விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கலைஞர்கள் பட்டியல் அன்று வெளிவருவதாக பொன்னம்பல வாத்தியார் தகவல் சொன்ன போது, மாணிக்கத்தின் மனம் மகிழ்ச்சியில் பலமாக அடிக்கத் தொடங்கியது.
அறுபது வருடங்களுக்கு மேலாக நாடகக் கலைஞனாக, பெண் வேடத்தில் ஆரம்பித்து, கதாநாயகன், தந்தை வேடம், தாத்தாவாக என, பல ஆண்டுகள் மேடையில் சேவை ஆற்றியவர் மாணிக்கம்
அவருக்குப் பின்னால் மேடைக்கு வந்தவர்கள் பலருக்கு விருது வழங்கப்பட்டு விட்டது.
அவ்வளவு ஏன், நடிப்பு என்றால் என்னவென்றேத் தெரியாத, தமிழ் அறியாத பெண் ஒருத்திக்குக் கூட, வெள்ளித்திரையில் இரண்டு படங்கள் நடித்ததுமே விருது வழங்கப்பட்டு விட்டது.
உண்மையிலேயே மாணிக்கத்திற்கு இந்த விருதுகள் மீதெல்லாம் ஆசை இல்லை. தவிர, இது போன்ற விருது பெற அரசியல்வாதிகளின் சிபாரிசு தேவை என்று கேள்விப்பட்டுள்ளார். அவருக்கு அப்படி யாரையும் தெரியவும் தெரியாது
இந்நிலையில் தான், சில மாதங்களுக்கு முன்னர் பொன்னம்பல வாத்தியார்,”மாணிக்கம், உனக்கு இன்னமுமா கிடைக்கல. உனக்கு அப்பறம் வந்தவங்க எல்லாம் வாங்கிட்டாங்க. சரி பரவாயில்லை, உன்னைப் பற்றி முழு விவரமும் எழுதிக் கொடு. இந்த வருஷம் கொடுக்கப் போறவங்களோட உன் பெயரையும் சேர்க்க முடியுமானு பார்க்கறேன். எனக்கு ஒரு எம் எல் ஏ வைத் தெரியும். அவர் மூலமா முயற்சிக்கிறேன்” என்றார்
ஆசை யாரை விட்டது. மாணிக்கமும் மனிதன் தானே! தவிர ஒரு கலைஞனுக்கு பணம் காசை விட தன் திறமைக்கு கிடைக்கும் அங்கீகாரம் தான் முக்கியமாகத் தோன்றும்
உடனே, தான் மேடையேறிய நாள் முதல் நடித்த நாடகங்கள், பெற்ற விருதுகள் என ஒரு பெரிய பட்டியல, தெரிந்த ஒருவர் மூலம் தட்டச்சு செய்து, சில புகைப்படங்களையும் இணைத்து, அவரிடம் கொடுத்து விட்டார்
இந்நிலையில் தான், விருது பட்டியலை அரசு வெளியிடப் போகிறது என்ற தகவல் வந்தது. கண்டிப்பாக அதில் தன் பெயர் இருக்கும் என நம்பினார் மாணிக்கம்
அவர் மூத்த கலைஞராக இருக்கும் காரணத்தால்,இம்முறை கண்டிப்பாக அவர் பெயர் பரிசீலிக்கப்பட்டிருக்கும் எனத் தோன்றியது
அன்று மாலை தொலைக்காட்சிச் செய்தியில், கடந்த சில ஆண்டுகளாக கொடுக்காத நிலையில், அனைத்தையும் சேர்த்து 230 பேருக்கு விருது வழங்கியிருப்பதாகக் கூறப்பட்டது
அதைக் கேட்டதும், 230 நபர்களில் நாம் ஒருவராக இருக்க மாட்டோமா என, மாணிக்கத்தின் நம்பிக்கை வலுத்தது
அப்போது மாணிக்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட சிங்காரத்திடமிருந்து ஃபோன் வர, அவசரமாக எடுத்து, “ஹலோ” என்றார்
“குருவே! எனக்கு விருது கொடுத்திருக்காங்க, எல்லாம் உங்க ஆசிர்வாதம் தான்” என்றான் சிங்காரம்
தன் மாணவனிடம் கேட்பது சற்று கௌரவக் குறைவு தான் ஆயினும் கேட்டார், “சிங்காரம்… முழு பட்டியல் வந்துவிட்டதா? அதில் என் பெயர் இருக்கா?”
“இல்லையே தலைவா! உங்க பெயர் இல்லையே!” என்றான்.
சற்றே ஏமாற்றம் அடைந்தார் மாணிக்கம். அப்போது பொன்னம்பல வாத்தியார் வந்தார்
“மாணிக்கம், நேற்றுவரை பட்டியல்ல உன் பெயரும் இருந்ததாம், எம்.எல்.ஏ சொன்னார். கடைசி நிமிஷத்துல யாரோ சிங்காரமாம். அவனுக்கு மந்திரி ஒருத்தரின் பலமான சிபாரிசு இருந்ததாம். அதனால உன் பெயரை எடுத்துட்டு அந்தப் பையன் பெயரை சேர்த்துட்டாங்களாம். அடுத்த முறை பார்க்கலாம், ரொம்ப சாரி” என்றார்
சற்றே விரக்தியுடன், “அடுத்த முறை இந்த உடல்ல உசுரு இருக்கா பார்க்கலாம்” என்றார், மக்களை அறுபது ஆண்டுகளாக மகிழ்வித்துக் கொண்டிருந்த அந்தக் கலைஞன்
இரவு முழுதும் தூங்காமல் மனவேதனையில் இருந்தவர், மறுநாள் காலை எழுந்திருக்கவில்லை.
ஊடகங்களில் சிறியதாக பெட்டிச் செய்தி ஒன்று அவர் மரணத்தைத் தெரிவித்ததோடு, அக்கலைஞனுக்கு விருது கிடைக்காததையும் சுட்டிக் காட்டியிருந்தன
அவசர அவசரமாக பட்டியலில் அவர் பெயரும் சேர்க்கப்பட்டு, அடுத்தநாள் அவருக்கு போஸ்த்துமசாக (இறப்பிற்குப் பின்) விருது வழங்கப்படுவதாக செய்திக் குறிப்பு வெளியிடப்பட்டது
ஒரு கலைஞனுக்கு வழங்கப்பட வேண்டிய விருதுகளையும், கௌரவத்தினையும் அவன் உயிருடன் இருக்கும் போதே வழங்கி விடுங்கள்
இறந்தபின் அவனுக்கு விருதுகள் வழங்குவதால் என்ன பயன் என, கலைஞர்கள் சார்பில் அவருக்கு அஞ்சலி செலுத்தி ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டி ஒன்று சொன்னது
#ad “சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇
எழுத்தாளர் சஹானா கோவிந்தின் புத்தகங்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇
(முற்றும்)
GIPHY App Key not set. Please check settings