தன்காயம் காப்பதற்கே வெங்கா யத்தைத்
தாராள மாய்உணவில் சேர்க்க வேண்டும்
தின்பதினை உள்வாங்கும் இரப்பைப் புண்ணைத்
திண்ணமுடன் எலுமிச்சை சாறோ ஆற்றும் !
அன்னாசி பழம்சிறுநீர் கடுப்பை நீக்கும்
அதிகரத்தக் கொதிப்படக்கும் அகத்திக் கீரை
வன்இருமல் தனையோட்டும் வெந்தயக் கீரை
வளர்கொழுப்பைக் குறைக்கும் பன்னீர் திராட்சை !
கல்லீரல் வலிமைபெறப் பழம்கொய் யாவைக்
காலையிலே நாள்தோறும் உண்ண வேண்டும்
நல்லதொரு கம்பங்களி உண்டு வந்தால்
நம்முடலின் சூடெல்லாம் தணிந்து போகும் !
வல்லதொரு சுண்டக்காய் உண்ட உணவை
வகையாகச் செரிக்கவைத்து நலத்தைப் பேணும்
முள்ளங்கி சாறதனைப் பருகி னாலே
முள்குத்தல் போல்குத்தும் தலைநோய் ஓடும் !
மூலநோயை வாழைப்பூ கூட்ட கற்றும்
மூண்டவாத நோயகற்றும் அரைக்கீ ரைதாம்
ஏலக்காய் வாய்நாற்றம் மாய மாக்கும்
தேனிஞ்சி குருதியினைத் தூய்மை யாக்கும் !
சீலமாக்கும் பித்தத்தை நெல்லிக் காய்தாம்
சீர்செய்யும் உடல்எடையை முட்டைக் கோசு
ஓலமிடும் பசியடக்கி நோன்பி ருந்தால்
ஓங்கிநலம் நோயின்றி வாழ்வோம் நன்றே !
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings