in ,

வானமடி நீ எனக்கு ❤ (பகுதி 9) – ராஜேஸ்வரி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்… 

பகுதி 1    பகுதி 2    பகுதி 3    பகுதி 4   பகுதி 5   பகுதி 6   பகுதி 7   பகுதி 8

ன் அத்தையின் மிரட்டலால் அதிர்ந்து போன பவானி, தன் வாழ்க்கையே சூன்யமாவது போல உணர்ந்தாள்.  தன் காதலைக் காப்பாற்றிக் கொள்ள என்ன செய்வது என மனம் பதைபதைக்க யோசித்துக்கொண்டே இருந்தாள் சவிதாவின் அழைப்பு வரும்வரை.

“பவா….எப்படி இருக்க….?”

“ம்….நல்லாருக்கேன்…”

“உன்கிட்ட ஒண்ணு கேட்கணும், நீ சரவணனை பாக்கறியா? பேசறியா…..” சவிதா வார்த்தைகளை நிறுத்தி நிறுத்தி….நிதானமாகக் கேட்டாள். 

அவள் கேட்கும் தொனியில் ஏதோ ஒரு சோகம் மனதை தாக்கப்போவதாக உணர்ந்தாள்

பவானி….”ஏன்……எதுக்கு கேக்கற….”

“ஒண்ணுமில்ல….சொல்லு…”.

“ம்…..ஃபைனல் இயர் மார்க் ஷீட் வாங்கும் போது வரச் சொன்னேன்… அப்போ பார்த்தது….அதுக்கப்புறம் என்னை வீட்ல ….வெளியே போக விடல..”

“அது…கிட்டத்தட்ட ஒரு மாசமாச்சே…. அதுக்கப்புறம் நீங்க ஃபோன்ல பேசிக்கவே இல்லயா?…”.

வேலைக்குப் போறதால ஞாயித்துக்கிழமை தான் சரவணன் பேசும். அதுவும் ரெண்டு நிமிஷம் பேசிட்டு வெச்சுரும்.

“ம்…..இல்ல…கார்த்திக் சொன்னான். சரவணன் நேத்து வேலைக்குப் போயிட்டு வரும்போது……பஸ்சுல இறங்கும்போது கீழே விழுந்து அடிபட்ருச்சாம்….அதான் உனக்குத் தெரியுமா…னு….”

“அப்டியா”….கேட்கும்போதே நெஞ்சம் உடைந்து…. அழுகை முட்டிக்கொண்டு வந்தது பவானிக்கு.

“முடிஞ்சாப் போய் பாரு….நான் ஃபோனை வெச்சுடறேன்…..” அழுதாள்…அழுதாள்… ஃபோனில் உள்ள சரவணனின் புகைப்படத்தைப் பார்த்து பார்த்து மருகினாள்.  சரவணனுக்கு ஃபோன் செய்தாள். தொலைபேசி அணைக்கப்பட்டுள்ளதாக குரல் வந்தது.

என்ன செய்வது….? எப்படி சரவணனை சந்திப்பது….?என்ற சிந்தனையில் மூழ்கினாள். உண்மை அன்பிற்கு துணைபுரியும் கருவியாக சிலரை படைத்திருப்பான் இறைவன்.

கீழே தினகரன் வாத்தியார் தந்தையுடன் பேசும் குரல் கேட்டது. வேகமாக கீழே இறங்கினாள்.

“வாங்க சார்” என்றாள் பணிவாக. அவள் பக்கம் திரும்பிய தினகரன், :”பவானி….எப்படிப்பா இருக்க? வெற்றிகரமா யூ.ஜி. முடிச்சிட்ட போல…அப்பா சொன்னாரு…. வெரிகுட்.. கன்க்ராட்ஸ்” என்றார் மகிழ்ச்சியாக..

“தாங்க்யூ சார்…பி.ஜி..,பி.ஹெச்.டி பண்ணனும்னு ஆசை….அப்பா தான்….” என்று இழுத்த பவானியை

இடைமறித்த ராமலிங்கம், “கல்யாணம் கட்டிக்கிட்டு பொறவு…படி யாரு வேண்டாங்கறா…” என்று சொல்லிவிட்டு தினகரனைப் பார்த்து “எங்க பரம்பரையிலேயே காலேஜ்ல படிச்ச மொத பொம்பளைப் பிள்ள பவானி தான்…இதுவே ரொம்ப லேட்டு…. சடங்கானதுமே பரிசம் போட்ருவோம்….நாந்தான் எல்லாரையும் எதுத்து நின்னு படிக்க வெச்சேன். இனிமேலும் கடமையை செய்யாம இருக்கறது தப்பு…” என்றார்.

