செப்டம்பர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6
விஷ்ணுவின் கைகளைத் தள்ளிவிட்டு மெதுவாக நடந்து போய் அருகில் உள்ள சோபாவில் உட்கார்ந்து கொண்டாள் வல்லபி. விஷ்ணுவின் உதவியுடன் வல்லபியின் வீட்டை விட்டு வெளியேறினார் மூர்த்தி. கனகா எல்லாவற்றையும் பிரமையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“அம்மா, வெளியே வாருங்கள். அவர்கள் போய் விட்டார்கள். என்னை நினைத்து மனதில் உறுதி கொள்ளுங்கள். நீங்கள் எப்படிப்பட்டவர் என்று எனக்குத் தெரியும், கதவைத் திறங்கள் அம்மா” என்று கதவைப் படபடவென்று தட்டினாள் வல்லபி.
“அம்மா, வெளியே வாருங்கள். டாக்டரம்மா சின்னக் குழந்தையைப் போல அழுகிறார்கள். அவர்களால் நிற்கவே முடியவில்லை. கதவைத் திறவுங்கள் அம்மா” என்று அவள் பங்கிற்கு அவளும் உரக்கக் கத்திக் கதவைத் தட்டினாள் கனகா.
கதவைத் திறந்து கொண்டு மெதுவாக வந்தாள் மல்லிகா. வல்லபியைத் தாங்கிப் பிடித்து அழைத்துச் சென்று அருகில் உள்ள சோபாவில் உட்கார வைத்தாள். யாருமே எதுவும் பேசும் மனநிலையில் இல்லை. மல்லிகா சோபாவில் தலையைச் சாய்த்துக் கொண்டு கண்களை மூடி அமர்ந்திருந்தாள். மூடிய கண்களின் ஓரத்தில் ஓர் கண்ணீர் துளி.
ஏதோ சினிமாவில் வரும் கிளைமாக்ஸ் ஸீன் போல் உணர்ந்தாள். உறவுகளின் உண்மைநிலை தெரிந்து மனஅழுத்தம் தாளாமல் மல்லிகாவின் மடியில் படுத்துக் கொண்டாள் வல்லபி.
“அம்மா, நான் வேண்டுமானால் நீண்ட நாள் மருத்துவவிடுப்பில் வேறு ஊருக்கு மாற்றிக் கொள்ளட்டுமா? உங்களுக்கு தேவையில்லாமல் மென்டல் ஸ்ட்ரெயின் இருக்காது, எனக்கும் கொஞ்சம் நிம்மதியாக இருக்கும்” என்றாள் வல்லபி.
“துரோகம் செய்தவர்களே நிம்மதியாக வெளிஉலகில் உலா வரும் போது, நீயும் நானும் ஏன் மறைந்து வாழும் வேண்டும்? நீ இங்கேயே உன் மருத்துவப்பணியைத் தொடர்ந்து செய். நான் சென்னையில் என் ஆசிரியர் தொழிலைத் தொடர்கிறேன். நாம் நமக்காகத் தான் வாழ வேண்டுமே தவிர, மற்றவர்களுக்காக எதையும் இழக்க வேண்டியதில்லை” என்றாள் வறண்ட குரலில்.
அன்று மல்லிகாவை எந்த வேலையும் செய்ய விடவில்லை கனகா. எளிமையாக ஒரு துவையல் அரைத்து, ரசம் செய்து வடாம் பொரித்து சமையலை முடித்து விட்டாள்.
அடுத்த நாள் காலை, ஆறு மணிக்கெல்லாம் மரகதமும் அவள் கணவரும் வந்து வல்லபி வீட்டின் கதவைத் தட்டினார்கள்.
“யாராவது பேஷண்ட்டாக இருக்கும். டாக்டரே வலி நிவாரணி போட்டுக் கொண்டு தூங்குகிறார் என்று சொல் கனகா” என்றாள் வல்லபி.
அரைகுறை மயக்கத்திலும், அரைகுறை தூக்கத்திலும். மல்லிகாவும் மனஉளைச்சலில் வெகுநேரம் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்து விடியற்காலை நான்கு மணிக்குத் தான் தூங்கினாள். ஆதலால் கனகா யாரையும் எழுப்பாமல் போய் கதவைத் திறந்தாள். அங்கே மரகதத்தையும், அவள் கணவரையும் பார்த்து அதிர்ச்சியில் நின்றாள்.
“கனகா, என்ன வாயைப் பிளந்து கொண்டு அதிர்ச்சியாக நிற்கிறாய்? வல்லபியும் அவள் அம்மாவும் எங்கே?” என்றாள் மரகதம்.
“வாங்கம்மா, வாங்கய்யா. டாக்டரம்மாவும், அவர்களின் அம்மாவும் மிகவும் களைப்பாக தூங்கிக் கொண்டு இருக்கிறார்கள். உள்ளே வந்து உட்காருங்கள், காபி எடுத்து வருகிறேன்” என்றாள் கனகா.
“அதெல்லாம் வேண்டாம். முதலில் அவர்களை எழுப்ப வேண்டும். என் அண்ணாவை இரவு பெரியகுளம் மருத்துவமனையில் அட்மிட் செய்திருக்கிறோம், ஹார்ட் அட்டாக், அதைச் சொல்வதற்காகத் தான் வந்தோம். அவர்களுடன் கொஞ்ச நேரம் பேசிவிட்டு நாங்களும் பெரியகுளம் போக வேண்டும்” என்றாள் மரகதம்.
புதிய குரல் கேட்டு மல்லிகாவும், வல்லபியும் வெளியே வந்தனர்.
“அண்ணி, என்னை மன்னித்து விடுங்கள். தவறு என் மேலும் தான் இருக்கிறது. நான் என் அண்ணாவிற்குத் தகுந்த வழிகாட்ட மறந்து விட்டேன். அவர் செய்த தவறுக்கும் துணை போனேன். என்னை மன்னிப்பீர்களா?” என்று கேட்டுக் கொண்டே வந்த மரகதம், டக்கென்று மல்லிகாவின் கால்களில் விழுந்து அழுதாள்.
மல்லிகா வேகமாக நகர்ந்து கொண்டாள்.
“நீங்கள் பணத்தாலும் அந்தஸ்தாலும் பெரியவர்கள். நான் சாதாரண டீச்சர் தானே. உங்களைத் தொட்டு எழுப்புவதற்குக் கூட எனக்கு அருகதை கிடையாது. நீங்கள் எழுங்கள்” என்றாள் மல்லிகா, தன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு.
மரகதத்தின் கணவன் ராமச்சந்திரனும், “ஸிஸ்டர், உங்களால் அவளை மன்னிக்க முடியாது. மூர்த்தியும் இவளைப் போல் தான். ஆனால் குற்றம் செய்தவர்கள் தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கும் போது பெரியோராயின் பொறுப்பது நன்று அல்லவா” என்றார்.
சுகந்தியிடமிருந்து வல்லபிக்கு போன்.
“வல்லபி, அம்மாவை அழைத்துக் கொண்டு உடனே பெரியகுளம் வா. உன் அப்பாவின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது” என்றாள் பதற்றத்துடன்.
“அப்பாவா? யாரும் எனக்கு அப்பா கிடையாது, நான் எங்கும் வர முடியாது. நானே கையில் கட்டுடன் இருக்கிறேன், என்னால் எதுவும் செய்ய முடியாது.”
“முட்டாள் மாதிரி பேசாதே. மூர்த்தி சார் உன் அப்பாவா இல்லையா என்பது வேறு விஷயம். உன் ஊரில் அவர் உன் பேஷன்ட். பைபாஸ் ஸர்ஜரி முடிந்து இப்போது ஐ.ஸி.யூ.வில் இருக்கிறார். வாய் மட்டும் ஏதேதோ உளறிக் கொண்டு இருக்கிறது. யாமினி, வல்லபி, தேவி என்று மாற்றி மாற்றி உளறிக் கொண்டு இருக்கிறார். அனஸ்த்தீஸியா மயக்கத்தில் இருந்து இன்னும் தெளியவில்லை. நீ ஒரு டாக்டராக உன் அம்மாவையும் அழைத்துக் கொண்டு உடனே வா” என்று கூறி போனை வைத்து விட்டாள்.
வேறு வழியில்லாமல் மல்லிகாவுடன் மரகதம், ராமச்சந்திரனையும் அழைத்துக் கொண்டு பெரியகுளம் சென்றாள் வல்லபி.
வழியெல்லாம் மரகதம், “என்னை மன்னித்து விடுங்கள்” என்று புலம்பிக் கொண்டே வந்தாள். மல்லிகா யாரிடமும் எதுவும் பேசாமல் எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
இவர்கள் பெரியகுளம் போய்ச் சேரவே அரைமணி நேரம் ஆனது. வல்லபி எவ்வளவோ முயன்றும் எப்படியெப்படியோ பேசியும் மூர்த்தியிடம் ஒரு சிறு அசைவும் இல்லை.
