in

வனஜா அக்காவின் காதல் (சிறுகதை) – ✍ செல்வா 

வனஜா அக்காவின் காதல் (சிறுகதை)

டிசம்பர் 2021 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

லையிலிருந்து, கொஞ்சம் கொஞ்சமாக அருவி நீர் வடிந்து, அங்குள்ள அடிவாரப் பகுதிகளிலெல்லாம் பரவி, வளம் வீசி, செழிப்பாய்க் காணக் கிடக்கும் ஒரு சிறு கிராமம் சேனை. 

அங்கு தண்ணீருக்கு என்றைக்கும் பஞ்சம் வந்ததில்லை. சேனை எப்பொழுதும் பசுமையாகவே காட்சியளிக்கும். அந்த அடிவாரப்  பகுதியில் உள்ள சுழியன் ராமசாமியின் வயல் பக்கமாக, நண்டு பிடிக்க சேதுவும், சேகரும் சென்றனர்

அங்கு நஞ்சை ஒட்டிக் கொண்டிருந்த சுழியன் ராமசாமி “யாரா அது?” என்று குரல் எழுப்பினார். 

“நான் தான் மாமா” என்று பதில் குரல் தந்தான் சேகர். ​

​​முத்து முத்தாக விளைந்து, அறுக்கும் தருவாயில் உள்ள, அந்த நெல் வரப்பில் 

மெதுவாக நடந்து சென்று, தன் முகத்தை காட்டினான் சேகர். 

“நீயா மாப்ள? என்ன இந்தப் பக்கம்?”

“ஒன்னும் இல்ல மாமா, நண்டு பிடிக்கலாம்னு”

“அந்த வயலில நிறைய இருக்கு மாப்ள” என்று நட்டு நாலு வாரமே ஆன ஒரு வயலைக் காட்டினார். 

“மாப்ள நண்டு மட்டும் பிடியா, பாம்பு கீம்பு பிடிச்சிற போற” என்று கிண்டல் பேசினார். 

“சரி மாமா” என்று சிரித்துக்கொண்டே சேகரும், சேதுவும் நெல் வயல் பக்கம் போனார்கள்

வயல் முழுக்க நண்டு வளைகள் இருந்தது. வளையின் மேற்புறத்தில் சிவப்பு நிறத்தில் நண்டு ஒன்று இருந்தது. பிடிப்பதற்குள்ளாக வளைக்குள் வேகமாக புகுந்து கொண்டது. 

சேது, வளைக்குள் துணி சுற்றப்பட்ட கையை விட்டு நண்டை ஒரு அமுக்கு அமுக்கிப் பிடித்து மேலே எறிந்தான். அந்த நண்டு வேகமாக ஓடியது. ஓடும் நண்டைப் பிடித்து அமுக்கினான் சேகர்

அமுக்கிப் பிடித்ததில் அதன் பின்புற வயிற்றுப் பகுதி விலக்கிக் கொண்டது. அதில் நிறைய குஞ்சுகள் இருந்தன. பார்க்கும் போது சேகருக்கு மனசு சங்கடமானது. 

அந்த நண்டை சேதுவிற்கு தெரியாமல் அப்படியே வயலில் விட்டு விட்டான்.​

அதன் பின் கருப்பு ,மஞ்சள், இரண்டும் கலந்த கலர் எனக் கிட்டத்தட்ட பதினைந்து நண்டுகளை வளைக்குள் கையை விட்டு, எடுத்து மேலே போட்டுக் கொண்டிருந்தான் சேது. 

அந்த நண்டுகளை சேகர் பாத்திரத்தில் போட்டுக் கொண்டே இருந்தான். போதும் என்ற முடிவுக்கு வந்தவுடன் சேது பாத்திரத்தில் துணி சுற்றப்பட்ட கையை விட்டு பார்த்தான். 

“எங்கடா முதலில் பிடித்த சிவப்பிய காணோம்” என்றான் சேது

“அந்த நண்டு வயிற்றுக்குள்ள நிறைய குஞ்சுகள் இருந்தது சேது, பார்க்க பாவமாய் இருந்தது. அதான் உனக்குத் தெரியாமல் அங்கேயே விட்டு விட்டேன்” என்றான் சேகர். 

“எனக்கும் காட்டியிருக்கலாம்ல” என்று கூறி எல்லா நண்டுகளையும் பாத்திரத்தில் போட்டுக் கொண்டு ஏரி வாய்க்கால் பக்கமாக சென்று, அதன் கால்கள் கொடுக்குகள், ஒடு என ஒவ்வொன்றாகப் பிய்த்து, கழுவி சுத்தம் செய்யும் வேலையில் இறங்கினர். ​

அப்போது சூரியன் லேசாக மறைந்து வானம் எல்லாம் சிவந்து இருந்தது. ஊரில் எல்லோருக்கும் பிடித்தமான இளங்கோ அண்ணன் அங்கு வந்தார். 

