in ,

யாதுமாகி ❤ (சிறுகதை) – ✍ கருணா, கோவை

யாதுமாகி ❤ (சிறுகதை)

ந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்

சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 130)

ப்போது தான் வெளியே சென்று விட்டு வண்டியை வீட்டு வாசலுக்குள் கொண்டு வந்திருந்தாள் அம்பிகா. வண்டிக்கு ஸ்டாண்ட் போடப் போனவள், அம்மாவின் அழுகுரல் கேட்டு வண்டியை அப்படியே போட்டு விட்டு உள்ளே ஓடி வந்தாள்

அப்பாவும் அதிர்ச்சியாய் அமர்ந்து இருக்க, அம்மா அழுகையை அடக்க முடியாமல் சத்தமாக அழ ஆரம்பித்தாள். அம்பிகாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. 

அப்படியே செய்வதறியாது நின்றிருந்தவள், கொஞ்சம் சுயநினைவிற்கு வந்து அப்பாவிடம் “என்ன ஆச்சு?” என்றாள்

அப்பா அதிர்ச்சியில் இருந்து மீளாதவராய், “கண்ணன் மாமா இறந்துட்டாராம், இப்ப தான் ஆதிரா போன் பண்ணா”னு சொல்லவும், அம்பிகாவிற்கு என்ன செய்வது என்றே தெரியாமல் தலை எல்லாம் சுற்றியது. 

அப்படியே செய்வதறியாது இருந்தவள் உதடு மட்டும் “என்ன ஆச்சு மாமாவுக்கு? நல்லாத் தானே இருந்தார். நேத்து சாயந்திரம் கூட போய் பாத்துட்டு தானே வந்தேன்” என்றாள்

“எனக்கும் புரியல, ஆதிரா போன்ல பேசினப்ப, காலைல சாப்பிட்டுட்டு உக்காந்து இருந்தார், திடீர்னு நெஞ்சு வலினு  சொன்னாரு. அண்ணன் வெளில போய் இருந்ததால, பக்கத்து வீட்டு அங்கிள் வந்து கார் எடுத்து ஹாஸ்பிடல் போனோம். அங்க போனதும் டாக்டர் பாத்துட்டு இறந்துட்டார்னு சொல்லிட்டாங்கன்னு சொல்லி அழ ஆரம்பிச்சுட்டா. சரி நாங்க உடனே கிளம்பி வர்றோம்ன்னு சொல்லிட்டு உனக்கு போன் பண்ணலாம்னு இருந்தேன், அதுக்குள்ள நீயே வந்துட்ட. உங்க அம்மாவும் செய்தி கேட்டதுல இருந்து அழுதுட்டே இருக்கா. எனக்கும் என்ன பண்றதுனு புரியல” என்றார் அம்பிகாவின் அப்பா

கண்ணன் அம்பிகாவின் தாய்மாமா. இவளுக்கு மாமாவை ரொம்பவும் பிடிக்கும், 

மாமாவிற்கும் இவள் தான் செல்லம். அவருக்கு அருண் என்று ஒரு மகனும், ஆதிரா என்ற மகளும் இருக்கிறார்கள். 

என்ன தான் அவருக்கு ரெண்டு பிள்ளைகள் இருந்தாலும், தங்கை மகளான அம்பிகா மீது தனி பாசம்.  கண்ணனின் மகனும், மகளும் கூட இவரிடம் ஏதாவது கேட்க வேண்டுமென்றால் நேரடியாக கேட்க மாட்டார்கள். அம்பிகாவிடம் சொல்லி கேட்க சொல்லுவார்கள். 

கண்ணனை பொறுத்தவரை அம்பிகா பேச்சிற்கு மறுபேச்சு கிடையாது. கண்ணனிடம் மட்டுமல்ல அந்த குடும்பதிற்கே அப்படி தான். 

அம்பிகா கடைக்குட்டி என்பதாலா, இல்லை யாரிடமும் இல்லாத வசீகரம் அவளிடம் இருப்பதாலா தெரியாது. ஆனால் அம்பிகாவின் அம்மா, அப்பா துவங்கி, பாட்டி, தாத்தா, சித்தி, சித்தப்பா, மாமா, அத்தை என லிஸ்ட் நீளும். 

