in ,

காப்பக ரகசியம் (சிறுகதை) – நாமக்கல் எம். வேலு

எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

தீபாவளிக்கு ஊருக்கு வந்திருந்தான் செல்வம். கையோடு மாற்றல் ஆர்டரும் வாங்கிக் கொண்டுதான் வந்திருந்தான். ரொம்பவும் சந்தோஷப்பட்டார்கள் காவ்யாவியும் குழந்தைகளும்.

ரொம்ப காலமாய் பாபுவையும் மஞ்சுவையும் ஏன், மாமனார் மாமியாரையும் கூட சமாளிக்க முடியாமல் நச்சரித்துக்கொண்டேதான் இருந்தாள், காவ்யா.

‘ஒன்று நாங்கள் அங்கே வந்துவிடுகிறோம்… அல்லது நீங்கள் இங்கே வந்துவிடுங்கள்… ‘ என்றும் அடிக்கடி சொல்லிக்கொண்டும் இருந்தாள்.

பாபு பாத்தாவது படிக்கிறான், மஞ்சு ஆறாவது படிக்கிறாள். அவர்களது படிப்புக்கு ஐந்து லட்சம் நன்கொடை வேறு கொடுத்திருக்கிறார்கள். வருஷம் மூன்று லட்சம் ஃபீஸும் கட்டுகிறார்கள். படிப்பு நன்றாகத்தான் போய்கொண்டிருக்கிறது. அப்படி இருக்கும்போது இவர்கள் அங்கே வருவது சரியாகப் படவில்லை செல்வத்துக்கு. அதனால் ஊருக்கு டிரான்ஸ்ஃபர் கேட்டிருந்தான், தீபாவளிக்கு கொஞ்சம் முன்னாள் ஆர்டரும் வந்துசேர்ந்தது.

மதியமே  எல்லோருக்கும் டிரெஸ் வாங்கவேண்டும் என்று முடிவு செய்துகொண்டு எல்லோரையும் கூட்டிக்கொண்டு ஜவுளிக் கடைக்குப் போய்விட்டான். 

நால்வருக்கும் டிரெஸ்கள் எடுத்த பிறகு வேஷ்டி செக்ஷனுக்குள் போனான்.  காவ்யாவுக்கு முகம் சுண்டியது. அங்கே கிடந்த நாற்காலிகள் ஒன்றில் உட்கார்ந்து கொண்டு மொபைலை நோண்ட ஆரம்பித்தாள்.

குழந்தைகளும் கூடவே போனார்கள்.  வேஷ்டி சட்டை வாங்கியபிறகு செழி செக்ஷனுக்குள்ளும் போனான்.

அவனது கையைத்தட்டிவிட்டுக் கேட்டான் பாபு, ‘ அப்பா… அதான் அம்மா அப்போவே புடவை வாங்கிட்டாங்களே… அப்புறம் எதுக்கு நீங்க திரும்பவும் புடவை வாங்கறீங்க, அதுவும் அம்மா இல்லாமலேயே…  ‘

சிரித்தான் செல்வம், ‘ இது பாட்டிக்குடா கண்ணா… அவங்களுக்கும் தீபாவளிக்கு புதுத் துணி வேணுமில்லையா… அதான்… ‘ என்றான்.

காவ்யா பற்களை இறுகக் கடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். 

ரொம்ப நாட்களாய் சொல்லிக்கொண்டிருந்தாள் காவ்யா. ‘ஏங்க… என்னால சுத்தமா முடியலை… எங்களுக்கு ஒரு விதமா சாப்பாடு… உங்க அப்பா அம்மாவுக்கு ஒரு விதமா சாப்பாடு… சுடு தண்ணி, பச்ச தண்ணி… இதுல ஆறிடுச்சுனா மறுபடி சூடேத்தி… ரெண்டு ரெண்டு தடவை வாஷிங் மிஷின் போட்டு துணிகளை காயவச்சு… கஞ்சி வச்சு குடுத்து… குளிக்க சுடுதண்ணீர் வச்சு குடுத்து… முடியலைங்க… நாங்க ஹைதராபாத்துக்கே வந்துடறோமே… ‘

அவன் கேட்பான், ‘ அப்போ எங்கப்பா அம்மா கதி… ‘

‘நான் இங்கே கிடந்து அல்லாடறது உங்களுக்குப் புரியலை, ஆனா உங்கப்பா அம்மா கதியைப் பத்தி மட்டும் கவலைப் படறீங்க… அப்படித்தானே… ‘

‘ சரி நான் என்ன பண்ணனும்…’

‘ நாங்க அங்கேயே வந்துடறோம்… ‘

‘ எவ்ளோ நஷ்டம் ஆகும் தெரியுமா… இங்கே டியூஷன் பீஸ் அதிகம், டொனேஷனும் அதிகம். அப்புறம் அங்கே கொடுத்த டொனேஷன் அவ்ளோதான்… அதுவுமில்லாம பாபு எஸ்.எஸ்.எல்.ஸி போற சமயத்துல… அவனோட ஃப்யூச்சரே கெட்டுடும்…  யோசி… ‘