“டேய் ஆறு மணிக்கு மேல ஆச்சு, இந்த நேரத்திலே இங்கே என்னடா பண்றீங்க? வீட்டுக்கு போங்கடா” என்று சேதுவையும், சேகரையும் விரட்டினார். 

“டேய் இங்க செச்சுமினி நடமாடுது. பேச்சு மூச்சில்லாமல் கிடக்கிற அந்த சரவணனை கூட செச்சு மினி தான் அடிச்சிருச்சினு ஊரே சொல்லுது. சீக்கிரம் வீட்டுக்கு போங்கடா” என்றார். 

அது வரை நன்கு கழுவி சுத்தம் செய்வதை தவிர ஒன்றும் யோசிக்காத சேகருக்கும் சேதுவுக்கும் லேசான பயம் வந்தது. 

இளங்கோ அண்ணன் மீது சேகருக்கும், சேதுவுக்கும் மட்டுமல்லாமல், ஊரில் உள்ள எல்லா வாண்டுகளுக்கும் மரியாதை இருந்தது. 

இளங்கோ அண்ணன் ஒவ்வொரு வருடமும் தீபாவளிக்கு மறுநாள், பொங்கலுக்கு மறுநாள் என பகல் முழுக்க விளையாட்டுப்போட்டி, இரவானால் கலை நிகழ்ச்சிகள் என நடத்துவார். 

மைக்கை பிடித்து பேசினால் கேலியும் கிண்டலுமாய் வார்த்தை விளையாடும். அவர் பேசினால் எல்லா வாண்டுகளைப் போலவே சேகரும், சேதுவும் உற்சாகமாக காணப்படுவர். 

இளங்கோ அண்ணன் எல்லா பசங்க கிட்டயும் ரொம்ப பாசத்தோடு இருப்பவர். சுருக்கமாக சொன்னால் ஊரில் உள்ள எல்லா வாண்டு பசங்களுக்கும் இளங்கோ அண்ணன் தான் ஹீரோ. 

அவரே சொன்ன பிறகு, கழுவியது போதும் என்று நண்டைப் பாத்திரத்தில் போட்டுக் கொண்டு சேகரும் சேதுவும் கிளம்பினர்

கிட்டத்தட்ட அரை கிலோ மீட்டர் அளவுக்கு ஒரே ஓட்டம். எதிரில் வனஜா அக்கா வந்து கொண்டிருந்ததைப் பார்த்த உடன் வெட்கப்பட்டு பாத்திரத்தை சேகர், சேது கையில் கொடுத்தான் .

வனஜா அக்கா மேல் எப்பொழுதும் சேகருக்கு ஒரு பிரியம். வீட்டில் கடைக்குச் சென்று ஏதாவது வாங்கி வரச் சொன்னால், எப்பொழுதும் அம்மாவிடம் சேகர் சொல்லும் ஒரே வார்த்தை “முடியாது”தான். 

ஆனால் வனஜா அக்கா வீட்டில் “மோர் வாங்கி வா” என்று சொன்னால் போதும், சொம்பு எடுத்துக் கொண்டு ஒரே ஓட்டம்தான். நிறைய பேர் வாங்க வருவார்கள். எல்லோரும் வீட்டு வாசலில் இருந்து தான் மோர் வாங்க வேண்டும். ஆனால் சேகருக்கு மட்டும் விதிவிலக்கு

வனஜா அக்காவிற்கும், சேகர் மீது ஒரு தனிப் பிரியம் தான். காலையில் ஏழு மணிக்கெல்லாம் குளித்துவிட்டு, சிவப்பு கலர் பட்டு புடவை உடுத்தி, மஞ்சள் போட்டு குளித்த முகத்தோடு, நெற்றியில் குங்குமம், தலை நிறைய ஜாதிப் பூ வைத்துக் கொண்டு பார்க்கவே தேவதை போல அழகாக இருப்பாள். 

சேகரை பொருத்தவரையில் அந்த வனஜா அக்கா தான் அவனுடைய தேவதை.  மோர் வாங்க போறதே, அந்த அக்காவைப் பார்க்க தான். அவள் கூந்தல் முழங்கால் வரைக்கும் நீண்டு இருக்கும். சிரித்தாள் பற்களில் இருந்து ஒருவித வெளிச்சம் பிறக்கும். 