கண்ணனின் மகன் அருணும், அம்பிகாவும் காதலிக்கிறார்கள் என்று தெரிந்ததும், குடும்பமே கொண்டாடி தீர்த்தது. இருக்காதா பின்னே, அம்பிகா கண்ணனின் செல்லம் என்றால், அம்பிகாவின் அம்மா விஜியாவிற்கு அருண் செல்லம்

அதோடு இருவரும் அத்தை மகள் மாமன் மகன் முறை வேறு.சொந்தத்துக்குள்ளயே பெண்ணிற்கு நல்ல இடம் என்று விஜியாவிற்கும், தனது தங்கை மகளே தன் வீட்டு மருமகள் என்று கண்ணனிற்கும், தங்களின் பேரப்பிள்ளைகள் இருவரும் திருமணம் செய்ய போகிறார்கள் என்று அவர்களின் பாட்டி தாத்தாவிற்கும் செம கொண்டாட்டம். 

எல்லாம் சரியாகத் தான் போய்க் கொண்டு இருந்தது. ஒரு ஞாயிறு மதியம் அருணிற்கும், அம்பிகாவிற்கும் அவர்கள் பாட்டி வீட்டு முற்றத்தில் சண்டை வரும் வரை

அருணும் அம்பிகாவும் வழக்கம் போல ஏதோ விவாதிக்க, எல்லாரும் இது எப்பவும் நடக்கும் தானே என்று அவரவர் வேலையை பார்த்துக் கொண்டிருந்தார்கள். 

ஆனால் அன்று கொஞ்சம் பெரிய விவாதமாகி, அதுவே சண்டையாகி இருவருக்குள்ளும் ஒரு பிரிவை ஏற்படுத்திவிட்டது. அவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி பேச வைக்க குடும்பமே முயற்சித்தும் பலன் எதுவும் இல்லை. 

‘நான் அவனிடம் பேச மாட்டேன்’ என்று அம்பிகா பிடிவாதமாய் நின்றாள் 

அருணிற்கும் ஆரம்பத்தில் அம்பிகாவிடம் கொஞ்சம் கோபம் தான், ‘அப்படி என்ன சொல்லிவிட்டேன் அவளுக்கு இப்படி ஒரு கோவம்’ என்று. ஆனால் ரொம்ப நாள் அது நீடிக்கவில்லை. 

ரெண்டே நாளில் அவனின் எல்லா கோவமும் பறந்து விட்டது. மீண்டும் அவளிடம் பேச வேண்டும், அவளுடன் வெளியே போக வேண்டும் எப்பவும் போல அவளிடம் விவாதிக்க வேண்டும். 

விவாதிக்கும் போது அவள் கண்கள் விரிந்து சுறுக்குவதை பார்க்க வேண்டும் என்று எல்லாம் அவனுக்கு தோன்ற ஆரம்பித்தது. அதனால் அருணும் அப்போ அப்போ பேச முயற்சிப்பான், இவள் முகத்தை திருப்பிக் கொண்டு போய் விடுவாள். 

கண்ணனின் வீட்டிற்கு சென்றால் கூட அருண் இருந்தால் மாமா, அத்தை, ஆதிராவை வீட்டு வாசலுக்கு வரச் சொல்லி பார்த்து பேசிவிட்டு சென்று விடுவாள்

அப்போதெல்லாம் அருண் உள்ளிருந்து ஏங்கி கொண்டிருப்பான், அம்பிகா எப்பவும் போல “டேய் அருண்” என்று கூப்பிட மாட்டாளா என்று. 

அவள் என்ன தான் இவனை விட நான்கு வயது சிறியவளாக இருந்தாலும், சிறு வயதில் இருந்தே ‘வாடா போடா’ என்றுதான் அழைப்பாள். 

காதலிக்க ஆரம்பித்து இரண்டு வருடமாகியும் இன்னும் அப்படித் தான் அழைப்பாள். அருணிற்கும் இவள் ‘டேய்’ என்று நாளைக்கு ஒரு முறையாவது அழைக்கா விட்டால் அன்றைக்கு நாளே போகாது. 

ஆனால் இப்போது நான்கு மாதமாகியும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை அவள். 

