“அம்மா நான் வேலைக்கு கிளம்பறேன்” என கூறியவாறு தன் அறையில் இருந்து வெளியே வந்தாள் வனிதாமணி.
“சரி மா” என்று கூறிவிட்டு நகர்ந்தார் அவளின் அன்னை கங்கா.
தன் கைப்பையை எடுத்து கொண்டு திரும்ப, எதிரில் வந்த அவளின் தம்பி மாதவன், “ச்சே காலையிலேயே இந்த முகத்தை தான் பாக்கணுமா? இன்றைய நாள் எப்படி நல்லா இருக்கும்?” என்று கோபத்தில் பொங்கியவாறு அறை கதவை வேகமாக சாற்றினான்.
இதை கேட்ட அவள் முகமோ அமைதியாக தான் இருந்தது.
இவை எல்லாம் கேட்டுக் கேட்டு பழகிய வார்த்தைகள் தானே, இதில் புதிதாக வருந்த என்ன இருக்கிறது என்று நினைத்துக் கிளம்பினாள்.
வீதியில் நடக்கும் போது, ஏதோ முள் மேல் நடப்பதை போல உணர்ந்தாள்.
சிலரின் பரிதாப பார்வை, சிலரின் ஆராய்ச்சி பார்வை, சிலரின் காம பார்வை, சிலரின் அருவருப்பான பார்வை என அனைத்து பார்வைகளையும் கடந்து அந்த பேருந்தில் ஏறினாள்.
இருக்கையில் அமர்ந்து, வெளியே வேடிக்கை பார்க்கத் தொடங்கினாள்
அப்போது வயதான ஒரு பெண்மணி அவளின் அருகே வந்து அமர்ந்தார்
கண்டக்டர் அருகே வர, இவளுக்கு வேர்த்து கொட்டியது. ‘இப்போது என்ன செய்வது’ என உள்ளம் பதறியது.
“எங்க மா போறீங்க?” என்று வினவினார் கண்டக்டர்
அமைதியாக இருக்க முடியாது, பேசித் தான் ஆக வேண்டும் என்று நினைத்து ‘அரசு பள்ளி பெயர் ஒன்றை’ கூற, அவளின் குரல் வேறுபாட்டை வைத்தே அடையாளம் கண்டு கொண்ட அந்த பெண்மணி, சட்டென்று எழுந்து நின்று கொண்டு, அவளை ஒரு பார்வை பார்த்தார்.
அந்த பார்வையில் அமிலத்தை வாரி இரைத்தது போல் மனதில் துடித்தாள்.
டிக்கெட்டை அவளிடம் நீட்டி விட்டு, எதுவும் பேசாமல் அகன்றார் கண்டக்டர்
ஆம்… அவள் ஒரு திருநங்கை.
பார்த்தால் தெரியாது, பேசினால் மட்டுமே தெரியும்.
சந்திரன் – கங்கா தம்பதியின் பிள்ளை.
அடுத்து பிறந்தவன் தான் மாதவன். பாசமாக தான் இருந்தான், அவள் ஒரு திருநங்கை என்பதை அறியும் வரை
பிள்ளையைப் பற்றிய கவலையில் வேலைக்கு சரியாக செல்லாமல், எந்நேரமும் குடித்து உடலை கெடுத்துக் கொண்டு இறந்தார் சந்திரன்.
குடும்ப வறுமையை போக்க, தம்பியின் படிப்புக்கு என ஒரு ஆசிரமத்தில் வேலைக்கு சேர்ந்தாள்.
அங்கு அவளுக்கு சமையல் வேலை.
மாதவன் மட்டும் அவளை வார்த்தைகளால் வதைத்துக் கொண்டே இருத்தான்.
தம்பி தானே என்று அவளும் பொறுத்து கொள்கிறாள்.
வழக்கம் போல் தன் வேலையை முடித்துவிட்டு, ஒரு மரத்தடியில் அமர்ந்து இருந்தாள்.
அப்போது அவள் தோளில் ஒரு கரம் விழுந்தது.
திடுக்கிட்டு நிமிர்ந்து பார்க்க, அங்கே ஒரு பெண்மணி புன்சிரிப்போடு நின்றார்.
“என்ன பயந்துட்டயா?” என்று கேட்க
“இல்லை” என்று தலையசைத்தவள்.
அப்போது தான் அவரின் குரலை கவனித்தாள்.
மனதில் ‘என்னை போல இவரும் திருநங்கையா?’ என்று திகைக்க
“நீ நினைப்பது சரிதான். நானும் ஒரு திருநங்கை தான்” என்றார் அவர்
அவளால் நம்ப முடியவில்லை. எளிமையான ஒரு காட்டன் சாரியில் கம்பீரமாக இருந்தார்.
“உன்னிடம் நான் கொஞ்சம் பேச வேண்டும்” என்று கூற
“சொல்லுங்கள்” என்றாள்.
