in

நீரினைத் தேடிடும் வேரென நான் ❤ (பகுதி 11) -✍ விபா விஷா – ஏப்ரல் 2021 போட்டிக்கான பதிவு                                

நீரினைத் தேடிடும்....❤ (பகுதி 11)

இந்த தொடரின் அனைத்து பகுதிகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

வீட்டினுள் துப்பாக்கி குண்டு பாய்ந்ததும், அங்கிருந்த எல்லாருக்கும் குலை நடுங்கி விட்டது

யாதவும், குகனும் தத்தம் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய சமயம், ஒரு மனிதர் வீட்டினுள் வந்தார்.

அவர் தமிழகத்தின் முன்னாள் அமைச்சர். அவர் வீட்டினுள் வரக் கண்டதும் யாதவ் குடும்பத்தினர் குழப்பத்தில் ஆழ, ஜானவியின் குடும்பம் அதிர்ச்சிக்குள்ளானது

“வாங்க சார், நீங்க மினிஸ்டர் இளங்கோ தான? இங்க நீங்க என்ன விஷயமா வந்துருக்கீங்கனு தெரிஞ்சுக்கலாமா?” என யாதவின் அப்பா அவரிடம் வினவ

“நான் என் பொண்ண பார்க்க வந்திருக்கேன்” என ஜானவியைப் பார்த்துக் கூறினார் அவர்

அதைக் கேட்ட யாதவின் பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். ஆனால் யாதவ் பார்வையில் ஆச்சரியம் இல்லை, கோபம் மட்டுமே இருந்தது

திருமணத்தை பற்றி பேசிய அன்றே, குகன் இந்த விவரத்தை யாதவிடம் கூறி இருந்தான். வீண் குழப்பம் வேண்டாம் என எண்ணி பெற்றவர்களிடமும் தன்னை சார்ந்தவர்களிடமும் அதை மறைத்து விட்டான் யாதவ்

ஜானவி கோபத்துடன் அந்த மனிதரை பார்த்து விட்டு தன் அறைக்குள் சென்று அடைந்து கொண்டாள்

“என்னங்க இத்தனை நாளா இல்லாம புதுசா சொந்தம் கொண்டாடறீங்க? நாங்க ஏற்கனவே இங்க பல பிரச்சனையில இருக்கோம், இதுல நீங்க வேற புதுசா ஒண்ணை கிளப்பாதீங்க” என ஜானவியின் அப்பா நம்பிராஜன் கூற

“என்ன சம்மந்தி இது… இவர உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா? என்ன இவரு என்னென்னமோ சொல்லிட்டு இருக்காரு?” எனக் கேட்டார் யாதவின் அப்பா

அதற்கு நம்பிராஜன் பதிலளிக்கும் முன் இடைமறித்த அமைச்சர் இளங்கோ, “சார், உங்க கேள்விக்கு  நானே விளக்கம் கொடுக்கறது தான் சரியா இருக்கும்னு நினைக்கறேன். ஏன்னா, ஆரம்பத்திலிருந்தே எல்லாத் தப்பும் என்னோடது தான். என்னோட இளமைக் காலத்தில, நானும் ஜானவியோட அம்மாவும் காதலிச்சோம். வீட்டுல எதிர்ப்பு தெரிவிச்சதால சென்னைக்கு போயிட்டோம்.

அப்போ ஜானவி அம்மா ராஜிக்கு பதினெட்டு வயசு தான், எனக்கு இருபத்தி நாலு வயசு. சின்ன வயசு… காதலிக்கத் தெரிஞ்ச எங்களுக்கு, குடும்பம்னா என்னனு தெரியல. ஜானவி பிறந்ததுக்கு அப்பறம், அந்தக் காதலுக்கும் நேரமில்லாம போய்டுச்சு எனக்கு

ஏன்னா… ராஜி மேல இருந்த காதல், அரசியல் மேல வந்துடுச்சு. ஆமா… அங்க சென்னையில ஒரு அரசியல் தலைவரோட கொள்கை ரொம்பப் பிடிச்சுப் போய், அந்தக் கட்சியில அடிப்படை தொண்டனா சேர்ந்தேன்

என்னோட உழைப்பை பார்த்து அவங்க எனக்குச் சின்னச் சின்னப் பதவி கொடுக்க, நாட்டைக் கவனிக்கணும்னு நினைச்சனே தவிர, வீட்டை கவனிக்கல. இவ்வளவு ஏன்… எனக்குக் கல்யாணம் ஆனதே அங்க யாருக்கும் தெரியாது

நான் கட்சிக்காக கல்யாணமே பண்ணிக்காம இருக்கறதா நினைச்சுட்டு, என்னை பெரிய தியாகியா மதிச்சாங்க. அதே சமயம் வீட்டுல ஏகப்பட்ட பிரச்சனை.

