2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6
சியாமளா வாடகை இருந்த வீடு மிகவும் சிறிய போர்ஷன் தான். ஒரே ஒரு ஹால், அதுவே தான் படுக்கை அறை. அதிலிருந்து நேராக உள்ளே போகிறது சமையலறை, அது கொஞ்சம் பெரியதாக இருந்ததால் அதுவே டைனிங் ஹாலும் கூட. வெளியே ஒரு குளியலறை, பக்கத்தில் ஒரு கழிப்பறை. எல்லாமே சின்ன ஸைஸ்தான், ஆனால் வீட்டை சுத்தமாக வைத்திருந்தார்கள். விக்னேஷும் அவன் அம்மாவும் டின்னர் சாப்பிட்டு விட்டு கிளம்பினார்கள். சியாமளாவிற்கு அவர்கள் வந்தது மிகவும் சந்தோஷமாக இருந்தது, ஆனால் அவர்கள் கிளம்பிய பிறகு வீடே வெறிச் சென்று இருந்தது.
சமையல் அறையில் வந்து விக்னேஷ் பேசியதும், டக்கென்று இவள் கைகளைப் பிடித்துக் கண்ணில் ஒற்றிக் கொண்டதும், இவளுக்கு ஏதோ புரிவது போல் இருந்தது. ஆனால் என்ன வென்று தெரியவில்லை.
அதிலிருந்து… ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலையும், விக்னேஷ் ஆட்டோ எடுத்துக் கொண்டு வந்து விடுவான். சியாமளாவின் சம்மதம் இல்லாமலே விஷ்ணுவும், தர்ஷணாவும் அவன் ஆட்டோவில் ஏறி ஜம்மென்று உட்கார்ந்து விடுவார்கள். வேறு வழியில்லாமல் சியாமளாவும் அவர்களோடு கிளம்புவாள். ஞாயிறு மாலை மனமேயில்லாமல் தங்கள் வீட்டிற்குத் திரும்புவார்கள். தர்ஷணாவும் விஷ்ணுவும் இப்போது தான் கொஞ்சம் சமாதானம் ஆனார்கள்.
இருவருக்கும் எப்போதும் மாமா புராணம் தான். “மாமா அதை வாங்கிக் கொடுத்தார், இதை வாங்கிக் கொடுத்தார்” என்று எப்போதும் மாமாவின் பெருமை தான். ஆனால் சியாமளாவிற்கு இப்போதெல்லாம் விக்னேஷின் அருகிலேயே இருக்க வேண்டும், பிரியாமல் இருக்க வேண்டும் என்று மனம் விரும்பியது.
ஒரு வருடம் ஓடி விட்டது. சென்ற வருடம் வந்தது போல் ரிசல்ட் நல்ல மாதிரி வர வேண்டும் என்று ஒரே பிரஷர் சியாமளாவிற்கு. தர்ஷணாவிற்கோ, பன்னிரண்டாம் வகுப்பில் மாநிலத்தில் முதல் மாணவியாக வந்து, முதலமைச்சருக்குக் கொடுத்த வாக்கினைக் காப்பாற்றி மருத்துவக் கல்லூரியில் நுழைய வேண்டுமென்ற கவலை.
ஒரு நாள் விடியற்காலை சியாமளா வீட்டின் கதவைத் தட்டினான் விக்னேஷ்.
“வாருங்கள் மாமா, என்ன இவ்வளவு காலையில்?”
“சியாமளா… அம்மா திடீரென்று மயக்கமாக விழுந்து விட்டார்கள். தனியார் மருத்துவமனையில் சேர்த்து விட்டேன். ஐ.ஸி.யூ.வில் வைத்திருக்கிறார்கள். இன்று ஒரு நாள் லீவ் போட முடியுமா?” என்றான் விக்னேஷ் பதறிய குரலில்.