அங்கிருந்த மருத்துவர்கள், “மூர்த்தியின் கைகளைப் பிடித்து ஏதாவது பேசுங்கள்” என்று மல்லிகாவிடம் வேண்டினார்கள். அவளுடைய ஸ்பரிசமும், குரலும் மூர்த்தியின் உடம்பில் ஏதாவது அசைவை ஏற்படுத்தும் என்று நம்பினார்கள்.
முதலில் ஏதும் பேசாமல் அமைதியாக இருந்த மல்லிகா, என்ன யோசனை செய்தாளோ தெரியவில்லை. திடீரென்று மூர்த்தியின் கைகளைப் பிடித்துக் கொண்டு, “என்னங்க, கொஞ்சம் கண்களைத் திறந்து பாருங்கள், உங்கள் மல்லிகா வந்திருக்கிறேன்” என்றாள் அவர் காதுகளில் மெதுவாக. அப்போது தான் அவருடைய உளறல் அடங்கியது.
மெதுவாகக் கண்களைத் திறந்துப் பார்த்து, “யாமினிக் கண்ணா” என்றவர், மல்லிகாவைப் பார்த்து இருகைகளையும் கூப்பி மன்னிப்பு கேட்பது போல் வைத்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டார். கண்களில் கண்ணீர் வழிந்தது. விஷ்ணு எல்லாவற்றையும் பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
பத்து நாட்களில் மூர்த்தி தகுந்த மருத்துவ வசதிகளுடன் வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.
ஒரு மாதம் கழித்து ஒரு நாள் வல்லபியும், சுகந்தியும் விஷ்ணுவைப் பார்க்க மூர்த்தி வீட்டிற்குச் சென்றனர். மூர்த்தியும், இராமச்சந்திரனும் பக்கத்தில் உள்ள பார்க்கிற்கு வாக்கிங் சென்றிருந்தனர்.
மூர்த்திக்கு ஆபரேஷன் முடிந்த பிறகு ஒரு வாரம் கழித்து நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்று டாக்டர்கள் வற்புறுத்தினார்கள். அதனால் தான் இந்த வாக்கிங்.
மரகதத்திற்கு வல்லபியைப் பார்த்தவுடன் தன்னையும் அறியாது ‘அத்தை’ என்ற பாசம் பொங்கியது.
“அண்ணி ஊருக்குப் போய் விட்டார்களா வல்லபி?” என மரகதம் கேட்க.
“அம்மா சென்னை சென்று வேலையில் சேர்ந்து விட்டார்கள்” என்று விட்டேத்தியாக சொன்னவள் “அத்தை” என்று சேர்த்துக் கொண்டாள்.
“நீ இன்னும் என்னை மன்னிக்கவில்லையா வல்லபி?” என்றாள் அழமாட்டாத குறையாக.
“நீங்கள் செய்த தப்பு என்னவென்றே எனக்குத் தெரியாது, இதில் மன்னிப்பு எங்கே வந்தது?” என்றாள் வல்லபி அசட்டையாக.
“ஆம் அம்மா, வல்லபி சொல்வது உண்மை தான்” என்றான் விஷ்ணு.
“நான் வேண்டுமானால் வெளியே போகிறேன். நீங்கள் பேசுங்கள் ஆன்ட்டி” என்று கூறிய சுகந்தி, வெளியே போக முற்பட்டாள்.
அவளைத் தடுத்த மரகதம், “நீங்கள் எல்லோரும் எவ்வளவு நல்லவர்களாக இருக்கிறீர்கள். சுகந்தி, நீங்கள் எங்கும் போக வேண்டாம். நான் செய்த தவறு இந்த ஊருக்கே தெரியும்” என்றாள். கரகரத்த குரலில் துக்கம் தொண்டையை அடைக்க பேசத் தொடங்கினாள் மரகதம்.
