை வேணுமில்லையா… ‘ என்றான் இவன்.

‘ ஐயோ, ஐயோ… திரும்பத் திரும்ப நெஞ்சை தொடறீங்களே…  சமூகத்தைப் பத்தின உங்க அக்கறை என்னை ரொம்ப கவர்ந்திருச்சு… அப்புறம்…வயசு என்ன இருக்கலாம்… ? ’

உடனே மொபைலை திறந்து பார்த்துவிட்டு ‘ இருபத்தி மூனுன்னு வச்சுக்கங்களேன்… ‘ என்றான்.

‘ எல்லாரும் இருபதுலேர்ந்து இருபத்தஞ்சுனு கேட்பாங்க. நீங்க என்னடான்னா  குறிப்பா இருபத்தி மூனுன்னு கேட்கறீங்களே… ’ என்றார்.

‘ பொண்ணோட வயசு அதானே சார்… ’ என்றான் புன்னகைத்தபடி.

‘ ஒரு சந்தேகம்… அதென்ன நான் கேக்ற ஒவ்வொரு தடவையும் மொபைலை பாத்துட்டு பாத்துட்டு பதில் சொல்றீங்க… ‘

‘ ப்ரோஃபைல் பார்த்துட்டு சொல்றேன்… ’

‘ ஓ, குறிச்சுக்கிட்டு வந்திருக்கீங்க… வெரிகுட்… அப்புறம் வேலை… ஜாதி… மதம்… ’ என்று இழுத்தார் அவர்.

‘ எனக்கு சாப்ஃட்வேர் கம்பெனி வேலை, மேனேஜர் வேலை அப்படினெல்லாம் இல்லை சார். எனக்கு வீட்டை நல்லா கவனிச்சிக்கறதுதான் ரொம்ப முக்கியம்… ’ என்று புன்னகைத்தான்.

‘ குட்… இப்படி எல்லாருமே சொன்னா பொண்ணுங்களுக்கு டக் டக்னு கல்யாணம் முடிஞ்சுடுமே… வெரி குட்…மேலே சொல்லுங்க…  ‘

 ‘ ஆனாலும் ஹிந்துவா இருக்கறது பெட்டர்… ’  என்றான் இவன்.

‘ எல்லாம் ஓகே. மாப்பிள்ளை பத்தி… சாரி… உங்களைப் பத்தி சொல்லுங்க…’ என்றார் அவர்.

‘  என் பேரு கணேஷ்வரன்… கணேஷ்ணு கூப்பிடுவாங்க. ;

‘ புதுசா இருக்கே பேரு… கணேஷ், கணேஷ்குமார்னெல்லாம் வைப்பாங்க… நீங்க கணேஸ்வரன்றீங்க… ஓகே, அப்படியே கூப்பிடலாம் மிஸ்டர் கணேஷ்… மேலே சொல்லுங்க…’

‘ எனக்கு வயசு இருபத்தேழு.  பி.இ. மெக்கானிகல் இன்ஜினீயர். ஒரு டூ வீலர் ஷோரூம்ல வொர்க்ஷாப் மேனேஜரா இருக்கேன்… மாசம் முப்பதினாயிரம் சம்பளம் வாங்கறேன். தினமும் முன்னூறு ரூபாய் பேட்டா கிடைக்குது. ஒரு மாச சம்பளத்தை  தீபாவளியப்போ போனஸா குடுத்துடுவாங்க… டிரெஸ் அலவன்ஸும் கிடைக்கும்… ‘ என்றான்.

‘ ஸோ எம்மதமும் சம்மதம்னு சொல்றீங்க… ‘

‘ ஜாதி…மதம்… என்ன சார். நான் ஹிந்து… மத்தபடி எனக்கு அதுல அவ்வளவா வெறியெல்லாம் கூட இல்லை…’

‘ ஐயோ… நெஞ்சைத் தொட்டுட்டீங்க சார்… ‘ என்ற மேனேஜர் நிமிர்ந்து உட்கார்ந்து, ’ குட்… உங்களை கட்டிக்க எந்தப் பொண்ணுக்கு குடுத்து வச்சிருக்கோ… ‘ என்றுவிட்டு ஒரு பாரத்தை எடுத்து, ‘ பொண்ணே கிடைச்சமாதிரின்னு வெச்சுக்கங்க… இதை பில் பண்ணி கவுண்டர்லே குடுங்க… சில்வர் பிளாட்டினம் கோல்டுன்னு இருக்கு.  நீங்க சில்வரே எடுத்துக்கோங்க. அதாவது மூணு மாச ஸ்கீம்… ஏன்னா தாராளமா மூணு மாசத்துலே பொண்ணு கிடைச்சுடும்… இருபது பர்ஸன்ட் டிஸ்கவுன்ட் தந்துடுவோம்… மிச்சத்தை கவுண்டர்லே சொல்லுவாங்க… ’ என்றார்.

