எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
வெளியே நாய்கள் குறைக்கும் சத்தம் கேட்கவும், ‘ ஏங்க… வெளியே போய் கொஞ்சம் எட்டிப் பாருங்களேன்… ஏதோ நாய்ங்க குழைக்கற சத்தம் மாதிரி இருக்குது… ‘
வெளியே ஓடிய ரவி அங்கிருந்தே அலறினான். ‘ஏய்… ஒரு பெரிய பாம்புடி… நம்ம கேட்டுக்கு முன்னாடி படம் எடுத்துக்கிட்டு நிக்குது… தெருநாய்ங்க ரெண்டு அதைப் பார்த்து பார்த்து குறைக்குதுங்க…‘
பதறிகொண்டு அவளும் வெளியே ஓடிவந்தாள். கேட் சாத்திதான் இருந்தது. ரவி உள்பக்கம் பதற்றத்துடன் அந்த பாம்பை பார்த்துக் கொண்டிருந்தான். இரண்டு நாய்கள் குறைத்துக் கொண்டு நின்றிருந்தன.
ஒருவேளை நாய்கள் இல்லாதிருந்தால், பாம்பு உள்ளே அல்லவா வந்திருக்கும்…. நெஞ்சு பதறியது அவளுக்கு..
ஆறேழு மாதங்கள் இருக்கும், பழைய படுதாவைத் தூக்கிய ரவி பாம்பைப் பார்த்துவிட்டு அலறிக்கொண்டு ஓடிவந்தான். அதை அடித்து புதைத்து பால் ஊற்றி… அது தனிக்கதை.
‘ ஏங்க… இது நாகப் பாம்புங்க… ‘ என்றாள் அவள். அவளது நாக்கு குழறியது.
‘ எப்படிச் சொல்றே… ‘ வியந்தான் அவன்.
‘ பாருங்க, அதோட தலைப் பகுதியில முன்னேயும் பின்னேயும் யூ ஷேப்ல படம் இருக்கு… ‘ என்றவள் நினைவு வந்தவளாய், ‘ அன்னிக்கு நம்ம வீட்டுல ஒரு பாம்பு அடிச்சோமே… அதுலேயும் இதே யூதானே இருந்தது… மறந்துட்டீங்களா ‘ என்றுவிட்டு அவன் முழித்ததைப் பர்த்து, ‘ நீங்க எதைத்தான் ஞாபகம் வச்சிருந்தீங்க… ‘ என்று கேலியாய் சொன்னாள்.
அவள் பக்கம் திரும்பி, ‘ சரி சரி போதும்… சான்ஸ் கிடைச்சா போட்டுத் தாக்கிடுவியே… ‘ என்றுவிட்டு எரிச்சலுற்றவன், ‘ பார் நாய்ங்க இருக்கவும்தான் அது கேட்டுக்குள்ளே வரத் தயங்குது… இல்லேனா வீட்டுக்குள்ளே பாம்பு வந்திருக்கும். அதுக்குத்தான் சொல்றது நாமும் ஒரு நாய் வளர்க்கனும்னு… பசங்களும் நிறையதடவை கேட்டுட்டாங்க ‘ என்றான்.
அதற்குள் கூட்டம் கூடிவிட்டது. ஒரு தைரியமான ஆள் குச்சியால் அதன் கழுத்தை அழுத்திக்கொண்டு அதன் வாலை லாவகமாய்ப் பிடித்துத் தூக்கி, தான் கொண்டு வந்திருந்த சாக்குப் பைக்குள் விட்டான். அது நெலுநெலுவென உள்ளே போய்விட சாக்கை முடிச்சுப் போட்டு தனது சைக்கிளில் வைத்துக்கொண்டு போய்விட்டான். மக்கள் கொஞ்ச நேரம் நிறைய பாம்பு கதைகளாகப் பேசிக்கொண்டிருந்துவிட்டு பின்னர் ஒவ்வொருவராய் கலைந்து போயினர்.
‘காடு தோட்டங்களை எப்போ இவனுங்க பிளாட் போட ஆரம்பிச்சானுங்களோ… அப்போலேர்ந்து பாம்புகள் படையெடுத்து வெளியே வருதுங்க… இன்னும் இதுபோல எத்தனை வரப்போகுதோ… ‘ புலம்பிக்கொண்டிருந்தான் ரவி.
சாயங்காலம் பள்ளிக்கூடம் விட்டு வந்த வைஷ்ணவியும், கண்ணனும் நடந்த கதையைக் கேட்டுவிட்டு, அம்மாவைப் பிடித்துக் கொண்டனர்.