கண்ணனின் மனைவி பாக்கியம் கூட ஒரு நாள் கண்ணனிடம் கேட்டாள், “என்னங்க இது எப்படியும் சேத்து வெச்சர்லாம்னு பாத்தா, அம்பிகா இவ்ளோ பிடிவாதமா இருக்காளே”னு

கண்ணனோ, “அம்பிகாவ எப்படி சமாதானப்படுத்தறதுன்னு எனக்கு தெரியும். கொஞ்ச நாள் போகட்டும் நானே பேசி அவளை சமாதானப்படுத்தறேன்” என்றார்

“என்னமோ போங்க நீங்களும் உங்க மருமகளும். என் மகனை இப்போவே இந்த பாடுபடுத்தறாளே, நாம கல்யாணம் பண்ணி வெச்ச அப்பறம் என்ன எல்லாம் பண்ணுவாளோ. அந்த ஆண்டவன் தான் என் பையன காப்பாத்தணும்”னு சொல்லி சிரித்தாள். 

அதுக்கு உடனே கண்ணன், “ஏன் நீ காப்பாத்த மாட்டிய உன் புள்ளைய அவகிட்ட இருந்தது”னு கேக்க

“நான் எதுக்கு போறேன் அவங்களுக்குள்ள. அதோட அவ எதுனா சொன்ன சரியாத்தான் இருக்கும். நம்ம பையன் அருண் தான் ஏதாச்சும் ஏட்டிக்கு போட்டி பேசுவான்”னு சொல்ல

“அட பார்டா, மருமகளுக்கு இப்படி சப்போர்ட் பண்ற அத்தை கிடைச்சா உன் பையன மட்டும் இல்லை, கடவுளையே பாடாபடுத்திருவா உன் மருமகள்” என்று சொல்லி சிரிச்சார் கண்ணன். 

“செஞ்சாலும் செய்வா என் மருமக, அதெல்லாம் கெட்டிக்காரி” என்று பெருமையாக சொன்னாள் பாக்கியம்

சொல்லிக் கொண்டே, “அப்படி என்ன தாங்க சண்டை இவ்ளோ வீம்பா இருக்கா உங்க மருமக”னு பாக்கியம் கேட்க

“அது ஒன்னும் இல்ல, ஏதோ ஆண் பெண் நட்பு பத்தி பேசிட்டு இருந்தாங்களாம். அப்போ நம்ம அருண் ஆணும் பெண்ணும் நண்பர்களா இருக்கவே முடியாதுன்னு சொல்லவும், அம்பிகா உடனே எனக்கு கூடத் தான் நிறைய ஆண் நண்பர்கள் இருக்காங்க, அப்ப என்னையும் அப்படித் தான் சொல்றியான்னு கேக்க, வார்த்தைக்கு வார்த்தை முத்தி சண்டை வந்துருச்சாம்”

“என்னவோ போங்க, இதெல்லாம் ஒரு சண்டையா?”

“சரி விடு, அவ சின்ன பொண்ணு தானே. பேசி சமாதானப்படுத்திக்கலாம், நீ எதையும் யோசிக்காத. கொஞ்ச நாள் போகட்டும், நான் சரி பண்ணிடறேன்” என்றார் கண்ணன்

நாலு நாள் முன் அம்பிகா வீட்டிற்கு சென்ற கண்ணன் மாமா, “என்னம்மா சண்டை இதெல்லாம், இன்னும் எவ்வளவோ இருக்கு. இதுக்கெல்லாம் இவ்ளோ கோவப்படலாமா? அருண் சரியா சாப்பிட்டு தூங்கி நாலு மாசம் ஆச்சு. 

அருண் என்ன சொன்னான்னா, சும்மா விவாதம் பண்ணத் தான் அப்படி பேசினேன், வேற எதுவும் நான் நினைக்கல. அப்படி பாத்தா எனக்கு கூடத் தான் பெண் நண்பர்கள் நிறைய இருக்காங்க, அப்பறம் எப்படி நான் அவளை தப்பா நினைப்பேன். ஏதோ விவாதம் பண்ணும் போது, எதிர்கருத்து வெச்சா சுவாரசியமா இருக்குமேன்னு பண்ணேன். அது இப்படி எங்கள பிரிக்கற அளவுக்கு போகும்னு நினைக்கலைனு தினமும் சொல்லி வருத்தப்படறான். 