“இருபது வருடங்களுக்கு முன்பு இப்போது கோயம்புத்தூரில் பிரபலமாக இருக்கும் என் அண்ணாவின் பருத்தி ஆலை சாதாரண அளவில் இருந்தது. அதில் வேலை செய்யும் ஏழைப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு ஓர் ஆரம்பப்பள்ளி ஒன்று தொடங்கினார். மில் வளர, ஆரம்பப் பள்ளியும் நன்றாக வளர்ந்து உயர்நிலைப் பள்ளியாக மாறியது. அதில் தான் மல்லிகாதேவி, என் அண்ணி ஆசிரியையாகப் பணியாற்ற வந்தார்கள். அவர்கள் அழகும் திறமையும் மற்றவர்களுக்கு வியப்பாக இருந்தது. என் அண்ணா மல்லிகா தேவியிடம் காட்டும் அதீத அக்கறையும், அவர்களுக்காக பார்த்துப் பார்த்து செய்வதும், எனக்கு அவர்களிடம் வெறுப்பும், பொறாமையும் தான் வளர்ந்தது.
ஒருநாள் இருவரும் மாலையும், கழுத்துமாக வந்து நின்றார்கள். அவர்களுக்கு என் கணவரும் துணை. அப்போது தான் என் பொறாமை இன்னும் கொழுந்து விட்டு எரிந்தது. திருமணமாகி இரண்டு ஆண்டுகள் என் அண்ணாவின் இல்லற வாழ்க்கை எந்தத் தகராறும் இல்லாமல் சுமுகமாகத் தான் சென்றது. அதன் பின்னர் சின்னச் சின்னச் சண்டைகள் சமாதானத்தில் முடிந்தது.
சண்டை கொஞ்சம் பெரிதானால் என்னிடம் வந்து விடுவான் மூர்த்தி. நானோ மல்லிகாவைப் பற்றி விரோதமாகத் தான் பேசுவேன். அந்த சூழ்நிலையில் நான் மல்லிகாவைப் பற்றிக் கூறும் கருத்துக்கள் தான் அவன் மனதில் ஆழமாகப் பதிந்தது. அப்போது தான் மல்லிகா கர்ப்பமானாள். டாக்டர்கள் அவள் கர்ப்பப்பை மிகவும் பலஹீனமாக இருப்பதால் எந்த கடினமான வேலையும் செய்யக் கூடாது, பளுவான சாமான்கள் தூக்கக் கூடாது, கணவன், மனைவி உறவிலும் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று எச்சரித்தார்கள்.
இந்த நிலையில் மல்லிகாவிற்கு உதவியாகவும், வீட்டுச் சமையல் செய்வதற்கும் மில்லில் உள்ள கூலித் தொழிலாளி பார்வதி என்னால் தான் தேர்வு செய்யப்பட்டு மூர்த்தி வீட்டிற்கு அனுப்பப்பட்டாள். அவள் முப்பது வயதுப் பெண், விதவை. மல்லிகாவை விட வயதில் கொஞ்சம் பெரியவளும் கூட. விதி இந்த நேரத்தில் தான் காயை வேகமாக நகர்த்தத் தொடங்கியது.
மூர்த்தி தவறாக நடப்பதற்கு முயற்சி செய்வதாக பார்வதி வதந்தி பரப்பிக் கொண்டிருந்தாள். எனக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சியே. நான் மூர்த்தியை கண்டிக்கவில்லை. மாறாக பார்வதியிடம், ‘என் அண்ணா பாவம். அவருக்கு வாய்த்த மனைவி சரியில்லை. நீ கொஞ்சம் பொறுத்துக் கொள்’ என்று சமாதானம் செய்வது போல் தூண்டி விட்டேன். நான் கோடு போட்டால் ரோடே போட்டு வீட்டினுள் நுழைந்து விட்டாள் பார்வதி. வேலைக்காரி வீட்டுக்காரியாகி விட்டாள்.
மாடியை விட்டு கீழே இறங்காததால் மல்லிகாவிற்கு இந்த கூத்துக்கள் தெரியவில்லை. கற்பனையில் தன் கணவருடனும் குழந்தையுடனும் சந்தோஷமாக இருந்தாள். குழந்தை யாமினியும் பிறந்தாள். தங்கச் சிலை போல் இருந்த அந்த குழந்தையை ஒரு வினாடியும் பிரியமாட்டான் மூர்த்தி. இருந்தாலும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி, பார்வதி அவனை அதிக நேரம் குழந்தையின் அருகில் விடமாட்டாள். மூர்த்தியின் கெட்ட நேரம், பார்வதி சொல்வதற்கெல்லாம் தாளம் போட ஆரம்பித்தான்.