“முதலில் கிளம்புங்கள். அத்தையிடம் என்னை மருத்துவமனையில் இறக்கி விட்டு, இவர்கள் இருவரையும் பள்ளிக்கு அனுப்பி விடுங்கள். இன்றும் நாளையும் எனக்கு லீவ் சொல்லி விடுகிறேன். பிறகு சனி ஞாயிறு விடுமுறை நாள் வந்து விடுகிறது, கிளம்புங்கள்” என்று ஒரு லெதர் பேகில் எல்லோருக்கும் இரண்டு செட் துணி எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டாள்.
சியாமளாவை மருத்துவமனை ஐ.ஸி.யூ.வார்டின் எதிரே உள்ள நாற்காலியில் உட்கார வைத்து விட்டு, தர்ஷணாவையும் விஷ்ணுவையும் அழைத்துக் கொண்டு கிளம்பினான் விக்னேஷ். அவர்கள் இருவருக்கும் டிபன் வாங்கிக் கொடுத்து, லஞ்ச்’சிற்கும் ஏதோ ஒரு கலந்த சாதம் வாங்கிக் கொடுத்து பள்ளியில் கொண்டு போய் விட்டான். மாலையில் தான் வந்து அழைத்துப் போவதாகவும், அதுவரை பள்ளியை விட்டு வெளியில் வரக் கூடாதென்றும் அறிவறுத்தி விட்டு, சியாமளாவிற்கும் சாப்பிட வாங்கிக் கொண்டு கிளம்பி விட்டான்.
மருத்துவமனையில், அவன் அம்மாவிற்கு மயக்கம் தெளிந்து விட்டதால் வார்டுக்கு அனுப்பி விட்டதாகக் கூறினார்கள். அவன் அம்மா களைப்போடு கண்ணை மூடிப் படுத்திருந்தாள். சியாமளா , பக்கத்து நாற்காலியில் உட்கார்ந்து ஆறுதலாக அத்தையின் கை மேல் கை வைத்திருந்தாள். அம்மாவின் இன்னொரு கையில் குளூகோஸ் ஏறிக் கொண்டிருந்தது.
“அம்மாவிற்கு இப்போது எப்படி இருக்கிறது?” என்றான் விக்னேஷ் மெதுவாக.
“கொஞ்சம் களைப்பாக இருக்கிறார்கள்” என்றாள் சியாமளா மெல்லிய குரலில்.
அம்மாவின் நெற்றியில் கை வைத்துப் பார்த்தான் விக்னேஷ். அத்தை கண் விழித்துப் பார்த்தாள். தனக்கு உடம்பிற்கு ஒன்றும் இல்லையென்றும், சியாமளாவிற்கு ஏதாவது சாப்பிட வாங்கிக் கொடுக்க வேண்டும் என்றும் மெதுவான குரலில் கூறினாள். வாங்கிக் கொண்டு வந்த சாப்பாட்டுப் பொட்டலத்தைக் சியாமளாவிடம் கொடுத்தான் விக்னேஷ். அந்த அறையிலேயே ஒரு சிறிய டேபிள் இருந்தது. வாங்கி வந்த டிபனை அந்த டேபிள் மேல் பிரித்து வைத்தாள் சியாமளா.
“நீங்கள்?” என்றாள் சியாமளா. அப்போது தான் சாப்பிடவில்லை எனபதே அவனுக்கு ஞாபகம் வந்தது.
“இன்னும் சாப்பிட்டிருக்க மாட்டீர்கள், எனக்குத் தெரியும். .இருவருமாக சாப்பிடலாம், வாருங்கள்” என்று அவனுக்குப் பாதியாகப் பிரித்து வைத்தாள்.
சாப்பிட்டுக் கொண்டே விக்னேஷ், “அம்மா ஏன் திடீரென்று மயக்கமாகி விட்டார்கள் என்று தெரிந்ததா? டாக்டர் என்ன சொன்னார்?” என்று கேட்டான்.
“இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்திருக்கிறது, அதனால் ஏற்பட்ட மயக்கமாம். அத்தை நேற்று இரவு சாப்பிட்டார்களா?” என்று கவலையுடன் கேட்டாள் சியாமளா.