ஒருநாள் ஏதோகோபத்துல, என் கட்சிக்காக, என்னோட அரசியல் வாழ்க்கைக்காக உன்னையும், ஜானவியையும் கொலைச் செய்யக் கூடத் தயங்க மாட்டேன்னு ராஜிகிட்ட சொல்லிட்டு வெளிய கிளம்பி போயிட்டேன். அதைக் கேட்டு ராஜி ரொம்பப் பயந்துட்டானு நினைக்கறேன்.

ஏன்னா, அன்னைக்கு நான் மறுபடி வீட்டுக்கு வந்து பாத்தப்ப, அவ அங்க இல்ல. என்ன ஏதுனு ஒரு சின்னக் குறிப்பு கூட இல்லாம காணாம போய்ட்டா. நான் அப்போ இருந்த மனநிலையில, அவ போனதே நல்லதுனு முழுசா அரசியல்ல இறங்கினேன்

என்னோட ஈடுபாட்டாலையும், உழைப்பாலையும் தலைவருக்கு ரொம்ப நெருக்கமா ஆனேன். சொல்லப் போனா இவ்வளவு நாள் எனக்கு ராஜி, ஜானவியோட நினைப்பே வரல

கொஞ்ச நாளைக்கு முன்னாடி பேஸ்புக்குல யாதவ் – ஜானவி கல்யாணத்தைப் பார்த்தேன். ஜானவி முகத்தைப் பார்த்ததுமே, அவ ராஜிக்கும் எனக்கும் பிறந்த பொண்ணுனு புரிஞ்சுக்கிட்டேன்

ஆனா அந்த வீடியோல ராஜி இல்ல. ஜானவியோட அப்பா அம்மாவா ராஜியோட அக்காவும், அக்கா வீட்டுக்காரரும் இருந்தாங்க. அதைப் பாத்து எனக்கு ரொம்ப அதிர்ச்சியாகிடுச்சு.

அது மட்டுமில்லாம, பொண்ணு கல்யாணத்தையே யாரோ ஒருத்தன் மாதிரி சோசியல் மீடியாலையும், நியூஸ் சேனல்லயும் பார்த்து தெரிஞ்சுகிட்டத நினைச்சு எனக்கே கேவலமா இருந்துச்சு

அன்னையில இருந்து இவங்களைப் பத்தி விவரம் சேகரிக்க ஆரம்பிச்சேன். அப்போ தான்… அப்போ தான்… ராஜி… என்னோட ராஜி இறந்துட்டானு தெரிஞ்சது” என்றவர் குலுங்கி குலுங்கி அழுதார்

அதுவரை அமைதியாய் இருந்த நிர்மலா, அவர் அழுவதைக் கண்டு, “அழறீங்களா? இப்போ எதுக்கு சார் அழறீங்க? ராஜி செத்துப் போனதுக்கா? அப்படி நீங்க அழணும்னா, அவ உங்கள விட்டு என்னைக்குப் பிரிஞ்சாளோ அன்னைக்கே அழுதுருக்கணும். ஏன்னா அன்னைக்கே அவ மனசால செத்துட்டா

உங்க துரோகத்த தாங்கிக்க முடியாம, தான் யாருனு யார்கிட்டயும் காமிச்சுக்காம, நலிஞ்சு போன உடம்போட பொண்ண இங்க கூட்டிட்டு வந்து தனியாளா வளர்த்துட்டு இருந்தா. அவ இங்க திரும்பி வந்தது எங்களுக்குக் கூடத் தெரியாது. ஜானவிக்கு பத்து வயசு இருக்கும் போது, ஏதேச்சையா பாத்து தான் தெரிஞ்சுக்கிட்டோம். அவங்க ரெண்டு பேரும் எங்க இருந்தாங்க தெரியுமா? அனாதை ஆசிரமத்துல