அவள் அருகில் வந்தால், நறுமணம் வீசும். அவ்வளவு அழகாக இருப்பாள். சேகரின் கன்னத்தை பிடித்து கொஞ்சி விட்டுத் தான் மோர் தருவாள். அது அவனுக்கு ரொம்ப பிடித்து இருந்தது. 

வனஜா அக்கா என்ன சொன்னாலும் செய்யும் அடிமையாகவே சேகர் மாறிப் போனான்

ஒருநாள் சேகரின் அம்மா, வனஜா அக்காவிடம் நெடுநேரம் ஏதோ பேசிக் கொண்டிருந்தாள். என்ன பேசியிருப்பாள் என்ற எண்ணம் சேகரின் மனதில் ஓடிக் கொண்டே இருந்தது. 

அடுத்த நாள் சொம்பு எடுத்துக் கொண்டு மோர் வாங்க கிளம்பினான் சேகர். வழக்கம் போல குளித்து முடித்து விட்டு, ஈரம் சொட்டச் சொட்ட வந்த அந்த அழகு தேவதை, சேகரின் கைகளைப் பிடித்து வீட்டின் உள்ளே இழுத்து உட்கார சொன்னாள்

சேகருக்கு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கி, ஒரே படபடப்பானான்

“ஏன் சேகரு ஒழுங்கா படிக்க மாட்டியா? எப்ப பார்த்தாலும் கிரிக்கெட், கிரிக்கெட்டுனு ஓடிடுறியாம். நல்லா படித்தால் தானே நல்ல வேலைக்குப் போக முடியும்” என்று அட்வைஸ் பண்ண ஆரம்பித்தாள். 

அவள் அட்வைஸ் பண்ணினால், அவ்வளவு அழகாக இருக்கும். இதமா பதமா கொஞ்சலோடு பேசும் வார்த்தை மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கும். 

“சரிக்கா இனிமேல் ஒழுங்கா படிக்கிறேன்” என்றான் சேகர். 

“இந்த அரையாண்டு பரீட்சை எல்லா பாடத்திலும் முதல் மார்க் எடுக்கணும்” என்று சொல்லி தலையைக் கோதி நெற்றியில் முத்தமிட்டாள். ​

“அக்கா உன்கிட்ட ஒன்னு கேட்கட்டுமா?” என்றான் சேகர்

“ம் கேளு சேகர்” என்றாள். 

“அது … அக்கா, நான் பெரியவனா ஆகுற வரைக்கும் யாரையும் கல்யாணம் பண்ணிக்காத அக்கா” என்றான் சேகர். 

“அவ்வளவு தானே, நீ பெரியவனாகி என்னையே கல்யாணம் பண்ணிக்கோ” என்றாள் வனஜா அக்கா

கொஞ்சம் கொஞ்சமாக படிக்க ஆரம்பித்தான் சேகர், முதல் மார்க் வாங்கா விட்டால் கூட, எல்லா பாடத்திலும் பாஸ் மார்க் எடுத்தான். 

ரேங்க் கார்டை பள்ளி முடிந்ததும் நேராக வனஜா அக்காவிடம் காட்ட ஓடினான் சேகர். வனஜா அக்கா பார்த்து விட்டு ரொம்ப சந்தோஷப் பட்டாள். 

“நீ எல்லா பாடத்திலும் பாஸ்மார்க் வாங்கியிருக்க, உனக்கு என்ன பரிசு தரலாம்”னு முணுமுணுத்துக் கொண்டே, தன் அறையில் நுழைந்து ஒரு பேனாவை எடுத்து வந்து, சேகரின் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்து,கொடுத்தாள். 

அந்த முத்தத்திற்காகவே எல்லா பரிட்சையிலும் பாஸ் மார்க்கென்ன, முதல் மார்க்கே எடுக்கலாம்னு தோன்றியது சேகருக்கு

வனஜா அக்கா வீட்டுக்குள் அவ்வளவு சீக்கிரம் யாரும் நுழைந்து விட முடியாது. ரொம்ப ஆச்சாரமான வீடு. ஆனால் சேகருக்கு, எப்பொழுதும் அந்த வீடு திறந்தே தான் இருக்கும். 

வனஜா அக்கா வீட்டை விட்டு வெளியில் வந்ததை யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. வீட்டுக்குள்ளே தான் எப்பொழுதும் இருப்பாள். வனஜா அக்காவின் அப்பா புரோகிதம் பண்ணக் கூடியவர். இதுவரை 1000 கல்யாணங்களுக்கு மேலே அப்பா பண்ணி வைத்திருப்பதாக வனஜா அக்காவே சொல்ல கேட்டிருக்கிறான் சேகர். 