“எனக்குத் தெரியாதே சியாமளா. நான் நேற்றிரவு வீட்டிற்கு வரும் போது மணி பத்துக்கு மேல் ஆகி விட்டது. அப்போது அம்மா தூங்கி விட்டிருந்தார்கள், நான் எழுப்பவில்லை“
“ஏன் அவ்வளவு நேரம் வெளியே இருக்கிறீர்கள்?”
“சென்ட்ரல் ஸ்டேஷனிலிருந்து தாம்பரம் ஒரு சவாரி, இரவு எட்டு மணிக்கு வந்தது. தாம்பரத்திலிருந்து வீட்டிற்கு வர நேரம் ஆகியது” என்றான் விக்னேஷ் .
“நல்லவேளையாக உடனடியாக்க் கொண்டு வந்து எமர்ஜென்ஸியில் சேர்த்தீர்கள், இல்லையென்றால் சீரியஸ் ஆகியிருக்கும்“ என்றாள் .
விக்னேஷ் வருத்தமாக தலைகுனிந்து நின்றான். அன்று முழுவதும் கண்காணிப்பில் வைத்திருந்து அடுத்த நாள் டிஸ்சார்ஜ் செய்து விட்டார்கள்.
“வயதாகி விட்டதால் இரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென்று காரணமில்லாமல் ஏறும் அல்லது இறங்கும். அதனால் வாரத்திற்கு மூன்று நாள் என்று வெவ்வேறு நேரங்களில் டெஸ்ட் செய்து குறித்து வைக்க வேண்டும்” என்று டாக்டர்கள் அறிவுறுத்தினர். எல்லாவற்றிற்கும் தலையாட்டிய விக்னேஷ், அம்மாவை அழைத்து வந்து வீட்டில் படுக்க வைத்தான்.
“அப்படியென்றால் வாரத்தில் மூன்று நாட்கள் டாக்டரிடம் செக்-அப் செய்ய அம்மாவை அழைத்துச் செல்ல வேண்டுமா சியாமளா? எனக்கு ரொம்ப பயமாக இருக்கிறது, நீங்கள் மூவரும் இங்கேயே இருக்கிறீர்களா?“ என்றான் இரைஞ்சுதலாக.
“நாமே வீட்டில் செக்-அப் செய்துக் கொள்ளலாம். பார்மஸியில் போய் ஒரு குளுகோமீட்டர், ஊசி, டெஸ்ட் ஸ்ட்ரிப்ஸ் எல்லாம் வாங்கி வர வேண்டும்” என்றாள் சியாமளா. உடனே போய் வாங்கி வந்தான் விக்னேஷ். எப்படி செக்-அப் செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தாள் சியாமளா.
“சியாமளா, நீங்கள் வீட்டைக் காலி செய்து விட்டு இங்கேயே வந்து விடுங்களேன். ஒரு நாளைக்கு மூன்று முறை செக்-அப் செய்வது, அம்மாவின் ஆகாரத்தைப் பார்த்துக் கொள்வது எல்லாம் சரியாகச் செய்வேனோ என்று பயமாக இருக்கிறது”
“ஏன் மாமா, ஒரேயடியாக வீட்டை காலி செய்தால் மறுபடியும் நீங்கள் ‘வெளியே போங்கள்‘ என்றால் நாங்கள் என்ன செய்வது?” என்றாள் தர்ஷணா.
“அம்மா தாயே… நீங்கள் மூன்று பேரும் வரிசையாக நில்லுங்கள், காலில் சாஷ்டாங்கமாக விழுந்து மன்னிப்பு கேட்கிறேன். இனிமேல் அப்படிச் சொல்ல மாட்டேன்” என்றான் விக்னேஷ். விஷ்ணு சிரித்தான், படுத்திருந்த அத்தையும் சிரித்தாள்.