ஆனா நாங்க போய்ப் பாத்தப்போ, காலம் ரொம்பவே கடந்துடுச்சு. மனவேதனையில உடம்பக் கவனிக்காம விட்டதால, உருக்குலைஞ்சு போய் மரணப் படுக்கையில இருந்தா ராஜி. அஞ்சாவது படிக்கற சின்னக் குழந்தை எங்க ஜானு தான்… தன்னையும் பார்த்துக்கிட்டு, அம்மாவுக்கும் வேலை செஞ்சுகிட்டு இருந்துச்சு

ஆனா அந்த நிலைமையிலையும் ராஜிக்கு உங்க மேல பயம் இருந்துச்சு. உங்க அரசியல் வாழ்க்கைக்காக நீங்க ஜானுவை ஏதாவது செஞ்சுடுவீங்கனு பயந்தா. அதனால சாகறதுக்கு முன்னாடி, ஜானுவை பத்தி எந்த விவரமும் வெளிய தெரியக் கூடாதுனு எங்ககிட்ட சத்தியம் வாங்கிட்டா

அதனால நாங்களும் ஜானுவை அங்கிருந்து மலையூருக்கு கூட்டிட்டு வந்து வளர்க்க ஆரம்பிச்சோம்” என அன்று நடந்த வேதனையான நிகழ்வு இன்றும் கண்முன் தோன்ற, கண்ணீருடன் கூறினார் ஜானவியைப் பெறாத அந்தத் தாய்

அவர் கூறியதைக் கேட்டு உடைந்து போய் அப்படியே தரையில் அமர்ந்து விட்டார் இளங்கோ. ஆனால் அவர் கண்ணீரைக் கண்டு அங்கு யாருக்கும் இரக்கம் தோன்றவில்லை.

“போதும்… இப்ப உங்க டிராமாவ பார்க்கறதுக்கு எங்களுக்கு நேரமில்ல. எனக்கென்னமோ இன்னைக்கி இங்க நடந்த துப்பாக்கி சூட்டுக்கும் உங்களுக்கும் சம்மந்தம் இருக்குமோனு சந்தேகம் வருது. அதனால உங்ககிட்டயும் நான் விசாரணை நடத்தணும். அதுக்கு முன்னாடி எங்களுக்கு வெளில கொஞ்சம் வேலை இருக்கு” என்ற குகன், சார்விக்கிடமும், யாதவின் மற்ற நண்பர்களிடமும் அவரைப் பார்த்துக் கொள்ளும்படி கண்களால் ஜாடை செய்து விட்டு யாதவுடன் வெளியே செல்ல எத்தனித்தான்

அவனைத் தடுத்த அமைச்சர், “இல்ல குகா, நான் துப்பாக்கிச் சத்தம் கேட்ட பின்னாடி தான் வீட்டுக்குள்ளயே வந்தேன். அந்த ஆள பிடிக்கறதுக்கும் என் ஆளுங்கள அனுப்பியிருக்கேன். உனக்குச் சந்தேகமா இருந்தா நீ உன் ஆட்கள் மூலமாவும் தேடு, போலிசாவும் என்னை விசாரி. இனி என் பொண்ணுக்கு என்னால எந்தக் கஷ்டமும் வராது, மத்தவங்களாலயும் அவளுக்கு எந்த ஆபத்து வராம நான் பாத்துக்குவேன்” என்றார்  இளங்கோ.

ஆனால் அவரது வார்த்தைகளை அவன் நம்புவதாய் இல்லை என்பது அவனது பார்வையிலேயே தெரிந்தது. மறுபுறம், அவரை இனங்காண இயலாத பார்வையுடன் ஒரு கணம் நின்று பார்த்து விட்டு குகனுடன் வெளியேறினான் யாதவ்

சிறிது நேரத்திலேயே இளங்கோவின் ஆட்கள் ஒரு மனிதனை ரத்த வெள்ளத்தில் இழுத்து வந்தனர். அவன் தான் அவர்கள் வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தியவன் என்று கூறினர் 

உடனே கவின் செல்போனில் யாதவ்வை அழைத்து விவரத்தைக் கூற, யாதவும் குகனும் விரைந்து வந்தனர்.