‘ அப்போ என்னை என்ன பண்ணச் சொல்றீங்க… ‘

‘ கொஞ்சம் பொறுத்துக்கோ… ‘

‘ எத்தனை நாள்… இல்லை எத்தனை மாசம்… எத்தனை வருஷம்… ‘

‘ என்னை என்னத்தான் பண்ணச் சொல்றே…’

‘ அங்கே நாங்க வர்றது சரிப்பட்டு வராதுன்னா… நீங்க இங்கே வந்திடுங்க… வந்து வீட்டை கவனியுங்க…  ‘

றுநாள் சாயங்காலம் காவ்யா திடீரென்று செல்வத்துக்கு ஃபோன் போட்டாள்.  

‘ ஏங்க… உங்க அப்பா அம்மா ரெண்டு பேரையும் காணோம்ங்க… ‘

திடுக்கிடுவான் என நினைத்த காவ்யாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது, அவன் சொன்னது.  

‘ கவலைப் படாத… எங்கேயும் போயிடமாட்டாங்க… ‘

‘ என்னங்க சொல்றீங்க… நான் எவ்ளோ பதட்டத்துல சொல்றேன்… ‘

‘ நீ பதட்டப்படாம இரு… ‘

ஃபோனையும் கட்பண்ணிவிட்டான்.

கொஞ்ச நேரத்தில் அவளது மொபைலுக்கு ஒரு வாட்ஸப் மெசேஜ் வந்தது. செல்வம்தான் பார்வார்டு செய்திருந்தான்.

‘ தம்பி… உங்களுக்கு நாங்க கஷ்டத்தைக் கொடுக்க விரும்பலை… நாங்க முதியோர் காப்பகத்துக்குப் போயிடறோம்… ‘

அம்மா அவனுக்கு அனுப்பிய மெசேஜ் அது. அதை பார்த்துவிட்டு உடனே அவள் செல்வத்தைக் கூப்பிட்டாள்.

‘ என்னங்க இது… ‘

‘இனிமே பசங்களுக்கு ஒரு விதமா சாப்பாடு… மாமனார் மாமியாருக்கு ஒரு விதமா சாப்பாடு… ரெண்டு ரெண்டு தடவை வாஷிங் மிஷின் போட்டு துணிகளை காயவச்சு… மடிச்சு வச்சு… கஞ்சி வச்சு குடுத்து… சுடுதண்ணீர் வச்சு குடுத்து… மருந்து மாத்திரை போட்டுக்க நினைவுபடுத்தி… இனி அந்தக் கவலை எதுவுமே உனக்கு இல்லை… இது சம்பந்தமா இனிமே எனக்கு ஃபோன் போடாதே… ‘ என்று அழுத்தமாய் சொல்லிவிட்டு ஃபோனையும் வைத்துவிட்டான்.  அவனது குரல் கரகரத்திருந்தது. அவளோ நெஞ்சு துடிப்புடன் உட்கார்ந்துவிட்டாள்.

அந்த வார இறுதியிலேயே சொல்லாமல் கொள்ளாமல் ஊருக்கு வந்திருந்தான் அவன். அவர்கள் கொடுத்திருந்த முதியோர் காப்பக முகவரிக்கு கிளம்பினான். அவன், தாத்தா பாட்டியைப் பார்க்கப் போவது தெரிந்ததும், பாபுவும் மஞ்சுவும் அவனுடன் சேர்ந்து கொண்டார்கள்.

‘ ஏங்க… நா(ன்) … ‘ என்று இழுத்தாள் காவ்யா.

‘எதுக்கு… அங்கே வந்து அவங்களை நலம் விசாரிக்கவா… ‘ என்றான். அவள் பேசாமல் உட்கார்ந்து கொண்டாள்.  

தற்கப்புறம் இப்போதுதான் வந்திருக்கிறான் தீபாவளிக்காக.  துணிமணிகள் எடுத்துக் கொண்டிருக்கிறான் அவர்களைப் போய் பார்த்து கொடுக்க.

வழியில் மொபெட்டை நிறுத்தி ஸ்வீட் வாங்கிக்கொண்டான். வீட்டுக்கு வந்ததும், மணியைப் பார்த்தான். மணி நான்கு. அப்பா அம்மாவுக்கான டிரெஸ் ஸ்வீட்களை காரிலேயே வைத்துவிட்டு மற்ற டிரெஸ்கள் எல்லாவற்றையும் எடுத்து வீட்டுக்குள் வைத்துவிட்டு  அப்பா அம்மாவைப் பார்க்கக் கிளம்பிவிட்டான். குழந்தைகள் தாங்களும் வருகிறோம் என்று அவனை பிடித்துக் கொண்டனர். காவ்யா, ‘ எனக்கு வயித்துல வலி இருக்குங்க… நீங்க போயிட்டு வாங்க… ‘ என்றுவிட்டாள். 