“என்னுடைய பெயர் உமாசங்கரி. வசதியான குடும்பம் தான். என் பெற்றோருக்கு நான் ஒரே பிள்ளை. அவ்வளவு செல்லம் கொடுத்து வளர்த்தார்கள். நான் ஒரு திருநங்கை என்பதை அறிந்த நொடி, அனைத்தும் ஸ்தம்பித்து போனது. எந்நேரமும் ஓயாமல் அழுது கொண்டே இருந்தார் என் அம்மா. நானோ சிறை கைதி போல் வீட்டிலேயே முடங்கிப் போனேன்”
“நான் இப்போது ஒரு காவல்துறை அதிகாரியாக இருக்க காரணம் என் தந்தை தான். முடங்கி கிடந்த என்னை தூக்கி நிறுத்தி அவர் கூறிய வரிகள் இன்றும் எனக்குள் ஒலித்தது கொண்டு இருக்கிறது”
“என்ன வரிகள் மேடம்?” என்று ஆர்வமாக கேட்டாள்.
“சொல்லுகிறேன், ஆனால் அது யார் கூறியது என்பதை நீதான் சொல்ல வேண்டும்” என்று கூற
“முயற்சி செய்கிறேன்” என்றாள்.
“துன்பத்துக்கு துன்பம் தர வேண்டும்” என்று சொல்ல
“இது அப்துல் கலாம் அய்யா கூறியது”
“சரியாக கண்டுபிடித்து விட்டாய். இப்போது நான் கூற வருவது உனக்கு புரியும் என்று நினைக்கிறேன்” என்று கூறி அவள் முகம் பார்க்க, அவள் அமைதியாக நின்றாள்.
“இங்க பாரு வனிதா. நாம் ஒன்றும் சபிக்கப்பட்டவர்கள் இல்லை, சாதிக்க பிறந்தவர்கள் என்பதை மனதில் பதிய வைத்து கொள்ள முயற்சி செய். இன்று ஏளனமாக பார்த்த பார்வைகள் எல்லாம் நாளை ஆச்சரிய பார்வையாக மாற வேண்டும் என்றால் நம் உழைப்பு அதில் இருக்க வேண்டும்”
“நீங்கள் சொல்லுவது புரிகிறது மேடம், ஆனால் நான் இன்னும் பள்ளிப் படிப்பை கூட முடிக்கவில்லையே” என்று கவலையோடு கூற
“நான் உதவினால்?”
“நீங்கள் உதவி செய்வீர்களா?”
“நிச்சயமாக செய்வேன். உன் வாழ்க்கை வளம்பெற என்னால் முடிந்ததை செய்வேன்” என்று உத்தரவாதம் கொடுத்தார்.
ஒரு வாரம் கழித்து அவளை சந்தித்தார்.
அவள் படிப்பதற்கான அனைத்து உதவிகளையும் செய்து, அவளின் தாயிடம் பேசினார். மகளை பற்றிய கவலை கனகாவுக்கு நீங்கியது
வேலைக்கு சென்று கொண்டு, வீட்டில் இருக்கும் நேரத்தில் கவனமாக படித்தாள்.
யாருடைய பேச்சுகளை பற்றியும் யோசிக்காமல் படிப்பை மட்டுமே சிந்தித்தாள்.
பள்ளி படிப்பை வெற்றிகரமாக முடித்தவளை, மேற்கொண்டு படிக்க செய்தார்.
இதன் நடுவில் மாதவன் ஒரு கடிதம் ஒன்றை எழுதி விட்டு காணாமல் போனான்.
‘என் வாழ்க்கையை நான் பார்த்து கொள்கிறேன்’ என்று அந்த கடிதத்தில் எழுதி இருந்தான்.
தம்பியை நினைத்து வருந்தினாள்.
அவள் அன்னையோ “இனி எனக்கு மகனும், மகளும் நீ மட்டும் தான்” என்று கூறி அணைத்து கொண்டார்.
நாட்கள் அதன் போக்கில் நகர்ந்தது.
பட்டம் பெற்று போட்டி தேர்வுகளுக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டாள்.
சில தோல்விகளுக்கு பிறகு , காவல்துறை அதிகாரியாக பதவி கிடைத்தது.
முதன்முதலில் அந்த உடையை அணிந்த போது, இத்தனை நாள் பட்ட கஷ்டங்கள் எல்லாம் மறைந்து போனது.
தன் தாயிடம் ஆசி பெற்று கொண்டு, உமாசங்கரியிடம் சென்றாள்.
இருகரம் நீட்டி அரவணைத்து கொண்டார்.
“சந்தோஷமாக இருக்கு வனிதா. நீ இன்னும் பல உயரங்களை தொட வேண்டும்” என்று கூறி வாழ்த்தினார்.
அப்போது பார்த்த விதவிதமான பார்வைகள் எல்லாம் இப்போது மாறி விட்டது.
அவளின் குரு உமாசங்கரி கூறியது போல ஆச்சரிய பார்வையானது.
காக்கி உடையில் கம்பீரமாக வந்து நின்றவளை கண்ட சக அதிகாரிகள், எழுந்து நின்று சல்யூட் அடித்தனர்.
அதை தலையசைத்து ஏற்றுக்கொண்டு தன் இருக்கையில் வந்து அமர்ந்தாள்
வனிதா மணி ஐ.பி.எஸ்.
விதியின் சதியால் இப்படி பிறந்தவர்களை, விதவிதமான பார்வை பார்க்காமல் கடந்து செல்வோம்
(முற்றும்)
விமர்சனம் அனுப்ப கடைசி நாள் : மார்ச் 30, 2021 👇
Exclusive வாசிப்புப் போட்டி – சி.நா.உதயசூரியனின் ‘கல்யாண சந்தை’ நூல்
“சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு, இணைப்புகள் 👇
GIPHY App Key not set. Please check settings