மேகம் கருத்து மழை பொய்த்தாலும்
எம் கண்ணீரில் கழனி நிறைத்து
நெல்மணிகளை விளைவித்து
கடன்பட்டு வீழ்ந்து
மக்கள் பசியாற உழைத்து
மண்ணை மலரச் செய்ய
வாழ்ந்து காட்டுவோம்
குடிகார கணவனுடன் வாழ்ந்து
குழந்தையும் பெற்றெடுத்து
கூலிவேலை செய்து
பிள்ளையை ஆளாக்கி
வாழ்ந்து காட்டுவோம்
மலடிஎன உலகம் சொன்னாலும்
தாயேஎன எனை அழைத்து
தரணியில் என் மனம் நிறைக்கும்
மகளை தத்தெடுத்து வளர்த்து
அனாதைகள் இல்லாஉலகில்
வாழ்ந்து காட்டுவோம்
பெண்ணாய் எனை மதியாமல்
சதைப் பிண்டமாக எண்ணி சிதைத்த
சிந்தையிலா ஆணின் சிசுவை
சிறந்த ஆண்மகனாக
பெண்மையை போற்றுபவனாக வளர்த்து
ஆணாதிக்கமில்லா சமத்துவ சமுதாயத்தில்
வாழ்ந்து காட்டுவோம்
நீலவானம் தொடும் வூர்தி கண்டோம்
நீங்காத வறுமையில் வாழும் பிஞ்சுகள்
கையேந்தும் காட்சியும் கண்டோம்
பதுங்கும் பணத்தை பாமரனுக்கு பரிசளித்து
வறுமையிலா திருநாட்டில்
வாழ்ந்து காட்டுவோம்
என்றும் என்றென்றும்
வாழ்ந்து காட்டுவோம்
இதழில் புன்னகையுடன்
#ad எழுத்தாளர் சஹானா கோவிந்தின் புத்தகங்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇
#ad “சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