வந்தவர்கள் அவன் தனியே அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அறைக்குள் செல்ல, அவன் வாயில் நுரை வடிய தரையில் மல்லாந்து கிடந்தான்

அதைக் கண்டு யாதவும், குகனும் பதறியபடி வெளியே வந்து அங்கிருந்தோரிடம் விஷயத்தைக் கூறினர் 

“அவனை இவங்க பிடிச்சுட்டு வந்தப்பவே அவனை என் ஆளுங்கள விட்டு விசாரிக்கற விதத்துல விசாரிக்கறேன்னு சொன்னேன். ஆனா நீங்க தான் என் பேச்ச கேட்காம, இவங்க ரெண்டு பேரும் வந்ததுக்கு அப்பறம் அவங்களே விசாரிச்சுக்கட்டும்னு சொல்லிட்டீங்க” என யாத்வின் நண்பர்களிடம் அங்கலாய்த்த இளங்கோ

“சரி தான்… உங்களால என்னை இன்னும் நம்ப முடியாது தான். ஆனா இப்போ அவனை அனுப்பியது யாருனு நமக்குத் தெரியாம போய்டுச்சே” என்றார் வருத்தமாய் 

அதன் பின்பு பிணத்தை அகற்றவும், தகவலை காவல் நிலையத்தில் பதிவு செய்யவும், அந்தப் பகுதி இன்ஸ்பெக்டரை அழைக்கும்படி சார்விக்கிடம் கூறினான் யாதவ்

சில காவலர்களுடன் அங்கே வந்த அப்பகுதி இன்ஸ்பெக்டர், பக்கத்து ஊரில் இரு கிராமங்களுக்கு இடையில் கலவரம் நடப்பதாகவும், இவர்கள் இருவருடைய கைபேசியும் தொடர்பு கொண்டால் அது அணைத்து வைக்கப்பட்டிருப்பதாகத் தகவல் வருவதாக கூறினார் 

அதைக் கேட்டதும் அவசர அவசரமாக யாதவும், குகனும் கலவரம் நடக்குமிடத்திற்கு விரைந்தனர்.  இங்கு ஆக வேண்டிய வேலைகளைக் கவனித்தார் இன்ஸ்பெக்டர்

இளங்கோ வந்ததை அறிந்து அறைக்குள் முடங்கிய ஜானவி, அத்தனை நிகழ்வுக்கும் பிறகும் கூட வெளியே வரவில்லை. 

வீட்டில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டை விட, அவளது உண்மையான தந்தையின் வரவே அவள் மனதில் மிகப்பெரும் குழப்பத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியிருந்தது.

அதன் தாக்கத்தால், தன்னுடைய பழைய நினைவிற்குச் சென்றவள், தந்தையால் தானும் தனது தாயும் அனுபவித்த கஷ்டங்களையும், தன் தாயார் அவர் நினைவிலேயே உயிர் உருகி இறந்ததையும் நினைத்து வருந்தினாள் 

இன்று தன் மேல் பாசம் வந்துவிட்டதாக அவர்  கூறுவதையும், தனது தாயின் மறைவுக்கு வருந்தி அழுததையும் கண்டு, ஜானவியின்  மனதுக்குள் பெற்ற தந்தை மேல் மேலும் வெறுப்பே வளர்ந்தது 

தாயின் இழப்பை நினைத்து ஒரு கண்ணில் கண்ணீருடனும், தந்தையின் துரோகத்தை எண்ணி மறுகண்ணில் வலியுடனும் இருந்தவளின் தோளில், ஒரு கரம் ஆதரவாக படிந்தது.

அது யாரென்று திரும்பிப் பார்த்தவள், தான் அன்னையென நேசிக்கும் தனது உண்மை அன்னையின் மறு உரு அவர் தான் என நம்பும் நளினி வந்து நிற்கவும், தன்னிலை மறந்து “அம்மா” என கதறினாள்.

அவளை ஆதரவுடன் அணைத்தவர், “விடுடா… நம்மளோட ஒவ்வொரு துளி கண்ணீரும் ரொம்பப் புனிதமானது. அது இவர் மாதிரி ஆளுங்களால வீணாக வேண்டாம்” என்று கூறினார்

அதற்கு ஜானவியோ, “ஆமாம்மா… என்ன தான் அவர் இப்போ நான் திருந்திட்டேன், பழசை நினைச்சு வருந்திட்டேன்னு சொன்னாலும், நம் மனசு அத ஏத்துக்க முடியாது.