கொஞ்சம் தான் கோவத்தை கொறைச்சு அவனை மன்னிச்சுறேன் என் தங்கம்”னு கண்ணன் சொல்ல

“அண்ணா எல்லாம் நீங்க குடுக்கற செல்லம், தொட்டதுக்கு எல்லாம் கோவம்”னு சமையல் அறையில் இருந்து விஜயா கூற 

“ஆமா நான் மட்டும் தானா, குடும்பமே தானே இவளுக்கு செல்லம் குடுத்தோம்”னு கண்ணன் சொல்ல 

சிரித்த அம்பிகா, “சரி மாமா, எனக்கு இன்னும் அவன் சொன்னது எல்லாம் மனசுல இருக்கு,  கொஞ்சம் டைம் குடுங்க, நானே வந்து பேசறேன் அருண்கிட்ட” என்றாள் அம்பிகா

இப்ப நாலு நாள் கழித்து இடியென இந்த செய்தி கிடைக்க, அம்பிகாவிற்கு தன்னை சுற்றி என்ன நடக்குது என்றே தெரியாமல் அப்படியே சிலையாய் நின்றிருந்தாள்

அப்பா அவளை ஆசுவாசப்படுத்தி ஒரு நிலைக்கு கொண்டு வந்த பிறகு, அனைவரும் கண்ணனின் வீட்டிற்கு சென்றார்கள். 

அங்கே வாசலில் கண்களில் கண்ணீரோடு நின்றிருந்த அருண் இவளை பார்த்ததும்  “என் தைரியமே இங்க செத்துக் கிடக்குடி” என்று அவளை கட்டிக் கொண்டு அழுதான்

அவளோ அவன் அழும் வரை அமைதியாய் இருந்து விட்டு, அவனிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் உள்ளே சென்றாள் அம்பிகா

அருணிற்கோ, தந்தையை இழந்த துக்கமும், இவள் இந்த நிலையிலும் பேசாமல் போன துக்கமும் ஒன்று சேர கதறி அழுதான். அவனை சாமாதானப்படுத்த யார் யாரோ முயற்சித்தும் முடியவில்லை

அங்கே கூடி இருந்தவர்களில் சிலர், “ரொம்பத் தான் திமிரு போல இந்த பொண்ணுக்கு. அவன் அப்படி கதறுறான், ஒரு வார்த்தை பேசாம போய்ட்டா பாரு”னு கிசுகிசுத்தது

எதையுமே காதில் வாங்காமல் உள்ளே சென்றவள் நேரே ஆதிராவிடம் சென்றாள். அழுது அழுது கண்ணெல்லாம் சிவந்திருந்த ஆதிரா, இவளை பார்த்ததும் மீண்டும் அழ ஆரம்பித்து விட்டாள்

அவளை சமாதானப்படுத்தி, பின் தாத்தா, பாட்டி, சித்தி, சித்தப்பா என அனைவரையும் சமாதானப்படுத்தி, பின் அத்தையிடம் போனாள். அத்தை இவளை பார்த்ததும் கதறி அழ ஆரம்பித்தாள். 

“உனக்கு ஒண்ணுன்னா துடிச்சு போயிருவாரே உன் மாமா, இப்ப உன்ன பாக்கக்கூட முடியாம இப்படி இருக்காரே. உங்க ரெண்டு பேரையும் சேத்து வைக்கறேன்னு சொல்லிட்டே இருந்தாரே, இப்ப எல்லாத்தையும் விட்டுட்டு போய்ட்டாரே” என்று கதறினாள். 

அனைவருக்கும் சமாதானம் சொல்லிய அம்பிகாவால், அத்தையை சமாதானம் செய்ய முடியவில்லை, அத்தையை சமாதானப்படுத்த முயற்சித்து தோற்றாள். 

அதுவரை கிடத்தி வைத்திருந்த மாமாவின் முகத்தை பார்க்காதவள், அப்போது தான் பார்த்தாள். மாமா சிரித்து பார்த்து இருக்கிறாள், அழுது பார்த்து இருக்கிறாள், பேசியும் பார்த்து இருக்கிறாள், கோபமாகவும் பார்த்து இருக்கிறாள், அமைதியாயும் பார்த்து இருக்கிறாள் 

ஆனால் இப்படி ஒரு அமைதியோடு, கண் மூடி என்றும் பார்த்ததில்லை. அவரையே பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தவள், அழக் கூட இல்லை. பிரம்மை பிடித்தவள் போல அமர்ந்து இருந்தாள்

அவள் ஏன் இப்படி இருக்கிறாள் என்று யாருக்கும் புரியவில்லை ஏன் அவளுக்கே புரியவில்லை. அவ்வளவு பாசமாய் இருந்த மாமாவை இப்படி பார்த்தும் ஏன் அழுகை வரவில்லை? 