அண்ணாவும், அவளுக்குப் புடவைகளாகவும், நகைகளாகவும் கொடுத்தாரே தவிர, வேறு எந்த அசையாத சொத்தோ அங்கீகாரமோ தரவில்லை. பார்வதி, ஒரு வீட்டிற்காகவும், ஒரு ஏக்கர் மாந்தோப்பை அவள் பெயருக்கு எழுதித் தர வேண்டும் என்று மிகவும் வற்புறுத்திக் கொண்டிருந்தாள். அதனால் அண்ணாவுடன் சேர்ந்து அடிக்கடி வெளியில் ஜாலியாக சுற்றிக் கொண்டிருந்தாள். மல்லிகா மாடியை விட்டு கீழே இறங்காததால் அவளுக்கு வீட்டின் நிலமை புரியவில்லை. மற்ற வேலையாட்கள் சொல்வதையும் நம்பவில்லை. தன் கணவனை ஸ்ரீராமன் என்றே நம்பினாள்.
என்னால் வீட்டினுள் நுழைந்த பார்வதி சில நாட்களில் என்னையே மிகவும் அலட்சியப்படுத்தினாள். என் அண்ணாவிடம் என்னையே நெருங்க விடுவதில்லை. ஆனாலும் ஏனோ மல்லிகாவிடம் எனக்கிருந்த பொறாமை குறையவில்லை. இந்நிலையில் டிரைவர் ஆறுமுகம், மூர்த்தி, பார்வதியின் திருவிளையாடல்களைப் பொறுக்க முடியாமல் பார்வதியின் மட்டமான நடத்தையைப் பற்றி மல்லிகாவிடம் கூறி இருக்கிறான். ஆறுமுகம் எப்போதும் அதிகம் பேச மாட்டான். ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசினாலும் உண்மையைத் தான் பேசுவான். அதனால் மல்லிகா அவன் வார்த்தைகளை அப்படியே நம்பினாள்.
ஆறுமுகம் அடிக்கடி மல்லிகாவிடம் பேசுவதை வைத்து அவர்கள் இருவருக்கும் ஒரு தவறான தொடர்பு இருப்பதாகக் கதைகட்டி மூர்த்தியை நம்ப வைத்தாள் பார்வதி. மூர்த்தி என்னிடம் வந்து அதைப் பற்றி கோபமாக விசாரித்து பலவிதமான கேள்விகள் கேட்டான். ஆனால் நான் மல்லிகாவைப் பற்றி எந்தவொரு உறுதியான பதிலும் தரவில்லை. உண்மையில் நான் மல்லிகாவிற்கு ஆதரவாகப் பேசவில்லை.
ஒருநாள் மூர்த்திக்கும், மல்லிகாவிற்கும் பெரிய சண்டை. ஆறுமுகத்தின் விஷயத்தில் தன் மனதில் ஏற்பட்ட சந்தேகத்தால் மல்லிகாவைச் சண்டைக்கு இழுத்திருக்கிறான். மல்லிகாவைப் பற்றி பலவாறு அவதூறு பேசியதுமல்லாமல், பார்வதியைக் கோயிலில் வைத்துத் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும், உன்னால் முடிந்ததைப் பார்த்துக் கொள் என்றும் சவால் விட்டிருக்கிறான்.
அது மட்டுமல்ல, இதற்கு சம்மதித்தால் நீ இந்த வீட்டில் இருக்கலாம். இல்லையென்றால் நீ இங்கிருக்க முடியாதென்றும் கருவியிருக்கிறான். பயங்கரமாகக் கத்தியிருக்கிறான். மல்லிகா, தன் குழந்தையுடன் என் வீட்டிற்கு வந்து எங்கள் இருவரிடமும் நியாயம் கேட்டாள். எங்களால் அவளுடய நியாயமான கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியவில்லை. வீட்டுச் சாவியுடன் ஒரு கடிதமும் எங்களிடம் கொடுத்து விட்டு எங்கே போகிறேன் என்று கூட சொல்லவில்லை. ஒரு கேலிப் புன்னகையுடன் காத்திருந்த ஆட்டோவில் கிளம்பி விட்டாள். அவளை எங்களால் தடுக்க முடியவில்லை.
