in , ,

விசித்திர உலகம் (பகுதி 3) – சுஶ்ரீ

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

அதற்கப்பறம் கூட மறுநாள் வரை கனவு போலதான் இருந்தது. வெள்ளிக்கிழமை பூஜை போட்டு படம் அறிவிச்சு பேப்பர்ல எல்லாம் விளம்பரம் வந்தவுடனேதான் நம்பிக்கை வந்தது. தன் படத்தை பேப்பர்ல முதல்முதலா பாத்தவுடனே அழுகைதான் வந்தது. “அப்பா நான் ஜெயிச்சிட்டேன்பா நீ இல்லையே பாக்க”

மறுநாளே ஆத்தூரிலிருந்து அம்மாவை வரவழைத்து விட்டான். சாலிகிராமத்தில் ஒரு சின்ன வீடு  8 லட்சத்தில் லீசுக்கு கிடைத்தது, ரெண்டே ரூம்தான், போதும் இப்போதைக்கு.

ராஜமாணிக்கம் பொறுமையாக சீன் சீனாக சொல்லி எப்படி பண்ணணும்னு வினீத்துக்கும், புது முக ஹீரோயின் வனிதாவுக்கும் சொல்லிக் கொடுத்தார். வனிதாவை ஒரு கல்லூரி ஆண்டுவிழாவில் பிடித்தார் ராஜமாணிக்கம். அழகும், திறமையும் கலந்த ஒரு துறுதுறுப்பான பெண்.வனிதாவின் பெற்றோரை கஷ்டப் பட்டு சம்மதிக்க வைத்து முதல் படத்துக்கு ஒப்பந்தம் செய்திருந்தார்.

காதல், ஹ்யூமர், செண்டிமென்ட் சரியான விகிதத்தில் கலக்கப்பட்ட கதை. பெண்களுடன் பழகிய அனுபவமே இல்லாத வினீத் கதாநாயகியுடன் நெருங்கி நடிக்க முதலில் கஷ்டப்பட்டான், வனிதாவே தைரியம் சொல்லும் அளவு. நாளடைவில் டைரக்டரின் முயற்சியால், பயிற்சியால் மெதுவாக இருவருக்கும் நடிப்பில் மெருகேறியது. அனேகமாக எல்லோரும் புது நடிகர்கள் இசை, சண்டை பயிற்சிக்கு மட்டும் முன்னணி விற்பன்னர்கள்.

நான்கே மாதத்தில் ‘காதலெனும் வீதியிலே’ டீசர் வெளி வந்து எதிர்பார்ப்பு எகிறியது. ரூபனின் “கத்தரிக்காய் கூடைக்காரி” டீசர் போட்டிக்கு. வந்து அதற்கும் ரசிகர்கள் எதிர்பார்ப்பு எகிறியது.

புதிய நடிப்பு புயல் வினீத்குமார் நடிப்பில், அதிரடி டைரக்டர் வழங்கும் ‘காதலெனும் வீதியிலே” தீபாவளி வெளியீடுனு பத்திரிக்கைகளில் முழுப் பக்க விளம்பரங்கள், தமிழ்நாடெங்கும் வண்ணப் போஸ்டர்கள்.

வசூல் நட்சத்திரம் ரூபன் படமும் தீபாவளி ரிலீசாக அறிவிக்கப் பட்டு ரசிகர்கள் ஏக எதிர்பார்ப்பில் இருந்தனர்.

நடிகர் ரூபனும், நடிகை தேவிஶ்ரீ அமர்க்களமாய் ஆடி, .பிரபல இசையமைப்பாளர் இசையில், பிரபல பாடகர், பாடகி, பாடிய கத்தரிக்கா, கத்தரிக்கா பாடல் பட்டி தொட்டியெல்லாம் பிரபலமானது.

டைரக்டர் ராஜமாணிக்கமும், தயாரிப்பாளர் ம.உ.அரு.செட்டியாரும் கூட ரூபன் பட ரிலீஸ் தேதியில் தங்கள் படத்தை வெளியிட பயந்தனர்.ஆனாலும் பாத்துப்போம் படம் 10 நாள் ஓடினாலும் செலவு செஞ்ச பணம் வசூலாயிடும்கற தைரியமும் இருந்தது. தீபாவளி நெருங்க நெருங்க வினீத்துக்கும் டென்ஷன்தான்.

தீபாவளியன்று, வடபழனியில் உள்ள அந்த மல்டிபிளெக்ஸ் தியேட்டரில் ரெண்டு படமும் ரிலீஸ். ரூபனின் 12 அடி கட்அவுட் தியேட்டர் வளாகத்தில், பாலாபிஷேகம், பூமாலைகள், பட்டாசுகள்னு காலை 4 மணியிலிருந்தே தடபுடல்.அதிலும் காலை 11 மணி காட்சிக்கு நடிகர் ரூபன் , கதாநாயகி தேவிஶ்ரீயும் வருகிறார்கள் என கேள்விப்பட்டு, கட்டுப்படுத்த முடியாத கூட்டம் அலை மோதியது.