எல்லாருக்கும் சமாதானம் சொல்லியவள் ஏன் இப்படி வாய் அடைத்து இருக்கிறாள் என்று யாருக்கும் புரியவில்லை. அருணும் பிரம்மை பிடித்தவள் போல் அமர்ந்து இருந்த அம்பிகாவை ஒரு நிமிடம் பார்த்து அதிர்ந்து தான் போனான்

அதன்பின் அவன் செய்வதறியாது தன் அப்பாவையும் அம்பிகாவையும் மாறி மாறி பார்த்துக் கொண்டே இருந்தான் 

மாமாவின் பிணத்தையே பார்த்துக் கொண்டு யாரிடமும் எதுவுமே பேசவில்லை அவள் 4 மணி நேரமாக. பார்த்தவர்கள் அனைவருக்கும் அது பெரும் கலக்கமாக இருந்தது. 

அம்பிகாவின் அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி என அனைவரும் எதற்காக அழுவது என்று தெரியாமல் கண்ணனிற்கும், அம்பிகாவின் மௌனத்திற்குமாய் அழுது கொண்டிருந்தார்கள். 

கடைசியாக மாமாவின் பிணத்தை எடுக்கும் போது என்ன நினைத்தாளோ தெரியவில்லை வெடித்து அழுதாள் அம்பிகா. 

தன்னை கையில் எடுத்து வளர்த்த மாமா, தான் என்ன கேட்டாலும் ஏன் உயிரையே கேட்டாலும் ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் “உனக்கு இல்லாமயா என் செல்லமே, இந்தா எடுத்துக்கோ”ன்னு குடுக்கற மாமா

தன் கண்ணில் கண்ணீர் வந்தால் அவர் நெஞ்சில் ரத்தமே வந்ததாக துடிக்கும் மாமா, இப்போது இவள் வெடித்து அழுதும் ஒரு வார்த்தை கூட பேசாதது அவளை இன்னும் கதற செய்தது. 

அவளை சமாதானப்படுத்த எல்லாரும் முயன்றும் முடியவில்லை. ஆனாலும் அவள் அழுததில் எல்லாருக்கும் ஒரு நிம்மதி, அருண் உட்பட. 

அதன்பின் அவள் அழுகையை யாராலும் நிறுத்த முடியவில்லை ஒரு இரண்டு மணி நேரம். அவளே அழுது அழுது ஓய்ந்து போனாள். அப்புறம் அவளே எழுந்து வந்தவர்களிடம் பேசினாள். 

அத்தையையும், ஆதிராவையும், குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் சாப்பிட வைத்தாள். ஆனாலும் அருணிடம் ஒரு வார்த்தை பேசவில்லை. 

அவனும் இவள் எப்படியும் பேசி விடுவாள் என்று ஆனால் அவள் பேசவில்லை. அருணை சாப்பிடக்கூட ஆதிராவிடம் சொல்லி அனுப்பினாள். அருண் சாப்பிட வந்ததும் பரிமாறும் பொறுப்பை ஆதிராவிடம் கொடுத்துச் சென்றாள். 

இந்த நிலையிலும் எதுவுமே பேசாமல், தன்னை விட்டு விலகி செல்லும் அம்பிகாவை பார்த்து கொஞ்சம் கோவமும் வந்தது அருணிற்கு. 

தான் கொஞ்சம் தைரியமானதும், தெளிவானதும் நேரே அம்பிகாவிடம் சென்று சண்டை போட வேண்டும். சண்டை என்ன சண்டை, இவள் செய்ததற்கு இனிமேல் என் முகத்திலேயே முழிக்க வேண்டாம்

குடும்பமே பிரிந்தாலும் பரவாயில்லை “நீ எனக்கு இப்போது மட்டுமில்லை, எப்போதுமே வேண்டாம்” என்று கூற வேண்டும் என்று மனதில் உறுதி எடுத்துக்கொண்டான்

அதை அருகில் இருந்த அவன் நண்பனிடமும் கூறினான். நண்பனோ “இருடா, இந்த நிலையில் எதுவும் யோசிக்காதே. முதலில் எல்லாம் முடியட்டும் அப்பறம் பேசிக்கலாம்” என்றான். 

எல்லாம் முடிந்தபின், வழக்கம் போல சடங்கு என்று அம்பிகாவின் அத்தை பாக்கியத்தை நடுவில் அமர வைத்து வெள்ளை புடவை கொடுக்க சம்பிரதாயம் ஆரம்பித்தார்கள். 

அது வரை அம்மாவை பார்த்துக் கொண்டு வாசலில் நின்றிருந்த அருணால், அதற்கு மேல் பார்க்க முடியாமல் அங்கு இருந்து அழுது கொண்டே நகர்ந்தான்

வாசலில் வந்தவர்களுக்கு காபி கொடுத்துக் கொண்டிருந்த அம்பிகா, ஆதிராவிடம் “என்ன ஆச்சு?” என்று கேட்க 

“சடங்கை ஆரம்பிச்சுட்டாங்க, அதான் அண்ணன் பாக்க முடியாமல் போறான்” என்று சொன்னதும், ஆத்திரத்தில் உள்ளே சென்ற அம்பிகா அங்க இருந்த அனைவரையும் கோவமாக பார்த்து 

“இந்த சடங்கு எல்லாம் இங்க வேணாம். வந்தமா போனமான்னு இருங்க இந்த வெள்ளை புடவை வேலை, பூவ எடுக்கறது, பொட்ட அழிக்கிறது எதுவும் இங்க வேணாம்”னு கோவமாக கூற

அங்கே இருந்த பாட்டிகள் நாலு பேரு, “இது எல்லாம் சடங்கு, உனக்கு எதுவும் புரியாது, பேசாம போ”னு சொல்ல 

அம்பிகா இன்னும் கோவமாய், “எது புரியாது, இப்படி புருஷன இழந்தவங்கள கொடுமைப்படுத்தறதா”னு கோவமா கேட்டுட்டு 

“இதுவே அத்தைக்கு எதாவது ஆகி இருந்தா, இப்படி சடங்கை எங்க மாமாக்கு செஞ்சுருப்பீங்களா?”னு கேக்க, அங்க இருந்த கூட்டம் அமைதியா இவளையே பாத்துட்டு இருந்துச்சு

“அதோட, எங்க அத்தை ஒரு நிமிஷம் பொட்டு இல்லாம இருந்தாலே எங்க மாமாவுக்கு புடிக்காது. இப்படி சடங்கு பண்றேன்னு அவங்களை அலங்கோலம் பண்ணா மாமா கொதிச்சுருவாரு. அதனால இதெல்லாம் இங்க யாரும் பண்ணத் தேவை இல்லை”னு சொல்லி எல்லாரையும் வெளியே போக சொன்னாள். 

அம்மாவின் நிலையை பார்க்க சகியாமல் நகர்ந்து சென்ற அருண், இவள் பேசுவதை கேட்டு மீண்டும் கதவருகே வந்து நின்றான்

எல்லாரையும் கோவமாக வெளியே அனுப்பிவிட்டு கதவருகே வந்தவள், அருணிடம் “என்னடா பாக்கற? இனிமே உன் தைரியம், தன்னம்பிக்கை எல்லாமும் நான் தான். உன்கிட்ட நெருங்கினா என்னால கண்ட்ரோல் பண்ண முடியாதுன்னு தான் பேசாம விலகி நின்னேன்” என்றவள், அவன் கை பிடித்து வெளியே அழைத்து சென்றாள் 

அவனுக்கு இப்போது யாதுமாகி நின்றவளை, ஊரே கண் கொட்டாமல் பார்த்தது.

அருணை அவள் பிடித்த பிடி, இன்னும் இறுக்கமானது. ‘என்றும் நான் உன்னோடு தான்… யாதுமாகி’ என சொல்லாமல் சொன்னது அது

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

(முற்றும்)

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ சிறுகதைப் போட்டியில் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இணைப்பு இதோ – https://sahanamag.com/short-story-contest-2021-entries/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    அழைப்பு (சிறுகதை) – ✍ கவி மாரியப்பன், திருவண்ணாமலை

    கடமை (சிறுகதை) – ✍ துர்கா தேவி, மலேசியா