“வனஜா அக்கா, நான் பெரியவன் ஆனதும் எனக்கும் உனக்கும் கல்யாணம் பண்ணிவைக்க சொல்லுக்கா அப்பாவிடம்” என்றான் சேகர்

“சரிடா, நான் அப்பாவிடம் சொல்லி பண்ணி வைக்க சொல்றேன். இப்ப நீ போய் படி” என்று சொல்லி, சேகரை அனுப்பி வைத்தாள். ​

​அவ்வளவு அன்போடும் பாசத்தோடும் இருக்கும் வனஜா அக்கா இன்று ஏரிப் பக்கமாக ஏன்? இதுவரை வீட்டை விட்டு எங்குமே வெளியே வராத வனஜா அக்கா, செச்சு மினி இருக்கும் ஏரிப்பக்கம் ஏன்? என்ற கேள்விகள் சேகர் மனதிற்குள் எழுந்தன.

 தயக்கத்துடன், “வனஜா அக்கா, ஏன் இந்த நேரத்தில் ஏரிப்பக்கம் போறீங்க?” என்றான் சேகர்

“சும்மா டா, நீ போய் படிடா. நாளைக்குப் பரிட்சை இருக்கு தானே, ஊரைச் சுத்திக்கிட்டு இருக்காத” என்று தலையைக் கோதி நெற்றியில் முத்தம் கொடுத்து சென்றாள். ​

​வீட்டிற்கு வந்து சேகரும் சேதுவும் நண்டை அம்மாவிடம் கொடுத்தனர். 

“நாளைக்குப் பரீட்சையை வைத்துக் கொண்டு இப்படி நண்டு பிடிச்சிட்டு இருக்கீங்களே, எப்ப தான் படிக்க போறீங்க என்று பார்க்கிறேன்” என்றாள் 

“அம்மா, நாங்கள் ராத்திரி முழுக்க படிப்போம்” என்று சொல்லிவிட்டு சேதுவை அழைத்துக் கொண்டு ஏரிப் பக்கமாக சென்றான் சேகர்.

சற்று தூரம் சென்ற பின் இருள் சூழ்ந்து கொண்டது. பயந்துபோன சேது, “நான் வரலடா சேகர்” என்றான். 

“ப்ளீஸ்டா வாடா” என்றான் சேகர். 

“இளங்கோ அண்ணன் சொன்னது போல செச்சு மினி அடிச்சிருச்சினா என்ன பண்றது”னு கேட்டான் சேது. 

“அப்படி எல்லாம் ஒன்னும் ஆகாது” என்றான் சேகர்

“ஏய், சரவணன் அண்ணனை செச்சு மினி அடிச்சி, பேச்சு மூச்சில்லாமல் கிடக்கிற மாதிரி நமக்கு ஆயிடும்டா. வாடா போகலாம்” என்றான் சேது. 

“போடா பயந்தாங்கொள்ளி, அப்போ செச்சு மினி இளங்கோ அண்ணனை ஒன்றும் செய்யாதா?” என்றான் சேகர். சேது ஒன்றும் பேசாமல் சேகரைப் பின் தொடர்ந்தான். 

இருளில் இருவரும் வெளிச்சத்திற்காக எதுவும் எடுத்துச் செல்லாமல், மெல்ல நடந்து ஏரியை வந்தடைந்தனர். ஏரிக்கரையில் ஒரு பெரிய ஆலமரம் இருந்தது. ஆலமரமானது, அதன் விழுதுகள் பூமிக்குள் பல இடங்களில் புதைத்து விட்டிருந்தது. 

சில விழுதுகளைப் பூமியில் இறங்கவிடாமல், ஊரு வாண்டுகளெல்லாம் அதனை தூரியாக்கி ஆடிப் பாடி மகிழ்ந்திருந்தனர். ஆலம் பழத்தை உண்ணுவதற்காக விதவிதமான பறவைகளும் வந்து போயின. 

இரவில் தங்குவதற்காக எங்கெங்கோ இருந்து வந்திருந்த குருவிகளின், குயில்களின், வெளவ்வால்களின் குரல் ஓசைகள் ஒருவித பயத்தினை சேகருக்கும் சேதுவுக்கும் தந்தன. 

அப்போது மழைக் காற்று வீசியது, மண் வாசம் வந்தது, இடி இடித்தது, லேசான மழைத் தூறல், திடீரென ஒரு மின்னல் வெட்டியது. 

மின்னல் வெளிச்சத்தில் இளங்கோ அண்ணனும் வனஜா அக்காவும் மரக்கிளையில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தனர்.​

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

சஹானா சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஒரு நீண்ட பயணம் (சிறுவர் கதை) – ✍ மோனிஷா. நா, பள்ளி மாணவி

    கம்பிகளுக்குப் பின்னால் (சிறுகதை) – ✍ கண்ணன்