கடிதத்தைப் பிரித்துப் படித்தால், ‘இத்தனை நாள் மனைவி என்ற பதவியைக் கொடுத்து, ஒரு குழந்தைக்குத் தாயாக்கியதற்கு நன்றி. என்னைத் தேட வேண்டாம். தேட மாட்டீர்கள் என்று தெரியும். ஆனாலும் வீட்டை விட்டுப் போகுமுன்பு சொல்லி விட்டுப் போக வேண்டியது கடமை. அதற்குத் தான் இந்த கடிதம்’ என்று சொல்லி விட்டுப் போய் விட்டாள்” என்றாள் மரகதம் விம்மிக் கொண்டு.
“நீங்கள் நினைத்தது தான் வெற்றிகரமாக முடிந்து விட்டதே, அதனால் அப்போது மிகுந்த சந்தோஷம் அடைந்திருப்பீர்கள், இல்லையா?” என்றாள் சுகந்தி குத்தலாக.
“நீ சொல்வதில் தவறில்லை சுகந்தி. ஆனால் அதன் பிறகு தான் என் நிலமை மோசமாயிற்று. மல்லிகா இருக்கும் போது எனக்கு எந்தக் குறையும் இருந்ததில்லை. அப்படியிருந்தும் நான் ஏன் அவளிடம் பொறாமை கொண்டேன்? என் அகந்தை தான் காரணம். என் அகந்தைக்கு ஓர் சவுக்கடியாய் அமைந்தது பார்வதியின் போக்கு. என் அண்ணாவோடு என்னால் சுத்தமாகப் பேச முடியவில்லை. தடைபோடப்பட்டது. அவ்வளவு ஏன்? என் அம்மா வீட்டிற்கே கூட என்னால் போக முடியவில்லை. ஆனால் நல்லவேளையாக என் அண்ணா அவளுடைய சுயரூபத்தை மூன்று ஆண்டுகளில் புரிந்து கொண்டார்.
பார்வதியோ, வெறும் பட்டுப்புடவைகளுக்காகவும் ஒன்றிரண்டு நகைகளுக்காகவும் தன் இளமையை என் அண்ணாவுடன் வீணடிக்க விரும்பவில்லை. ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் என்று சொல்வார்களே, அதேபோல் இன்னும் கொஞ்சம் ஏமாந்தவன், இன்னும் சற்றே அதிகப் பணக்காரன் ஒருவன் கிடைத்தவுடன், கிளைக்குக் கிளை தாவும் குரங்கு போல் மூர்த்தியை விட்டு வெளியேறி விட்டாள்.
பிறகு தான் என் அண்ணா உண்மையான மனைவிக்கும் இடையில் வந்த வேறு ஒரு அந்நியப் பெண்ணிற்கும், அதிலும் வேறு ஒருத்தன் மனைவிக்கும் உள்ள வேற்றுமையைப் புரிந்து கொண்டார். இதற்குள் சில வருடங்கள் ஓடிவிட்டன. என் அண்ணியையும், யாமினியையும் தேடிக் கிளம்பினார். ஒரு வருடத் தேடலுக்குப் பிறகு சென்னையை அடுத்த திருநாவலூரில் பஞ்சாயத்து போர்ட் பள்ளியில் வேலை செய்வது அறிந்து அங்கே போய் அண்ணியை அழைத்திருக்கிறார். ஆனால் அவர்கள் வர மறுத்ததோடு யாமினியைப் பற்றி எந்த விவரமும் தர மறுத்து விட்டார்.
‘உங்களைப் பொறுத்தவரை நாங்கள் இறந்து விட்டோம். இனிமேல் இங்கே எந்தக் காரணம் கொண்டும் வரக்கூடாது’ என்று கழுத்தைப் பிடித்துத் தள்ளாத குறையாக பேசி அனுப்பி இருக்கிறார். அதைப்பற்றி வீட்டில் வந்து விவரிக்கும் போது தான் அண்ணாவிற்கு முதன் முதலாக வலிப்பு நோய் வந்தது” என்று முடித்தார் மரகதம்.
இந்த “வல்லபி” நாவல் அச்சுப் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. நாவலை வாங்க விரும்பும் வாசகர்கள், கீழே பகிர்ந்துள்ள ஸ்ரீ ரேணுகா பதிப்பகத்தின் QR Code Scan செய்து தொகையை செலுத்தி Screen Shot எடுத்து, 77082 93241 என்ற எண்ணுக்கு உங்கள் முகவரியுடன் பகிருங்கள். விரைவில் புத்தகம் உங்களை வந்து சேரும். அல்லது 77082 93241 என்ற எண்ணில் அழைத்தும் ORDER செய்யலாம். நன்றி
(தொடரும் – திங்கள் தோறும்)
Vallabi is good