2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
அத்தியாயம் 1 அத்தியாயம் 2 அத்தியாயம் 3 அத்தியாயம் 4
அத்தியாயம் 5 அத்தியாயம் 6 அத்தியாயம் 7 அத்தியாயம் 8
அத்தியாயம் 9 அத்தியாயம் 10 அத்தியாயம் 11 அத்தியாயம் 12
சற்று தூரத்தில் வரும் போதே ஆறுமுகத்துடன் கோபியும் நிற்பதைப் பார்த்து விட்டவள், அப்படியே திரும்பிப் போக நினைக்கும் போது, “சரஸ்வதி… வாம்மா” என்று ஆறுமுகம் கத்தலாய் அழைக்க, அவர் பேச்சை மீற முடியாதவளாய் தயங்கித் தயங்கி வந்தாள்.
எதிர்பாராத இடத்தில், எதிர்பாராத நிலையில், சரஸ்வதியைப் பார்த்து விட்ட கோபி தர்ம சங்கடத்திற்குள்ளானான். “இவ எப்படி…. இங்கே?” யோசித்தான்.
அருகில் வந்த சரஸ்வதி கோபியைப் பார்க்கப் பிடிக்காதவளாய் முகத்தை வேறு திசையில் வைத்துக் கொண்டு, “சார்… எதுக்கு என்னைக் கூப்பிட்டீங்க?” கேட்டாள்.
“இவருக்கு உன்னை அறிமுகப்படுத்த தான் கூப்பிட்டேன்!” என்ற ஆறுமுகம், “கோபி சார் பாருங்க… உங்களைத் தேடி உங்க மனைவி வந்திருக்காங்க” என்றார்.
“என்னைப் பொறுத்தமட்டில் என் புருஷன் எப்பவோ செத்துப் போயிட்டான்… கண்டவங்களையெல்லாம் என் புருஷன்னு சொல்லாதீங்க சார்” கோபமாய்ச் சொன்னாள் சரஸ்வதி.
“சரி உன் மகனோட அப்பா” சிரித்தபடி ஆறுமுகம் சொல்ல,
“அவனோட அப்பாவும் செத்திட்டார்” ஆணித்தரமாய்ச் சொன்னாள் சரஸ்வதி.
“என்ன கோபி சார்… இப்படி அமைதியா நின்னுட்டிருந்தா எப்படி?.. எதாச்சும் சொல்லுங்க” கோபியைத் தூண்டினார் ஆறுமுகம்.
“சார்… நீங்க என்னைப் படகுல அனுப்பிச்சீங்க, “போய் வெள்ளத்துல தவிக்கற மக்களைக் காப்பாத்திக் கூட்டிட்டு வாங்க”ன்னு… நானும் போனேன்… அங்க போய்ப் பார்த்த பின்னாடிதான் சார் மனித உயிரோட மதிப்பு என்ன?ன்னு எனக்குப் புரிஞ்சுது!… வெள்ளத்துல தத்தளிச்சிட்டிருந்த மக்கள் மனசுல வேற்றுமையே கொஞ்சம் கூட இல்லை சார்!… சாதி… மதம்… பணக்காரன்… ஏழை… எந்த வித்தியாசமும் அங்க தெரியலை சார்!… தானும் தப்பிக்கணும்… தன்னால் முடிஞ்ச அளவுக்கு சக மனுஷங்களையும் காப்பத்தணும்ங்கற எண்ணம்தான் சார் அங்க மேலோங்கியிருந்திச்சு!… இத்தனை நாள் நான் வாழ்ந்த வாழ்க்கையின் தவறுகள் கொஞ்சம் கொஞ்சமாய்ப் புரிய ஆரம்பிச்சுது சார்” சொல்லியவாறே சரஸ்வதியை அவன் ஓரக்கண்ணால் பார்க்க, அந்தப் பார்வையில் மன்னிப்பு வேண்டும் பாவனை தெரிய
“சரஸ்வதி… கோபி சொன்னதைக் கேட்டியா?… ஆணின் அன்பில் மென்மை இல்லாமலிருக்கலாம்… ஆனா உண்மை இருக்கும்!… கோபி இப்ப பழைய கோபி இல்லை!… மழை வெள்ளத்தால் கழுவப்பட்ட புது கோபி!… நீ அவன் மனசைப் புரிஞ்சுக்கிட்டு… மறுபடியும் அவனோட சேர்ந்து வாழப் பாரு” என்றார் ஆறுமுகம்.