அவ்வளவு சின்ன வயசுல யாருமே தேவையில்லைனு இவரை நம்பி வந்த பொண்ண கைவிட்டு, மனசளவுல கொன்னு அனுப்பியிருக்காரு.  ஆனா இப்ப, வெறும் வார்த்தையில என்னை மன்னிச்சுருங்கனு சொன்னா நாம எப்படி மன்னிக்கறது. எனக்கு சுத்தமா அப்பானு இவர் மேல பாசம் இல்லவே இல்ல அம்மா

ஏன்னா, இந்த ஆளை எல்லாம் நாம மன்னிச்சோம்னா உங்க ராஜி, என்னோட அம்மா… நம்ம யாரையும் மன்னிக்கவே மாட்டாங்க. இப்போ நான் அழுதது கூட, ராஜிம்மாவ நினைச்சு தானே தவிர, இந்த ஆளுக்காக இல்ல” என உணர்ச்சி மிகக் கூறினாள் ஜானவி 

பிறகு அவளது அழுகையை அடக்கி, மனதை சமாதானம் செய்து விட்டு நளினி வெளியே வரவும், யாதவும் குகனும் வீட்டினுள் நுழையவும் சரியாக இருந்தது

“என்னப்பா அதுக்குள்ள வந்துட்டீங்க?” என்று யாதவை அவன் தந்தை கேட்க

“அது ஒரு கும்பலுக்குள்ள சின்னப் பிரச்சனை தான் ப்பா, காதல் விவகாரம். காதலியை தேடி ஒரு பையன் ஒரு கிராமத்துல இருந்து இன்னொரு கிராமத்துக்கு அவளோட வீட்டுக்கே வந்துட்டான். அது தெரிஞ்சு அந்தப் பொண்ணோட குடும்பத்துல இருக்கறவங்க அவனைப் பிடிச்சு மரத்துல கட்டி வச்சுட்டாங்க, அதனால ரெண்டு ஊருக்கும் சண்டை வந்துடுச்சு. நாங்க பேசி சமாதானப்படுத்திட்டு வந்தோம்” என விவரம் கூறிய யாதவ், பார்வையாலேயே ஜானவியைத் தேடினான் 

அதை உணர்ந்த நளினி, “அவ இன்னும் ரூம்ல தான் இருக்கா, நீங்க போய்ப் பாருங்க” என்றார்

அறைக்குள் சென்றவன், “ஜானு…” என அவளது மன நிலையை அறியாது என்ன கூறுவதெனத் தெரியாமல் தடுமாறினான் யாதவ்.

அதை உணர்ந்த ஜானவி, “விடுங்க யாதவ்… அவர்… அதான் என்னோட உண்மையான அப்பானு சொல்லிட்டு வந்துருக்கறாரே, அவர். அவரைப் பத்தி நாம எதுவும் பேச வேணாம்.

அவர் அதுக்குக் கூடத் தகுதி இல்லாதவர்னு நான் நினைக்கறேன். எஸ்… நானும் இவ்வளவு நேரம் ராஜிம்மாவை பத்தி நினைச்சு அழுதுட்டு தான் இருந்தேன். ஆனா நளினிம்மாகிட்ட மனசுல இருக்கற எல்லாத்தையும் கொட்டித் தீர்த்ததுக்குப் பின்னாடி ஆசுவாசமா உணர்றேன் 

நீங்க அதையெல்லாம் மனசுல இருந்து விலக்கிட்டு துப்பாக்கி சூடு செய்தது யாருனு கண்டுபிடிங்க. அதோட, இப்ப இவர் வந்ததும் நல்லதுக்குத் தான். மறைவா இருந்து இவர் ஏதாவது செய்வாரோனு பயந்துட்டு இருக்கறத விட, இது எவ்வளவோ மேல். எதுக்கும் இவர் மேல ஒரு கண்ணு இருக்கட்டும்.

இப்போதைக்கு இன்னைக்கான அதிர்ச்சி போதும். மணி இப்பவே விடிகாலை மூணாகுது. கொஞ்ச நேரமாவது நிம்மதியா தூங்கினாத் தான், காலைல வேலைக்குப் போக முடியும்” என்றாள் 

“ஆமாமா… நாளைக்கு இன்னும் என்னென்ன காத்திருக்குதோ” என மனைவி சொன்னதை ஆமோதித்தான் யாதவ்

இந்த தொடரின் அனைத்து பகுதிகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

#ad எழுத்தாளர் சஹானா கோவிந்தின் புத்தகங்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇  

                                

  #ad “சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇

                

(தொடரும்… வெள்ளி தோறும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    “புத்தக வாசிப்புப் போட்டி – ஏப்ரல் 2021” அறிவிப்பு

    விழிநீரே வடிகாலாய் !!! ✍ சக்தி ஸ்ரீனிவாஸன் – ஏப்ரல் 2021 போட்டிக்கான பதிவு