முப்பது கிலோமீட்டர் போக வேண்டும். போனான்… போய் பார்த்து… நலம் விசாரித்து… ஸ்வீட் துணிமணிகளைக் கொடுத்துவிட்டு நெடுநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு, காப்பாளரைப் பார்த்து அவரிடமும் பேசிக்கொண்டிருந்துவிட்டு மனு ஒன்றை வாங்கி பூர்த்தி செய்து கொடுத்துவிட்டு பிறகுதான் திரும்பினான். அதுவரை குழந்தைகள் தாத்தா பாட்டி இன்னும் மற்றவர்களுடன் அங்கே இருந்த சிறு பூங்காவில் ஜாலியாய் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர்.

வீட்டுக்குத் திரும்பும்போதே சாப்பாடு பார்சலும் வாங்கிக்கொண்டு வந்துவிட்டான். காவ்யா பசியுடன் காத்திருந்தாள். பார்ஸலை பிரித்து குழந்தைகளுக்கு போட்டுக் கொடுத்துவிட்டு செல்வத்தைக் கூப்பிட்டாள்.

‘ எனக்கு பசியில்லை… ‘ என்று சொல்லிவிட்டான்.

‘ ஒரே ஒரு பரோட்டா… சிக்கன் கிரேவியும் இருக்கு… ‘ என்றாள்.

‘ நான்தான் சொல்லிட்டேனே… ‘ என்று பதில் அனுப்பினான்.

சாப்பிட்டுக்கொண்டிருந்த மகன் பாபுவிடம், ‘ அஞ்சு மணி நேரம் ஆச்சு நீங்க போயிட்டு வர… அப்படி என்ன பண்ணுனீங்க அங்கே… ‘ என்று மெல்ல கிளறினாள்.

‘எங்க ரெண்டு பேத்தையும் கட்டிப்பிடிச்சிக்கிட்டு அழுதாங்க பாட்டி.  நிறைய பேசிட்டிருந்தாங்க… அங்கே சின்னதா ஒரு பார்க் இருக்கு. கொஞ்ச நேரம் அங்கே விளயாடிட்டிருந்தோம்… அப்பா மேனேஜர்கிட்டே பேசிட்டிருந்தார். ஏதோ பாரம் பில் பண்ணி கொடுத்தார்… அப்புறம் ஹோட்டல்ல சாப்பாடு வாங்கிட்டு வந்துட்டோம்.. ‘ என்றான் அவன்.

சாப்பிட்டு முடித்து எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்திவிட்டு, குழந்தைகளை படுக்க வைத்துவிட்டு, உள்ளே வந்தவள், ‘ நாங்க சாப்பிட்டிட்டோம்… உங்களுக்கானதை அப்படியே வச்சிருக்கேன். அப்புறம் பசிச்சா சாப்பிடுங்க… இல்லே தூங்கப் போறப்போ ப்ரிட்ஜ்ல எடுத்து நானே வச்சிடறேன்… ‘ என்றபடி படுத்துக் கொண்டாள்.

படுத்தபடியே கொஞ்ச நேரம் மொபைலில் மூழ்கியிருந்தவள், இரண்டு முறை அவனைத் திரும்பிப் பார்த்து… தயங்கி… கடைசியில் கேட்டாள்.

‘ ஏதோ அப்ளிகேஷன் நீங்க பில்லப் பண்ணி கொடுத்தீங்களாம்… பாபு சொன்னான்… ‘

திரும்பிப் பார்த்து முறைத்தான். பிறகு சொன்னான், ‘ ஆமா… இன்னும் பத்து வருஷத்துல எனக்கு ஒரு மருமகள் வருவா… அப்போ நான் என்ன பண்ண… அதான் இப்போவே எனக்கும் ஒரு சீட்டு ரிஸர்வ் பண்ணிட்டு வந்திருக்கேன்… ‘ சொல்லிவிட்டு மறுபடியும் லேப்டாப்பில் மூழ்கிவிட்டான்.

அவளது முகம் மாறியது. சில நொடிகளில் அவள் விசும்புவது கேட்டது. ஆனால் திரும்பிப் படுத்திருந்தாள். இவன் லேப்டாப்பிலேயே மூழ்கியிருந்தான்.

ஒவ்வொரு தீபாவளிக்கும் தனது கணக்கிலிருந்து நன்கொடை அனுப்பவேண்டி அவன் எழுதிக் கொடுத்த ஈ.ஸி.எஸ். பாரம்தான் அது என்பது அவனுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

தனக்குள் சிரித்துக் கொண்டான், இப்போது.

எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும் 

 (முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    மேக்ஸ் டீச்சர் (சிறுகதை) – வேலூர். D. சீனிவாசன்

    நாகி (சிறுகதை) – நாமக்கல் எம். வேலு