‘ அம்மா… நாமளும் நாய் வளர்க்கலாம்மா… ப்ளீஸ்மா… ‘
கண்ணனுக்கு நாய் என்றால் ரொம்பவும் பிடிக்கும். பள்ளிக்கூடம் விட்டு வந்தால் பக்கத்து வீட்டு நாயுடன் கொஞ்ச நேரமாவது கொஞ்சிவிட்டுத்தான் வீட்டுக்கே வருவான். வீட்டில் ஏதாவது அசைவ உணவு செய்தால், மறக்காமல் அதற்கு கொண்டு போய் கொடுப்பான், கொஞ்சுவான்.
தாரிணிதான் திட்டுவாள். ‘ அதை ஏன்டா கொஞ்சறே… அதுக்கு பகுத்தறிவு கிடையாது.. வெறி வந்து கடிச்சு கிடிச்சு வைச்சதுன்னா என்ன பண்ணுவே… அதைக் கொஞ்சிட்டு வேறே அப்படியே வீட்டுக்குள்ளே வர்றே…. சோப்பு போட்டு கழுவிட்டு வாடான்னா கேட்கவும் மாட்டேங்கிறே… ‘
இப்போது கண்ணன் சொன்னான். ‘பூஜா வீட்டு நாயை நான் கொஞ்சினா திட்டறே இல்லே… நம்ம வீட்டுலயும் ஒரு நாய் இருந்திருந்தா நான் ஏன்மா அடுத்த வீட்டு நாயை கொஞ்சறேன்… ஏன்மா… நாம் ஒரு நாய் வளர்க்கலாம்மா… ஏன் பிரண்டுங்க நிறைய பேர் வீட்டுல நாய் இருக்கும்மா… நிரஞ்சன் கூட சொன்னான், அவங்க வீட்டு நாய் போன மாசம் குட்டி போட்டிருக்காம்… கொழுக் மொழுக்னு அழகழகா இருக்காம்… நாளைக்கு ஸ்கூல் விட்டு வரும்போது ஒரு குட்டியைத் தூக்கிட்டு வந்துடவா… அது வளர்ந்து பெரிசாச்சுனா பாம்பையும் சரி திருடனையும் சரி, உள்ளேயே விடாதில்லே…‘ என்றான் அகலக் கண்களைக் காட்டி.
ஒரே வார்த்தையில் பதில் சொன்னாள் அவள். ‘ முடியாது… ‘
பிறகு அப்பா மகள், மகன் மூவரும் பேசிப் பேசியே ஒருவழியாக அவளை சம்மதிக்க வைத்தனர்.
‘ எக்கேடோ கெட்டுப் போங்க… நாளைக்கு அதனால ஏதாவது பிரச்சினை வந்தா என்கிட்டே எதுவும் சொல்லக் கூடாது… முக்கியமா அது வீட்டுக்குள்ளே வந்துடவேக் கூடாது… ‘ என்று முடித்து வைத்தாள்.
அடுத்த நாள் காலையில் எங்கிருந்தோ தப்பித்து வந்த அழகான ஒரு நாய்க்குட்டி ஒன்று அவர்களது வீட்டு முன்பு செல்லமாய் கீல் கீல் என்று கத்திக்கொண்டு அல்லாடியது. அதைக் கண்டதும் ஓடிப்போய் அதைத் தூக்கிக்கொண்டு உள்ளே ஓடிவந்தான் கண்ணன்.
‘பார்… நான் நேத்துதானே சொன்னேன், நாய் வளர்க்கனும்னு. கடவுளா பார்த்து இன்னிக்கு இதை அனுப்பிச்சு வைச்சிருக்கார் பார்… ‘ அதைத் தடவிகொண்டே சொன்னான்.
திடீரென்று அவனே, ‘ அம்மா இதுக்கு நான் ஒரு பேர் செலக்ட் பண்ணிட்டேன்… ‘ என்றான். யாரும் கேட்கும் முன்பே தானாகவே சொன்னான். ‘ நாகி… ‘
‘ டேய்… அது ஃபிமேல் நேம்டா… ‘ என்று குறுக்கிட்டாள் வைஷு.
‘ தெண்டம்… இது பொட்டைக் குட்டிதாண்டி… ‘ என்று சிரித்தான் கண்ணன்.
‘ ஏன் அந்த பேர்னு கேளேன்… ‘ என்று கேட்டான் தங்கையிடமே.
‘ ஏன்… ‘ என்று கேட்டாள் அவளும்.
‘ நாகப் பாம்பை விரட்டத்தானே வளர்க்கறோம்… அதான் நாகி… ’ என்றுவிட்டு சிரித்தான் அவன்.
இப்போது அவனது அம்மா குறுக்கிட்டாள்… ‘ ஹூம்… நாகினு வைக்கறதுக்குப் பதிலா பேசாம நாயின்னே பேர் வைச்சிருக்கலாம்… ‘
எல்லோரும் கலகலவென சிரிக்க, ‘ கேலி பண்ணாதீங்க… ‘ என்றபடி அதைத் தூக்கிக்கொண்டு வெளியே ஓடினான் அவன்.
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் அது வளர்ந்தது. அடிக்கடி அதற்கு ஷாம்புப் போட்டு குளிப்பாட்டினார்கள். அவ்வப்போது அதற்கு தடுப்பூசி போடவும் செய்தார்கள்.
ஆறு மாதம் ஓடியிருக்கும். அதன் நடத்தையில் மாற்றங்கள் தெரிய ஆரம்பித்தன. கொஞ்சம் பூசினாற்போல தெரிய ஆரம்பித்தது. அடிக்கடி குமட்டியது. அதிக நேரம் தூங்கியது. சரியாக சாப்பிடுவதுமில்லை.
பரிசோதித்துப் பார்த்த டாக்டர் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.
‘ இது பிரக்னன்ட்டா இருக்குங்க… உஷாரா பார்த்துக்கங்க… ‘
வீட்டுக்கு வந்து விஷயத்தை சொன்னதும், ‘ எந்த நாயை இது ‘லவ்’வுச்சோ சனியன்… இப்போ ஒன்னு… நாளா அஞ்சா ஆகப் போவுது… ‘ என்று திட்டினாள் தாரிணி. அவளுக்கு ஆரம்பம் முதலே நாகியைப் பிடித்ததில்லை. முகத்தைச் சுழித்துக்கொண்டு போய்விடுவாள்.
ஒரு மாதம் ஓடியிருக்கும். அது அழகான மூன்று குட்டிகளைப் போட்டது.
‘ இனிமே இதுகளுக்காக நான் பெரிய குக்கர்லத்தான் சமைக்கணும்… ‘ எரிந்து விழுந்தாள் தாரிணி.
இரண்டு பெண் குட்டிகள், ஒன்று ஆண் குட்டி. அவைகளுக்கும் பெயர் வைக்க பெயர் தேடினான் கண்ணன்.
‘ டேய்… அதெல்லாம் வேற வீட்டுக்குப் போயிடப் போவுதுடா… அதுகளுக்கு ஏன்டா பெயர் வைக்கனும்ங்கறே… தூக்கிட்டுப் போறவங்களே பேர் வைச்சுக்குவாங்கடா… நீ போயி படிக்கற வேலையை மட்டும் பாரு… ‘ என்றாள் வைஷு.
குட்டிகள் பெரிதாகின. அதே போல அவைகளைப் பார்த்து பிடித்துப் போன சிலர் ஒவ்வொன்றாய் பிடித்துக்கொண்டும் போயினர். சில நாட்களில் தனி மரமானது நாகி.
ஒருநாள் அசைவ உணவு சமைத்திருந்தார்கள். ஒரு தட்டில் சாப்பாட்டைப் போட்டு எடுத்துக்கொண்டு வெளியே ஓடிய கண்ணன் அதிர்ந்தான், அலறினான். சங்கிலி அறுந்து கிடந்தது. நான்கு நாட்களாக தேடினர். எங்கும் கிடைக்கவே இல்லை. கண்ணன் மிகவும் சோர்ந்து போனான்.
‘ தோ பாரடா. அது எப்படி வந்துச்சோ… அப்படியே போயிடுச்சு… பேசாம இனிமே நீ உண்டு உன் வேலை உண்டுன்னு இரு… பரிச்சை வரப் போகுது… எல்லாத்துலயும் சென்ட்டம் வாங்கணும்… தெரிஞ்சுக்கோ… ‘ என்று அதட்டினாள் தாரிணி. ஆரம்பத்தில் கொஞ்சம் தளர்வாய் இருந்தவன், பிறகு மெல்ல மெல்ல சகஜ நிலைக்குத் திரும்பினான்.
சாயங்காலம், பக்கத்து வீட்டிலிருந்து ஒரே சத்தம்.
ரோடில் ஒரு அம்மா பேசிக்கொண்டே போனார். ‘ எங்கேயிருந்து வந்ததோ தெரியல… நாகப் பாம்பு மாதிரிதான் தெரியுது… ‘
சாயங்காலம் கண்ணன் வரப் போகிறான், ‘ இதுக்குதான் நாய் வளர்க்கணும்ங்கறது… ‘ என்று சொல்லப் போகிறான்.
எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!




GIPHY App Key not set. Please check settings