அதுவும் சரிதான். “ம்….ஏதாவது வரன் பார்த்திருக்கீங்களா ?” கேட்டார் தினகரன்.

“எங்க சாதிலயே நெறைய படிச்ச பசங்க இருக்காங்க… ஒத்த புள்ள…அத தூரக்க அனுப்ப மனசில்ல… ஆனாலும் அதுக்கு எங்க விதிச்சிருக்கோ?…பத்திரிக்கைல….பதிஞ்சிருக்கேன்…. பாக்கலாம்….வர்ற தை மாசம் முடிவாயிரும்னு நினைக்கறேன்….” என்றார் எதிர்பார்ப்பு கலந்த நம்பிக்கையுடன்…..

“நீங்க சொன்னதுல நூத்துல ஒரு வார்த்தை….அதுக்கு எங்க விதிச்சிருக்கோ…னு…ஆனா அதுல பாருங்க…நாம பேசறது ஒண்ணு….செய்யறது ஒண்ணு..”

பேசிக் கொண்டிருந்தவர் “தனலெட்சுமியும், ராக்கம்மாவும் வருவதைப் பார்த்துவிட்டு… “புது ரக நெல்லு போட்ருக்கேன்னு சொன்னீங்களே….பாக்கப் போகலாமா?…”.என்றார்.

அவர் தன்னிடம் தனியாகப் பேச விரும்புவதை உணர்ந்த ராமலிங்கம் “ம்….வாங்க போகலாம்…” என்று  கிளம்பினார்.

வயல் வெளியில் நடந்தவாறே, “நான் சொல்ல வர்றத நீங்க எப்படி எடுத்துப்பீங்க ன்னு தெரியல….”என்று தயங்கினார் தினகரன்.

“சும்மா, தைரியமா சொல்லுங்க…”

“ம்…ம்…அதாவது…. சரவணனை உங்களுக்கு ஞாபகம் இருக்கா?”

“யாரு…?” சிறிது யோசித்தவர் “என்னோட நிலத்துல வேலை செய்யற மாரியப்பன் மவன் தான…?” எனக் கேட்டார்.

“ம்….ஆமா….அவனுக்கு நேத்து கால்ல அடிபட்ருச்சு….பஸ்ஸில வீட்டுக்கு வந்துட்டு இருக்கும்போது….ஒரு பத்து, பதினஞ்சு பேர் திமுதிமு…னு ஏறி…..இவன் ஸ்டாப் வரும்போது ஒரே தள்ளாத் தள்ளி விட்ருக்காங்க…. நல்லவேளை பின் சக்கரம் கால்ல ஏறல….பொழைச்சிக்கிட்டான்..”

“அடடா….அப்படியா…ஏதாவது உதவி வேணும்னா தயங்காம கேளுங்க….மருத்துவ செலவ நா ஏத்துக்கறேன்….”என்ற ராமலிங்கத்திடம்,

“உங்க மனசு எனக்குத் தெரியாதா?….”

“தள்ளிவிட்டக் கூட்டத்துல….உங்கப் பெரிய மருமகன்…. ராசா…… இருந்தான்னு சரவணன் சொன்னான்” என்று நிதானமாகக் கூறினார் தினகரன்.

“அப்படியா?” என்று திடுக்கிட்டுக் கேட்ட ராமலிங்கத்தின் முகம் கோபமாகச் சிவந்தது. “அவன் ஒரு தருதல…காவாளிப்பய… அவன் அப்பன் போல புத்தி… காசுக்கு ஆடற பய”

பின் கொஞ்சம் நிதானமாக, “ஆமா….எதுக்காக….அவன் அப்டி செய்யணும்?…. சரவணனுக்கும் அவனுக்கும் ஏதாவது தகராறு  ஏற்கனவே இருந்துச்சா?”

“இல்ல…. இல்ல…. சரவணன் ரொம்ப ரொம்ப நல்ல பையன். எல்லார்க்கிட்டயும் மரியாதையா நடந்துப்பான். ஒரு வம்புத் தும்புக்கும் போக மாட்டான். அமைதியான,…அறிவான புள்ள… ” 

“அப்போ….வேற என்ன காரணம்.?”