“போதும் விக்னேஷ், இனிமேல் அப்படியெல்லாம் பேசாதீர்கள். ஆனால் நான் உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும். இன்று மாலை பக்கத்தில் உள்ள பெருமாள் கோயிலிற்கு வரமுடியுமா?” என்றாள் அவனிடம் மிக ரகசியமான குரலில். அவனும் அவளையே உறுத்துப் பார்த்துக் கொண்டு வருவதாகத் தலை அசைத்தான் .
‘என்னிடம் இவள் என்ன தனியாகப் பேசப் போகிறாள்? மனம் திறந்து தன் உள்ளத்தைக் கூறுவாளா? என்னை ஏற்றுக் கொள்வாளா? அவள் மட்டும் என்னை விரும்புவதாக்க் கூறினால் என்னை விட அதிர்ஷடசாலி யார் இருக்க முடியும்? இந்த வருஷத்துடன் என் சட்டப்படிப்பும் முடிகிறது. பெரிய வக்கீலிடம் ஜூனியராகச் சேர்ந்தால் என் சியாமளாவை இதுவரை பட்ட கஷ்டமெல்லாம் போதும் என்று அருமையாகப் பார்த்துக் கொள்வேன். ஆனால் அம்மா இப்படி உடம்பு சரியில்லாமல் படுத்திருக்கும் போது, நிச்சயமாக சியாமளா தன் உள்ளத்து ஆசைகளைத் தெரிவிக்க மாட்டாள். வேறு என்னவாக இருக்கும்?’ என்ற யோசனையில் பொழுதை ஓட்டினான் விக்னேஷ்.
கோதுமை ரவையில் கஞ்சி காய்ச்சி அத்தைக்குக் கொடுத்தாள், பிறகு அவளுக்குத் தரவேண்டிய மாத்திரைகளையும் கொடுத்தாள். மின் விசிறியை அவள் பக்கமாகத் திருப்பி வைத்து தூங்கும் வரை அவளுடன் இருந்தாள். பிறகு எழுந்து வந்து இவர்கள் நால்வருக்கும் உணவு தயாரித்தாள். தர்ஷணாவிற்கும் விஷ்ணுவிற்கும் கொஞ்சம் பாடங்கள் படிக்கக் கொடுத்து விட்டு, விக்னேஷுடன் கோயிலுக்குக் கிளம்பினாள்.
கோயிலில் சாமி கும்பிட்டு விட்டு இருவரும் அங்கேயுள்ள ஒரு தூணில் சாய்ந்து உட்கார்ந்தார்கள். விக்னேஷிற்குப் பல எதிர்ப்பார்ப்புகளும் ஆசைகளும் உள்ளத்தில் மோதின.
“சொல்லுங்கள் சியாமளா” என்றான் விக்னேஷ் ஆவலுடன்.
“நான் சொன்னால் உங்களுக்கு கோபம் வரும். அத்தையின் எதிரில் பேச வேண்டாம் என்று தான் உங்களைக் கோயிலுக்கு வரச் சொன்னேன்” என்றாள் தயக்கத்துடன்.
“விஷயத்தைச் சொல்லுங்கள், இப்படி முன்னுரை முகவுரை எல்லாம் கொடுத்தால் எப்படி?” என்றான்.
“வந்து…” என்று தயக்கமாக இழுத்தவள், “வத்சலாவை இந்த வீட்டிலேயே வைத்துக் கொண்டால் என்ன?” என்றாள்.
உட்கார்ந்தவன் ‘டக்’ கென்று எழுந்து கொண்டான். “உனக்கு ஏதாவது அறிவிருக்கா? அவளை வீட்டிற்கே வரக் கூடாதென்கிறேன், நீ அவள் இங்கேயே தங்கலாமா என்று கேட்கிறாயே?” என்று அடித்தொண்டையில் யாருக்கும் கேட்காமல் உறுமினான்.
(தொடரும் – வெள்ளி தோறும்)
GIPHY App Key not set. Please check settings