நீண்ட யோசனைக்குப் பிறகு, கோபியின் பக்கம் திரும்பி சரஸ்வதி, அவன் தன் மகன் ராஜாவைத் தூக்கி வைத்துக் கொஞ்சுவதைக் கண்டு நெகிழ்ந்து போனாள். ஆனாலும், அடிமனதில் ஒருவித அச்சம் இருந்து கொண்டேயிருக்க, “கோபி சார்… பேசுங்க உங்க மனைவிகிட்டே” சிரித்தவாறு சொன்னார் ஆறுமுகம்.
அப்போது கோபியைத் தேடி வந்த அவன் நண்பர்கள் அந்தச் சூழ்நிலையைப் பார்த்து அப்படியே திரும்பிப் போக முயல, “ஹலோ… பிரதர்ஸ்… என்ன அப்படியே போறீங்க!… வாங்க… இங்கே” அழைத்தார் ஆறுமுகம்.
அவர்கள் தயக்கத்துடன் வர, “உங்க தலைவரோட மனைவியையும்… மகனையும் நீங்களும் அறிமுகப்படுத்திக்கங்க” என்று சொல்லி விட்டு சரஸ்வதியையும், ராஜாவையும் ஆறுமுகம் காட்ட, அவர்கள் கோபியைப் பார்த்தனர். அவன் தன் தலையை மேலும் கீழும் ஆட்டி அதை ஆமோதித்தான்.
“சரஸ்வதி… உன் கணவரோட பேசும்மா” மீண்டும் ஆறுமுகம் வற்புறுத்தினார்.
அவள் தொடர்ந்து அமைதியே காக்க, கோபி தன் வைராக்கியத்தை விட்டு விட்டு பேசினான். “சரஸ்வதி… என்னை மன்னிச்சிடு சரஸ்வதி!… “
அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்த சரஸ்வதியின் கண்கள் கோபியின் கண்களுக்குள் ஊடுருவி அதில் தெரியும் அன்பின் உண்மை நிலையைச் சோதிக்க
“ம்மா… இதுதான் என்னோட அப்பாவா?” ராஜா தன் பிளவு பட்ட வாயால் கேட்க,
“ஆமாம்ப்பா… இவர்தான் உன் அப்பா” என்றாள் சரஸ்வதி தன் கோபத்தை விடுத்து.
“சரி… கணவனும்… மனைவியும்… குழந்தையும் ஒண்ணு சேர்ந்திட்டாங்க… இனி இங்க நமக்கென்ன வேலை?…வாங்கப்பா போவோம்!… அவங்க பேசட்டும்” சொல்லி விட்டு கோபியின் நண்பர்களையும் அழைத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தார் ஆறுமுகம்.
போகும் போது, “த பாருங்க… ரெண்டு பேரும் மறுபடியும் பழைய கதைகளைப் பேசி… மனசைக் கெடுத்துக்காதீங்க!… இந்த மழை வெள்ளத்திற்குப் பிறகு இனி எல்லாமே சந்தோஷமே!ன்னு நெனச்சு புது வாழ்க்கையைத் துவங்குங்க… என்ன?” என்று சொல்லி விட்டுச் சென்றார்.
அவ்ர்கள் சென்றபின் நீண்ட நேரம் எதுவும் பேசாமல் அமைதி காத்த சரஸ்வதியிடம், “என்ன சரஸ்வதி… என் மேல் உனக்கு இன்னும் முழு நம்பிக்கை வரலையா?” கேட்டான்.
“எப்படி வரும்?… வயித்துப் புள்ளைத்தாய்ச்சியை அனாதையா தவிக்க விட்டுட்டுப் போன மனுஷனை…” மேலே பேச முடியாமல் அவள் தவிக்க
“ஒத்துக்கறேன் சரஸ்வதி… அது நான் செய்த மாபெரும் தப்புத்தான்… ஒத்துக்கறேன்!… உன்னோட வலிகளை உணர்றேன்… மழை வெள்ளத்துல மக்களெல்லாம் சாதி… மத… இன பேதம் பார்க்காம… ஒருத்தருக்கொருத்தர் உதவிக்கறதையும்… யாரென்றே தெரியாத சக மனுஷனோட உசுரைக் காப்பாத்த போராடறதையும் பார்த்த பிறகுதான் சரஸ்வதி நான் மனித வாழ்க்கையோட மகத்துவத்தைப் புரிஞ்சுக்கிட்டேன்!” சொல்லும் போது அவன் விழிகள் கலங்குவதைப் பார்த்த சரஸ்வதிக்கு லேசாய் மனசு வலித்தது.
“அந்த கந்து வட்டிக்காரன்கிட்டே வேலைக்குப் போக வேண்டாம்… போக வேண்டாம்”…ன்னு நீ பல தடவை சொன்னே?… நான் கேட்கலை!… அவனுக்காக நான் செஞ்ச தப்புகளையெல்லாம் தனக்கு சாதகமாய்த் திருப்பிட்டு… என்னை நாலு வருஷம் ஜெயில்ல இருக்கற மாதிரிப் பண்ணிட்டான்!… இப்ப நான் அவன் கிட்ட வேலை பார்க்கறதில்லை!”
“வேற என்ன வேலை பார்த்திட்டிருக்கீங்க?” தலையைச் சாய்த்தபடி கேட்டாள்.
“அது வந்து… ஜெயிலுக்குப் போயிட்டு வந்த பிறகு… நானும் திருந்தி வாழலாம்ன்னுதான் நெனச்சேன் சரஸ்வதி!… ஆனா இந்தச் சமூகம் என்னைத் திருந்தி வாழ விடலை சரஸ்வதி!… ஜெயிலுக்குப் போயிட்டு வந்தவன் என்பதால் எனக்கு யாருமே வேலை குடுக்கலை சரஸ்வதி!… அதனால…. அதனால…” இழுத்தான்.
“சொல்லுங்க… அதனால…?”
“நான் மறுபடியும் அடிதடி… வழிப்பறின்னு பழைய வேலையையே தொடர ஆரம்பிச்சிட்டேன்” என்றான் மிகவும் சங்கோஜத்தோடு.
மெல்ல அவனருகே வந்து அவன் தோளைத் தொட்ட சரஸ்வதி, “புரிஞ்சுக்கிட்டேன்ங்க… திருந்தி வாழ நினைக்கற உங மனசை நான் புரிஞ்சுக்கிட்டேங்க!… கவலைப் படாதீங்க… ஆறுமுகம் சார் கிட்டே சொல்லி உங்களுக்கு ஒரு நல்ல வேலையை நான் ஏற்பாடு பண்ணித் தர்றேன்!” என்றாள்.
“அதுக்கும் வாய்ப்பேயில்லை சரஸ்வதி!… ஏன்னா… இந்த இல்லத்துக்கு வந்து “அம்மனுக்கு கூழ் ஊத்தறோம்ன்னு நன்கொடை குடுங்க”ன்னு மிரட்டித் தகராறு பண்ணியிருக்கேன்!… இவங்க தராததால.. இங்கிருக்கற ஊனமுற்ற பசங்க வெளிய போய்ச் சம்பாதிக்கறதை அங்கேயே போய் உதைச்சுப் பிடுங்கியிருக்கேன்!… வாட்ச்மேனை அடிச்சிருக்கேன்… வேன் டிரைவரை உதைச்சிருக்கேன்!… எனக்கு எப்படி அவர் உதவுவார்?” தலையை இட, வலமாய் ஆட்டிக் கொண்டே சொன்னான் கோபி.
“உங்களுக்கு அந்த ஆறுமுகம் சாரைப் பத்தித் தெரிஞ்சது அவ்வளவுதான்!… அவர் ரொம்ப நல்ல மனுஷன்!… அடிக்கிற கையை அணைக்கும் பண்பாளர்!… நிச்சயம் அவர் நமக்கு உதவுவார்!… கடவுளைப் பார்த்ததில்லை’ன்னு எல்லோரும் சொல்லுவாங்க… ஆனா இங்கிருக்கற எல்லோரும் சொல்லுவாங்க “நாங்க பார்த்திருக்கோம்… ஆறுமுகம் சார் வடிவத்துல!”ன்னு…”
பேசி முடித்ததும் இருவரும் நேரா ஆறுமுகம் சார் அறைக்குச் சென்றனர்.
“சார்… வாழ்க்கையே முடிஞ்சு போச்சு”ன்னு இருந்த எனக்கு ஒரு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுத்தீங்க!… அதே மாதிரி மனம் திருந்தி வந்திருக்கற இவருக்கும்…”
அவள் சொல்லி முடிப்பதற்குள், “கவலையேபடாதே சரஸ்வதி!… கோபி சாருக்கு ஒரு நல்ல தொழிலை ஏற்பாடு பண்ணித் தர நானாச்சு!…” என்று சொல்லி விட்டு கோபியின் முகத்தைத் திரும்பிப் பார்த்தார் ஆறுமுகம். அவன் தன் மகனின் பிளவுபட்ட வாயைக் கவலையோடு பார்த்துக் கொண்டிருக்க,
“கோபி சார்… ராஜாவுக்கு ஆபரேஷன் பண்ணி முகத்தை சரி செய்வதற்காக அரசாங்கத்திடம் இல்லம் மூலமா விண்ணப்பிச்சிருக்கேன்!… கூடிய சீக்கிரம் ஓ.கே. ஆயிடும்” என்றார் ஆறுமுகம்.
கோபியும், சரஸ்வதியும் அவரைக் கையெடுத்துக் கும்பிட்டபடி அங்கிருந்து நகர்ந்தனர்.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings