in

விழிநீரே வடிகாலாய் !!! ✍ சக்தி ஸ்ரீனிவாஸன் – ஏப்ரல் 2021 போட்டிக்கான பதிவு

விழிநீரே வடிகாலாய் !!!

தாயின் அரவணைப்பில்
விழிநீரை அவள்தன் சேய் அறியாது
தாயின் வெறுமை தந்த அச்சத்தில்
குழந்தை உகுக்கும்

நீரனைத்தும் கண்ணீரன்று!

 

எதற்கும் இருமுகம் உண்டு 

இயற்கையில் நல்லதுஅல்லது

பகல்இரவு என்பனபோல்
மனிதரின் மகத்துவஅணியாம்

நேத்திரமும் இருகுணம் கொண்டது
பார்த்தல் உணர்வுசிந்தல் என
இருபொறைமை பார்வை 

யாவர்க்கும் பொதுவாம்

மனஉணர்வு நவரசமாய் வெளிப்படும்
நவரசத்திலும் அனிச்சையாய் 

நீர்சிந்தும் விழிகள் 

ஆனந்தத்தில் தாண்டவமாடும் இன்பமனம்

 

நிகழ்ந்த இன்பத்தை எண்ணியெண்ணி 
செவ்வரியோடிய விழியோரம்

முளைக்கும் அரும்புநீர் 

மகிழ்நீரன்றி கண்ணீரென உரைத்தற்கில்லை

இது இருபாலர்க்கும் பொருந்தும்

 

அழுகையொடுப் பிறந்து
வளமாய் வளர்ந்துமலர்ந்து
இனியவன் கரம்பற்றி
பிள்ளைப்பேற்று வரத்தில்
ஜனித்த பிஞ்சின்

தளிருடல் ஸ்பரிச

நெகிழ்ச்சி சிந்தும்

தாய்மையின் விழிநீரும்

கண்ணீரன்று!

 

கண்ணின் இமையாய்
வளர்க்கும் பிள்ளை
இவன்தந்தை யாரென ஊர்மெச்சி 

தான்வைத்த சான்றோன் பட்டம்
உரித்தான பெற்றவன்
சிறுவனின் தோள்பற்றி
உச்சிதனை முகர்ந்து
கர்வமிகுதியால் விழியொழுகும்நீரும்
கண்ணீரன்று!

 

நாளொரு மேனியும்
பொழுதொரு வண்ணமுமாய்
நன்னெறியில் தான்வளர்ந்த ஆண்மகன்

தனக்குரிய சான்றாண்மையுடன்
வெவ்வேறுக் களத்தில்

செவ்வனேப் பணியாற்ற
வெற்றிக்களிப்பில் அவன்விழிபெருகும் நீரும் 

கண்ணீரன்று!

மேற்சொன்ன அனைத்தும்
உவகைநீர் மகிழ்நீர்!

நீர்ப்போக்கிற்கு என்றும்
வடிகால் தேவை
இன்பத்திற்கு எதற்கு
அணைக்கட்டு?

துன்பத்திற்கே என்றும்
ஆறுதல் தேவை
மனிதத் துயருக்கு

உகுக்கும் கண்ணீரே வடிகால்
மகிழ்வொன்றே மானிடத்தின் வரமன்றே!

தருணப் புயல்கள்
வாழ்வுக்கடலில் வீசுங்கால்
பாய்மரக் கப்பலாய்
தனியொருவனுக்குத் துணை இறையெனில் 

கண்ணீரே கடைத்தேறும் வடிகால்

பாராமுக ஜனனமகன்

சொல்லாலும் செயலாலும்
தம்மை வாட்டுவதைச்

சகியா பெற்றோரின்
விழிநீர் கண்ணீரே!

 

ஈயேனென்றல் இரத்தலினினும் 

இழிந்தென்று தானறிந்தும் 

பொருள் உணவு ஈயா
தனவந்தரின் பெரும்திரட்சி முன்நிற்கும்

இல்லாதான் விழிசிந்தும் 

அவலநீர் கண்ணீரே!

 

துன்பத்தில் உழலுவார் துயர்தீர்க்க

கருணைக்கொள்ள மனமிருந்தும் 

பணக்கருவூலமில்லா வெற்றுக்கரங்களின்

கையறுநிலை வள்ளலின் 

கண்களில் மாரிப் பொழித்தால்
அஃது கருணை நீரெனும்
கண்ணீரே!

 

வானம் சிந்தும்

மாமழைக் கண்ணீரே 

மன்னுயிர்க்கு வாழ்வு!

கடல்தந்த உவர்ப்புக் 

கண்ணீரின் படிமமே

சுவைமிகு சமையலுக்கு உப்பு!

விழிநீர் எமக்கும் சொத்தென 
சொல்லும் மாக்களின் கண்ணீர்

அன்பின் வெளிப்பாடு!

ஆறுதல் தேடும் 

ஒவ்வொரு மனிதருக்கும்

கண்ணீரே அவர்தம் 

துயருக்கு வடிகால்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    நீரினைத் தேடிடும் வேரென நான் ❤ (பகுதி 11) -✍ விபா விஷா – ஏப்ரல் 2021 போட்டிக்கான பதிவு                                

    ஜோதி (சிறுகதை) – ✍ ஸ்ரீவித்யா பசுபதி