“சரவணனும்….பவானியும்…. பேசிக்கிறாங்க….னு….”  தயங்கினார் தினகரன்.

புரிந்து கொண்ட ராமலிங்கம், “ஓ….ராக்கம்மா சொன்னது இந்த பையனைதானா? சரி…சரி…” என்று தலையை ஆட்டிக் கொண்டார்.

“என்ன தான்….முற்போக்குச் சிந்தனை இருந்தாலும்… கலப்புத் திருமணத்துல மனசு உடன்பட மாட்டேங்குது… காலம் காலமா ஊறிப் போன விஷயம்…நம்பிக்கை…இதை மீற தைரியம் வரல….” என்றார்

ராமலிங்கம் கோபத்தைக் கட்டுப்படுத்திக் குரலுடன், “ம்…..ஆமா…ரொம்பச் சரியாச் சொன்னீங்க….ஒரு சமூக அமைப்பு ல ஒருத்தர் மட்டும் மாறி எந்த பிரயோசனமும் இல்ல….ஆனா மாற்றத்தை ஆதரிக்கும் குரல் கொடுக்க முன்வரணும்” பேசிக்கொண்டே நடந்த தினகரன் ஒரு இடத்தில் நின்று “இது என்ன? இந்த இடத்துல ஏதோ செடி இருக்கே….” என்று கை காட்டினார்.

“ஓ….இதுவா?…பறவை போட்டத ..னு நினைக்கறேன்.. தானா முளைக்குது. இது செடி இல்ல…பரங்கிக்கொடி…வளரட்டும்..னு விட்டுட்டேன்.” என்றார் அதன் இலையை தடவியபடி ராமலிங்கம்.

“இதுமாதிரி…. தானா வரும் அன்பு தான் காதல். இப்போ…. நீங்க ஒரு விதை நடுறீங்க…. அதுக்கு உரம் போட்டு, பாதுகாத்து வளக்கறீங்க…. அதை….. நீங்க நினைக்கற மாதிரி தான் இலையோட வடிவம் வரணும்….நீங்க சொல்ற திசையிலதான் வளரணும்….னு உங்களாலக் கட்டுப்படுத்த முடியுமா? …..அது அதோட குணத்துல, அதுக்கு விதிச்ச விதிப்படி தான வளரும்…. உங்க பரம்பரையிலேயே பெண்களை படிக்க வெச்சதில்ல…ஆனா பவானியை படிக்க அனுப்பறீங்க….இது ஒரு மாற்றம்…..முன்னேற்றம்… மனுஷனோட குணத்தை மட்டும் பார்த்தால் போதும்.” என்று சொன்ன தினகரனைப் பார்த்து..

“அப்போ சரவணன் நல்ல குணமுள்ளவன். குடும்பத்தப் பத்தி பாக்க வேண்டாம்னு சொல்றீங்களா?” என்று ராமலிங்கம் கேட்டார். 

“இல்ல… ஒரு மனுசனோட குணத்தை சரியாப் பாக்கணும் னா….அவங்க பரம்பரையை பாக்கறது தான் நியாயம். ஆனா….இராவண வம்சத்துல விபீஷணன் நல்லவனா இருந்தானே…..இரண்யகசிபு அரக்கனை மகன் பிரகலாதன்  பக்திமானா இருந்தானே….. அவ்வளவு ஏன்….உங்க தாத்தாக்கு அப்பா ஒரு கொலைகாரர்னு நீங்களே என்கிட்ட சொல்லிருக்கீங்க…. ஆனா….நீங்க பிறருக்கு மனசாலும் ,கெடுதல் நினைக்காத …..ஏழைகள் படிப்புக்கு உதவும் நல்ல குணவான். அதனால….  எதையும் நாம… சரியா கணிக்க முடியாது. ஆனா….கல்யாணம் செஞ்சுக்கப்போற இரண்டு பேர் மனசும் ஒத்துப் போயிருச்சுனா…..அதுக்கு மேல வேற எதையும் யோசிக்க வேணாம்கிறது என்னோட தனிப்பட்ட அபிப்ராயம்”

ராமலிங்கம் யோசிக்கத் தொடங்கினார்.

(வானம் விரியும்… தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    வானமடி நீ எனக்கு ❤ (பகுதி 8) – ராஜேஸ்வரி

    தாரகை (சிறுகதை) – சாய்ரேணு சங்கர்