வினீத், டைரக்டர் ராஜமாணிக்கம் இருவரும் கவலையுடன் தங்கள் படம் என்னாகுமோ இந்த “கத்திரிக்காய் கூடைக்காரி” ரிலீசால் என டென்ஷனில் இருந்தனர்.

சரியாக 12 மணி ஷோவுக்கு ராஜமாணிக்கம், வினீத், கதாநாயகி வனிதா, இன்னும் சில டெக்னீஷியன்கள், “காதலெனும் வீதியிலே” பாக்க படு டென்ஷனில் வந்து இருக்கையில் வந்து அமர்ந்தனர். ரூபன் படத்துக்கு டிக்கட் கிடைக்காத சில பேர், இந்த படம் பார்க்க வந்திருந்தனர். மொத்தம் 500 பேர் அமரக்கூடிய தியேட்டரில் 200 பேர் கூட இல்லை.

இடைவேளை நேரத்தில் வினீத், மற்றும் மணீஷாவை சுற்றிக் கொண்டது அந்த சிறிய கும்பல். அருமையான டெப்யூட், டைரக்டர், ம்யூசிக் டைரக்டர் வரலையா, கண்டிப்பாக பல வருடங்களுக்கு அப்பறம் இப்படி கிரிப்பிங்கான படத்தை பாக்கறோம், அருமையான கதை, அருமையான நடிப்பு என பாராட்டித் தள்ளினர்.

ஒருவர், “நல்லவேளை அந்த கத்திரிக்கா படத்துக்கு இடம் கிடைக்கலைனு வந்ததால ஒரு நல்ல படம் பாக்கும் வாய்ப்பு கிடைச்சது”.

படம் முடியும் வரை ஒரு சத்தமில்லை, முடிந்தவுடன் பலத்த கரகோஷம். ராஜமாணிக்கத்தின் கண்களில் கண்ணீர் பெருகியது. வினீத் குமாரை இறுக அணைத்துக் கொண்டார்.

“ஹீரோ, நாம சாதிச்சிட்டோம், வாய்ச் சொல் விளம்பரம் போதும், நாளைல இருந்து கூட்டம் கூடும் பாரு”

மறுநாள் குமுதம் விமர்சனம், வசூல் நட்சத்திரம் ரூபனின் கத்தரிக்காய் பூராவும் சொத்தை, ரூபன் தன் பெயரை தக்க வைத்துக்கொள்ள நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றது. அதே நேரத்தில அடுத்த விமர்சனத்தில் அறிமுக நாயகன் நடித்த “காதலெனும் வீதியிலே” இறுதி வரை வழுக்கிக் கொண்டு செல்கிறது.டைரக்டர் ராஜமாணிக்கத்தின் கைவண்ணம் படம் பூராவும் தெரிகிறது என்றது. அனேகமாய் எல்லா பத்திரிகைகளும் இதே மாதிரி கருத்தை கூறியது.

ரெண்டே நாளில் ‘காதலெனும் வீதியிலே’ ஒரே ஒரு ஷோ மட்டும் ஓட்டிய மல்டிப்ளெக்ஸ் தியேட்டர்கள், இப்ப 4 ஷோவுக்கும் ஓட்டியது. ஊடகங்கள் எல்லாம் டைரக்டர் ராஜமாணிக்கத்தின் தனித் திறமையை வெகுவாக பாராட்டியது, கூடவே புது ஹீரோ வினித் குமார், ஹீரோயின் வனிதாவுக்கும் பாராட்டுக்கள் குவிந்தன. செட்டியாரின் 3 வருஷ ஒப்பந்தத்தை அறிந்த பல தயாரிப்பாளர்கள், வினீத்தின் ஒப்பந்தத்தை பல மடங்கு பணம் கொடுத்து வாங்க செட்டியாரை முற்றுகை இட்டனர்.அருணாசலம் செட்டியார் தங்க முட்டை வாத்தை விடுவாரா என்ன.

வசூலை அள்ளிக் குவித்தது ‘காதலெனும் வீதியிலே’பல வருடங்களுக்குப் பின் சிறந்த கதை அம்சம்,சிறந்த நடிப்பு, சிறந்த டைரக்‌ஷன், எல்லாம் உள்ள படம் என திரை உலகம் பாராட்டியது.

தெலுகு, கன்னடம், ஹிந்தினு பல மொழிகளில் திரும்ப தயாரிக்க அந்தந்த பிராந்திய தயாரிப்பாளர்கள் உரிமை கேட்டனர்.அருணாசலம் செட்டியாருக்கு ஒரே மகிழ்ச்சி. இந்த படத்தில் சம்பந்தப் பட்ட எல்லாருக்கும் பெரிய விருந்து கொடுத்து பாராட்டி தனித் தனியே எல்லோருக்கும் விலை உயர்ந்த பரிசுகளை கொடுத்தார்.