அவன் தயக்கத்துடன் எழ முற்பட, ‘ மிஸ்டர் கணேஷ்… உங்ககிட்டே பேசிக்கிட்டிருந்ததுல நேரம் போனதே தெரியலை… உங்களைப் போல எல்லாரும் இருந்தா பொண்ணுங்களுக்கு டக்கு டக்குனு கல்யாணம் ஆகிடும்… எங்களுக்கும் பிசினஸ் வேகமா டிவலப் ஆகும்… உங்களுக்கு சீக்கிரமே பொண்ணு கிடைச்சு கல்யாணமாகி சிறப்பான வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்…’ என்று சொல்லியபடி கைகொடுத்தார்…

‘சாரி சார். கோவிடுக்கப்புறம் நான் யாருக்கு கையெல்லாம் கொடுக்கறதில்லை. பொண்ண மட்டும் கொடுங்க சார் போதும்… அதுக்கு முன்னாடி உங்க விசிட்டிங் கார்டு ஒன்னு குடுங்களேன் ’ என்று புன்னகைத்தான்.  மொபைலை எடுத்து ஏதோ நோண்டினான்.  அவர் கொடுத்த விசிட்டிங்  கார்டை வாங்கிக் கொண்டு கிளம்பினான்.

‘ சார்…சார்…’ என்று கவுண்டர் பெண் கூப்பிட்டதை அவன் சட்டை செய்யவே இல்லை, வெளியேறியே விட்டான்.

xxxxxx

சில நொடிகளில் அந்த பெண் புயலாய் உள்ளே நுழைந்தாள்.  ரிஷப்ஸனில் இருந்த பெண், ‘ என்ன மேடம் வேணும்… ‘ என்றாள். அவளுக்கு பதில் சொல்லாமலேயே கேபினுக்குள் இருந்தவரை காட்டியவள் ‘ அவரைப் பார்க்கணும் ‘ என்று என்றபடி திடுதிடுவென கேபின்கதவைத் திறந்துகொண்டு உள்ளேயே போய்விட்டாள். 

‘ என்ன… இன்னிக்கு எல்லாரும் நம்ம கிட்டே பேசாம நேரா மேனேஜர் கிட்டேயே ஓடறாங்க… ‘ என்றும் நினைத்துக்கொண்டாள், இவள்.  

திகைத்தார் மேனேஜர். ‘ திவ்யா…என்ன திடீர்னு ஆபீஸ் பக்கம்… இதுவரைக்கும் நீ இங்கே வந்ததே இல்லையே ‘ என்றார், கண்களை அகலவிரித்தபடி.

‘ அப்பா இப்போ வந்துட்டு போறாரே, ஒருத்தர்… ? ‘ அவள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, சிரித்தபடி, ‘ ஓ அந்தப் பையனா… ‘ என்றவர் முகத்தில் பரவசத்தைக் காட்டி, ‘ ரொம்ப நல்லப் பையன்மா… சமூக அக்கறை உள்ள பையன்… என்ன ஒரு ஷார்ப்… அப்படிப்பட்ட பையனை கட்டிக்க எந்தப் பொண்ணுக்கு குடுத்து வச்சிருக்கோ… ‘ என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஒரு மொபைலை எடுத்து மேஜை மேல் வைத்தாள்.

திகைத்த அவர், ‘ இது உன் ஃபோனில்லையே… ‘ என்றார்.

‘ ஆமா இது கணேஷ்வரனோடது… ‘ என்று சொல்லியபடி மொபைலை ஆண் செய்தாள். கொஞ்சம் முன்னாள் அவரும் கணேஸ்வரனும் பேசிக்கொண்டிருந்தது ஒலித்தது. திகைத்துப் போய் நிமிர்ந்தார் இவர்.

‘  நான் நேத்து ஒருத்தரை லவ் பண்றேன்னு சொன்னப்போ ஜாதி, மதம், ஸ்டேடஸ்னு குதிச்சீங்களே… ’ என்றாள்.

முழித்தார் அவர்.

‘ நான் சொன்னது இந்தப் பையனைத்தான்.  உங்களை கட்டிக்க எந்தப் பொண்ணுக்கு குடுத்து வச்சிருக்கோனு அவர்கிட்ட சொல்லியிருக்கீங்க…  நாந்தான் அந்த பாக்கியசாலி… நீங்க ஒத்துக்கிட்டா வீட்டுல கல்யாணம். இல்லே நேரா கோவில்தான்… பை..ப்பா… நாங்க கோவிலுக்கு போறோம்…. சாமி கும்பிடத்தான்… அப்படியே ஹோடெல்ல டின்னர்பா…. அம்மாகிட்டே எனக்கு டின்னர் வேண்டாம்னு சொல்லிடுங்க… ‘ மடமடவென் பேசிக்கொண்டே அவரது பதிலுக்கு காத்திராமல் வெளியேறினாள்.

வியர்த்துக் கொட்ட ஆரம்பித்தது அவருக்கு.

எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும் 

 (முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    நாகி (சிறுகதை) – நாமக்கல் எம். வேலு

    பிரியா(ணி) (சிறுகதை) – நாமக்கல் எம். வேலு