ராஜமாணிக்கத்துக்கு சென்னை அண்ணாநகரில் வீடு, வினீத்குமாருக்கு 10 பவுனில் தங்க சங்கிலி,ஹீரோயினுக்கு  தங்கச் சங்கிலி மற்ற அனைவருக்கும் மோதிரம், வாட்ச், ரொக்கப் பணம் என  பரிசு மழை பொழிந்தார்.அப்படியும் பின்னால் பேசாதவர்கள் இல்லை.

“சும்மா ஒண்ணும் கொடுக்கலை நம்ம கடின உழைப்புல உக்காந்த இடத்துல கோடிகளை அள்றாரு, நமக்கு ரொட்டித் துண்டு” என்ன செய்தாலும் திருப்தி இல்லாத கூட்டம் பேசத்தான் செய்யும்.தெலுகு, கன்னட மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது அங்கும் பெரும் வெற்றியாக அமைந்தது.

கத்திரிக்காய் கூடைக்காரியின் படு தோல்வி வசூல் கிங் ரூபனுக்கு ஏமாற்றம் அளித்தது, தொடர்ந்து இரண்டு படம் தோல்வி அடைந்ததால் தயாரிப்பளர்கள் கோடிகளில் அவரை வைத்து படம் செய்ய யோசித்தனர். ரூபனுக்கு, தான் அந்த புதுப் பையனை தன் டூப்பாக நுழைத்தது தவறோ எனப் பட்டது. அந்த புதுப் பையனுடைய திறமை கொஞ்சம் பயப்படக் கூடவைத்தது.

டைரக்டர் ராஜமாணிக்கம், தன் வெற்றி மகிழ்ச்சியை தலைக்கு ஏற்றிக்கொள்ளாத முதிர்ந்த சிந்தனை உள்ள மனிதர்.உடனே அடுத்த படத்துக்கான திரைக்கதை பண்ண ஆரம்பித்து விட்டார். பல தயாரிப்பாளர்கள் அவரை முற்றுகை இட்டாலும், அருணாசலம் செட்டியாருக்கு அவர் முக்கியத்துவம் கொடுத்தார்.

முதன்முதலில், பெரிய பெயர் இல்லாதப்ப இவரை நம்பி முதல் போட்டவர் என்பது மட்டுமில்லை, படப்பிடிப்பிலோ, மற்ற நடிகர், நடிகை தேர்விலோ, எந்த விஷயத்திலும் தலையிடாமல் உங்க இஷ்டத்துக்கு செய்யுங்க எப்ப பணம் வேணும், எவ்வளவு வேணும் அதுக்கு மட்டும் என் கிட்ட வாங்கனு முழு சுதந்திரம் கொடுக்கும் தயாரிப்பாளர்கள் மிகக் குறைவு.

வினித்குமாருடைய சாலிக்கிராமம் வீட்டில் இப்போதெல்லாம் பிலிம் இண்டஸ்ட்ரி ஆட்கள்,ரசிகர்கள் கூட்டம், தயாரிப்பாளர்களின் மேனேஜர்கள் என கூட்டம் கூடியது.வினித்துடன் கே.கே. நகர் மொட்டை மாடியில் குடியிருந்த ரமேஷ் வினீத்தின் உதவியாளனாக சேர்ந்து கொண்டான்.வினீத்துடைய தாயாருக்கு வருபவர்களுக்கு டீ போடுவதே பெரிய வேலை ஆகி விட்டது. இதைப் பாத்த வினீத்,    சமையல் சாரங்கனை வேலைக்கு அமர்த்தினான்.

டைரக்டர் ராஜமாணிக்கம், வினீத்தின் வீட்டுக்கே வந்தார்.”என்ன வினீத் அடுத்த படம் பண்ண தயாரா?”

“என்ன சார், இப்படி கேட்டுட்டீங்க, நீங்க எங்கே வரணும், எப்ப வரணும்னு சொன்னா போதும் கரெக்டா வந்து நிப்பேன்”

“நன்றி எப்பவும் இதே மாதிரி இரு, நாளைக்கு காலைல கம்பெனி கார் வரும், நெப்ட்யூன் ஸ்டுடியோல பாக்கலாம் செட்டியாரும் வருவார். “

“சரி சார் 8 மணிக்கே ரெடியா இருப்பேன்”

“குட், 9 மணிக்கு வந்தா போறும், கம்பெனி கார்லயே வா, அவசரப்பட்டு ஆட்டோல வர வேண்டாம்”

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

தொடரும்.

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    சிறகொடிந்த சுதந்திரப் பறவை (சிறுகதை) – இரஜகை நிலவன்

    விசித்திர உலகம் (பகுதி 4) – சுஶ்ரீ